தி.நகர் பனகல் பூங்காவை நெருங்கும்போதுதான் அவ்வளவு நேரமும் கைத்தொலைபேசியை அணைத்து வைத்திருந்தது நினைவில் வந்தது. எடுத்து உயிர்கொடுத்ததும் காத்திருந்தாற்போல பொன்ஸின் அழைப்பு வந்தது. பனகல் பூங்கா சந்திப்புக்கு உகந்ததாக இல்லாமையால், அருகே இருக்கும் நடேசன் பூங்காவிற்கு வரும்படி அழைத்தார். அதற்குள் தொலைபேசிக்கு குறுஞ்செய்தி வேறு அனுப்பியிருந்தார். பூங்காவிற்குள் வட்டமாக இருப்பவர்கள்தான் ‘பதிவர் வட்டம்’என்பது தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது. சப்பாணி கொட்டி அமர்ந்திருந்ததைப் பார்த்து “என்ன சோறு போடுறாங்களா…?”என்று வழக்கமான நமது பாணியில் கேட்டுக்கொண்டே ஜோதியில் கலந்துகொண்டேன்.
போகும்போதே ஏறக்குறைய பதினைந்து பேரளவில் கூடியிருந்தார்கள். வட்டம் பெரிதாகிக்கொண்டே வந்தது. கடந்த தடவை தமிழ்நதி என்கிற நானும் பொன்ஸ் உம்தான் பெண்கள் தரப்பிலிருந்து, ‘நாங்களும் இந்த சமூகத்தில் ஓர் அங்கமாக்கும்?’ என்று சந்திப்பில் தலைகாட்டி பேர்பதிந்திருந்தோம். கடந்தமுறை சந்திப்பு பற்றி எழுதும்போது ‘தனித்துப்போனோம்’ என்று நிறையப் புலம்பியிருப்போம் போலும்… சற்றைக்கெல்லாம் சிவஞானம்ஜியோடு துளசி கோபால் வந்தார். (பெண்களுக்கும் மரியாதை கருதி ‘ர்’விகுதி போடலாமல்லவா…) “வாங்க ஹெட்மாஸ்டர்” என்று சிவஞானம்ஜிக்கு கூட்டுக்குரல் கொடுத்து வரவேற்றார்கள். அவரையடுத்து நிர்மலா வந்தார். ஆட்களும் மணியும் அதிகரித்ததன்றி இன்னதுதான் பேசப்போகிறோம் என்று யாரும் அறிவிப்பதாகத் தெரியவில்லை. கூடியிருந்தவர்களில் ஒருவர் எல்லோரையும் சுய அறிமுகம் செய்துகொள்ளும்படி கேட்டார். “இந்த முகத்துக்குரியவர் யாரு…? அவங்களுக்கு வலைப்பதிவில் என்ன பேரு…?” என்று ‘கிராண்ட் மாஸ்ரர்’பாணியில் ஒவ்வொருவராக அறிமுகம் செய்துகொண்டோம். சந்திப்பின் பிரதான காரணராகிய ‘ஆலமரம் திரு’என்று அறியப்பட்டவரது முறை வந்தபோது இலங்கைத் தமிழ் கேட்கப்போகிறோம் என்று நான் எதிர்பார்த்திருக்க, அவர் இந்தியத் தமிழில் அறிமுகத்தோடு தனது செயற்பாடுகள் குறித்தும் பேசினார். ஒரு இலங்கைத் தமிழர்தான் இத்தனை முனைப்போடும் ஈடுபாட்டோடும் செயலூக்கத்தோடும் மானுட நேயத்தோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் தனது சகோதரர்களுக்காக கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி வருகிறார் என்று இதுநாள்வரை நினைத்திருந்த எனது புத்தியை (அதுக்குப் பேர் புத்தியா…ச்சே!)யாருமறியாமல் …… ஆல் அடித்துக்கொள்ளத் தோன்றியது.
ஞாபகத்தில் உள்ளவரை, சமூகமளித்திருந்தவர்களின் பெயர்கள்: பொன்ஸ், பாலபாரதி, மா.சிவகுமார், ப்ரியன், தமிழி, ஓகை, நிர்மலா, துளசி கோபால், சிவஞானம்ஜி, லக்கிலுக், சுந்தர், சுகுணா திவாகர், சா.சங்கர், வீ த பிப்பிள், விக்கி, த.அகிலன், பகுத்தறிவு, வீரமணி, அருள்குமார் மற்றும் பலர். பெயர் விடுபட்டவர்கள் மன்னிக்கவும்-இருண்டதும் ஞாபகசக்தி மங்கிவிட்டது.
இம்முறை அறிமுகம் என்பது ‘என்னோட பேர்’என்று பாலர்பள்ளி மாணவர் தரத்தில் இல்லாமல் சற்று விரிவானதாகவே இருந்தது. “நான்தான் ப்ரியன்”-என்றதும் “ஓ! அந்தக் காதல் கவிதைகள் எழுதுகிற ப்ரியனா…?” என்னைத்தவிர மேலும் இருவர் கேட்டது காதில் விழுந்தது. (எழுதக்கூடிய வயதுதான்) எந்த மையப்புள்ளியிலும் தரிக்காமல் கலந்துரையாடல் போல பேச்சு நெடுநேரமாக வளர்ந்துகொண்டிருந்தது.
திருமணத்துக்குப் போய் ‘மொய்’எழுதுவதனோடு பின்னூட்டம் இடுவதை “மொய் வைச்சா திரும்ப மொய் வைக்கணும்ல” ஒப்பிட்டுப் பேசியது ரசிக்கும்படியாக இருந்தது. பின்னூட்டக் கயமை பற்றி, தமிழ்மண அறிவிப்புகள் பற்றி, பின்னூட்டம் இடுபவர்கள் விமர்சனமாக இல்லாமல் ‘வந்தியா மச்சி வா’ என்று ‘கலாய்ப்பதற்காக’பயன்படுத்துவது பற்றி அங்கிங்கெனாதபடி பேச்சு அலைந்தது.
கடந்த தடவை எழுந்த சிறு (???) சர்ச்சைகளைக்கூட இம்முறை காணமுடியவில்லை. மிகுந்த புரிந்துணர்வு பொருந்திய நண்பர்கள் சந்தித்துப் பேசியதுபோல சந்திப்பு வெகு சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. பயனுள்ள ஒரு தளத்தை சண்டைக்களமாகப் பயன்படுத்தி வீணடிப்பதைக் குறித்த ஆதங்கமும் “அந்தப் பக்கம் வரவே பயமா இருக்குப்பா”என்பது போன்ற சலிப்பும் பெரும்பாலானோரின் குரல்களில் வெளிப்பட்டது.
சுற்றிச்சுழன்று பேச்சு ஒருவழியாக பெல்ஜியத்திலிருந்து வந்திருந்த திரு அவர்களால் முன்மொழியப்பட்ட ஈழத்தமிழர்களது பிரச்சனையில் வந்து நின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டிலே இருக்கும் ஆறு இலட்சம் தமிழர்களின் அடிப்படைத் தேவைகளான உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் கூட அவர்களைச் சென்றடைய விடாமல் தடுத்து, அவர்களை பட்டினிச்சாவை நோக்கி விரட்டிக் கொண்டிருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தினது மனிதாபிமானமற்ற செயல் குறித்து திரு அவர்கள் எடுத்துரைத்தார். தனது கையெழுத்து இயக்கம் ஊடாக அந்தப் பேரவலத்தை ஐ.நா. சபை மற்றும் ஏனைய நாடுகளுக்கும் தெரியப்படுத்த முயற்சித்து வருவதைப் பற்றிக் கூறினார். மேலும், வாகரையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நாற்பதினாயிரம் மக்களுக்கு பாரஊர்திகள் மூலம் அனுப்பப்பட்ட உணவுப்பொருட்கள் இராணுவத்தினரால் திருப்பியனுப்பப்பட்ட கொடுமையைப் பற்றிச் சொன்னார். மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட நாம் அவர்களுக்காகச் செய்யக்கூடியது என்ன என்பதைப் பற்றிப் பரவலாகப் பேசப்பட்டது.
“இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதனால் பாதுகாப்புப் பிரச்சனை ஏதாயினும் ஏற்படாதா…?”என்றொருவர் எழுப்பிய கேள்விக்கு, “இது விடுதலைப் புலிகளுக்குச் சார்பாகப் பேசுவது அல்லது இயங்குவதனோடு தொடர்புடையது அல்ல. எமது சகோதரர்களான ஈழத்தமிழ் மக்களது அத்தியாவசியத் தேவையான உணவு மறுக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உலகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டிருக்கும் நிலையை வெளிக்கொணர்வதென்பது மனிதாபிமானத்தோடு தொடர்புடைய செயல். அவ்வாறு பாதிக்கப்படுகிற இனம் சிங்கள இனமாக இருந்திருந்தாலும் சகமனிதர்கள் என்ற வகையில் நாம் தட்டிக் கேட்டிருப்போம்”என்றார்.
தமிழ் மீதிருந்த பற்றுக் காரணமாக ‘தமிழி’என்ற பெயரில் வலையில் பதிந்து வருவதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட நண்பர் ஒருவர், “எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக தமிழ்நாடே தஞ்சம் என்று வந்திருக்கும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை”என்ற விசனத்தைப் பகிர்ந்துகொண்டார். “சொந்த மக்களிற் சிலரே அகதிகளைவிட மோசமான நிலையில் வாழ விதிக்கப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் வேறு எதைத்தான் எதிர்பார்க்க இயலும்…?”என்பது அதற்கான எதிர்வினையாக இருந்தது. மண்டபம் போன்ற முகாம்களுக்குச் சென்று அகதிகளைப் புகைப்படம் எடுப்பதென்பதும் அவர்களது குறைகளைக் கேட்டறிந்து வெளியிடுவதும் கூட ‘முயற்கொம்பு’தான் என்று அவர் மேலும் கூறினார்.
பதிவர்கள் வட்டத்திலிருந்து குழுவொன்றை உருவாக்கி அதனூடாக அல்லற்படும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏதாவது வகையில் உதவலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அதை யாரும் மறுத்துரைக்கவில்லை. எனினும் “நான் செய்கிறேன்”என்று யாரும் முன்வராததும் அந்த மௌனத்தின் பின்னாலிருந்த காரணங்களும் புரிந்துகொள்ளத்தக்கதே. அகிலனும் தமிழ்நதியாகிய நானும் மட்டுமே அங்கிருந்த ஈழத்தமிழர்கள் என்றபோதிலும், “நான் வாறேன்… நான் வாறேன்”என்று எமக்காக நாமே கைதூக்குவதிலுள்ள அபத்தத்தை உணர்ந்து மௌனித்திருக்க நேர்ந்தது. ஈழத்தமிழர்களின் கண்ணீரை ஊடகங்கள் வாயிலாக ஏனைய மக்களுக்கு எடுத்துச்சொல்ல வேண்டியதன் அவசியமே பெரும்பாலானோரால் பரிந்துரைக்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் ஈழத்தமிழ் மக்கள் தொடர்பாக தமிழகத் தமிழர்களின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை பலரும் ஒப்புக்கொண்டனர்.
“பேசுவதனால் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப் போகிறது…?”என்ற கேள்வி பலரது மனதையும் நெருடிக்கொண்டிருந்தது தெளிவாகத் தெரிந்தது. ஆனால், ஊடகங்கள் தமது குரலால் பேசுவதென்பது தமிழகத் தமிழர்களிடையே ஈழத்தமிழர்களது நிலைப்பாடு தொடர்பான கூர்ந்த கவனத்தையும் அனுதாபத்தையும் கொண்டுவரும் என்பதில் ஓரிருவரைத் தவிர ஏனையோர் உடன்பட்டனர்.
கடந்த சந்திப்பில் சிவப்புச் சட்டையோடு வந்திருந்து கூட்டத்தை ஒழுங்கமைத்த பாலபாரதி இம்முறை ‘அல்லாரும் தலைவர்களே…’என்று கமுக்கமாக இருந்துவிட்டார். ‘நாம என்ன செய்ய முடியும் சொல்லுங்க’என்று பொன்ஸ் எனக்குப் பக்கத்தில் இருந்து அடிக்கடி ஆதங்கப்பட்டார். ஆலமரத்தாருக்கு இந்தக் கையெழுத்து முயற்சியில் பொன்ஸ் உதவி செய்ததாக ஒரு உபரித் தகவல் எனக்குக் கிட்டவே, உதவி செய்து விட்டு ஒன்றுமே செய்யாதது போலிருந்த அந்த ‘பெருந்தன்மை’யால் எனக்கு அவவில் பாசம் பெருகியது. நடேசன் பூங்காவில்தான் பா.க.ச. முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று பொன்ஸ் எனது காதோடு கூறியதை நான் யாருக்கும் சொல்லப்போவதில்லை.
“நாம பேசி என்ன ஆகப்போகிறது…?”என்று நிர்மலா திருவிடம் விடாமல் கேட்டுக்கொண்டேயிருந்தார். திருவும் விடாமல் பொறுமையாக விளக்கம் அளித்துக்கொண்டே இருந்தார்.
இறுதியாக, கடந்த சந்திப்பின்போது ‘இட்லி….. வடை….’என்று பெருத்த சர்ச்சையைக் கிளப்பிய, புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியது. நிறையப் பேர் புகைப்படத்துக்கென உறைந்த புன்னகையோடு நிற்க மூன்று புகைப்படக் கருவிகள் கண்ணடித்தன.
அகிலனோடு கொஞ்சநேரம் ‘சொந்தக் கதை’பேசிவிட்டு, திரு. திருவிடமும் ஏனையோரிடமும் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினேன். பூங்காவிலிருந்து வெளியேறும் வழி தெரியாமல் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல (சும்மா ஒரு பேச்சுக்கு) நின்றிருந்ததைப் பார்த்தோ என்னவோ பொன்ஸ் வாசல்வரை கொண்டுவந்து வழியனுப்பிவைத்துவிட்டுப் போனார். எங்கோ யாழ்ப்பாணத்திலும், வாகரையிலும், மண்டபம் போன்ற அகதி முகாம்களிலும் இருக்கிற முகம்தெரியாத உறவுகளுக்காக பேசுகிற திரு, தமிழி போன்ற ‘மனிதர்களை’நினைத்து வழியெல்லாம் மனசு நெகிழ்ந்துகொண்டே வீட்டிற்குப் போனேன்.
Subscribe to:
Post Comments (Atom)
19 comments:
சந்திப்பின் நிகழ்வுகளை உங்கள் விரிவான பார்வையுடனும், உங்கள் பாணியிலும் பதிவு செய்தமைக்கு நன்றி!
// பூங்காவிற்குள் வட்டமாக இருப்பவர்கள்தான் ‘பதிவர் வட்டம்’என்பது தொலைவிலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது//
:))
திரு யாரென்று தெரிந்தபோது உங்களுக்கு வந்த ஆச்சரியம் எனக்கும் வந்தது. பெரிய மனசு வேணும்.
பதிவர் சந்திப்பை சுவராசியமாய் தந்தமைக்கு நன்றி
சுடச்சுட விளக்கமாக பதிவு தந்தமைக்கு நன்றி
//அகிலனும் தமிழ்நதியாகிய நானும் மட்டுமே அங்கிருந்த ஈழத்தமிழர்கள் என்றபோதிலும், “நான் வாறேன்… நான் வாறேன்”என்று எமக்காக நாமே கைதூக்குவதிலுள்ள அபத்தத்தை உணர்ந்து மௌனித்திருக்க நேர்ந்தது//
வார்த்தைகளுக்கு பின்னால் இருக்கும் வலியை புரிந்துகொள்ள முடிகிறது.காலம் மாறாமலா போய்விடும்..?
சந்திப்பு பற்றி நேர்த்தியாக விளக்கியமைக்கு நன்றி....
அன்புள்ள தமிழ்நதி,
சந்திப்பை கிட்டத்தட்ட முழுமையாகவும் சுவையாகவும் பகிர்ந்துள்ளீர்கள்..நன்கு கூர்மையாக கவனித்தும் எழுதியுள்ளீர்கள். விடுபட்டவைகள் மிகக் குறைவென்றே நினைக்கிறேன்.
என் பெயர் ச.சங்கர் :) சா.சங்கர் இல்லை.ஆங்கிலத்தில் இனிஷியல் இட்டால் இந்தக் குழப்பம் ஏற்படுவதில்லை :)
////பதிவர்கள் வட்டத்திலிருந்து குழுவொன்றை உருவாக்கி அதனூடாக அல்லற்படும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு ஏதாவது வகையில் உதவலாம் என்ற ஆலோசனை முன்வைக்கப்பட்டபோது, அதை யாரும் மறுத்துரைக்கவில்லை. எனினும் “நான் செய்கிறேன்”என்று யாரும் முன்வராததும் அந்த மௌனத்தின் பின்னாலிருந்த காரணங்களும் புரிந்துகொள்ளத்தக்கதே. அகிலனும் தமிழ்நதியாகிய நானும் மட்டுமே அங்கிருந்த ஈழத்தமிழர்கள் என்றபோதிலும், “நான் வாறேன்… நான் வாறேன்”என்று எமக்காக நாமே கைதூக்குவதிலுள்ள அபத்தத்தை உணர்ந்து மௌனித்திருக்க நேர்ந்தது.////
உங்கள் ஆதங்கம் புரிந்து கொள்ளக் கூடியதும் ஞாயமானதும்..ஆனால் என் போன்ற சிலரது தயக்கம் இது விஷயம் பற்றிய அறிவின்மையாலன்றி ஊக்கக்குறைவாலல்ல என்பதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
கண்டிப்பாக இந்த விஷயம் முன்னெடுத்து செல்லப் பட வேண்டும் அதற்கு வழி முறைகள் பற்றி தெரிந்தவர் யாரேனும் கூறினால் நலம் பயக்கும்.இது பற்றி நானும் பதிவிட்டுள்ளேன்...http://ssankar.blogspot.com/2006/12/blog-post.html அதிகம் பதிவிடாத நான் இதைப் பற்றி அவசரமாக பதிவிட்டதற்கு காரணம் இந்த விஷயத்தில் இந்தப் பதிவு எனக்கு கிரியா ஊக்கியாக செயல் படட்டும் என்ற நினைப்பே ..
அன்புடன்...ச.சங்கர்
//இது விஷயம் பற்றிய அறிவின்மையாலன்றி ஊக்கக்குறைவாலல்ல என்பதை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...
//
உண்மைதான் தமிழ்நதி!
இலங்கையில் பிரச்சினை என்பதை மட்டும் அறிந்து, எதனால், யாரால் என்பன போன்ற விஷயங்களை அறியாதவர்கள் எத்தனையோ பேர் உண்டு.
உங்கள் அடுத்த கூட்டம் சென்னனயில் நடக்கும்போது எனக்கு அழைப்பு விடுத்தால் நான் அவசியம் கலந்து கொள்வேன். நான் ஒரு சிறுகதை எழுத்தாளன். மேடை நாடக நடிகன். சமுதாய நலனில் அக்கறை செலுத்துபவன். வங்கி அதிகாரி.
மெலட்டூர். இரா. நடராஜன். (செல் பேசி 9444128245)
பதிவுக்கு நன்றி அக்கா!
//நடேசன் பூங்காவில்தான் பா.க.ச. முதன்முதலில் ஆரம்பிக்கப்பட்டது என்று பொன்ஸ் எனது காதோடு கூறியதை நான் யாருக்கும் சொல்லப்போவதில்லை.//
யாரு கிட்டையும் சொல்ல மாட்டேன்னு சொல்லி.. இப்படியா போட்டு ஒடைக்கிறது..?
:(((
ம் நதியக்கா நன்றாக தொகுத்திருக்கிறீர்கள்
//அகிலனும் தமிழ்நதியாகிய நானும் மட்டுமே அங்கிருந்த ஈழத்தமிழர்கள் என்றபோதிலும், “நான் வாறேன்… நான் வாறேன்”என்று எமக்காக நாமே கைதூக்குவதிலுள்ள அபத்தத்தை உணர்ந்து மௌனித்திருக்க நேர்ந்தது//
இப்படித்தான் நானும் உணர்ந்தேன் எனவே என் பெயரையும் சேர்த்துக்கொண்டதற்கு நன்றி
அன்புடன்
தம்பி
த.அகிலன்
வலைப்பக்கம் வந்து பின்னூட்டமிட்ட நண்பர்கள் நாமக்கல் சிபி,தருமி,சின்னக்குட்டி,சிந்தாநதி,ஆழியூரான்,ச.சங்கர், நடராஜன் யாவருக்கும் நன்றி.
வலைப்பதிவர் சந்திப்பு பற்றி எழுதியதால் பல தடவை வலைப்பக்கம் வந்து பின்னூட்டம் விட்டிருக்கிறார் நாமக்கல் சிபி. இதற்காகவே அடிக்கடி சந்திப்பு வைத்தால் நல்லது(இதைத்தான் பின்னூட்டக் கயமை என்பதா)
ச.சங்கர்! உங்களை ‘சா.சங்கர்’ என்று அவசரப்பட்டு அனுப்பிவைக்க முயன்றதற்கு மன்னிக்க வேண்டுகிறேன். பூங்காவின் மரங்களும் காற்றும் பேசிக்கொண்டதில் உங்கள் முதலெழுத்து தெளிவாகக் கேட்கவில்லை.
எனது பார்வையில் குறிப்பிட்டிருப்பதுபோல தமிழகத் தமிழர்கள் ஈழத்தமிழர்களது பிரச்சனையில் அக்கறை காட்டுவதிலுள்ள தயக்கத்தை எம்மவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், எமது சகோதரர்களே எங்கள் விடயத்தில் பாராமுகம் கொண்டவர்களாக இருப்பின் நாங்கள் வேறு யாரிடம் சொல்லியழவும் உதவிபெறவும் முடியும்…?
“என்போன்ற சிலரது தயக்கம் இது விஷயம் பற்றிய அறிவின்மையாலன்றி ஊக்கக் குறைவாலல்ல”
ஈழத்தமிழர் பிரச்சனை பற்றிப் பேசுகிற இணையத்தளங்கள் ஏராளம். ‘தமிழ்நாதம்.காம்’என்ற பக்கத்திற்குப் போனால் செய்தி முதற்கொண்டு கட்டுரை வரை நிறையத் தரவுகள், தகவல்கள்… கண்ணீரையும் கூட பெற்றுக்கொள்ளலாம். புதினம்.காம் மற்றும் தமிழ்மணத்தில் வரும் கவிஷனின் பக்கத்திலும் நிறைய வாசிக்கலாம்.
வலைப்பதிவர் சந்திப்பைப் பற்றி சில விடயங்கள் சொல்ல மறந்து போய்விட்டன என்பது பதிவு இட்டபின்தான் தெரிந்தது. ஆனால், ‘மறந்துவிடுவேன்’என்ற காரணத்தால் உடனுக்குடன் பதிந்துவிட்டேன். இனி வரும் பொன்ஸ் போன்ற பதிவர்கள் விடுபட்டவையையும் பேசுவார்கள் என நம்புகிறேன்.
‘அடுத்த தடவை அறிவித்தால் நானும் வந்து கலந்துகொள்வேன்’என்று நடராஜன் அவர்கள் தொலைபேசி எண் கொடுத்திருக்கிறார்கள். என்னைப்போன்ற நாடோடி அல்லாது நிரந்தரமாக இங்கிருக்கும் யாராவது தொலைபேசி எண்ணைக் குறித்துக்கொண்டு அவரை அழைக்கவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.
அழகாகத் தொகுத்திருக்கிறீர்கள். நன்றி.
/*"வாங்க ஹெட்மாஸ்டர்” என்று சிவஞானம்ஜிக்கு கூட்டுக்குரல் கொடுத்து வரவேற்றார்கள்.*/
வலைப்பூ உலகின் டீச்சர் ஜி அல்ல துளசி அக்காதான்.
சில தவல்களை அறிய முடிந்தது.
விசயங்களைக் காட்டிலும் எழுதியவிதமும் நடையும் பிடித்திருந்தது.
நன்றி.
பதிவைப் பற்றிய விவரங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.
உள்ளதை உள்ளபடி சொல்லியிருக்கின்றீர்கள். உங்களைப் பதிவர் வட்டத்தில் சந்திக்க முடிந்ததில் மகிழ்ச்சி.
ஈழத்தமிழர் பிரச்சனை இன்னும் எங்கு செல்லுமோ தெரியவில்லை. கைகளைக் குவித்துக் கடவுளை வேண்டியபடி நாங்கள். அதுதான் இன்றைக்குச் செய்து கொண்டிருப்பது. :-( அதற்காக தமிழ்ச் சகோதரர்கள் மன்னிக்க.
அக்கா, பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.
சந்திப்பு பற்றிய நல்ல தொகுப்பு இது!
// Dharumi said...
திரு யாரென்று தெரிந்தபோது உங்களுக்கு வந்த ஆச்சரியம் எனக்கும் வந்தது. பெரிய மனசு வேணும்.//
இதில் என்ன ஆச்சரியம் அய்யா! உங்களை சந்தித்ததில் நான் அதிகமாக பண்பட்டேன் என்பேன்.
Post a Comment