12.29.2006

மெல்லத் தமிழ் இனி….




இன்றைக்கும் கனவில் நான் எழுதிய கவிதையை விழிப்பு விழுங்கிவிட்டிருந்தது. கனவை முழுமையாகக் காட்சிப்படுத்த காலையில் முடிந்ததேயில்லை. உறக்கத்தின் பாதையில் அது எங்கோ தொலைந்துவிட்டிருக்க வேண்டும்.

இன்று ஞாயிற்றுக்கிழமை. அலாரத்தின் தலையில் ஓங்கி அடிக்கத் தேவையற்ற இந்த நாளை எனக்குப் பிடிக்கும். போர்வையை உதறி பதறி எழுந்து, அவசரமாய் மலங்கழித்து, துருவக்குளிரின் கொடுமையை பல்கடித்துப் பொறுத்து கொதிநீரில் குளித்து, தலை-கை-கால்-உடல் என எங்கும் நீக்கமற சந்திரமண்டலத்துக்குப் புறப்படும் கோலத்தில் உடையணிந்து, பேரூந்தில் ஒரே திசையில் பிரயாணித்து கையெழுத்துப் போட்டு இயந்திரமாய் படபடக்கும் வாழ்வு கசந்துவிட்டிருந்தது.

எழுந்து வெளியில் வந்தபோது வீடு இன்னும் உறங்கிக்கொண்டிருந்தது. பத்தொன்பதாவது மாடியிலிருந்து பார்க்க கண்ணாடிச் சுவருக்கப்பால் நகரம் விடிகாலையின் சுறுசுறுப்போடு இயங்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் மரங்களின் பின்னணியில் தெரிந்த ஏரி ஊரின் ஞாபகங்களைத் தூண்டியது.

திடீரென ஒரு நூதனமான காட்சி மூளையில் பதிந்தது. தொடர்மாடிக் கட்டிடத்தின் முன்னாலிருந்த மரங்களைக் காணவில்லை. நெடிதுயர்ந்திருந்த கட்டிடம் ஒன்று மரங்கள் இருந்த இடத்தில் முளைத்திருந்தது. கதைகளில் சொல்வதுபோல கண்களைக் கசக்கிப் பார்த்தேன். கைகளை நுள்ளிப் பார்த்தேன். வலித்தது.

வெளிநாட்டில் எதுவும் நடக்கலாம்(உள்நாட்டில் மட்டுமென்ன) என்றபோதிலும் இரவோடிரவாக எந்தப் பூதம் இந்த வேலையைச் செய்துமுடித்ததென்று எனக்கு மலைப்பாக இருந்தது. கைகால்கள் பதறின. முரளியிடம் கேட்டால் சொல்லக்கூடும். ஆனால், அவர் இரவுப் பணியிலிருந்து இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.

வீட்டிலிருந்த பொருட்களும் வழமையான இடத்தில் இல்லை. யாரோ ஒரு மாயவித்தைக்காரன் புகுந்து எல்லாவற்றையும் இடம்மாற்றிவைத்துவிட்டாற் போலிருந்தது. பயமாக இருந்தது. பசித்தது. அடிக்கடி நுள்ளி நுள்ளிப் பார்த்ததில் கையெல்லாம் வலித்தது.

நல்லவேளையாக கார்ச்சாவி சுவரில் இருந்தது. ‘எலிவேற்றர்’இல் கீழிறங்கியபோது வயதான ஜோனாதன் போலிருந்த ஒருவன் ‘ஹாய்’என்றான்.

“ஹாய்…”என பதிலுக்கு அகவிவிட்டு “ஜோனாதனின் சகோதரரா…?”என்றேன் மரியாதை நிமித்தம்.

அவன் விசித்திரமான பார்வையொன்றை எறிந்து திறந்த கதவினூடாக மறைந்துபோனான்.

எனக்கு என்னவோ ஆகிவிட்டது என்பது நிச்சயமாகத் தெரிந்தது. அண்மை நாட்களில் இரவு அதிகநேரம் கண்விழித்திருந்ததால் இவ்வாறு நேர்ந்திருக்கலாம். இடையறாத வேலையினால் மூளை களைத்துப்போயிருக்கலாம். பைத்தியத்திற்கும் தெளிவுக்கும் இடையில் நூலிழைதான் வித்தியாசம் என்று எங்கோ வாசித்தது நினைவில் வந்தது. நான் அந்த நூலிழையைக் கடந்துவிடக்கூடாது. முதலில் அடம்பிடித்து அழும் வயிற்றைச் சமாதானப்படுத்த வேண்டும். காரை வழக்கமாக நாம் போகும் இடத்தை நோக்கிச் செலுத்தினேன். அந்தச் சந்திப்பில் ஒரு தமிழ்க்கடை இருந்தது. அதில் ஊதிப் பெருத்த வடையும், மீன் அடைத்த பணிசும் சுவையாக இருக்கும்.

உங்களால் நம்ப முடிகிறதா…? கடையைக் காணவில்லை! வயிற்றுக்குள் பசியின் தடம் மாறி ஒரு கனம் பரவியது. அந்தச் சந்திப்பில் நேற்றுவரை சுமார் பத்துத் தமிழ்க்கடைகள் இருந்தன. ஞாயிற்றுக்கிழமைகளில் அங்கிருந்த மீன் விற்கும் கடையில் நீலக்கால் நண்டு வாங்குவோம். உறைந்த முருங்கையிலையை இளகவைத்துப் போட்டுச் சமைக்கும் நண்டுக்கறியை முரளி சிலாகித்து மூக்கொழுகச் சாப்பிடுவார்.

“கலி! இந்த நண்டுக்கறிக்காகவே உம்மை டிவோர்ஸ் பண்ணாமலிருக்கலாம்”

‘கலி’என்பது எனது பெயர்தான். அதற்கு தமிழில் ‘சனி’என்று பொருள். ‘கல்யாணி’என்றழைக்க வெள்ளைக்காரர்களின் நாக்கு இலகுவில் வளைந்துகொடுக்காத காரணத்தால் இந்தப் பெயர் மாற்றம் நிகழ்ந்தது. பெயர் மாற்றத்தில் முரளிக்குக் கொஞ்சம் மனவருத்தந்தான். என்றாலும் “பெயரில் என்ன இருக்கிறது…?”என்று ‘சேக்ஸ்பியர்’நினைப்பில் சொல்லி கவலையை ஆற்றிக்கொள்வார்.

குழப்பமும் பயமும் களைப்பும் கலந்த உணர்வொன்றினுள் நான் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தேன். நேற்றுவரை ‘பேக்கரி’யாக இருந்த கடைக்குள் போய், தமிழன் போல தெரிந்த இளைஞனிடம் போய் ‘வடை கிடைக்குமா…?’என்றேன்.

முன்பொருபோதும் அவன் ‘வடை’என்ற அந்த வார்த்தையை அறிந்ததில்லைப் போலும். விழி சுருக்கி “என்ன…?”என்றான் ஆங்கிலத்தில்.

“ஓ…!இவன் கயானாக்காரன்”நினைத்துக்கொண்டேன். அசப்பில் தமிழர்களைப்போலவே இருக்கும் அவர்களின் தோற்றத்தில் ஏமாந்தது இது முதற்தடவையல்ல.

“ஒன்றுமில்லை”

வெளியில் வந்து கடையின் பெயர்ப்பலகையை நிமிர்ந்து பார்த்தேன். ‘மாடிஸ் கொன்வீனியன்ஸ்’என்றிருந்தது. எனக்குள் ஏதோ பொறிதட்ட மீண்டும் உள்நுழைந்து “உங்கள் பெயரை அறியலாமா…?”என்றேன்.

வியப்போடு என்னைக் கண்களுக்குள் பார்த்தபடி “ஸ்ரீவ் மதியழகன்”என்றான்.

அடுத்த சந்திப்பில் ஒரு கடையில் ‘பரபரப்பு’என்ற பெயரில் வெளிவரும் ஒரு பத்திரிகை விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். அதில் ‘உள்ளே நடந்தது என்ன….?’என்ற மாதிரியான தொனியில் உள்ளுர் மற்றும் வெளியூர் அரசியற் கட்டுரைகளை ஒருவர் சுவைபட எழுதுவதுண்டு. அரசியல்… அதிலும் கட்டுரை என்றால் பத்தடி தள்ளியே நிற்கும் என்னை அந்த நகைச்சுவை இழையோடும், கிண்டல் வழியும் பாணி ஈர்த்திருந்தது.

உள்ளுக்குள் ‘என்னவோ நடந்துகொண்டிருக்கிறது’ என்றொரு பல்லி அமர்க்களமாகச் சொல்லிக்கொண்டேயிருந்தது. ‘பரபரப்பு’என்ற பெயரை நான் நினைவில் வைத்திருப்பது எனக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. காரை நிறுத்திவிட்டு கடைக்குள் பிரவேசிக்க காலெடுத்து வைத்தவள் திகைப்பின் இருளில் தள்ளி விடப்பட்டது போல நின்றுவிட்டேன். கடையுமில்லை. பையில் அடைத்த கத்தரிக்காயுமில்லை.

‘ஐயோ… இது என்ன…?’மனம் பதறியது.

‘சிந்தி…சிந்தி…’மூளையை அதட்டினேன். அது கோமாவில் கிடந்தது. நகரும் வண்டிகள், நடக்கும் மனிதர்கள், கட்டிடங்கள் எல்லாம் ஒருகணம் உறைநிலைக்குச் சென்று திரும்பின. ஒரு நிமிடந்தான்… பூமி குளிர்காய்ச்சல் வந்தாற்போல நடுங்கியது. குனிந்து கால் நிலத்திலே படிந்திருக்கிறதா என்று பார்த்துக்கொண்டேன்.

தமிழ்ப்பையன்போல தோற்றமளித்த ஒருவன் என்னெதிரே வந்துகொண்டிருந்தான். தொப்பியை மறுவளமாகத் திருப்பிப்போட்டு, காற்சட்டைப் நடுப்பொருத்து முழங்கால்வரை இறங்கி ‘விழுந்துவிடுவேன்’என்று அச்சுறுத்த, இளஞ்சிவப்பும் ஊதாவும் கலந்த மேலங்கி அணிந்து, தலையை கரட்டி ஓணான்போல ஆட்டி ஆட்டி வந்துகொண்டிருந்தான். இங்கு என்ன நடக்கிறதென்று இவனிடம் கேட்டால் சொல்லக்கூடும்.

“தம்பீ”என்றே நெருங்கி.

“உங்களுக்கு என்ன வேண்டும்…?”என்றான் ஆங்கிலத்தில்.

“நாசமாய்ப் போக! உனக்கும் தமிழ் தெரியாதா” ஆங்கிலம் தந்த துணிவில் தமிழில் கோபப்பட்டேன்.

“இங்கே ஒரு தமிழ்க்கடை இருந்ததே… இடம் மாற்றி விட்டார்களா…?”ஆங்கிலத்தில் கேட்டேன்.

“நான் அறிந்தவரை அப்படி ஒன்று இருந்ததாக நினைவில்லை.”

“இரவு பெய்த மழைக்கு முளைத்த காளான்”மனசுக்குள் திட்டிக்கொண்டு “நேற்று இங்கிருந்தது”என்றேன் நலிந்த குரலில்.

“உங்கள் உடல் நலத்திற்கு ஒன்றுமில்லையே”என்று கேட்டுவிட்டு நகரப் பார்த்தான்.

சட்டைப் பையிலிருந்து அவன் காதுகளை நோக்கிப் போன ஒன்றை அப்போதுதான் கவனித்தேன். அதனுள்ளிருந்து “பார்த்த முதல் நாளே….”பாட்டுக் கேட்டது.

“நீ தமிழனா…?”

‘உனக்கு ஏதோ பிரச்சனை’என்பதுபோல அவன் இடதும் வலதுமாகத் தலையை ஆட்டிவிட்டுப் போய்விட்டான்.

அவன் போன மறுநொடியே கைப்பைக்குள்ளிருந்த சிறுகண்ணாடியை எடுத்து முகம் பார்த்தேன். அதன் பிம்பம் தந்த பயத்தில் ‘படக்’கென்று மூடிவைத்துவிட்டேன்.

என்ன இது விந்தை! ஓரிரவிற்குள் தமிழ்க்கடை இல்லை. பத்திரிகை இல்லை. தமிழர்கள் இல்லை. பொறாமைப்படவும் நம்மவர்கள் இல்லையென்றால்…. பயமாக இருந்தது.

போகும் வழியெல்லாம் புது மெருகேறிப் பளபளத்த கட்டிடங்களைப் பார்த்தேன். கோவிலுக்குப் போனால் தெளிந்துவிடுவேன் என்று தோன்றியது. கடவுளிடம் விண்ணப்பங்களைக் கையளித்து சிரமப்படுத்துவதில்லை என்றாலும், அங்கு போய்விட்டு வரும்போது மனசு மழையின் பின்னான செடிகொடிகளைப் போல ஆகிவிடுவதைக் கவனித்திருக்கிறேன். பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் திருவிழா நாட்களில் கோவிலுக்குப் போவதை வலிந்து தவிர்ப்பேன். சிவனுக்குப் போட்டியாக விரித்த சடைகளை மீறி என்னால் சாமியைப் பார்க்க முடிந்ததில்லை. தவிர, பின்னால் நிற்பவர்களுக்கு தங்கள் முதுகின் தரிசனம் போதும் என்று நினைப்பவர்களோடு என்னால் சமரசம் செய்துகொள்ள முடிவதில்லை.

கடவுளுக்கு நன்றி! கோயில் இருந்தது. ஆனால், ஞாயிற்றுக்கிழமை ஆரவாரத்தின் சுவடுகளையே காணோம். முன்கதவில் பெரிய பூட்டுத் தொங்கியது. சரி… சாமிக்கு விடுமுறை நாள் என்றெண்ணித் திரும்பியவளை ஒரு குரல் அழைத்தது. ‘சாமிதான் அழைக்கிறாரோ…’என்ற சந்தேகத்தில் திரும்பிப் பார்த்தேன். பராசக்தி படம் பார்த்தபிறகும் அந்த மாயை விலகவில்லை. கோவிலின் பக்கவாட்டில் இருந்த யன்னலினூடாக ஒரு முகம் தோன்றியது.

“அர்ச்சனை செய்யவில்லையா…?”என்று ஆங்கிலத்தில் அந்த முகத்துக்குரியவர் கேட்டார். அவர் அடர்ந்த சாம்பல் நிறத்தில் ‘கோட்’அணிந்து கறுப்பு நிறத்தில் கழுத்துப்பட்டி கட்டியிருந்தார்.

“பூட்டியிருக்கும் கோவிலில் அர்ச்சனை செய்வதெப்படி…?” என்று வியந்துகொண்டே அந்தப் பக்கமாகப் போனேன்.

‘மக் டொனால்ட்’ மற்றும் ‘கென் ரேக்கி’யை நினைவுபடுத்தும் வகையில் ‘ஹெட்போன்’போல ஒன்றை அணிந்திருந்தவர் “எந்தப் பெயரில்? என்ன சாமிக்கு?”என்றார்.

எனக்கு தூக்கத்தில் எழுப்பிவைத்து கன்னத்தில் அறைந்தது போலிருந்தது. இந்த நாள் இவ்வளவு விசித்திரமாக இருந்திருக்க வேண்டியதில்லை. ஆனால், ‘ஏதோ நடக்கிறது நடக்கட்டும்’என்ற வேதாந்தம் பிறந்துவிட்டது. எல்லாம் கைமீறிப் போனது போலிருந்தது.

ஆதியிலிருந்தே அம்பாள்தான் பிடிக்கும். பாலர் பள்ளிக்குப் போய்வந்த காலத்தில் தோடம்பழ இனிப்பு வழங்கப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடம் வீட்டில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த எனக்கு, அம்பாளின் அருள் பரிபூரணமாகக் கிட்டியது.
‘இன்றைக்கு ரீச்சர் வரக்கூடாது’என்று, வீட்டுக்குப் பக்கத்திலிருந்த அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் என்ன காரணத்தினாலோ அன்றைக்கு ஆசிரியை வரமாட்டார்.

“அம்பாள் பெயருக்கு”

“இருபத்தைந்து டாலர்” மறக்காமல் கேட்டு வாங்கிக்கொண்டார். ‘இது அநியாயம்’என்று சொல்ல வாயெடுத்தேன். எதிர்ப்பு உதட்டுக்குள்ளேயே மடிந்துபோயிற்று.

உள்ளிருந்து மணியடிக்கும் சத்தம் கேட்டது. கூடவே ஆங்கிலத்தில் மந்திரமும். சாமந்தியும் ரோஜாவும் கலந்த மணம் ஒன்று யன்னலூடாக வந்து நாசியில் மோதியது. மஞ்சள் நாடாவால் கட்டப்பட்ட சிறு பெட்டியொன்று பிரசாதமாகக் கிடைத்தது. அதைத் திறந்து பார்க்கத் துணிவு வரவில்லை.

அந்தக் கோவிலுக்கு இணையத்தளம் இருப்பதாகவும் அதன்மூலமும் தரிசனம் பெறலாமென்ற உபரித்தகவலைப் பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.

மிட்லான்ட்டும் எக்லின்ரனும் சந்திக்கும் இடத்தைக் கடக்கும்போது எதேச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். அந்த நீளமான கட்டிடம் செங்கல் பெயர்ந்து பாழடைந்திருந்தது. அங்கேதான் எனது கவிதை நூல் வெளியீட்டு விழா நடந்தது. ஏற்புரை என்ற பெயரில் மேடைக் கூச்சத்தோடு அன்று ஏதோ உளறியது நினைவிருக்கிறது.

பிறிம்லி சந்திப்பைக் கடக்கும்போது ‘வீட்டிற்குப் போய் என்ன செய்வது…?’ என்ற பயம் சூழ பூங்காவை நோக்கிக் காரைத் திருப்பினேன். நான் வழக்கமாக உட்காரும் ‘பென்ச்’சையும் எதுவோ தின்றுவிட்டிருந்தது. காற்றலைக்கும் பாரிய மரங்களைக் கடந்து பூங்காவின் நடுவே ஓடிக்கொண்டிருக்கும் ஏரியை வந்தடைந்தேன். மரப்பாலம் இருந்தது. பாதுகாப்புக்கெனக் கட்டப்பட்டிருந்த கம்பியில் சாய்ந்தபடி பெரியவர் ஒருவர் நீரையே பார்த்துக்கொண்டிருந்தார்.

ஏதோவொரு அமானுஷ்யம் என்னைத் துரத்திக்கொண்டிருந்தது. அதிலிருந்து தப்பித்து எங்கு ஓடுவதென்றுதான் தெரியவில்லை.

“மகளே…! நீ தமிழா…?”அந்தப் பெரியவரின் நலிந்த குரலால் திடுக்குற்றேன்.

“இவர் தமிழில் அல்லவா பேசுகிறார்…?”எனக்குள் மகிழ்ச்சி பிரவகித்தது.

“ஆம் பெரியவரே…! நான்… நான் குழப்பத்தில் இருக்கிறேன்” அறிமுகமற்றவரிடம் இப்படிப் பேசுதல் எனது இயல்பல்ல எனினும் அப்படித்தான் பேசமுடிந்தது.

நரைத்த புருவங்களின் கீழ் குறுகலாகத் தெரிந்த விழிகளில் பரிவு மின்னியது.

“இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு”

“எனக்கு ஒன்றும் புரியவில்லை ஐயா… இங்கிருந்த எனது மக்கள் எங்கே…? கடைகள், பத்திரிகைகள், கோயில்கள், பரதநாட்டியம், கர்நாடக சங்கீதம், விருந்துச் சாப்பாடு என்று விளம்பரங்கள் ஊடாக கூவிக் கூவி அழைக்கும் உணவகங்கள்… எல்லாம் எங்கே ஐயா?”

“போயின போயின காண் புலம்பெயர்ந்த நாட்டினிலே”என்றார்.

“ஐயா…! எனக்குப் பயமாக இருக்கிறது”

“எனக்கும்தான். தமிழ் கேட்டு எத்தனை நாளாயிற்று தெரியுமா… என்னை என் ஊருக்கு அழைத்துப் போகிறாயா…?”

என்னருகில் நெருங்கி வந்தார். சுருங்கிய கன்னங்களைக் கண்ணீர் நனைத்திருந்தது.

“என்னுடைய நண்பர்கள் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள்… நான் இங்கு ஒற்றைப் பறவையெனத் தனித்துத் தங்கிவிட்டேன்…”

அவருடைய கண்களிலிருந்து ஒரு நெருப்புக்கீற்றொன்று புறப்பட்டு என்னை நோக்கி வந்தது.

“நீங்கள் எப்போது கனடாவிற்கு வந்தீர்கள்…?”

“2012ஆம் ஆண்டு”

திகைப்பின் இருளுக்குள் யாரோ என்னை இழுத்துக்கொண்டிருந்தார்கள்.

“எத்தனை ஆண்டுகளாக இங்கிருக்கிறீர்கள்…?”

“முப்பத்தெட்டு ஆண்டுகளாக… இன்று 2050ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ஆம் திகதி மகளே…!”

நான் பேச்சறுந்தவளாக நின்றுகொண்டிருந்தேன். காற்று ‘ஊய்…ஊய்’என்றது. மரங்கள் பெயர்ந்து நகரத்தொடங்கின. ஏரி தன் நீலக்கண்களால் என்னை உற்றுப் பார்த்தது. பெரியவரைக் காணவில்லை.

“ஐயா…! ஐயா…! பெரியவரே…!”

யாருமில்லை! யாருமேயில்லை! மரங்கள் என்னை நெரித்துவிடப் போகின்றன. நான் பெருங்குரலெடுத்து அழுதேன்.

“கலி…! கனவா…?”

முரளி என்னை உலுப்பி எழுப்பினார்.

“என்னைக் கல்யாணி எண்டே கூப்பிடுங்கோ…”

ஏறக்குறைய அலறினேன். அவர் பேசாமல் திகைப்போடு திரும்பிப் படுத்துக்கொண்டார்.

7 comments:

இளங்கோ-டிசே said...

என்னாச்சு :-)?

Anonymous said...

வித்தியாசமாக இருக்கிறது. ம்... படிக்க நல்லாத்தான் இருக்கிறது. 2050 இல் புலம்பெயர்ந்த தமிழரின் நிலை என்ன மாதிரித்தான் இருக்கும்?! ம்...

தமிழ்நதி said...

ஊருக்குப் போய் வந்தேன். வேறு ஒன்றுமில்லை.

Anonymous said...

மெல்லத் தமிழ் இனி சாகாது இருக்க மெல்ல தமிழை உரமிட்டுத்தான் வளர்க்கவேண்டும்.

ஆங்கிலக் கலப்பில்லாமல் எழுதுவது என்பது இனி மிகச் சிரமம் தான்..

தமிழ் புலம் பெயர்ந்தாலும், தமிழ் புலன் மாறாதிருக்குமோ.


ஆனால், தமிழ் நாட்டில் தமிழ் பாதுகாப்பு இயக்கம். டமிள் வெல்பேர் சொஸைட்டி என்ற பெயரில் நிச்சயம் இருக்கும்.கொள்ளுப்பேரன் முதல்வனாக இருப்பார்..

அவ்வளவே தமிழகத்தில் மாற்றமிருக்கப் போகிறது.

"எனவே, தமிள்நாட்டுக்கு பிராபளம் இல்லை.."

:)


உங்கள் கதை போல்,உண்மையில் நடந்து விடும் போலத் தான் தெரிகிறது.
அருமையாக இருந்தது...!!வாழ்த்துக்கள்..!!நடந்து விடாமிலிருக்க வேண்டுதல்கள்..!!??

ஓகை said...

அபாரமான நடை!. எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ரசித்தேன்.

இன்றைக்கும்
கனவில் நான் எழுதிய கவிதையை
விழிப்பு விழுங்கிவிட்டிருந்தது.
கனவை முழுமையாகக் காட்சிப்படுத்த
காலையில் முடிந்ததேயில்லை.
உறக்கத்தின் பாதையில்
அது எங்கோ
தொலைந்துவிட்டிருக்க வேண்டும்.

நீங்கள் எழுதிய வரிகள் தான். மடக்கிப் போட்டால் கவிதை போலிருக்கிறது.

Anonymous said...

நன்றாக இருக்கிறது நதி.. கனவு..

//என்னுடைய நண்பர்கள் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள்…//
2050க்குள் நீங்கள் நிஜமாகவே அமைதியான அழகான உங்கள் ஊருக்குப் போய்விட வேண்டிக் கொள்ளத் தான் முடிகிறது.. :(

தமிழ்நதி said...

பொன்ஸ், '2050க்குள் அமைதியான அழகான ஊருக்குப் போய்விட வேண்டிக்கொண்டதற்கு' நன்றி. அதற்குப் பிறகு அங்கு போய் எனக்கு மேல் முளைத்திருக்கும் புல்லை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்க வேண்டியதுதான். (கல்லறைக்குள்ளிருந்து)