12.31.2006
Tweet | |||||
நேற்றிருந்தேன் அந்த ஊரினிலே….
ஊராசைக்கும் உயிராசைக்கும் இடையில் தீராத போட்டி. வேகவெறியால் உந்தப்படும் ஓட்டக்காரர்களைப் போல- ஒன்றை மற்றொன்று பின்தள்ளுவதும், பின்தள்ளப்பட்டது முண்டியடித்துக்கொண்டு முன்னே வருவதுமாக மனம் சில நாட்களாக அலைக்கழிந்துகொண்டிருந்தது. ஈற்றில், விமானத்தின் குறுகிய சாளரத்தின் ஊடாக மேகத்தின் வெண்மையைக் கண்டு வியந்துகொண்டிருப்பதில் முடிந்தது.
விமானம் தலைதெறிக்க ஓடி நிற்கும்போது வழக்கமாக மனசுள் ஒரு மலர்ச்சி பரவும். மிகப் பிடித்த பாடலை எதிர்பாராத இடத்தில் கேட்டதுபோலிருக்கும். ஆனால், இம்முறை அதைக் காணவில்லை. விடுதிக்குப் போகும் வழியெல்லாம் போர் குறித்த பயம் அலைந்துகொண்டிருப்பது போலிருந்தது. பயத்தின் விழிகளால் பார்ப்பதாக என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால், கொழும்பை அடைந்ததும், என்னை நானே ஏமாற்றிக்கொண்டது புரிந்தது. எந்தக் கணத்திலும் வெடித்துவிடக்கூடிய குண்டின் நிலையிலிருக்கிறது கொழும்பு. இராணுவத்தின் துப்பாக்கி தயார்நிலையில் விழித்திருக்கிறது. பரிசோதனைச் சாவடிகளில் உயர்த்திய கையுடன் வேற்றுக் கரங்கள் உடல் தடவப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அடையாள அட்டை இல்லாதவர்கள் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம். ஆனால், அந்நிய மொழிக்கும், கடவுச்சீட்டுக்கும் இன்னும் மதிப்பு அழிந்துவிடவில்லை.
ஞாபகங்களாய் அழைக்கிறது ஊர். யாழ்ப்பாணத்தில் வீடு கட்டாமல் இடைநடுவில் வவுனியாவில் ஒரு கிராமத்தில் கட்டியது தற்செயலாக நிகழ்ந்த, இருந்திருந்து மகிழ்வு தரும் விடயம். “மாதங்களில் அவள் மார்கழி”என்று கவிஞர் அனுபவித்துத்தான் எழுதியிருக்க வேண்டும். ஊருக்குப் போகும் வழியெல்லாம் பச்சை விரிப்புத்தான். கண்களை மூடினாலும் உள்ளேயே படிந்துவிட்டாற்போன்ற மார்கழிப் பச்சை! வீதியை அண்டி வயல்கள் தொடங்கி உள்ளேகி சற்று தொலைவில் தென்னை மரங்களில் முடிகிறது. சில இடங்களில் தம் தொலைவால் நீலச் சாயத் தோற்றத்தில் மாயை காட்டும் மலைகள் பரவசப்படுத்துகின்றன. “ஐயோ…!இந்த அழகிய தீவில் வாழ முடியவில்லையே…”என்ற ஏக்கம் என்றைக்கும்போல அன்றைக்கும் எழுந்தது. உரிமைகள் அற்றது சொர்க்கமெனினும் வாழ உகந்தது அல்ல என்று சமாதானப்படுத்திக்கொள்வதன்றி வேறென்ன வழி…?
கிறிஸ்மஸ் இற்கு முந்தைய நாள் பரபரப்பில் வாழத் தேர்ந்தெடுத்த ஊர் இயங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட சனப்புழக்கம் குறைவுதான். விழிகளில் பதுங்கியிருக்கிறது பயம். ஒரு வெடிச்சத்தத்தில் உயிரிழந்து உள்ளொடுங்கிப்போவதற்குரிய சாத்தியங்களையே அதிகம் கொண்டிருக்கும் நிச்சயமின்மையில் வாழ்ந்துகொண்டிருப்பது எத்தனை துயர்மிக்கது.
வீடு என்பது ஆசுவாசம், தாய் மடி, ஞாபகங்களின் பெட்டகம். போர் சிரிப்பை உறிஞ்சியிருக்கலாம், உறவுகளையெல்லாம் தூரதேசங்களுக்கு அனுப்பிவிட்டிருக்கலாம், வீட்டைப் பார்த்தபோது அது தன் பிரமாண்டமான கரங்களால் இழுத்து தன்னுள் அமிழ்த்திக் கொண்டதை உணர்ந்தேன். விருப்பத்திற்குரிய தோழியின் மடியில் படுத்திருந்து கதை பேசும் சுகத்திற்கு ஈடானது வீட்டில் இருப்பது. இரவு… மொட்டை மாடி… மெல்லிய வெளிச்சம்… இதமான குளிர் எல்லாம் சொல்கின்றன வாழ்வின் அற்புதமான தருணங்களை இழந்துகொண்டிருக்கிறேனென.
மார்கழி மாதம் கிணற்றை நிரப்பியிருக்கிறது. செடிகொடிகளில் பச்சையை ஊற்றியிருக்கிறது. பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் இந்த வேம்புகள்… அவற்றைக் கட்டியணைத்துக்கொள்ள முடிவதில்லை. அதுவே தீராத வேட்கையாய் வளர்ந்துகொண்டிருக்கிறது. வேம்புகளை விட்டு வீட்டைப் பற்றிப் பேச முடிந்ததேயில்லை. நகரத்தின் மாசு படியாத கிராமமொன்றில், பனி பொழியும் விடியலில் உறக்கமும் விழிப்புமாகப் படுத்திருக்கும் நாட்களை நீடிக்க முடியவில்லை. பணிகள் அழைக்க பயம் துரத்த புறப்பட வேண்டியிருக்கிறது. எனது கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு எங்கிருந்தோ ஓடிவரும் பூனைக்குட்டி இனி ஏமாறப் போகிறதே என்ற துயர் சுடுகிறது. கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விடையளித்த அம்மாவின் மூக்குத்தி குத்திய தடம் வழியெல்லாம் வலிக்கிறது. விரும்பிய இடத்தில் வாழமுடியாமற் போவதற்கு ஈடான துயரத்தை எழுத முடியவில்லை. மொழிக்கு வலிமையில்லை என்றால் அது தமிழைப் பழிப்பது போலாகும். எல்லோர் மனங்களிலும் சொற்களில் இறக்கவியலாத சுமைகள் இருக்கும்.
பிரிவின் துயரை மீறி எரிச்சல் மண்ட பரிசோதனைச் சாவடியில் காத்திருக்கிறேன். ஊருக்குள் நுழையும்போது இத்தனை கெடுபிடி இல்லை. திரும்பி கொழும்புக்குச் செல்லும்போது ‘தலைநகரின் பாதுகாப்பு’என்ற பெயரில் புரட்டியெடுத்துவிடுகிறார்கள். கடவுச்சீட்டு, வாகன இலக்கம், சாரதியின் விபரங்கள், செல்லும் நோக்கம் இன்னபிற பதிய வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விடியலின் குளிருக்கு மாற்றாக வெயில் அனல் பொழிகிறது. பதியும் ‘சடங்கு’முடிந்ததும் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடுகிறார்கள். பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகத் தூக்கிக் காட்ட ‘ஷம்போ’, ‘கொண்டிஷனர்’ என்று படம் பார்த்துப் பாடம் சொல்லும் கிளிப்பிள்ளையாக கொஞ்ச நேரம் இருந்தேன். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்த அந்தப் பொலிஸ்காரர் ‘குறத்தி முடுக்கு’என்று வாசித்தபோது வியப்பாக இருந்தது. ‘சிங்களம் மட்டும்’ என்று முதுகில் குத்தியவருக்குத் தகுந்த பாடம்…! பெரும்பான்மையினரில் சிறுபான்மையினரையேனும் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது போர். ஆள் அடையாளம், வாகனம், பெட்டி எல்லாவற்றையும் சோதனையிட்டபோது சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவளை ‘என்னாங்கடா இது’என்று திகைக்க வைத்த சம்பவம் அடுத்து நிகழ்ந்தது. வாகனத்தின் சக்கரத்திலிருந்த காற்றைத் திறந்துவிட்டு அதற்குள் ஏதும் ஆயுதங்கள் கடத்திச்செல்லப்படுகின்றனவா என்று பரிசோதித்தார்கள். பரிதாபமாகப் படுத்துக் கிடக்கும் வாகனத்தை காற்றடித்து நிமிரவைத்து அனுப்புவதற்கென்று ஒருவரை நியமித்திருக்கிறார்கள். அவர் வெற்றிலை வாயோடு ‘ளாளா’என்று நிறையப் பேசிக்கொண்டே காற்றடித்தார்.
‘விட்டது சனி’ என்று புறப்பட்டால் மற்றுமொரு எரிச்சல்மிகு காத்திருப்பு. பதிந்த பத்திரங்களை பிரதான வீதியில் ஏறுவதன் முன் மற்றுமோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமாம். சாரதி ‘நாசமறுவார்’என்று திட்டிக்கொண்டே இறங்கிப்போக, முக்கால் மணி நேரம் அருகிலிருந்த முந்திரிகை மரங்களையும் தேக்கு மரங்களையும் வெறித்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
பிரதான வீதியில் ஏறி விரையும்போது ‘இன்றைய நாள் இப்படித்தான் என்று எழுதியிருந்தால் என்ன செய்வது’என்று வேதாந்தம் பேசி சமாதானப்பட்டுக்கொண்டதை, அடுத்து வந்த பரிசோதனைச் சாவடி சாவடித்தது. வாகனத்தைப் பிரிந்து வனாந்தரத்தை நினைவுறுத்தும் உடை மரத்தின் கீழ் மீண்டும் நீண்ட கடும் தவம். அரசுப் பேரூந்துகளில் வந்து காத்திருந்தவர்களுள் பசியிலோ தாகத்திலோ வெயிலின் வெம்மையினாலோ அழும் கைக்குழந்தைகளைக் காண கையாலாகாத கோபம் பொங்கியது. பாதிரியார்களும் பரிசோதனைக்கு விலக்கல்ல என்பதைக் கண்டபோது, தலைநகரிலுள்ள பயத்தின் ஆதிக்கம் புரிந்தது.
ஒருவழியாய் கொழும்பு மாநகர் வந்து விமானமேறி சென்னையில் வந்து இறங்கியபோது, கவலையும் நிம்மதியும் கலந்த ஓருணர்வு பரவியது. கவிதை என்கிறோம். காதல் என்கிறோம். மனிதாபிமானம், கற்பு, சாதி, பார்ப்பனர்-திராவிடர், அழகு, ஆண்டவன் என ஆயிரம் பேசுகிறோம். அண்மையில் ஒருவர் கூறினார்: காமம்தான் எல்லாவற்றிற்கும் அடிநாதம் என்று. எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது. நாங்களெல்லாம் இப்படிப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து உலகெல்லாம் கொண்டு திரியும் உயிரை, தெரிந்தே மற்றவர்களுக்காக விடத் துணிகிற மாவீரர்களின் கல்லறையில் போய் உரத்து அழவேண்டும் போலிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
24 comments:
//எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது. //
+
நன்றி பெயரிலி
எனக்கென்னவோ பின்னூட்டப் பகுதியில் உங்கள் பெயரைப் பார்த்தால் சொல்லொணாத மகிழ்ச்சியாக இருக்கிறது.
//நன்றி பெயரிலி
எனக்கென்னவோ பின்னூட்டப் பகுதியில் உங்கள் பெயரைப் பார்த்தால் சொல்லொணாத மகிழ்ச்சியாக இருக்கிறது.//
++
ஊரில் வயல்களின் நடுவே ஓடுகின்ற தெளிந் நீரோடைபோன்ற அழகான உரைநடை. பாராட்டுக்கள்.
உங்கள் இதமான எழுத்தை வாசிக்க எனக்கு பொறாமையாக இருக்கிறது..நானும் ரிஸ்க் எடுத்து போய்வரவேணும் போலிருக்கிறது.
வாழ்த்துகள்.
கலை, இலகியம் கவிதை சமூக பிரச்சினைகள் மீதான விவாதங்கள் எல்லாவற்றிலும் மனம் செலுத்த நல்ல பாதுகாப்பும் பசியில்லா வயிறும் அடுத்த நாள் பற்றிய கவலை இல்லா மனமும் வேண்டும். பதிவின் கடைசிப்பகுதி ஒருவிதத்தில் மனத்தை கனத்து போகச்செய்கிறது.
பின்னூட்டமிட்ட நண்பர்கள் பெயரிலி, வசந்தன், மலைநாடன், சூரியகுமார், பத்மா அர்விந்த் அனைவருக்கும் நன்றி. பின்னூட்டம் என்ற பெயரை எவர் வைத்தாரோ தெரியவில்லை உண்மையில் எழுத்துக்கு அது ஊட்டம்தான்.
வசந்தன்! பெயரிலி பற்றி ஒருவர் சொன்னார் ‘வஷிஷ்டர் வாயால் கேட்பதுபோல’என்று… அன்றிலிருந்து அவர் பின்னூட்டமிட்டால் சின்னப் பிள்ளைக்கு முதுகில் தட்டிக் கொடுத்தால் எப்படியிருக்குமோ அப்படியொரு சந்தோசம். வளர்ந்தாலும் சின்னப் பிள்ளைக் குணங்கள் இருப்பது இயல்பே அல்லவா.....…
பத்மா! ‘செவிக்குணவில்லையெனில் சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்’என்பதனோடு எனக்கும் உடன்பாடில்லை. நீங்கள் குறிப்பிட்டதுபோல வயிற்றில் பசி கொழுந்துவிட்டெரியும்போது எழுதமுடியாதுதான். போருக்குள் வாழ்ந்துகொண்டு நிதமும் மரணத்தைப் பார்க்கும் பதைப்பில் எழுதப்படும் கவிதைகளை வாசிக்கும்போது உண்மையில் வியப்படைவதுண்டு. உணவும் பாதுகாப்பும் இல்லையெனில்…. ம்…. என்னால் எழுத முடியாமற்போகுமென்றே நினைக்கிறேன்.
சொல்வதற்கு ஏதுமேயில்லை :-(
ஊருக்குப் போய்விட்டீர்களா தமிழ்நதி. என்னவோ உங்களது பதிவுகள் அனைத்தும் கண்னீரையும் பெருமூச்சையுமே கையளிக்கின்றன. மனம் கனக்கிறது. சரியா தப்பா என்று தெரியவில்லை.சின்னச் சின்ன கொண்டாட்டங்களை இழந்துவிட்டீர்களா
//எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது. //
None can describe it better
‘சின்னச் சின்னக் கொண்டாட்டங்களை இழந்துவிட்டீர்களா…?’
இல்லை நண்பரே! யாரோ சொன்னதுபோல வாழ்க்கையை நேசித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும்தான் இருக்கிறேன். இருந்தும் இருப்பில்லாமல் அலைவது என்பது இடையிடையே ஞாபகத்தில் வந்து உறுத்துகிறது. அந்த உறுத்தலோடுதான் எழுத உட்கார்கிறேன். எழுத்தில் நான் நினையாமலே கண்ணீர் கலந்துவிடுகிறது. எங்களுக்கும் சேர்த்துத்தான் நீங்கள் ‘சிகரெட்டால் குத்துவிளக்கு ஏற்றி’கொண்டாடிக்கொள்கிறீர்களே பிறகென்ன…
//எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது//
ஏங்க எங்களை எப்பவும் பொறாமை படுத்த வேண்டுமென்பதிலையே குறியாய் இருக்கிறீங்கள்
தக்கன பிழைத்தலும் அல்லன மடிதலும்- டார்வின்
நான் எங்கேங்க பொறாமைப்படுத்தினேன்.... பொறாமைப்படுதல் பெண்கள் குணம் என்று பலர் சொல்லிக்கொண்டு அலையும்போது, பொறாமைப்படுத்தலிலும் ஈடுபட்டு பாவத்தைச் சம்பாதித்துக்கொள்வேனா... ஊருக்குப் போகமுடியாத ஏக்கம் உள்ளத்திலிருந்து போவதே இல்லைப்போல... அங்கு போவதைக்கூட ஒரு சர்க்கஸ்காரனுக்கு ஈடான கவனத்துடன் அல்லது மிகக்குறுகிய பாலத்தில் நடந்துபோவதுபோல செய்யவேண்டியிருப்பதுதான் வருத்தம்.
thamilnathy,
onkada pathiva vasithu kondu erukkum pothu masil melliyathai oru vali thodangi................mudyum pothu..........நாங்களெல்லாம் இப்படிப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து உலகெல்லாம் கொண்டு திரியும் உயிரை, தெரிந்தே மற்றவர்களுக்காக விடத் துணிகிற மாவீரர்களின் கல்லறையில் போய் உரத்து அழவேண்டும் போலிருக்கிறது antha varikai vaasithathum............enathu nenche vedithu vidum pol............aluthu konde ehai eluthukiren..........maaverarin thiyakankalai enathu manathil oru padi uyarthi erukireerkal.
nanri.(enakku thamilil type panna theriyathu athanaal than eppadi eluthukiren thayavu sethu thamil maati type paani poduveerkala..?
அன்பின் தோழி (தோழியென்றே நினைக்கிறேன்)
உங்கள் கடைசி வரியை வெளியே போகும் அவசரத்தில் சரியாக வாசிக்கவில்லை. வழக்கம்போல ‘பப்லிஷ்’பண்ணிவிட்டேன். பின்பு ஏதோ உறுத்த மீண்டும் போய்ப் பார்த்தேன். மன்னிக்கவும். இதோ உங்களது பின்னூட்டம் தமிழில்:
தமிழ்நதி,
உங்கள் பதிவை வாசித்துக்கொண்டு இருக்கும்போது மனதில் மெல்லியதாக ஒரு வலி தொடங்கி…. முடியும்போது…. ‘நாங்களெல்லாம் இப்படிப் பொத்திப் பொத்தி பாதுகாத்து உலகெங்கும் கொண்டு திரியும் உயிரை, தெரிந்தே மற்றவர்களுக்காக விடத் துணிகிற மாவீரர்களின் கல்லறையில் போய் உரத்து அழ வேண்டும் போலிருக்கிறது’ அந்த வரிகளை வாசித்ததும்…. எனது நெஞ்சே வெடித்துவிடும் போல்…. அழுதுகொண்டே இதை எழுதுகிறேன்… மாவீரர்களின் தியாகத்தை எனது மனதில் ஒரு படி உயர்த்தி இருக்கிறீர்கள். நன்றி. (எனக்கு தமிழில் தட்டச்சத் தெரியாது. அதனால்தான் இப்படி எழுதுகிறேன். தயவுசெய்து தமிழில் மாற்றிப் போடுவீர்களா…?)
போட்டிருக்கிறேன் தோழி… நீங்கள் ‘பெண் நீண்டு செல்லும் கண்ணீர்ப்பாதை’யில் வந்து பின்னூட்டமிட்டவரா… எப்படி இருக்கிறீர்கள்? தமிழில் தட்டச்சப் பழகுவது எளிது. குறைந்தபட்சம் உங்கள் மனதில் உள்ள சுமைகளை எழுத்தில் இறக்கவாவது அது பயன்படும். நேரமும் வாய்ப்பும் கிட்டும்போது பழகுங்கள். இல்லையென்றாலும் பரவாயில்லை. உங்கள் பின்னூட்டங்களை நான் சந்தோசமாகத் தமிழ்ப்படுத்திப் போடுகிறேன். சரியா…?
/எங்களுக்கும் சேர்த்துத்தான் நீங்கள் ‘சிகரெட்டால் குத்துவிளக்கு ஏற்றி’கொண்டாடிக்கொள்கிறீர்களே பிறகென்ன… ?/
இதென்ன கோபமா, சந்தோசமா? எதுவும் என்னை நீரோ ரேஞ்சிற்குச் சிந்திக்கவில்லையே?
:(((((((((((((((((((((
..சொல்வதற்கு ஏதுமேயில்லை...
"இதென்ன கோபமா சந்தோசமா...? என்னை நீரோ ரேஞ்சிற்குச் சிந்திக்கவில்லையே..."
கோபமா... இல்லவே இல்லை. எங்களைவிட கொண்டாட்டங்களுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பதற்காக அப்படிச் சொன்னேன். நீங்கள் பிடில் வாசித்துக்கொண்டிருப்பதான அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. அந்தக் கற்பனைச் சந்திப்புப் பதிவின் குறும்பை அல்லது குசும்பை ரசித்துச் சொன்னது அது.
//எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது.//
ஒரு இனத்தின் அழுகுரலும் ஏக்கமும் கலந்த வரிகள்... உயிர்வாழ்தலுக்கான பற்றிய பயமற்ற சூழலில் வாழ்பவர்களுக்கு இந்த வரிகளின் வலி புரியுமா?
நன்றி. சிலசமயம் உங்கள் பதிவுகள் சௌகார்ஜானகி படம் பார்த்ததைப் போல இருக்கிறது.(சும்மா ஜாலிக்குத்தான்) தமிழில் எனக்குப் பிடிக்காத வார்த்தை 'சௌகார்ஜானகி'.
திவாகர்,
இப்போது மகிழ்ச்சியா...? கொண்டாட்டங்கள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. கண்ணீரும் குருதியும்தான் நிறையப் பார்த்திருக்கிறோம்
//கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விடையளித்த அம்மாவின் மூக்குத்தி குத்திய தடம் வழியெல்லாம் வலிக்கிறது//
எனக்கு இன்னமும் வலிக்கிறது. . .
மனதின் வலியை கண்முன்னே கொண்டுவந்துவிட்டது உங்கள் விவரணை :(
I am weeping silently.....
Post a Comment