1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு இந்தப் பெயர் பிடிக்குமா?
அது வரவில்லை:) நானே வைத்துக்கொண்டேன். எனது சொந்தப் பெயரில் எழுதுவதைவிட இப்படியொரு புனைபெயர் வைத்து எழுதுவதில் ஒரு இரகசியக் குறுகுறுப்பு இருந்தது. தமிழும் நதியும் இணைந்திருப்பதால் அந்தப் பெயரில் ஒரு குளிர்ச்சி. சொந்தப் பெயரை யாராவது ஞாபகப்படுத்தவேண்டியிருக்குமளவுக்கு அந்தப் பெயர் என்னைப் பிடித்திருக்கிறது. எனக்கும் அதைப் பிடித்திருக்கிறது.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
மே 19ஆம் திகதியன்று. தலைவர் பிரபாகரன் அவர்கள் வீரச்சாவடைந்துவிட்டதாக ஊடகங்களில் ஒலி, ஒளிபரப்பப்பட்டபோது அழுதேன். ‘அழுதேன்’என்ற சொல்லை ஆயிரத்தால் பெருக்கிக்கொள்ளுங்கள்.
3. உங்களுடைய கையெழுத்து உங்களுக்குப் பிடிக்குமா?
பிடிக்கும். ஆனால், விசிறிகளைப் பெரிதாக இடுவதால் என் கையெழுத்து இடத்தையும் பிடிக்கும். இப்போது முகவரி தவிர்த்து வேறெதுவும் கையால் எழுதுவதில்லை. தட்டச்சிப் பழகிவிட்டது.
4. பிடித்த மதிய உணவு என்ன?
நல்ல உறைப்புடன் கூடிய கோழிக்குழம்பு, மீன்பொரியல், சொதியுடன் சோறு.
5. நீங்கள் பார்த்தவுடன் யாருடனாவது உடனே நட்புக் கொண்டாடக் கூடியவரா?
இல்லை. முதலில் பழகிப் பார்ப்பேன். பிடித்திருந்தால் தொடர்ந்து பழகுவேன். பிடிக்காவிட்டால் மெதுவாக அவர்களறியாது, புண்படுத்தாமல் விலகிவிடுவேன்.
6. கடலில் குளிக்கப் பிடிக்குமா? அருவியில் குளிக்கப் பிடிக்குமா?
அருவியில் குளிப்பது பிடிக்கும். கடலை கரையிலிருந்து கண்ணெடுக்காமல் நெடுநேரம் பார்க்கப் பிடிக்கும். (குளிக்கவே பிடிக்காதவர்களிடமிருந்து என்ன பதில் வரும்?)
7. முதலில் ஒருவரைப் பார்க்கும்போது எதனைக் கவனிப்பீர்கள்?
எல்லாவற்றையும். தோற்றம், பேச்சு.
8. உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விடயம் என்ன? பிடிக்காத விடயம் என்ன?
பிடித்தது: எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்குமுறையைப் பேண முயல்வது, சுத்தம். பிடிக்காதது: சோம்பல்.
9. உங்கள் பாதியிடம் உங்களுக்குப் பிடித்த, பிடிக்காத விடயங்கள் என்ன?
பிடித்தது: எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய இனிய தோழனாக இருப்பது
பிடிக்காதது: மற்றவர்கள் அவருடைய இரக்கத்தைப் பயன்படுத்த அனுமதித்து, பாடங் கற்றுக்கொண்டபின்னும் திருந்தாமலிருப்பது.
10. யார் பக்கத்தில் இல்லாமல் இருப்பதற்காக வருந்துகிறீர்கள்?
முன்பு, கணவர் அருகில் இல்லையே என்று வருந்தினேன். இப்போது அப்படி யாருக்காகவும் வருந்துவதில்லை. எனக்குத் தனிமை பழகியும் பிடித்தும் விட்டது.
11. இதை எழுதும்போது என்ன வண்ண ஆடை அணிந்திருக்கிறீர்கள்?
கறுப்பு மற்றும் கபில நிறம் கலந்த சல்வார்.
12. என்ன பாட்டுக் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
சின்னா படத்தில் ஒரு பாட்டு ‘யார் யாரோ நான் பார்த்தேன்… யாரும் எனக்கில்லை’. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு அது.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக மாற உங்களுக்கு ஆசை?
கறுப்பு
14. பிடித்த மணம்?
மல்லிகைப் பூ, குளத்தங்கரைகளில் நிற்கும் மருதமரம் பூக்கும் காலத்தில் எழும் தேன் வாசனை, மழை கிளர்த்தும் மண் வாசனை, சிகரெட் வாசனை, கோவிலில் கற்பூரம், ஊதுபத்தி, விபூதி, பூ கலந்து ஒரு வாசம் எழுமே அது.
15. நீங்கள் அழைக்கப் போகும் நபர்கள் யார் யார்? ஏன் உங்களுக்கு அவர்களைப் பிடித்து உள்ளது? அவர்களை அழைக்கக் காரணம் என்ன?
கவிஞர் குட்டி ரேவதி: ஒரு பத்திரிகைக்காக அவரை நேர்காணல் செய்தபோது சந்தித்தேன். அந்தத் தோழமை இன்றுவரை ஆத்மார்த்தமாகத் தொடர்கிறது. எழுத்தின் மீது தீராத காதல் கொண்டவர். எத்தனை இடர்ப்பாடுகள் வந்தபோதிலும் துவண்டுவிடாமல் தன்னை உயிர்ப்புடன் வைத்திருப்பவர். அவரைச் சந்தித்துவிட்டுத் திரும்பிவரும் வழியெல்லாம் எழுத்தின் கிறக்கத்தில் மிதந்துகொண்டே வருமளவுக்கு தன்னம்பிக்கையைத் தருபவர். அவருடன் கதைத்தால், எல்லாச் சிறுமைகளையும் தகர்க்கும் ஆற்றல் வந்தாற்போலிருக்கும். பரஸ்பரம் தனிப்பட்ட எல்லைகளுள் பிரவேசிக்காமல், ஆரோக்கியமான நட்பைப் பேணும் தன்மை மிகப் பிடிக்கும். தீவிரமான கருத்துத்தளத்தைக் கட்டமைக்கிறவர்.
அய்யனார்: இந்தக் கேள்வி-பதிலைத் தீவிரத்தன்மையோடு நகர்த்தாமல், கொஞ்சம் கொண்டாட்டமாகவும் செய்யலாமே என்று எண்ணியபோது, அய்யனார் நினைவில் வந்தார். ‘எல்லாப் புனிதங்களையும் உடைத்துப்போடுவேன்’ என்ற கலகக்கார பிம்பம் அவருக்கு இருக்கிறது. எந்தப் பெரிய ஆளுமையாக இருந்தாலும் (அல்லது அப்படி நாம் நினைத்துக்கொண்டிருந்தாலும்) ‘நீ என்ன பெரிய கொம்பனா?’என்று கேட்கிற துணிச்சல் பிடிக்கும். நிறைய வாசிப்பவர். அவருடைய ஆழ்மன உரையாடல்கள் சிலசமயம் பிடிக்கும். பின்நவீனத்துவம் என்ற சொல்லை அடிக்கடி பிரயோகிக்காமல் இருந்தால், அவருடைய நட்பைத் தொடர்ந்து பேணலாம்:)
நதியலை: வலையுலகில் நான் சந்தித்த சிலருள் புத்திசாலித்தனமான பெண் (நான் அப்படியில்லாதபோதிலும்) என்று கருதுபவர்களுள் இவரும் ஒருவர். இணைய அரட்டையில் மட்டுமே பழக்கம். நிறைய நிறைய வாசிப்பவர். இருண்மையான பொருள்பொதிந்த கவிதைக்கு இவரை ஒப்பிடலாம். இந்த அழைப்பின் மூலம் அவரைக் கொஞ்சம் பேசவைக்கலாம் என்ற முயற்சிதான் இது. பார்க்கலாம் ‘முயற்சி திருவினையாக்குகிறதா?’என்று.
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
உமா ஷக்தியின் 'யாருமற்ற இரவு' (சிறுகதை)
17. பிடித்த விளையாட்டு?
பேஸ் போல் (Base Ball)
18. கண்ணாடி அணிபவரா?
வாசிக்கும்போது மட்டும் அணிவேன்.
19. எப்படிப்பட்ட திரைப்படம் பிடிக்கும்?
‘அன்பே சிவம்’மாதிரிப் படங்கள்
20. கடைசியாகப் பார்த்த படம்?
Talk to her (உமாவின் பரிந்துரையின் பேரில்)
21.பிடித்த பருவகாலம் எது?
மழைக்காலம்… மழைக்காலம்… மழைக்காலம்
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
‘சமகால உலகக் கவிதைகள்’, தொகுப்பு: கவிஞர் பிரம்மராஜன், வெளியீடு: உயிர்மை
23. உங்கள் டெக்ஸ்-டொப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒரு தடவை மாற்றுவீர்கள்?
கால இடைவெளி சரியாகத் தெரியாது. தோன்றும்போதெல்லாம் மாற்றுவேன்.
24. உங்களுக்குப் பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தவை: அதிகாலைக் குயில், நல்ல பாடல்கள், நள்ளிரவு மழை
பிடிக்காதவை:வாகன ஒலிப்பான்களின் காதைக் கிழிக்கும் ஓசை, யாராவது இரைந்து பேசுவது
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிகபட்சத் தொலைவு?
முதலில் வீடு என்று இப்போது எதைச் சொல்வது என்று குழப்பமாக இருக்கிறது. இலங்கை, கனடா, சென்னை என்ற முக்கோணப் புள்ளிகளை நோக்கி நான்கு மாதத்திற்கொரு தடவையாகிலும் பயணித்துக்கொண்டே இருக்கிறேன். இலங்கையில் இருந்து என்றால், கனடா.
26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
எழுதுவது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
27. உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம்?
நியாயமற்ற பேச்சு, நடத்தையுள்ள மனிதர்களை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் ஒரு சாத்தான்?
கோபம்
29. உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
இன்னும் கண்டுபிடிக்கவில்லை.
30. எப்படி இருக்கவேண்டுமென்று ஆசை?
நானே என்னை நல்லவள் என்று ஐயத்திற்கிடமின்றி நம்பும்படியாக.
31. கணவர் இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
ஒவ்வொரு நாளையும் எனதே எனதாக வாழ்வது.(கணவருடன் அல்லது மனைவியுடன் இல்லாத பதிவர்களிடம் எப்படிக் கேட்பீர்களாம்?)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்கள்.
அற்புதமான கவிதை. அதைப் புரிந்துகொள்ள நமக்குத்தான் பொறுமை போதவில்லை.என்னை அழைத்த தோழி உமா ஷக்திக்கு நன்றி.
25 comments:
//கோவிலில் கற்பூரம், ஊதுபத்தி, விபூதி, பூ கலந்து ஒரு வாசம் எழுமே அது.///
இத்துடன் குங்குமம் இணைந்ததொரு ரம்யமான மணம் தெய்வீகத்தை உணர்த்தும் வாசம் :)
அத்தனை பதில்களும் அருமை!
குறிப்பாய் புனைப்பெயர் பற்றிய பதில் யாராச்சும் என்னையும் கேக்கும்போது பயன்படுத்திக்கொள்கிறேன்!:)
நன்றி ஆயில்யன். தாராளமாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
இந்த அனானிகளின் தொல்லை தாங்கமுடியவில்லை. தன் பெயரில் கேட்கவியலாத ஒரு அனானி 'நீங்கள் பேஸ்போல் விளையாடுவீர்களா?'என்று வந்து நளினம் பண்ணியிருக்கிறது. 'எனக்கு கிரிக்கெட் பிடிக்கும்'என்றால், நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்பதா பொருள்? அதைப் பார்க்கப் பிடிக்கும் என்பதையும் அப்படிச் சொல்லலாம் அல்லவா? கனடாவிலும் அமெரிக்காவிலும் மிகப் பிரசித்தமான விளையாட்டு 'பேஸ் போல்'. கிட்டத்தட்ட நம்மூர் றவுண்டஸ் மாதிரி. இப்படிச் சொந்தப் பெயரில் வந்து கேட்கமுடியாதவர்கள் தங்கள் கழுத்தில் தாங்களே துண்டைப் போட்டு இறுக்கிச் செத்துத் தொலைக்கலாம். 'பதிவுகளில்'கிழிக்கத் தெரிகிறதல்லவா?
தமிழ்நதி...
30, 32-பதில்கள் என்னை அதிகம் கவர்ந்தது.அருமை...
நதியின் நீள் வழியெங்கும் பயணித்த
ஒரு கூலாங்கல்லின் ,நெடு நாள் தாயம் விளையாட பயன்படுத்திய சோளியின்
சொல்லுக்கு சிக்காத கூறுகளை கொண்டிருக்கிறது இந்த விடைகள்...
ஒரு எளிய, நீர்மை நிறைந்த ஒரு பிம்பத்தை வரைந்து ஒளியேற்றுகிறது
பதில்களில் இருக்கும் நேர்மை .இத்தகைய பதில்கள்தெரிவிக்கும் ரசனைகளில் இருக்கும் மன ஒற்றுமை எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே ஒரு அணுக்கம் வளர வைக்கிறது .
தமிழ்நதி
பெயரற்றவைகள் மீதான உங்கள் பதில் அவைகளை பொருட்படுத்துகிறது
பொருட்படுத்தக்கூடிய தகுதி இருக்கிறதா என்ன 'அவைகளுக்கு'?
நதியின் நீள் வழியெங்கும் பயணித்த
ஒரு கூலாங்கல்லின் ,நெடு நாள் தாயம் விளையாட பயன்படுத்திய சோளியின்
சொல்லுக்கு சிக்காத கூறுகளை கொண்டிருக்கிறது இந்த விடைகள்...
ஒரு எளிய, நீர்மை நிறைந்த ஒரு பிம்பத்தை வரைந்து ஒளியேற்றுகிறது
பதில்களில் இருக்கும் நேர்மை .இத்தகைய பதில்கள்தெரிவிக்கும் ரசனைகளில் இருக்கும் மன ஒற்றுமை எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் இடையே ஒரு அணுக்கம் வளர வைக்கிறது .
தமிழ்நதி
பெயரற்றவைகள் மீதான உங்கள் பதில் அவைகளை பொருட்படுத்துகிறது
பொருட்படுத்தக்கூடிய தகுதி இருக்கிறதா என்ன 'அவைகளுக்கு'?
மன்னிக்கவும் 'சோளியின் ' என்பது சோழிகளின் என்றிருக்க வேண்டும்
எனது பின்னூட்டத்தில் .....
சுவாரஸ்யமான பதில்கள் தமிழ்;)))anonyகளின் அட்டகாசங்களுக்கெல்லாம் நாம் சோர்ந்துவிடக்கூடாது தமிழ். அதுகளுக்கு நெஞ்சில் துணிவில்லை, நேர்மையில்லை. அவர்களைப்பார்த்து நாம் ஏன் நம் எழுத்தை குறைத்துக் கொள்ளவேண்டும். அனானி ஒழிப்போர் சங்கம் தொடங்கிவிடலாம் - என்ன சரியா?
ரசனையான பதில்கள்...
உண்மைதான் உங்கள் உண்மையான பெயரே அதுதான் என்று பலகாலம் நினைத்துக்கொண்டிருந்தேன்...
இவ்வளவு புத்தகங்களோடு இருக்கிறதும் தனிமை பிடித்துப்போனதற்கு ஒரு காரணமாகவிருக்கலாம்...
எழுதுவது என்று என்ன வைத்தக்கொள்வது, அதுவும் நிச்சயமாய் ஒரு தனித்திறமைதான் உங்களுக்கு.
:):0.வெளிப்படையான பதில்கள் .வாழ்க்கை என்பது ஒரு கவிதை என்பதை தவிர .(நீங்கள் ஒரு கவிஞர் என்பதால் இப்படி பதில் சொல்கிறீர்களா)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மணி நரேன். உங்கள் பின்னூட்டத்தைப் படித்ததும் 30, 32வது பதில்களைத் திரும்பப் போய்ப் படித்துப் பார்த்தேன். ம் ஒரு மாதிரி ஒப்பேற்றியிருக்கிறேன்:)
நேசமித்ரன்,
வழக்கம்போல உங்கள் பின்னூட்டம் கவிதையாக இருக்கிறது. நன்றி.
"பெயரற்றவைகள் மீதான உங்கள் பதில் அவைகளை பொருட்படுத்துகிறது
பொருட்படுத்தக்கூடிய தகுதி இருக்கிறதா என்ன 'அவைகளுக்கு'?"
'அவைகளுக்கு'கடிக்கிறதென்றுதானே வருகின்றன... கொஞ்சம் கடித்து வைத்தால் திரும்பிப் போய்விடுகின்றன. மற்றவர்களைச் சீண்டுவதில் ஒரு குரூரத் திருப்தி. பாவம்... பின்னூட்டம் இட்டுவிட்டு ஏதோ எதிர்பார்ப்பில்தானே அவைகளும் காத்திருக்கும்...? ஏமாற்றுவானேன்?
உமா,
'அனானி ஒழிப்போர் சங்கமா?'ஆமாம். ஆரம்பித்துவிடலாம்:) நமது வலைப்பூக்களிலுள்ள அனானி option ஐ மூடிவிடலாம்.
தமிழன் கறுப்பி,
நீங்கள் சொன்னதேபோல் எழுத்தும் வாசிப்பும் வாழ்வதற்கான பொருளாயிருக்கின்றன. ஏதோவொன்றைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது இந்த வாழ்வில் பற்றுவைக்க.
கல்யாணி,
வாழ்க்கை என்பது ஒரு கவிதைதான். துயரம் செறிந்த கவிதை. சரியாகச் சமாளித்தேனா...:)
நீங்களும் வலைப்பூவில் எழுத ஆரம்பியுங்கள். உங்களையும் இதில் இழுத்துப்போட்டுவிடலாம்.
உங்களுக்கும் சாத்தான் கோபம்தானா?
இதனை ஒழிக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன் :)
நல்ல பதில்கள் தமிழ்.
ரசிக்கும்படியான பதில்கள் !!!!
பலரைப் போலவே நானும் வெகு நாள் தமிழ்நதி தான் உங்கள் இயற்பெயரென எண்ணிக் கொண்டிருந்தேன் !!!!
உங்கள் எழுத்துக்களிம் தமிழ் ஒரு நதி போல் பாய்வதால் இது சரியான புனைப்பெயர் தான்... !!!!
//வாழ்வு பற்றி..
அற்புதமான கவிதை. அதைப் புரிந்துகொள்ள நமக்குத்தான் பொறுமை போதவில்லை.
என்று சொல்லிவிட்டு, பின்
வாழ்க்கை என்பது ஒரு கவிதைதான். துயரம் செறிந்த கவிதை. //
என கூறியுள்ளீர்கள்.... வாழ்வு எப்பொழுதுமே/எல்லாருக்குமே அற்புதமான கவிதை தான்.. சில சபிக்கப்பட்ட இனங்களைத் தவிர..
பதில்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
குறிப்பாக வாழ்க்கை பற்றிய பதில்.
அனானியால அவ்வளவு தொல்லையா உங்களுக்கு.இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுக்கலாமா ?
தமிழ்நதி, குட்டி ரேவதி பதிவெழுதுகிறாரா என்ன? ஒரு தகவலுக்காக கேட்கிறேன்.
32 வினாக்களின் விடையால் உங்களை அறிந்தேன்.மிக்க மகிழ்ச்சி.உங்களுடைய இப் பதிவு குட்ப்ளாக்கில் வந்துள்ளது.வாழ்த்துக்கள்.
நிலாரசிகன் said...
உங்களுக்கும் சாத்தான் கோபம்தானா?
இதனை ஒழிக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன் :)\\
அநேகர் இதே பதிலை சொல்கின்றார்கள்
தன்னுள்ளே இருக்கும் சாத்தானை அடையாளம் கண்டும் விரட்ட இயலவில்லையே
எதுனா வழி சொல்லுங்க பாஸ் ...
(எனக்கு கோபம் வருவதில்லை)
(கொஞ்சமா)
தோழி,
படித்தேன் இரசித்தேன்.
வாழ்க.
tamil nadhi i like ur interviews very nice. am happy about a bold women from my tamil ray.i have frw questions do u know about tamil milition maya arulparakasams daughter{mia} she is tamil women artist in wester media i wonder and admire about that.me too like kutti reavathi,malathimaithree.
tamil nadhi i like ur interviews very nice. am happy about a bold women from my tamil ray.i have frw questions do u know about tamil milition maya arulparakasams daughter{mia} she is tamil women artist in wester media i wonder and admire about that.me too like kutti reavathi,malathimaithree.
பதில்களை ரசித்தேன். சில பதில்கள் பாதிக்கவும் செய்தன.
அன்பு நண்பர்களுக்கு,
உங்களோடு நிறையக் கதைக்கவேண்டும். வெளியூர் கிளம்பும் அவசரத்தில் இருக்கிறேன். போய்ச் சேர்ந்ததும் தொடர்பாடல் தொடரும். நன்றி.
வட புதுபட்டி பயணக்கட்டுரைக்கு நாங்கள் தயார்
தோழி !
பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
சாத்தான் விஷயத்துல ரெண்டு பேரும் ஒன்னாத்தான் இருக்கோம் போல.
26. உங்களுக்கு ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?எழுதுவது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
வைத்துக்கொள்ளுவதா, சரியா போச்சு போங்க. :)-
தமிழ்நதி,
உங்கள் கேள்வி பதில் படித்தேன். நன்றாக இருந்தது.உங்கள் பதிலில் அய்யனார் பற்றிய குறிப்பை படித்ததும் சிரிப்பை அடக்க முடியவில்லை. நன்று தோழி.
இளங்கோ கிருஷ்ணன்
Post a Comment