வினோதாவின் கடிதம் எனது கைகளை வந்தடைந்தபோது உண்மையில் அவள் இறந்து ஏறத்தாழ ஒருநாளுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். குப்பியிலிருந்த நாற்பத்திரண்டு தூக்கமாத்திரைகளில் 26ஆவதை விழுங்கிக்கொண்டிருந்தபோது அவளது தங்கையால் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டாள். 26 என்ற இலக்கம் அவளுக்கு எப்போதும் ஆகாது. தற்கொலைக்கு முயற்சி செய்வதன் முன் ஒரு கடிதத்தை எழுதி எனது அலுவலக முகவரிக்கு அஞ்சலில் அனுப்பியிருந்தாள். அவளுக்கும் எனக்குமிடையில் மின்னஞ்சல் தொடர்பு இருந்தபோதிலும், தனது தற்கொலை முயற்சிக்கு நான் தடையாகிவிடுவேனோ என்ற காரணத்தினால் அவள் அதை சாதாரண அஞ்சலில் அனுப்பியிருந்தாள். செய்தி அறிந்து நான் அவளைப் பார்க்க ஓடியபோது வாசித்து முடிக்கப்பட்ட கடிதம் பத்திரமாக எனது கைப்பைக்குள் இருந்தது. மயங்கிச் சரிந்திருந்த அவளது கை நரம்புகள் வழியாக குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. துவண்டு வெளிறிக் கிடந்த இடது கையைப் பற்றியபடி, கட்டிலின் பக்கத்திலமர்ந்து அவளது கடிதத்தை மீண்டும் வாசிக்கவாரம்பித்தேன். அப்போது வினோதாவின் தாயும் தங்கையும் குரூரமான இருபத்துநான்கு மணிநேரங்களின் பின் கிடைத்த இடைவெளியில் குளிக்கவும் சிறிது ஓய்வு எடுத்துக்கொள்ளவுமென்று வீட்டிற்குப் போயிருந்தார்கள்.
எனதன்பு நித்திலா,
தற்கொலை செய்துகொள்வதாக முடிவெடுத்தபோதுதான் இந்த உலகம் எத்தனை அழகியது என்பது நினைவிற்கு வருகிறது. இந்த அறையினை எட்டிப்பார்க்கும் ஆவலில் நீண்டிருக்கும் வேப்பங்கிளைகள் இத்தனை பச்சையாயிருந்து நான் பார்த்ததேயில்லை. இந்தக் கொளுத்தும் வெயிலில் மேய்ச்சல் முடித்து வீதி வழியாக ஆடுகளை அழைத்துச் செல்லும் நடைதளர்ந்த பெண்ணை மீறித் துள்ளியோடுகின்றன குட்டிகள். பின்மதியங்களிலும் குயில்கள் கூவும் ஓசையைச் செவிமடுக்க முடிகிறது. இத்தனை நிச்சலனமாய் ஒரு தற்கொலைக் குறிப்பை எழுதமுடியுமா என்று நினைக்கும்போது, ‘நான் சாக விரும்பவில்லையோ… என் பாரத்தைத் தற்காலிகமாக ஒரு காகிதத்தில் இறக்கிவைக்கிறேனோ’என்று எண்ணுகிறேன். நமது சிநேகிதன் முகிலனோடு வீணாகச் சண்டையிட்டேன். செத்துப்போவதென்று முடிவெடுத்த இந்தக் கணத்தில் அவனது கைகளைப் பற்றிக்கொண்டு ‘என்னை மன்னித்து விடடா’என்று கேட்கவேண்டும் போலிருக்கிறது.
அம்மா பாவம்! என்னை அன்பு செய்ததன்றி ஏதுமறியாத என் தாய்க்கு நான் விட்டுச்செல்வது வழிந்து தீராத கண்ணீரையே! என்னைக் காரணமாகக் காட்டி அப்பா இன்னமும் அதிகமாகக் குடித்துச் சீரழிந்து போவார் என்றே எண்ணுகிறேன். தங்கச்சி… சின்னவள்… தனித்து, தவித்துப்போவாள். அவளுக்கு நான் தோழியாகவுமிருந்தேன் எனது உடைகளுள் முகம்புதைத்து சில நாட்கள் அவள் அழக்கூடும். நான் எத்தனை சுயநலவாதி@ நிறைவேறாத காதலின் பொருட்டு என் உறவுகளை கரையேற முடியாத துயரத்தில் தள்ளிவிட்டுச் செல்லும் நான் அப்பட்டமான சுயநலவாதி.
ஆனால் நித்திலா, இனியும் இந்த உலகத்தில் என்னால் உயிர்தரித்திருக்க முடியுமென்று தோன்றவில்லை. என்னுடைய அறிவும் தெளிவும் வாசிப்பும் சிரிப்பும் தோழமையும் கவிதையும் எல்லாமும் காதல் என்ற ஒற்றைச் சொல்லின் முன் அடிபட்டுப் போய்விட்டன. அதுவொரு வெள்ளம்போல வந்து என்னையே அடித்துச் செல்கிறது. நான் தோற்றுவிட்டேன் நித்திலா. ‘காதலுக்காக உயிரைக் கொடுப்பேன்’என்று சொன்னவர்களைப் பார்த்து உன்னோடு சேர்ந்து கேலி செய்தவள் நான்தான். ‘உயிரைக் கொடுப்பதாகச் சொல்பவர்கள் திருமணத்தின் பின் உயிரை எடுப்பார்கள்’என்று கெக்கலி கொட்டி நகைத்தது நான்தான்.
மௌலி எங்கள் குடும்பநண்பன் மட்டுமே என்று நீ கூட பலநாட்களாக நம்பியிருந்தாய். திருமணமாகியவன் என்று தெரிந்தும் நான் மௌலியைக் காதலித்தேன். நானும் அவனும் சுற்றாத இடமில்லை. அனுபவிக்காத சுகம் இல்லை. காதலின் கடைசிச்சொட்டு வரை மாந்தியும் தீராத தாகம் எங்களுடையது. கடைசியில் ஒருநாள் அவனது மனைவிக்கு எங்கள் உறவு தெரிந்துபோனதும், கொதித்துக் குமுறியதும் வெளியில் மெல்லக் கசிந்தது. உனக்கும் அது தெரியும். ஆனால், நீ ஒரு வார்த்தைகூட என்னிடத்தில் அதைக்குறித்துக் கேட்கவில்லை. நீ எப்பொழுதும் அனுமதி கொடுத்தாலன்றி அடுத்தவர் அந்தரங்கத்தினுள் பிரவேசிக்க விரும்பாதவள். அவள் தனது குழந்தையை அழைத்துக்கொண்டு தாய்வீட்டுக்குப் போய்விடப் போவதாக மௌலியோடு சண்டையிட்டாள். மௌலி தன் குழந்தை மீது அளவிறந்த அன்பு வைத்திருந்தான். ‘அவள் என் கண்முன் வளரும் அபிராமி’என்பான். அதுவும் அவனது வயிற்றைக் கிழித்துக்கொண்டு பிறந்ததேபோல அப்படி அவனோடு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனைப் பார்க்காமல் அவனால் ஒருநாள்கூட இருக்கமுடியாது. ஈற்றில் நான்தான் பலியுயிர் ஆனேன் நித்திலா.
அவன் என் கண்களைப் பார்த்துச் சொன்னான் ‘வினோதா! என்னை மறந்துவிடு’. நான் மௌனமாக அவனை ஏறிட்டுப் பார்த்தேன். திரைப்படப் பாடல்களிலும் வசனங்களிலும் எழுதப்படுபவற்றில் சில உண்மையாகத்தான் இருக்கவேண்டும். அந்தக் கணம் எனக்கொரு யுகமாக நீண்டது. வீட்டிற்குத் திரும்பி வந்துவிட்டேன். கண்ணாடியைப் பார்த்து காறியுமிழ்ந்தேன். ஒரு கோழையைக் காதலித்த குற்றவாளிக்கு எத்தகைய தண்டனை கொடுத்தாலும் தகும் இல்லையா நித்திலா? அவனை மறந்து வாழ்வதொன்றும் சிரமமாக இருக்காதென்று எனக்குள் கிளர்ந்த வன்மம் சொன்னது. வீட்டில் வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்தேன். உன்னிடம் புத்தகங்களை இரவல் வாங்கிவந்து வாசித்தேன். அக்காவின் பிள்ளைகளோடு விளையாடினேன். நிறைய எழுதினேன். நடுநிசியில் எழுந்திருந்து இருளை ஊடறுத்து மணிக்கணக்காகப் பார்த்துக்கொண்டிருந்தேன். கெட்டித்துக் கிடந்த எனது துக்கத்தை கண்ணீராகக் கரைத்து வெளியேற்ற முயன்றேன். இழந்த காதலுக்கு நீ எதை ஒப்பிடுவாய் நித்திலா? முள்… நெருப்பு… போர்க்களம்… பசி… வஞ்சகம்… நஞ்சு…. கொடுவாள்…?
யாரோ ஒரு கவிஞன் சொன்னதுபோல ‘பூமியில் காலினை உதைத்து உந்தி வாழவே விளைந்தேன்’. ஆனால், முடியவில்லையடி! அவன் சுகித்த உடல்… முத்தமிட்ட உதடுகள்… கோதிய கூந்தல் சுருள்… புதைந்த கழுத்து…. மண்டியிட்டுத் தலைபுதைத்த என் மடி… என் பாதங்களில் முகம்புதைத்துச் சிந்திய கண்ணீர்… எழுதிய மடல்கள்… உருகிய இணைய அரட்டைகள்… அனுப்பிய குறுஞ்செய்திகள்…
கண்ணாடியைப் பார்க்குந்தோறும் அதில் அவனைத்தான் கண்டேன். ‘என் வாழ்வில் ஏனடா வந்தாய்?’என்று விம்மி வெடித்து அழுதேன். நீ கூட பொறுக்கமாட்டாமல் ஒருநாள் கேட்டாய்… ‘எத்தனை காலந்தான் இப்படி இருப்பாய்?’என்று. ‘நான் சாதாரணமாகத்தானே இருக்கிறேன்?’என்று எதிர்க்கேள்வி கேட்டேன். காதல் என்பது எனது தனிப்பட்ட துயரம். அதை உன்னைப்போன்ற நெருங்கிய தோழியிடம்கூடப் பகிர்ந்துகொள்ளுமளவு எனக்குத் துணிச்சலில்லை. அதிலும் நான் இன்னொருத்தியின் கணவனைக் காதலித்தேன். அவனைக் கலவினேன். அவனது உதடுகளின் வழியாக உயிரை உறிஞ்சி நானும் அவனும் ஓருயிராகக் கலந்துவிட முடியாதா என்று அவாவினேன். சாதாரணமாக ஒருத்தி ஒருவனைக் காதலித்தாலே புருவம் உயர்த்தி வெறிக்கும்-வெறுக்கும் உலகம் இது… திருமணமான ஒருவனுடன் நான் கொண்ட காதலுக்கு ‘கள்ளக்காதல்’ என்ற அழகான பெயரை இந்தச் சமூகம் சூட்டிவிட்டது. கள்ளமில்லாத காதல் ஒன்று இருக்கிறதா? மேலும், காதலில் கள்ளக்காதல் என்று ஒன்று தனியாக இருக்கிறதா என்ன?
கண்ணீரில் ஓராண்டு கழிந்தது. கடந்த வாரம் அவனைப் பேரங்காடியொன்றில் சந்தித்தேன். இளைத்துக் கறுத்துப் போயிருந்தான். கண்களில் தூக்கமின்மையும் துயரமும் அப்பிக்கிடந்தன. “எப்படிப் போனாய் என்னைவிட்டு?” என் கண்கள் நதியாகின. பொது இடம் என்பது என் நினைவிலிருந்து மறைந்தது. நாம் கண்ணீரால் செய்யப்பட்டவளானேன். இத்தனை கண்ணீர் என் உடலுக்குள் இருந்ததுவா? இரத்தமெல்லாம் கண்ணீராய் வடிகிறதா? கைகளும் கால்களும் நடுங்கின. உள்ளம் பதறியது.
“நான் உன்னைவிட்டு எப்படிப் போவேன்… ஞாபக வடிவில் நீ என்னோடுதான் இருக்கிறாய். நீயும் நானும் பழகிய விடயம் அறிந்ததிலிருந்து அவள் என்னைக் கைதியாக்கிவிட்டாள். முற்றத்தில் இலை அசைந்தாலும் சந்தேகப்படுகிறாள். நான் நண்பர்களோடு கூட தனியாகப் பேசமுடியாது. தொலைபேசி அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் அவள் பார்வையால் வடிகட்டப்பட்டபின்னரே என்னிடம் வருகின்றன. கொஞ்சம் அயர்ந்துபோய் இருந்தாலும் ‘அவள் நினைவா?’என்று குத்திப் பேசுகிறாள். விவாகரத்து, தற்கொலை என்ற விளிம்புகளுக்கெல்லாம் சென்று வந்துவிட்டாள். அந்த நாட்களின் பயங்கரம் என்னை அச்சுறுத்துகிறது. என் குழந்தை… அவளுக்காக இன்னமும் இந்த உயிரை இழுத்துப் பிடித்து வைத்திருக்கிறேன். நான் நடைபிணமாகிவிட்டேன். வேலை… என் வீடு… என் குழந்தை… இதைத் தவிர்த்து வேறு உலகமில்லை”
நித்திலா! வீட்டிற்குத் திரும்பியதிலிருந்து கலங்கிய அவன் கண்களையே நினைத்துக்கொண்டு அமர்ந்திருந்தேன். அத்தனை சோகத்திலும் அவன் அழகாக இருந்தான். அவனது நீண்ட கண்களை அந்நேரம் நான் முத்தமிட விரும்பினேன். அவனுள் கரைந்துபோகலாகாதா என்று வெறியேறிற்று. நானும் அவனும் இனி வாழ்நாளில் சேரவே முடியாது. ஒரு பெண்ணைக் கலங்கடித்து அவள் கணவனைப் பிடுங்கிக்கொள்ளவும் முடியாது. என்னால் அவனை மறந்துவிட்டு இன்னொருவனைத் திருமணம் செய்து வாழவும் முடியாது. நான் என்ன செய்வேன் நித்திலா! அன்பு அடுத்தவள் கணவன் என்று பார்த்துக்கொண்டா வருகிறது?
அவன் என் உயிர். ஆத்மாவினுள் தளதளக்கும் கண்ணீர். எனது சொர்க்கமும் நரகமும் அவன்தான். அவனது மார்புக்குள் ஒடுங்க ஏங்கும் சிறுபறவை நான். இந்த உடலின் சுகங்களெல்லாம் அவன் அறியக்கொடுத்தவைதான். என் மனதின் நாதங்களெல்லாம் அவனால் மீட்டப்பட்டவைதான். அவன் என்றென்றைக்குமாக எனக்கு இல்லை என்றானபிறகு இந்த உலகம் ஒளியிழந்து போயிற்று. எனது நாட்களின் மீது துயரத்தின் நிழல் நிரந்தரமாகப் படிந்துவிட்டது. இதை எழுதும்போது, நெஞ்சுக்குழிக்குள் கண்ணீர் திரள்வதையும் அது கண்கள் வழியாகப் பீறிட்டுக் கிளம்புவதையும் உன்னால் உணரமுடிகிறது அல்லவா?
நான் எனது துயரங்களிலிருந்து மரணம் வழியாகத் தப்பிச்செல்ல முடிவெடுத்துவிட்டேன்.
எனது மரணம் யாருமறியாத இரகசியமாக முடிந்துபோவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. என் வயதான பெற்றோரையும் விபரமறியாத தங்கையையும் உன்னிடத்தில் விட்டுச் செல்கிறேன். வாழ்வதற்கு அவர்களிடத்தில் வசதி உண்டு. வாஞ்சை செலுத்த நான்தான் இருக்கமாட்டேன். எனக்குப் பதிலாக இல்லாவிட்டாலும் இதமாகவாவது நீ இருப்பாய்.
இந்த உலகில் எல்லோரும் கண்ணகிக்காகத்தானே இரங்குகிறார்கள் நித்திலா? கண்ணகியின் கணவன் என்ற சலுகையில் கோவலனையும் மன்னித்துவிட்டார்கள். எனக்கென்றால் மாதவியைத்தான் எப்போதும் பிடிக்கிறது. அவள் நான்தான். சகல குணங்களோடும் அவள் நானேதான்.
அன்பு முத்தங்களுடன்
வினோதா
--
அதிர்ஷ்டவசமாகவோ துரதிர்ஷ்டவசமாகவோ வினோதா உயிர்தப்பிவிட்டாள். ஏறத்தாழ ஒருவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்து குணமடைந்தபின் வீட்டிற்குத் திரும்பிவந்தாள். வெயில் மயங்கிச் சரிவதைப் பார்த்தபடி கடற்கரையில் அமர்ந்திருந்த ஒரு மாலையில் அவளைக் கேட்டேன்.
“குழந்தையையும் மனைவியையும் உனக்காக விட்டுவிட்டு வரமுடியாதபடிக்குத்தானே அவனது காதல் இருந்தது…? அவனுக்காகப் போய் தற்கொலை செய்துகொள்ள முயன்றாயே…”
அவள் என் கண்களுக்குள் ஆழமாக ஊருவும் பார்வையொன்றை எறிந்தாள். பிறகு தொடுவானம் கடலுடன் இணையும் புள்ளியில் கண்களைப் பதித்திருந்தாள். பிறகு சொன்னாள்:
“அவன் என்னோடு சேரமுடியாமற் போனதைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், அவன் என்னைச் சந்தேகித்தான். அவன் என்னைப் பிரிந்தபிறகும் நான் அவனுடைய உடமையாக, சந்நியாசினியைப் போல வாழ்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். அந்தச் சந்தேகத்தைத் தாளமாட்டாமல்தான் தற்கொலைக்கு முயன்றேன். அது ஒரு கணத்தின் தடுமாற்றம்.”
“ஏன் எனக்கு அப்படி ஒரு கடிதம் எழுதினாய் வினோதா?”
“காதல் ஒருபோதும் தன் இணையைக் காட்டிக்கொடுப்பதில்லை. இல்லாமல் போகப் போகிறவள் இருப்பவனை ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும்? அவனை யாரும் குற்றவாளியாகப் பார்க்கக்கூடாது. அந்தக் கடைசிக் கணங்களில் எனக்கு யாருடனாவது பேசவேண்டும் போலிருந்தது. உன்னோடு பேசினேன்.”
நான் அவளை வியப்போடு பார்த்தேன். காதலை நான் எப்படியெல்லாம் பரிகசித்தேன். எள்ளி நகையாடினேன். ஒருவேளை அது அப்படியில்லையோ…? காதல் என்பது கழுத்து மாலையா? காலன் ஓலையா? அமுதமா? விஷமா? உடலின் அழைப்பா? உயிரின் தகிப்பா?
இரண்டு ஆண்டுகளின் பின் வினோதா திருமணமாகி கனடாவுக்குக் குடிபெயர்ந்தாள்.
என்னால் கடைசிவரையில் என் தோழியைப் புரிந்துகொள்ள முடியவில்லை! நீங்கள் நினைப்பது சரி. எல்லோரையும், எல்லாவற்றையும் புரிந்துகொள்ளவேண்டுமென்று அவசியமென்ன இருக்கிறது?
6.28.2009
Tweet | |||||
Subscribe to:
Post Comments (Atom)
18 comments:
Superb !
இது உண்மையோ அல்லது புனைவோ
மொத்தத்தில் 'காதலித்த சுகம் தரும்'
அருமையான காதல் கவிதைக் கடிதம்
தமிழ்நதி அவர்களே,
தேசிய இன விடுதலை என்பது தோல்வியில்
முடிவதில்லை. ஒருக்கால் அது வென்றிருந்தால் கருணாக்கள்,கம்யூக்கள்,இன்று வியாக்கியானம் செய்யும் இப்பிறவிகள்
எப்படியெல்லாம் பாராட்ட இணைந்திருப்பார்கள் என்று நினைத்தால்
இவர்களின் உண்மை உருவம் தெரியும்.
எனவே கிடைத்த அனுபவத்தை-துரோகத்தை மனதில் கொண்டு விடுதலைக்கு உழைப்போம்.
yes,life is likethat only-vidyashankar
//ஒரு கோழையைக் காதலித்த குற்றவாளிக்கு எத்தகைய தண்டனை கொடுத்தாலும் தகும் இல்லையா//
:(
//“காதல் ஒருபோதும் தன் இணையைக் காட்டிக்கொடுப்பதில்லை. இல்லாமல் போகப் போகிறவள் இருப்பவனை ஏன் காட்டிக்கொடுக்க வேண்டும்? அவனை யாரும் குற்றவாளியாகப் பார்க்கக்கூடாது. அந்தக் கடைசிக் கணங்களில் எனக்கு யாருடனாவது பேசவேண்டும் போலிருந்தது. உன்னோடு பேசினேன்.”//
:)
Please change the background. very difficult to read.
அன்புத்தோழிக்கு.
மனைதைத் தோண்டி...மறக்க நினைத்தும் மறக்க விரும்பாத என் நினைவுகளையும் தங்கள் பதிவு எட்டிப் பார்த்துவிட்டது. நன்றி.
இறுதியில் தங்கள் தோழியைப் புரிய முடியல்லையென எழுதியிருந்தீர்கள். இதில் புரிய என்ன இருக்கிறது? அவள் எடுத்த எல்லாமுடிவுகளும் சரியானவையே...!
1. காதல் வயப் பட்டது
2. இயலாமையின் ஏக்கத்தில் இல்லாமல்போகப் போனது.
3. சந்தேகங்கொண்ட, இயலாமையுங்கொண்ட தன் காதலனைக் காட்டிக் கொடுக்க விரும்பாதது.
4.வேறு ஒரு திருமணம் புரிந்தது.
5.தன் தோழியுடன் பகிர்ந்து கொண்டது.
எல்லாமுமே சரியான முடிவுகள் தான்.
யார் சொன்னார்கள் காதல் வீரர்களுக்குரியதென்று.??
அது கோழைகளுக்கு மட்டுமே யுரியது.
நன்றி மொங்ஸ்,
உண்மையிலிருந்தே புனைவு பிறக்கிறது. கொஞ்சம் பூச்சுக்கள் வேண்டுமானால் இருக்கலாம். சில சமயங்களில் புனைவைக் காட்டிலும் தீவிரத்தன்மையையும் மரபு மனங்களுக்கு அதிர்ச்சிகொடுக்கக்கூடியதாகவும் யதார்த்தம் அமைந்திருப்பதை நானும் நீங்களும் பார்த்திருப்போம்.
இறைகற்பனை இலான்,
உங்களை நீங்கள் பெயரால் அடையாளப்படுத்தி இருப்பதைக் கவனித்தேன். ஆம்... நிலைமைகளுக்கேற்றபடி அன்றேல் வெற்றிபெற்றவர்களின் பக்கம் நின்று பேசுவதை நாம் அன்றாடம் கவனிக்கிறோம். அதில் குற்றவுணர்வோ கூச்சமோ கொள்ளாதிருப்பவர்களைப் பார்க்கும்போது, இவர்கள் தங்களுக்கே உண்மையாக இல்லை என்பதை உணர்ந்து கடந்துசெல்கிறோம். மதிப்பிலிருந்து இப்படித்தான் மனிதர்கள் சரிந்துபோகிறார்கள்.
நன்றி வித்யா சங்கர்
வாழ்க்கை அப்படித்தான்... புனைவுக்கும் வாழ்வுக்கும் இடையில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. வாழ்வே புனைவாகிறது. அல்லது புனையும்படியாக வாழ்க்கை அமைந்துவிடுகிறது.
என்ன சிரிப்பு ரிஷான்,
நீங்களும் கைவிடப்பட்டவர் அன்றேல் கைவிட்டவரா...? அது கசந்த சிரிப்பா அல்லது கள்ளச்சிரிப்பா?து
நீங்கள் அடுத்து மேற்கோள் காட்டிய பந்தியின் அடியில் இருக்கும் நகைப்பானுக்குரிய பொருள் எனக்குப் புரிகிறது தம்பி.
அனானி நண்பரே,
இன்னும் சில நாட்களில் பூனைக்குட்டியை எடுத்து என்னோடு வைத்துக்கொள்ளுகிறேன். அதன்பிறகு உங்களால் தெளிவாக வாசிக்கமுடியும். மாற்ற நேரமும் மனமும் இல்லாதிருக்கிறது.
சூரியா,
காதலிலும் துணிச்சல் வேண்டும். தொடங்கும்போது ஆர்வத்தினால் ஏற்படும் துணிச்சல் நாளாக நாளாக மங்கிவிடுகிறதோ என்று தோன்றுகிறது. ஆக, தொடங்கும்போது வீரர்களாகவும் துயரத்தில் முடியும்போது கோழைகளாகவும் மாறிவிடுகிறார்கள் போல. ஆனால், வழக்கம்போல கோழைகள்-வீரர்கள் என்று ஒற்றைத்தன்மைக்குள் அவர்களை அடைத்துவிட முடியவில்லை. ஒரு சொல்லுக்குள் ஒருவரை அடைப்பதே தவறு என்று இப்போதெல்லாம் தோன்றவாரம்பித்திருக்கிறது. உங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது போல... அடிக்கடி பின்னூட்டமிடுகிறீர்கள். மிக மகிழ்ச்சி.
kai vidapaduthalum kaivida nerthalum
:(
காதலின் நினைவுகள் ஒரு கடிதத்தோடு முடிவினைச் சொல்லியுள்ளது.
இப்படியான வினோதாக்கள் இன்னும் நிறையவே இருக்கிறார்கள்.
நமக்குள் இப்படித் துணிவுடன் தனது காதலைச் சொல்ல எந்தப் பெண்ணுக்கும் துணிச்சலில்லைத் தோழி.
அதுவும் அதைக் கதையாக்கிச் சொல்ல எந்தப்பேனாவும் முன்வராது. முக்காடிட்டுச் சொல்லத்தான் துணிச்சல் அதிகம். ஆயினும் அதை அழகாக எழுதியுள்ளீர்கள்.
சாந்தி
இன்னும் சில நாட்களில் பூனைக்குட்டியை எடுத்து என்னோடு வைத்துக்கொள்ளுகிறேன். அதன்பிறகு உங்களால் தெளிவாக வாசிக்கமுடியும். மாற்ற நேரமும் மனமும் இல்லாதிருக்கிறது.
பூனைக்குட்டிய எடுத்துடாதீங்க தமிழ் ப்ளீஸ், (பதிவை இன்னும் முழுமையாக படிக்கவில்லை, படித்துவிட்டு கமெண்ட்டுகிறேன் :)-
தமிழ்நதி அவர்களே
தங்களின் கடிதக்கதை நன்றாக இருந்தது. காதல் ஒரு களங்கிய நீர். தெளிவடைந்த பின்னரே பருகமுடியும். அதற்குள் தனித்தனியே கல்யாணமாகிவிடுகிறது.
தங்கள்
சரவணன்
காதல் எல்லோரையும் வாழவைப்பதில்லை.
ரசித்துப் படித்த நல்ல பதிவு.
இதையும் வாசித்தேன் !!!!!!!
அன்புடன் தமிழ்நதிக்கு;
ஒரு காதல் கடிதம் நல்லமொழிநடையில் எழுதப்பட்ட ஒரு அபத்தமான கதை. விநோதா ஏற்கேனவே திருமணமான மௌலியை காமுற்றது இயல்பானதுதான். சிலருக்கு சிலர்மேல்தான் காதலும் காமமும் வரும்.
முன்னாள் நடிகை ஷோபாவைப்போலொரு பெண் வேண்டுமென்று என் நண்பனொருவன் இன்னமும் திருமணம் செய்யாமலிருக்கிறான்.
மௌலியின் மனைவியையும் அவன் குழந்தையையும் விரட்டிவிட்டு அவனைத்திருமணம் செய்துகொள்ளவேண்டுமென்ற ஆசைப்படாதவரையில் அவள் நல்லபெண்ணும்தான்.
விநோதா மாதவியாவது சரி.
’திருமணமானவன் என்று தெரிந்துகொண்டும் என்னுடன் படுக்கையைப் பகிர்ந்தவள்தானே’ என்கிற அளவில்
அன்பு காதல் என்று எத்தனைவகையான சாந்துகளைத்தான் குழைத்துப்பூசினாலும் இவர்கள் உறவைத்தெரிந்த மரபுபேணும் சமூகத்தின் பார்வையிலும் மௌலியின் என்கிற பண்பாட்டுப்பூர்ஷுவா சமூகத்தின் வார்ப்பானவனின் எண்ணத்திலும் அவள் சரிய நேர்வதும் இயற்கைதான்.
கற்பென்கிற மரபார்ந்த தளையைத்தூக்கி எறிந்த புதுமைப்பெண் (வரவேற்கிறேன்) கண்ணகியிடம் திரும்பிவிட்ட அந்தக்கோவலன்
“அவன் என்னோடு சேரமுடியாமற் போனதைக் கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், அவன் என்னைச் சந்தேகித்தான். அவன் என்னைப் பிரிந்தபிறகும் நான் அவனுடைய உடமையாக, சந்நியாசினியைப் போல வாழ்ந்திருக்க வேண்டுமென்று எதிர்பார்த்தான். அந்தச் சந்தேகத்தைத் தாளமாட்டாமல்தான் தற்கொலைக்கு முயன்றேன்.
இத்தனை அறிதலுள்ள பெண்ணுக்கு ’அந்த அறிதலும்’ வாய்த்திருக்கவேண்டும். இங்கே அவள் தமிழ்நிதியால் கோழையாக்கப்படுகிறாள். அது சந்தேகமும் அல்ல. சுயநலம் என்றே வகைப்படும். தைரியம் நிறைந்தவள் விநோதா. சந்தேகங்களையெல்லாம் துடைந்தெறியவல்ல மாதவி அவள்!
’அட மௌனி தன்னைச் சந்தேகப்பட்டானே’ என்று சொல்வதும் தற்கொலைக்கு முயற்சித்ததும் அபத்தத்திலும் அபத்தம்.
இன்னும் தற்கொலை செய்திகொள்ளப்போகிறவள் எழுதிக்கொள்ளும் கடிதத்தில்
என்னுடைய அறிவும் தெளிவும் வாசிப்பும் சிரிப்பும் தோழமையும் கவிதையும் எல்லாமும் காதல் என்ற ஒற்றைச் சொல்லின் முன் அடிபட்டுப் போய்விட்டன./ நான் மௌனமாக அவனை ஏறிட்டுப்பார்த்தேன் என்பதுபோன்ற வசனங்களும் இடம்பெற வாய்ப்புண்டா?
சிந்திக்கலாம்.
காருண்யன் கொன்ஃபூசியஸ், பெர்லின்.
வணக்கம் கருணாகரமூர்த்தி,
‘பேர்லின் இரவுகள்’எழுதியவர் நீங்கள்தானே? எனக்கது பிடித்திருந்தது. அதைப்பற்றி நாம் பிறகு பேசலாம்.
என்னுடைய வினோதாவைப் பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொன்ன குறைப்பாட்டை நான் எல்லா விடயங்களிலும் பார்க்கிறேன். அதாவது, ‘அது அல்லது இது’என்று ஒன்றுள் பொருத்திப் பார்ப்பது. ஆம்.. அவள் அறிவார்த்தமாகச் சிந்திக்கிற பெண்தான். ஆனாலும், காதலின் அல்லது அவ்வாறு நாம் நம்பிக்கொண்டிருக்கிற ஒன்றின் வலி எல்லா அறிவையும் சிதைத்துவிடும், அது தற்கொலைக்கும் தூண்டும் என்பதில் எனக்கு எந்த மாற்றுக்கருத்துமில்லை. விவாதத்திற்கென்று எடுத்துப்பார்த்தால், தற்கொலை செய்துகொண்டு செத்தவர்கள் அனைவரும் கோழைகளும், அறிவிலிகளுமாகவல்லவா இருக்கவேண்டும்? உணர்ச்சியின் உச்சப்புள்ளியில், கழிவிரக்கத்தில் எடுக்கப்படும் முடிவே தற்கொலை. அதை அழகியலோடு செய்பவர்களும் இருக்கிறார்கள். உதாரணமாக தன்னைக் கொழுத்தியெரியப்போவதன் நிச்சயத்தை உணர்ந்தபிறகும், நிதானமாக அமர்ந்து ஒரு கடிதத்தை எழுதிவைத்துவிட்டுச் செத்துப்போன முத்துக்குமாரைக் குறிப்பிடலாம். எனக்கென்றால் மனிதர்களை ‘இப்படி அப்படி’என்று பார்க்கத்தெரியவில்லை. அந்தந்தக் கணத்தில் எப்படி இருக்கிறோமோ அதன் வழியே இயக்கப்படுகிறோம். மொத்தத்தில் முரண்களின் மூட்டைதான் நாங்கள். இல்லையென்றால் அது பொய்யல்லவா?
தங்களின் பதிலிடுகைக்கு நன்றி.
எனது இக்குறிப்பு கதை பற்றியதல்ல. உங்கள் கருத்தியல் பற்றியது.
//விவாதத்திற்கென்று எடுத்துப்பார்த்தால், தற்கொலை செய்துகொண்டு செத்தவர்கள் அனைவரும் கோழைகளும், அறிவிலிகளுமாகவல்லவா இருக்கவேண்டும்?//
விவாதத்துக்குமட்டுமல்ல நிஜமும் அதுதான். அவர்கள் கோழைகளும் அறிவிலிகளுந்தான். , பல கலைஞர்கள், இலக்கியர்கள், அறிவியலாளர்களின் தற்கொலைகளைப் பார்க்கும்போது அப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது. அவர்களுக்கு துறைசார்ந்த அறிவிருக்கலாம், வாழ்வுசார்ந்து தொலைதூரம் பார்க்கமுடியாத ஊனம் கொண்டவர்கள்
என்பதிலிடுகை நெடுத்துவிடுந்தான், ஆனலும் ஒரு உண்மைச்சம்வத்தை சொல்லாமலிருக்க முடியாது. இலங்கைத்தீவின் அரசியல் கொந்தளிப்புகளை அறிந்த ஒரு ஜெர்மன் ஊடகக்காரருடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் திடீரெனெ என்னைக்கேட்டார்: “ நீங்கள் திலீபனின் தியாகத்துடன் உடன்படுகிறீர்களா?”
இதில் யோசிக்க என்னதான் இருக்கிறது/ஆழமாக யோசிக்கவில்லை.
உடனடியாக “ ஆமாம் “ என்றேன். அவரும் உடனே திருப்பிக்கேட்டார்: “ அப்போ நீர் ஏன் அவனைத்தொடர்ந்து உண்ணாவிரதமிருக்கவில்லை?”
என்னால் என்னபதிலைத்தான் சொல்லியிருக்கமுடியும்?
தீட்ஷித்தும், ராஜீவுந்தான் சற்றே இறங்கி வந்தாலும் ’ரோ’ அவர்களை எதுவுஞ்செய்ய அனுமதிக்காது என்பது விரல் சூப்பும் ஒவ்வொரு தமிழ்குழந்தையும் அறியும். இந்நிலையில் மக்களை அரவணைத்துச் செல்லத்தக்க ஒரு ’தலைவன்’ திலீபனின் முட்டாள்தனத்தை/செயலைத் தடுத்து நிறுத்தியிருக்கவேண்டாமோ?
”உயிரோடு பாடையில் ஏறிவிட்டான்
இனி யார் வந்து சொன்னாலும் இறங்கமாட்டான்’ என்றல்லவா உடுக்கடித்தார்கள்
அருகிலிருந்த அரைவேக்காட்டுக்கவிஞர்கள்?
பின்னால் அன்னை பூபதியை ஊக்குவித்தது அடுத்தகட்ட முட்டாள் செயலல்லவோ?
ஒரு முத்துக்குமாரைப் பரணி பாடியதன் விளைவுதான் இளமையில் தலைவாசலில் கால்வைத்திருந்த 12 இளைஞர்களையும், ஒரு குடும்பத்தலைவனையும் இழந்தோம். முட்டாள்தனம் எங்கெல்லாம் வேலை செய்கிறது பார்த்தீர்களா? பெண்கள் யாரும் இலகுவில் உணர்ச்சிவசப்பட்டு இந்தவகைத் தியாகங்கள் செய்துவிடமாட்டார்கள். அவர்கள் ஆண்களைவிடவும் புத்திசாலிகளென்பதற்கு இஃதொரு சான்று. வாழ்வுதான் மனிதன்கண்ணுள்ள பெருநிதியம், மரணிப்பதல்ல. மரணம் அதை மண்ணில் சிந்தி விரயம் செய்வது.
தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களுக்காக/ அபிமான நடிகர்களுக்காக தற்கொலை செய்தவர்களை நீக்கிவிட்டுப்பார்த்தாலும்
இன்று இருந்து நிதானமாக யோசித்தால்
இந்தத் தற்கொலைகளால் எமக்கு விளைந்துவிட்ட இலாபந்தான் என்ன, எதைச்சாதித்தோம், அரசியலில் என்ன மாற்றம் விளைந்தது?
இவைகள்தான் தியாகங்கள் என்றால்.................
’தியாகங்கள் மேன்மையானவதான் –
ஆனாலும்
உயிர்வாழ்தல் அதைவிடவும் உன்னதமானது ’
என்கிற வ. ஐ. ச.ஜெயபாலனின் கவிதை வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.
இன்னமும் இலக்கியர்கள் முட்டாள்தனங்களை நியாயப்படுத்தலாமா தோழரே?
காருண்யன் கொன்ஃபூசியஸ், பெர்லின்.
அன்பின் கருணாகரமூர்த்தி,
தற்கொலை செய்துகொண்டு செத்துப்போகிறவர்களை நீங்கள் அறிவிலிகள் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், கோழைகள் என்பதை என்னால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை. உண்மையில் சாவைத் தேர்வதற்கு மிகப்பெரிய துணிவும் மனத்திண்மையும் தேவை. அந்த முடிவினை நெடிய மனப்போராட்டத்தின் பின்பே வந்தடைகிறார்கள். இந்த அழகிய உலகினை வெறுத்துப் பிரியமுடியாமையைத்தான் ‘மரண பயம்’என்கிறார்கள். அப்படி நாம் பார்த்துப் பயப்படும் மரணத்தை முற்கூட்டியே திட்டமிட்டுத் தேர்வுசெய்ய உண்மையில் துணிச்சல்தான் வேண்டும்.
மற்றது, இங்கே நான் சொல்லும் தற்கொலை பொதுவானது. இதை கரும்புலிகள், தற்கொலை இன்னபிறவற்றை மட்டும் வைத்துப் பார்க்கவேண்டாம். ஏனென்றால், என்னோடு பேசவருகிற எல்லோரும் என்னைக் குறித்த சில முன்முடிவுகளுடன்தான் வருகிறார்கள்.
அந்த வெள்ளைக்காரரை நீங்கள் ஒரு கேள்வி கேட்டிருக்கவேண்டுமே… ‘நாம் உடன்படும் எல்லாவற்றையும் நம்மால் செய்யமுடிகிறதா?’ தனிப்பட்ட வாழ்விலேயே அப்படிச் செய்யமுடியாதவைகள் நிறைய உண்டு. ‘முத்துக்குமாரைப் பரணிபாடியதன் விளைவு’என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்களைப்போல அவ்வளவு இலகுவாக, உணர்ச்சிவசப்பட்ட முடிவாக அதை என்னால் எடுத்துக் கொள்ளமுடியவில்லை. இப்படியொரு அனர்த்தத்தில் இலங்கைப்பிரச்சனை முடியாமலிருந்திருந்தால், நாம் அதைப் பற்றியெல்லாம் எப்படிப் பேசிக்கொண்டிருந்திருப்போம் என்பதை நினைத்துப் பார்த்தேன். முடிவுகள்தான் சார்புநிலைகளைத் தீர்மானிக்கின்றன. நிறையப்பேர் இப்படியொரு முடிவை எதிர்பார்த்து காத்திருந்ததைப்போல, ஏலவே தயாரிக்கப்பட்ட கருத்துக்களைப் பேசுகிறார்கள்.
விவாதிக்கலாம், முன்முடிவுகளற்று.
Post a Comment