11.27.2006

கார்த்திகை -27

மெல்லிருளில் சுடர்நடுங்கும்
மெழுகுவர்த்தி ஏந்தி
கல்லறைக்கு வந்துள்ளோம்
கனக்கிறது மௌனம்
‘தாயகக் கனவுடன்’
எனத் தொடங்கி
கொல்கிறது பாடல்
இதயத்தின் சிறுமையெல்லாம்
கண்ணீர் மடைதிறந்து
கழுவிப் போகிறது.

மரணத்தின் வாசனை படர்ந்த
தெருக்களை இன்று மறக்கிறோம்
எழுந்தும்மை நினைக்கிறோம்.
பாதையை மூடி பசி என்ற தீ வளர்த்து
வாடிக் கிட என்று வதைத்தாலும்
எம்முணர்வு ஓடிப் போகுமோ
உள்ளிருந்து ஒலிக்காதோ…?

கடல்கள் கன்னத்தில்
கண்ணீர்த்துளியாக
மலைகள் மனங்களிலே
மாவீரர் நினைவாக
வேர்விட்டு வந்தவரும்
விழுதெறிந்த தேசமெல்லாம்
கூடி நினைக்கின்றோம்
களத்திலே கண்மூடி
காவியமாய் ஆனவரை.

வாழ்வோ நெடுந்துயரம்
வானமோ அடர்கருமை
இருந்தாலுமென்ன…
நாளை விடிந்துவிடும்
நம்மூரின் காற்றலையில்
நாதஸ்வர ஓசை வரும்.
வானில் நிலவுருகி
பொழியும் இராப்போதில்
பாடலொன்று மிதந்துவரும்
கேட்டிருப்போம் விழிநனைய.

No comments: