“உங்களுக்கு என்ன பிடிக்கும்…?” இந்தக் கேள்வியை நாம் சந்தித்த, எமக்குப் பிடித்த ஓரிருவரிடமாவது கேட்டிருப்போம். பிடித்தவை பற்றிச் சிந்திக்கும்போது எந்தக் கடுகடு பேர்வழியாக இருந்தாலும் முகம் அற்புதமாக மலர்ந்துவிடும். கடந்தகாலத்தின்மீதான நினைவுகூர்தல் எத்தனை மகிழ்ச்சி தருவது… பின்னோக்கி யோசிக்கும்போது பால்யத்தின் துருவேறிய தாழ்ப்பாள்களை மெல்லத் திறக்கிறோம். பதின்பருவத்தின் பூத்தூவிய பாதைகளுக்கு அரையடி மேலாக மிதந்து போகிறோம். பழைய நாட்குறிப்பைப் புரட்டும்போது அந்தந்தக் காலங்களுக்குள் நாம் பிரவேசித்துவிடுவதில்லையா… அதுபோல “உங்களுக்கு என்ன பிடிக்கும்” என்ற கேள்வி, பாதரசம் கலைந்த முகம் பார்க்கும் கண்ணாடி வழியே மங்கலாக எம்மை நாம் பார்த்துக்கொள்வதுபோல ‘சுயபார்வை’பார்க்கத் தூண்டுகிறது.
எமது ‘எனக்குப் பிடித்த’பட்டியலில் நிச்சயமாக எமது துணையின் பெயர் (பின்னே… அதைச் சொல்லாவிட்டால் கேட்பவர் என்ன நினைத்துக்கொள்வார்!) இருக்கும். நான் கேட்ட அதிகம் பேர் புத்தகங்களையும் மழையையும் நண்பர்களோடு சுற்றுவதையும் விரும்பிச் சொன்னார்கள். நான் காதலிக்கும் அந்த வார்த்தை சுற்றிவளைத்து ஒரு வழியாக வந்துவிட்டது. உங்களில் எத்தனை பேருக்கு மழை பிடிக்கும்…? அந்த வார்த்தைக்கு மட்டுந்தான் எழுதும்போதே எழுதுகிறவரை நனைத்துவிடுகிற சக்தி இருக்கிறது.
மாரிகாலம் என்பது நம்மவர்கள் வாழும் கனடா, லண்டன், பிரான்ஸ் இன்னபிற நாடுகளில் கொடுங்குளிரின் அச்சுறுத்தலோடு வருகிறது. எனினும் குளிரற்ற மழை நாட்கள் கொண்டுவரும்- காதல் மற்றும் இசைக்கு இணையான- அற்புத உணர்வை எவரால் மறுக்க இயலும்…? ஓடும் வாகனம்…. நிறங்களால் எழுதிய கவிதை போன்ற இலையுதிர்காலம்… மழை…. எமக்குப் பிடித்த பாடல்…. அருகில் பிடித்த நண்பர் அல்லது துணை… இந்தப் பயணம் முடிவற்று நீளமாட்டாதா என்ற ஏக்கம் எழாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்.
இங்கு மழை மேலும் அழகாயிருக்கிறது. இடையிடையே இடியிடித்து உலுப்பி எழுப்பினாலும் மின்னல் ‘பார்க்காதே…! கண்ணைப் பறித்துவிடுவேன்’என்று பயங்காட்டினாலும் மழை பொழிவதைக் கேட்டுக்கொண்டு படுக்கையில் கிடப்பது கவிதையெனக் கூறிக் கிறுக்கும் பல ‘கனவுக்காரர்’களுக்கு (சோம்பேறிகளுக்கும்) பிடித்தமானதே.
மழைக்கால இரவுகளில் (மழை… மழை… என்று கூறியது கூறல் குற்றமென பெரும்புலவர்கள் யாரும் சண்டைக்கு வரவேண்டாம். அத்தனை வசீகரம் அந்த வார்த்தையில்) போர்வையை உதறி எழுந்து வெளியில் போய்ப் பார்த்தால், எத்தனை சிக்கல்கள் இருப்பினும் வாழ்வை நேசிக்கத் தோன்றும். ஒரு கனவுபோல ஈரத்தாரைகள் இறங்கிக்கொண்டிருக்கும். மிக விருப்பப்பட்டு எழுதும் பக்கங்களாய் சரசரவென்று வானம் எழுதித் தள்ளும். பக்கத்தில் மரங்கள் வேறு இருந்துவிட்டால் சொல்லவேண்டியதில்லை. யாரோ கவிஞன் எழுதியதுபோல ‘இலைகளின் நடனம்’ காணுந்தோறும் உடலும் மனமும் எடையிழந்து போகும். மின்விளக்குகளின் ஒளி மழைத்துளிகளோடு இணைந்திருக்கும் காட்சியை விவரிக்க எண்ண மொழியை எல்லாவிடங்களிலும் கையகப்படுத்த இயலாத ஆற்றாமை பொங்கும். ஒரு பெருநகரத்தில் வாகனங்களும் ஆட்களுமற்ற சாலைகள் காணக்கிடைக்காத அபூர்வம் அல்லவா…? போர்த்திப் படுத்துறங்கும் ஊரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கும்.
விடியற்காலைகள் சின்னக் குழந்தையின் பாதங்களாய் கண்ணில் ஒற்றிக்கொள்ளத் தூண்டுபவை; தூய்மையானவை. இரவு மழை பெய்து கழுவிவிடப்பட்ட தெருக்களில் நடந்துபோகின்றபோது ‘சில்லென்று ஒரு காற்று’அடிக்கும். எதிர்ப்படுகிறவர்களைப் பார்த்து புன்னகைக்கக்கூடத் தோன்றும். “காலங்காத்தாலை ஒரு பைத்தியத்தின்ரை முகத்திலையா முழிச்சோம்”என்று மற்றவர்களைச் சங்கடப்படுத்தக்கூடாதென்ற நல்லெண்ணத்தில் புன்னகையைப் பொத்திவைத்து நடத்தல் நன்று. அதிக கடுமை காட்டுகிறவர்களை ‘மரமா நீ’என்றுகூடப் பேசுவதுண்டு. அந்த இளகாத மரத்தையும் ஈரம் இளகவைத்துவிடுகிறதோ என்னவோ…. மழைக்கால மரங்களின் அழகும் சிலிர்ப்பும் சொல்லி மாளாதது. காதல் வயப்பட்ட பெண்ணின் நளினமும் குதிப்பும் பளபளப்புமாய் ஒளிரும் மரங்கள்தான் எத்தனை கவிதைகளை எழுதவைத்திருக்கின்றன. இது கவிதையெனில் அவற்றிலொன்று.
சோகம் பிறக்கையிலே
கவிதை தாகம் வளருமென
சொன்னது பொய்யில்லை.
மேகம் அழுதழுது
பூமியில் எழுதுமந்த
மழையெனும் கவிதையினால்
மனமும் நனைகிறதே…!
கரிய முகில் திரண்டு
பகல் கறுக்கும் பொழுதுகளில்
சுகமாய் ஒரு துயரம்
நெஞ்சைச் சுட்டுப் போகிறதே…
புரியாதொரு மொழியில் மழை
பாடும் பாடல்களில்
எனையேன் பொருத்தி மனம்
இற்றுச் சாய்கிறது…?
சாரல் சத்தம்போல் உலகில்
சங்கீதம் தானுண்டோ…?
தாளம் பிசகாமல்-கூரை
தட்டும் நீர்த்துளிபோல்
ஊரில் ஒரு கருவி
உண்டோ நானறியேன்.
கண்ணைப் பறித்தாலும்
பொன்னில் கோடிழுக்கும்
மின்னல் அழகதிலே
மேனி சிலிர்க்கிறது.
யன்னல் வழி தெரியும்
சாலை மரம் செடிகள்
சின்னக் குழந்தை முகம் போல்
செழிப்பாய் இருக்கிறது.
விடிவதில் விருப்பமுண்டு
ஆனால்…. மழை இரவு
முடிவதில் விருப்பமில்லை
போர்வைக் கதகதப்பு…
சாரல் சங்கீதம்….
உறக்க இருட்டுக்குள்
தொலையும் விழிதன்னை
உசுப்பும் இடியோசை…
இவைகள் சுகித்தபடி
கிடந்தால் போதும் - மழை
முடிந்தால் விடியட்டும்.
ஏழு பிறப்புண்டாம்
ஏழில் ஒரு பிறப்பு
நீராய் வரம் தந்தால்
மழையாய் மாறி இந்த
மண்ணில் பல கவிதை
எழுதும் வரம் கேட்பேன்
அதுவும் இல்லையெனில்
மழையில் கரைந்து உடல்
மறையும் வரம் கேட்பேன்.
இங்கு சென்னையில் வானத்திலிருந்து மத்தாப்புச் சிதறல்கள் விதவிதமாய் இறங்க தீபாவளி களைகட்டியிருக்கிறது. (களைகட்டியிருந்தது. தீபாவளி நேரம் எழுதியது) வந்து வந்து உயிர் குடிக்கும் இரும்புப் பறவைகளும், எங்கிருந்தோ பாய்ந்து வந்து விழுந்து உயிர்களையும் கனவுகளையும் காவுகொள்ளும் எறிகணைகளும், மரணத்தின் அகலா வாசனையுமான எமதூர்களை எண்ணுந்தோறும் துயர் பொங்குகிறது என்று குற்றவுணர்வோடு சொல்லிக்கொள்ளும் காலமாயிற்று.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
/குளிரற்ற மழை நாட்கள் கொண்டுவரும்- காதல் மற்றும் இசைக்கு இணையான- அற்புத உணர்வை எவரால் மறுக்க இயலும்…? ஓடும் வாகனம்…. நிறங்களால் எழுதிய கவிதை போன்ற இலையுதிர்காலம்… மழை…. எமக்குப் பிடித்த பாடல்…. அருகில் பிடித்த நண்பர் அல்லது துணை… இந்தப் பயணம் முடிவற்று நீளமாட்டாதா என்ற ஏக்கம் எழாதவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்./
நல்லவேளை நானும் வாழத்தகுதியுள்ளவன் என்பதற்காய் ஒரு பதிவு எழுதிவிட்டேன் :-).
http://elanko.net/?p=180
என்னையும் வாழ தகுதி கணக்கிலை சேர்த்துக்கொள்ளுங்கோ நதி...
நானும் ஒரு பதிவு போட்டுள்ளேன்....... http://sinnakuddy.blogspot.com/2006/04/blog-post_14.html
Post a Comment