11.06.2006

நேற்றில் வாழ்பவர்கள்

நேற்று என்பது
மறக்கவொண்ணா பாடல்…
திரும்ப விரும்பும் காலம்…
அனைவரதும் ஆதர்சம்…

‘முன்னைப்போலில்லை விலைவாசி’
பாட்டியின் இடுங்கிய விழிகளுக்குள்
நேற்றொரு இனிய கனவென விரிகிறது.
‘அப்பத்தைப் பயல்களைப் போலவா…’
தலைமுறை இடைவெளி வலியில் தாத்தா.
அப்பாவுக்கும் நேற்றே இனிப்பு…!
கன்ன எலும்பு துருத்திய
கறுப்பு வெளுப்பு புகைப்படத்தில்
ஆழ்ந்தபடிக்கு அம்மாவும் அதையே சொல்கிறாள்.

இழந்த காதல்…
கடந்த ஆண்டின் இலையுதிர்காலம்…
பையன்கள் பெண்கள்…
காலமானவர்கள்…
பழைய பள்ளிக்கூடம்…
பொய்யோ மெய்யோ புராணங்கள்…
அவரவர் காலத்து சினிமா தேவதைகள்…
பட்டியல் நீளும்.

இன்று நாளை நேற்றாகும்
இனிவரும் நாளில் சொல்வோம்
நேற்றைப் போல் உண்டா என.

இன்று கழிகிறது அனாதையாக.

1 comment:

த.அகிலன் said...

கவிதை நன்றாக இருக்கிறது தமிழ் நதி.
நினைவுகள் அந்தந்த காலங்களின் சுகம் தானோ? வயதுகளும் அப்டியே யாராலும் மாறிவிட முடிவதில்லை மாறிவிட முடிந்தாலும் உள்ளே பிறாண்டுகின்ற நினைவுகளை கடப்பதும் முடிவதில்லை என்ன

த.அகிலன்