11.16.2006

கடந்து போன மேகம்



தனிமையின் தீச்சுவாலையில்
ஒரு துளியெடுத்துப் பற்றிக்கொண்டன
நமது இரவுணவின்போதான மெழுகுவர்த்திகள்.

எல்லோரையும்போல
காதல் கற்பிதங்களை
மதுவென அருந்தி மயங்கினோம்.

பள்ளத்தை நிரவிற்று மழை.
பரணிலிருந்த வெற்றுச்சட்டத்தை
அடைத்ததுன் புகைப்படம்.

பின்பொருநாள் பேசத்தொடங்கினாய்
உன் கருணையை
ஆட்கொள்ளலை
இரட்சகப் பெருங்குணத்தை…
நாற்றமெடுக்கும் வார்த்தைகளால்
நிறைந்தது என்னறை.

முன்னைப் பூர்வீக ஞாபகத்தில்
நீ நரியாய் ஊளையிட்டாய்.
செட்டையைக் கழற்றிவைத்து மேய்கையில்
‘நீயொரு பாம்பு’எனப் பதறிப்போனாய்.

நானோர் பறவை
வானத்தை அறிமுகம் செய்வதாய்
யன்னல் வழி துண்டு மேகம் காட்டுகிறாய்.
நானோர் காட்டாறு
செம்புத் தண்ணீரில் நிலவு காட்டுகிறாய்.
வார்த்தைக் கம்பத்தில்
எத்தனை தடவைகள்தான் ஏறி விழுவாய் நீ…!

கலைந்து கலைந்து உருமாறும் மேகம்
வானம் இருக்கிறது எப்போதும்போல.

No comments: