வெளிநாடொன்றிலிருந்து சென்னைக்கு வரும் ஒருவரது முதற் சொல்லாடல் காலநிலை பற்றியதாகவே இருக்கும். மழை காலமெனில் பூக்களோடு வரவேற்கும். கோடையெனில் அனல் காற்றின் வெம்மை முகத்தில் அறையும். அதுவும் விமானக் குளிர் உடலை விட்டு முற்றும் அகலாத நிலையில் கூடுதல் கோடையை உணர்வீர்கள். (இதில் விருந்தாளி ‘பயாஸ்கோப்’காட்டுகிறவராக இருந்துவிட்டால் போச்சு! தன்னை வரவேற்க வந்திருப்பவர் தன்னிலும் பணப் பாரம் அற்றவர் எனக் கண்டுவிட்டால் ‘எங்கடை கனடாவில’ அல்லது ‘எங்கடை லண்டனிலை’என்று செம அலட்டலாக இருக்கும்.) வீட்டுக்குப் போகும் வழியில் நிற்கும் வறண்ட, தலை பரத்திய குட்டைச் செடிகளைப் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள். தமிழ்நாடு முழுவதும் பயணம் செய்ய நேர்ந்தால் இதே வகை குட்டைச் செடிகள்தான் வாகனத்தோடு கூட சலிப்பூட்டும் துணையென ஓடிவருவன.
இங்கு வரும்போது பணத்தோடு பொறுமையிலும் கொஞ்சம் எடுத்துக்கொண்டு (இல்லாவிட்டால் இரவல் வாங்கி) வரவேண்டும். ‘ஐயோ’ என்று மனமிடிந்து போகுமளவிற்கு வாகன நெரிசல். அதிசொகுசு வண்டிகள், அரதப் பழைய வண்டிகள், ‘பூம்… பூம்…!’ என்று கோபங்காட்டும் பேரூந்துகள், ‘நான்தாண்டா எமன்’என்று மோத வரும் லாரிகள், தூசிக்கும் வெயிலுக்கும் பயந்து முகம் மூடிக் கை மறைத்த பெண்கள் மற்றும் கைத்தொலைபேசியில் காதல் செய்தபடி (அல்லது மனைவியிடம் திட்டு வாங்கியபடி) வரும் ஆண்களின் விருப்பத் தெரிவான மோட்டார் சைக்கிள்கள், ‘இன்றோடு தொலைந்தாய் பார்’என மூக்கை நீட்டிக்கொண்டு இடித்துவிடும் வேகம் காட்டி வரும் ஆட்டோக்கள்… அவற்றின் நானாவித எக்காளத் தொனிகள்… இது மாநகரம்தான் சந்தேகமில்லை!
சென்னை- முரண்களின் மொத்த உருவமோ என வியக்காத நாளில்லை. சுத்தமும் அசுத்தமும், அழகும் அவலட்சணமும், வறுமையும் வளமையும் என இரு முகம் காட்டி பார்ப்பவரைத் திணறவைக்கும்.
‘பிரம்மன் பூக்களைத் தொட்டவுடன் பூமிக்கு வந்தவளோ…’என்றொரு கவிஞர் வியந்து பாடியதற்கு இலக்கணமான இளம் பெண்களும்-அவர்களுக்குச் சற்றிலும் குறையாத எடுப்பான நாகரீக குமரன்களும் ‘கோந்து’வைத்து ஒட்டியதுபோல ஒட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிள்களில் மிதந்து போகிறார்கள். அந்த தேவ-தேவதைகளை கறுத்து மெலிந்த நடைபாதைவாசிகளின், கூலித்தொழிலாளரின் விழிகள் ஏக்கமுடன் தொட்டுத் தாழ்கின்றன.
அமெரிக்க நிறுவனங்கள் பல ‘குறைந்த விலையில் நிறைந்த வேலை’ பெறுவதற்காக இங்கு முகாமிட்டிருக்கின்றன. ‘எனக்கும் உனக்கும் இலாபம்’ என்பதே தாரக மந்திரமாக இருக்கும்போலும். இந்த நிறுவனங்களின் வருகையால் பணம் தாராளமாகப் புரள்கிறது. இருந்தும் தகவல் தொழில்நுட்ப அறிவோடும் டாலர் கனவோடும் அமெரிக்காவின் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்தின் முன் இன்னமும் இளைஞர்கள் சென்னைக்கே உரிய எதிலும் பிரமாண்டம் என்பதை நினைவுறுத்தும் வகையில் நீண்ட வரிசைகளில் நின்றுகொண்டுதானிருக்கிறார்கள்.
எல்லா மாநகரும் கட்டிடக்காடுதான். என்றாலும் சென்னையிலுள்ள சில சாலைகளின் இருபுறங்களிலிருந்தும் பச்சைக்குடையெனக் கவியும் மரங்களின் கூடல் அற்புதமாயிருக்கிறது. அந்த மரங்களடர் சாலை வழி நடக்கையில் அவற்றிற்கேயுரிய குளிர்ச்சி வந்து தழுவ இது முடிவற்று நீளக்கூடாதா என்றிருக்கிறது. வெயில் படர்வதன் முன்னான விடியல்கள் ஒவ்வொன்றும் வாழ்வின் மீதான வேட்கையைத் தூண்டுபவை. வீதிகளின் இருமருங்கும் உள்ள மரங்கள் காலத்தின் கனத்தைப் போல பருமனானவை. ஆண்டின் பல மாதங்கள் வெயில் எறித்து எரிக்கும் இங்கே இத்தனை மரங்களும் இல்லையெனில் நடைபாதைவாசிகள் மற்றும் வியாபாரிகளின் நிலையென்ன என்ற எண்ணமே தகிக்கிறது.
சிறைச்சாலைச் சுவர்களை நினைவிற் கொண்டுவரும் உயரமான மதில்களைக் கொண்டவையும் ஓசைகளற்றவையுமான விசாலமான வீடுகளுக்குள் பெரிய மனிதர்கள் குடியிருக்கிறார்கள். (அவர்களைக் காக்கும் கொழுத்த நாய்களை ‘நடக்க’க் கூட்டிப்போய் தங்களின் எடைகுறைந்த வேலையாட்களும் அங்குதான் இருப்பார்கள்) நடிகர்களுள் பெரும்பாலானோர் புறநகர் பக்கம் போய் பெரிய வீடுகள் கட்டி ‘காற்றாட’இருப்பதால் அவர்கள் பாடு பரவாயில்லை.
சாதாரணர்கள் நடைபாதைதான் சிறந்த தெரிவோ என்று சிந்திக்குமளவிற்கு மாநகரில் வாடகை ஏறிக்கொண்டேயிருக்கிறது. முந்நூறு சதுர அடியை அறை, சமையலறை, கழிப்பறை என்று சுவரெழுப்பிப் பிரித்துவைத்து ‘ஆறாயிரம் ரூபா’என்று கூசாமல் சொல்வதைக் கேட்டு பேசாமல் வெளியில் வந்து மூச்சுவிட வேண்டும். ஏனென்றால் மூச்சுவிட்டால் அது பாவம் சுழல்வதற்கு அங்கு வழியில்லை. தண்ணீர் வண்டிக்காக காலிக்குடங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. குடங்களுக்கு உரித்துடைய ஒவ்வொரு பெண்ணுக்கும் மற்றவள் அக்கணத்தில் எதிரியாகத் தோன்றுவாளென்ற நினைப்பு எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இந்த சங்கடங்களெல்லாம் காசற்ற கடைநிலை மக்களுக்கே. கடற்கரைச் சாலைக்கு காரில் வந்திறங்கி தொந்தி குலுங்க ஓடுகிற பணக்காரர்களுக்கு அல்ல.
கடற்கரைகளற்ற சென்னையை நினைத்தால் மூச்சுமுட்டுகிறது. புறாக்கூண்டுகள் போன்ற வீடுகளுக்குள்ளிருக்கும் மனிதர்கள் தம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ள, மூச்சுவிட இங்குதான் வருகிறார்கள். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் திருவிழாக் கோலம் களைகட்டுகிறது. உடல் எடையைக் இறக்கவென நடக்க வந்து ஏற்றிக்கொள்வோர் அநேகம். அவித்த கடலை, மிளகாய் பஜ்ஜி, சுண்டல், கிண்டல்… எல்லாம் இங்குண்டு. எப்போதாவது “இண்டைக்குச் செய்தி பாத்தனீங்களோ”என்று இலங்கைத் தமிழைக் கடற்காற்று காதில் கொண்டுவந்து சேர்க்கும்போது, நாளின் சுழற்சியில் தற்காலிகமாக மறந்திருந்த வலி இரவில் மேலெழுவதுபோல மனசு உருகி வழியும். பாவாடை சட்டையணிந்த பெண்களை எப்போதாவது பார்க்க நேரும்போது வலிந்து பேசத் தோன்றும். நாசமாய்ப்போன நாகரீகம்… வார்த்தைகளை அதட்டி உதட்டுக்குள் அனுப்பி மௌனமாகக் கடந்து போவோம்.
தொலைக்காட்சிகளில் ‘கேல்வி நேறம்’, ‘அலுவாதீங்க’, ‘ஆச்சி மாற்றம்’ எனத் தொகுப்பாளிகள் ‘தமில்’ பேசுவதைக் கேட்கும்போது, உதட்டுச்சாயம் பூசுவதற்கும், புருவத்தைத் திருத்துவதற்கும் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் சில மணித்துளிகளையேனும் தாய்மொழியைக் கற்றுக்கொள்ள ஒதுக்கக்கூடாதா என்று ஆதங்கமாக இருக்கிறது. ‘த்தா நயினா… வந்து இவனே புட்சிக்கினு போய்யா’ என்று கூவும் சென்னைத் தமிழ் செவிக்கு இனிமையாகத்தானிருக்கிறது. கலைஞர் ஆட்சிக்கு வந்தபிற்பாடு பள்ளிகளில் தமிழைக் கட்டாயபாடமாக்கியிருப்பதுதான் இப்போதைய ஆறுதல்.
எங்கு போனாலும் சனங்கள்… சனங்கள்… சனங்களன்றி வேறில்லை. எங்கோ எதற்கோ வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் ஊரில் பாத்திரக்கடை, புடவைக்கடை பாத்திருக்கிறோம். இங்கு வந்தபின்தான் ‘பாத்திரக்கடல்’, ‘புடவைக்கடல்’ பார்க்கிறோம். பண்டிகை வருவதன் முன்னான நாட்களில் “ஏதன் சும்மா கொடுக்கிறார்களோ…”என்று ஐயுறும்படியாக இடித்து நெ(நொ)ருக்கி பொருட்களை அள்ளிக்கொண்டு கலைந்த தலையும் கலையாத ஆசைகளோடும் வெளியில் வருகிறார்கள். தி.நகர்- கொள்வனவாளர்களின் குறிப்பாகப் பெண்களின் சொர்க்கமாகத் திகழ்கிறது. கூட வந்த ஆண்கள் முன்னே போடப்பட்டிருக்கும் சொகுசு இருக்கைகளில் ‘என்னாகுமோ’ என்ற பதட்டத்துடன் நகத்தைக் கடித்தபடி உட்கார்ந்திருப்பதைக் காணமுடிகிறது.
சினிமாவும் அரசியலும்தான் தமிழகத்தின் இரு கண்கள் என்பது நமக்கெல்லாம் தெரியும். பிரதான சாலைகளில் பிரமாண்டமான ‘கட்-அவுட்’களில் சூர்யாவும் ஜோதிகாவும் கண்களில் காதல் பொங்க மழையிலும் வெயிலிலும் பல மாதங்களாக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தனுஷ் காலுயர்த்தி வில்லனைப் பந்தாடுகிறார். விதவிதமான இடுப்புகளை அண்ணாந்து பார்க்கும் வாகனாதிகள் வீட்டிற்குப் பதிலாக வைத்தியசாலைக்குச் செல்லும் சாத்தியக்கூறுகளே அதிகம். ரோனி விளம்பரங்களில் அட்டகாசமாகச் சிரிக்கிறார். இவர்களுக்குச் சற்றும் குறையாத விகிதத்தில் அம்மாவும் கலைஞரும் சிரித்துக்கொண்டிருக்கிறார்கள். “வேகமாகப் போகிறீர்களா… நல்லது! சற்றுநேரத்தில் உங்களுக்கு கடவுளோடு நேர்முகப்பரீட்சை நடக்கவிருக்கிறது”என விளம்பரம் ஒன்று எச்சரிக்கிறது.
எமது மண்ணில் மீண்டும் போர் தொடங்கிய பிறகு தமிழ்நாடு மீண்டும் எம்மவர்களின் தற்காலிக தங்குமிடமாகிவிட்டது. “அண்ணை கனடாவுக்குக் கூப்பிடுவார்” என்று கூறியபடி ஆங்கில மற்றும் கணனி வகுப்புகளில் பொழுதுபோக்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் காணமுடிகிறது. டாலர்களும் பவுண்ஸ்களும் பிராங்க்குகளும் ரூபாவாகி தாராளமாகப் புரள்கின்றன. அவர்களில் பலர் இந்தியத் தமிழில் ‘கலாய்க்க’ப் பழகியிருக்கிறார்கள். நடிகர்களோடு புகைப்படம் எடுப்பதும் அதை ‘அல்பத்தில்’ அற்பமாக… மன்னிக்கவும் அற்புதமாக போட்டுவைப்பதும் பிறவிப்பெருங்கடன் என்று சில பேர் அலைகிறார்கள்.
வாசிப்பதை நேசிப்பவர்களின் பூலோக சொர்க்கம் என்று சென்னையைத் துணிந்து கூறலாம். பொம்மைக் கடைக்குள் புகுந்துவிட்ட குழந்தையைப்போல புத்தகக் கடைகளுக்குள்ளிருந்து வெளியே வர மறுத்து அடம்பிடிக்கிறது மனம். சித்திரக்கதையிலிருந்து ‘சிக்மன்ட் பிராய்ட்’ வரை இங்கு இல்லாததொன்றில்லை. இங்கே ஒரு புத்தகக்கடையில் மோர் கொடுக்கிறார்கள். (தொகையைப் பார்த்து மயங்கிவிழுந்துவிடாதிருக்க முன்னேற்பாடோ…) என்ன… அறிவுத்தேடல் என்று அள்ளி வந்துவிட்டு மாதாந்த வரவுசெலவுத்தொகையில் துண்டுவிழும்போது அறிவைச் சாப்பிட முடிவதில்லை. ‘செவிக்குணவில்லாதபோது கொஞ்சம் வயிற்றுக்கும் ஈயப்படும்’ என்பதெல்லாம் நடைமுறைக்குப் பொருந்துகிற மாதிரித் தெரியவில்லை.
மழைக்காலம் தொடங்கிவிட்டது. எங்கும்போல இங்கும் மழை அழகாய்த்தானிருக்கிறது. அழிவுகளையும் கொண்டுவந்திருக்கிறது. தமிழ்ச்சினிமாக்களில் பார்த்த திறந்த சாக்கடைகளிலொன்றில் விழாதிருக்க வேண்டுமென்ற முன்னெச்சரிக்கை மணி வழிதெருவில் நடக்கும்போது மனசுக்குள் அடிக்கிறது.
போர் ஓரிடத்தில் நிற்கவிடாமல் துரத்திக்கொண்டேயிருக்கிறது. தமிழகத்தின் கரைகளில் நாளாந்தம் அகதிகள் வந்து இறங்கிக்கொண்டேயிருக்கிறார்கள். உயிரைத் தவிர இழப்பதற்கு எதுவுமில்லாத அவர்களைத் தொலைக்காட்சி வழி காணும்போது இருள்போல ஒன்று மனசுள் படிகிறது. உயிரைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவாவது எங்களுக்கு ஓரிடம் இருக்கிறதே என்று நினைக்கும்போது ஆறுதல்தான். ஆனால், உயிர் தரித்திருப்பது ஒன்றுதான் வாழ்வா… சோறும் தண்ணீரும் தலை சாய்க்க இடமும் தற்காலிகத் தந்தால் போதுமானதா என்ற கேள்வி எழும்போது…பெருமூச்செறிவதைத் தவிர வேறென்ன வழி…?
போரில் இழந்தவை அநேகம். பெற்றுக்கொண்டது யாதுமில்லை என்பதற்குமில்லை. பின்னிரவில் இயற்கை உபாதை அழைக்க எழுந்துபோவதற்கும் துணை வேண்டியிருந்த எங்களை போர் எங்கெல்லாம் அழைத்துப்போயிருக்கிறது…! கடப்படிக்குப் போகவே பயந்தவர்களை கனடா வரை அழைத்துப்போனதல்லவா அது… கொழும்புக்குப் போவதற்கே ஆங்கிலம் தெரிந்தவர்களைத் தேடிப்பிடித்து அழைத்துப்போய் அவர்களுக்குத் ‘தண்ணி’யும் சாப்பாடும் அறைக்காசும் அழுத நாம், இன்று ரொறன்ரோ, ரோக்கியோ, நியூயோர்க், பாரிஸ் என எங்கெங்கெல்லாமோ சுலபமாகப் பறந்து திரிகிறோம். ‘ரவுனுக்கு’ப் போய் ஐஸ்கிறீம் குடிப்பது ஒன்றுதான் உச்சபட்ச சந்தோஷம் என்றிருந்த காலங்கள் போயின போயினதாம். இழந்த நாட்களின் மீதான காதல் எல்லோருக்கும் இருக்கவே இருக்கிறது.
பொதுவாக மாநகரங்கள் பன்முகம் உடையவை. சென்னையும் அதற்கு விதிவிலக்கல்ல. அதன் கண்களை இப்போதுதான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாதமும், விரல்களும், மனசும் அறிய நாளாகும்.
நள்ளிரவில் நாய்கள் குரைக்க விழித்தெழுந்து பயத்தோடு எதையோ எதிர்பார்த்திருப்பது கொடுமை. உண்ணச் சோறெடுத்து வாயில் வைக்கும்போது ‘சுற்றிவளைப்பு’ என்று செய்தி வருவது அதனிலும் கொடுமை. தற்காலிக ஆசுவாசமாக தமிழகம் இருப்பது ஆறுதலே.
எங்கே சுற்றியும் கால்கள் தானாகவே வீடு வந்து சேரும். பனி படர்ந்த வீதிகளில், பாலைவனங்களில், அயல் தேசங்களில் எங்கெங்கோ நாம் நினைத்தே பார்த்திராத வீதிகளில் எம்மை நடக்கவிட்டிருக்கிறது காலம். இருந்துமென்ன… இருக்கமுடியாமல் நாம் பிரிந்துவந்த புழுதி பறக்கும் எமதூரின் தெருக்களில் ஆண்டாண்டுகளாக மானசீகமாக பதிந்துகொண்டிருக்கின்றன நம் பாதச்சுவடுகள்.
Subscribe to:
Post Comments (Atom)
9 comments:
அடடா நான் பார்த்த சென்னையைப் போலவே நீங்களும் பார்த்திருக்கின்றீர்கள்.
வாழ்நாளில் கொஞ்ச வருடங்களாவது தமிழ்நாட்டில் வாழவேண்டும் என்பது என் நூற்றுக்கணக்கான கனவுகளில் ஒன்று :-).
....
எதையெழுதினாலும் ஒரு துயரம் மெல்லியதாய் இழையோடுகின்றது, உங்கள் பதிவுகளில். நம்மைப் போன்ற நாடோடிகளுக்கு அதிலிருந்து மீள்வது இப்போதைக்கு கடினம் போல.
நல்ல அருமையான பதிவு.
அற்புதமான பதிவு தமிழ்நதி..
நன்றி பொன்ஸ்,
பாத்தீங்களா… இவ்வளவு நாளும் என் வலைப்பக்கம் நீங்க வரவேயில்லை…(குறைப்பட்டுக்கிறேனாம்)
நல்லாயிருக்கு...பதிவு...... எப்படிங்க இப்படி அழகா எழுதிறீங்க.....
மெலிதான சோகம் இழையோடுகின்றது
முடிவு கனமான இதயம்
சொந்த தேச விடியலை தேடி தேசங்கள் தோறும் நடக்கும் மக்களின் வலி உங்கள் பதிவில் சகோதரி!
தமிழ் நதி!!
தங்கள் தமிழ் நதியாக ஓடுகிறது.அருமையான உண்மைகள்; அத்தனை சுவையுமுள்ள எழுத்து.அடிக்கோடிட்டால் ;அத்தனை வரிக்கும் இடவேண்டும். பாராட்டுக்கள்!!!!
சென்னை வந்த போது; நீங்கள் கூறியதுபோல் நடக்காதையிட்டு;மனம் மகிழ்கிறேன்.
கிழிந்த சேலையில் இருந்தாலும்;பெற்றவள் -பெரியவளே.....அப்படியே!!!சென்னை எனக்கிருந்தது.
யோகன் பாரிஸ்
அருமையான பதிவு.
Post a Comment