
ஊராசைக்கும் உயிராசைக்கும் இடையில் தீராத போட்டி. வேகவெறியால் உந்தப்படும் ஓட்டக்காரர்களைப் போல- ஒன்றை மற்றொன்று பின்தள்ளுவதும், பின்தள்ளப்பட்டது முண்டியடித்துக்கொண்டு முன்னே வருவதுமாக மனம் சில நாட்களாக அலைக்கழிந்துகொண்டிருந்தது. ஈற்றில், விமானத்தின் குறுகிய சாளரத்தின் ஊடாக மேகத்தின் வெண்மையைக் கண்டு வியந்துகொண்டிருப்பதில் முடிந்தது.
விமானம் தலைதெறிக்க ஓடி நிற்கும்போது வழக்கமாக மனசுள் ஒரு மலர்ச்சி பரவும். மிகப் பிடித்த பாடலை எதிர்பாராத இடத்தில் கேட்டதுபோலிருக்கும். ஆனால், இம்முறை அதைக் காணவில்லை. விடுதிக்குப் போகும் வழியெல்லாம் போர் குறித்த பயம் அலைந்துகொண்டிருப்பது போலிருந்தது. பயத்தின் விழிகளால் பார்ப்பதாக என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால், கொழும்பை அடைந்ததும், என்னை நானே ஏமாற்றிக்கொண்டது புரிந்தது. எந்தக் கணத்திலும் வெடித்துவிடக்கூடிய குண்டின் நிலையிலிருக்கிறது கொழும்பு. இராணுவத்தின் துப்பாக்கி தயார்நிலையில் விழித்திருக்கிறது. பரிசோதனைச் சாவடிகளில் உயர்த்திய கையுடன் வேற்றுக் கரங்கள் உடல் தடவப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அடையாள அட்டை இல்லாதவர்கள் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம். ஆனால், அந்நிய மொழிக்கும், கடவுச்சீட்டுக்கும் இன்னும் மதிப்பு அழிந்துவிடவில்லை.
ஞாபகங்களாய் அழைக்கிறது ஊர். யாழ்ப்பாணத்தில் வீடு கட்டாமல் இடைநடுவில் வவுனியாவில் ஒரு கிராமத்தில் கட்டியது தற்செயலாக நிகழ்ந்த, இருந்திருந்து மகிழ்வு தரும் விடயம். “மாதங்களில் அவள் மார்கழி”என்று கவிஞர் அனுபவித்துத்தான் எழுதியிருக்க வேண்டும். ஊருக்குப் போகும் வழியெல்லாம் பச்சை விரிப்புத்தான். கண்களை மூடினாலும் உள்ளேயே படிந்துவிட்டாற்போன்ற மார்கழிப் பச்சை! வீதியை அண்டி வயல்கள் தொடங்கி உள்ளேகி சற்று தொலைவில் தென்னை மரங்களில் முடிகிறது. சில இடங்களில் தம் தொலைவால் நீலச் சாயத் தோற்றத்தில் மாயை காட்டும் மலைகள் பரவசப்படுத்துகின்றன. “ஐயோ…!இந்த அழகிய தீவில் வாழ முடியவில்லையே…”என்ற ஏக்கம் என்றைக்கும்போல அன்றைக்கும் எழுந்தது. உரிமைகள் அற்றது சொர்க்கமெனினும் வாழ உகந்தது அல்ல என்று சமாதானப்படுத்திக்கொள்வதன்றி வேறென்ன வழி…?
கிறிஸ்மஸ் இற்கு முந்தைய நாள் பரபரப்பில் வாழத் தேர்ந்தெடுத்த ஊர் இயங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட சனப்புழக்கம் குறைவுதான். விழிகளில் பதுங்கியிருக்கிறது பயம். ஒரு வெடிச்சத்தத்தில் உயிரிழந்து உள்ளொடுங்கிப்போவதற்குரிய சாத்தியங்களையே அதிகம் கொண்டிருக்கும் நிச்சயமின்மையில் வாழ்ந்துகொண்டிருப்பது எத்தனை துயர்மிக்கது.
வீடு என்பது ஆசுவாசம், தாய் மடி, ஞாபகங்களின் பெட்டகம். போர் சிரிப்பை உறிஞ்சியிருக்கலாம், உறவுகளையெல்லாம் தூரதேசங்களுக்கு அனுப்பிவிட்டிருக்கலாம், வீட்டைப் பார்த்தபோது அது தன் பிரமாண்டமான கரங்களால் இழுத்து தன்னுள் அமிழ்த்திக் கொண்டதை உணர்ந்தேன். விருப்பத்திற்குரிய தோழியின் மடியில் படுத்திருந்து கதை பேசும் சுகத்திற்கு ஈடானது வீட்டில் இருப்பது. இரவு… மொட்டை மாடி… மெல்லிய வெளிச்சம்… இதமான குளிர் எல்லாம் சொல்கின்றன வாழ்வின் அற்புதமான தருணங்களை இழந்துகொண்டிருக்கிறேனென.
மார்கழி மாதம் கிணற்றை நிரப்பியிருக்கிறது. செடிகொடிகளில் பச்சையை ஊற்றியிருக்கிறது. பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் இந்த வேம்புகள்… அவற்றைக் கட்டியணைத்துக்கொள்ள முடிவதில்லை. அதுவே தீராத வேட்கையாய் வளர்ந்துகொண்டிருக்கிறது. வேம்புகளை விட்டு வீட்டைப் பற்றிப் பேச முடிந்ததேயில்லை. நகரத்தின் மாசு படியாத கிராமமொன்றில், பனி பொழியும் விடியலில் உறக்கமும் விழிப்புமாகப் படுத்திருக்கும் நாட்களை நீடிக்க முடியவில்லை. பணிகள் அழைக்க பயம் துரத்த புறப்பட வேண்டியிருக்கிறது. எனது கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு எங்கிருந்தோ ஓடிவரும் பூனைக்குட்டி இனி ஏமாறப் போகிறதே என்ற துயர் சுடுகிறது. கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விடையளித்த அம்மாவின் மூக்குத்தி குத்திய தடம் வழியெல்லாம் வலிக்கிறது. விரும்பிய இடத்தில் வாழமுடியாமற் போவதற்கு ஈடான துயரத்தை எழுத முடியவில்லை. மொழிக்கு வலிமையில்லை என்றால் அது தமிழைப் பழிப்பது போலாகும். எல்லோர் மனங்களிலும் சொற்களில் இறக்கவியலாத சுமைகள் இருக்கும்.
பிரிவின் துயரை மீறி எரிச்சல் மண்ட பரிசோதனைச் சாவடியில் காத்திருக்கிறேன். ஊருக்குள் நுழையும்போது இத்தனை கெடுபிடி இல்லை. திரும்பி கொழும்புக்குச் செல்லும்போது ‘தலைநகரின் பாதுகாப்பு’என்ற பெயரில் புரட்டியெடுத்துவிடுகிறார்கள். கடவுச்சீட்டு, வாகன இலக்கம், சாரதியின் விபரங்கள், செல்லும் நோக்கம் இன்னபிற பதிய வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விடியலின் குளிருக்கு மாற்றாக வெயில் அனல் பொழிகிறது. பதியும் ‘சடங்கு’முடிந்ததும் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடுகிறார்கள். பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகத் தூக்கிக் காட்ட ‘ஷம்போ’, ‘கொண்டிஷனர்’ என்று படம் பார்த்துப் பாடம் சொல்லும் கிளிப்பிள்ளையாக கொஞ்ச நேரம் இருந்தேன். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்த அந்தப் பொலிஸ்காரர் ‘குறத்தி முடுக்கு’என்று வாசித்தபோது வியப்பாக இருந்தது. ‘சிங்களம் மட்டும்’ என்று முதுகில் குத்தியவருக்குத் தகுந்த பாடம்…! பெரும்பான்மையினரில் சிறுபான்மையினரையேனும் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது போர். ஆள் அடையாளம், வாகனம், பெட்டி எல்லாவற்றையும் சோதனையிட்டபோது சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவளை ‘என்னாங்கடா இது’என்று திகைக்க வைத்த சம்பவம் அடுத்து நிகழ்ந்தது. வாகனத்தின் சக்கரத்திலிருந்த காற்றைத் திறந்துவிட்டு அதற்குள் ஏதும் ஆயுதங்கள் கடத்திச்செல்லப்படுகின்றனவா என்று பரிசோதித்தார்கள். பரிதாபமாகப் படுத்துக் கிடக்கும் வாகனத்தை காற்றடித்து நிமிரவைத்து அனுப்புவதற்கென்று ஒருவரை நியமித்திருக்கிறார்கள். அவர் வெற்றிலை வாயோடு ‘ளாளா’என்று நிறையப் பேசிக்கொண்டே காற்றடித்தார்.
‘விட்டது சனி’ என்று புறப்பட்டால் மற்றுமொரு எரிச்சல்மிகு காத்திருப்பு. பதிந்த பத்திரங்களை பிரதான வீதியில் ஏறுவதன் முன் மற்றுமோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமாம். சாரதி ‘நாசமறுவார்’என்று திட்டிக்கொண்டே இறங்கிப்போக, முக்கால் மணி நேரம் அருகிலிருந்த முந்திரிகை மரங்களையும் தேக்கு மரங்களையும் வெறித்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.
பிரதான வீதியில் ஏறி விரையும்போது ‘இன்றைய நாள் இப்படித்தான் என்று எழுதியிருந்தால் என்ன செய்வது’என்று வேதாந்தம் பேசி சமாதானப்பட்டுக்கொண்டதை, அடுத்து வந்த பரிசோதனைச் சாவடி சாவடித்தது. வாகனத்தைப் பிரிந்து வனாந்தரத்தை நினைவுறுத்தும் உடை மரத்தின் கீழ் மீண்டும் நீண்ட கடும் தவம். அரசுப் பேரூந்துகளில் வந்து காத்திருந்தவர்களுள் பசியிலோ தாகத்திலோ வெயிலின் வெம்மையினாலோ அழும் கைக்குழந்தைகளைக் காண கையாலாகாத கோபம் பொங்கியது. பாதிரியார்களும் பரிசோதனைக்கு விலக்கல்ல என்பதைக் கண்டபோது, தலைநகரிலுள்ள பயத்தின் ஆதிக்கம் புரிந்தது.
ஒருவழியாய் கொழும்பு மாநகர் வந்து விமானமேறி சென்னையில் வந்து இறங்கியபோது, கவலையும் நிம்மதியும் கலந்த ஓருணர்வு பரவியது. கவிதை என்கிறோம். காதல் என்கிறோம். மனிதாபிமானம், கற்பு, சாதி, பார்ப்பனர்-திராவிடர், அழகு, ஆண்டவன் என ஆயிரம் பேசுகிறோம். அண்மையில் ஒருவர் கூறினார்: காமம்தான் எல்லாவற்றிற்கும் அடிநாதம் என்று. எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது. நாங்களெல்லாம் இப்படிப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து உலகெல்லாம் கொண்டு திரியும் உயிரை, தெரிந்தே மற்றவர்களுக்காக விடத் துணிகிற மாவீரர்களின் கல்லறையில் போய் உரத்து அழவேண்டும் போலிருக்கிறது.