11.23.2006
Tweet | |||||
சொற்களுடனான உறவு
அறைக் கதவைப் பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன.
செப்புக் களிம்பு படிந்த
தொன்மத்தின் வாயில்களினூடே
புதைந்துபோன பெண்களின்
அழுகை மிதந்து வருகிறது.
பேரிரைச்சலுடன் திறக்கின்றன
வரலாற்றின் கபாடங்கள்.
கனவும் புனைவுமான
காதல் வரிகள்…
மதுவில் தோய்த்தெடுத்த
கவிஞனின் உளறல்கள்…
போர் விழுங்கிய தெருக்களில்
அலைகின்ற பாடல்கள்…
வலி பொதிந்த சொற்களிலிருந்து
தப்பித்து ஓடிவிடலாம்.
ஆனால்…
காமமும் காதலும் இணைந்த
கூடலின் உச்சம்
சொற்களுடனான உறவு.
வலிந்து மறந்திருக்கிறேன்
சொற்களால் கைவிடப்பட்ட ஒரு மாலையில்
வெளியேறத் திறக்கும் கதவின் வழியாக
உள்ளே வரவிருக்கும் தனிமையை.
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
//அறைக் கதவைப் பூட்ட
சொற்களின் கதவுகள் திறக்கின்றன்!//
அறைக் கதவு பூட்ட
சொர்க்கத்தின் கதவு திறப்பதாகச்
சொல்கிறார்கள்!
ஆனால் இங்கே
சோகத்தின் கதவு
திறப்பதாகத் தெரிகிறதே!!!!!!?????
//வெளியேறத் திறக்கும் கதவின் வழியாக உள்ளே வரவிருக்கும் தனிமையை//
எனக்கு அவ்வளவா புரியலையா அல்லது அவ்வளவும் புரியலையா தெரியல, இருந்தாலும் ஏதோ சொல்றேன்...
உள்ளே இருப்பது ஒரு தனிமை, உள்ளுக்குள்ளே வர இருப்பதும் ஒரு தனிமை, தனிமையும் தனிமையும் சேர்ந்தா இனிமைதானே? சரியா?
அய்யோ.. அக்கா, கவிதை எல்லாம் எழுதுவீங்களா...?
சில சொற்களை மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்குமென்று படுகிறது.
மேலும் ஒரு கவிதைக்குள்ளேயே
நிறைய பாடு பொருளை திணித்து விட்டதாக உணர்கிறேன்.
இரண்டுக்கும் மேற்பட்ட கவிதைகளை ஒரே ஜாடிக்குள் அடைக்க முயன்று இருக்கிறீர்கள்.
மற்றபடி ஓகே!
பிரேம்,
புத்தகங்களுக்குள் நுழையும்போது வாசிப்பு மீதுள்ள தீவிர வேட்கையால் சுற்றியுள்ள உறவுகளின் முகங்களைத் தற்காலிகமாக மறந்துபோகிறோம். எழுத்து, வாசிப்பு என்பதன் மீதான ஈர்ப்பு ஒரு காலகட்டத்தில் குறைந்துபோய் நாம் உறவுகளைத் தேடும்போது அவர்கள் எம்மைவிட்டு வெகுதூரம் போய்விட்டிருப்பார்கள் என்பதுதான் மேற்குறித்த கவிதையின் அடிநாதம்.
நோ.பா.! நான் அப்படி உணரவில்லை யெஸ்.பா.!
இந்தக் கவிதை (கவிதையெனில்) ஒரு மையப்புள்ளியைச் சுற்றியே சுழல்கிறது. (ஆனால்… அப்படிச் சுழலவேண்டுமென்று கட்டாயமுமில்லை.) பிரேமுக்கு அளித்த விளக்கத்தைத் தயவுசெய்து பார்க்கவும். எனது வலைப்பக்கத்தில் எவ்வளவு கவிதைகள் பதிந்திருக்கிறேன்… ‘கவிதையும் எழுதுவீர்களா…’என்று கேட்டுவிட்டீர்கள். வருத்தமாகத்தானிருக்கிறது. பா.க.ச.எப்படியிருக்கிறது?
Post a Comment