11.24.2006

நாற்காலிச் சிறையிலிருந்து….

இது வெப்ப மூச்செறியும் மதியந்தான்
எனினும் இதமாய் குளிர்கிறது.
நடைபாதை பிச்சைக்காரனின்
நன்றி ஒளிர்ந்த விழிகளையும்
தோழியின் இமையோரம் கசிந்த
கண்ணீர்த்துளி மற்றும் கையசைப்பும்
நினைவின் பாதையில் நெடுநாள் இருக்கும்.
போகிறேன்…
பல கிளைகளாய் பிரியும் தெருக்களில்
எந்த வழியெனினும் இனிச் சாத்தியமே…!

மன்னிக்கவும்
நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை
சற்று முன்னர்தான்
நாற்காலியோடு பிணைக்கப்பட்டிருந்த முதுகில்
சிறகைப் பொருத்தியது நிகழ்ந்தது.
கண்ணாடித் தொட்டியிலிருந்து
கடலுக்குள் குதித்த மீனாய்…
அட! மதியம் இத்தனை அழகா…?
மூலைக்கடையில் பூக்கள் விற்பனை
இதுநாள்வரையில் எங்கொளிந்திருந்தது…?

ஒன்றின் நகலாய் எத்தனை நாட்கள்
நாசமாய்ப் போக…!
அதே அலாரம்…
அதே வழி…
அதே கோப்பு…
அதே முகங்கள்…
அதே பிச்சைக்காரன்…
ஒரு பிடிவாதக்காரக் குழந்தையைப்போல
உறங்க மறுக்கும் விழிகளை
பயமுறுத்திப்பணியவைக்கும்
பாவத்திலிருந்து இனி விடுதலை.
கடிகாரத்தின் முட்சிறையிலிருந்து மீட்சி.

சிரிப்பின் பொருள் புரிகிறது…
மாத இறுதி வந்தால் சிறகு தெருவோரம்!
ஞாபகப்படுத்தாதீர்
சில நாட்களேனும்
இளவேனிலில்இருந்துவிட்டுப் போகிறேன்.

பின்குறிப்பு: வேலைக்குக் கையசைத்து விடைபெற்ற நாளொன்றில் எழுதியது.

1 comment:

இளங்கோ-டிசே said...

ம்...கொடுத்துவைத்தவர் நீங்கள் :-).