11.05.2006
Tweet | |||||
ஈரமற்ற மழை
முன்னரெல்லாம்
மழையுடனான உறவு
நெகிழ்வூட்டுவதாயிருந்தது.
பிரியமான தோழியைப்போல
எதையேனும்
எடுத்துவராமல் அது வந்ததில்லை.
குறிப்பாக ஞாபகங்களை…
அவை குளிர்நாளில் கம்பளிபோல்
கதகதப்பானவை.
நிலத்தில் குதித்துக் குமிழியிட்ட
நீர்த்தாரைகள்
எழுதவைத்திருக்கின்றன
எண்ணற்ற கவிதைகளை.
நீங்கள் அறிவீர்கள்
மழைநாளின் யன்னல்களைப்பற்றி…
எத்தனை ஓவியங்களை
எடுத்துவந்திருக்கின்றன வீட்டிற்குள்.
கூடிக்கலந்து சலசலத்து விரையும்
சாலைத்தண்ணீர்
இழந்துபோன குழந்தைமையை
விரல்பற்றிக் கூட்டிவந்ததையும்
மறப்பதற்கில்லை.
விரித்த புத்தகத்தின் வரிகளில்
வெறுமனே விழியோட்டிய
அன்றைய மாலையில்
அது காதலை அழைத்துவந்திருந்தது.
மௌனமும் மழைமுகிலும்
கனத்த பொழுது அது.
மழை விட்ட பொழுதுகளையும்
குறைசொல்வதற்கில்லை.
முற்றத்தின் தூய்மை…
புல்லின் சிலிர்ப்பு…
பூக்களின் அதீத மலர்ச்சி…
இலைநுனி வழி சொட்டிய நீர்த்துளி யாவும்
கிளர்த்தியிருந்தன மெல்லுணர்வை.
வரவிருக்கிறது மழை.
வெளிக்கொடியில் உலரும்
அவனது துணிகளை
நனைத்துவிடுவதான அச்சுறுத்தலைத்தவிர
இந்நாட்களில் எதையும் எடுத்துவராத
மழையை நினைக்க
துயரமாய்த்தானிருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
மழை எப்போதுபோல ஒரேமாதிரியே பெய்துகொண்டிருந்தாலும், நமக்கான காலங்கள் மாறிக்கொண்டிருப்பதுதான் துயரமானது.
நல்லதொரு கவிதை + புகைப்படம்.
கடைசி வரியில் வைத்திருக்கிறீர்கள் துயரை..அடுத்த முறை சற்று கவனமாய் இருக்க வேண்டும்..:)
மழை, இயற்கை இவைகள் எப்போதுமே மாறுவதில்லை. மனிதர்கள் மாறுகிறார்கள். மனநிலைகள் மாறுகின்றன. திருமணம், குடும்பம், குழந்தைகள், மாறுகின்ற சூழ்நிலைகள்
இவை துயரத்தை உண்டாக்குவது போன்ற தோற்றம்.
கவிதையும் புகைப்படமும் அருமை
தமிழ்நதி அவர்களுக்கு....
உங்கள் கவிதைகளை தொடர்ந்து ஒரு முழு அமர்வாக வாசிக்க வேண்டும் என்கிற எண்ணம் வலுத்துக் கொண்டிருக்கிறது. காரணம், தமிழகத்தில் ஈழத்துக்கவிதைகள் அறிமுகமான காலங்களில் சேரன், செல்வி இருவரது கவிதைகளும் ஆழ்நத பாதிப்பை உருவாக்கியவை தனிப்பட்ட முறையில். அதன்பின் கவிதைகளுடன் ஆன தொடர்பு அறுபட்டு நீண்ட நாளாகிவிட்டது. உங்கள் கவிதைகள் அத்தொடர்பை புதுப்பிக்கின்றன. போகட்டும்.
இக்கவிதையில்.. தலைப்பிலேயே கவிதையின் ஈரம் / ஈரமற்றது என்கிற முரண் அமைப்பு இயக்கமாகி இறுதிவரை வளர்ந்து செல்கிறது. மழை என்பது ஒரு குறியீடாக மாறி இருவேறபட்ட தளங்களின் குறிப்பீடாக மாறிவிடும்போது,. கவிதை ஈரத்தை பெண்மீதான ஒரு துயரமிக்க அனுபவமாக மாற்றிவிடுகிறது.
//முற்றத்தின் தூய்மை…
புல்லின் சிலிர்ப்பு…
பூக்களின் அதீத மலர்ச்சி…
இலைநுனி வழி சொட்டிய நீர்த்துளி யாவும்
கிளர்த்தியிருந்தன மெல்லுணர்வை / /
இங்கு சிலிர்ப்பு, மலர்ச்சி என கிளர்ச்சியடையும் மொழி...
//வெளிக்கொடியில் உலரும்
அவனது துணிகளை
நனைத்துவிடுவதான அச்சுறுத்தலைத்தவிர
இந்நாட்களில் எதையும் எடுத்துவராத
மழையை நினைக்க
துயரமாய்த்தானிருக்கிறது.//
இங்கு முயங்கி மடங்கி உலர்நது விடும்போது கவிதை பெண்ணினத்தின்மீது (ண, ன சரியா?) கவிழ்ந்துள்ள அந்த சோகத்தை அழுத்தமாக உணர்த்திவிடுகிறது.
"எதையும்" என்ற வார்த்தை நம்மை அழுத்தும் ஆழம்... ஒரு நீண்ட மெளனத்தையும் பெருமூச்சையும் உண்டாக்குகிறது. நல்ல அனுபவமாகியிருக்கும் கவிதை. எளிமையான மொழியில் ஆழ்ந்த அவதானிப்புகள். எளிமையாகவும் அழுத்தமாகவும் இயல்பாக வந்துள்ள கவிதை. பாராட்டுக்கள்.
-அன்புடன்
ஜமாலன்.
ஆச்சரியமாயிருக்கிறது சகோதரி.
ஏறத்தாழ இதே கருப்பொருளில் என்னாலும் ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
http://mrishanshareef.blogspot.com/2007/08/blog-post_04.html
எனக்கு யாராவது ஒரு விடயத்தைத் தெளிவுபடுத்த முடியுமா? திடீரென்று இந்த 'ஈரமற்ற மழை'க்குப் பின்னூட்டங்கள் வருகின்றன. ஏதாவதொரு வலைப்பூவில் இக்கவிதை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறதா... எதனால் திடீரென்று பின்னூட்டங்களில் நனைகிறேன்...?
சீனா!தொடர்ந்த வருகைக்கும் வாசித்துவிட்டுப் போய்விடாமல் கருத்துச்சொல்லும் மனதிற்கும் நன்றி.
ரிஷான்!உங்கள் வலைப்பக்கம் போய்ப் பார்த்தேன். அந்தக் கவிதையையும் வாசித்தேன்.ஒரே மாதிரி எண்ணங்கள் எழுதுபவரிடையே ஊற்றெடுப்பது இயல்பே...
மதிப்பிற்குரிய ஜமாலன்!எனது கவிதைகள் குறித்த உங்கள் கருத்துக்கள் நெகிழ்வுடன் கூடிய மகிழ்வைத் தருகின்றன. சிற்றிதழ்களில் பரிச்சயமான ஒருவர் கூர்ந்து கவனித்து கருத்துச் சொல்கிறார் என்பது எனக்கு மகிழ்வும் பெருமையும் அளிக்கும் விடயமாயிருக்கிறது. அந்த 'ண' - 'ன'வைச் சுட்டியது உங்களைப் புண்படுத்திவிட்டதோ... தமிழில் பெரிய புலமையெல்லாம் எனக்கில்லை. ஆனால், எழுத்துப்பிழைகள் இடம்பெறுவதைப் பார்த்தால் பெரிய 'இவள்' மாதிரிச் சுட்டிக்காட்டிவிடுவது எனது வழக்கமாயிருக்கிறது. என்ன செய்வது..? :)
ண ன அது புண்பட்டு எழுதவில்லை. உண்மையில் இன்னும் என்ககு அதில் குழப்பம்தான். மற்றபடி புண்படுவது என்பதெல்லாம இல்லை. எத்தனை கடுமையாக திட்டினால்கூட அவை என்னை வருத்தவோ புண்படவோ செய்வதில்லை.
மிக்க நன்றி தமிழ்நதி.எனது வலைத்தளத்துக்கு நீங்கள் வந்து சென்ற தடம் பெரும் வரலாறாய்ப்பதியப்பட வேண்டியது.நிஜமாய்த்தான் சொல்கிறேன்.
இக்கவிதையைத் தமிழ்மணத்தில் காணக்கிடைத்தது.அதன் விளைவே நிறையப் பின்னூட்டங்கள் என நினைக்கிறேன்.
எழுதி ஒரு வருடம் கழிந்தும் இன்னும் பின்னூட்டம் வருகின்றனவெனின் அது மிகச்சிறந்த கவிதை என்பதை நீங்கள் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் சகோதரி.
நன்றி ரிஷான்!சும்மா சும்மா புகழாதீர்கள்.. வழக்கம்போலவே பயமாக இருக்கிறது.:) எனக்கு இந்தக் கவிதையை விட இதற்குப் போட்டிருக்கும் படம்தான் பிடித்தது. அதை ஆழ்ந்து கவனியுங்கள். மழை நடந்துகொண்டிருக்கும் சாலை... அந்த மரங்கள்... காலநிலை... ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கார்... அற்புதமான பொழுதாயிருக்கிறது.
;-(
Post a Comment