புத்தகங்களை உயிர்மூச்சென்று சொல்வது மிகைப்படுத்தலாகத் தோன்றினும், அதனோடு தொடர்புடையவர்களுக்கு சற்றேறக்குறைய அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே அவை இருந்துவருகின்றன. சிலருடைய அறைகளில் புத்தகங்கள் இருக்கின்றன. சிலர் புத்தகங்களின் அறைகளில் வசிக்கிறார்கள். மேசையில், கட்டிலுக்கு மேல், கட்டிலின் கீழ், பரண்களிலுள்ள அட்டைப்பெட்டிகளில், வரவேற்பறையின் இருக்கைகளில், குளியலறையில்… எங்கெங்கு திரும்பினும் புத்தகங்களாக இருக்கும் வாழ்விடங்களை நான் பார்த்திருக்கிறேன். பார்க்கும்போதெல்லாம், ‘இவ்வளவையுமா வாசித்திருப்பார்கள்?’என்ற கேள்வி எழுந்திருக்கிறது. வாசிப்பின் அளவிற்கேற்ப மௌனம் அவர்கள் மீது கவிந்துவிடுவதையும் அவதானித்திருக்கிறேன். (இதற்கு முரணான விதிவிலக்குகளும் இருக்கிறார்கள்) நிறையப் படிக்கிறவர்கள் தங்களை சாமான்ய உலகத்திலிருந்து விலக்கிக்கொண்டவர்களாக அன்றேல் விடுவித்துக்கொண்டுவிட்டவர்களாக, சாதாரண உரையாடல்களில் பங்கேற்காதவர்களாக இருப்பதையும் கவனிக்க முடிந்திருக்கிறது.
நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் மாயவசீகரம் இன்னதென்று இன்னுந்தான் புலப்படவில்லை। காலச்சக்கரம் அந்நேரங்களில் மட்டும் கடகடவென்று சுற்றுமாயிருக்கும். புத்தகத்தைக் கையிலெடுத்து புரட்டவோ ஒரு வரி வாசிக்கவோ கூட வேண்டியதில்லை. மின்விசிறிகள் மட்டும் அனத்திக்கொண்டிருக்கும் நூலகங்களின் அமைதியான அந்த நீள மண்டபங்களின் மர அலமாரிகளுக்கிடையில் புத்தகங்களின் பின்முதுகைப் பார்த்தபடி ஊடாடித் திரிதலே போதுமாயிருக்கும்.
அந்தக் கிறக்கம் குறைந்துவருவதுபோன்றதொரு கலக்கம். பிரபஞ்சன் அவர்களின் வார்த்தைகளின்படி ‘ஜீவித நியாயமாகிய’எழுத்தை சமகாலத்தில் ஆத்மார்த்தமாக நேசிக்கிறவர்கள் அருகிவருகிறார்களோ என்று தோன்றுகிறது. தொழில்நுட்ப விருத்தியின் நீட்சியென விரிந்த உலகமயமாக்கல் உலகை அதகளம் செய்துகொண்டிருக்கும் இக்காலகட்டத்தில், மனிதர்களின் அகவுலகு சுருங்கி, புறவுலகு விரிந்துவருகிறது. நுகர்வுப்பைத்தியத்தில் தலை கிறுகிறுத்து நாம் அலைந்துகொண்டிருக்கிறோம். அச்சு ஊடகங்களின் இடத்தை கணினி விழுங்கிவிடுமோ என்ற கவலை மனதை மலைப்பாம்பைப்போல வளைக்கவாரம்பித்திருக்கிறது. இருந்தும் அச்சு ஊடகங்களின் இடம் அசைக்கப்படக்கூடியதல்ல என்று ஆறுதல் கூறுவாருமுளர்.
தமிழிலக்கியத்தில் அதிசயங்கள் நிகழ்ந்தாலொழிய ஒரு நூல் மறுபதிப்புக் காண்பது அரிதாகவே இருக்கிறது. கவிதைத்தொகுப்புகள், சிறுகதைகள், நாவல்கள் ஐந்நூறு அன்றேல் ஆயிரம் பிரதிகளுக்கு மேல் பதிப்பாவதில்லை. சில நூறு பிரதிகள் இழுத்துப் பறித்து விற்பனையாக, மிகுதி பதிப்பகங்களில் இடத்தை அடைத்துக்கொண்டு கிடப்பதைக் காண்கிறோம். ஒரு எழுத்தாளனின் நெஞ்சைக் குளிர்விக்கும் ஒரே விடயம் அவனுடைய-அவளுடைய நூல் மறுபதிப்புக் காண்பதாகவே இருக்கமுடியும். தன்னுடைய எழுத்து அநாதரவாகக் கிடப்பதைக் காண்பதைப் போன்ற துயரம் எழுத்தாளனுக்கு வேறில்லை. ‘எனக்காகவே எழுதுகிறேன்’என்ற பெரும்போக்காளர்கள் இதற்குள் அடங்கார்.
எழுத்தாளர்களே வாசகர்களாக இருக்கும் பேறுபெற்றதாக இருக்கிறது சமகாலத் தமிழிலக்கியம். மறுவளமாக, யாரோ சொன்னதுபோல எழுத்தாளரல்லாத வாசகரைக் காண்பது அரிதாகி வருகிறது. அவ்விதம் இருக்கையில், எழுத்தின் மீதான மதிப்பும் வியப்பும் பிரமிப்பும் பெரிதாக எதிர்பார்ப்பதற்கில்லை. எழுத்தாளனே வாசிப்பவனாகவும் இருக்கும் பட்சத்தில் வாசிப்பிற்கு இணையான தர்க்கச்சரடு ஒன்று மனதினுள் ஓடிக்கொண்டிருக்கவே வாய்ப்பு அதிகம். வாசிப்புடன் தர்க்கிக்கும் தன்மை சிறுவயதில் குறைவாக இருந்ததனாலேயே நிறைய வாசிக்க முடிந்திருக்கிறது. அறியாமை அறிவுக்கு இட்டுச்சென்றது. மேலும், மனிதர்களின் குணாதிசயங்களை அது கட்டமைக்கவும் செய்தது. பொய்யே பேசாத, இரக்கமே உருவான, அறிவின் சுடரொளி கண்கூசவைக்குமொரு மனிதர்களாய் நம்மை நாம் கற்பனிக்கவும் அந்த அறியாமை வழிவகுத்தது. இப்போது ஒப்பீட்டின் மமதையால், ‘நான் அறியாததா?’என்ற தன்னுயர்ச்சியில் அன்றேல் பெருமிதத்தின் காரணமாகவும் புரட்டப்படாமல் தூசிபடிகின்றன புத்தகங்கள். நாம் நிறைய இழந்துகொண்டிருக்கிறோம். ஒரு எழுத்தாளனின் ஒரேயொரு புத்தகத்தைப் படித்துவிட்டு, குறிப்பிட்டவரைக் ‘கரைத்துக் குடித்ததாக’ப் பாவனை பண்ணுகிறவர்களையும் நாம் பார்க்கத்தான் பார்க்கிறோம். எழுத்தாளரின் பின்புலமும் வாசிக்கும் கண்களில் படிந்திருக்கிறது. அதற்கியைபுற எழுத்து கொண்டாடப்படவும் பின்தள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
கழிந்துபோன ஆண்டுகளில் வாழ்ந்த எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களது நாவல்கள், சிறுகதைகள், வரிகள் பற்றிய சிலாகிப்புகளை வாசிக்கும்போது அந்த மகோன்னதக் காலங்களுக்கு ஏங்குகிறது மனம். அண்மையில் சந்தித்த ஒரு நண்பர் மஹாகவியின் கவிதை வரிகளை கடகடவென்று சொல்லிக்கொண்டே வந்தார். சமகால வாசிப்பு இத்தனை ஆழம்போகாமல் இருப்பதற்குக் காரணம் என்ன என்று தோன்றிக்கொண்டேயிருந்தது. பூரணி-அரவிந்தனும்(குறிஞ்சி மலர்) வந்தியதேவன்-குந்தவையும் (பொன்னியின் செல்வன்), வேதா-நச்சியும் (ஜீவகீதம்), தாரணி-சூர்யாவும்(அலையோசை) இன்னமும் என் நினைவில் இருக்கிறார்கள்.
புதுமைப்பித்தன் ‘இதுதானையா பொன்னகரம்’என்று கசப்பு வழிய எத்தனை காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கிறார். தி.ஜானகிராமனின் யமுனா ‘இதற்குத்தானா பாபு?’என்ற வார்த்தைகளை குறுஞ்சிரிப்போடு நம்மைப் பார்த்து இன்னமும் உதிர்க்கவே செய்கிறாள். ஜெயகாந்தனின் கங்கா இத்தனை காலங்கழித்தும் நுரைசுழித்தபடி நமக்குள் ஓடிக்கொண்டிருக்கிறாள். பாலமனோகரனின் பதஞ்சலி தண்ணீரூற்றில் வெள்ளந்தியாய் சிரித்தபடி இன்னமும் உலவித்திரிகிறாள். அசோகமித்திரனின் ‘புலிக்கலைஞன்’நாற்காலிகளில் ஏறி உங்களுக்குள் குதிக்கவில்லையா? லா.ச.ரா.வின் அபிதா இப்போதும் பல விழிகளில் சுடரேற்றுகிறாள். ‘கங்கா! நான் உன்னை இழந்து போனேனேடி!’என்று கங்கைக்கரை ஓரத்தில்…. கலங்கியழுத செங்கை ஆழியானை ஒருபோதும் மறக்கமுடிவதில்லை. ஜனரஞ்சக எழுத்தென்றும் ஆன்மீகத்தில் இறங்கித் தொலைந்தார் என்றும் வர்ணிக்கப்படுகிற பாலகுமாரனின் ஸ்வப்னாவும் காயத்ரியும்கூட அவரவர் கம்பீரத்துடன் இருக்கத்தானே செய்கிறார்கள்! இப்போது உதிரியாக நிறையப் பேர் எழுதிக்கொண்டிருக்கிறபோதிலும், எஸ்.பொ. அம்பை, பிரபஞ்சன், ஜெயமோகன், அசோகமித்திரன், எஸ்.ராமகிருஷ்ணன், நாஞ்சில் நாடன், அ.முத்துலிங்கம், வண்ணநிலவன்… இவர்களுக்குப் பிறகான பட்டியலில் ஒரு தேக்கம் வந்து சேர்கிறது. எதிரிடும் வெறுமை திடுக்கிட வைக்கிறது. ஆக, கதைகளின் வரிகளை அருந்திக் கிறங்கியிருந்த வாசகன் இனி காலமூட்டத்தில் மறைந்துபோவானா என்று அச்சமாக இருக்கிறது.
இருந்தும், சென்னை போன்ற நகரங்களில் புத்தகக் கண்காட்சிகளில் கூட்டம் அலைமோதுகிறது। அந்தக் கூட்டத்தை எப்படிப் பொருள்கொள்வதென்று தெரியவில்லை. கடற்கரையையும் சினிமாவையும் தவிர்த்து சொல்லும்படியான பொழுதுபோக்கு அம்சங்கள் அற்றதாக இருப்பதனால் வாராமல் வந்த கண்காட்சிகளில் கூட்டம் அள்ளுகிறதா? அன்றேல், நாம் நினைப்பது போலன்றி சனங்கள் இன்னமும் புத்தகங்களை நேசிக்கிறார்களா? ‘எப்படி எப்படி’களில் சனங்களுக்கு இன்னும் மயக்கம் இருக்கத்தான் செய்கிறது. மற்றும் பக்தி ஸ்டால்களையும் குறைசொல்வதற்கில்லை.
எது எப்படி இருந்தபோதிலும் புத்தகக் கண்காட்சி நெருங்க நெருங்க மனதுள் ஒரு பரவசப்படபடப்பு. புதிய புத்தகங்களின் வாசனை மோகாவேசம் தருவது. காலம் தன்னுணர்வற்றுக் கழிந்துபோகும் உன்னத தருணங்கள் புத்தகக் கண்காட்சிகளில்தான் வாய்க்கின்றன. தவிர, எழுத்தாளர்களின் முகதரிசனங்களுக்கும் குறைவில்லை. கடந்த தடவை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் ஈரவிழிகளுடன் வாசிப்புக்காக ஏங்கிக் கிடக்கும்போது, புதிய வெளியீடுகளையும் அள்ளிவருகிறோம்.
வாசிக்கப்படாத புத்தகங்களைப் பார்க்கும்போதெல்லாம் குற்றவுணர்ச்சி பொங்குகிறது. ஒருநாள்… ஒருநாள்…. என்று காத்திருக்கிறோம். வாசிக்க ஆரம்பித்து முடிக்காமல் மூலை மடித்த புத்தகங்களும் நம்மோடு சேர்ந்து காத்திருக்கின்றன.
"மோகித்து ஒருதடவை சுகித்தபின்
முகம் திருப்பிக் கடக்கிற
நெஞ்சின் அதிர்வை நினைவுறுத்துகின்றன
கட்டிலில் காத்திருக்கும் புத்தகங்கள்…"
என்ற வரிகள் உண்மையிலேயே உணர்ந்து எழுதப்பட்டவை. நடைமுறை வாழ்வு நம்மைத் தின்று செரிக்கிறது. சிக்கல்கள் வண்டுகளாகித் தலைகுடைகின்றன. வியர்த்த விவாதங்கள் சிருஷ்டியின் தவனத்தைக் கலைக்கின்றன. நமக்கு அளிக்கப்பட்ட இந்த வாழ்வு அற்புதமானது; கண்டெடுக்கப்படவேண்டியவற்றின் கருவூலம் இதுவென்ற ‘ஞானோதயம்’ பளிச்சிடும் தருணங்களில் நாம் செய்யவேண்டியதைப் பட்டியலிடுகிறோம். ஆனால், வாழ்வின் குரூரங்களின் முன் மண்டியிட்டுத் தலைகவிழ்ந்து உன்னதங்களை இழந்துபோவதன்றோ நமக்கு விதிக்கப்பட்டிருக்கிறது?
நன்றி: அம்ருதா
(அம்ருதாவில் தொடராக ஒரு பத்தி எழுதிவருகிறேன்)