12.24.2009
Tweet | |||||
ஆனந்தவிகடனில் எனது கவிதைகள்
இதை எழுதிக்கொண்டிருக்கிறபோது
‘காட்டுப்பூ போல மலரவேண்டும் கவிதை’
என்ற வரி உள்ளோடிச் சுடுகிறது
காற்றில் தனித்தசையும் காட்டுப்பூவை
நின்று கவனிக்க எவருமில்லை
எல்லோருக்கும்
வேண்டித்தானிருக்கிறது வெளிச்சம்!
--
புளியமரங்கள் கிளையுடல் வளைத்து
கூடல் நிகழ்த்தும் சாலையின் வழியே
மிதந்துசெல்கிறார்கள்
கார்காலத்தில் மானசியும் ஜான்சனும்
இளவேனிலில் மானசியும் மௌலியும்
ஆகஸ்டின் கொதிவெயிலில்
மானசியும் தாமோதரனும்
ஒன்றிற்கொன்று குறைவிலாத
புதிர்ப்பெண்ணின் காதலின்மேல்
படர்ந்துகொண்டிருக்கிறது வெயில்
பொழிந்துகொண்டிருக்கிறது மழை.
--
ஊழல்சாந்து குழைத்த கட்டிட இடிபாடுகளினின்று
தப்பிப்பிழைத்த பால்புட்டியைப்
பார்த்துக்கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.
சட்டத்தில் ஒரு கொலையின் விலை
ஒரு மாத வாடகையிலும்
மலிவானதெனச் சொல்லியபடி
காற்சட்டைக்குள் தன்னை நுழைத்துக்கொண்டிருக்கிறான்
பதினெட்டு வயதுப் பையனொருவன்
எப்போதும்
வெட்டரிவாள் சின்னத்துக்கே
விழுந்துகொண்டிருக்கிறது ஓட்டு
நீங்கள் விரைந்துகொண்டிருக்கிறீர்கள்
வண்ணத்தொலைக்காட்சியை வாங்க.
---
‘உன்னை மறந்தால் இறப்பேன்’என்றவனை
நீண்ட நாட்களின் பின்
நேற்றொரு கூட்டத்தில் பார்த்தேன்
கருநீலமும் சிவப்பும்
அழுத்தமாய் மேலும் கீழும் ஓடும் மேற்சட்டையும்
காக்கிக் கலர் காற்சட்டையும்
தோள்தொங்கும் ஜோல்னாப்பையுமாய்
அழகாகத்தானிருந்தது
ஆவி!
--
ஒரு சொல் உதிர்க்கும்வரை தேவதை
கண்ணிறங்கிக் கலந்தால் மானுடத்தி
முயங்கிக் களித்துச் சலித்தபின்னே ராட்சசி
தாபித்துத் தொடர்ந்தாலும்
காதலித்துக் கரைந்தாலும்
மணந்து புணர்ந்தாலும்
உனக்கென்ன
நீ மட்டும் எப்போதும் தேவகணம்!
----
கொலைகாரர்கள் நீதிமான்களாக இருக்கும் தேசத்திலும்
அடித்துப் பொழிகிறது மழை
பட்டாம்பூச்சிகள் வண்ணங்களை உதிர்த்துவிடவில்லை
குழந்தைகள் சீவிக்கிறார்கள்
உனது காதல் ஆன்மாவிலிருந்து புறப்பட்டு வருவதாக
நீ கண்ணீர் வழியச்சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
---
கணவனைப் பின்னிருத்தி
இருசக்கர வண்டியை ஓட்டிச்செல்லும்
தாட்டியான பெண்ணை
வினோதரசம் மிதக்கும் விழிகளால் ஏறிடுகிறீர்கள்.
மதுவிடுதிக்குள் சுவாதீனமாக நுழையும்
இளம்பெண் குறித்த சித்திரமும் உவப்பானதாக இல்லை.
‘அவள்’ எழுதும் கெட்டவார்த்தைகளை மட்டும்
அவளை மறந்துவிட்டு வாசிக்கமுடிவதில்லை.
நண்பரின் வீட்டில்
அதிசயமாக அரசியல் பேசுகிற பெண்
சமையலறைக்குள் எழுந்துபோகும்வரை
மனஅவச மௌனம் காத்துப்
பின் விட்ட இழையிலிருந்து
விவாதத்தைத் தொடர்கிறீர்கள்.
அடைபடலுக்குப் பழக்கப்பட்ட விலங்குகள்
கைமறதியில் திறந்திருக்கும் கூண்டுக் கதவை
விசித்திரம் படர்ந்த கண்களால்
வெறித்துக்கொண்டிருக்கின்றன.
----
அவசரமாய் கவிதையொன்றைத் தயாரிக்க வேண்டியிருக்கிறது
அனுப்பிவைக்கக் கேட்டவரின் அனுக்கமுகம்…
வாசிப்பவள்-ன்
கைவண்டி இழுத்துக் களைத்தவனா
சமையல் விடுமுறையில்
கூடத்தில் குப்புறக் கவிழ்ந்திருந்து படிப்பவளா
இலக்கிய நுணுக்குக்காட்டி அணிந்தவனா
சன்னல்களும் பூட்டப்பட்ட அறையினுள்
புத்தகங்களோடு மட்டும் வசிப்பவனா
இக்கவிதை
திறந்த இடுப்பருகில் இடம்பெறுமா
கொலைபடுகளத்தைச் சித்தரிக்கும் கட்டுரைக்கு
எதிர்ப்பக்கத்தில் வெளிவருமா
இறக்குவதா ஏற்றுவதா
இருண்மைசெய்வதா
வெளிச்சம் விழுத்துவதா
ஏதேதோ கேள்விக்கொக்கி பிடித்திழுக்கப் பிடித்திழுக்க
பொறாமல் முகம்சிணுங்கி
தெருவிறங்கிப் போகிறதே என் கவிதை
என் செய்வேன்
இல்லாத என் தெய்வமே!
----
வாக்குப்பெட்டிகளுக்காக
பணப்பெட்டிகள்
பணப்பெட்டிகளிலிருந்து
ஆயுதப்பெட்டிகள்
ஆயுதப்பெட்டிகளிலிருந்து
சவப்பெட்டிகள்
சவப்பெட்டிகளிலிருந்து……...
எந்தப் பெட்டியை
எந்தப் பெட்டி
முதலில் குட்டி போட்டதென்று
உங்களுள் எவராவது
சொல்லமுடியுமா நண்பர்களே?
--
மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில
பெருக்க மனதின்றி விட்டுவைக்கிறேன்
ஈரமனைத்தும் உறிஞ்ச
வெயில் வெறிகொண்ட இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள் இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.
நன்றி: ஆனந்தவிகடன்
Tweet | |||||
உயிர்மையின் புத்தக வெளியீட்டு விழாக்கள்
12.20.2009
Tweet | |||||
போதிமரம்
என்னை விறுக்கென்று கடந்த
உன் விழிகளில்
முன்னரிலும் முள்ளடர்ந்திருந்தது
உன் உதட்டினுள்
துருதுருக்கும் கத்திமுனை
என் தொண்டைக்குழியை வேட்கிறது.
மாறிவிட்டன நமதிடங்கள்
துடிப்படங்கும் மீனாக நான் தரையில்
துள்ளி நீர் கிழித்தபடி நீ கடலில்.
துரோகி-தியாகிச் சட்டைகள் அவிழ்ந்துவிழ
சற்றுமுன்பேஅம்மணமானோம்.
இடுகாட்டில் குளிர்காயும் குற்றவுணர்வில்
எரிகிறது எரிகிறது தேகம்
நம் அட்டைக்கத்திகளில்
எவரெவரின் குருதியோ வழிகிறது
நாம் இசைத்த பாடல்களைப் பிரித்துப் பார்த்தேன்
ஒழுகிற்று
ஊரும் உயிரும் இழந்த
பல்லாயிரவரின் ஒப்பாரிகள்
வன்மம் உதிர்த்து
வந்தொருக்கால் அணைத்துவிட்டுப் போய்த்தொலையேன்
மரணம் என்ற போதிமரத்தின் கீழ்
நிழலில்லை நீயுமில்லை நானுமில்லை
வதைமுகாம் மனிதர்களின்
கண்ணீர் இலையுதிர்ந்து கிடக்கிறது
தோற்றவரின் வேதம் என்பாய்
சரணாகதி என்பாய்
போடீ போ!
இனி இழக்க எவரிடமும் எந்த மயிருமில்லை!
நன்றி: காலம் (கனடா)
12.16.2009
Tweet | |||||
உடல்
ஏழு மணிக்கே தெரு ஓய்ந்துவிட்டிருந்தது. திறந்திருந்த பல்கனிக் கதவின் வழியாக குளிர்காற்று சிலுசிலுவென்று உள்ளே வந்தது. மரங்களில் மிச்சமிருந்த மழை தெருவிளக்கின் ஒளியில் வெள்ளிமணிகளாக மினுங்கியது. அவ்வப்போது கிளர்ந்து அடங்கும் காற்றில் சிணுங்கி உதிரும் மழைத்துளிகளைப் பார்த்தபடியிருந்தாள். மாலையானதும் கவியும் தனிமைமூட்டம் அவளை மிகமெதுவாய் மூடவாரம்பித்தது.
உறவுக்காரக் கல்யாணம் ஒன்றுக்கு அவளைத்தவிர எல்லோரும் திருப்பதிக்குக் கிளம்பிப் போயிருந்தார்கள்.
“நீயும் வாயேன்”
அவள் மறுத்துவிட்டாள். அம்மா அழைத்ததும்கூட ஒப்புக்குத்தான். விசேட நிகழ்வுகளில் இயல்பாக உலவ அவளால் முடிவதில்லை. எதிர்பாராத தருணத்தில் யாருடையவோ வார்த்தை முள் நெருக்கென்று மனசில் ஏறிவிடும். முதுகில் கண்கள் தைப்பதாய் உணர்வாள். போகும் இடங்களில் எல்லாம் பதில் தெரிந்த கேள்விகளாய்த்தான் கேட்கிறார்கள்.
“கொஞ்சம் அனுசரிச்சுப் போயிருக்கலாமில்ல?”
“போன்லயாவது பேசுறாரா?”
“பிரிஞ்சு ரெண்டு வருசத்துக்கு அதிகமாயிருக்கும் போலிருக்கே?”
அவள் மௌனமாகப் புன்னகைப்பாள். உள்ளுக்குள் நெருப்பின் தழல் அசையும். கன்னம் காதெல்லாம் சுடும். கேள்வி கேட்டுக்கொண்டிருப்பவரைத் தாண்டி கூட்டத்தினுள் புகுந்து செருகிக்கொண்டுவிடும் கண்கள். உதட்டுக்குள் சொற்கள் துடிதுடிக்கும். ‘உங்க வீட்டுக்காரர் கூட அன்னிக்கு ஆட்டோவில யாரோ ஒரு பொண்ணோட நெருக்கமா உட்கார்ந்து போனாரே’என்று ஒரு தடவை உறவுக்காரப் பெண்ணொருத்தியைப் பட்டென்று கன்னத்திலடித்தாற்போலக் கேட்டுத் திணறடித்திருக்கிறாள். கூட்டத்தில் எங்கிருந்தாலும் அம்மாவின் கண்கள் அவள்மீதே பதிந்திருக்கும். அதில் கொஞ்சம் பதட்டத்தின்; சாயல் கலந்திருக்கும். பெரும்பாலும் அவள்தான் வந்து மதுவை மீட்டுக்கொண்டு போவாள்.
“இனிமே என்னை எங்கயும் கூப்பிட வேணாம். நான் வரலைன்னா வரலை” வீட்டுக்கு வந்ததும் கத்துவாள்.
அறைக்குள் புகுந்து கதவடைத்துக்கொள்வாள்। அறை என்பது அவளளவில் மிகப்பெரிய விடுதலை. அதனுள் புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றினுள் கேள்வி கேட்காத மனிதர்கள் இருக்கிறார்கள். அவனைப் பிரிந்துவந்ததற்காக அவள் என்றுமே வருந்தியதில்லை. நிதானமாக எடுத்த முடிவுதான் அது. விழுந்துவிடாமல், தட்டுப்படும் யாவற்றின்மீதும் நெருடிக்கொண்டிருந்த தோலை வெட்டியகற்றிய நிம்மதி. சிதைந்து இரத்தமும் சதையுமாய்த் தொங்கும் காலை முழங்காலோடு அளவாகத் துணித்துக் கட்டுப்போட்ட ஆசுவாசம். காலின் கீழ் கொஞ்சநாள் காற்றுலவும். மருகி மருகி கைதடவும். பிறகு பழகிவிடும். அம்மாவின் கண்ணீர், அவளை மீள வரவழைக்கும் அவனுடைய தந்திரங்கள், தம்பியின் முகத்தொங்கல் எதுவும் அவளை அசைக்கவில்லை. ஒன்றும் கேட்காமலே அப்பா புரிந்துகொண்டார். அவருக்கு அவளைத் தெரியும்.
“நான் சம்பாதிக்கிறேன். சாப்பிடுறேன். நான் இங்க தங்கிக்கிறது உங்களுக்குக் கஷ்டமாயிருந்தா சொல்லுங்க. ஹாஸ்டல் பார்த்துப் போயிடுறேன்”
விளக்கு அணைத்ததும் அப்பிக்கொள்ளும் இருள் போன்றதே தனிமை. பழக்கப்படுத்திக்கொண்டால் பயமில்லை என்பதை அவள் நாளாக நாளாக உணர்ந்தாள். காலையில் எழுந்திருந்து காப்பியோடு சேர்த்து வேம்பின் பசுமையையும் பருகும் சுவையை புகுந்த வீடு அவளுக்குத் தந்ததேயில்லை. கிச்கிச்சென்று பறவைகள் சப்திக்கும் ஓசையைக் கேட்டபடி விடிகாலையில் படுத்திருக்க முடிந்ததில்லை. ஐந்து மணிக்கெல்லாம் மாமனார் சுப்ரபாதத்தை அலறவிட்டுவிடுவார். அவருக்கு விழிப்பு வந்துவிட்டால் வீடு மொத்தமும் விழித்துக்கொண்டுவிடவேண்டும். அப்படியொரு ஆங்காரம். மதுமிதா அங்கு வாசுதேவனின் மனைவி. அறைக்குள் இருக்கும்வரைதான் வாசுதேவன் மதுமிதாவின் கணவன். அறையை விட்டு வெளியில் வரும்போது புதிதாக ஒரு முகமூடி முளைத்திருக்கும். ஒருவேளை அதுவே சொந்த முகமாக இருக்கலாம்.
யாராவது வந்தால் பேசிக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. கீழ்வீட்டில் குடியிருக்கும் பாரதி… அவளின் குழந்தை மிருதுளா… ஷாம்சன்....
அப்பா-அம்மா தம்பியுடன் திருப்பதி போயிருப்பது ஷாம்சனுக்குத் தெரிந்திருக்கும். ஷாம்சன் தம்பி நரேனின் சிநேகிதன். தம்பியைவிட இரண்டு வயது பெரியவன்.
“ஏண்டா வயசுப் பசங்களையெல்லாம் வீட்டுக்குக் கூட்டிட்டு வர்ரே?”ஷாம்சனைக் கூட்டிவந்த அன்று சமையலறைக்குள் வைத்து அம்மா கிசுகிசுத்து முறைத்தாள்.
“அவன் நல்ல பையன். அவனுக்கே மூணு அக்கா இருக்கு”தம்பியின் குரலில் எரிச்சல் வெடித்தது. ‘அவங்க வீட்டுக் கொல்லையிலேயே மூணு பசு இருக்கு’என்ற தொனி அதில் இருந்ததாக நினைத்துச் சிரித்துக்கொண்டாள். அம்மாவிடம் சொன்னால் முறைப்பாள். ‘எடுத்ததற்கெல்லாம் குதர்க்கம்’என்பாள்.
“கிறிஸ்டியனா?”
“ஆமாம்மா…எதுக்கு இவ்ளோ கேள்வி?”
ஷாம்சனுக்குப் புத்தகப் பைத்தியம்। மதுவிடம் ஏராளமான புத்தகங்கள் இருந்தன. அவன் கேட்கும் ஆங்கிலப் பாடல்களை அவளிடம் கொடுத்துக் கேட்கச்சொல்வான். முதலில் அந்த உச்சரிப்பு பிடிபடவில்லை. வாத்தியங்கள் அலற ஒரு குரலும் பல்குரலுமாய் கூடச்சேர்ந்து அலறுகிறாற் போலிருந்தது. அதன் பின்னிருந்த விம்மலுக்குப் பழகினாள். எப்படிப் பாடுகிறாள்கள்… ன்கள்… நரம்புகளுக்குள் இசை துடிதுடித்து நகர்வதுமாதிரி…
இசை. புறவுலகின் கயமைகளை அழித்துவிடுவதாக அவள் உணர்ந்தாள். அந்தக் குரல்களுக்குள் அமிழ்ந்து அமிழ்ந்து கரைந்துபோய்விட ஏங்கினாள். தேம்பியழத் தோன்றும் சிலசமயங்களில். உலகத்தையே விட்டெறிந்து வானத்தில் ஏறிக் கலந்துவிட வேண்டும் போலிருக்கும். ஒரு இசைக்குறிப்பாக, பறவையாக, மேகங்களுள் தேங்கியிருக்கும் மழையினுள் கண்ணீர்த்துளியாக…
“நீங்க ஏன் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கக்கூடாது மது?”ஷாம்சன் ஒருநாள் கேட்டான்.
“எனக்கு சுதந்திரமா இருக்கணும்”
“அப்படி ஒருத்தரைப் பண்ணிக்கிறது…”
“இழுக்கும்வரை காலறியாது புதைகுழி… கல்யாணமும் அப்பிடித்தான்”அவள் சிரித்தாள்.
அவள் சிரித்தால் பூ உதிர்வது மாதிரி இருப்பதாக நினைத்தான். மிக மென்மையாக அளவெடுத்துத் தொடுத்தாற்போல எப்போதும் சிரிப்பாள். குறைவதுமில்லை. கூடுவதுமில்லை. அவளை இழந்து வாழ முடியுமென்றால் அவன் மூடனாகத்தான் இருக்கவேண்டுமென்று தோன்றியிருக்கிறது. சிநேகிதனின் அக்கா என்பதைக் கண்களுக்குச் சொல்லிக்கொடுத்தும் அவை புரிந்துகொள்வதாக இல்லை. செழுமை பூசிய கன்னங்கள், உயிர்ப்பின் ஒளி சிந்தும் கண்கள், சற்றே பெரிதான, சுருக்கங்கள் நிறைந்த கீழுதடு, ஒரே சீராக இறங்கும் நைட்டியினுள் அனுமானிக்கத் தேவைகளற்ற வளைவுகள், இழுத்துக் கட்டியது போலிருந்த தோலின் இறுக்கத்தில் ஆரோக்கியம் பளபளத்தது.
ஆனால், ஷாம்சனுக்கு மூன்று சகோதரிகள் இருந்தார்கள்। அவனுடைய திருமணம் மூன்று உடன்பிறந்தாள்களின் தலைவிதியை நிர்ணயிப்பதாக மட்டுமே இருக்கமுடியும். நூறு பவுன் நகை ஐம்பது இலட்சம் ரூபா ரொக்கம் என்பது ஷாம்சனின் அம்மாவுடைய குறைந்தபட்ச எதிர்பார்ப்பு என்று அவளிடமே சொல்லியிருக்கிறான். அந்தச் சமயத்தில் அவன் முகத்தில் ஆற்றாமை பொங்குவதை அவதானித்திருக்கிறாள். நரேனுடன் வீட்டுக்குள் நுழைந்ததும் மேசையில் சாப்பாட்டைத்தான் தேடுவான். அம்மா கையில் வேலையாக இருந்தால் தானாகவே எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடுவான். அவனுக்குச் சொந்த ஊர் பாலக்காட்டுக்கு அருகில் ஒரு கிராமம். வேலைக்காக சென்னையில் அலுவலக நண்பர்களோடு அறை எடுத்துத் தங்கியிருந்தான். நாளாக நாளாக ‘அப்பா அம்மாவை பிரிந்து வந்திருக்கிற பிள்ளை’என்பதில் அம்மாவுக்கும் வாஞ்சை பெருகத்தான் செய்தது. விசேடமாக என்ன செய்தாலும் அவனுக்கென்று தனிக் கிண்ணத்தில் எடுத்துவைப்பாள்.
மழை மீண்டும் பெய்யவாரம்பித்தத. கல்யாணத்துக்குப் போனவர்கள் எத்தனை மணிக்குத் திரும்பிவருவார்கள் என்று தெரியவில்லை. தெருவை அவள் வெற்றுப்பார்வையாகப் பார்த்துக்கொண்டு நின்றாள். இம்மாதிரி மழை மாலைகளில் ஏதோவொன்று குறைவதுபோல தோன்றும். தவறவிடப்பட்ட குழந்தைபோல மனம் அந்தரித்து அலையும். படுத்திருக்கும்போது கடைவிழியோரம் கண்ணீரின் சில்லிப்பை திடீரென உணர்ந்து திடுக்கிடுவாள். அம்மாதிரி சமயங்களில் புத்தகத்தைக் கையிலெடுத்துவைத்துக்கொண்டு அதனோடு மல்லுக்கட்டிக்கொண்டிருப்பாள்.
ஷாம்சனின் மோட்டார்சைக்கிள் படபடத்து வந்து கதவருகில் ஒதுங்குவது தெரிந்தது। ஹெல்மெட்டைக் கையில் எடுத்துச் சுழற்றியபடி படியேறி வந்தான். அவள் அலுவலகத்தில்கூட அநேக ஆண்கள் அப்படிச் செய்வதை அவள் பார்த்திருக்கிறாள். ஒன்றேபோல செயல்களையுடைய ஆண்கள்… ஏன் பெண்களுந்தான்.
அவளுக்குள் சின்னதாய் மகிழ்ச்சி போல ஒன்று எட்டிப்பார்த்தது. வயிற்றுக்குள் இருள் திரவம் சுரந்தாற்போலுமிருந்தது. ஓடிப்போய்க் கதவைத் திறந்தாள். அவன் வெகு சுவாதீனமாக உள்ளே வந்தான்.
“இன்னும் வரலையா?”கேட்டான்.
“இல்லைடா”
“சாப்பிட்டாச்சா?”
“ம்….”
அவன் சாப்பாட்டு மேசையை ஆராய்ந்துவிட்டு ஃபிரிட்ஜைத் திறந்துகொண்டிருந்தான்। பரந்த அவனது முதுகை முதன்முறையாகப் பார்ப்பதுபோல பார்த்தாள். பின்னாலிருந்து அணைத்துக்கொள்ள வேண்டும்போலிருந்தது. அவன் ஒரு பழத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கத்தியைத் தேடிச் சமையலறைக்குப் போனான்.
‘வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்டு வேண்டுமென்றே வந்திருக்கிறானா?’என்ற கேள்வி ஓடியது.
அவன் பழமும் கத்தியுமாக சாப்பாட்டு மேசையில் வந்தமர்ந்தான். அவள் யன்னல் வழியாக மழையைப் பார்த்துக்கொண்டிருந்தாள். முன்வீட்டுக் குழந்தைகள் மழையில் நனைந்தபடி கப்பல் விட்டுக்கொண்டிருந்தார்கள். அது தள்ளாடித் தள்ளாடி நகர்ந்து படக்கென்று கவிழ்ந்தது. தாய் உள்ளேயிருந்து அழைத்தபடி இருந்தாள். இறங்கமுடியாத மழை அவள் கண்களில் மின்னியது.
“இங்க வந்து உட்காரேன்”கூப்பிட்டான். அவன் அவ்வளவு சுவாதீனமாக ஒருமையில் அழைத்தது அவளுக்குச் சந்தோசமாக இருந்தது.
அருகில் அமர்ந்து பார்க்கும்போது அவன் இன்னும் பெரியவனாகத் தோற்றமளித்தான். நீண்ட கழுத்தில் தொண்டை முடிச்சு சின்னப் புடைப்பாய் தெரிந்தது. அவனது நீளமான விரல்களில் நகங்கள் அளவாகக் கத்தரிக்கப்பட்டிருந்தன. அவை இளஞ்சிவப்பு நிறத்தில் பளபளவென்றிருந்தன. கழுத்தை அடுத்து உரோமங்கள் சுருண்டிருந்த மார்பு தெரிந்தது. கண்கள்… அவன் ஏன் இப்படிக் கண்களுக்குள் பார்க்கிறான்?
அவன் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“சளி பிடிச்சிருக்கா?”
ஆமாமென்பதாய் தலையசைத்து மெலிதாகப் புன்னகைத்தான். பெரிய உதடுகள். அவளுக்குள் மழை சூடாகப் பெய்துகொண்டிருந்தது. உடல் கொதித்தது. உடலில் தண்ணீர் மொத்தமும் வற்றிவிட்டாற்போல தொண்டை காய்ந்து கிடந்தது.
‘இவன் ஏன் இங்கு வந்தான்?’என்று எரிச்சலாகவும் இருந்தது.
அவன் தன்னை இழுத்துச் சுவரோடு சாய்த்து வைத்து முத்தமிடுவதாக ஒரு கற்பனை ஓடியது. முரட்டுத்தனமாக அவளது கழுத்தில் பதியும் ஷாம்சனின் பெரிய உதடுகள்… தலை கலைந்து கண்கிறங்கித் தவிக்கும் அவள்…
‘போயிடு! போயிடு!’உள்ளுக்குள் அவள் அலறினாள்.
மார்புகள் அழுத்தும் கைகளுக்கு யாசித்தன। தன்மேல் படர்ந்து பரவும் உடலின் மூர்க்கத்துக்குத் தவித்தாள். அழுத்தி அழுத்தி யாராவது தன்னைக் கரைத்துவிட மாட்டார்களா என்றிருந்தது. இந்த உடலே வேண்டாம். போதும். போதும். நினைவின் ஆழத்திலிருந்து உடல்கள் மிதந்து மேலேறி வந்தன. அம்மணமான உடல்கள்… மூச்சடைப்பது போலிருந்தது. உணர்வுகள் எல்லாம் கால்களுக்கு நடுவில் ஒருங்குவிந்து வருவதாய்…
ஷாம்சன் கைகளை அவளுடையதை நோக்கி நகர்த்தியிருந்தான். அவனது கண்கள் திறந்திருந்த அவளுடைய அறைக் கதவைப் பார்த்துக்கொண்டிருந்தன. அவன் மூச்சு விடும் ஒலி அவளுக்குக் கேட்டது. அவனது உதடுகள் நடுங்கிக்கொண்டிருந்தன. தாபம் சொட்டும் விழிகள்…
இப்போது அவன் அவளுடைய விரல்களைப் பற்றி நெரித்துக்கொண்டிருந்தான்.
“எவ்வளவு நாள் மது!”என்றான்.
“வேண்டாம் ஷாம்சன்… அவங்கல்லாம் வந்துடுவாங்க”
“இல்லை… இன்னும் அங்கேர்ந்து கிளம்பலை”
மது அவனது கண்களை நேரடியாகப் பார்த்தாள். தெருவிளக்கின் ஒளியில் பளபளத்தபடி இறங்கிக்கொண்டிருந்த மழையைப் பார்த்தாள். அவனது கைகளுக்குள் கதகதவென்று அடங்கியிருந்த தன் விரல்களைப் பார்த்தாள்.
அழவேண்டும் போலிருந்தது. உடம்பே இல்லாமல் அரூபமாகிவிட ஏங்கினாள்.
“போயிடு ஷாம்சன்”
அவன் அந்தத் தருணத்தைத் தவறவிட்டுவிடுவேனோ என்ற பதைப்போடு ஆவேசங்கொண்டவனாய் எழுந்திருந்து அவளை அணைத்தான். முகத்தை நிமிர்த்தி உதடுகளைத் தன் உதடுகளால் இறுக்கினான். அவளது மார்பில் அலைந்தது ஒரு கை.
மழை… மழை… மழை ஏன் இத்தனை சுடுகிறது?
எத்தனை கணங்கள்… யுகங்கள்… மைக்கேல் ஜோர்ஜின் ‘ஜீசஸ் ரூ எ சைல்ட்’பாடலை காதருகில் பாடுவது யார்?
“அம்மா என்ன நினைப்பாள்? தம்பி என்ன சொல்வான்? அப்பா…?”
‘தேவடியா… இதுக்குத்தானாடி?’மாமியார் கோபவெறியோடு காதருகில் கிசுகிசுத்தாள்.
மது ஷாம்சனை உதறி எறிந்தாள். அவன் அலமலந்து திகைத்தான். அவளைப் பற்ற மீண்டும் மீண்டும் நீட்டிய கைகளை அவள் தள்ளித்தள்ளி விட்டாள்.
“போயிடு”
“இது தப்பில்லை”
அவளுக்கு அழுகை வரும்போலிருந்தது.
“போயிடுங்கிறேன்ல…”அதட்டினாள்.
“இவ்வளவு படிக்கிற… இதெல்லாம் தப்பில்லை மது…”அவனது வார்த்தைகள் அந்தச் சந்தர்ப்பத்தோடு ஒட்டாமல் கேவலமாகத் தரையில் உதிர்ந்தன.
“அதனால என்னடா? நான் இங்கதான வாழ்ந்தாகணும்”
அவன் ஹெல்மெட்டைக் கையில் எடுத்தபடி கடைசி முறையாக இறைஞ்சும் பார்வையை எறிந்தான்.
“நான் கதவைப் பூட்டணும்”
“பூட்டிக்கோடி…”அவன் கதவை உதைத்து வெளியேறினான்। மழைத்துளிகளைக் கிழித்துக்கொண்டு சாலையில் சீறி மறைந்தான்.
அவள் தன்னறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டாள்.யாரையோ பழிவாங்குவதுபோல விரல்களுள் நினைவைச் செலுத்தி ஆவேசத்தோடு இயக்கவாரம்பித்தாள். மது அயர்ந்து உறங்க ஆரம்பித்தபோது மழை நின்றிருந்தது.
நன்றி:உயிரெழுத்து
12.10.2009
Tweet | |||||
தாய்நாட்டிலிருந்து தப்பிவருவது…
இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்காளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட பெண்களின் புகைப்படங்களை (சஞ்சிகையொன்றில் கட்டுரை எழுதுவதற்கென சேமிக்கப்பட்டது) முதல் வேலையாக மடிக்கணினியிலிருந்து அழித்தேன். தலை சிதைந்து, கழுத்தின் கீழான உடற்கூழ் மட்டும் எஞ்சிய குழந்தையின் புகைப்படத்தையும், சிதறுண்ட மேலும் பல உடல்களையும் அழித்தேன். சில நிமிடங்கள் தயங்கியபிறகு, குறிப்புப் புத்தகத்தைப் பயணப் பெட்டியிலிருந்து எடுத்து வெளியில் வைத்தேன். மொஹம்மூத் தார்வீஷ், அஸ்வகோஸ், சேரன் முதலானோரின் கவிதைத் தொகுப்புகளை எடுத்துச் செல்வதும் உகந்ததாகத் தோன்றவில்லை. கசப்போடு அவற்றைத் தூக்கிப் போட்டேன். மேற்குறித்த வேலைகளின் பின், இலங்கைக்குப் பயணப்பட ஓரளவு தகுதியுள்ளவளாக என்னை ஆக்கிக்கொண்டுவிட்டதாக உணர்ந்தேன். இலங்கை அரசினால் கடைப்பிடிக்கப்பட்டுவரும் ஊடக சுதந்திரத்தில் அவ்வளவு நம்பிக்கை!
விமானம் தரையிறங்கிக்கொண்டிருந்தபோது, என்றுமில்லாத பயமும் துயரமும் மனதைத் தின்னத்தொடங்கின. மூண்டெரியும் தீயிலிருந்து இலட்சக்கணக்கான குரல்கள் வெடித்துக் கிளம்பி வானத்தை நோக்கிப் பிரலாபிப்பதான கால மயக்கம் சூழ்ந்தது. ‘எங்களது… எங்களதும்…’என்ற உரிமை தளர்ந்து, இராணுவ ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அந்நிய நாடொன்றினுள் பிரவேசிப்பதான கலக்கத்தோடு உள்நுழைந்தேன். விடுதலைப் புலிகள் அகற்றப்பட்ட (பேரினவாதத்தின் வார்த்தைகளின்படி) நிலத்தில் பிரவேசிக்கிறோம் என்பதானது, நிராதரவான தனிமையை மனதளவில் தோற்றுவித்திருந்தது. அகதி முகாம்களுள் அடைபட்டிருக்கும் இலட்சக்கணக்கான தமிழ் மக்களது- பத்திரிகைகளிலும் இணையத்தளங்களிலும் காணக்கிடைத்த- புகைப்படங்கள் மனக்கண்ணில் தோன்றி மறைந்தன. முள்வேலிக்கு அப்பால், துயரம்-ஏக்கம்-கோபம்-பயத்தில் இறுகிய விழிகளுடன் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள், இழப்புகளில் தரித்துவிட்டாற்போன்ற விழிகளுடன் முதியவர்கள் அக்கணத்தில் நினைவில் மின்னி மறைந்தார்கள். விமான நிலையத்தினுள் அடையாள அட்டைகளுடனும், சந்தேகக் கண்களுடனும் தங்களை இனங்காட்டிக்கொள்ளாமலே - இனங்காட்டிக் கொடுக்க அலைந்த சிலரைக் காணமுடிந்தது.
‘பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்த’ மகோன்னதர்-மகாவீரர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ‘சல்யூட்’அடிக்கும் பென்னாம்பெரிய ‘கட்-அவுட்’கள் எங்களை வரவேற்க, நகரை நோக்கி விரைந்தோம். இராணுவப் படை-புடை சூழ அவர் பெருமிதம் வழிய நின்றிருந்தார். கோத்தபாய, பசில் சகோதரர்களும் அழிவில் பங்கெடுத்த மகிழ்வில் பேருருக்களாக நின்றிருந்தனர். சென்ற வழிகளில் எங்களை ‘புலிகளல்லாத தமிழர்’என்று, கடவுச்சீட்டைக் காட்டி நிரூபிக்க வேண்டியிருந்தது. நான் என்ன வேலை செய்கிறேன் என்பதில், எனது கணவர் எங்கிருக்கிறார் என்பதில், நான் எங்கே தங்கப் போகிறேன் என்பதில், எனக்கு எத்தனை குழந்தைகள் என்பதில் இராணுவத்தினர் அக்கறையோடிருந்தார்கள். “சிங்களம் தெரியுமா?”என்ற கேள்விக்கு, “தெரியும்” பதில் அவர்களுக்கு மிகத் திருப்திகரமாக இருந்திருக்கக்கூடும். “தெரியாது”என்ற பதிலை உள்ளடங்கிய மகிழ்ச்சியோடு சொன்னேன். ஆங்கிலம், அவர்களை அறியாமையின் பின்வாங்கலுள் தள்ளுவதை உணரமுடிந்தது. பிரயோகிக்கக்கூடாத இடத்தில் மந்திரத்தைப் பிரயோகித்து மாண்டவர்களைப்போல, கணப் பெருமைக்காகப் ‘படம் காட்டும்’ கடவுச்சீட்டுக்களே மரணத்திற்கான அழைப்பிதழாகவும் ஆகிவிடுவதுமுண்டு என்பதனால், எல்லா இடங்களிலும் கடவுச்சீட்டைப் பிரயோகிக்கவில்லை. இலங்கைக்குப் போகும்போது பழைய, ஓரம் நைந்துபோன தேசிய அடையாள அட்டைகளைத் தேடி எடுத்துவைத்துக்கொள்வது மிக நன்று। கொழும்பு போன்ற இடங்களில் வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் அவர்களது கண்களில் கொஞ்சூண்டு போலி மரியாதையைக் கொணர, ‘ஒழி’என்ற பாவனையோடு அனுப்பிவைக்கிறார்கள். ஆனால், வெளிநாட்டுக் கடவுச்சீட்டுகள் வைத்திருந்தோரே கைது செய்யப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் அசாத்திய சாத்தியங்கள் இலங்கையில் மிகச்சாதாரணம்.
கொழும்பு மாநகரத்தில், பெரும்பாலான தமிழர்கள் வாழும் பகுதியான வெள்ளவத்தையில் துப்பாக்கி ஏந்திய பொலிசார் எந்நேரமும் காவலுக்கு இருக்கிறார்கள். எப்போதாவது இராணுவத்தினரையும் காணமுடிகிறது. அவர்களது கரும்பச்சை நிறச் சீருடையை, ஆட்கொல்லித் துப்பாக்கியை, கனத்த காலணிகளை, தொப்பிகளுக்கு அடியில் அச்சுறுத்தும் கண்களைக் கடந்து செல்கையில் ஒரு இருட்டுப் பந்து வயிற்றுக்குள் உருள்வதை உணரமுடிகிறது. அது காரணமற்ற அச்சம் போல மேலுக்குத் தோன்றினாலும், வன்னியின் குரூர நிகழ்வுகளுக்குப் பிறகு அதை காரணத்தோடு கூடிய அச்சமாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. வீதியில் செல்வோரைத் தடுத்து நிறுத்தி நெற்றிப்பொட்டை அன்றேல் இதயத்தைச் சிதறடிக்கக்கூடிய சர்வவல்லமை பொருந்திய எமதூதர்களாகவே அவர்கள் தோற்றமளித்தார்கள். அந்நிலத்தில் கொல்வதற்கான-கொன்றதற்கான காரணங்கள் வேண்டியிருக்கவில்லை. சிறு சலனத்திற்கும் விழித்துக்கொள்ளக்கூடிய மரணம், துப்பாக்கிகளின் நிழலில் அங்கே தூங்கிக்கொண்டிருக்கிறது.
இராணுவத்தினரைத் தவிர்த்து சாதாரண சிங்கள சனங்களைப் பார்க்கும்போது உண்மையிலேயே நெகிழ்ச்சியாக இருந்தது. அந்த நெகிழ்ச்சியை எப்படி விளக்குவதெனத் தெரியவில்லை. பல நாடுகளில் பல இனங்களுக்கிடையில் பல மொழி பேசும் மக்களுக்கிடையில் வாழ்ந்து நாடு திரும்புமொருவராலேயே அந்த உணர்வை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். நான் உண்மையில் அவர்களை எனது சகோதரர்களாகவே உணர்ந்தேன். அவர்களை நோக்கிப் புன்னகைக்கவும் உரையாடவும் விரும்பினேன். ‘எங்களுக்காக உங்கள் குரல்கள் ஏன் உயரவில்லை?’ என்ற கேள்வி உதடுகளில் துருத்திக்கொண்டிருந்தது. அதே சமயம், அவர்களின் கண்களில் நாங்கள் தோற்கடிக்கப்பட்டவர்களாகத் தோன்றுகிறோமோ என்ற ஐயமும் மறுவளமாக எழவே செய்தது. ஒரு கவளம் சோற்றுக்குக் கையேந்தும் ஒரு இனமாக மாற்றப்பட்டுவிட்ட அவமானம் உள்ளுக்குள் சுட்டுக்கொண்டிருக்கவே இருக்கிறது.
கனடா, இலண்டன், இந்தியா இங்கெல்லாம் ஈழத்திலிருந்து பெயர்ந்து வந்த உறவுகள், நண்பர்கள் வாழ்ந்தாலும், அவர்களோடு பேசிப் பழகிக்கொண்டிருந்தாலும்- பிறந்த மண்ணின் வீதிகளில் நானறியாத எனது தேசத்து மக்கள் ஈழத் தமிழ் பேசிக் கடந்து செல்கையில் அதைக் கேட்கப் பேரானந்தமாக இருந்தது. சின்னச் சின்ன விடயங்களுக்கெல்லாம் நெகிழ்வது எனக்கே பிறழ்நடத்தையாகத் தோன்றினும், அதிலிருந்து என்னை விலக்கிக்கொள்ள முடியவில்லை. இறுகினாற்போலும் துயருற்ற முகத்தோடு கடந்துசெல்வோருள் என்னென்ன கதைகள் புதைந்திருக்கக்கூடுமோ என அஞ்சினேன். அப்படிச் செல்லும் பெண்களின்-ஆண்களின் மகனோ மகளோ கணவனோ மனைவியோஅன்றேல் அனைவருமே போரில் இறந்திருக்கக்கூடுமென நானாகவே நினைத்துக்கொண்டேன்.
கொழும்பில் இரவு ஒன்பது மணிக்கெல்லாம் ஊர் அடங்கிவிடுகிறது। பெரும்பாலான கடைகள் எட்டு மணிக்கே அடைக்கப்பட்டுவிடுகின்றன. சில கடைகள் நிரந்தரமாகவே பூட்டப்பட்டு, நாட்டின் பொருளாதார நிலையைப் பறையறிவித்துக் கொண்டிருந்தன. இல்லாமற் போனவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் மீது அரசாங்கத்துக்கு இருக்கின்ற அச்சமோ அளவிடற்கரியது.
எங்கோ தொலைவிலிருந்தபடி அழைத்துக்கொண்டிருந்த வீட்டின் குரலை மறுபடி மறுபடி மறுதலிக்க வேண்டியவளானேன்.வன்னியிலிருந்து தப்பி- அதிசயமாக வதைமுகாமிலிருந்து மீண்ட உறவினர்கள் வீட்டுக்கு வந்து போவதும், வாழைகள் குலைதள்ளியதும், தென்னைகள் காய்த்துத் தொங்குவதும், மல்லிகை பூத்துச் சொரிவதும், பூனை மூன்றாம் தடவை கருவுற்றிருப்பதும் எல்லாம் எல்லாம் தொலைபேசி சொன்னது.
கொழும்பில் விசாரணைச் சாவடிகள் நெருங்கும்போதெல்லாம் அச்சம் எனக்கு முன்னால் போனது. ஒரு கவிதையில் எழுதியிருப்பதுபோல அவர்கள்முன் ‘கேவலமாக’ப் புன்னகைக்க வேண்டியிருந்தது. கொழும்பிலிருந்து சென்னை செல்வதற்கான விமானத்தில் ஏறுவதற்காக விமான நிலையத்திற்குச் சென்ற வழியெங்கும் ஆசுவாசமாக உணர்ந்தேன். விமான நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்னதாக அமைந்திருந்த விசாரணைச் சாவடியில் பயணப்பொதிகள் இறக்கப்பட்டு கிளறப்பட்டுவிடக்கூடாதே என்ற எனது பிரார்த்தனைக்கு, இல்லாத கடவுள் செவிமடுத்தார். பிறந்த நாட்டிலிருந்து ‘தப்பிச் செல்லும்’இழிவு, எங்கள் சகோதர்களாகிய சிங்களவர்களுக்கும் நேராதிருக்கட்டும்.
விசாரணைச் சாவடி
எப்போதும் நானெழுதும் கடல்போல
உன்னிடத்தில் துப்பாக்கி இருக்கிறது
“இங்கெதற்கு வந்தாய்?”
உன் சீருடை அச்சுறுத்துகிறது
கைவிரல் மடித்து எனது வயதெண்ணும்
“உனக்கு சிங்களம் தெரியுமா…?”‘
நீ கேள்விகளாலானவன்
ஈற்றில் எஞ்சியிருக்கின்றன
-தமிழ்நதி
நன்றி: அம்ருதா