3.31.2014

நித்திலாவின் புத்தகங்கள்



நடப்பது இன்னதென்று அவளது மூளை கிரகித்துக்கொள்வதற்கிடையில் மீண்டும் சில பறந்துவந்தன. அவள் வாசித்துக்கொண்டிருந்த புத்தகத்தில் அதற்கு முந்தைய நொடிதான் ஒரு கொலை நடந்துமுடிந்து இரத்தம் கூழாகத் தரையில் பரவிக்கொண்டிருந்தது. கொலை செய்த காத்யா சாவதானமாக அந்த நொடிதான் வெளியேறிச் சென்றுகொண்டிருந்தாள்.
குழப்பத்தோடு நிமிர்ந்துபார்த்தபோது, கண்களில் அனல் தெறிக்க அம்மா நின்றுகொண்டிருந்தாள். “இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத்தான் நீ உருப்படுவாய்” என்று கத்தி அழுதபடியே அம்மாவால் வீசியெறியப்பட்ட புத்தகங்கள் நித்திலாவின் காலடியை அண்மித்தும் அவளுக்குப் பின்புறமாகவும் தாறுமாறாகச் சென்று விழுந்திருந்தன. நித்திலா அமைதியாக எழுந்து புத்தகங்களை எடுத்துக்கொண்டுபோய் அவை இருந்த இடத்தில் மறுபடியும் அடுக்கி வைத்தாள். பிறகு, அறைக்கதவைச் சாத்திக்கொண்டு படுத்துவிட்டாள். சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னால் அம்மா நின்றுகொண்டிருப்பதை அவளால் உணரமுடிந்தது.

அப்பா இறந்துபோனபோதுகூட அம்மா அப்படிக் கத்தியழுது அவள் பார்த்ததில்லை. அதற்கு அவர் எந்நேரமும் குடித்துக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். அண்ணா தனக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு வந்து நின்றபோதும், அவன் சில மாதங்களிலேயே தனிக்குடித்தனம் போனபோதும்கூட அம்மா தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக்கொண்டதில்லை. இன்று கண்களில் நீர் பெருக்கெடுக்க உடலெல்லாம் பதறித் துடிக்க கத்துகிறாளென்றால், அந்தளவிற்கு உள்ளுக்குள் உடைந்து நொறுங்கிப் போயிருக்கவேண்டும் என்று நினைத்தாள்.

அம்மா புத்தகங்களைத் தூக்கியெறிந்ததைப் பார்த்த கணத்தில் கோபம் பொங்கியது. வேறு யாராவது அப்படிச் செய்திருந்தால் சன்னதம் ஆடித் தீர்த்திருப்பாள். ஆனால், அம்மாவை ஒன்றும் சொல்லமுடியவில்லை. தவறு இழைத்துவிட்டதான மனநிலை நித்திலாவை மௌனமாயிருக்கச் செய்தது. படுத்திருந்தபடி அறையைச் சுற்றி விழிகளை ஓட்டினாள். அன்றாட உபயோகத்தில் இல்லாத பொருட்களை வைப்பதற்கென உயரத்தில் கட்டப்பட்டிருந்த தட்டுக்களில், அலமாரிகளில், எழுதும் மேசையில், கணனி மேசையில், முகம் பார்க்கும் கண்ணாடி முன், கட்டிலில், நாற்காலியில், அதனருகில் தரையில் இவையெல்லாம் போதாதென்று கட்டிலுக்குக் கீழும் புத்தகங்கள் கிடந்தன. கழிப்பறையின் தண்ணீர்க்குழாயினுள் சிறிய புத்தகங்கள் செருகப்பட்டிருந்தன. அவை பெரும்பாலும் எளிமையான வாசிப்பிற்குரிய ஜனரஞ்சக சஞ்சிகைகள். விடயத்திலும் பருமனிலும் கனத்த புத்தகங்கள் மலச்சிக்கலுக்கு இட்டுச்சென்றன.

அந்தச் சிறிய அறைக்குள் அவளோடு கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்தன. புதிதாக வாங்கி வரும் புத்தகங்கள் தமக்கான இடத்தை அடைவதற்கு முன்னம் சில காலம் முன்னறையில் அமர்ந்திருக்கும். அடிக்கடி அவற்றை எடுத்து மணந்துபார்ப்பாள். பெற்றோல் மணம், சிகரெட், விபூதி மற்றும் மழை கிளர்த்தும் வாசனை, மெழுகுவர்த்தி எரியும்போது எழும் வாசனை போலவே அதுவும் அவளுக்கு மிகப் பிடித்தமானதாயிருந்தது. ஆரம்பத்தில் அப்படி அவள் செய்யும்போது, ‘நீ திருந்தமாட்டாய்’என்ற பாவனையில் அம்மா தலையசைத்துச் சிரிப்பாள். பிறகு, வினோதமாகப் பார்த்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ளத் தொடங்கினாள். இப்போதெல்லாம், நித்திலா புத்தகங்களை மணந்து பார்ப்பதைப் பார்க்க நேரும் அம்மாவின் கண்களில் வேதனை குடிகொண்டிருப்பதை அவள் அவதானித்திருந்தாள்.

அவள் சிறுமியாயிருந்தபோது, விபரீதமெனச் சொல்லத்தக்க எதையும் அவளிடத்தில் கண்டார்களில்லை. அந்நாட்களில் அப்பா எப்போதாவதுதான் குடித்தார். அப்பாவும் அம்மாவும் பணத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ளத் தொடங்கியிருக்கவில்லை. வாசிக்கும் பழக்கம் ஆரோக்கியமானதென்ற எண்ணமே அப்போது அவர்களுக்கிருந்தது. ‘புத்திசாலி! இத்தனை சிறிய வயதில் இவ்வளவு பெரிய புத்தகம் படிக்கிறதே’என்று மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதில் பெருமை கலந்த ஆனந்தமிருந்தது. வீட்டிற்கு புதியவர்கள் வரக்கண்டால் ஓடிப்போய் ஒளிந்துகொள்வாள். வீட்டிற்கு வருபவர்களுக்குரித்தான சம்பிரதாயம் வழுவாமலிருக்க அவர்களும் இவளை இழுத்துப் பிடித்து வைத்து சில கேள்விகளைக் கேட்பார்கள். அந்நேரங்களில், ஒரு முயல்குட்டியைப் போல ஓடுவதற்கு ஆயத்தமாக கால்களைப் பெயர்த்துக்கொண்டு உள்ளறை நோக்கிக் கண்களைத் திருப்பியிருப்பாள்.

அவள் அறையைவிட்டு வெளியே வருவது மிகக் குறைவு என்பதையும் தவிர்க்கவியலாமல் போனாலொழிய எவருடனும் பேசுவதில்லை என்பதையும் அவர்கள் தாமதமாகவே உணரத்தொடங்கினார்கள். எப்போதாவது சடுதியாக அறைக்குள் நுழையும்போது வாசித்தபடியோ, கையில் புத்தகத்தோடு வேறோரு உலகத்தினுள் மூழ்கிவிட்டிருப்பதையோ புத்தகம் கையிலிருக்க உறங்கிவிட்டிருப்பதையோ கண்டார்கள். விளக்குகள் ஒளிர்ந்தபடியிருக்க உறக்கத்தில் ஆழ்ந்துபோயிருக்கும் தமது சின்ன மகளைக் குறித்து அவர்கள் கவலைகொள்ளத் தொடங்கினார்கள்.
அவளுடைய பதினாறாவது வயதிலிருந்து அம்மா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்கத் தொடங்கினாள். முதலில் வருத்தத்தோடும் பிறகு எரிச்சலோடும் நாளாக நாளாக கோபத்தோடும் அதே கேள்வியைக் கேட்டாள்.

“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்?”

“எப்பிடி இருக்கிறேன்?”

“மற்றப் பொம்பிளைப் பிள்ளையளைப் போலை நீ ஏன் இருக்க மாட்டேனெண்டிறாய்?”

அம்மா அந்தக் கேள்வியைக் கேட்கும்போது பக்கத்துவீட்டு சுமதியை மனதில் வைத்துக்கொண்டுதான் கேட்கிறாள் என்பதை நித்திலா அறிவாள். சுமதி, அம்மாவின் நீரிழிவு நோய் பற்றி அக்கறையோடு கேட்பாள். அவளுக்குச் சமைக்கத் தெரிந்திருந்தது. குறிப்பாக, அவள் சுடும் தோசை வட்டாரியால் வரைந்ததைப் போல வட்டமாக இருந்தது. மேலும் அது தோசையைப் போலவே உருசித்தது. வீட்டைத் தூசி தும்பு இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளப் பழகியிருந்தாள். சுமதியின் வீட்டுக்கு யாராவது போனால் விழுந்து விழுந்து உபசரிப்பாள். அவர்கள் ‘செத்துப் போ’என்று சொன்னால், ‘எத்தனை மணிக்கு?’என்று கேட்டுக்கொண்டு செத்துப்போகிறவளைப் போல அத்தனை அனுசரணையோடு நடந்துகொள்வாள். எல்லாவற்றிலும் முக்கியமாக, புத்தகங்களைக் கட்டிக்கொண்டு விழுந்து புரள்வதில்லை. அவளைப் பார்த்துப் பார்த்து மனம் வெதும்புவாள் அம்மா.

“பிள்ளை என்று இருந்தால் சுமதியைப் போல இருக்கவேணும்”என்பாள் அம்மா.

நித்திலாவும் அம்மாவைச் சமாதானப்படுத்துவதற்காக ‘ஏதாவது உதவி செய்யவா?’என்று கேட்டபடி சிலசமயம் சமையலறைக்குள் வருவாள். வேலை எதுவும் சொல்லிவிடக்கூடாதே என்ற எச்சரிக்கையுடன் வெண்ணெயில் இறங்கும் கத்திபோல வழுக்கிச் செல்லும் அந்தக் கேள்வி. அம்மா வேலைகளை முடித்துக்கொண்டு சோபாவில் படுத்திருக்கும்போது ஏதாவது ஆறுதலாகக் கதைக்கவேண்டுமென்று நினைப்பாள். ஆனால், சொற்களைத் திரட்டிக்கொண்டு கதைப்பதென்பது சிரமமானதும் சோம்பல் மிகுந்ததுமான காரியமாயிருந்தது அவளுக்கு.
எப்போதாவது முன்னறைக்குள் வந்து அமர்ந்திருக்கும்போது, தலைக்கு மேல் மயிரிழையில் கட்டப்பட்ட கத்தியொன்று தொங்கிக்கொண்டிருப்பதேயான மனஅந்தரத்தோடு அப்படியும் இப்படியுமாக அசைந்தபடி அமர்ந்திருப்பாள். அந்தக் கண்ராவியைக் காணச் சகிக்காமல் அப்பாதான் சொல்வார்.

“நீ போறதெண்டாப் போ”

நித்திலா கதைக்காமலிருப்பதை விடவும்அப்படி நிர்ப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு அமர்ந்திருப்பதைப் பார்ப்பது இன்னும் மோசமாயிருந்தது.
வெளியாட்களோடு எப்படி நடந்துகொள்வது என்பதையும் அவள் அறியாதிருந்தாள். அப்படித் தவிர்க்கமுடியாமல் ஏதாவது கதைக்க நேர்ந்த சமயங்களில், அவர்கள் திடுக்கிடும்படியாக அசந்தர்ப்பமாக ஏதாவது சொல்லிவைத்தாள்.

“உனக்கு உன்ரை புத்தகங்களைத் தவிர்த்து வேறை ஒரு சிந்தனையுமில்லை”என்று அண்ணாகூடச் சொல்லியிருக்கிறான். ‘என்னைச் சொல்கிறாய்… நீயும் சுயநலவாதிதான்’என்று இடித்துரைப்பதன் மூலமாக தனது தவறுகளின் கனத்தைக் குறைக்க அவன் சந்தர்ப்பம் கிட்டியபோதெல்லாம் முயற்சித்திருக்கிறான்.

அவளுக்கு புத்தகங்களில் ஈடுபாடு ஏற்பட்டது எந்த வயதிலிருந்து என்று அவளுக்கு உறுதியாகத் தெரியவில்லை. மதில்களில் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களை, அஞ்சலிக் கவிதைகளை, அரசியல் அறைகூவல்களை எதையும் அவள் விட்டுவைத்ததில்லை. மளிகைப் பொருட்களைச் சுற்றிவரும் காகிதங்களை சுருக்கம் நீக்கி எடுத்து வாசிப்பதற்கெனச் சேகரித்துவைப்பாள். சிகரெட் பெட்டியில் எழுதப்பட்டிருக்கும் ‘புகைத்தல் கொல்லும்’என்ற பயமுறுத்தலுக்குக் கீழேயுள்ள வாசகத்தைத் தவறாமல் அப்பாவுக்கு வாசித்துக் காட்டுவாள். பெரும்பாலும், அவளால் வாசிக்கப்பட்ட ஒரு சிகரெட் பெட்டியில் இருந்ததைப்போல மறு பெட்டியில் மரணம் எழுதப்பட்டிருப்பதில்லை.

குறைந்த மழைக்காலம், கூடிய வெயில்காலம் ஆகிய இரண்டு காலங்களில் மட்டும் வாழ்வதென்பது அவளுக்கு சலிப்பூட்டுவதாக இருந்தது. வெவ்வேறான நிலவெளிகளில் மானசீகமாகவேனும் வாழவிரும்பினாள். சுவாரசியமோ மர்மமோ திருப்பங்களோ அற்ற யதார்த்தத்தை விட்டு வெளியேறி அதியற்புதமான உலகமெனத் தன்னால் நம்பப்பட்ட ஒன்றினுள் நுழைந்துகொண்டாள்.

ஈரலிப்பான மழைக்காடுகளுள் நனைந்த குரல்களால் பறவைகள் ஒலியெழுப்புவதையும், இரவானதும் பெயர்தெரியாத பூச்சிகளும் வண்டுகளும் ரீங்கரிப்பதையும் கேட்டுக்கொண்டிருந்தாள். கண்ணுக்கெட்டிய தூரம்வரை பரந்து விரிந்திருந்த புல்வெளிகளில் அலையும் தும்பிகளின் பின்னே, உடலெல்லாம் உற்சாகக் காற்று நிரம்பியிருக்க கைகளை விரித்தபடி ஓடினாள். மஞ்சள் முகங்களில் சிறிய உள்ளடங்கிய கண்களால் சிரிப்பவர்களோடு சிநேகம் கொண்டாள். பனிபொழியும் வீதிகளில் காதல் பித்துப் பிடித்து தனக்குத்தானே அரற்றிக்கொண்டு போனவனின் குளிராடையைத் தொட்டுப் பார்த்தாள். புகையைக் கக்கிக்கொண்டு விரைந்த புகையிரதத்தில் தொற்றி நின்றபடி தாயை நோக்கிக் கைகளை ஆட்டியவளின் கண்ணீரில் உருகினாள். இருந்தவர்களுள் நல்லவனாகத் தோன்றியவனும் அதிகாரமற்றவனுமான வெள்ளைக்காரத் துரையொருவனில் காதல் கொண்டாள். கால இயந்திரத்தின் முட்களைத் தான் விரும்பியபடி முன்பின்னாக நகர்த்தி நூற்றாண்டுகளில் அங்கிங்கென உலவித் திரிந்தாள்.

வகுப்பிலும் பாடத்தைக் கவனிக்காமல் பாடப்புத்தகங்களுக்குள் மறைத்துவைத்துக்கொண்டு வேறு எதையாவது படித்துக்கொண்டிருந்தாள். அவளைச் சுற்றி எப்போதும் தோழிகள் குழுமியிருந்தார்கள். சாமியாடிகளுள் கடவுளர்கள் புகுந்துகொள்வதுபோல, கதை சொல்லும்போது அவள் வேறொருத்தியாக மாறிவிடுவாள். தனக்குள் ஒடுங்கும் சுபாவமுடைய அந்தச் சிறுமியா இவள் என்று பார்ப்பவர்கள் ஐயுறும்படியான மாற்றமாயிருக்கும் அது. அந்நேரம், அவள் வாசித்த புத்தகங்களிலிருந்த மனிதர்கள் தரையிறங்கி அழுவார்கள். சிரிப்பார்கள். பித்தேறிப் பிதற்றுவார்கள். அவசரப்பட்டுக் கொலை செய்துவிட்டு ஆசுவாசமாகக் கவலைப்படுவார்கள். கண்களை அகலவிரித்தும் சுருக்கியும் கதையின் போக்கிற்கேற்ப காற்றில் கைகளை அலையவிட்டும் குரலில் ஏற்ற இறக்கங்களைக் காண்பித்தும் தனி நடிப்பு நாடகமே நிகழ்த்திக் காண்பிப்பாள். சிலசமயங்களில், வாசித்த கதைகளிலிருந்து புதிய கதைகளை இட்டுக் கட்டிச் சொல்வதுமுண்டு. அப்போது அவளது முகத்தில் இரகசியமான புன்னகை மலர்ந்திருக்கும். தனக்கு மட்டுமே தெரிந்த ஒரு இரகசியத்தின்பாலான குறுகுறுப்பில் திளைப்பாள்.
பள்ளிக்கூடம் விட்டதும் ஓட்டமாய் ஓடிப்போய் தன் புத்தகங்களிடம் புகுந்துகொள்வாள்.

“சாப்பிடு”அம்மா வெளியிலிருந்து குரல் கொடுப்பாள்.

“அஞ்சு நிமிசம்”

“சாப்பிட வா”

“ரெண்டு நிமிசம்”

“எவ்வளவு நேரம் கூப்பிடுறது?”

இவ்விதமாக நிமிடங்கள் மணித்தியாலங்களாகக் கரைந்துபோவது வழக்கமாயிருந்தது. கடைசியில் பொறுக்கமாட்டாமல் கடுகடுத்த முகத்தோடு அம்மா வந்து நிற்கும்போது வேறு வழியில்லாமல் எழுந்து செல்வாள். ஒரு கையில் புத்தகம் மறுகையால் சாப்பாடு என்னும்போது பல நாட்கள் என்ன சாப்பிட்டோம் என்பதே அவளுக்குத் தெரியாமலிருக்கும்.

ஒரு தடவை, நூலகத்திலிருந்து இரவல் எடுத்துவர இயலாத அரிதான புத்தகமொன்றின் பக்கங்களைக் கிழித்து எடுத்துவந்தாள். அன்றெல்லாம் அப்படிச் செய்திருக்க வேண்டாமே என்று வருத்தப்பட்டுக்கொண்டேயிருந்தாள். இரவில் எழுந்திருந்து அந்தப் பக்கங்களை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். மென்சிறகுகளாலான பறவைக் குஞ்சொன்றின் இறந்த உடலைக் கையில் வைத்திருப்பதைப் போல உணர்ந்தாள். அதன்பிறகு கிழிப்பதை விட்டுவிட்டு முழுப்புத்தகங்களாகத் திருடவாரம்பித்தாள். கணிசமான அளவு புத்தகங்கள் சேர்ந்துவிட்டன. ஒருநாள் நூலகரிடம் கையுங்களவுமாகப் பிடிபட்டபோது பெரிய சத்தம்போட்டு அழ ஆரம்பித்துவிட்டாள். அவருக்கு அப்பாவைத் தெரிந்திருந்தது. “இனிமேல் அந்தப் பக்கம் வந்தால் பொலிசிடம் பிடித்துக்கொடுத்துவிடுவேன்” என்று எச்சரித்து அனுப்பிவிட்டார். பிறகு அந்த நூலகப் பக்கம் மறந்தும் போவதில்லை.

ஒருவழியாக பல்கலைக்கழகம்வரை படிப்பை ஒப்பேற்றினாள். அவளுடைய தோழிகளெல்லாம் வேலை தேடத் தொடங்கிய காலத்தில் அவள் நூலகம் நூலகமாகப் போய்க்கொண்டிருந்தாள். நூலகத்திலிருந்த புத்தகங்களில் இரவல் வாங்கக்கூடியவை எல்லாம் வாசித்துத் தீர்ந்தன. பக்கத்து ஊர்களிலும் அதற்குப் பக்கத்து ஊர்களிலும் உள்ள நூலகங்களிலும்கூட. தீபாவளிக்கு புத்தாடை வாங்குவதற்காகக் கொடுத்த பணத்தில் புத்தகம் வாங்கிக்கொண்டு வந்திறங்கியவளைப் பார்த்தபோதுதான் அவளில் ஏதோ கோளாறு இருப்பதாக அம்மாவுக்குத் தோன்றவாரம்பித்தது. அன்றைக்கு கன்னத்தில் ஓங்கி அறைந்துவிட்டாள். நித்திலா விசும்பியபடியே சாப்பிடாமல் படுத்துவிட்டாள். ஏதாவது செய்துகொண்டுவிடுவாளோ என்ற பயத்தில் அம்மா நள்ளிரவில் எழுந்திருந்து பார்த்தபோது மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அவள் வாசித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

கிடைக்கும் புத்தகங்களையெல்லாம் படித்துவிடுவாள் என்றில்லை. அவ்வளவு புத்தகங்கள் தன்னிடம் இருப்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. ஒரு பெரிய உலகமே தன் அலமாரிக்குள் அடைபட்டிருப்பதாக அவள் நம்பத்தொடங்கினாள். அந்த மனிதர்களோடு இரகசியமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டாள். இரவுகளில் அவளது அறைக்குள்ளிருந்து குரல்கள் கேட்கத் தொடங்கின.

கையில் ஒரு சதம்கூட இல்லாதபோதிலும் புத்தகக் கடைகளுக்குப் போவாள். புத்தகங்களின் முதுகைப் பார்த்துக்கொண்டு நிற்பதே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அங்கு நிற்கும்போது காலம் புரவியின் கால்கள்கொண்டு பாய்ந்தோடியது. சுற்றவர இருக்கும் பொருட்கள்,மனிதர்கள், ஓசைகள் எல்லாம் அந்நேரங்களில் மறந்து மறைந்துபோயின.

திடீரென்று ஒருநாள் அவளது திருமணத்திற்கென்று சேர்த்து வைத்திருந்த நகைகளில் ஒரு சங்கிலியைக் காணவில்லை. முற்றத்து மணலை அரித்துக்கூடத் தேடியாயிற்று. கிடைக்கவேயில்லை. நித்திலாவின் கட்டிலுக்கு அடியில் ஒளித்துவைக்கப்பட்டிருந்த மைமணம் மாறாத புத்தகங்களைப் பார்த்த அன்றைக்குத்தான் ஏதோ விபரீதமாகப் போய்க்கொண்டிருக்கிறது என்பது அம்மாவுக்கு உறைத்தது.
அழுது அடம்பிடித்து திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தாள் அம்மா. நித்திலா அப்படிச் சம்மதித்ததுகூட ஏதோவொரு குற்றவுணர்வினாலும் அடிக்கடி அவளது கனவுகளில் தோன்றும் இராஜகுமாரன் இவனாயிருக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பினாலுந்தான்.

புகார் கவிந்து மூடிய மழைமாலைப்பொழுதுகளில் அந்த இராஜகுமாரனோடு ஒரே குடையினுள் முன்னொருபோதும் அறிந்திராத தெருக்களில் அவள் நடந்து போயிருக்கிறாள். ஒரு தடவை அவர்கள் பீட்டர்ஸ்பேர்க்கில் புகையிரதத்துக்காகக் காத்திருந்தார்கள். அவளது தலையில் தூவப்பட்டிருந்த பனித்துகள்களை அவன் விரல்களால் தட்டிவிட்டான். அன்றைக்கு அவன் சாம்பல் நிறத்தில் கனத்த குளிராடையொன்றை அணிந்திருந்தான். நித்திலாவை அவன் ‘நாஸ்தென்கா’’வென்று அழைத்தான். முகமெல்லாம் களிப்பேருவகை பொங்கத் திரும்பிய கணத்தில் அவள்தான் எத்தனை அழகாயிருந்தாள்!
முதலிரவில், ‘உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?’என்று கணவனானவன் கேட்டபோது, ஒரு நொடியும் தாமதிக்காமல் ‘புத்தகங்கள்’என்றாள். அரையிருளில் அவனது முகம் புலப்படவில்லை. எனினும், அந்தப் பதிலால் அவன் திருப்தியடையவில்லை என்பதைத் தொடுதலில் உணர்ந்தாள். அவனோடு நிறையக் கதைக்க விரும்பினாள். அவனோ வார்த்தைகளைக் காட்டிலும் செயலையே விரும்பினான். தன்னைத் தின்னக் கொடுத்து முகட்டைப் பார்த்துக்கொண்டு அவள் படுத்திருந்தாள். முகட்டைப் பிரித்துக்கொண்டு தன் குதிரையோடு இராஜகுமாரன் வெளியேறிப் போனான். வருத்தமாக இருந்தது.

மாமியார் அவளது புத்தகங்களை எடுத்துவரக்கூடாதென்று சொன்னபோது திரும்பி கணவனின் கண்களைப் பார்த்தாள். அவனோ அதைக் கவனிக்காததுபோல மறுபுறம் திரும்பிக்கொண்டான். அப்போதிருந்தே அவனைப் பிடிக்காமலாயிற்று.

புகுந்த வீட்டில் மாடுகளும் மனிதர்களும் நிறைந்திருந்தார்கள். அவளுக்கு ஒரு நிமிடந்தானும் ஓய்வில்லை. இரவுகளில் கணவன் படுக்கைக்கு அழைத்தால் சுவரில் நகரும் பல்லியையோ இருளையும் ஒளியையும் மாறி மாறிப் படர்த்தும் வாகனங்களின் நிழல்களையோ பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள். அவன் அவளை ‘மரக்கட்டை’ என்று திட்டும்போது மரத்த விழிகளால் அவனைப் பார்த்துவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொள்வாள். அவனும் நாளடைவில் சலித்துப்போனவனாக பக்கத்து ஊரிலுள்ள ஒரு பெண் வீட்டிற்குப் போய்த் தங்கத் தொடங்கினான். முதலில் தயங்கித் தயங்கிப் பகலிலும் பிறகு தயங்காமல் இரவிலும் போகத் தொடங்கினான். இவளோ வீட்டுக்குப் போகவேண்டும் என்று நச்சரித்துக்கொண்டேயிருந்தாள். மாமியாரும் ‘இந்தச் சனியனைக் கொண்டுபோய் விட்டுத்தொலை’என்று சொல்லத்தொடங்கினாள். அவன் ஆற்றமாட்டாமல் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்தான்.

அவள் வீட்டுக்குத் திரும்பிச் சென்ற அன்று அவளிடமிருந்து மாட்டுச் சாணி வாடையடிப்பதாக அம்மா சொன்னாள். நீண்ட காலத்திற்குப் பிறகு அவள் புத்தகங்களோடு படுத்துறங்கினாள். நடுஇரவில் கண்விழித்துப் பார்த்தபோது ஆழ்கடலின் பேரமைதி தன்னுள் இறங்கியிருக்கக் கண்டாள்.

முதலில், அவள் தற்காலிகமாகத்தான் அங்கு வந்திருப்பதாக அம்மா நினைத்தாள். பிறகு உண்மையறிந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு திரிந்தாள். இவளோ திருமணம் என்ற ஒன்று தனக்கு நடக்கவேயில்லை என்பதாக நடந்துகொண்டாள். போதாக்குறைக்கு, ஒரு சோடிக் காப்பை விற்று புத்தகங்கள் வேறு வாங்கி வந்திருந்தாள். அம்மா எடுத்ததற்கெல்லாம் கோபப்படத் தொடங்கியது அப்போதிருந்துதான். என்றாலும் புத்தகங்களைத் தூக்கியெறியுமளவிற்கு மனதில் கோபம் அடர்ந்திருக்கும் என்பதை நித்திலா அறிந்திருக்கவில்லை. அம்மா சலிக்காது கேட்டுக்கொண்டிருந்தாள்.

“நீ ஏன் இப்பிடி இருக்கிறாய்?”

வயோதிபத்தில் சுருங்கியிருந்த அம்மாவின் முகம் இந்தக் கேள்வியைக் கேட்கும்போது துயரத்தால் மேலும் சிறுத்துவிடும். கண்கள் உள்ளாழத்தில் புதைந்துகொண்டன போலிருக்கும். அவளுக்கோ பதிலற்ற கேள்விகளைக் கேட்கும் அம்மா அங்கிருந்து அகன்றால் போதுமென்றிருக்கும்.

“மருமகன் எவ்வளவு நல்லவர். அவரோடை நீ ஏன் ஒத்துப்போயிருக்கக்கூடாது?”

இவளோ கடைசியாக வாசித்த வரியில் அகலாது நின்றுகொண்டிருப்பாள். அடுத்த வரியானது எதிர்பாராத திசையில் அவளை அழைத்துச் செல்வதற்குக் காத்திருப்பதான பதட்டம் உள்ளோடும்.

“உன்ரை வாழ்நாளிலை இதையெல்லாம் நீ வாசிச்சு முடிக்கப்போறேல்லை”அம்மாவின் குரல் சாபமிடுவதைப் போல ஒலித்தது.
அது நித்திலாவுக்கும் தெரிந்திருந்தது. ஆனாலும் அவள் மழைக்காலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல, குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களைப் பொதிந்து வைத்திருப்பதைப்போல புத்தகங்களைச் சேகரித்தாள். வீட்டிற்கு வரும் யாராவது அவளது புத்தகங்களுக்கருகில் செல்கிறார்களென்று உணரும் தருணம் தற்காப்புக்குத் தயாராகும் விலங்கு போலாகிவிடுவாள். இரவல் கொடுப்பதென்பது இழப்பதே என்பதை அனுபவம் அவளுக்குக் கற்பித்திருந்தது. அவள் சந்தித்த சொற்பமான மனிதர்களில் விதிவிலக்கானவர்கள் மிகக்குறைவு. இரவல் கொடுக்கப்பட்டு திரும்பிவராத புத்தகங்களை மீண்டும் வாங்கி இலக்கம் ஒட்டி பத்திரப்படுத்துவாள்.

கடைசியில் அம்மா சலித்த கண்களோடு கதவைச் சாத்திவிட்டுப் போவாள். அந்த மூடலில் கோபமும் வருத்தமும் கலந்திருக்கும்.
சேமிப்பு கரைந்துகொண்டே போய் இறுதியில் வீட்டை விற்கவேண்டிய நிலை வந்தபோது அவள் அந்த பல்கனியை, அதையொட்டி வளர்ந்திருந்த இலையடர்ந்த மரத்தை அதில் மாலையானதும் வந்தமரும் பறவைகளை துல்லியமான வானத்தை வெளிச்சத்தை இழந்தாள்.

புதிதாகக் குடிபோன வாடகை வீடு பகலிலும் இருண்டிருந்தது. பெயருக்கு சன்னல்கள் இருந்தன. ஆனால், அவற்றைத் திறக்கவொட்டாமல் பக்கத்து வீட்டுச் சுவர் தடுத்துநிறுத்தியிருந்தது. வீடு மாறுவதற்கு முன்பாக புத்தகங்களில் சிலவற்றை பக்கத்திலிருந்த நூலகத்திற்கு மனமில்லாமல் கொடுக்கவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் இடம் போதவில்லை. அம்மா சின்னஞ்சிறிய கூடத்தில் உடலைக் குறுக்கியபடி படுத்துக்கொண்டாள். கோடைகாலத்தில் வெப்பம் தகித்தது. குகையொன்றில் இருப்பதான மனநிலையில் மூச்சுத் திணறியது. மேலும், இரவு பத்துமணிக்கு மேல் விளக்குகளை எரிப்பதற்கு அனுமதியில்லை. ஆறுமாதத்திற்கு மேல் அந்த அனலைத் தாங்கவியலாமற்போக மறுபடியும் வீடு மாறவேண்டியதாயிற்று.

வீடு மாறிச் செல்ல வேண்டியேற்பட்ட ஒவ்வொரு தடவையும் அம்மா புத்தகங்களில் கோபங்காட்டினாள். தனக்குப் பிரியமற்ற மனிதர்களைப் பார்க்கும் கண்களால் அவற்றைப் பார்த்தாள்.

“இதையெல்லாம் என்ன செய்யப்போறாய்?”

நித்திலா மௌனமாக அமர்ந்து சின்னச் சின்ன அட்டைப் பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டிருப்பாள்.

வீடு மாற்றித் தர வந்திருந்த வேலையாட்களில் ஒருவன் அந்தக் கனமான அட்டைப் பெட்டிகளில் ஒன்றைத் தூக்கிச் செல்லும்போது கீழே போட்டுவிட்டான்.

“இதுக்குள்ளை என்ன பிணமா இருக்குது?”என்று கேட்டான் உடனடி விளைவான எரிச்சலோடு.

“ஓமோம்… உங்கடை பிணம்!”என்று சொன்னபிறகுதான் அப்படிச் சொல்லியிருக்கவேண்டாமே என்று தோன்றியது. அவன் முகம் இருண்டவனாக படியிறங்கிச் சென்றுவிட்டான்.

இது கொஞ்சம் விசாலமான வீடு. ஓவென்றிரைந்தபடியிருக்கும் வீதிக்கருகில் இருந்தது. கண்கள் கூசும்படியான வெளிச்சம். வெட்டவெளியில் நிற்பதுபோலிருந்தது. அவள் சன்னல்களை அடைத்து இருண்ட நிறத்திலான திரைச்சீலைகளைத் தொங்கவிட்டாள். பிறகு பிரிக்கப்படாத பெட்டிகளுக்கு நடுவில் அமர்ந்து வாசிக்கத்தொடங்கினாள். அம்மாவுக்கு அவளை என்ன செய்வதென்றே புரியவில்லை. குனிந்து வாசித்துக்கொண்டிருந்த அந்த மெல்லிய உருவத்தை சில விநாடிகள் உறுத்துப்பார்த்தாள். அவளது துயரம் ஒரு விம்மலெனப் புறப்பட்டது.

“என்ரை காலத்துக்குப் பிறகு நீ தனிச்சுத்தான் போகப்போகிறாய்”

அந்தத் தாய் விழிகளில் துளிர்த்த நீரைச் சுண்டியெறிந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துபோனாள். எப்படியாவது யதார்த்த உலகினுள் நித்திலாவை இழுத்துப்போட்டுவிடவேண்டும். அதைச் செய்வதற்கு அப்போதைக்கு அவளுக்குத் தோன்றிய ஒரே வழி நித்திலாவை வேலைக்கு அனுப்புவதுதான். அப்படியாவது அவளை வெளியாட்களோடு பழகச் செய்யலாமென்று அம்மா நம்பினாள். ஆதங்கத்தோடு அந்தக் கேள்வியைக் கேட்கத் தொடங்கினாள். 

“நீ ஏன் வேலைக்குப் போகக்கூடாது?”

நித்திலா திகைத்துப்போனாள். வேலைக்குப் போவதென்பது அவளளவில் செத்துப்போவதுதான்; அதற்குச் சற்றும் குறைந்ததில்லை அது! அம்மாவால் இதுநாள்வரையில் கேட்கப்பட்ட கேள்விகளில் இதுதான் அதிகமும் அச்சுறுத்துவதாக இருந்தது. அலாரம் உச்சிமண்டையில் ஓங்கி அடிக்க அதிகாலையில் பதறித் துடித்து எழுந்து வேலைக்கு ஓடிய அண்ணா நினைவில் வந்தான். ஒரு கோப்பிடமோ கணனியிடமோ இயந்திரத்திடமோ கையில் மறைமுகச் சாட்டையேந்திய எந்த மனிதனிடமோ தனது நாட்களைக் கையளித்துவிட்டு உயிருள்ள பிணமாக உலவுவதென்பது அவளளவில் அசாத்தியமே. ஆனாலும், அம்மா வேலைக்குப் போகச்சொல்கிறாள். நாளாக நாளாக தள்ளவும் கொள்ளவும் முடியாத ஆளாக அம்மா மாறிவருவதாக அவளுக்குத் தோன்றியது. ஆனாலும், நோய்க்கிருமியென கவலை அவளை அரித்துக்கொண்டிருப்பதை நித்திலாவால் உணரமுடிந்தது. எல்லோராலும் வெறுக்கத்தக்க ஒரு ஆளாகத் தான் மாறிவிட்டேனோ என்ற முதற்றடவையாக அவள் யோசிக்கத் தொடங்கினாள். அம்மாவாலும் வெறுக்கப்பட்டுவிடுவேன் என்ற நினைவு தாங்கவியலாத துன்பத்தைத் தந்தது. ஆனாலும் தயங்கியபடியே கேட்டாள்.

“புத்தகக் கடையிலோ லைப்ரரியிலோ எனக்கு வேலை கிடைக்குமா?”
அம்மா ஆயாசம் நிறைந்த கண்களால் அவளைப் பார்த்தாள்.  அங்கேயே விழுந்து செத்துப்போகலாம் போன்ற களைப்பு அவளை மூடியது.

“ஊருலகத்திலை உன்னைப் போல ஒரு பொம்பிளைப் பிள்ளை இருக்காது”என்றாள் கசப்போடு.

இதைச் சொல்லும்போது அவளது குரல் இற்றுப்போயிருந்தது. அதன்பிறகு நித்திலா அம்மாவின் கண்களுக்கு அஞ்சத் தொடங்கினாள். அம்மா உறங்கிய பிறகு மெழுகுவர்த்தியின் ஒளியில் வாசிக்கப் பழகினாள். கிடைக்கக்கூடாதென்ற பிரார்த்தனையுடன் வேலைகளுக்கு விண்ணப்பம் அனுப்பவாரம்பித்தாள். நேர்முகப் பரீட்சைக்குத் தோற்றும்படியாக வந்த கடிதங்களைக் கிழித்துப் போடவும் புத்தகங்களுக்கு அடியில் மறைக்கவும் செய்தாள். எவ்வளவோ கவனமாக இருந்தும் அந்தக் கடிதங்களில் ஒன்று அம்மாவின் கைகளில் சிக்கிவிட்டது.

“இந்தப் புத்தகங்களை விட்டெறிஞ்சுபோட்டு வேலைக்குப் போ”என்றாள்.
“சாப்பிடவும் வாடகைக்கும் காசிருந்தால் போதாதா அம்மா?”

வீடு விற்ற பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு அந்த வட்டியில் சீவனம் போய்க்கொண்டிருந்ததை நித்திலா அறிந்திருந்தாள்.

அம்மாவின் முகம் கடுகடுத்தது. அவள் பல ஆண்டுகளை ஒரு நொடியில் கடந்துவந்திருக்க வேண்டும். பிறகு அறையை நோக்கிப் பாய்ந்தோடினாள். திரும்பி வரும்போது அவளது கையில் புத்தகங்கள் இருந்தன. அவற்றை நித்திலாவின் காலடியில் விசிறியெறிந்தாள்.

“இந்தச் சனியன்களை விட்டொழிச்சாத்தான் நீ உருப்படுவாய்”என்று கத்தியழுதாள். பிறகு கதவைத் தடாலென்று அடித்துச் சாத்திவிட்டு வெளியில் போய்விட்டாள்.

நித்திலா காத்திருந்தாள். மாலையாகிற்று. இருண்டது. கடிகாரத்தின் ஓசை அப்படியொருநாளும் பூதாகரமாகக் கேட்டதில்லை. அம்மா அண்ணா வீட்டுக்குப் போயிருப்பாள் என்று தற்சமாதானம் செய்துகொண்டாள். தனிமை கொடிய நகங்களோடும் பற்களோடும் அருகிருந்தது. இரவு பத்துமணியளவில் அம்மா வீட்டினுள் நுழையும் காலடியோசை கேட்டது.
“நான் வேலைக்குப் போறன் அம்மா”என்று எழுந்திருந்து சொல்ல நினைத்தாள். பிறகு அந்த நாளின் கலவரத்தில் அயர்ந்து கண்ணுறங்கிப்போனாள்.

எழுந்து பார்த்தபோது விடிந்திருந்தது. வாகனங்களின் இரைச்சல் அமுங்கலாகக் கேட்டது. அருகிலிருந்த பெருமரத்திலிருந்து பறவையொன்று இடைவிடாமல் கூவியது. சமையலறையில் பாத்திரங்களின் ஓசை கேட்கவில்லை. எட்டு மணி வரை காத்திருந்தாள். வழக்கமாக தேநீர் கொண்டுவரும் அம்மா வரவேயில்லை. மெதுவாக எழுந்து வெளியில் வந்தாள். அம்மா கூடத்தில் துண்டை விரித்துப் போட்டுப் படுத்திருந்தாள். தலையணை கூட வைத்துக்கொள்ளவில்லை.
“அம்மா…”அழைத்துப் பார்த்தாள்.

இப்படியொரு கோபத்தை அம்மா அவளிடம் காண்பித்ததேயில்லை.
“உங்களுக்கு நான் வேலைக்குப் போகோணும்… அவ்வளவுதானே…?”
அம்மா சலனமற்றுக் கிடந்தாள்.

வயிற்றில் கலவரத்தின் கனத்தை உணர்ந்தாள். அருகமர்ந்து உலுப்பினாள். அம்மா அசைவற்றுக் கிடந்தாள். மெதுவாக விசும்பியழத் தொடங்கினாள். விசும்பல் கதறலாக மாறியது. யாரோ படியேறி வரும் காலடியோசை கேட்டது. சற்றைக்கெல்லாம் கூடம் ஆட்களால் நிறைந்துவிட்டது.

அவள் யாருடையவோ தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். அவ்வளவு துயரத்திற்கிடையிலும், வேலைக்குப் போக வேண்டியதில்லை என்று நினைக்க உள்ளுக்குள் சந்தோசமாகத்தான் இருந்தது.

நன்றி- “காலம்” மார்ச் 2014, இதழ்