11.26.2010

ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்


அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்கத்துக்குள் இறுக்கிப்பிடித்திருந்த புத்தகங்களை மேசைமீது ஓசையெழப் போட்டான். ‘புத்தகம் புனிதம்’என்ற எனது நம்பிக்கை கொஞ்சம் ஆடி நிமிர்ந்தது. “குவார்ட்டஸில புதுசா குடிவந்திருக்கிறது நீங்கள்தானே? எங்கடை வகுப்பெண்டு தெரியாமப் போச்சுது”என்று வெள்ளந்தியாய் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான். மாடுகளும் அவனும் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்த காட்சி நினைவில் வர, நானும் சிரித்தபடி “ஓம்”என்றேன். சிதம்பரநாதனை மாடுகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. அவன் கடைசி வாங்குப் பெடியங்களில் ஒருவன். படிப்பதில் ஆர்வமில்லை. தகப்பனாரின் நிர்ப்பந்தத்தினால் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியிருந்தான்.

‘மாட்டுக்கார வேலன்’என்று அவனை அவனது நண்பர்கள் அழைத்தார்கள். எப்போதாவது அவனது வீட்டைக் கடந்து செல்ல நேர்கையில் அவன் பட்டிக்குள் நின்று சாணம் அள்ளிக்கொண்டிருப்பதையோ மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருப்பதையோ காணமுடிந்தது.

குடியேற்றத் திட்டத்தில் உருவான அழகிய கிராமம் அது. வவுனியா மாவட்டத்தில் அமையப்பெற்றிருந்த பாவற்குளம் என்ற மிகப்பரந்த நீர்ப்பரப்பை அண்டிச் செழித்திருந்தது. விவசாயமே பிரதான பிழைப்பு. குளத்திலிருந்து புறப்படும் வாய்க்கால் ஊருக்குப் பின்புறமாக வீடுகளை அணைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் பச்சை வயல்கள். கோடையில் உழுந்தும் பயறும் கொழித்துக் கிடந்த காணிகள். அங்கிருந்த காலங்களில் அதன் அழகை உணர்ந்தேனில்லை. ‘நாங்கள் யாழ்ப்பாணத்தவர்’ என்ற பொய்மை மேட்டிமைத்தனம் வயதில் பெரியவர்களால் சிறியவர்களாகிய எங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ‘வவுனியாக் காட்டாரை’நாங்கள் கணக்கெடுக்காமல் திரிந்தோம். அதற்கு அங்கு கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஒரு காரணம். “உங்களுக்கெல்லாம் படிப்பு மூளையில் இறங்காது. பேசாமல் மாடு மேய்க்கப் போங்கோவன்”என்று அடிக்கடி குத்திக்காட்டும் ஆசிரியை ஒருவர் எங்களுக்குத் தமிழ் கற்பித்தார். மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய கண்கள் சிதம்பரநாதனில் பதிந்திருக்கும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவளும் ஓரளவு படிக்கக்கூடியவளுமாகிய என்னில் அந்த ஆசிரியைக்கு அதீத வாஞ்சை. அந்த வாஞ்சையின் பாரபட்ச பேதங்கள் பிரித்தறியத் தெரியாத வயதில் நான் இருந்தேன். பிரதேசவாதம் இன்னபிற சொற்கள் அண்மைக்காலத்தில் அறியப்பட்டவை.

“நேற்று நான் சொல்லிவிட்ட பாட்டுக்களை பாடமாக்கிக்கொண்டு வந்தனீங்களோ… வராத எல்லாரும் வகுப்புக்கு வெளியிலை போங்கோ”

என்ற குரலுக்கு விசுக்கென்று எழுந்து வெளியேறுகிற முதல் ஆள் சிதம்பரநாதனே. மனனம் செய்த காரணத்தால் வகுப்பில் அமர்ந்திருக்க நேர்ந்துவிட்ட துர்ப்பாக்கியவாதிகளான எங்களைப்(பெரும்பாலும் மாணவிகள்) பார்த்துக் கேலியாகச் சிரித்துக்கொண்டே போவார்கள். பெடியங்களின் குதூகலக் குரல்கள் கலகலக்கும் ஒசையைக் கேட்டபடி எரிச்சலோடு நாங்கள் வகுப்பறையில் அமர்ந்திருப்போம். ‘வெளியிலை போய் நிக்கிறதுக்காகவே பாடமாக்காமல் வந்திருப்பாங்கள்’ என்று நாங்கள் எங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்வோம்.

அன்றொருநாள் வேறு விதமாக விடிந்தது. தங்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை உரத்துக் கூப்பிட்டவாறே வீதிகளில் அலைந்து திரிந்த தாய்மாரின் ஏங்கிய குரல்களைச் செவிமடுத்தபடி எழுந்திருந்தோம். அந்த ஊரிலிருந்து பதினாறு பெடியங்கள் காணாமல் போயிருந்தார்கள். யோகன், விமலன், இராஜகுமாரன், சிதம்பரநாதன், ராஜேந்திரன், கிளியன், புலேந்திரன், மகேந்திரன், சிறி, சூட்டான், யோகராசா, கிருஷ்ணதாஸ், மூர்த்தி, டேவிட், சிவா, உதயன்… எல்லோரும் போய்விட்டார்கள். கொஞ்சநாட்களுக்கு ஊருக்குள் இதுதான் கதை. தாய்மார்கள் பிரலாபிக்கும் குரல்களால் துக்கித்துக் கிடந்தது அந்தச் சின்னஞ்சிறு கிராமம். அதனையடுத்து யார் யாரோ காணாமல் போனார்கள். கடிதம் எழுதிவைத்துவிட்டும், கண்கலங்கி ஏதோவொரு சொல் சொல்லிவிட்டும் தாயையோ தங்கையையோ வழக்கமில்லா வழக்கமாய் கட்டியணைத்துவிட்டும் காற்றாய் மறைந்தார்கள். கடலேறி பயிற்சிக்காய் போனார்கள். சைக்கிள்கள் மட்டும் எப்படியோ எவர் மூலமோ திரும்பி வந்து சாத்தியது சாத்தியபடி நின்றுகொண்டிருந்தன. அந்த ஆண்டு பிள்ளையார் கோயில் திருவிழா சோபையற்று நடந்தது. கலந்த கண்கள் காணாமல் போயிருக்க, பெண்களாலாய திருவிழா போலிருந்தது அது. 1983ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு, இயக்கத்துக்குப் போகிறவர்கள் பிறகு பிணமாகத் திரும்பி வருபவர்களது எண்ணிக்கை அவ்வூரில் அதிகமாக இருந்தது.

அந்தக் கிராமத்திலிருந்த அனைவரும் ஒருநாள் உடுத்தியிருந்த துணியோடு அடித்து விரட்டப்பட்டார்கள். உலுக்குளம் என்ற பெயருடைய, பக்கத்து சிங்களக் கிராமத்திலிருந்து வந்த இனவெறியர்கள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். அதற்கு இராணுவம் துப்பாக்கி சகிதம் துணையிருந்தது. பாடுபட்டுப் பண்படுத்திய நிலங்கள், வீடுகள், ஆடு-மாடு-கோழிகள், தோட்டத்தில் விளைந்திருந்த பயிர்பச்சை, ஆழக்கிணறுகள், கனவுகள் அனைத்தையும் விட்டு ஏதுமற்றவர்களாக, அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களை நோக்கி அந்த மக்கள் போனார்கள். மற்றவர்களின் தோட்டந்துரவுகளில் கிடந்துழலும் அகதி வாழ்வு தொடங்கியது.

சிதம்பரநாதனின் தந்தை வீடு பார்க்கப் போன இடத்தில் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத தருணமொன்றில் ஓமந்தையில் வைத்து சிதம்பரநாதனை நான் மீண்டும் பார்த்தேன். பயிற்சியிலிருந்து திரும்பி வந்திருந்தான். உயரமும் பருமனுமாய் ‘ஆம்பிளை’ஆகிவிட்ட சிதம்பரநாதன் சீருடையில் அழகாகத் தெரிந்தான். இடுப்பில் செருகப்பட்டிருந்தது கைத்துப்பாக்கி.


“என்னைத் தெரியுதா?”என்றான்.

“மாட்டுக்கார வேலன்”-சிரித்தேன்.

“ஊரிலிருந்த சனங்களைக் கலைச்சுப்போட்டாங்கள். எங்கடை அப்பாவையும் வெட்டிக் கொண்டுபோட்டாங்கள்”என்றான்.

சில நிமிடங்கள் காட்டை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனது துப்பாக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவொரு பொம்மையைப் போலிருந்தது.

நாங்கள் நெடுநேரமாக பழைய பாடசாலை நாட்களில் இருந்தோம். அந்த நாட்களில் உணரப்படாதிருந்த இனிமை கடந்த காலத்திலிருந்து சுரந்துகொண்டிருந்தது. இன்னார் இன்னாரை இரகசியமாகக் காதலித்தார்கள் என்ற கதைகளை அவன் என்னிடம் அவிழ்த்துவிட்டான். எண்ணிப் பார்த்தால் ஏழு சோடிகள். இரகசியமாகக் காதலிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். விருத்தெரிந்த பிறகான அனுகூல-பிரதிகூல கணக்குக்கள் அறியாத பால்யத்தின் தூயகாதல். தேவதைகளையும் தேவன்களையும் மட்டுமே கொண்டிருந்த- கால்கள் தரைபாவாக் காதல்.

பயிற்சிக்குப் போன எனது வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவராக இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த எனது அறை (பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்) பால்ய நினைவுகளால் நிறைந்து வழிந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அந்த நாட்களில் வாழ்ந்திருக்க ஏங்கினோம். இப்போது நினைத்துப் பார்த்தால் அங்கு படித்த காலங்களைக் காட்டிலும் மீள்ஞாபகித்தலின் வழி அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த காலங்கள் அதிகம் போலிருக்கிறது.

சிதம்பரநாதன் அடிபாடுகளில் முன்னிற்பவன் என்று மற்ற நண்பர்கள் சொன்னார்கள். அவன் அடிக்கடி காயப்பட்டான். அதே மாறாத சிரிப்போடு மீண்டும் மீண்டும் எங்கள்முன் தோன்றினான். ‘சோஸ் வீடு’என்று பெடியங்களால் அழைக்கப்பட்ட, இயக்கத்தை ஆதரித்து உணவளிக்கும் வீடொன்றில் இருந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்த விடயம் அவளுக்குத் தெரியாது.

“என்ன இது ஒரு தலை ராகம்?”என்றேன்.

“சாப்பிடுற வீடு… எங்களை நம்பித்தானே வீட்டுக்குள்ள விடுகுதுகள்… நினைச்சுக்கொண்டிருக்க எனக்கு ஒரு முகம் போதும்.”என்றான்.

“நீங்களும் இயக்கத்துக்கு வந்திருக்கலாம்”சிதம்பரநாதன் ஒருநாள் என்னிடம் சொன்னான்.

“துவக்குத் தூக்க உடம்பிலை சக்தி வேண்டாமோ?”என்று பரிகசித்தான் யோகன். அந்நாட்களில் சதைப்பற்றேயில்லாமல் அவ்வளவு ஒல்லியாக இருந்தேன்.

“அது சரி…!புத்தகம் தூக்கிற பிள்ளையளை நீ ஏன் துவக்குத் தூக்கச் சொல்லுறாய்?”என்று பரிகசித்தான் ராஜன்.(அவர் என்று இப்போது சொல்லவேண்டுமோ...)

நான் சிரிக்கவில்லை. குற்றவுணர்வாக இருந்தது.

ஒரு சுற்றிவளைப்பின்போது சிதம்பரநாதனும் அவனது தோழர்களும் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டனர். சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த காவலர்களை கோடரியால் தாக்கிவிட்டு சிறையை உடைத்து தப்பமுயன்றார்கள். சிதம்பரநாதன் கம்பிவேலியால் ஏறிக்குதித்து புகையிரத தண்டவாளத்தைக் கடந்து காட்டுக்குள் ஓடிவிட்டான். அவனோடு தப்ப முயன்ற இன்னொருவன் கம்பி வேலியைத் தாண்டும்போது துப்பாக்கிச் சன்னம் தாக்க கீழே விழுந்து உயிர்துறந்தான். தப்பிவந்த மகிழ்ச்சி ஒரு துளியும் இல்லை சிதம்பரநாதனில். நீண்டநாட்களுக்கு இறந்துபோன நண்பனைக் குறித்தே கதைத்துக்கொண்டிருந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஓமந்தையிலுள்ள கிராமம் ஒன்றில், ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு வீட்டில் வதனன் என்ற போராளியுடன் உறங்கிக்கொண்டிருந்த சுசி என்கிற சிதம்பரநாதனை நள்ளிரவில் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். அவனது வெள்ளந்தியான சிரிப்பை நினைத்துப் பார்த்துக்கொண்டே பல இரவுகள் தூங்காமல் கிடந்திருக்கிறேன்.

பாவற்குளத்திலிருந்து சனங்கள் விரட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீளக் குடியேற அரசாங்கம் அனுமதித்தது(?) இருபது ஆண்டுகளுக்குப் பிறகு (2004இல்) மீண்டும் அங்கு போவதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. கடல்கொண்ட தனுஷ்கோடியின் செங்கல் எச்சங்கள் ஞாபகம் வந்தது. மண்ணுக்குள் புதைந்துபோனமொஹஞ்சதாரோ, மச்சுப்பிச்சு என்று சொல்வதெல்லாம் இவ்விதம்தானிருக்குமோ என்றெண்ணத் தோன்றியது.

ஊருக்குள் போகும் சாலை ஒற்றையடிப் பாதையாக ஒடுங்கிச் சிறுத்திருந்தது. வீடுகளின் கூரைகளும் கற்களும்கூட பிடுங்கப்பட்டு, அங்கிங்கு என கல்லறைகளை நினைவூட்டும் குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களை யானைகளும் பாம்புகளும் வேறு விலங்குகளும் ஆக்கிரமித்திருந்தன. மழையும் வெயிலும் இதனுள் எப்படி இறங்கும் என்று ஐயுறுகிற அளவிற்கு அடர்ந்திருந்தது காடு. பகலிலும் இரவென மாயத்தோற்றம் காட்டுகிற காடு.

நாங்கள் படித்த பள்ளிக்கூட வளவினுள் ஒரேயொரு கட்டிடம் பரிதாபகரமாக நின்றிருந்தது. அதை எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. மூலை நாற்காலியில் போய் அமர்ந்தேன். “பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி…”என்ற பாடல் வரிகளை அந்தச் சுவரில் எழுதிய விரல்களை நான் அறிவேன். கடந்த காலத்தின் குரல்களும் வாசனையும் காற்றில் மிதந்து வருவதுபோலொரு மாயம். அமானுஷ்யமானதொரு உணர்வு. எங்களைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசியபடி வகுப்பறையை விட்டு வெளியில் போகும் சிதம்பரநாதனின் நினைவு வந்தது. அவன் காதலைச் சொல்லாமல் போன அந்தப் பெண்ணின் நினைவும்கூடவே. விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது.

அண்மையில் (2009 மே மாதம் நடந்தேறிய பேரனர்த்தத்தின் பின்) எனது வகுப்புத் தோழர்களில் ஒருவனை வெளிநாடொன்றில் சந்தித்தேன். வழக்கம்போலவே இழப்புகளையும் பழங்கதைகளையும் கிண்டிக்கொண்டிருந்துவிட்டு, உறங்கவென எழுந்திருந்தபோது நெடுமூச்செறிந்தபடி அவன் சொன்னான்.

“எங்கடை தமிழ் ரீச்சர் சொன்னதுபோல அப்பவே மாடு மேய்க்கப் போயிருக்கலாம்”

அந்த வார்த்தைகளிலிருந்த ஆற்றாமையையும் துயரத்தையும் கோபத்தையும் காலகாலங்களுக்கும் மறக்கமுடியும் என்று தோன்றவில்லை.

பிற்குறிப்பு: இதை வாசித்துவிட்டு ஒருவர் சொன்னார் “கதை நல்லாயிருக்கு”என்று. - “சொந்த அனுபவம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.”என்றேன்.

11.22.2010

பூனையின் கனவு


எங்கிருந்து இதைத் தொடங்குவது என்று தெரியவில்லை.தொடங்கினால் வளரவும் தன்னைத்தான் முடித்துக்கொள்ளவும் அதற்குத் தெரியும்.நாற்காலியில் நம்மைக் கொண்டுவந்து இருத்துவதுதான் பாடு.பல நாட்களாக வலைப்பூவில் ஒன்றுமே எழுதவில்லை.“கீற்று.காம்“இன் யானை நீண்டநாட்களாக அமர்ந்திருக்கிறது.எழுந்திருக்க முடியாத ஆகிருதிபோலும்.கருத்தளவே ஆகும் கனம்.சம்பங்கி,உமா ஷக்தி, ஈரோடு கதிர், கே.பி.சுரேஷ்,செல்வகுமார்(மைசூர்)இன்னுஞ் சிலர் (மின்னஞ்சலில் தேடிப் படம்காட்டப் பஞ்சியாக இருக்கிறது)வலைப்பூவை ஏன் காற்றாட விட்டிருக்கிறீர்கள் என்று கடிந்தும் கனிந்தும் சொன்னார்கள்.ஒவ்வொருதடவையும் பாஞ்சாலி சபதம் நடக்கும்.பாண்டவர்கள் வென்றதுமில்லை.கூந்தலை முடிந்ததுமில்லை.

கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. புதுவிளக்குமாறு அற்புதமாகக் கூட்டியது. நல்லவேளையாக இலையுதிர்காலத்தின் அழகு முற்றிலும் உதிர்ந்துவிடமுன்னதாக வந்து சேர்ந்தேன்.சிவப்பும் மஞ்சளும் பச்சையும் கபிலநிறமுமாக...இலையுதிர்காலத்தைக் காணாத கண்ணென்ன கண்?இசை செவிகளை நனைக்க நடப்பதாகச் சில நாட்கள் பேர்பண்ண முடிந்தது.நடக்கப்போகும் வழியில் வெளியில் கட்டிப்போட்டிருந்த பனிநாயின் கண்களைப் பார்த்து இரங்காமலிருக்க முடியவில்லை.ஏனைய நாய்களைவிட அதற்குக் குளிர் அதிகமாகத் தேவைப்படும்போல... என்று நினைத்தாலும் மனது சமாதானம் ஆகவில்லை.மனதிலிருந்து அந்த நாயை இறக்கிவிட முடியவில்லை.

அவ்வளவு சுத்தமான, அகலமான, அதியழகான நடைபாதையில் தனித்து நடந்துசென்றது சிலநாட்கள் விசித்திரமானதொரு உணர்வைத் தந்துகொண்டிருந்தது.ஒருவேளை மனிதசமுத்திரம் ததும்பிவழியும் சென்னைமாநகரத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியது காரணமாக இருக்கலாம்.மெல்லிய குளிர் தோலுக்கு இதம்.நடந்த வழிகளில் நின்றிருந்த பெருமரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் காற்றில் ஒய்யாரமாக மிதந்து இறங்கி தரையில் சென்று படியும் நளினத்திற்கு ஏதும் ஈடில்லை.

வெளியில் குளிர் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது.தேன்நிலவு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள்.மிகப்பெரிய சீனியாஸ்(இங்கு வேறு ஏதோ பெயர்)பூக்களைத் தாங்கிக்கொண்டிருந்த செடிகள் இரண்டும் தரையோடு படுத்துவிட்டன.மலர்கள் இருந்த இடத்தில் அடையாளத்திற்குக் குச்சிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன.சன்னல் சட்டகத்தினுாடாக அழகான ஓவியமெனத் தெரிந்துகொண்டிருந்த பெருமரம் தன் மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு அதீத மௌனத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.நினையாப் பிரகாரம் புசுக்கென்று இலை துளிர்க்கும் காலத்திற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.நீலத்தில் வெள்ளைத் தீற்றல்கள் கொண்டிருந்த வானம் துயரமுகம் கொண்டதாகிவிட்டது.

பத்துமணிக்கு எழுந்திருந்தால் கூடத்தில் வெயில் பார்க்கலாம்।யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்.துாசிகள் சுழன்றாடும் வெயில்குழல்.அரிதிலும் அரிதான வெயிலைக் கொண்டாடும் கூதிர்காலத்திற்குள் ஏறத்தாழ நுழைந்தாயிற்று.

நாலரை மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. இரவெல்லாம் இணையத்தினுள் தலையைக் கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு பின்னிரவில் உறங்கச் செல்பவர்களுக்கு காலை இல்லை. சிலருக்கோவெனில் மதியமும் இல்லை.இரவில் உறங்கப்போய் இரவிலேயே விழித்தெழுவதான காலமயக்கம்.பெரும்பாலான நாட்கள் ஞாபகத்தை உரசிப் பார்த்து இரவா பகலா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு எழுந்திருக்கவேண்டியதாயிருக்கிறது.

நிசப்தம்...அப்படியொரு நிசப்தம்!பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பேசும் ஒலிகூடக் கேட்பதில்லை.”த்தா... செவுட்டில ஒண்ணு வுட்டா மூஞ்சி பெயர்ந்து போகும்”-”வாயை மூடிக்கொண்டிரு... பல்லுக் கில்லெல்லாம் உடைச்சுப் போடுவன்”ம்கூம்...யாரும் சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை.தொலைக்காட்சியில் கொலை, தற்கொலை செய்திகளை நாளாந்தம் பார்க்கமுடிகிறது.இரகசியமாக சண்டைபோட்டு, இரகசியமாக அழுது, இரகசியமாகத் தற்கொலை செய்துகொள்வார்களாயிருக்கும்.எல்லோரும் கார்களில் விசுக்கென்று செல்கிறார்கள்.வீதிகளில் ஒரு குருவியையும் காணேன்.செவிகளுக்கு இதமான ஒரு விடயம்... அநாவசியமாக யாரும் “ஹாரன்“எனப்படும் காதுகிழிப்பானை உபயோகிப்பதில்லை.அப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பதை மறந்துவிட்டாற்போலிருக்கிறார்கள்.

இப்படியொரு வீதி ஒழுங்குள்ள நாட்டில் வாகனச் சாரதிப் பத்திரம் எடுக்கப் பயந்து இருக்கும் என்போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. கணவரைச் சார்ந்திருக்கும் மனைவியாய் காத்திருப்பு நீள்கிறது. பேருந்தில் திரியலாமென்றாலோ தோல் வலிக்கக் கிள்ளும் குளிர் அச்சுறுத்துகிறது.

சத்தம் இல்லாத தனிமை“வேண்டாம் அஜித்.ஹோ ஹோவென இரைந்தபடி விரையும் சனக்கூட்டத்துள் ஒரு கறுப்பு மனுஷியாய் கலந்துவிட விழைகிறது மனம்.சாக்குப்பைக்குள் கட்டி பனங்கூடலுக்குள் விட்டாலும் பிய்த்துக்கொண்டு ஊரைப் பார்க்க ஓடிவந்துவிடும் பூனைக்குட்டிகள் உதாரணம் பழசுதான்.எனினும், மீண்டும் மீண்டும் காலுரசும் வாஞ்சை அதைப் புதுப்பிக்கிறது.

பூனையொன்று தன் வட்டக் கண்களை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறது.பஞ்சுப்பொதி மேகங்களை என்னமாய் வகிர்ந்து பறக்கிறது விமானம்.மேகங்களுள் மிதந்து மழைக்காலம் மலர்த்தியிருக்கும் மரக்கூட்டம் நடுவினில் சென்று இறங்கும் கனவோடு அது இன்றைக்கும் உறங்கச் செல்கிறது.