12.27.2010

காலச்சுவடு பதிப்பகம் மூலம் எனது புத்தகம்


அன்பு நண்பர்களுக்கு,


“ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம்“ என்ற தலைப்பிலான எனது கட்டுரைத் தொகுப்பொன்று காலச்சுவடு பதிப்பகம் வழியாக ஜனவரி 2ஆம் திகதியன்று மாலை ஆறு மணிக்கு அண்ணா சாலையில் அமைந்துள்ள தேவநேயப் பாவாணர் நுாலக அரங்கில் வெளியிட்டு வைக்கப்படுகிறது. அதனோடு கூட மேலும் 8 நுால்களின் வெளியீடும் இடம்பெறவிருக்கிறது. பிரபஞ்சன், ஹென்றி திபேன், பால் சக்கரியா, சுகுமாரன், ச.பாலமுருகன், ஆ.இரா.வேங்கடாசலபதி, சதானந்த மேனன், வாஸந்தி, ஞாநி ஆகியோர் உரையாற்றவிருக்கிறார்கள்.

நண்பர்கள் அனைவரும் வந்து கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

நட்புடன்
தமிழ்நதி

11.26.2010

ஞாபகப் புதைகுழி அல்லது சிதம்பரநாதன்


அவனை நான் முதன்முதலில் பார்த்தபோது மாடுகளைச் சாய்த்தபடி போய்க்கொண்டிருந்தான். ‘ஹெய் ஹேய்’என்ற அவனது குரலுக்குக் கட்டுப்பட்டோ அல்லது பழக்கம்காரணமாகவோ கலையாது நிரையாகப் போய்க்கொண்டிருந்தன அவை. சின்னதும் பெரிதுமாய் நூற்றைம்பது மாடுகளுக்குக் குறையாது. நடுநாயகமாக கேப்பை மாடொன்று தன் பெரிய திமிலும் கொம்புகளும் அனைத்துக்கும் மேலாகத் தெரிய மெத்தனத்தோடு நடந்துபோனது. கறுப்பு மை பூசப்பட்ட கூரிய கொம்புகள் அச்சம் தருவதாயிருந்தன. நாங்கள் அந்த ஊருக்குப் போய்ச் சேர்ந்து சில நாட்கள்தான் ஆகியிருந்தன.

பள்ளிக்கூடத்தில் சேர்ந்த நாளன்று புதுவகுப்பில் எனக்குப் புதிதான முகங்கள் நடுவில் மிரட்சியோடு அமர்ந்திருந்தபோது மீண்டும் அவனைப் பார்த்தேன். கக்கத்துக்குள் இறுக்கிப்பிடித்திருந்த புத்தகங்களை மேசைமீது ஓசையெழப் போட்டான். ‘புத்தகம் புனிதம்’என்ற எனது நம்பிக்கை கொஞ்சம் ஆடி நிமிர்ந்தது. “குவார்ட்டஸில புதுசா குடிவந்திருக்கிறது நீங்கள்தானே? எங்கடை வகுப்பெண்டு தெரியாமப் போச்சுது”என்று வெள்ளந்தியாய் வரிசைப் பற்கள் தெரியச் சிரித்தான். மாடுகளும் அவனும் புழுதி கிளப்பியபடி போய்க்கொண்டிருந்த காட்சி நினைவில் வர, நானும் சிரித்தபடி “ஓம்”என்றேன். சிதம்பரநாதனை மாடுகள் இல்லாமல் நினைத்துப் பார்க்க முடிந்ததில்லை. அவன் கடைசி வாங்குப் பெடியங்களில் ஒருவன். படிப்பதில் ஆர்வமில்லை. தகப்பனாரின் நிர்ப்பந்தத்தினால் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியிருந்தான்.

‘மாட்டுக்கார வேலன்’என்று அவனை அவனது நண்பர்கள் அழைத்தார்கள். எப்போதாவது அவனது வீட்டைக் கடந்து செல்ல நேர்கையில் அவன் பட்டிக்குள் நின்று சாணம் அள்ளிக்கொண்டிருப்பதையோ மாடுகளுக்குத் தீவனம் வைத்துக்கொண்டிருப்பதையோ காணமுடிந்தது.

குடியேற்றத் திட்டத்தில் உருவான அழகிய கிராமம் அது. வவுனியா மாவட்டத்தில் அமையப்பெற்றிருந்த பாவற்குளம் என்ற மிகப்பரந்த நீர்ப்பரப்பை அண்டிச் செழித்திருந்தது. விவசாயமே பிரதான பிழைப்பு. குளத்திலிருந்து புறப்படும் வாய்க்கால் ஊருக்குப் பின்புறமாக வீடுகளை அணைத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. எங்கெங்கு காணினும் பச்சை வயல்கள். கோடையில் உழுந்தும் பயறும் கொழித்துக் கிடந்த காணிகள். அங்கிருந்த காலங்களில் அதன் அழகை உணர்ந்தேனில்லை. ‘நாங்கள் யாழ்ப்பாணத்தவர்’ என்ற பொய்மை மேட்டிமைத்தனம் வயதில் பெரியவர்களால் சிறியவர்களாகிய எங்களுக்குள் விதைக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக ‘வவுனியாக் காட்டாரை’நாங்கள் கணக்கெடுக்காமல் திரிந்தோம். அதற்கு அங்கு கற்பித்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஒரு காரணம். “உங்களுக்கெல்லாம் படிப்பு மூளையில் இறங்காது. பேசாமல் மாடு மேய்க்கப் போங்கோவன்”என்று அடிக்கடி குத்திக்காட்டும் ஆசிரியை ஒருவர் எங்களுக்குத் தமிழ் கற்பித்தார். மேற்கண்ட வார்த்தைகளைச் சொல்லும்போது அவருடைய கண்கள் சிதம்பரநாதனில் பதிந்திருக்கும். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவளும் ஓரளவு படிக்கக்கூடியவளுமாகிய என்னில் அந்த ஆசிரியைக்கு அதீத வாஞ்சை. அந்த வாஞ்சையின் பாரபட்ச பேதங்கள் பிரித்தறியத் தெரியாத வயதில் நான் இருந்தேன். பிரதேசவாதம் இன்னபிற சொற்கள் அண்மைக்காலத்தில் அறியப்பட்டவை.

“நேற்று நான் சொல்லிவிட்ட பாட்டுக்களை பாடமாக்கிக்கொண்டு வந்தனீங்களோ… வராத எல்லாரும் வகுப்புக்கு வெளியிலை போங்கோ”

என்ற குரலுக்கு விசுக்கென்று எழுந்து வெளியேறுகிற முதல் ஆள் சிதம்பரநாதனே. மனனம் செய்த காரணத்தால் வகுப்பில் அமர்ந்திருக்க நேர்ந்துவிட்ட துர்ப்பாக்கியவாதிகளான எங்களைப்(பெரும்பாலும் மாணவிகள்) பார்த்துக் கேலியாகச் சிரித்துக்கொண்டே போவார்கள். பெடியங்களின் குதூகலக் குரல்கள் கலகலக்கும் ஒசையைக் கேட்டபடி எரிச்சலோடு நாங்கள் வகுப்பறையில் அமர்ந்திருப்போம். ‘வெளியிலை போய் நிக்கிறதுக்காகவே பாடமாக்காமல் வந்திருப்பாங்கள்’ என்று நாங்கள் எங்களுக்குள் முணுமுணுத்துக்கொள்வோம்.

அன்றொருநாள் வேறு விதமாக விடிந்தது. தங்கள் தங்கள் பிள்ளைகளின் பெயர்களை உரத்துக் கூப்பிட்டவாறே வீதிகளில் அலைந்து திரிந்த தாய்மாரின் ஏங்கிய குரல்களைச் செவிமடுத்தபடி எழுந்திருந்தோம். அந்த ஊரிலிருந்து பதினாறு பெடியங்கள் காணாமல் போயிருந்தார்கள். யோகன், விமலன், இராஜகுமாரன், சிதம்பரநாதன், ராஜேந்திரன், கிளியன், புலேந்திரன், மகேந்திரன், சிறி, சூட்டான், யோகராசா, கிருஷ்ணதாஸ், மூர்த்தி, டேவிட், சிவா, உதயன்… எல்லோரும் போய்விட்டார்கள். கொஞ்சநாட்களுக்கு ஊருக்குள் இதுதான் கதை. தாய்மார்கள் பிரலாபிக்கும் குரல்களால் துக்கித்துக் கிடந்தது அந்தச் சின்னஞ்சிறு கிராமம். அதனையடுத்து யார் யாரோ காணாமல் போனார்கள். கடிதம் எழுதிவைத்துவிட்டும், கண்கலங்கி ஏதோவொரு சொல் சொல்லிவிட்டும் தாயையோ தங்கையையோ வழக்கமில்லா வழக்கமாய் கட்டியணைத்துவிட்டும் காற்றாய் மறைந்தார்கள். கடலேறி பயிற்சிக்காய் போனார்கள். சைக்கிள்கள் மட்டும் எப்படியோ எவர் மூலமோ திரும்பி வந்து சாத்தியது சாத்தியபடி நின்றுகொண்டிருந்தன. அந்த ஆண்டு பிள்ளையார் கோயில் திருவிழா சோபையற்று நடந்தது. கலந்த கண்கள் காணாமல் போயிருக்க, பெண்களாலாய திருவிழா போலிருந்தது அது. 1983ஆம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்குப் பிறகு, இயக்கத்துக்குப் போகிறவர்கள் பிறகு பிணமாகத் திரும்பி வருபவர்களது எண்ணிக்கை அவ்வூரில் அதிகமாக இருந்தது.

அந்தக் கிராமத்திலிருந்த அனைவரும் ஒருநாள் உடுத்தியிருந்த துணியோடு அடித்து விரட்டப்பட்டார்கள். உலுக்குளம் என்ற பெயருடைய, பக்கத்து சிங்களக் கிராமத்திலிருந்து வந்த இனவெறியர்கள் அனைத்தையும் அபகரித்துக்கொண்டார்கள். அதற்கு இராணுவம் துப்பாக்கி சகிதம் துணையிருந்தது. பாடுபட்டுப் பண்படுத்திய நிலங்கள், வீடுகள், ஆடு-மாடு-கோழிகள், தோட்டத்தில் விளைந்திருந்த பயிர்பச்சை, ஆழக்கிணறுகள், கனவுகள் அனைத்தையும் விட்டு ஏதுமற்றவர்களாக, அருகிலிருந்த தமிழ்க் கிராமங்களை நோக்கி அந்த மக்கள் போனார்கள். மற்றவர்களின் தோட்டந்துரவுகளில் கிடந்துழலும் அகதி வாழ்வு தொடங்கியது.

சிதம்பரநாதனின் தந்தை வீடு பார்க்கப் போன இடத்தில் சிங்களக் காடையர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சில ஆண்டுகளுக்குப் பிறகு, எதிர்பாராத தருணமொன்றில் ஓமந்தையில் வைத்து சிதம்பரநாதனை நான் மீண்டும் பார்த்தேன். பயிற்சியிலிருந்து திரும்பி வந்திருந்தான். உயரமும் பருமனுமாய் ‘ஆம்பிளை’ஆகிவிட்ட சிதம்பரநாதன் சீருடையில் அழகாகத் தெரிந்தான். இடுப்பில் செருகப்பட்டிருந்தது கைத்துப்பாக்கி.


“என்னைத் தெரியுதா?”என்றான்.

“மாட்டுக்கார வேலன்”-சிரித்தேன்.

“ஊரிலிருந்த சனங்களைக் கலைச்சுப்போட்டாங்கள். எங்கடை அப்பாவையும் வெட்டிக் கொண்டுபோட்டாங்கள்”என்றான்.

சில நிமிடங்கள் காட்டை உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தான். நான் அவனது துப்பாக்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதுவொரு பொம்மையைப் போலிருந்தது.

நாங்கள் நெடுநேரமாக பழைய பாடசாலை நாட்களில் இருந்தோம். அந்த நாட்களில் உணரப்படாதிருந்த இனிமை கடந்த காலத்திலிருந்து சுரந்துகொண்டிருந்தது. இன்னார் இன்னாரை இரகசியமாகக் காதலித்தார்கள் என்ற கதைகளை அவன் என்னிடம் அவிழ்த்துவிட்டான். எண்ணிப் பார்த்தால் ஏழு சோடிகள். இரகசியமாகக் காதலிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். விருத்தெரிந்த பிறகான அனுகூல-பிரதிகூல கணக்குக்கள் அறியாத பால்யத்தின் தூயகாதல். தேவதைகளையும் தேவன்களையும் மட்டுமே கொண்டிருந்த- கால்கள் தரைபாவாக் காதல்.

பயிற்சிக்குப் போன எனது வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவராக இந்தியாவிலிருந்து திரும்பி வந்தார்கள். யாழ்ப்பாணத்தில் இருந்த எனது அறை (பல்கலைக்கழகத்தில் அப்போது படித்துக்கொண்டிருந்தேன்) பால்ய நினைவுகளால் நிறைந்து வழிந்தது. நாங்கள் ஒவ்வொருவரும் மீண்டும் அந்த நாட்களில் வாழ்ந்திருக்க ஏங்கினோம். இப்போது நினைத்துப் பார்த்தால் அங்கு படித்த காலங்களைக் காட்டிலும் மீள்ஞாபகித்தலின் வழி அந்தப் பள்ளிக்கூடத்தில் இருந்த காலங்கள் அதிகம் போலிருக்கிறது.

சிதம்பரநாதன் அடிபாடுகளில் முன்னிற்பவன் என்று மற்ற நண்பர்கள் சொன்னார்கள். அவன் அடிக்கடி காயப்பட்டான். அதே மாறாத சிரிப்போடு மீண்டும் மீண்டும் எங்கள்முன் தோன்றினான். ‘சோஸ் வீடு’என்று பெடியங்களால் அழைக்கப்பட்ட, இயக்கத்தை ஆதரித்து உணவளிக்கும் வீடொன்றில் இருந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். அந்த விடயம் அவளுக்குத் தெரியாது.

“என்ன இது ஒரு தலை ராகம்?”என்றேன்.

“சாப்பிடுற வீடு… எங்களை நம்பித்தானே வீட்டுக்குள்ள விடுகுதுகள்… நினைச்சுக்கொண்டிருக்க எனக்கு ஒரு முகம் போதும்.”என்றான்.

“நீங்களும் இயக்கத்துக்கு வந்திருக்கலாம்”சிதம்பரநாதன் ஒருநாள் என்னிடம் சொன்னான்.

“துவக்குத் தூக்க உடம்பிலை சக்தி வேண்டாமோ?”என்று பரிகசித்தான் யோகன். அந்நாட்களில் சதைப்பற்றேயில்லாமல் அவ்வளவு ஒல்லியாக இருந்தேன்.

“அது சரி…!புத்தகம் தூக்கிற பிள்ளையளை நீ ஏன் துவக்குத் தூக்கச் சொல்லுறாய்?”என்று பரிகசித்தான் ராஜன்.(அவர் என்று இப்போது சொல்லவேண்டுமோ...)

நான் சிரிக்கவில்லை. குற்றவுணர்வாக இருந்தது.

ஒரு சுற்றிவளைப்பின்போது சிதம்பரநாதனும் அவனது தோழர்களும் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டனர். சிறைவைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்த காவலர்களை கோடரியால் தாக்கிவிட்டு சிறையை உடைத்து தப்பமுயன்றார்கள். சிதம்பரநாதன் கம்பிவேலியால் ஏறிக்குதித்து புகையிரத தண்டவாளத்தைக் கடந்து காட்டுக்குள் ஓடிவிட்டான். அவனோடு தப்ப முயன்ற இன்னொருவன் கம்பி வேலியைத் தாண்டும்போது துப்பாக்கிச் சன்னம் தாக்க கீழே விழுந்து உயிர்துறந்தான். தப்பிவந்த மகிழ்ச்சி ஒரு துளியும் இல்லை சிதம்பரநாதனில். நீண்டநாட்களுக்கு இறந்துபோன நண்பனைக் குறித்தே கதைத்துக்கொண்டிருந்தான்.

சில மாதங்களுக்குப் பிறகு, ஓமந்தையிலுள்ள கிராமம் ஒன்றில், ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த ஒரு வீட்டில் வதனன் என்ற போராளியுடன் உறங்கிக்கொண்டிருந்த சுசி என்கிற சிதம்பரநாதனை நள்ளிரவில் சுற்றிவளைத்து சுட்டுக்கொன்றது இந்திய இராணுவம். அவனது வெள்ளந்தியான சிரிப்பை நினைத்துப் பார்த்துக்கொண்டே பல இரவுகள் தூங்காமல் கிடந்திருக்கிறேன்.

பாவற்குளத்திலிருந்து சனங்கள் விரட்டப்பட்டு பல ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு மீளக் குடியேற அரசாங்கம் அனுமதித்தது(?) இருபது ஆண்டுகளுக்குப் பிறகு (2004இல்) மீண்டும் அங்கு போவதற்கான சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. கடல்கொண்ட தனுஷ்கோடியின் செங்கல் எச்சங்கள் ஞாபகம் வந்தது. மண்ணுக்குள் புதைந்துபோனமொஹஞ்சதாரோ, மச்சுப்பிச்சு என்று சொல்வதெல்லாம் இவ்விதம்தானிருக்குமோ என்றெண்ணத் தோன்றியது.

ஊருக்குள் போகும் சாலை ஒற்றையடிப் பாதையாக ஒடுங்கிச் சிறுத்திருந்தது. வீடுகளின் கூரைகளும் கற்களும்கூட பிடுங்கப்பட்டு, அங்கிங்கு என கல்லறைகளை நினைவூட்டும் குட்டிச்சுவர்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. மனிதர்கள் வாழ்ந்திருந்த இடங்களை யானைகளும் பாம்புகளும் வேறு விலங்குகளும் ஆக்கிரமித்திருந்தன. மழையும் வெயிலும் இதனுள் எப்படி இறங்கும் என்று ஐயுறுகிற அளவிற்கு அடர்ந்திருந்தது காடு. பகலிலும் இரவென மாயத்தோற்றம் காட்டுகிற காடு.

நாங்கள் படித்த பள்ளிக்கூட வளவினுள் ஒரேயொரு கட்டிடம் பரிதாபகரமாக நின்றிருந்தது. அதை எப்படி விட்டுவைத்தார்கள் என்று தெரியவில்லை. மூலை நாற்காலியில் போய் அமர்ந்தேன். “பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி…”என்ற பாடல் வரிகளை அந்தச் சுவரில் எழுதிய விரல்களை நான் அறிவேன். கடந்த காலத்தின் குரல்களும் வாசனையும் காற்றில் மிதந்து வருவதுபோலொரு மாயம். அமானுஷ்யமானதொரு உணர்வு. எங்களைப் பார்த்து ஒரு சிரிப்பை வீசியபடி வகுப்பறையை விட்டு வெளியில் போகும் சிதம்பரநாதனின் நினைவு வந்தது. அவன் காதலைச் சொல்லாமல் போன அந்தப் பெண்ணின் நினைவும்கூடவே. விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது.

அண்மையில் (2009 மே மாதம் நடந்தேறிய பேரனர்த்தத்தின் பின்) எனது வகுப்புத் தோழர்களில் ஒருவனை வெளிநாடொன்றில் சந்தித்தேன். வழக்கம்போலவே இழப்புகளையும் பழங்கதைகளையும் கிண்டிக்கொண்டிருந்துவிட்டு, உறங்கவென எழுந்திருந்தபோது நெடுமூச்செறிந்தபடி அவன் சொன்னான்.

“எங்கடை தமிழ் ரீச்சர் சொன்னதுபோல அப்பவே மாடு மேய்க்கப் போயிருக்கலாம்”

அந்த வார்த்தைகளிலிருந்த ஆற்றாமையையும் துயரத்தையும் கோபத்தையும் காலகாலங்களுக்கும் மறக்கமுடியும் என்று தோன்றவில்லை.

பிற்குறிப்பு: இதை வாசித்துவிட்டு ஒருவர் சொன்னார் “கதை நல்லாயிருக்கு”என்று. - “சொந்த அனுபவம். ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.”என்றேன்.

11.22.2010

பூனையின் கனவு


எங்கிருந்து இதைத் தொடங்குவது என்று தெரியவில்லை.தொடங்கினால் வளரவும் தன்னைத்தான் முடித்துக்கொள்ளவும் அதற்குத் தெரியும்.நாற்காலியில் நம்மைக் கொண்டுவந்து இருத்துவதுதான் பாடு.பல நாட்களாக வலைப்பூவில் ஒன்றுமே எழுதவில்லை.“கீற்று.காம்“இன் யானை நீண்டநாட்களாக அமர்ந்திருக்கிறது.எழுந்திருக்க முடியாத ஆகிருதிபோலும்.கருத்தளவே ஆகும் கனம்.சம்பங்கி,உமா ஷக்தி, ஈரோடு கதிர், கே.பி.சுரேஷ்,செல்வகுமார்(மைசூர்)இன்னுஞ் சிலர் (மின்னஞ்சலில் தேடிப் படம்காட்டப் பஞ்சியாக இருக்கிறது)வலைப்பூவை ஏன் காற்றாட விட்டிருக்கிறீர்கள் என்று கடிந்தும் கனிந்தும் சொன்னார்கள்.ஒவ்வொருதடவையும் பாஞ்சாலி சபதம் நடக்கும்.பாண்டவர்கள் வென்றதுமில்லை.கூந்தலை முடிந்ததுமில்லை.

கனடாவிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டன. புதுவிளக்குமாறு அற்புதமாகக் கூட்டியது. நல்லவேளையாக இலையுதிர்காலத்தின் அழகு முற்றிலும் உதிர்ந்துவிடமுன்னதாக வந்து சேர்ந்தேன்.சிவப்பும் மஞ்சளும் பச்சையும் கபிலநிறமுமாக...இலையுதிர்காலத்தைக் காணாத கண்ணென்ன கண்?இசை செவிகளை நனைக்க நடப்பதாகச் சில நாட்கள் பேர்பண்ண முடிந்தது.நடக்கப்போகும் வழியில் வெளியில் கட்டிப்போட்டிருந்த பனிநாயின் கண்களைப் பார்த்து இரங்காமலிருக்க முடியவில்லை.ஏனைய நாய்களைவிட அதற்குக் குளிர் அதிகமாகத் தேவைப்படும்போல... என்று நினைத்தாலும் மனது சமாதானம் ஆகவில்லை.மனதிலிருந்து அந்த நாயை இறக்கிவிட முடியவில்லை.

அவ்வளவு சுத்தமான, அகலமான, அதியழகான நடைபாதையில் தனித்து நடந்துசென்றது சிலநாட்கள் விசித்திரமானதொரு உணர்வைத் தந்துகொண்டிருந்தது.ஒருவேளை மனிதசமுத்திரம் ததும்பிவழியும் சென்னைமாநகரத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியது காரணமாக இருக்கலாம்.மெல்லிய குளிர் தோலுக்கு இதம்.நடந்த வழிகளில் நின்றிருந்த பெருமரங்களிலிருந்து இலைகளும் பூக்களும் காற்றில் ஒய்யாரமாக மிதந்து இறங்கி தரையில் சென்று படியும் நளினத்திற்கு ஏதும் ஈடில்லை.

வெளியில் குளிர் அச்சுறுத்தத் தொடங்கிவிட்டது.தேன்நிலவு முடிந்து எல்லோரும் அவரவர் வேலைக்குத் திரும்பிவிட்டார்கள்.மிகப்பெரிய சீனியாஸ்(இங்கு வேறு ஏதோ பெயர்)பூக்களைத் தாங்கிக்கொண்டிருந்த செடிகள் இரண்டும் தரையோடு படுத்துவிட்டன.மலர்கள் இருந்த இடத்தில் அடையாளத்திற்குக் குச்சிகள் நீட்டிக்கொண்டிருக்கின்றன.சன்னல் சட்டகத்தினுாடாக அழகான ஓவியமெனத் தெரிந்துகொண்டிருந்த பெருமரம் தன் மஞ்சள் இலைகளை உதிர்த்துவிட்டு அதீத மௌனத்தோடு நின்றுகொண்டிருக்கிறது.நினையாப் பிரகாரம் புசுக்கென்று இலை துளிர்க்கும் காலத்திற்காக அது காத்துக்கொண்டிருக்கிறது.நீலத்தில் வெள்ளைத் தீற்றல்கள் கொண்டிருந்த வானம் துயரமுகம் கொண்டதாகிவிட்டது.

பத்துமணிக்கு எழுந்திருந்தால் கூடத்தில் வெயில் பார்க்கலாம்।யன்னலினுாடாக ஒளிக்கற்றை இறங்கி சோபாவில் படுத்திருக்கும்.துாசிகள் சுழன்றாடும் வெயில்குழல்.அரிதிலும் அரிதான வெயிலைக் கொண்டாடும் கூதிர்காலத்திற்குள் ஏறத்தாழ நுழைந்தாயிற்று.

நாலரை மணிக்கெல்லாம் இருட்டிவிடுகிறது. இரவெல்லாம் இணையத்தினுள் தலையைக் கொடுத்துக்கொண்டிருந்துவிட்டு பின்னிரவில் உறங்கச் செல்பவர்களுக்கு காலை இல்லை. சிலருக்கோவெனில் மதியமும் இல்லை.இரவில் உறங்கப்போய் இரவிலேயே விழித்தெழுவதான காலமயக்கம்.பெரும்பாலான நாட்கள் ஞாபகத்தை உரசிப் பார்த்து இரவா பகலா என்று நிச்சயப்படுத்திக்கொண்டு எழுந்திருக்கவேண்டியதாயிருக்கிறது.

நிசப்தம்...அப்படியொரு நிசப்தம்!பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் பேசும் ஒலிகூடக் கேட்பதில்லை.”த்தா... செவுட்டில ஒண்ணு வுட்டா மூஞ்சி பெயர்ந்து போகும்”-”வாயை மூடிக்கொண்டிரு... பல்லுக் கில்லெல்லாம் உடைச்சுப் போடுவன்”ம்கூம்...யாரும் சண்டை பிடிப்பதாகத் தெரியவில்லை.தொலைக்காட்சியில் கொலை, தற்கொலை செய்திகளை நாளாந்தம் பார்க்கமுடிகிறது.இரகசியமாக சண்டைபோட்டு, இரகசியமாக அழுது, இரகசியமாகத் தற்கொலை செய்துகொள்வார்களாயிருக்கும்.எல்லோரும் கார்களில் விசுக்கென்று செல்கிறார்கள்.வீதிகளில் ஒரு குருவியையும் காணேன்.செவிகளுக்கு இதமான ஒரு விடயம்... அநாவசியமாக யாரும் “ஹாரன்“எனப்படும் காதுகிழிப்பானை உபயோகிப்பதில்லை.அப்படியொரு கருவி பொருத்தப்பட்டிருப்பதை மறந்துவிட்டாற்போலிருக்கிறார்கள்.

இப்படியொரு வீதி ஒழுங்குள்ள நாட்டில் வாகனச் சாரதிப் பத்திரம் எடுக்கப் பயந்து இருக்கும் என்போன்ற பயந்தாங்கொள்ளிகளுக்கு வெளி மறுக்கப்பட்டிருக்கிறது. கணவரைச் சார்ந்திருக்கும் மனைவியாய் காத்திருப்பு நீள்கிறது. பேருந்தில் திரியலாமென்றாலோ தோல் வலிக்கக் கிள்ளும் குளிர் அச்சுறுத்துகிறது.

சத்தம் இல்லாத தனிமை“வேண்டாம் அஜித்.ஹோ ஹோவென இரைந்தபடி விரையும் சனக்கூட்டத்துள் ஒரு கறுப்பு மனுஷியாய் கலந்துவிட விழைகிறது மனம்.சாக்குப்பைக்குள் கட்டி பனங்கூடலுக்குள் விட்டாலும் பிய்த்துக்கொண்டு ஊரைப் பார்க்க ஓடிவந்துவிடும் பூனைக்குட்டிகள் உதாரணம் பழசுதான்.எனினும், மீண்டும் மீண்டும் காலுரசும் வாஞ்சை அதைப் புதுப்பிக்கிறது.

பூனையொன்று தன் வட்டக் கண்களை உயர்த்தி வானத்தைப் பார்க்கிறது.பஞ்சுப்பொதி மேகங்களை என்னமாய் வகிர்ந்து பறக்கிறது விமானம்.மேகங்களுள் மிதந்து மழைக்காலம் மலர்த்தியிருக்கும் மரக்கூட்டம் நடுவினில் சென்று இறங்கும் கனவோடு அது இன்றைக்கும் உறங்கச் செல்கிறது.

9.20.2010

யானையைக் காட்டி பிச்சை எடுக்கிறேன்....

5 ஆண்டுகளுக்கு முன்பு செல்லப்பிராணியை வளர்க்கலாம் என்று ஒரு ஆட்டுக்குட்டியை வாங்கி, வளர்க்க ஆரம்பித்தேன். பார்ப்பதற்கு அழகான இளம் ஆட்டுக்குட்டியாக அது இருந்தது. அலுவலக வேலைகள் முடிந்ததும் அந்தக் குட்டியோடுதான் எனது நேரமெல்லாம். நண்பர்கள் குட்டியின் அழகில் மயங்கி, அதற்குத் தேவைப்படும் உணவை வழங்கினார்கள்.

அந்த ஆட்டுக்குட்டியை வளர்ப்பதில் நான் பெரும் மகிழ்வடைந்ததற்குக் காரணம், அது அந்தத் தெருவில் இருந்த குழந்தைகளுக்கு - பொம்மை வாங்கித் தர முடியாத பெற்றோர்களுக்கு - தேவைப்படுகிற விளையாட்டுப் பொருளாக மாறியதுதான். அவர்கள் தங்களது குழந்தைகளை இந்த ஆட்டுக்குட்டியின் முதுகில் உப்புமூட்டையாக ஏற்றி விளையாட்டு காட்டினார்கள். ஆட்டுக்குட்டி உள்ளம் நிறைந்த‌ மகிழ்ச்சியோடு அந்தக் குழந்தைகளுடன் விளையாடியது. நாளுக்கு நாள் ஆட்டுக்குட்டியைத் தேடி வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமானது. அதற்கு உணவளித்த இன்னும் சில நண்பர்கள் இருந்தபோதிலும், எனக்கான அடையாளமாக அந்த ஆட்டுக்குட்டி மாறியது. அதன் பெயரிலேயே என்னை அழைத்தார்கள்.

எனக்குத் திருமணம் ஆகி, எனக்கு என்று ஒரு குழந்தை பிறந்த பின்பும், நான் ஆட்டுக்குட்டியையே கொஞ்சிக் கொண்டு, அதனுடனேயே நேரத்தை செலவழித்துக் கொண்டிருந்தேன்.

நாட்கள் போனது தெரியவில்லை. கூடவே இருந்ததால் எனக்குத்தான் அதன் வளர்ச்சி தெரியவில்லை; குட்டியாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். திடீரென ஒருநாள் எனது வீட்டின் உரிமையாளர், 'வீட்டில் யானையை எல்லாம் வளர்க்க அனுமதிக்க மாட்டேன், வேறு வீடு பாருங்கள்' என்று சொல்லிவிட்டார். அப்போதுதான் தெரிந்தது, நான் வளர்த்தது ஆட்டுக்குட்டி அல்ல; யானைக்குட்டி என்று.

இப்போது யானையோடு தெருவில் நிற்கிறேன். அதற்கு ஒரு பெரிய வீடு வேண்டும். கம்பீரமாக அந்தத் தெருவில் விளையாடிய யானை, இப்போது படுத்துக் கிடக்கிறது. வேறு யாரிடமாவது விட்டுவிடலாம் என்றால், அவர்கள் நம்மைப் போல் பார்த்துக் கொள்வார்களா என்று அச்சம் வருகிறது. என்ன செய்வது வளர்த்த பாசம்!! இப்போது யானை செய்த உதவிகளைச் சொல்லி, யானையைக் காட்டி நான் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். கீற்று என்று சொன்னால், உங்களுக்குக்கூட அந்த யானையை நினைவுக்கு வரக்கூடும். கொஞ்சம் உதவுங்கள், உங்கள் குழந்தைகளுக்கும் தேவையான பொருளாக அந்த யானை இருக்கும்.

உதவ விரும்புவர்களுக்கு...

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை
IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், paypal-ஐ (www.keetru.com/index.php) பயன்படுத்தவும்.

Cheque/DD அனுப்ப வேண்டிய முகவரி:
Ramesh,
22/34, Saraswathi Nagar 5th street,
Adambakkam
Chennai - 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 9940097994


பிற்குறிப்பு: 'கீற்று' நண்பர்கள் மினர்வா, இரமேஷின் இந்த யானை அழகியல் பிடித்திருக்கிறது।மிகவும் தரமான கட்டுரைகளையும் விவாதங்களையும் சஞ்சிகைகளையும் உள்ளடக்கி வெளிவரும் கீற்று இணையத்தளம் மீண்டும் இயங்க நண்பர்கள் உதவிசெய்வீர்கள் என்று நம்புகிறேன்.

9.07.2010

பூனைகளின் வீடு



இந்த
வீடு முழுவதும் மனிதர்களைப் பற்றிய புத்தகங்களே நிறைந்திருக்கின்றன. சகமனிதர்கள் மீதான சுவாரஸ்யம் குறைந்துசெல்வதற்கு அவர்கள் மட்டுமே பொறுப்பாக முடியாது. தவிர, ‘மனிதம்என்ற சொல் அருங்காட்சியகப் பொருளாகத் தூசிபடிந்து போனதன் பிற்பாடுவார்த்தை விளையாட்டுக்களால் அறிவுஜீவிப் பாவனைகள் நிகழ்த்துவதை நாம் விட்டுவிடலாம். பூனைகளைப் பற்றிக் கதைத்தால் உங்களுக்குப் பிடிக்காதா? எனக்குப் பூனைகளைப் பிடிக்கும். அது புலியை ஞாபகப்படுத்துவதால் எனக்கு அதைப் பிடிக்கிறதென்று உங்களில் மெத்தப் படித்த யாராவது இவ்வளவிற்குள் கண்டுபிடித்திருப்பீர்கள். நரிகளையும் சிங்கங்களையும் பாம்புகளையும்கூட நேசிக்கிறவர்கள் இருக்கும்போது, எனக்குப் புலிகளையும் பூனைகளையும் பிடிப்பதொன்றும் பிறழ்நடத்தையாக இருக்க வாய்ப்பில்லை. இதுவொரு உளவியல் சிக்கல் என்பவர்களைப் பார்த்துமியாவ்என்று கத்தி அதை நிரூபிப்பதில் எனக்கொன்றும் வெட்கமில்லை.

எனக்கு நாய் பூனைகளைக் கண்டால் அருவருப்புஎன்று நிறையப்பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அப்படிச் சொல்லும்போது அவர்கள் முகத்தில் பளிச்சிடும்மனிதத்தனம்ரசிக்கும்படியாக இருப்பதில்லை. சில ஆண்டுகளுக்கு முன் எனது வலைப்பூவில் இருந்த சாம்பல் நிறப் பூனைக்குட்டி வாசிப்பைத் தடைப்படுத்துவதாகவும் அதைத் தூக்கிவிடும்படியும் தொடர்ச்சியாகப் பலர் கேட்டுக்கொண்டுக்கொண்டதன் விளைவாக மிகுந்த வருத்தத்தோடு அதைத் தூக்கினேன். ஆம்நீங்கள் நினைப்பது சரிதான். மூக்கைச் சிந்தி ஒரு பதிவு எழுதி பிராயச்சித்தம் பண்ணிவிட்டே அதைத் தூக்கினேன். உண்மையில் ஒருநாள்கூட அதன் பஞ்சு உடலை நான் தொட்டுப் பார்த்ததில்லை. என்னைப் பார்த்து அதுமியாவ்என்றதில்லை. அதுவொரு குட்டிப்பூனையாக இருந்ததும், வலைப்பூவில் அமர்ந்து ஒயிலாகத் தன்னுடலை வளைத்து கண்களைத் தாழ்த்தி என் எழுத்துக்களைப் பார்த்துக்கொண்டிருந்ததும் மட்டுமே அதன்மீது வாஞ்சை பெருக போதுமான காரணங்களாக இருந்தன.

வெளிநாட்டில் இருந்தபோது அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும்படியான பூனைப் பிரியையாக இருக்கவில்லை. நாட்டுக்குத் திரும்பி வாழத் தொடங்கிய பிற்பாடு (பயந்தபடிதான்) ஒருநாள் அப்பா ஒரு பூனைக்குட்டியோடு வீட்டுக்கு வந்தார். அது அடர்மஞ்சள்நிறப் பஞ்சுத்துண்டைப் போல அவரது கையில் இருந்தது. “இதை ஏன் கொண்டு வந்தீர்கள்பெரிய பொறுப்பல்லவா?”என்று நான் கேட்டேன். அவர் என்னைப் பார்த்து ஞானியின் சிரிப்பொன்றை உதிர்த்தார். கால் போத்தல் மதுவில் அன்பும் ஞானமும் எப்படிப் பெருக்கெடுக்கும் என்பதை நாமெல்லொரும் அறிவோம். பிறகு சொன்னார்: “இது வீதியைக் கடக்க முடியாமல் ஒரு ஓரத்தில் நின்று திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தது”. ஆம்அவ்வளவு சிறிய பூனைக்குட்டிக்கு தெருவைக் கடப்பதென்பது(சிறுநகரமாயினும்) எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்திருக்கும்!

ஐந்தாம் இலக்கச் செருப்புக்குள் தனது உடல்முழுவதையும் அடக்கிக்கொண்டு படுத்துவிடக் கூடிய அளவு இத்தினியூண்டு பூனைக்குட்டி அது. அதற்கு நாங்கள்பூக்குட்டிஎன்று பெயர்வைத்தோம். அந்நாட்களும் இந்நாட்களும் எந்நாட்களும் என் போன்றவர்களுக்குத் தனிமை மிகுந்தவை என்பதை நீங்கள் அறிவீர்கள். அது எந்தளவு விபரீதத்தைக் கொணர்ந்ததென்றால், பூக்குட்டியை நான் எனது சொந்தக் குழந்தையாகக் கருதவாரம்பித்தேன். அதை ஒரு நிமிடம் காணவில்லையென்றாலும் வீட்டிலுள்ளவர்கள் பதட்டப்படும்படியாகக் கூச்சலிடத் தொடங்கினேன். அது பல தடவைகள் காணாமல் போனது. மரங்களின் உச்சிகளிலிருந்தும் வீட்டுக் கூரையிலிருந்தும் கற்கள், புதர்களுக்குள்ளிருந்தும் கண்டுபிடிக்கப்பட்டது. நான் தன்னை எவ்வளவு தூரம் நேசிக்கிறேன் என்பதை அது எப்படியோ தெரிந்துவைத்திருந்தது. பசிக்காதபோதிலும் அதற்கு நாங்கள் அடிக்கடி உணவு வைத்தோம். அபூர்வமாக பசி எழும் தருணங்களில் எங்கள் கால்களைக் கவ்விவிட்டு சமையலறைக்கு வழிகாட்டிச் செல்ல அது பழகியிருந்தது. பூக்குட்டி கொஞ்ச நாட்களில் கதைக்க ஆரம்பிக்கலாமென்று நாங்கள் எங்களுக்குள் கதைத்துக்கொண்டோம். ‘பேசும் பூனைக் கனவு நாளாக நாளாக வளர்ந்துகொண்டேயிருந்தது. மாலைவேளைகளில் குடும்பமாகக் குந்தியிருந்துவிண்ணாணம்கதைக்கும்போது பூக்குட்டி மிகச் சாவதானமாக என் மடியில் ஏறி தன் பஞ்சுடலைச் சுருட்டிக்கொண்டு படுத்து உறங்கிவிடும்.

ஒரு சிறிய உடலுக்குள் எவ்வளவு அபரிமிதமான சக்தி அடங்கியிருக்கிறது என்பதை சில மணி நேரங்கள் பூக்குட்டியைப் பார்த்துக்கொண்டிருந்தால் உணர்ந்துகொள்ள முடியும். பெரிய வீட்டின் மொட்டைமாடியிலிருந்து சின்னவீட்டுக் கூரைக்கு ஒரே தாவாகத் தாவும். இரண்டுக்கும் இடையிலான இடைவெளியில் அது பறந்துபோவது காட்சிப்பிழையாக கண்களில் தோன்றும். வாழை மரத்தில் சரசரவென்று ஏறி ஒற்றைக் கையால் இல்லாத பட்டாம்பூச்சியைப் பற்ற எத்தனித்துவிட்டு ஒரு தேர்ந்த வழுக்குமர வீரனைப் போல கீழிறங்கி வரும். ஒரு சின்னக் காகிதத் துண்டை தன் பஞ்சுக்கால்களால் பற்றுவதும் விடுவதுமாகக் குரங்குச்சேட்டையாடும். ‘சிவனேஎன்று படுத்திருக்கிற நாய்களின் கன்னத்தில் போகிற போக்கில் செல்லமாக ஒரு அடி அடித்துவிட்டுப் போகும். நாய்களும் நுண்ணறிவில் குறைந்தவையன்று. பூக்குட்டியைக் கடித்தால் அடிவிழும் என்று நாய்களுக்குத் தெரியும். அதனால் அவைதொலைந்துபோ குட்டிச்சாத்தானேஎன்ற பார்வையை எறிவதோடு சரி.

பூக்குட்டி மூன்று குட்டிகள் போட்டது. அதில், மை தடவியதே போன்ற கண்களால் எதிர்ப்படும் எல்லாவற்றையும் பிரமித்துப் பார்க்கும்புதினம்மட்டுமே எஞ்சியது. புதினத்திற்கு தாயைவிடவும் செல்லம் அதிகம். புதினம் வளர்ந்து ஆளாகியதும் பூக்குட்டி பக்கத்துவீட்டுக்குப் போய் அங்கேயே தங்கிவிட்டது. நாங்கள் எத்தனையோ தடவை தூக்கிக்கொண்டு வந்து எங்கள் வீட்டில் விட்டும் அது தரிக்கவில்லை. சாப்பாடு கொண்டுபோய் வைத்தால் சாப்பிடும். சோர்ந்துபோய்ப் படுத்திருக்கும். மனிதர்களின் மனங்களையே அறியமுடியவில்லைபூனைகளின் உளவியலை யாரிடம் கேட்க? அது இப்போதும் பக்கத்து வீட்டில்தான் வசிக்கிறது. சாப்பாடு கொண்டுபோய் வைத்துவிட்டு அருகில் நின்று பார்க்கும்போதுஏன் போனாய் என் பட்டுக்குஞ்சே?’என்று துக்கமாக இருக்கும்.

பூனைகள் நாய்களைப் போல விசுவாசமற்றவை என்றொரு கதை உலவுகிறது. பூனைகள் நாய்களைப் போல குழைவதில்லை. அவற்றின் கம்பீரம் கண்கொள்ளாதது. ஒரு தடவை நீண்ட நாட்கள் கழித்து வீட்டுக்குப் போயிருந்தேன். புதினம் நோக்காடு எடுத்து வலியில் கதறிக் கதறிக் கிடந்தது. என் பாதங்களில் முகம் வைத்து அண்ணாந்து பார்த்து முனகியது. பிறகு நாங்கள் பதறிப் பார்த்திருக்க எனது காலடியில் ஒரு குட்டியை ஈன்றது. அதன் கண்களில் அப்போது சுரந்த அன்பு, அந்தக் கணத்தின் ஆசுவாசம் எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. “பூனை குட்டி போடுவதைப் பார்ப்பது அதிர்ஷ்டம்என்றார் அம்மா. அதிர்ஷ்டம் புதினத்தின் குதம் வழியாகக்கூட வீட்டுக்குள் நுழையக்கூடுமென்பதை அன்று அறிந்துகொண்டேன். புதினத்தின் வேலை குட்டி ஈனுவது. அம்மாவின் வேலை அவற்றை யாரிடமாவது பிடித்துக் கொடுத்துவிடுவது. வருடத்தில் ஒரு முறையாவது வீட்டுக்குப் போக வாய்க்கும். புதினம் எனது அறை வாசலில் பழியாகக் கிடக்கும். கதவு திறந்த சத்தம் கேட்டவுடன் வந்து கால்களைச் சுற்றிச் சுற்றியுரசும். செல்லக் கடி கடிக்கும். “நீ இருந்திட்டுத்தான் வீட்டை வாறாய். மற்ற நாளெல்லாம் நான்தான் சாப்பாடு வைக்கிறன். ஆனாலும் இது உன்னிட்டைத்தான் ஒட்டுகுது. இதுக்கு நன்றியில்லை.”என்பார் அம்மா.

நான்கு மாதங்களுக்கு முன் புதினத்தைக் காணவில்லை என்று தொலைபேசியில் சொன்னார்கள். ஊரெல்லாம் தேடியும் கிடைக்கவில்லை என்றார்கள். நேரில் போனபோது உண்மை வெளிவந்தது. புதினம் வீதியைக் கடக்கும்போது பேருந்தில் அடிபட்டு இறந்துபோயிற்று. அதன் மைதடவினாற்போன்ற கண்கள் வீட்டின் எல்லாப் பக்கங்களிலிருந்தும் என்னைப் பார்த்துக்கொண்டிருப்பதான பிரமையில் சில நாட்கள் ஆழ்ந்திருந்தேன். “புதினத்துக்குச் சாப்பாடு வைச்சாச்சா?”என்ற கேள்வி உதடுவரை வந்து வந்து உள்ளுக்குள் கரைந்த நாட்கள் அநேகம்.

சந்திராவின் சிறுகதைத் தொகுப்பின் பெயராயிற்று எங்கள் வீடு. ‘பூனைகள் இல்லாத வீடு’. “இனிமேல் பூனை, நாய் என்று யாரும் கொண்டுவரக்கூடாதுஎன்று வீட்டில் எல்லோரிடமும் சொல்லிவைத்தேன். துயரம் ஊறிய அந்த வேண்டுகோளை யாவரும் புரிந்துகொண்டனர் வாடகைக்கு இருப்பவர்களைத் தவிர்த்து; எங்கள் வளவுக்குள் இருக்கும் சின்னவீட்டில் வாடகைக்கு இருக்கும் ஆசிரியரின் மகன் (வயது 12) டக்ளஸ் ஒரு பூனைக்குட்டியைக் கொண்டுவந்திருக்கிறான். அது இருபத்துநான்கு மணிநேரத்தில் ஏறத்தாழ இருபது மணி நேரங்களை எங்கள் வீட்டில் கழிக்கிறது.

அதன் பெயர் டிலானியாம் - டக்ளஸ் சொல்கிறான். அவன் ஒற்றைப்பிள்ளை. அதனால் அதை அவன் தங்கை என நினைத்திருக்கலாம். நாங்கள் அதைபூக்குட்டிஎன்று அழைக்கத் தொடங்கியிருக்கிறோம். இரண்டாம் சார்ள்ஸ் மாதிரி இது இரண்டாம் பூக்குட்டி. அது நிமிர்ந்து படுத்து தன் வெள்ளுடலைக் காட்டியபடி கைகால்களை எறிந்து சோபாவில் சயனிக்கிறது. சுருட்டிய காகிதத் துண்டைத் தன் கைகளால் பற்றியபடி இரண்டு கால்களில் எழுந்து நிற்கிறது. மிக்கி(நாய்)யின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடுகிறது. மிக்கியின் காதுகளை செல்லமாகக் கடித்துவிட்டு தன் சொரசொரவென்றிருக்கும் நாக்கால் நக்கிவிடுகிறது. திடீரென எங்கிருந்தோ தோன்றி எங்கள் கால்களுக்குள் இடறுப்பட்டுக்கொண்டு ஓடோடென்று ஓடிப் போய் மாடிப்படிக்கட்டுக்களில் நின்று வாலை ஆட்டிச் சிரிக்கிறது. பந்தைத் தனது வயிற்றுக்குள் இடுக்கிப்பிடித்துக்கொண்டு பின்னங்கால்களால் உதைக்கிறது. சாமியறைக்குள் அமர்ந்து கும்பிட்டுக்கொண்டிருக்கும் அம்மாவின் மடியைத் தாண்டி அந்தப் பக்கம் குதித்துத் திடுக்கிட வைக்கிறது.

எங்கள் வீடு பூனைகளின் வீடு. பூனையின் மென்பாதங்கள் அங்கே மறைந்து மறைந்து தோன்றுகின்றன. புலிகளுக்கு இந்த மாயவிதி பொருந்தாது போலும்.

8.28.2010

ஒரு பயணம் ஒரு புத்தகம்




அன்புள்ள மாதங்கி,

கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனால் மட்டுமென்றில்லை; ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன். எதிரில் இருக்கும் ஆளோடு கதைப்பதைக் காட்டிலும் கடிதத்தில் நெருக்கமாக உரையாட முடிகிறது. ஆனால், இப்போதெல்லாம் கைப்பட யார்தான் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? கணினியில் தட்டச்சி அனுப்புவதை மின்னஞ்சல் என்று அழகாகச் சொல்லிக்கொண்டாலும் இயந்திரவரிகள் என்பதே அதற்குப் பொருந்தும். ஒரு எழுத்து எழுதுவதாயிருந்தாலும் சுழியும் வளைவும் விசிறியும் நினைத்துத் தவிர்த்துவிடுகிறேன்.

எந்த வடிவத்தில் எழுத நினைத்தாலும், அதற்குள் இழந்த நிலம் எங்ஙனமோ புகுந்துவிடுகிறது. கண்ணீரும் இரத்தமும் சொரியவாரம்பித்துவிடுகிறது. அலைவுறும் சனங்களின் முகங்கள் எழுத்தாக உருத்திரளத் தொடங்குகின்றன. ‘விடுதலைஎன்ற சொல் தண்ணீரில் எழுத்தாகிவிட்டது. இழிவுசெய்யப்பட்டதன் கழிவிரக்கம் எழுதித் தீராதது. எல்லோரையும் சாகக்கொடுத்துவிட்டு தொலைவில் மூசிச் சுழன்றெரியும் தீயின் பெருநாக்கைப் பார்த்தபடி மயான மண்டபத்தில் அமர்ந்திருப்பதான மனோநிலை என்றும் இப்போதிருப்பதைச் சொல்லலாம்.

எல்லாம் ஓய்ந்துபோனதாக உணர்கிற இந்த இருண்ட காலத்தில் இதே தொனியில் தொடர்ந்து எழுதும் எழுத்தில் சலிப்பின் நிழல் படர்வதை அவதானிக்க முடிகிறது. ‘ஒப்புக்கு மாரடிக்கிறகுற்றவுணர்வும் நாளாக நாளாக மிகுந்துவருகிறது. மேலும், ஈழச்சிக்கலில் கையாலாகாமல் எழுதிக் கிழித்ததைத் தவிர என்ன கண்டோம்; ‘புலிவால்என்று பெயர்பெற்றதன்றி. புலி அழிக்கப்பட்டதெனில், வால் மட்டும் காற்றில் தனியாக இழைந்துகொண்டிருக்கலாகுமோ?

அபூர்வமாக எப்போதாவதுதான் மனம் பூக்கிறது. அண்மையில் பூத்தது இரயில் பயணத்தின்போது. (இரயிலுக்கு புகையிரதம் ஈடாகாது இல்லையா?) முதல்நாளிரவு பெய்த மழையில் பச்சையொளி விசிறி அசைந்துகொண்டிருந்த வயல்வெளிகளையும் மழை மிஞ்சிய பெருமரங்களையும் மேகங்கள் ஒய்யாரமாகத் துஞ்சிக் கிடந்த மலைகளையும் கண்பருகி கண்சொருகும் பயணம் வாய்த்தது. தனதழகை உணராத குழந்தைபோல இயற்கை செழித்துக் கிடந்தது. அதன்முன் மனிதர் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. அப்படியொரு பச்சை. அப்படியொரு சோபிதம். அப்படியொரு ஒயில். அப்படியொரு வாளிப்பு. புகாருள் வரைந்து வைத்திருந்தாற்போலிருந்த புகையிரத நிலையங்களில் மழை பொறுக்கிக்கொண்டிருந்த புறாக்களைப் பார்த்தபோது அனாரின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது. தண்டவாள இரும்பில் தங்கத்துளியாகத் தொங்கிக்கொண்டிருந்தது மீத மழை. மழை கழுவிவிட்டிருந்த கருநீள வீதியில் அத்தனை அதிகாலையில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவன், இரயிலின் கண்ணாடிச் சட்டகத்துள் கச்சிதமான சித்திரமாக அடங்கினான். இந்த பத்தியில் மட்டும் இதுவரையில் ஐந்து இடங்களில்மழைதூறியிருக்கிறது. எல்லோருக்கும் மழையைப் பிடிக்கிறது. ஆனால், சில மனிதர்களைப்போல தனக்கு எந்த ஊரைப் பிடிக்கிறதோ அங்குதான் மழையின் கால்களும் சென்று இறங்குகின்றன போலும். ‘வடக்கில் வசந்தம்கொஞ்சம் மாற்றுக் குறைந்தாற்போலவே இருக்கிறது. சிங்களவர்கள் அதிகமும் வாழும் தென்பகுதி ஆறுகளின் கருணையால் அப்படிப் பொலிகிறது.

நினைத்ததற்கும் எழுதுவதற்கும் இடையிலிருக்கும் கடக்கமுடியாத இடைவெளியைப் போலவே வாசிக்க நினைத்ததற்கும் வாசித்ததற்கும் இடையில்கூட இடைவெளி அதிகந்தான். ‘வண்ணதாசன் கடிதங்கள்உம், ‘கிருஷ்ணன் வைத்த வீடும் உள்ளடங்கலாக இம்முறை அறுபத்தொரு புத்தகங்களை எடுத்துவந்திருந்தேன். ஒவ்வொரு பயணத்தையும் ஒவ்வொரு புத்தகங்களுடனேயே நினைத்துப் பார்க்க முடிகிறது. புத்தகவாசனை இல்லாத பயணங்கள் நினைவில் நிற்பதுமில்லை. மேற்கண்ட இரயில் பயணத்தை என்றைக்கும் ஞாபகத்தில் இருத்தியதுவண்ணதாசன் கடிதங்கள்’. வண்ணதாசன்(கல்யாண்ஜி), நண்பர்களுக்கு (33 பேருக்கு) எழுதிய கடிதங்களின் தொகுப்பே அந்நூல். நாட்குறிப்புகளுக்கும் கடிதங்களுக்கும் எப்போதுமே தனித்த வசீகரம் உண்டு. அவை அந்தக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்வு வரைந்த சித்திரங்கள் என்பதை நீயறிவாய். ‘வண்ணதாசன் கடிதங்கள்இல் ஒரு மெல்லிய மனதின் நுண்ணிய உணர்வுகளைப் படிக்க முடிந்தது. தாமரபரணியின் ஈரம் ஒவ்வொரு சொல்லிலும் ஊறியிருந்தது. எழுத்துக்கும் எழுதுபவருக்கும் இடையிலான ஊடாட்டங்கள், மங்கலம், மரணம், இலக்கியக் கூட்டங்கள், யார் யாருக்கு சிநேகிதம் இன்னபிறமுன்சுவட்டுக் குறிப்புகளை இவ்வாறான எழுத்துக்கள் வழியாகவே அறிந்துகொள்ள முடிகிறது. மதுவும் இலக்கியமும்பெருக்கெடுக்கும்விடுதியறை இரவுகள் நம்மைப் போன்ற பெண்களுக்கு விலக்கப்பட்ட கனிகள். ஆகையினால், பழங்கதையெல்லாம் புத்தகங்களைப் படித்தே அறியவேண்டியதாயிருக்கிறது.

மாதங்கி, ஆன்மாவின் கூப்பிடலுக்கும் அடையாள விழைதலுக்கும் இடையில் நடக்கும் இழுபறியில் முறுகித் திரிபிரிந்துகொண்டிருக்கும் மனதுக்கு அந்த எழுத்து எவ்வளவு இதந்தந்ததென்கிறாய்! வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் நமது மனோநிலைக்கியைபுற நம்மை வந்தடையும் உடனிகழ்வு உனக்கு என்றேனும் நேர்ந்ததுண்டா?

குறுங்குழுவாதத்திற்கு இலக்கிய உலகமும் விதிவிலக்கன்று. அதன் எழுதா விதிகள் புதிதாக எழுத வருபவர்களைத் திகைப்பூட்டுகின்றன. ‘நான் நினைத்தால் உன்னைத் தூக்கி நிறுத்தமுடியும்என்று மார்தட்டுகிறவர்களுக்கும்நினைத்தால் என்னால்
உன்னைச் சாய்த்துவிட முடியும்என்று கண்ணுக்குள் சுட்டுவிரல் நீட்டி ஆட்டுபவர்களுக்கும் குறைச்சலில்லை. நதி என்று கால்கழுவ கழிவு காலில் தட்டுப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. யாரையும் சாராதிருந்து எழுதுவதனால் உண்டாகும் தனிமைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லையானால், பிறகென்னதேக்கந்தான்! இந்நிலையில், வண்ணதாசனின் கடிதங்களில் வாசிக்க நேர்ந்த வரிகள் ஆறுதலளிப்பனவாக அமைந்திருந்தன. வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

மலைச்சுனை போலவும் வனச் சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்துவிடுமாகில் எனக்கும்கூட அது உவப்பானதுதான்

ரவி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்திலும் அத்தொனியே.

இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும், இந்த மண் விளக்குகள் போல நானும் இருந்துவிடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும்.

பிறகொரு கடிதத்தில் ரவிக்கு இப்படி எழுதியிருக்கிறார்.

மேடையில் உன்னதக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டு இருக்கையில், நான்ஆம்ப்ளிபயர்மேற்பார்க்கிற இரண்டு சிறுவர்களில் ஒருவனாக இருந்துவிடச் சம்மதம். மினுமினுக்கிற நட்சத்திரங்களின் கீற்று முனைகள் அழகுதான். நான் எருக்கலஞ்செடியோரம் வீசப்பட்டிருக்கிற பிளிஸ்டர் தகடாக, மாத்திரைக் காகிதமாகக் கிடந்தால் போதும்.”

என்னளவில் இது போதும்என எத்தனை பேரால் இருந்துவிட முடிகிறது? ஓட்டப்பந்தயத்தில் உன்னதங்கள் பின்தங்கிவிடக்கூடும். ஆயின், அது பின்னடைவா எனில் இல்லைத்தானே? பேய்க்கூச்சல்களைச் சிம்பொனியென்று கொண்டாடும் பொய்மையுலகத்திலிருந்து நாம் விலகியிருப்பதொன்றே உய்வதற்கு ஒரே வழி என்று நான் நினைத்துக்கொண்டேன்.

வர வர அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று தோன்றவாரம்பித்துவிட்டது.

என் ஒரே ஆறுதல், உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடனும் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன்.”

எனக்கு சொல்லத் தெரியவில்லை மாதங்கி. தரவரிசைகள், பட்டியல்கள் ஆக்கம் சார்ந்து இல்லாமல் ஆட்கள் சார்ந்ததாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், வண்ணதாசனின் மேற்கண்ட வரிகளை நான் கடன்வாங்கிக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

நிறைய வாசிக்கவும் நிறைவாய் எழுதவும் எப்போதும்போல ஆசை. நம்மால் விசிறியடிக்கப்படும் ஒரு குவளைத் தண்ணீரில் மூழ்கிப்போவோம் என்பதறியாமல் சின்னஞ்சிறிய தேங்காய்த் துண்டைப் பெரும்பிரயத்தனத்தோடு தூக்கிப் போய்க்கொண்டிருக்கும் எறும்புகளைப் போலத்தானே நாமும்? எங்கே எப்போது இந்த இருப்பும் சிதறும் என்பதறியா அநித்திய வாழ்வு. எனது சிக்கல்கள் தீரும் நாள் தொடுவானம் போல தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம், ‘துயரமே எழுத்தின் ஊற்றுக்கண்என்று யாரோ(தாஸ்தயேவ்ஸ்கி?) சொன்ன நினைவும் வருகிறது.

எப்படி இருக்கிறாய் மாதங்கி?’ என்று உன்னிடம் சம்பிரதாயத்திற்குக் கேட்டு வைக்கிறேன். மாதாமாதம் அம்ருதா பத்திக்காக நினைவுறுத்தும் தளவாய் சுந்தரத்திடம்இனி கடிதமே எழுதித் தருகிறேன்என்று சொல்லிவிடட்டுமா? கட்டுரை வடிவம் திடீரென்று பிடிக்காமற் போய்விட்டதற்கு கூடுதல் காரணம் என்னவென்கிறாய்…‘வண்ணதாசன் கடிதங்கள்வாசித்த பாதிப்பன்றி வேறென்ன?


பிரியங்களுடன்
தமிழ்நதி

நன்றி: அம்ருதா

அன்பு நண்பர்களுக்கு,

நீண்ட இடைவெளியின் பின் இணையத்திற்குத் திரும்பியிருக்கிறேன். இனித் தொடர்ந்து எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன:)