1.21.2008

கவிதை நூலுக்கான கவிஞர் கருணாகரனின் விமர்சனம்


எனது பெருமதிப்பிற்குரிய கவிஞர் கருணாகரன் அவர்களால் எனது கவிதைத் தொகுப்பிற்கு எழுதப்பட்ட விமர்சனம் 'திண்ணை' இணையத்தளத்தில் கடந்த வாரம் வெளியாயிற்று. அதை இங்கு மீள்பிரசுரம் செய்வதில் மகிழ்வடைகிறேன்.


சூரியன் தனித்தலையும் பகல்

தமிழ்நதி கவிதைகள்
பனிக்குடம் பதிப்பகம்
விலை-40 இந்திய ரூபாய்

பத்தாண்டுகளாக தமிழ்நதி எழுதி வருகின்றபோதும் இப்போதுதான் அவருடைய கவிதைகளை படிக்கக் கிடைத்திருக்கிறது. இது வருத்தந் தருகிற தாமதம்தான். அவரிடம் இதைச் சொல்ல வெட்கமாகவும் இருக்கிறது. அதேவேளையில் இந்தத்தாமதத்துக்கு எதுவும் செய்ய முடியாது என்ற நிலைக்கு அவருடைய கவிதைகளே சாட்சி.

உலகம் சுருங்கி கிராமமாகிவிட்டது. தொடர்பாடலால் அது விரைவு கொண்டு விட்டது என்றே சொல்கிறோம். சுருங்கியிருக்கும் இந்தக்கிராமத்தில் எல்லாமே எல்லோருக்கும் தெரியும். ஏனென்றால் கிராமத்திலிருக்கின்ற எல்லாவற்றையும் எல்லோருக்கும் தெரியும் நிலையுண்டு. ஆனால் இந்தக்கிராமத்தில் நாங்களிருக்கிறோமா என்று பார்க்க வேணும். அதாவது தொடர்பாடலால் சுருக்கி கிராமமாக வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் போரில் அகப்பட்டுச் சிக்கித்தவிக்கும் சமூகங்கள் நிச்சயமாக இல்லை என்றே சொல்வேன்.

இது இன்று பொதுவாக போர்ச்சூழலில் வாழும் சமூகங்களுக்கு எழுந்துள்ளதொரு முக்கிய சவால். உலகத்தை பொதுமைப்படுத்த விளையும் பண்பார்ந்த செயலில் பலவிதமான தன்மைகளுண்டு. சிலர் மதத்தை வழிமுறையாகக் கொள்கின்றனர். சிலர் பொருளாதார மாற்றத்தை வலியுறுத்திச் செயற்படுகின்றனர். வேறு சிலர் அறிவியல் வளர்ச்சி மூலமாக மாற்றத்தைக் கொண்டு வரலாம் என்று சிந்திக்கின்றனர். இன்னுஞ்சிலர் ஜனநாயக ரீதியான வளர்ச்சியும் பண்பும் பெருகும்போது மாற்றம் சாத்தியமாகும் என்று நம்புகின்றனர்.

ஆனால், இந்த எல்லா வழிகளுக்குள்ளும் இருக்கும் அதிகாரத்துவமும் குருட்டுத்தனங்களும் இடைவெளியின்மைகளும் எப்போதும் எதிர் நிலைகளை தோற்றுவித்துக் கொண்டேயிருக்கின்றன. இந்த எதிர்நிலைகள் நம்பிக்கைக்கு எதிரான கோட்டை அழுத்தமாக வரைகின்றன. உண்மையில் இந்த வழிகளை இவற்றுக்கான செயல்முறைகள் அடைத்து விடுகின்றன பெரும்பாலும். இதுவொரு மாபெரும் அவலம். இதுதான் தீராத கொடுமை. இதுவே நல்ல நகைமுரணும்கூட.

எந்தவொரு கோட்பாட்டுவாதமும் அதன் செயலால்தான் ஒளி பெற முடியும். அந்தச் செயலில் நிராகரிப்புக்கும் ஏற்றுக்கொள்ளலுக்குமான சமாந்தர விசையும் பயணப்பாதையும் உண்டு. அதாவது நெகிழ்ச்சியும் வெளியும் அவற்றில் இருக்கும். இருக்க வேணும். இல்லாதபோது அது எப்படியோ அடைபட்டுப்போகிறது. அல்லது எதிர் நிலைக்குப் போய்விடுகிறது.

என்னதானிருந்தாலும் மனிதன் ஒரு இயற்கை அம்சம் என்பதை வைத்தே எதையும் அணுகுதல் வேணும். மற்ற எல்லா அம்சங்களோடும் மனிதனை வைத்து நோக்க முடியாது. குறிப்பாக பொருளியல் அம்சங்களுடனும் இயந்திரங்களோடுமான கணிதத்தில் மனிதன் எப்போதும் சிக்காத ஒரு புள்ளியே.

ஆகவே மனித விவகாரத்தில் எப்போதும் பல்வகைத்தான அம்சங்களுக்கும் இயல்புக்கும் இடம் அவசியம். ஆனால், இந்த இடத்தை பகிர்வதிலும் அளிப்பதிலும் பெறுவதிலும் ஏகப்பட்ட பிரச்சினைகளும் முரண்களும் எப்போதும் தீராப்பிணியாவே உள்ளது. இது மனிதனைச் சுற்றியுள்ள சாப இருள். இந்தச் சாப இருளின் காரணமாக தமிழ்நதியின் கவிதைகளை இவ்வளவுகாலமும் காணாதிருந்து விட்டேன். அதேபோல இந்தச் சாப இருள்தான் அவருடைய கவிதைகளை மறைத்தும் வைத்திருந்திருந்தது. அதுமட்டுமல்ல தமிழ்நதியின் கவிதைகளும் இந்த இருளின் துயரமும் இதனால் ஏற்படும் அவலமும் அநீதியும் அவற்றுக்கெதிரான நிலைப்பட்டவையும்தான். ஆக இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்திருக்கும் முடிச்சுகள், கோர்வைகளாக இருக்கின்றன. எனவே இந்தக்கவிதைகளைப் படிக்கும்போதும் இவற்றை அணுகும்போதும் இந்த அம்சங்கள் எல்லாம் சேர்ந்து கலவையாக கிளம்பி வருகின்றன.

சுருங்கியிருப்பதாகச் சொல்லப்படும் இந்த 'உலகக்கிராமத்தை' பொய்யென்கிறார் தமிழ்நதி. அப்படி தகவலாலும் தொடர்பாடலாலும் சுருங்கியிருக்குமாக இருந்தால் எப்படி எங்கள் அவலங்களை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாமற்போயிருக்கும் என்பது இந்தக்கவிதைகளின் அடியொலியாகும். தமிழ்நதி இதை எந்தத்தூக்கலான குரலோடும் பேசவும் இல்லை. திட்டவும் இல்லை. விமர்சிக்கவும் இல்லை. முறையிடவும் இல்லை. ஆனால் தன்னுடைய கேள்வியையும் நிராகரிப்பையும் சத்தமில்லாமல் அறிவார்ந்த முறையில் மெல்ல வைக்கிறார், நம் அருகில். அது எல்லோருடைய கண்ணிலும் மனதிலும் ஊசியைப்போல ஊடுருவிச் செல்லும் விதமாய்.

அதேவேளை, சக மனிதர்களால், அரசினால், இனரீதியாக இழைக்கப்படும் அநீதியை எப்படி இந்தத் தகவல் யுகமும் அறிவு உலகமும் ஜனநாயக அமைப்பும் கண்டு கொள்ளமுடியாதிருக்கிறது என்றும் எப்படி இதையெல்லாம் இவற்றால் அனுமதிக்க முடிகிறது என்றும் தன்னுடைய கவிதைகளின் வழியாக பல கேள்விகளைப் பரப்புகிறார் இந்த வெளியில்.

இதன் மூலம் தமிழ்நதி பெண் கவிதைப்பரப்பிலும் ஈழத்துக்கவிதை வெளியிலும் தமிழ்க்கவிதையின் தளத்திலும் தனித்துத் தெரியும் அடையாளங்கொண்டிருக்கிறார். குறிப்பாக சொல் முறையால்- மொழிதலால் அவர் வேறுபட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கை அமைப்பு அல்லது அதன் அனுபவங்கள் அவரிடம் மிஞ்சியிருக்கும் அல்லது திரளும் எண்ணங்கள் எல்லாம் இங்கே உரையாடலாகியிருக்கின்றன.

குறிப்பாக ஈழத்துக் கவிஞர்கள் பலரதும் அண்மைய (அண்மைய என்பது கடந்த ஐம்பது ஆண்டுகளான) கவிதைகளில் இன வன்முறையின் கொடுவலியை யாரும் உணரமுடியும். சண்முகம் சிவலிங்கம், தா. இராமலிங்கம், சிவசேகரம், முருகையன், வ.ஐ.ச. ஜெயபாலன், அ.யேசுராசா, சேரன் போன்ற தலைமுறைகளின் கவிகள் தொடக்கம் இன்னும் இந்த வலியுடைய குரலையே ஒலிக்கிறார்கள். இதில் இடையில் வந்த தலைமுறையைச் சேர்ந்த ஊர்வசி, மைத்திரேயி, ஒளவை, சிவரமணி என்ற பெண் கவிஞர்களும் இத்தகைய தொனியிலும் வலியிலுமான கவிதைகளையே தந்தார்கள். அதிலும் போரும் வாழ்வு மறுப்பும் அகதி நிலையும் இதில் முக்கியமானவை.

இந்த அகதி நிலை இரண்டு வகைப்பட்டது. ஒன்று உள்ளுரில் இடம்பெயர்ந்து அலைதல். அருகில் வீடோ ஊரோ இருக்கும். ஆனால் அங்கே போக முடியாது. அதுவும் ஆண்டுக்கணக்கில் அங்கே போக முடியாது. அதெல்லாம் சனங்களைத் துரத்திவிட்டு படையினருக்காக அத்துமீறி அரசாங்கம் கைப்பற்றி வைத்திருக்கும் பிரதேசங்களாகும். அப்படிக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்கு அமைச்சரைவை மூலம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரிலான சுவீகார சட்டம் வேறு. ஆனால் அப்படி கைப்பற்றிய பிரதேசத்துக்கான நட்ட ஈட்டைக்கூட அது கொடுக்கத்தயாரில்லை.

தவிர, போரில், படையெடுப்புகளின் போது நிகழும் அகதி நிலை. இடம் பெயர்வு. இதைவிடவும் புலம் பெயர் அகதி நிலை வேறு. இது வேரிழந்த நிலை. அந்நியச் சுழலில் அந்தரிக்கும் கொடுமையான அவலம். தமிழ்நதி இவை எல்லாவற்றையும் தன் மொழியில் பிரதியிடுகிறார். தமிழ்நதியின் பிரதியில் இனவன்முறைக்கெதிரான பிரக்ஞையும் அகதித்துயரும் அதிகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலும் அவருடைய பிரக்ஞை இவற்றில்தான் திரண்டுள்ளது.

இது குறித்து அவருடைய சில அடையாளங்கள், அதாவது இத்தகைய வாழ்நிலையின் பின்னணியில் தமிழ்நதியின் கவிதைகள் இயங்குகின்றன. தமிழ்நதி அரசியற் கவிதைகளையே அதிகமாக எழுதியிருக்கிறார். இந்தத் தொகுதியின் முதற்கவிதையும் இறுதிக்கவிதையும்கூட அரசியற் கவிதைகள்தான். அதிலும் இந்த அரசியலைத் தீவிரமாகப் பேசும் கவிதைகள். முதற்கவிதையில் அவர் எழுதுகிறார்,

நேற்றிரவையும் குண்டு தின்றது
மதில் விளக்கு அதிர்ந்து சொரிந்தது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைகளுக்குப் பாலுணவு தீர்ந்தது

………..……… ..
.........................

பூட்டப்பட்ட வீடுகளைச் சுற்றி
பசியோடு அலைந்து கொண்டிருக்கின்றன
வளர்ப்புப்பிராணிகள்
சோறு வைத்து அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டுப் படுத்திருக்கும்
நாய்க்குட்டியிடம் எப்படிச் சொல்வது
திரும்ப மாட்டாத எசமானர்கள் மற்றும்
நெடியதும் கொடியதுமான போர் குறித்து

………..………..
.......................

ஒவ்வொரு வீடாய் இருள்கிறது
இந்தச் செங்கல்லுள் என் இரத்தம் ஓடுகிறது
இந்தக்கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது

………..……….
......................

மல்லிகையே உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்

இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் என் பட்டுப் பூனைக்குட்டிகளை

என்று. அதைப்போல இறுதிக்கவிதையில்,

வேம்பின் பச்சை விழிநிரப்பும்
இந்த யன்னலருகும்
கடல் விரிப்பும்
வாய்க்காது போகும் நாளை
இருப்பின் உன்னதங்கள் ஏதுமற்றவளிடம்
விட்டுச் செல்வதற்கு
என்னதான் இருக்கிறது?

எனச்சொல்கிறார். இந்தக்கவிதை தாயகத்தின் இடம் பெயர்தலைச் சொல்கிறது. சொல்கிறது என்பதை விடவும் அதை அது பகிர்கிறது. அந்த நிலையை அது அப்படியே, அதுவாக, நிகழ்த்துகிறது எனலாம். அந்த அந்தரநிலையின் கொடுமுனைத் துயரிது.

முதற்கவிதையில் வரும்

இந்தக்கதவின் வழி
ஒவ்வொரு காலையும் துளிர்த்தது

மல்லிகையே உன்னை நான்
வாங்கிவரும்போது நீ சிறு தளிர்

இருப்பைச் சிறு பெட்டிக்குள் அடக்குகிறேன்
சிரிப்பை அறைக்குள் வைத்துப் பூட்டுகிறேன்
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
எஞ்சிய மனிதரை
சொற்களற்றுப் புலம்புமிந்த வீட்டை
வேம்பை
அது அள்ளியெறியும் காற்றை
காலுரசும் என் பட்டுப் பூனைக்குட்டிகளை

என்ற இந்தவரிகள் இதுவரையான இடம் பெயர்வுக்கவிதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டவை. அதேவேளை, சாதாரணமான வார்த்தைகளால் அசாதாரணமான பகிர்தலை ஏற்படுத்துவன. அகதியாதலின் புள்ளியில் திரளும் துயரத்துளி எப்படி என்பதற்கு, அந்தக்கணம், அந்த மையப்பொழுது, எப்படி வேர்கொண்டெழுகிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சியமுண்டா...

நாடோடியின் பாடல் என்ற இன்னொரு கவிதையில் அவர் எழுதுகிறார்.

உயிராசையின் முன்
தோற்றுத்தான் போயிற்று ஊராசை
போர் துப்பிய எச்சிலாய்
போய்விழும் இடங்களெல்லாம்
இனிப் போர்க்களமே

நாடோடிகளின் துயர் செறிந்த பாடல்
ஏழுகடல்களிலும் அலைகிறது

எந்தத் தேவதைகளைக் கொன்றழித்தோம்
எல்லாத்திசைகளிலும் இருளின் ஆழத்தில்
'அம்மா ' என விம்மும் குரல் கேட்க.

இங்கே ஈழத்தமிழரின் அகதித்துயர் மட்டும் சொல்லப்படுவதாகக் கொள்ள முடியாது. அதற்குமப்பால் உலகமுழுவதுமிருக்கும் அரச பயங்கரவாதம், மதவாதம், இனவாதம், நிறவாதம் என்ற பெரும் 'பிடிவாத'ங்களால் அகதிகளாக்கப்பட்ட சனங்களின் துயரமும் அவலமுமே கூட்டிணைவாகியுள்ளது. தமிழ்நதி அகதிநிலையில் வெவ்வேறு கண்டங்களில் அலைந்தவர். அப்படி அலையும்போது அவர் கண்ட பல சமூகங்களின் நாடோடி வாழ்க்கை அவல முகம் இங்கே இப்படி வைக்கப்பட்டுள்ளது.

உயிருக்கு அஞ்சும்போது, அதற்கு ஆசைப்படும்போது ஊருடனான உறவு, சொந்த நிலத்துடனான உறவு துண்டிக்கப்படுகிறது. ஊரிலிருத்தல், சொந்த நிலத்தில் இருத்தல் மிகமிக ஆபத்தானதாக ஆகியிருக்கிறது, அது எந்தவகையிலும் உத்திரவாதமுமில்லாதது என்பதையிட்டே பெரும்பாலான நாடோடிகள் அப்படி அலைகிறார்கள் என்ற தொனியை இந்தக்கவிதையின் வழி தமிழ்நதி உணர்த்துகிறார்.

அரச பயங்கரவாதத்தையும் அகதி நிலையையும் பேசுவனவாகவே உள்ளன இந்தத் தொகுதியிலுள்ள பெரும்பாலான கவிதைகள். அதிலும் புலம்பெயரியின் அலைதலை இவை அழுத்தமான தொனியில் பதிவு செய்கின்றன. அதிகாரமும் தேவதைக்கதைகளும், விசாரணை, பிள்ளைகள் தூங்கும் பொழுது, எழுத்து: விடைபெற முடியாத தருணம், ஊருக்குத்திரும்புதல், திரும்பிச் செல்ல விரும்புகிறேன், இறந்த நகரத்தில் இருந்த நாள், அற்றைத்திங்கள் இப்படிப்பல. இதில் அதிகாரமும் தேவதைக்கதைகளும் என்ற கவிதை இந்தத் தொகுதியிலேயே நீண்ட கவிதையாக உள்ளது. ஈழத்தமிழர்களின் வாழ்க்கை, அரச பயங்கரவாதம், அதற்கெதிரான அவர்களின் போராட்டம், அவர்களுடைய இன்றைய நிலை, தொடரும் துயரம், இவை தொடர்பாக சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை நோக்கி விடப்படும் கோரிக்கை, போராளிகளின் வாழ்க்கை, இவற்றிலெல்லாம் தமிழர்களின் உணர்வுகள் … என எல்லாவற்றையும் இந்தக் கவிதை பேசுகிறது. ஈழத்தமிழர் அரசியலினதும் சமகால வாழ்வினதும் சரியான தரிசனம் இது.

துயரங்களிலேயே மிகவும் பெரியதும் கொடுமையானதும் அகதிநிலைதான். கொடுவதை அது. அவமானங்களும் புறக்கணிப்பும் அந்நியத்தன்மையும் திரண்டு பெருக்கும் வலி.

ஒரு சுதேசியை விடவும்
பொறுமையோடிருக்கப் பணித்துள்ளன
அந்நிய நிலங்கள்
………..………..
.......................

ரொறொன்ரோவின் நிலக்கீழ்
அறையொன்றின் குளிரில் காத்திருக்கின்றன
இன்னமும் வாசிக்கப்படாத புத்தகங்கள்.
நாடோடியொருத்தியால் வாங்கப்படும் அவை
கைவிடப்படலை அன்றேல்
அலைவுறுதலை அஞ்சுகின்றன

இதுதான் நிலைமை. இதுதான் கொடுமையும். இது இன்னொரு வகையில் மறைமுகமான அடிமை நிலைதான். எந்த உரிமையுமில்லாத இடத்தில் எப்படி நிமிர முடியும். ஆக அங்கே அப்போது எல்லோரிடமும் பணியத்தான் வேணும். அது அடிமை நிலையன்றி வேறென்ன.

தமிழ்நதியின் கவிதைகள் மூன்று விதமான விசயங்களைக் கொண்டிருக்கின்றன. ஒன்று போரும் அதன் விளைவான அலைதலும். இதில் புலம் பெயர்தலும் அடங்கும். மற்றது, அவருடைய கவனம், ஈடுபாடு, இயல்பு என்பனவற்றைக் கொண்ட அவருடைய உலகம். அடுத்தது, பெண்ணாயிருத்தலின் போதான எண்ணங்களும் அநுபவங்களும். ஆக, இந்தத் தொகுதி, தமிழ்நதியின் அக்கறைகளும் அடையாளமும் என்ன என்பதைக் காட்டுகிறது. கடவுளும் நானும், முடிவற்ற வானைச் சலிக்கும் பறவை, நீ நான் இவ்வுலகம், ஒரு கவிதையை எழுதுதல், யசோதரா, எழுது இதற்கொரு பிரதி, துரோகத்தின் கொலைவாள், ஏழாம் அறிவு, மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு, சாயல் போன்றவை தமிழ்நதியின் இயல்பைக் காட்டும் கவிதைகள். அவருடைய மனவுலகத்தின் இயங்கு தளத்தையும் அதன் வர்ணங்களையும் திசைகளையும் இவற்றில் காணமுடியும். எதனிடத்திலும் அன்பாயிருத்தலும் அன்பாயிருக்க முடியாததும்தான் தமிழ்நதியின் இயல்பு. ஆனால் அதையெல்லாம் மூடிப் பெரும் கருந்திரையாக துயரம் படிகிறது அவருக்கு முன்னே.

தொலைபேசி வழியாக எறியப்பட்ட
வன்மத்தின் கற்களால்
கட்டப்படுகிறது எனது கல்லறை

எல்லாப்பரண்களிலும் இருக்கக்கூடும்
மன்னிக்கப்படாதவர்களின்
கண்ணீர் தெறித்துக்கலங்கிய
நாட்குறிப்புகளும் கவிதைகளும்

(மன்னிக்கப்படாதவளின் நாட்குறிப்பு)

சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள் திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாகினான்
இவள் பிச்சியாகினாள்

"அன்பே என்னோடிரு அன்பே என்னொடிரு"
.........................
.........................

சுழலும் ஒளிவட்டங்களின் பின்னாலிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.

(யசோதரா)

இந்தக்கவிதைகள் மிக முக்கியமானவை. அதிலும் யசோதரா கவிதை சித்தார்த்தரை விமர்சிக்கிறது. புத்தர் என்ற ஒளிவட்டத்தின் பின்னால் மறைக்கப்பட்ட அவலத்தையும் உண்மையின் இன்னொரு பாதியையும் கொடுமையையும் அது கடுந்தொனியில் விமர்சிக்கிறது.

யசோதரையையும் புத்தரையும் ஒன்றாகப்பார்க்க முடியுமா என்று யாரும் கேட்கலாம். சித்தார்த்தனின் ஞானத்துடன் எப்படி யசோதரையை கொள்ள முடியும் என்ற கேள்வியை விடவும் இருவருக்குமான உரிமை பற்றியதே இங்கே எழுப்பப்படும் பிரச்சினையாகும். யசோதரையை தனித்தலைய விட்டுவிட்டு புத்தன் ஞானம் பெறுதில் எந்தப் பெறுமானமும் இல்லை என்பது மட்டுமல்ல, அதுவொரு வன்முறையுமாகும் என இந்தக் கவிதை முன்வைக்கிறது தன் வாதத்தை.

வரலாற்றில் எப்போதும் பெண்ணினுடைய முகத்தையும் மனதையும் ஆணின் பிம்பம் மறைத்ததாக எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கு இன்னொரு ஆதாரமாக இந்தக்கவிதையை தமிழ்நதி முன்வைக்கிறார். எதிர் முகம் அல்லது மறுபக்கம் பற்றிய அக்கறையைக் கோரும் குரலிது. இது பெண்ணுக்கு மட்டுமல்ல தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்டோர் அனைவருக்கும் பொதுவானது.

இதைப்போல பெண்ணிலை சார்ந்து எழுதப்பட்ட கவிதைகளிலும் தமிழ்நதியின் அரசியல் பார்வையையும் மனவொழுங்கையும் காணலாம். ஆண்மை, சாத்தானின் கேள்வி, புதிர், நீரின் அழைப்பு, தண்டோராக்காரன், கடந்து போன மேகம், நினைவில் உதிக்கும் நிலவு போன்றவை பெண்ணரசியலின் கொதிப்பையுடையவை. பொதுவாக தமிழ்நதியின் கவிதைகள் துயர்மொழிதான் என்றாலும் அதை ஊடுருவியும் மேவியும் குழந்தைமை நிரம்பிய இயல்பும் நெகிழ்வும் இவற்றில் குவிந்திருக்கிறது. அவருள் எல்லையின்மையாக விரியும் உலகு இது. அன்பின் நிமித்தமாதல் என்று இதைச் சொல்லலாம். அல்லது எதனிலும் கரைதல்.

இந்தக்கவிதைகளைப்படிக்கும்போது தமிழ்நதியைப்பற்றிய சித்திரம் நமது மனதில் படிகிறது. விரிகிறது. எழுகிறது தெளிவான வரைபடமாக. இவை தவிர்ந்த பொதுவான கவிதைகளும் உண்டு. யன்னல், கலகக்காரன் போன்றவை இவ்வாறான கவிதைகளுக்கான அடையாளம். இதில் யன்னல் பசுவய்யாவின் ( சுந்தர ராமசாமியின்) 'கதவைத்திற' என்ற கவிதையின் இன்னொரு நிலை என்றே நினைக்கிறேன். பசுவய்யா கதவைத்திற, காற்று வரட்டும் என்று சொல்கிறார். தமிழ்நதியோ யன்னலை அடைப்பதன் மூலம் உலகத்தைத் துண்டிக்கிறாய் என்கிறார். பூட்டி வைக்கும் எதனுள்ளும் எவருள்ளும் புக முடியாது வெளிச்சம் என்று இந்தக்கவிதையின் இறுதிவரி, கவிதை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்க நிறைவடைகிறது. இங்கே பசுவய்யாவினுடைய உலகமும் தமிழ்நதியின் உலகமும் சில புள்ளிகளில் ஒன்றிணைவதைக்காணலாம். தலைமுறை கடந்த பிறகும் அந்த உணர்வு, அந்த எண்ணம் ஒன்றான தன்மையில் பயணிக்கிறது சமாந்தரமாய்.

தமிழ்நதிக்கு நகுலனிடத்திலும் பிரமிளிடத்திலும் கூடுதல் பிரியமிருக்கிறது. அவருடைய சிறுகதைகளிலும் பத்திகளிலும் கூட இதைக்கவனிக்கலாம். ஆனால், இந்த இருவருடைய பாதிப்புகளை இவருடைய கவிதைகளில் காணவில்லை. பதிலாக பசுவய்யாவின் தன்மைகளே அதிகமாகவுண்டு. ஆனால், மாதிரியோ சாயலோ அல்ல. அவருடைய அணுகுமுறை தெரிகிறது. காற்றில் நடுங்கும் மெழுகுவர்த்தி, யன்னல், நினைவில் உதிக்கும் நிலவு, கூட்டத்தில் தனிமை போன்ற கவிதைகள் இதற்கு ஆதாரம். சொற்களை ஒழுங்கமைப்பதன் மூலம் தன்னிலையை ஸ்திரப்படுத்துவதில் ஒரு வகையான நுட்பத்தையும் வாசகருடனான உறவையும் உருவாக்கும் திறன் பசுவய்யாவிடம் உண்டு. அதன் இளநிலையில் தமிழ்நதி இருக்கிறார்.

தமிழ்நதியின் பொதுமைப்பட்ட பண்பு அவருடைய பன்மைத்தன்மையினூடானது. சமூக, அரசியல், பெண் அடையாளம் கொண்ட விரிதளம் இது. தன்னுடைய காலத்திலும் சூழலிலும் அவர் கொண்டுள்ள ஆழமான உறவும் கூர்மையான கவனமுமே இதற்குக் காரணம். இவற்றை வெளிப்படுத்துவதற்கான கவி மொழியை நுட்பமாக்கியிருக்கிறார் அவர். அதேவேளை இந்த மொழியை நுட்பமாகக் கையாள்வதிலும் கவனம் கொண்டுள்ளார். பெரும்பாலான கவிதைகள் காட்சிப்படிமமாயும் ஒலிப்படிமமாயுமுள்ளன. நுட்பமான சித்திரிப்பின் ஆற்றலினாலே இது சாத்தியமாகியுள்ளது. அவர் சொல்வதைப்போல மொழியின் அதியற்புதம் என்று கொள்ளத்தக்க வெளிப்பாட்டு வடிவமாகிய கவிதையைத் தேர்ந்தெடுக்க நேர்ந்த கணத்தை தமிழ்நதி அதிகம் விரும்புகிறார். அதனால் அவர் தன்னுடைய சித்திரிப்பில் இந்த நுட்பங்களை நோக்கிப்பயணிக்கும் சவாலை விரும்பிக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நதியின் முதற் கவிதைத்தொகுதி இது. இதில் உள்ள நாற்பத்தியேழு கவிதைகளில் பெரும்பாலானவற்றில் அவர் தன்னடையாளத்தை சாத்தியப்படுத்தியிருக்கிறார். இது அவருக்கும் வெற்றி. நமக்கும் வெற்றியே. இனிவரும் புதிய கவிதைகள் அவரையும் நம்மையும் புதிய பரப்புக்கு கொண்டு போகலாம்.


நன்றி:திண்ணை இணையத்தளம்
கவிஞர் கருணாகரன், அகிலன்

1.16.2008

‘குற்றவுணர்வின் மொழி’: ஒரு கவிதை அனுபவம்


ஒரு படைப்பை மதிப்பீடு செய்தல்,திறனாய்தல்,விமர்சித்தல்,பார்வை இப்படிப் பல பெயர்களாலாய செயல் எவ்வளவிற்குச் சாத்தியமுடையது என்பதில் எனக்குச் சந்தேகமிருக்கிறது. மேற்கண்ட வாக்கியம் கவிதையை முன்வைத்தே சொல்லப்பட்டது. ஏனெனில்,மிகவும் அகவயம்சார்ந்த மொழிவெளிப்பாடாகிய கவிதையை வாசித்து, அது நமக்குள் கடத்தும் அற்புதானுபவத்தைப் பெற்றுக்கொள்வதுடன் நிறுத்திக்கொள்வதே அதற்கு நாம் செய்யும் நியாயமாக இருக்கமுடியும். தன்னை எழுதப் பணிக்கும் கவிதையின் குரலை, அதன் தொனியும் பொருளும் குறைவுபடாமல் பதிவுசெய்ய அதனோடு தொடர்புடைய படைப்பாளியே திணறும்போது வாசகனோ சகபடைப்பாளியோ அதை உள்வாங்கிக்கொள்வதும், அதன் சாரத்தை எழுத முற்படுவதும் வியர்த்தமே. அண்மையில் எனக்கு வாசிக்கக் கிடைத்த ‘குற்றவுணர்வின் மொழி’யைப் பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியபோது, ‘விமர்சனம்’, ‘மதிப்பீடு’போன்ற வார்த்தைகளைத் தள்ளிவைக்கவேண்டுமெனத் தோன்றியது அதனாலேயே. கவிதைகளை வாசித்ததும் எழுந்த உடனடி உணர்வுந்துதலே இக்கட்டுரையாகிறது.

‘ஒரு புத்தகத்தை வாசிப்பது என்பது அதை எழுதியவனை அல்லது எழுதியவளை வாசிப்பதுபோலவே இருக்கிறது’என்பது நாவலுக்கும் சிறுகதைக்கும் பொருத்தமற்றதெனத் தோன்றலாம். ஆனால், கவிதைகளுக்கல்ல. கவிதைகள் பெரிதும் எழுதுபவனின்-எழுதுபவளின் வாக்குமூலமாக அமைந்துவிடுதலே இயல்பு. ‘குற்றவுணர்வின் மொழி’யைப் படித்தபோது, பாம்பாட்டிச்சித்தனின் அகநிலைச் சித்திரங்கள் வரைந்த சாலையினூடே நடப்பது போன்றே இருந்தது. தொகுப்பின் முன்னுரையில் சி.மோகன் அவர்களால் கூறப்பட்டிருப்பதுபோல, ‘கவிஞன் அடிப்படையில் ஒரு சுயசித்திரக்காரன்’தான். இத்தொகுப்பில் பெரும்பாலான கவிதைகள் தன்னனுபவ வெளிப்பாடாக இருத்தலுக்கான சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ‘நரபலியின் கூற்று’, ‘குற்றவுணர்வின் மொழி’, ‘வழித்துணையாய் வந்த கடவுள்’, ‘டிசம்பர் 13,2003’ ஆகிய நான்கு கவிதைகள் மட்டுமே புறவுலக அரசியல் சார் கவிதைகள் எனலாம்.

ஒற்றை வாசிப்பில் புரிந்துகொள்ளலாமென்ற எதிர்பார்ப்புடன் பக்கங்களைப் புரட்டிச் செல்ல முற்படும் வாசகனை தனது செறிவார்ந்த மொழிக் கட்டமைப்பால் ஏமாற்றிவிடுகிறார் கவிஞர். அவ்வகையில் ஆழ்ந்த வாசிப்பினை வேண்டி நிற்கின்றன இத்தொகுப்பிலுள்ள கவிதைகள்.

தான் கண்ட காட்சியைத் தன் கற்பனைக்கும் அனுபவத்திற்கும் ஏற்ப வார்த்தைகளில் ஏற்றிவிடும் கலை கவிஞனுக்கே வாய்த்திருக்கிறது. அக்கலை பாம்பாட்டிச் சித்தனுக்கு விரல்கூடியிருக்கிறது.

"தொலைபேசி ஒலிகள்
பிரவாகித்தபடி இருக்கும்
ஆளில்லாத வீட்டைச் சுற்றி
செழித்தடர்கிறது வேதனைப்புதர்"

எடுப்பாரில்லாமல் ஒலித்துக்கொண்டிருக்கும் தொலைபேசி மணியோசை, அந்த வீட்டைக் கடந்து செல்பவரிடை எத்தனை கேள்விகளை எழுப்பியிருக்கும்? நிச்சயமாக அது துயரத்தின் ஓசையாகத்தானிருந்திருக்க முடியும்.

-
"எலுமிச்சை மரயிடுக்குகளில் பொசிந்த
மஞ்சள் வெயில் சுவைத்து
வாய்கூசிக் கரையும் காகங்கள்"


எலுமிச்சையிலிருந்து பொசியும் வெயிலும் புளிக்குமோ…? இதுவரை எவரும் எடுத்தாளாத கற்பனை இது. ஆளரவமற்று அயர்ந்த நடுப்பொழுதில் வாய்கூசிக் குழறும் காகங்களின் கரைதல் கவிதையை வாசிக்கும்போது ஒலிப்பது போலிருந்தது.

தொகுப்பு முழுவதையும் ஒரே அமர்வில் வாசிக்கும்போது, கவிதைகளினூடே ஒரு குழந்தையின் சிறிய பாதங்கள் நடந்துதிரியும் மெல்லிய காலடியோசையைக் கேட்கமுடியும். பெரும்பாலான கவிதைகள் குழந்தைகளின் உலகம் குறித்ததாகவும், அந்த உலகத்தின் வினோதாதீதங்களினாலேற்பட்ட வியப்பில் விழியகன்ற ஒரு கவிஞனின் வரிகளாகவுமே இருக்கின்றன. ‘உயிர் வருகை’, ‘படைப்பின் இரகசியம்’, ‘வாழ்தலும் புரிதலும்’, ‘இருந்தும் இல்லாமல் போன இடத்தில்…’, ‘தனிச்சி’, ‘குழந்தையுடனான யாத்திரை’, ‘பிள்ளை விளையாட்டு’, ‘குணாதிசயம்’, ‘பனிமொழி’,’வனம் புகுதல்’, ‘நீர்க்கரை’ போன்ற கவிதைகளில் குழந்தைமையும் குழந்தைகளும் பாடுபொருளாகவோ அன்றேல் பக்கப்பொருளாகவோ இருக்கின்றன. குழந்தைகளுக்கான படைப்புகள் தமிழில் அருகிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், குறைந்தபட்சம் அவர்களின் மனவுலகம் பற்றிய எழுத்துக்கள் வருவது நிறைவுதருகிறது. கவிஞர் உளவியல் துறை சார்ந்த பணியில் இருப்பதனாலும் இது சாத்தியப்பட்டிருக்கலாம்.

கவிஞருடைய பெயரின் விசித்திரம் போலவே மாயாவாத கனவொன்றினுள் வாசகரை இட்டுச்செல்லும் வரிகள் தொகுப்பெங்கிலும் விரவிக்கிடக்கின்றன.

“உயிர்விடும் முன் எழுதிய கடிதம்
சூனியத் தகடாக…”

“மந்திரித்த மரப்பாச்சி போல்
மடல் மேலமர்ந்து ரீங்கரித்த…”

“கருப்பு சூன்யத்தாலோ
மற்றதென் சகாயத்தாலோ…”

“சூத்திரப்பாவையின்
கயிறறுந்த விதம் பற்றிய…”

கவிதைகள் இப்போது சிறுகதைகளின் வேலையைச் செய்வதாக’கவிஞர் யவனிகா சிறீராம் ஓரிடத்தில் சொல்லியிருந்தார். அண்மைய நாட்களில் அக்கூற்றை உறுதிசெய்வதான கவிதைகள் நிறையவே வாசிக்கக் கிடைக்கின்றன. இத்தொகுப்பிலும் ‘பிரிவிற்கு முந்தைய கணங்கள்’, ‘வழித்துணையாய் வந்த கடவுள்’போன்ற கவிதைகள் சிறுகதையாக விரிக்கத்தக்க சம்பவ சாத்தியங்களைக் கொண்டிருக்கின்றன.

கவிதைக்கு வடிவம் இன்னதுதான் என்றில்லை. அது ஊற்றப்படும் பாத்திரத்தில் தண்ணீராக தன்வடிவம் நிர்ணயிக்கும் தன்மையது. ஆனால், கட்டிறுக்க மொழியைக் கொண்டமைந்த கவிதைகளைக் காலம் பின்னிறுத்தாது, தன்னுடன் எடுத்துச்செல்லும் என்பது எழுதா விதி. பாம்பாட்டிச் சித்தனின் கவிதைகளில் அத்தகு சிறப்பினை அவதானிக்க முடிகிறது. உதாரணமாக,

“வார்த்தைகள் நிரப்பாத மௌனப் பெருங்குழி”

“சொல்வலைக்குள் சிக்காத சிறுபறவை”

போன்ற வரிகள் எந்தச் சாயலுமற்று வாசித்த கணத்தில் மனஆழத்தில் சென்று இறங்குபவை.

ஒவ்வொரு கவிஞருக்கும் ஒரு சொல் பிடித்தமானதாக இருக்குமோ என்னமோ… எனக்குத் ‘தனிமை’என்ற சொல் தவிர்த்து எழுதவியலாது. ‘சொற்கள்’உம் எப்போதும் என்னைப் பிரிய மாட்டேனென அடம்பிடிப்பவை.(நல்லதுதானே) கூறியது கூறல் குற்றந்தான் எனினும், எப்போதும் கூடவே இருக்கும் ஞாபகங்களைப் போல சில சொற்களைப் பிரியவியலாது. ‘குற்றவுணர்வின் மொழி’யில் ‘வெளி’என்ற சொல் நட்சத்திரங்களைப் போல அநேக கவிதைகளில் சிதறிக்கிடக்கிறது.

‘சம்பாசணைப் பெருவெளிகளை’
‘மலர்தலுக்கும் உதிர்தலுக்குமான வெளியில்’
‘காலவெளியினுக்கு இரையாகி’
‘மாடியின் வெளி விடுத்து’
‘பாழ்வெளியலைந்து’
‘நீர்ச்சமவெளியை’
‘வளிவெளியில்’
பாழ்வெளித் தனிமையை’
‘பேதலித்த மனவெளியோடு’
‘வானமற்ற வெளியில்’
‘வெளியைப் புணர்ந்த வெக்கை’

‘வெளி’யில் எல்லோர்க்கும் விருப்பந்தான். சிறையிருத்தல் உவப்பில்லை. தனித்தனிக் கவிதைகளாகப் பார்க்கும்போது தோற்றாத இந்த மீள்கூறல், தொகுப்பாக அமையும்போது உறுத்துவதாகிவிடுகிறது.

இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் சொற்தேர்வினாலும் கட்டிறுக்கத்தினாலும் சிறக்கின்றன. ஆனாலும், வில்லிலிருந்து புறப்பட்ட அம்பாக ஆரம்பித்த இடத்திலிருந்து முடிவினை நோக்கி மூச்சைப் பிடித்துக்கொண்டு நிறுத்தற்குறிகளற்று நகர்வதனால், இடைப்பட்ட பொருள் இழக்கப்படுகிறது. கவனம் முழுவதும் இறுதிப்புள்ளியில் குவிவதனால் சொல்நேர்த்தியை,பாடுபொருளை ஆசுவாசமாக முழுவதுமாக அனுபவிக்க இயலவில்லை.

"கருக்கலில் வரும்
கருத்தப் பால்காரியை
கூடும் புணர்ச்சியில் பூரணப்படுகிறது
என் புலரி"


போன்ற வரிகளில் கல்யாண்ஜி தொனிக்கிறார்.

கவிதையைச் சுமந்து அலைவது ஒரு வலியென்றால், நமக்குரிய வடிவத்தைக் கண்டடைவது மிகுவலி. அந்த அலைச்சலை, பரிதவிப்பை, தேடலை பாம்பாட்டிச்சித்தனின் கவிதைகளிலும் காணமுடிகிறது. திசைகளெங்ஙணும் சிறகடித்தபடி தன் கூட்டைத் தேடியலையும் ஒரு பறவையின் தவிப்பை, இவரைப்போலவே முதற்தொகுப்பை வெளியிட்ட அநேக கவிஞர்கள் அனுபவித்திருப்பார்கள். அந்த அலைதலின் நீட்சியாக ‘வழித்துணையாய் வந்த கடவுள்’என்ற கடைசிக்கவிதை அமைந்த வடிவத்தைக் கொள்ளலாம். ‘சொல்வலைக்குள் சிக்காத சிறுபறவை’ அந்த மரத்திலேயே தன் கூட்டைத் தொடர்ந்து இழைக்கவும் இசைக்கவும் கூடும்.

இத்தொகுப்பின் அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு மிக நேர்த்தியாக அமையப்பெற்றிருந்ததை அவதானிக்கமுடிந்தது.

‘குற்றவுணர்வின் மொழி’ கவிஞரின் முதற்தொகுப்பென்பதை நம்புவதற்கரியதாக்குகிறது அதன் மொழியழகு. எனினும், எண்ணிக்கையில் இல்லை இலக்கியம்; அதனோடான படைப்பாளியின் தொடர்ந்த இருப்பில் இருக்கிறது என்பதன் அடிப்படையில், இது முதற்தொகுப்பென்பதை நம்பித்தானாக வேண்டியிருக்கிறது.


வெளியீடு: அன்னம்
கவிஞரின் மின்னஞ்சல் முகவரி:pampattisithan@gmail.com