3.27.2009

மனதை ‘விசிறி’ய கடிதம்


பெரிய பெரிய ‘இளக்கிய’வாதிகளுக்கு (இளகிய அல்ல. ஏனென்றால் அவர்களது சமூக அக்கறை கேள்விக்குட்படுத்தத்தக்கது. பக்கத்தில் குண்டு விழுந்தாலும் கண்களை மூடிக்கொண்டு அடுத்த பதிவைப் பற்றிச் சிந்திக்கப் போய்விடுகிறவர்கள். அது ஆன்மீகம் சார்ந்தோ காதலைத் தழுவியோ சுயபுராணமாகவோ இருக்கும். மனிதப் பேரவலங்களைப் பற்றி மௌனமாயிருப்பதற்கான காரணங்களும் கைவசம் இருக்கும்) வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வருவதையும், அதை அவர்கள் தங்களது இணையத்தளங்களில் பிரசுரிப்பதையும் பார்த்திருக்கிறேன். எனக்கும் சில மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், தொலைபேசி அழைப்புகள் வருவதுண்டு. மின்னஞ்சலில் ‘உங்கள் எழுத்து நடை வியப்படைய வைக்கிறது’ என்றோ, ‘உங்கள் பதிவைப் படித்து நான் அழுதேன்’(அதுதானே வழக்கம் ) என்றோ, ‘நீங்கள் ஒவ்வொரு நாட்களும் பதிவு போடமாட்டீர்களா?’என்றோ எழுதியிருப்பார்கள். வலைப்பூவில் இடுமளவிற்கு அக்கடிதங்கள் நீண்டவையல்ல. அண்மையில் எனக்கு எழுத்தாளரல்லாத ஒரு வாசகரிடமிருந்து கடிதம் வந்தது. அவர் மளிகைக்கடை வைத்திருக்கிறார். ஒன்பதாம் வகுப்புவரை மட்டுமே படித்திருக்கிறார். அவரது வாசிப்பு ஞானம் பரந்தது. அவ்வளவு வாசித்திருக்கிறார். தவிர, ஒவ்வொரு வரிகளிலும் திளைத்து அதை மனப்பாடம் செய்து வைத்து நம்மிடம் சொல்லித் திணறடிப்பவராக இருக்கிறார். என்னுடைய கவிதைத் தொகுப்பு, சிறுகதை இரண்டைப் பற்றியும் தனித்தனியாக எழுதியிருந்தார். முதலில் கவிதைத் தொகுப்பு பற்றி எழுதியதைப் பதிவிடுகிறேன்.


ந.ராஜா

08-03-2009


தமிழ்நதி அவர்களுக்கு,


நேற்று (07-03-2009) உங்களுடைய ‘சூரியன் தனித்தலையும் பகல்’ கவிதைத் தொகுப்பைப் படித்தேன். யோசிக்கிறேன் என்ன எழுதுவது என்று. என் யோசனைக்குப் பின் வலிகள் நிறைந்த உங்கள் அனுபவக் கவிதைகள். உங்கள் வலிகளை ‘எ(ங்க)ன்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த வலிகளை நான் எவ்வாறு அனுபவிப்பது எனத் தெரியவில்லை. தப்பித்துக்கொள்ளும் தந்திரமல்ல எனது வார்த்தைகள். ‘தாங்கமுடியாத உணர்வின் உச்சிப்புள்ளியைத் தொடுகிறபோது அது கவிதையாகிறது’என்று உங்கள் முன்னுரையில் எழுதியிருக்கிறீர்களே… அதுபோல தாங்கமாட்டாத என் ஆதங்கத்தின், ஆற்றாமையின், இயலாமையின் அது ஏற்படுத்தும் கோபத்தின் வெளிப்பாடாக இக்கடிதம் இருக்கக்கூடும்.


‘நான் நாடோடியும் அகதியுமானவள்’என்று நீங்கள் எழுதியதைப் படிக்கும்போது ஏற்படும் குற்ற உணர்ச்சியை எதைக் கொண்டும் என்னால் நிரப்பமுடியாது. ஏதோ ஒரு இதழில் ‘பாரதி’யின் பாஞ்சாலி சபதத்தில் இருந்து யாரோ மேற்கோள் காட்டியிருந்த வரி ஒன்று நினைவிற்கு வருகிறது. துரியோதனனைப் பார்த்து பாஞ்சாலி சொல்வதாக ‘மன்னனென இறுமாந்திருந்தோம். பொசுக்கென்று ஓர் கணத்தே எல்லாம் போகத் தொலைத்துவிட்டாய்’ (நான் பாஞ்சாலி சபதம் படித்ததில்லை. தவறிருப்பின் மன்னிக்கவும்) அப்படி பொசுக்கென எல்லாவற்றையும் தொலைத்தது போலிருக்கிறது நீங்கள் நாடோடியும் அகதியுமானவள் என்றெழுதும்போது.


‘எந்தத் தேவதையைக் கொன்றழித்தோம்

எல்லாத் திசைகளிலும்

இருளின் ஆழத்தில்

‘அம்மா’என விம்மும் குரல் கேட்க’


என்று ‘நாடோடியின் பாடல்’முடிவில் நீங்கள் எழுதியதைப் படித்த பின்பு இவ்வாறு நான் நினைக்கிறேன். ஒருவேளை நீங்கள் தேவதைகளைக் கொன்றழித்திருந்தால் சுபிட்சமாக இருந்திருப்பீர்கள் என. ‘அதிகாரமும் தேவதைக் கதைகளும்’அதைப் படித்தவுடன் உடனே எனக்குக் குடிக்கத் தோன்றிவிட்டது. ஏனென்றால், உண்மைகளை மறைக்க அல்லது மறக்க மது தேவையானதாயிருக்கிறது.


‘துன்பியல் நிகழ்வுகளை ஞாபகம் வைத்திருக்கும்

மகத்தான ஞாபகசக்தியுடையோரே!

எம்மை ஏன் மறந்து போனீர்?

எம்மை ஏன் மறந்து போனீர்?’


என்று நீங்கள் எழுதியதற்குப் பதில் உங்கள் கையால் கன்னத்தில் நான் அறைவாங்கியிருக்கலாம்… வலித்திருக்காது எனக்கு. இப்போது காலமெல்லாம் அந்த வலி என் இதயத்தில் என்றென்றும் மாறாத ரணமாக இருக்கப்போகிறது. உண்மையில் ஒரு தமிழனாக (குறைந்தபட்சம் மனிதனாக) நான் என்ன செய்திருக்கவேண்டும்? என் தொப்பூள் கொடி உறவுகளுக்காக அரசியல்வாதிகளைப் போல தெருவில் மனிதச்சங்கிலி என்று கைகோர்த்து நின்றிருக்கலாம். அல்லது உண்ணாவிரதம் என்று ஒரு வாரத்திற்கு முன்பே அறிவித்துவிட்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் உண்ணாநோன்பை மாநகரின் மத்தியில் நிகழ்த்தியிருக்கலாம். இல்லாவிடில் நான் பள்ளி, கல்லூரி மாணவனாக இருந்திருந்தால் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு சாலையின் நடுவில் அமர்ந்து ஆக்ரோஷமாக தொண்டை நரம்புகள் புடைக்க சிங்களவன் அரசை எதிர்த்து கோஷம் போட்டுவிட்டுக் கைதாகியிருக்கலாம். ச்சே! இதெல்லாம் செய்து பார்த்தும் செவிமடுக்காத அரசுகளைக் கண்டு மனம் வெறுத்து மாண்டுபோயிருக்கலாம் தீக்குளித்து முத்துக்குமாரைப் போல… ஆனால்… ஆனால் அதற்கு மேல் என்னால் என்ன செய்யமுடியும்? ஏதாவது செய்யத்தான் வேண்டும்.
காசி ஆனந்தன் அவர்களின் ஹைக்கூ ஒன்றைப் படித்தேன் ‘போராளி’என்னும் தலைப்பில்…


‘நீ செத்தவனுக்காக அழுதவன்

அவன்

அழுதவனுக்காகச் செத்தவன்'


என் மரணம்கூட இப்படித்தான் இருக்கவேண்டும். போர்க்களத்தில் சாகலாம்; ஆனால் போதி மரத்தடியில் சாகக்கூடாது. கவிதைகள் என்னை நெகிழச் செய்திருக்கின்றன; ஆனால் உங்கள் கவிதைகள்தான் என்னை உணர்ச்சிவசப்படுத்தியிருக்கின்றன. வெறுமனே உணர்ச்சிவசப்பட்டு என்ன செய்வது? செயலாற்ற முடியாத கோபம் என்னைக் குற்ற உணர்ச்சிக்கு இட்டுச் செல்கிறது. உங்களது (தொகுப்பில் உள்ள) எல்லாக் கவிதைகளைப் பற்றியும் எழுதலாம்தான். சட்டென்று என்னை வெறுமை சூழ்ந்துவிடுகிறது. ஒரு சூனியம் நிலைத்துவிடுகிறது. வெறும் வார்த்தைகள் என் கடித வரிகள். இதை உங்களுக்கு எழுதுவானேன் எனத் தோன்றுகிறது. கிழித்து எறிந்துவிடலாம் என்று எண்ணுகிறேன். உங்கள் ‘துரோகத்தின் கொலைவாள்’ ஈழம் சாராத கவிதை.


‘தற்செயலாகவோ தன்னுணர்வுடனோ நம் ஆடைகள்

உரசிக்கொள்கிறபோது

விலங்குகள் விழிக்கின்றன’


என்று இயல்பான நடையில் கவிதை மிளிர்கிறது. உண்மையில் அனைவருமே அத்துரோகத்தின் கொலைவாளைப் பிரயோகிக்கவே விரும்புகிறோம் என்றே நினைக்கிறேன்.


எத்தனையோ எழுத நினைக்கிறேன். வார்த்தைகள் வசப்பட மறுக்கின்றன. புலம்பெயர்ந்து ஓடிக்கொண்டே இருப்பதனால் பெயரை ‘தமிழ்நதி’என்று மாற்றிக்கொண்டீர்களோ? திரைகடலோடி திரவியம் தேடியதுபோய் திரைகடலோடி அடைக்கலம் தேடும் அவலத்திற்கு ஆளாகிவிட்ட எம் தமிழ்ச்சமூகம் நிஜமாகவே ‘தமிழன்’என்று சொல்லி தலைநிமிர்ந்து நிற்கமுடியவில்லை. இரவு விடியும் என்பது நம்பிக்கையல்ல, அது நியதி. இயற்கையின் சுழற்சி. அதுபோல ஈழம் மலரும் என்பதும் இயற்கையின் நியதிதான். உங்களை நேரில் சந்திக்கவேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். தாங்கள் வசிக்கும் வீட்டின் கீழ்த்தளத்தில் இருக்கும் சீனிவாசன் எனது நண்பர். அவரோடு ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது தற்செயலாக உங்களைப் பற்றிச் சொன்னார். உங்களைத் தெரியும் என்றேன். அதற்கு முன் உங்களுடைய சில கவிதைகளை வார இதழ்களில் வாசித்திருக்கிறேன். பிற்பாடு நீங்கள் குமுதத்திற்கு எழுதிய கடிதத்தையும் படித்தேன். ஆகையால் உங்கள் கவிதைத் தொகுப்பையோ கட்டுரைகளையோ படித்த பிறகுதான் உங்களைச் சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். சீனுதான் இந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுத்தார். இதைப் படித்துவிட்டு உங்கள் கவிதை பற்றி நேரில் பேசலாம் என்றிருந்தேன்.


ஆனால், இப்போது ஒருபோதும் உங்களை நேரில் சந்தித்து உரையாட முடியாது என்றுணர்கிறேன். உங்கள் கண்களைச் சந்திக்கும்போது ‘ஏன் எம்மை மறந்து போனீர்?’என் உங்கள் கேள்வி உங்கள் கண்களில் தொக்கி நிற்கும். அதை என்னால் பார்க்கவியலாது என் பார்வையை விலக்கிக்கொள்ள வேண்டியதாக இருக்கும். ‘விசாரணைச் சாவடி’என்ற கவிதையில் நீங்கள் ‘கேவலமாக’ப் புன்னகைப்பதைப் போலத்தான் நானும் நடந்துகொள்ள வேண்டியிருக்கும். உங்கள் அருகில் அமரமுடியாது. உங்கள் உள்ளத்தில் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும் அக்கினியின் வெம்மை என்னைத் தகிக்கச் செய்யும். ‘என்ன செய்துவிட்டாய் நீ எமக்காக’ என்று அந்தத் தீ கேள்விக்குறியாய் குதித்தாடும் என்முன்.


‘பறவையின் சிறகிலிலிருந்து பிரிந்த இறகு ஒன்று

காற்றின் தீராப் பக்கங்களில்

தன் வாழ்வை எழுதிச் 'செல்கிறது'


என்ற பிரமிளின் கவிதை வரிக்கிணங்க இருக்கிறது உங்கள் அனுபவக் கவிதைகளும் பின்னட்டையில் இருக்கும் உங்கள் புகைப்படமும்.
‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில்’ உங்களைப் போல் எந்தத் தமிழ்ப்பெண்ணும் இப்படிக் கசிந்தழுதிருக்க மாட்டார்.

அன்புடன் ராஜா


3.26.2009

எனக்குப் புதிர்களைப் பிடிக்கும்; நகுலனையும்.....


சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு மனஇருட்டும் புழுக்கமும் வந்து கவிந்துகொள்வதை அவதானித்திருக்கிறேன். ஆனால், புகைப்படங்கள் (அண்மைய ஈழப்படுகொலைகள் தவிர்த்து) அழுகைக்குள் விழுத்தும் துயரத்தைத் தந்ததாக நினைவில்லை. நகுலனின் புகைப்படங்கள் அடங்கிய ‘கண்ணாடியாகும் கண்கள்’ மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அந்தப் புகைப்படங்களை காஞ்சனை சீனிவாசன் எடுத்திருந்தார். நகுலனின் கவிதைகளை உள்ளடக்கி காவ்யா பதிப்பக வெளியீடாக அது வந்திருந்தது. எப்போது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும் அதிலிருந்து தனிமை சொட்டுவதாகத் தோன்றும். நாற்காலியின் அமர்ந்து கண்களை மூடி நெற்றிப்பொட்டில் விரல் பதித்திருக்கும் நகுலனைப் பார்த்துப் பார்த்து மனம் கசிந்த நாட்கள் அநேகம். புகைப்படக்காரரின் இருப்பை மறந்து தன்னுள் ஆழ்ந்துபோன கணம் அது.

நகுலனைப் பிரதி செய்து பத்து வயது குறைத்து உலவவிட்டாற்போலிருப்பார் எனது அப்பா. அதுதான் நகுலன் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமா என்று சிலசமயங்களில் எண்ணத்தோன்றும். ஆனால், எந்த உறவையும் கண்ணீர் ததும்பக் கட்டிக்கொண்டு கொண்டாடுகிற ஆள் நானில்லை என்பதால் தோற்றப்பொருத்தம் மட்டுமே நகுலன் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கமுடியாது. ‘கண்ணாடியாகும் கண்களை’ப் பார்த்த பிற்பாடு, அவர் விரைவில் செத்துப்போக வேண்டுமென்று நான் உள்ளுர விரும்பினேன். மனதார வேண்டினேன். தன்னைப் பார்க்க வந்திருப்பவர்கள் யாரென அடையாளம் காணமுடியாத மறதிக்குள் தள்ளப்பட்ட முதிய உருவமொன்று அதற்காக வருந்தியபடி, வந்தவர்களை வழியனுப்பும் காட்சி மனதில் ஒரு சோகச்சித்திரமாய் எழுதப்பட்டிருந்தது.

“நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை”

என்ற வரிகள் தனிமையைத் தொட்டு எழுதினாற்போல தோன்றும். 17-05-2007அன்ற நகுலன் இறந்துபோனதாக அறிந்தபோது, ‘நினைவுப்பாதை’யை மட்டுமே நான் படித்திருந்தேன். என்னுடைய இலகு வாசிப்புத் தன்மையினால் அவருடைய எழுத்தின் தத்துவார்த்தச் சரட்டை, உள்ளார்ந்த சாரத்தைப் பின்தொடர்ந்து செல்ல இயலவில்லை. ஆனாலும், அந்தப் பெயரில் கடந்துசெல்ல இயலாத ஒரு மாயவசீகரம் இருந்தது. அதற்கு நகுலனின் எழுத்துக்கள் மட்டும் காரணமாக இருக்கமுடியாது. கவிஞர் சுகுமாரன் சொல்வதுபோல, நகுலன் தேர்ந்தெடுத்த ‘அராஜக வாழ்க்கை முறை’யின்பாலான ஈர்ப்பும், அதை வரித்துக்கொள்ள முடியாதபடி சமூகப்பிராணிகளாயிருக்கவே பழக்கப்பட்ட நமது சார்ந்திருக்கும் தன்மையும் காரணமாக இருக்கலாம்.

திருவனந்தபுரத்தில், அதிக சந்தடியற்ற தெருவொன்றில், மஞ்சள் பூக்களும் வாழையும் புதர்களும் செழித்தடர்ந்த வழி கொண்டுசேர்க்கும்-நாட்டு ஓடுகளால் வேயப்பட்டதொரு பழைய வீட்டில், காலத்தின் தூசிபடிய இறைந்திருக்கும் புத்தகங்கள் நடுவிலோ சூரல் நாற்காலியில் அமர்ந்தபடியோ ‘இன்று நண்பர்கள் யாரேனும் வருவரோ’என்று தனித்துக் காத்திருப்பது எத்தனை கொடுமையானது! அந்த மஞ்சள் பூனையும் ஒத்தாசைக்கு இருந்த அந்தப் பெண்ணும்தான் அவரது ஆகக்கூடிய துணைகள். ‘நினைவு ஊர்ந்து செல்வதை’த் தனது இடுங்கிய கண்களுக்குள் பார்த்தபடிக் கழித்த கடைசி ஆண்டுகளில் அவர் வாழ்ந்திருக்கவேண்டாம்.

அது என்னமோ தமிழிலக்கியத்தைத் தூக்கி நிறுத்தியவர்கள் என்று போற்றப்படுகிறவர்களில் அநேகருக்கு சபிக்கப்பட்ட வாழ்வே வாய்த்திருக்கிறது. பித்துநிலைக்கும் படைப்பு மனோநிலைக்கும் இடையில் ஒரு சின்ன நூலிழைதான் வித்தியாசமோ என்ற எண்ணம் மேலிடுகிறது. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன், ஜி.நாகராஜன்… எனத் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள், வாழும்போது சிக்கும் சிடுக்குமாக வாழ்ந்தவர்கள்தான்.

நகுலனின் படைப்புகளை வாசிப்பதற்கு ஒருமுனையில் குவிந்த கவனம் தேவை. அங்கிங்கு நகர்ந்தாலும் அவர் விரித்துச் செல்லும் அகவுலகம் மறைந்துபோகும் அபாயமுண்டு. வாசித்துக்கொண்டு இருக்கும்போதே ‘இதிலென்ன இருக்கிறது… நம்மை பைத்தியத்தில் தள்ளிவிடும் போலிருக்கிறதே’என்று தோன்றவாரம்பித்துவிடும். ஆனாலும், அதில் ஒன்றுமில்லை என்று சொல்வதற்குமில்லை என்பது நமக்கே தெரிந்துதானிருக்கும். ‘இதோ…இதோ’என்று குழலூதிச் செல்பவனைத் தொடர்வது போல நாமும் போய்க்கொண்டே இருப்போம். ஈற்றில் வாசித்து முடித்ததும் ஒரு வெறுமை தரைதட்டும். வந்தடைந்தது வெறுமைபோல் தோன்றினும் நிறைவின் நிழலாடும் உள்ளுக்குள். அறிந்த அனுபவங்களின் வெளிச்சத்தைக் கையில் ஏந்தி, அறியாத பாதைகளைக் கண்டுபிடிப்பதற்கான முனைப்பே அவர் எழுத்து. சில சமயங்களில் புரிகிறது. சில சமயங்களில் பிடிபடாமல் போக்குக் காட்டுகிறது. புரிந்து எதைத்தான் கண்டடைந்தோம்? புரியாமல் போனதால் எதை இழந்தோம்? நமது மகாமூளையின் நுட்பத்தின் மீது நமக்கேயிருக்கும் நம்பிக்கையில் யாராவது ஒருவர் சேற்றை வாரியிறைக்க வேண்டாமா?

‘எல்லாம் எமக்குத் தெரியும்’என்று திருவிளையாடல் பாணியில் பேசுபவர்கள் மத்தியில் நகுலனின் சுயஎள்ளல் பிடித்திருக்கிறது. தன்னையும் மற்றவர்களையும் கேள்வி கேட்டு பதில் தேடி ஆழ்ந்துபோகும் மௌனம் பிடித்திருக்கிறது. ‘எனக்கொன்றும் தெரியாதப்பா’என்ற குழந்தைத்தனமான அந்தச் சிரிப்பு பிடித்திருக்கிறது. சிலசமயங்களில் அவர் ஞானி போலிருக்கிறார். சில இடங்களில் குழந்தை போல் தோன்றுகிறார். அவர் எழுதியது போக, அவரைக் குறித்து எழுதப்பட்டவையும் நிறைய உண்டு. நகுலனை ‘எழுத்தாளர்களின் எழுத்தாளன்’என்று சொல்கிறார்கள். கவிஞர் சுகுமாரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, அசோகமித்திரன் எல்லோரும் நகுலனைப் பற்றி எழுதியிருப்பதற்கு அவர்மீதான தீரா வியப்புத்தான் காரணமாக இருக்கவேண்டும். அவரது நுண்மையான கேள்விகளை எப்படிப் புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. அது நகைச்சுவை என்ற கயிறா… தத்துவம் என்ற பாம்பா என்று பிரித்தறிய முடியவில்லை.

‘நினைவுப்பாதை’என்ற கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
----

“நீங்கதான் ராமகிருஷ்ணனா?”
“ஆமாம்”என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே “நீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல் நானும் சிரித்தேன்.
“எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?”

---
இந்த இடத்தில் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். ஆனால், அது உண்மையில் சிரிக்கக்கூடிய கேள்வி அல்லவே! பிறகு ராமகிருஷ்ணன் கேட்கிறார்:
----

“பூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?”

“பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?” - இது நகுலன்!

------

ஆம். பூனையைப் பூனை என்றுதானே கூப்பிடவேண்டும். அது தனக்குப் பெயர் சூட்டச் சொல்லி என்றைக்குக் கேட்டிருக்கிறது? ‘ம்யாவ்’என்பதற்கு நாம்தானே பலப்பல பொருள் கொள்கிறோம்… நகுலனின் எழுத்துக்களைப்போல.

எழுத்தும் வாழ்வும் புதிரான நகுலனின் ஆகர்ஷிப்பு முன்செல்கிறது. எழுத்தின் மயக்கத்தில் திளைக்க விரும்பும், இவ்வுலகின் சாதாரணங்களிலிருந்து தப்பிக்க விரும்பும் எவரும் நகுலனை பின்தொடரவும் நேசிக்கவும் விழைவர்.

எழுதுவது எத்தனை சிக்கலாயிருக்கிறது. நினைப்பை ஒருபோதும் காகிதத்தில் அன்றேல் கணினியில் முற்றிலுமாகக் கொட்டிவிட முடிவதில்லை. எழுத்து என்பது காற்றைப்போல கண்ணுக்குத் தென்படாமல், கையகப்படாமல் உயிர்வழங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியில் இந்தக் கட்டுரை நகுலன் சொன்னதே போல் ஆயிற்று:

“நிறைய நிறைய எழுதி, எழுதி எழுத வேண்டுவதை எழுதாமல் விட்டுவிட வேண்டும்.”

கொசுறாய் ஒரு கவிதை:

அப்பா வரைந்த ஓவியம்


சாய்வு நாற்காலியில்
மோவாயில் கைதாங்கி
அசப்பில் நகுலனாய் தோன்றிய அப்பாவுக்கு
தூரிகையும் வர்ணங்களும்
வாங்கிக் கொடுத்தேன்.
கன்னம் செழித்த பாரதி…
நதிக்கரை வாத்து..
நுண்ணிய இலைகள் அடர்ந்த மரம்
எல்லாம் வரைந்த பிறகு
என் புகைப்படம் கேட்டார்.
அவர் எழுதிய ஓவியத்தில்
அழகும் இளமையும்
மேலுமோர் வர்ணமாய் சுடர
அவர் மகளாய் மட்டுமிருந்தேன்.
அவர் மனதில்
உறைந்த காலத்தை உருக்க எண்ணி
‘நானில்லை’ என உன்னினேன்
பின்
இடுங்கிய கண்களில் கரைந்து
அச்சொட்டாய் இருப்பதாய்
அகமறிந்து பொய்யுரைத்தேன்.
விமானமேற்றி ஊருக்கு அனுப்புகையில்
பொக்கை வாயால்
அப்பா அப்பாவைப் போலவே சிரித்தார்
நகுலனைக் காணவில்லை.

-நன்றி: உயிரோசை





3.20.2009

பழைய கிறுக்கல்கள்-01



அவ்வப்போது கிறுக்கிவைத்த கிறுக்கல்களை பக்கம் நிரப்புவதற்காக வலைப்பூவில் பதிகிறேன்.


யாரோ போலவும்
பிரிவு சொல்வதற்கிடையில்
நகரவாரம்பிக்கிறது புகையிரதம்.
நிலவு பிம்பம் விழுத்திய நீரேரிகளில்
தொடரமுடியாமல் பின்தங்கும் பறவைகளில்
பின்னகரும் மரங்களில்
என்ன பார்க்கிறாய்?
பால்வாசனை முகரும் சாக்கில்
இறுக்கியணைத்து முகம் புதைக்கும்
உன் குழந்தையின் சுருள் முடியில்
பிரிவைச் சொரிந்து போகிறாய்.
ஆளற்ற இம்மேடையில்
சற்றே அமர்ந்து
நெகிழ்த்திவிட்டுப் போகிறேன்
கெட்டித்த துக்கத்தை.
முறையற்ற உறவின்
முடிவற்ற கண்ணீரில்
மூழ்க வேண்டாம்
என் வீடும்.
------------------

தொலைதூர நீல மலைகளைப்போல
துயரம் கிளர்த்துவது ஞாபகம்
எனினும் வசீகரமானது.
எனது காயங்களின் மீது
கண்ணீரை ஊற்றுகிறேன்
அது அணையாத கானகத்தீ.
எனது கண்களைத் தாண்டி இறங்குமொருவனிடம்…
இந்த அகாலத்தில்
பூங்கொத்தோடு வருபவனிடம் சொல்கிறேன்
‘துயரங்களுக்கு வாழ்க்கைப்பட்டு
முடிந்துபோனவளிடம் இனித் தருவதற்கு ஒன்றுமில்லை’

------------------

மாடியை ஒட்டிய புத்தக அறையினுள்
எப்படியோ சேர்ந்துவிடுகின்றன சருகுகள்…
வாசிப்பினிடை தலைதூக்கினேன்
செல்லமாய் சிணுங்கி
ஒன்றையொன்று துரத்திச் சரசரத்தன
கட்டிலுக்கடியில் பதுங்கின மேலும் சில.
ஈரமனைத்தும் உறிஞ்ச வெயில் வெறிகொண்ட
இக்கொடுங்கோடையில்
எந்த வடிவிலேனும்
இந்த மாநகர வீட்டினுள்
இருந்துவிட்டுப்போகட்டுமே
மரம்.

------------------
செல்லும் வழி
கொண்டையூசி வளைவு
குறுக்குப் பாதை
சேர்ந்தபின்
திரும்பிவர ஒரே வழிதான்
காதல் காமம்
எதற்கும்.

3.18.2009

பயணம்: அழைத்துக்கொண்டே இருக்கிறது வெளி

வீட்டிலிருக்கும்போது வெளியும், வெளியில் இருக்கும்போது வீடும் மாற்றி மாற்றி நமக்கு மட்டுமே கேட்கக்கூடிய அந்தரங்கமான குரலில் அழைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘நீண்ட நாட்களாக வெளியில் போகவில்லையே’என்ற நினைப்புத் தொட்ட கணத்திலிருந்து மளமளவென்று வளரத் தொடங்கியது பயணக் கிறுக்கு. அப்போது பார்த்து ‘மணல் வீடு’ சஞ்சிகையும் ‘களரி’தெருக்கூத்துப் பயிற்சிப் பட்டறையும் இணைந்து சேலத்தில் நாட்டுப்புறக் கலைஞர்களைக் கௌரவிக்கும் ஒரு விழா நடத்துகிறோம் வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார் ஹரிகிருஷ்ணன். முதலில் நாங்கள் ஐந்து பெண்கள் ஒன்றாகக் கிளம்புவதாக இருந்தது. மூவரை வீடு ‘பிடித்துக்கொண்டுவிட’ நாங்கள் இருவர் மட்டும் கிளம்பிப்போனோம்.

போகும் வழியெங்கும் பேச்சு…பேச்சுத்தான். இலக்கியம், அரசியல், மனித மனங்களின் அடியாழ இருட்டுக்கள், வெளிச்சங்கள்… ஏறத்தாழ எட்டு மணிநேரம் பயணக் களைப்பே தெரியவில்லை. நாங்கள் போனது ஜனவரி 23ஆம் திகதி. மலையும் குளிருமாய் அந்த இரவில் அழகாக இருந்தது சேலம் மாநகர். அன்றிரவும் அடுத்தநாள் பகலும் விடுதியில் ஓய்வு எடுத்துவிட்டு மாலையானதும் ஏர்வாடியை நோக்கிக் கிளம்பிப்போனோம். இந்தியா வந்ததற்கு நான் இறங்கிப் பார்க்கப்போகிற முதல் கிராமம் என்று அதைச் சொல்லலாம். போகிற போக்கில் பார்த்ததெல்லாம் சேர்த்தியில்லை அல்லவா? ஊருக்கு இறங்கும் வழியில் கோவணம் கட்டிய தாத்தா தோளில் மண்வெட்டியோடு வீதிக்கரையில் நிற்பதைப் பார்த்ததும் சொல்லத்தெரியாத ஒரு நெகிழ்வு பிறந்தது. ஒட்டாத நகரமனிதர்களிடமிருந்து கிடைத்த உவப்பற்ற அனுபவங்கள் அதற்குக் காரணமாக இருக்கலாம்.

நாங்கள் போகும்போது விழா களைகட்டி, கலைஞர் கௌரவிப்பு நடந்துகொண்டிருந்தது. எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், பேராசிரியர் கே.ஏ.குணசேகரன் ஆகியோர் அக்கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்கள். ஆங்காங்கே இலக்கியவாதிகள் நின்று இலக்கியமும் இன்னபிற அக்கப்போர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள். எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, ச.தமிழ்ச்செல்வன், பொதியவெற்பன், குணசேகரன், அஜயன் பாலா, ‘அந்திமழை’ அப்துல் காதர், க.சீ.சிவகுமார், புதிய மாதவி, ஷாஜகான், கவிஞர்கள் குட்டி ரேவதி, ச.விஜயலட்சுமி, தேவேந்திர பூபதி, இசை, லஷ்மி சரவணகுமார், சேலம் சரவணகுமார்- ஸ்ரீதேவி, தமிழ்ச்செல்வன், சக்தி அருளானந்தம் ஆகியோர் வந்திருந்தார்கள்.
சற்றைக்கெல்லாம் ‘வாலி மோட்சம்’என்ற தோல் பொம்மலாட்டம் ஆரம்பமாகியது. கொஞ்ச நேரம் ஆட்டம் பார்ப்பதும் எழுந்திருந்து அப்பால் போய்ப் பேசுவதுமாகச் சுற்றிக்கொண்டிருந்தோம். ‘ஆட்டிவைப்பவர்’யாரெனப் பார்க்கும் ஆவலில் திரைக்குப் பின்னால் கட்டப்பட்டிருந்த மறைப்புக்குள் புகுந்து விடுப்புப் பார்த்தோம். ராமனையும் வாலியையும் சுக்கிரீவனையும் ஒருவர் வைத்து ஆட்டிப் ‘படைத்து’க்கொண்டிருந்தார். அவர் கையில் அவர்கள் சுழன்றதும் ‘தொம்…தொம்’எனச் சத்தமெழ மோதிக்கொண்டதும் பார்க்க பார்க்க உண்மையேபோல உருமாறத்தொடங்கியது. பக்கத்திலிருந்து சட்சட்டென்று பாத்திரங்களை எடுத்துக்கொடுத்ததுமல்லாமல் உணர்ச்சி மிகும் குரலில் பின்னணி பேசிக்கொண்டிருந்த வயதான மூதாட்டியைப் பெருவியப்போடு பார்த்துக்கொண்டிருந்தேன். ‘தேவரீர் கருணை பாலிக்க வேண்டுகிறேன்’என்ற அழுங்குரல் இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. நரம்பு தெறிக்கும் அவரது தோற்றத்தில் தெரிந்த ஏழ்மையும்கூட.

இரவுக்கே உரித்தான வசீகரம் எங்கும் பரவியிருந்தது. ஜனவரி மாதக் குளிர் தாங்காமல் கையோடு கொண்டுபோயிருந்த கம்பளிகளால் போர்த்திக்கொண்டோம். பொம்மலாட்டம் முடிந்து ‘லங்கா தகனம்’கூத்து ஆரம்பித்தது. கூத்துப் பார்க்க கிராமத்திலிருந்தும் நிறையப்பேர் வந்திருந்தார்கள். தாளவாத்தியமும் ஆர்மோனியமும் இழைந்து இழைந்து எங்களை உருவேற்றின. நான் அன்றைக்கு வழக்கத்தைவிட அதிகமாகச் சிரித்தேன் என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது தோன்றுகிறது. அடிக்கடி காப்பி என்ற பெயரில் ஒரு பானம் அருந்தக் கிடைத்தது. இரவு ஏற ஏற அதில் பால் குறைந்து தண்ணீர் அதிகரித்தது. அந்தக் குளிருக்கு அது காப்பியைவிடவும் மேலானதாக இருந்ததை மறுப்பதற்கில்லை. பார்வையாளரின் உச்சபட்சக் கவனத்தை ஈர்த்திருந்தவர் மண்டோதரியாக வேடமேற்றிருந்த கனகராஜ் என்ற அரவாணிதான். அவர் சிவந்த நிறமும் மெல்லிய விரல்களும் சின்ன இடையுமாக வளைந்து நெளிந்து ஒயிலாக ஆடினார். ‘சுவாமீ…!’என்று அழைத்தபோது எங்களுக்குப் பக்கத்திலிருந்த பையன்கள் தாங்கள் ‘சுவாமி’களாயிருக்கக்கூடாதா என்று அந்தக் கணம் ஏங்கினார்கள். சீதை வந்தபோது சபையோர் தலைகள் தூக்கத்தில் ஆடியதையும் மண்டோதரி வந்தபோது மலர்ந்து விழித்ததையும் காணமுடிந்தது. உற்சாக மிகுதியால் ஆண்கள் சட்டைப்பைகளிலிருந்த ரூபாய்த்தாள்களை மண்டோதரியின் மேற்சட்டையில் குத்தினார்கள். ‘பெண்கள் குத்தக்கூடாதா’என்ற குரலையடுத்து அதுவும் நடந்தது.

தனியொருவராக அப்படியொரு கலை நிகழ்வை ஏற்பாடு செய்து நடத்துவதென்பது சாதாரண செயலல்ல என்று அன்றைக்கு எல்லோரும் பேசினார்கள். ஹரிகிருஷ்ணன் சாப்பாட்டுக்கும் ஏற்பாடு செய்திருந்தார். உப்பும் உறைப்புமான சாம்பாரை அன்றைக்குத்தான் முதன்முதலில் சாப்பிட்டேன். சாப்பாடு முடிந்ததும் அரசமரம் ஒன்றின் கீழ் மேடை போட்டு அமர்ந்திருந்த பிள்ளையார் அருகில் வந்தமர்ந்தேன். அரசிலைகளின் சலசலப்பும் ஆர்மோனியக் குழைவுமாய் அந்த இரவு என்றைக்கும் மறக்கமுடியாததாகக் கழிந்துகொண்டிருந்தது.
************
‘இந்த ஒரு வாரமும் திட்டமிடாமல் சுற்றலாமே’என்று தோழி சொன்னதை நான் வழிமொழிந்திருந்தேன். சேலம் நிகழ்ச்சி ஏற்கெனவே முடிவெடுத்த ஒன்று. அதைத் தவிர்த்து அன்றைக்கு எங்கே போகலாமெனத் தோன்றுகிறதோ அங்கே போவதாக உத்தேசம். ஆனால், ஒரு தொலைபேசி அழைப்பால் எங்கள் பாதை திசை மாறப்போகிறதென்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை.

மறுநாள் மதியம் சேலம் வாழ் கவிதைத் தம்பதிகளான சரவணகுமார்-ஸ்ரீதேவி ஏற்பாட்டில், அவர்களது அலுவலகத்தில் ஒரு சின்னக்கூட்டம் நடைபெற்றது. பிரபஞ்சன், குட்டி ரேவதி, லஷ்மி சரவணகுமார், தமிழ்ச்செல்வன்(ச.தமிழ்ச்செல்வன் அல்ல) ஆதவன் தீட்சண்யா, சரவணகுமார், ஸ்ரீதேவி எனக்குப் பெயர்தெரியாத மேலும் சிலர் கலந்துகொண்டார்கள். ‘குறைவான ஆட்களைக்கொண்ட நிறைவான கூட்டம்’என்று அதைச் சொன்னால் மிகையில்லை. அரசியல் பிரபலங்கள் புத்தகம் போட்டாலன்றி இலக்கியக்கூட்டங்களுக்கு அப்படியொன்றும் கூட்டம் எகிறுவதில்லை என்பது நாமறிந்ததே. இந்தக் கூட்டத்தில் யாரும் அரங்கிற்கு வெளியில் போய் நிற்கவில்லை. யாரும் கொட்டாவி விடவில்லை. யாரும் ‘எப்படா இவன் நிறுத்துவான்’என்று ஏங்குமளவிற்குத் தனக்குத் தெரிந்ததையெல்லாம் நீட்டி முழக்கிக் கொட்டவுமில்லை. ஈழப்பெண்களின் கவிதைகள் கவனிக்கப்படுமளவிற்கு உயர்ந்ததொரு தளத்தை நோக்கிப் பயணிப்பதாகக் கவிஞர் குட்டி ரேவதி குறிப்பிட்டார். கவிதை என்பதே ஒரு ‘கிராப்ட்’தான்; அது கட்டமைக்கப்படுவதாக இருக்கிறது என்று ஆதவன் தீட்சண்யா சொன்னார். எனக்கு அதில் ஒப்புதல் இருக்கவில்லை. கவிதை என்பது இயல்பான ஒரு பொறியில் இருந்து தோன்றுவது என்பதே எனது கருத்தாக இருந்தது. ஏதோவொரு உணர்விலிருந்து முகிழ்க்கும் ஒரு சொல்லை அடிப்படையாக வைத்து, அதைச் சுற்றிச் சுற்றி நாம் வனைவதாகவோ புனைவதாகவோதான் கவிதை இருக்கமுடியும். முற்றிலும் கவிதை கட்டமைக்கப்படுவதில்லை என்பது எனது கருத்து. என்னுடையது ஒன்றும் தொலைக்காட்சி விளம்பரங்களில் வரும் இரும்புக்கம்பிகளையொத்த அசைக்கமுடியாத கருத்தில்லை. விவாதிக்கத்தக்கதே.

நாங்கள் நினையாப்பிரகாரமாக திருச்சியில் இலக்கியக் கூட்டமொன்றில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டோம். ஏற்கெனவே ஆதவன் தீட்சண்யாவும் பிரபஞ்சன் அவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தக் கூட்டத்தைப் பற்றிச் சொல்வதாயின், பிரபஞ்சன் அவர்களது நகைச்சுவை கலந்த பேச்சைத்தான் குறிப்பிடவேண்டும். ‘சிரிப்பால் வெட்டுவது’என்றும் அப்பேச்சைச் சொல்லலாம். ‘நடுநிலை என்றொரு புண்ணாக்கும் இல்லை’என்ற தொனிப்பட ஆதவன் தீட்சண்யா பேசினார். ஒரு பத்திரிகை என்றால் அதற்கென்றொரு நிச்சய நிலைப்பாடு இருக்கவேண்டும். அதையொட்டியே படைப்புகளும் வெளியிடப்படவேண்டும். ‘ஆதிக்கக் குரல்களும், பாதிக்கப்படுவோரின் குரல்களும் எப்படி ஒரே தளத்தில் ஒலிக்கமுடியும்?’என்பது ஆதவனின் கேள்வியாக இருந்தது.

இரண்டுநாட்களும் இலக்கியவழியில் நடந்தோம். அவர்கள் பேசியதில் எனக்குப் பாதி புரியவில்லை. இந்திய சாதியமைப்பு பற்றி ஐயந்திரிபறப் படித்துவிட்டு இம்மாதிரி ஆட்களோடு பேச அமரலாம் என்று தோன்றியது. சில சமயங்களில் நித்திரையில் சாமியாடிவிட்டு படுக்கையைச் சேரவேண்டியிருந்தது.

திருச்சியை ஏறக்கட்டிவிட்டு இராமேஸ்வரம் புறப்பட்டோம். இதற்கிடையில் எனக்கும் எங்கள் வண்டியோட்டிக்கும் இடையில் முறுகல் நிலை தீவிரமடைந்துவிட்டிருந்தது. எப்போதும் வண்டியின் வேகமுள் நூறைத்தாண்டுவதில் குறியாயிருந்தது எனக்குப் பிடிக்கவில்லை. “நாங்கள் போகவேண்டிய இடத்திற்குத்தான் போகவிரும்புகிறோம். வைத்தியசாலைக்கு அல்ல”என்று ஒன்றுக்குப் பத்துத் தடவைகளுக்கு மேல் சொல்லியும் அவருக்குப் புரியவில்லை. பயணங்களில் வேகம் பதட்டமளிக்கிறது. வெளியில் எதையும் நிதானமாகப் பார்த்து ரசிப்பதை அது தடைசெய்கிறது. வண்டி நசுங்கி எங்கள் உடல்கள் வாழைக்குலைகள் போல வெளியில் தொங்கும் கற்பனை அடிக்கடி வர ஆரம்பித்தது. நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தியபிறகு வண்டியோட்டி ‘நிதானமாக’ச் செலுத்த ஆரம்பித்தார். அதாவது நாற்பதில் வண்டி நகர்ந்து (நடந்து)கொண்டிருந்தது. ஆக, நான் போகச் சொன்ன எண்பதில் அவருக்குப் பாதிதான் புரிந்திருக்கிறது. ‘இந்தப் பொட்டைக் கழுதைங்க நம்மை என்ன சொல்வது?’என்ற வரிகளை அவரது முகத்திலிருந்து வாசித்தறிய முடிந்தது. ‘வண்டியை நிறுத்து. நாங்கள் இறங்கிக்கொள்கிறோம்’என்று குரலை உயர்த்தியபிறகே, தனது வீட்டுப் பெண்களை அதட்டுவதுபோல எங்களை அதட்டமுடியாது என்பதை உணர்ந்தவராக எண்பதில் ஓட்டவாரம்பித்தார். அதன்பிறகு வீடு வந்து சேரும்வரை வேகமுள் எண்பதிலிருந்து இம்மியும் அங்கிங்கு அசையவில்லை.

எங்கே போனாலும் இணையத்தில் ஈழம் தொடர்பான செய்திகளை ஒருநாளுக்கு ஒருமுறையேனும் பார்த்துவிடவேண்டும் என்ற தவிப்பில் இருந்தோம். அன்று தமிழ்நெற்றைப் பார்த்தபோது தலைசுற்றியது. வன்னியில் அகதிகளாக இருந்த மக்கள் மீது இலங்கை இராணுவம் எறிகணை வீச்சு நடத்தியதில் முன்னூறுக்கும் மேற்பட்ட மக்கள் ஒரே நாளில் இறந்திருந்தார்கள். ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்திருந்தார்கள். அந்தக் காட்சிகளையெல்லாம் நேரடியாகப் பார்த்த ஒருவரது குரலைப் பதிவுசெய்து இணையத்தில் இட்டிருந்தார்கள். “என்னைச் சுற்றவர மனிதர்கள் இறந்து கிடக்கிறார்கள். சதைத்துண்டுகள் சிதறியிருக்கின்றன. இரத்தம் வீதிநெடுகிலும் ஓடுகிறது. குழந்தைகள் பயத்தாலும் பசியாலும் அலறிக்கொண்டிருக்கிறார்கள். எனது கண்முன்னால் ஒருவர் உயிரிழந்த உடலொன்றைத் துவிச்சக்கரவண்டியின் பின்பக்கத்தில் வைத்து கயிற்றினால் கட்டி எடுத்துப்போய்க்கொண்டிருக்கிறார். இரவு நெருங்கிக்கொண்டிருக்கிறது. இங்கே எனக்குப் பக்கத்தில் இந்த மரணக்களத்தில் எஞ்சியிருக்கும் இத்தனை ஆயிரக்கணக்கானவர்களுக்கு சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லை”என்று குரல் நடுங்க அவர் சொன்னார். வண்டியிலிருந்து குதித்து இறங்கி எங்காவது ஓடிப்போய்விட வேண்டும் போலிருந்தது. கைகளை மடக்கி எதிரிலிருக்கும் எதனையாவது துவம்சம் செய்யவேண்டும்போலிருந்தது. நான் விம்மி வெடித்து அழுதேன். அது ஒன்றுதான் என்னால் செய்யமுடிந்தது. தோழி செய்வதறியாமல் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார். ‘அழுவாதீங்க அக்கா’என்றார் வண்டியோட்டி. அழுது முடித்து வேறு வேலைக்குத் திரும்ப நாங்கள் இப்போதெல்லாம் பழகியிருக்கிறோம். பல்துலக்குவதுபோல, தலைவாருவதுபோல அழுவதும் பின் தெளிவதும் சாதாரண நிகழ்வாகிவிட்டிருக்கிறது.

பாம்பன் பாலத்தில் காற்று சுழற்றியடித்தது. கடல் பச்சை நிறமாயிருந்தது. எங்களைப் போலவே நிறையப் பேர் கடலை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்கள். ‘கப்பல் வரும்போது இந்தப் புகையிரதப் பாதை விலகி வழிவிடும்’என்றார் தோழி. அதே போல ஒரு பாதை கனடாவின் நயாகரா நீர்வீழ்ச்சிக்குப் போகும் வழியில் இருப்பது நினைவில் வந்தது.

இராமேஸ்வரம் யாத்திரீக நகரங்களுக்கேயுரிய முகக்களையோடிருந்தது. கடலில் முங்கிக் குளித்துக்கொண்டிருந்தவர்களுள் அநேகர் வடநாட்டுக்காரர்களாக இருந்தார்கள். உள்ளுர் பிராமணர்கள் வெளியூர் பிராமணர்கள் போல தோற்றமளித்தவர்களின் இறந்த உறவினர்களை மந்திரங்களால் குளிர்மைப்படுத்திக்கொண்டிருந்தார்கள். காற்று பல மொழிகளை ஏந்தி வந்தது. கடற்கரை துணிக்குவியலும், குப்பையுமாக கால்வைக்கக் கூசுமளவு அழுக்காக இருந்தது. அந்த அழுக்குக்குள் எதையோ கிண்டியபடி மாடுகள் வாயசைத்துக்கொண்டிருந்தன. இராமேஸ்வரத்திலும் சிவப்பு நிறச் சேலை கட்டிய நிறையப் பெண்களைப் பார்த்தேன். அவர்கள் மேல்மருவத்தூர் போய்விட்டு அப்படியே வந்தவர்களாயிருக்கும். அதே போல திரும்பும் வழியில் மஞ்சள் நிறச் சேலை கட்டிய பெண்கள் கூட்டமொன்று இளைப்பாறிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். ‘அவர்கள் சமயபுரம் போய்விட்டு வருகிறார்கள்’என்றார் தோழி. ஆக, பெண்களின் சுற்றுலா மையங்களும் கோயில்களாகவே இருக்கின்றன.

இராமேஸ்வரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதி அறை பரவாயில்லை ரகம்தான். ஆனால், அறையின் பின்புறம் இருந்த கடல் குறைகளை மூழ்கடித்துவிட்டது. அவசரமாகக் கிளம்பி தனுஷ்கோடி பார்க்கப் போனோம். எல்லா இடங்களிலும் காசு பிடுங்கும் கூட்டமொன்று வாயைத் திறந்துவைத்துக்கொண்டு காத்திருப்பது போல இங்கேயும் இருக்கிறது. தனுஷ்கோடிக்கரைக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களை ஒழுங்குசெய்பவர்கள் மிகுந்த தந்திரக்காரர்களாயிருந்தார்கள். இருபது பேர் சேர்ந்தவுடன் ஒரு வாகனத்தில் ஏற்றி அனுப்புகிறார்கள். எங்கள் இருவருக்கும் முதல் வந்த வாகனத்தில் இடம் கிடைக்கவில்லை. ‘தனி வாகனம் எடுத்துக்கொள்ளுங்கள் 1200ரூபாதான்’ என்றார்கள். நாங்கள் மறுத்துவிட்டோம். பிறகு வந்த வாகனத்திலும் எங்களுக்கு இடம் கிடைக்காதபடி அவர்களே முன்னின்று முகாமைத்துவம் செய்து சனங்களை அடைத்துவிட்டார்கள். எங்களுக்கு ஏதோ புரிவது போலிருந்தது. தனியாக அழைத்துச் செல்வதனால் அவர்களுக்கு இலாபம் 1200 மட்டுந்தானா…? அதற்கும் மேலா…? என்று நாங்கள் யோசிக்க ஆரம்பித்தோம். அப்போது பார்த்து ஒரு வாகனம் வந்தது. அதில் நாங்கள் ஏறிக்கொள்ளக் கேட்டபோது, அது ஒரு குடும்பத்திற்கு மொத்தமாக முன்பதிவு செய்யப்பட்டிருந்ததாகச் சொன்னார் அதில் இருந்தவர். அவருக்கு இளகிய முகம். நான் தோழியின் முகத்தைப் பார்த்தேன். அவர் அந்த மனிதரிடம் எங்கள் பிரச்சனையைச் சொன்னார். முதலில் அவர் மறுத்தாலும், ‘இவர்களை நம்பி நாங்கள் இரு பெண்கள் எப்படித் தனியாகச் செல்லமுடியும்?’என்ற கேள்வியின் பின் ஏற்றிக்கொள்ளச் சம்மதித்தார். எங்களை ஏமாற்றலாம் என்று காத்திருந்தவர்களின் முகங்களை, சூழ்ந்துவந்த இருள் முழுவதுமாக மூடிக்கொண்டாற்போலிருந்தது. சற்றைக்கெல்லாம் ஒரு பெரிய பெண்கள் கூட்டம் பொங்கி வழியும் சிரிப்பும் பேச்சுமாக வந்து வண்டியில் ஏறிக்கொண்டது. எல்லோரும் ஒரே அச்சில் வார்த்த மாதிரி இருந்தார்கள். அறுபதிலிருந்து ஒன்றரை வயது வரை என பிராயம் மட்டுந்தான் வித்தியாசம். தங்களுக்குப் பூர்வீகம் திருநெல்வேலி என்றார்கள். தோழி ‘எனக்கும் திருநெல்வேலி பக்கந்தான்’என்றதும் முகமெல்லாம் அப்படியொரு வெளிச்சம் மின்ன ஒட்டிக்கொண்டார்கள்.

ஒழுங்கற்ற பாதையில் வண்டி விழுந்தெழும்பிப் போனது. ஏறத்தாழ இருபது நிமிடங்கள் பயணித்தபின் தனுஷ்கோடிக் கரையைச் சென்றடைந்தோம். தனுஷ்கோடியில் சொல்லில் எழுதமுடியாத அதிர்வுகளை உணர்ந்தேன். அந்தக் கடல் நான் எங்கும் பார்த்த கடல்போல இல்லை. அலை வந்து உடையும் ஓசைகூட வித்தியாசமாக இருந்தது. அந்த மாலைப்பொழுதின் தனிமையில் அது என் மனதின் கற்பிதமாயிருக்கலாம். காலத்தின் மீதமென நின்றுகொண்டிருந்தன தூர்ந்த செங்கற் கட்டிடங்கள். காய்ந்து பொருக்குத் தட்டிய மலக்குவியல்களால் கவனமாகப் பார்த்து கால்வைத்து நடக்கவேண்டியிருந்தது.

இந்த இடத்தை வாழத் தேர்ந்தெடுத்த மனம் எத்தகையதாக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். இங்கே குழந்தைகள் விளையாடியிருக்கும்… இங்கே காதலர்கள் அமர்ந்திருந்திருப்பார்கள்… இங்கே முழுநிலவில் கூடிப் பேசியிருப்பார்கள். இத்தனை சாதுவாக இருக்கும் கடலா இவர்களை விழுங்கியிருக்கும்? அடியறுத்திருக்கும்?

தனுஷ்கோடி என்றதும் எப்போதும் நினைவில் வருவது குழந்தைகளும் கையுமாக வந்து இறங்கும் அகதிகள்தான். இந்தக் காற்றில் அவர்களின் அழுகுரல் கலந்திருக்குமோ…? நான் இப்போது நின்று கொண்டிருக்கும் இடத்தில் அவர்கள் ஏங்கிய விழிகளுடன் காத்திருந்திருப்பார்களோ? கடல் முடியும் இடத்தில் மரங்களின் சாயல் சாம்பல் நிறத்தில் தெரிந்தது. தனுஷ்கோடி எனக்கு மன்னாரை ஏதோவொரு விதத்தில் நினைவுபடுத்துவதாகத் தோழியிடம் சொன்னேன். அக்கரையைக் கொஞ்சநேரம் வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். மனம் பாரமேறிக் கிடந்தது. ‘தனுஷ்கோடியைப் பற்றி கோணங்கிக்குத்தான் நிறையத் தெரியும்’ என்றார் தோழி.

இருள் முழுவதுமாக மூடவாரம்பித்தது. நாங்கள் எங்களோடு வந்தவர்களுடன் வாகனத்தில் ஏறிக்கொண்டோம். சிறுபுதர்களும் கடல் மணமும் மணல்வெட்டைகளும் அன்று கனவில் வந்தன.

**** ***** ****
காலையிலேயே எழுந்து சிவன் கோயிலுக்குப் போய்விட்டு மண்டபம் அகதி முகாமுக்குச் செல்வதாகத் திட்டமிட்டிருந்தோம். கோயில் முழுவதும் சொதசொதவென்று ஈரமாக இருந்தது. இராமேஸ்வரக் கடலில் மூழ்கியெழுந்து அப்படியே ஈர உடைகளோடு கோயிலை வந்து தரிசித்தால் பலன் கிடைக்கும் என்பது ஐதீகமாம். ஈரச்சேலை காலைப் பிடித்து இழுக்க, முக்காடு போட்ட நிறைய வடநாட்டுப் பெண்கள் சுடுமணல் நடையில் சுவாமி தரிசனம் செய்தார்கள். தொந்தி பெருத்த ஆண்களுக்கும் குறைவில்லை. ஆன்மீகம் என்பது கேள்வி கேட்கப்படாத பல விசித்திரமான பழக்க வழக்கங்களை உடையதென்பதைத் தவிர்த்து எனக்குப் பெரிய அபிப்பிராயங்கள் இல்லை. இந்த விடயத்தை யாராவது இருத்தி வைத்து உபதேசித்தாலும் எழுந்தோடவே பார்க்கிறது மனம்.

மண்டபத்தில் எங்களுக்குக் கிடைத்த ‘மண்டகப்படி’யை வாழ்வில் மறக்கமுடியாது. அனுமதி பெற்றே உள்ளே செல்லவேண்டும் என்று பலர் சொல்லியிருந்தாலும், நாங்கள் பார்த்துவரப் போன பெண் ‘இல்லை.. முகாமில் தங்குவதென்றால் மட்டுந்தான் அனுமதி பெறவேண்டும். நீங்கள் எனக்குப் பின்னால் வாருங்கள்’என்று சொல்லியதை நம்பி உள்ளே காலடி எடுத்துவைத்தோம். வாசற்காவலர் போலிருந்த ஒருவர் ‘யாரைக் கேட்டு உள்ளே போறீங்க?’என்றார். அத்தோடு நிறுத்தியிருந்தாலாவது பரவாயில்லை. ‘இந்த மண்ணுல நிக்கிறவரைக்கும் நீ அகதிதான்… அது நினைப்புல இருக்கட்டும்… ஏதோ தொறந்த வூட்டுல நொழையுற மாதிரி நொழையுற’என்றார். ‘தேவையில்லாத டயலாக்கை எங்கள் மீது ஏன் பிரயோகிக்கிறார்… இதை வேறு யாருக்காவது முற்கூட்டியே தயார்செய்துவைத்துக் கொண்டு காத்திருந்து, அவர் வராமற் போன கடுப்பில் அவ்வார்த்தைகளை வியர்த்தமாக்கக்கூடாதென்று எங்கள் மீது பிரயோகிக்கிறாரா?’என்றெல்லாம் யோசனை எழுந்தது. சூடாக ஏதாவது சொல்லவேண்டுமென்று உதட்டுக்குள் சொற்கள் முண்டியடித்தன. ஆனால், காரியம் முக்கியம் என்பதனால் அப்பாவிகளாக முகத்தை வைத்துக்கொண்டு நின்றோம். ‘போய் கலெக்டர்ட்ட பர்மிசன் வாங்கிட்டு வாங்க’என்றார். பக்கத்துப் பெட்டிக்கடையில் அனுமதிப்பத்திரம் வாங்கி நிரப்பி கலெக்டரின் வாசல் முன் காத்துக்கிடந்தோம். அதற்கிடையில் ‘எதுக்கு வந்தீங்க?’என்று வெளியில் நின்றவர் ஒரு குட்டி விசாரணை நடத்தினார். சுவர்களுக்கும் அங்கே காதுகள் இருந்தன. அருகிலும் தொலைவிலும் பல கண்கள் எங்களைக் கவனித்துக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. திரும்பிப் போய்விடலாமென்று தோன்றிக்கொண்டேயிருந்தது. கலெக்டர் ஒரு மணி நேரம் உள்ளே போய்வர அனுமதி தந்தார்.

நுழைந்தவுடன் ஒரு சிறிய எட்டடிக்கு எட்டடிக் கூடம். அதனையடுத்து சின்னதாய் ஓர் அறை. அதுதான் சமையலறையும் படுக்கையறையும். அதைப் பார்த்தபோது ‘பொங்க ஒரு மூலை… புணர ஒரு மூலை’என்ற கவிதை நினைவில் வந்தது. மின்விசிறி காற்றுக்குத் தவியாய் தவித்துக்கொண்டிருந்தது. அப்படியொரு அறைக்குள் மூன்று மாதக் குழந்தையொன்று வெகு அழகாய் ஒரு பெரிய தக்காளிப்பழம் போல என் மடியில் அமர்ந்திருந்தது. அதன் முகத்தைப் பார்க்கப் பார்க்கக் கலங்கியது. ஆனால், அவர்கள் உயிரோடிருக்கிறார்கள்; சாப்பிடுகிறார்கள்; நிம்மதியாக உறங்குகிறார்கள். இன்றைய கொலைக்காலத்தில் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

**** ***** *****
இராமேஸ்வரத்திலிருந்து மதுரைக்குப் போய், அந்த ‘உறங்கா நகரத்தை’அனுபவிப்பது என்ற எங்கள் திட்டம் மதுரை இளவரசர் மு.க.அழகிரியால் பிழைத்துப் போயிற்று. நாங்கள் நகரத்திற்குள் நுழைந்தபோது திரும்பிய இடமெல்லாம் மு.க.அழகிரியின் ‘கட் அவுட்’களைக் கண்டோம். ‘எங்கள் பிடல் காஸ்ட்ரோவே’, ‘எங்கள் குடும்பத் தலைவனே’(?), ‘எங்கள் நேதாஜியே’, ‘மதுரையின் மாமன்னனே’என்ற ஆளுயர எழுத்துக்களாலான அதியுயர்ந்த ‘கட் அவுட்’கள் எங்களைக் கலங்கடித்தன. விசாரித்ததில் மறுநாள் அவருக்குப் பிறந்தநாள் என்று சொன்னார்கள். ஓரளவு மரியாதைப்பட்ட விடுதிகளெல்லாம் ‘கொண்டாட’ வந்திருந்தோரால் நிறைந்திருந்தன. நேரே திருச்சிக்குப் போய்விடலாம் என்று நான் சொன்னேன். வந்ததுதான் வந்தோம் மதுரை மீனாட்சியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்துவிடலாமென்று போனோம். சுற்றி மாளாத கருங்கல் காவியம் அது.
திருச்சிக்கும் எங்களுக்கும் அப்படியொரு பிராப்தம். திட்டத்தில் இல்லாத நகரம் எங்களைத் திரும்பத் திரும்பத் தன்னிடம் இழுத்தது. நள்ளிரவு கடந்து நாங்கள் விடுதியை வந்தடைந்தபோது ஊர் உறங்கியிருந்தது. அறைப்பையன் ஒருவன் சுவரில் சாய்ந்து வாய்திறந்து தூங்கிக்கொண்டிருந்தான். மணிச்சத்தத்தில் விழித்து பைகளை எடுத்துக்கொண்டு அறைக்கு விரைந்தவனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. எந்தக் கிராமத்து மடியிலோ உறங்கிக்கொண்டிருந்தவனை பணத்தேவை நகரத்தின் பெருவாயுள் திணித்திருக்கும்.
**** **** ****
நாங்கள் திரும்பிவந்த வழி மிக அழகானது. பச்சை ததும்பி வழியும் வயல்களைக் காற்று சலிக்காமல் வருடிக்கொண்டேயிருந்தது. மரங்களின் செழிப்பைப் பார்த்து ‘அப்படியே கடித்துத் தின்னவேண்டும் போலிருக்கிறது’என்றேன். தோழி வினோதப் பிராணியைப் பார்ப்பதுபோல என்னைப் பார்த்தார். ஆடுகள் கூட்டம் கூட்டமாகக் சாலையைக் கடந்துபோயின. தமிழ் சொட்டும் பெயர்களோடு ஊர்கள் எதிர்ப்பட்டன. தமிழகம் இத்தனை அழகானதா என்று அடிக்கடி வியக்கத் தூண்டிய பாதை அது. நிறைய சிற்றோடைகளை வழியில் நாங்கள் பார்த்தோம்.

வீடு வந்து சேர்ந்து சில நாட்களுக்கு ஓடிக்கொண்டிருப்பதுபோலவே இருந்தது. கண்ணை மூடினால் காடும் மரமும் வயலுமாய் கூடக் கூட ஓடிவந்தன. சில மாதங்களுக்கேனும் வீட்டோடு இருந்து இம்முறை வாங்கிய புத்தகங்களை வாசித்து முடித்துவிடவேண்டுமென்று சங்கற்பம் செய்துகொண்டேன். சங்கற்பங்களின் ஆயுளைப் பற்றி நானும் நீங்களும் அறியாதவர்களா என்ன? நாம் உறங்கிப்போனபிறகு, நம்மைக் குறித்து புத்தகங்கள் தமக்குள் கிசுகிசுத்துச் சிரித்துக்கொள்ளும்போலும்!
நன்றி: உயிரோசை



3.10.2009

நாற்றமெடுக்கும் அரசியலும் நாற்காலிச் சண்டைகளும்…


தேர்தலையொட்டி வெளியாகும் செய்திகளையும் அரசியல்வாதிகளின் அறிக்கைகளையும் பார்க்கும்போது மனிதர்கள் இத்தனை குரூரமாகவும் தந்திரமாகவுமா இருப்பார்கள் என்று வியந்து மாளவில்லை. அ.தி.மு.க., தி.மு.க. ‘எசப்பாட்டு’ கச்சேரிகளில் ஈழத்தமிழர்களின் தலை உருளாமல் இருந்தாலாவது ‘போங்கய்யா நீங்களும் உங்கள் புண்ணாக்கு அரசியலும்’என்று புறக்கணித்துவிடலாம். ஆனால், தேர்தல் விருந்துபசாரத்தில் ஈழத்தமிழர்களின் குருதி அவர்களுக்கு மதுவாயிருப்பதும், சிதறிய சதைத்துண்டுகள் உணவாயிருப்பதும்தான் வருத்துகிறது. பிணங்களின் மீது மேடை அமைத்து அப்போதுதான் உருவியெடுத்த குடலை ஒலிவாங்கியாக்கி பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, சுயநலத்தின் நிர்வாணம் அருட்டுகிறது.

கடைசி மூச்சுக்கூட ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தபடிதான் பிரியவேண்டும் என்று அடாவடியாக அடம்பிடிக்கிற கலைஞருக்கு, ஈழத்தமிழர்களின் மனங்களில் தான் என்னவாக இருக்கிறேன் என்பது இன்னமும் புலப்படவில்லையா? ‘நீலி’என்றும் ‘சாத்தான்’என்றும் அண்மையில் மேலதிக பட்டங்களைப் பெற்ற ஜெயலலிதா அம்மையார், கால மறதியின் மீது வைத்திருக்கும் அளவுக்கதிகமான நம்பிக்கையையும் பாராட்டத்தான் வேண்டும். வாக்குகளுக்காக எல்லோரும் ஏறும் மேடையில்(ஈழத்தமிழர்களின் பாடையில்) நாமும் ஏறித்தான் பார்ப்போமே என்று உண்ணாவிரதத்தில் குதித்திருக்கிறார். வாக்காளர் அட்டை என்னும் துருப்புச் சீட்டைக் கையில் வைத்திருக்கிறவர்களே தொடர்ந்து தோற்றுக்கொண்டிருக்கிற பரிதாபத்தைத் தமிழகத்தில்தான் காணமுடியும். தேர்தலின் முன் ராஜாக்களாகவும் தேர்தல் முடிந்ததும் ஜோக்கர்களாகவும் பார்க்கப்படும் மக்களே இங்கு பரிதாபத்திற்குரியவர்கள்.

‘காங்கிரசுக்கும் தி.மு.க.வுக்கும் இடையிலான கூட்டணி பலமாக இருக்கிறது… திடமாக இருக்கிறது’என்று கலைஞர் மீண்டும் மீண்டும் தனது வார்த்தைகளைத் தானே நம்பாததுபோல அறிவித்துக்கொண்டிருக்கிறார். ‘ஆம்… ஆம்.. நாங்கள் உங்களோடுதான் இருக்கிறோம்’என்று அவர்களும் ஏதோ ‘நெருடும்’ குரலில் வழிமொழிந்துகொண்டுதானிருக்கிறார்கள். காங்கிரஸ் ஈழத்தமிழர்களை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் அனுப்பும். அந்த ஆயுதப் பரிவர்த்தனையைக் கண்டுகொள்ளாத கலைஞர், அவ்வாயுதங்களால் அழிக்கப்படும் ஈழத்தமிழர்களுக்காக இரங்கி அறிக்கை அம்பு விடுவார். இந்திய அரசு நோயும் நானே… நோய்க்கு மருந்தும் நானே என்று, ‘திருவிளையாடல்’ பாணியில் பாடாத குறைதான். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் மருத்துவர் குழுவடங்கிய விமானம் இந்தியாவிலிருந்து ஈழத்திற்குப் புறப்பட்டிருக்கிறது. இந்த முரண்நகைகளையெல்லாம் கசப்பானதொரு புன்னகையோடு பார்த்துத்தொலைக்கவேண்டியிருக்கிறது.


‘கலைஞரைப் புரிந்துகொள்ளவே முடியவில்லை’ என்று சொன்னால் அது தவறு. தான் பேசுவது இன்னதென்று அவர் புரிந்தே பேசுகிறார். ‘ஈழத்தில் நடக்கும் மனிதப்பேரவலங்களையிட்டு நான் மனம்வருந்துகிறேன்’என்று ஒருநாள் அறிக்கை விடுவார். அதே ஈழத்தமிழர்களுக்காகத் தன்னைக் கொளுத்திச் செத்துப்போன முத்துக்குமார் என்ற, மானுடத்தின்பால் பேரன்பு மிக்க இளைஞனது தீக்குளிப்பைக் கண்டும்காணாதது போல கண்மூடியிருப்பார். அந்தச் சோதிப்பெருஞ்சுடரின் தியாகத்தை ‘தீக்குளிப்பது தீவிரவாதச் செயல்’என்று சொல்லி மின்மினியாக்கி அணைத்துவிடுவார்கள் அவரைச் சார்ந்தவர்கள். ஈழத்தமிழர்களுக்காக இரங்குகிறார் என்றால், முத்துக்குமாரின் மரணத்தையடுத்துப் பொங்கியெழுந்த மாணவர்களது உணர்வுகளுக்கு, எழுச்சிக்குத் தடைபோடும்வகையில் விடுதிகளையும் கல்லூரிகளையும் மூடியது எதனால்? இத்தனை காலம் கழித்து தமிழகம் எழுந்ததே என்று கொண்டாடியிருக்கவேண்டாமா ‘தமிழினத் தலைவர்’!

உண்மையை உரத்துப் பேச இங்கு ஒரு சிலர்தான் உண்டு. அந்த ஒரு சிலரில் உண்மையும் நாவன்மையும் ஒருசேரப் பொருந்திய சீமான், புதுச்சேரியில் வைத்து உண்மைகளைப் போட்டுடைத்தார் என்ற காரணத்திற்காகச் சிறையில் தூக்கிப் போட்டார்கள். ‘விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார்’ என்று கொளத்தூர் மணி அவர்களையும் சிறையிலடைத்தார்கள். தினம் தினம் செத்து மடியும் சகோதரர்களுக்காகக் குரல்கொடுப்பது பயங்கரவாதச் செயலாயிருக்கிறது. இராஜபக்ஷ என்ற இரக்கமற்றவனுக்குத் துணைபோகிறவர்களை உரத்துக் கேள்வி கேட்பது அதிகாரத்தின் செவிகளில் நாராசமாய் விழுகிறது. அதே விடயத்தை வேறு வார்த்தைகளால் ‘போரை நிறுத்து’என்று தி.மு.க.வினரும்தான் கேட்டார்கள். ஒப்புக்காகவேனும் காங்கிரஸாரும் கேட்கிறார்கள். ‘ஏனடா கொலைசெய்கிறாய் பாவிப்பயலே’என்று சீமான் அறச்சீற்றத்தோடு கேட்டதுதான் தவறாகிவிட்டது. இந்தியாவின் போர்நிறுத்த வேண்டுகோளை எள்ளல் புன்னகை இதழ்க்கடையில் வழிந்தோட ராஜபக்ஷேவும் கோத்தபாயவும் பார்த்துக்கொண்டிருக்கவில்லையா? இந்தியா அடிக்கிறமாதிரி அடிக்கிறது@ இலங்கையோ அழுகிற மாதிரி அழுகிறது. இந்தப் பிரம்ம இரகசியம் எல்லோருக்கும் தெரிந்துதான் இருக்கிறது.

உண்மையைப் பேசினால் காராக்கிரகம் என்பதே எல்லா அரசுகளதும் நிலைப்பாடாயிருக்கிறது. ஜனநாயகம், எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் என்பதெல்லாம் அகராதியில் முடக்கப்பட்ட சொற்களாகிவிட்டன. நிமலராஜன், தராக்கி, லசந்த, அண்மையில் வித்தியாதரன் என்று நீள்கிறது இலங்கை அரசின் பட்டியல். ஊடகக்காரர்களுக்குப் பாதுகாப்பில்லாத நாடுகளில் இலங்கை முதன்மையானதாக இருக்கிறதாம். இந்தியா இவ்விடயத்திலும் இலங்கையின் ‘பெரியண்ணா’வாக இருக்க நினைக்கிறாற்போலிருக்கிறது.

மறுபடியும் நமது பிலாக்கணத்துக்கு வருவோம். ஒரு ஊரிலே ஒரு மாமியார்க்காரி இருந்தாளாம். அதே வீட்டில் ஒரு மருமகளும் இருந்தாளாம். ஒரு பிச்சைக்காரன் வாசலிலே வந்து ‘அம்மா பிச்சை’என்றானாம். மருமகள் எழுந்துவந்து ‘பிச்சை இல்லைப் போ’என்றாளாம். பிச்சைக்காரன் ஏமாற்றத்தோடு திரும்பிப்போகும்போது மாமியார்க்காரி கூப்பிட்டாளாம். ‘இவங்க ஏதோ போடப்போறாங்க. நல்லவங்க’என்று நம்பிக்கையோடு பிச்சைக்காரன் திரும்பிவந்தானாம். ‘பிச்சை இல்லையென்று அவ என்ன சொல்றது… நான் சொல்றேன்… பிச்சை இல்லைப் போ’என்றாளாம் மாமியார்க்காரி.
மேற்சொன்ன கதை ஞாபகத்திற்கு வரும்படியாக அடிக்கடி சம்பவங்கள் நடந்துதொலைக்கின்றன. பழ.நெடுமாறன் அவர்களது தலைமையிலான ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கமோ அதுபோன்ற வேறு ஏதாவது அமைப்புக்களோ கூட்டங்களை நடத்தத் திட்டமிடுவார்கள். அதற்கு தமிழக காவற்துறை அனுமதி வழங்க மறுத்துவிடும். அதே போன்றதொரு கூட்டத்தை தி.மு.க.நடத்தத் தடையேதுமில்லை. ஆக, சட்டம் என்பது கை வலுத்தவனின் கையாள் ஆகிறது. ‘ஈழத்தமிழர்களைக் கொன்றழிக்காதே என்று நீ என்ன சொல்வது… அதையும் நான்தான் சொல்வேன்’என்ற தொனி புலப்படுகிறதல்லவா? ‘செத்த வீடானால் நான்தான் பிணம்...கல்யாண வீடானால் நான்தான் மாப்பிள்ளை’என்று சொல்வார்களே…. அதுபோல.

எல்லா இடங்களிலும் தாமே துருத்தித் தெரியவேண்டும் என்று மாநில அரசு முண்டியடித்ததன் விளைவுதான் வழக்கறிஞர்களின் தலைகளில் அடியாக விழுந்திருக்கிறது. முத்துக்குமார் பற்றவைத்துவிட்டுப் போன தீ வழக்கறிஞர்களுக்கிடையில் பற்றியெரிந்தால், காங்கிரசின் மீதான தி.மு.க.வின் விசுவாசம் என்னாவது? ‘மறக்கவும் மாட்டோம்… மன்னிக்கவும் மாட்டோம்’என்பதே காங்கிரசாரின் தாரக மந்திரமாக இருக்கும்போது ‘தமிழர்களை மறந்துவிடுவோம்… வரலாறு நம்மை மன்னித்துவிடும்’என்பதாகத்தானே பிற்பாட்டு அமையவேண்டும்! அதை மீறும் எவர் மீதும் சட்டம் பாய்கிறது. காவற்துறையின் செயலுக்கு கலைஞர் அவர்கள் பொறுப்பில்லை என்றால், காவற்துறை மாநிலத்தை ஆள்பவரின் கட்டுப்பாட்டுக்குள் இல்லையா? ஈழத்தமிழனை இலங்கை இராணுவம் அடிக்கிறது. ஈழத்தமிழனுக்காகப் பேசுபவனை இங்குள்ள காவற்துறை மிரட்டுகிறது. ஆக, வாளேந்திய சிங்கத்திற்கும் தூணேந்திய சிங்கங்களுக்கும் ‘தமிழர் ஒவ்வாமை’நோய் எனக் கொள்ளலாமா?

‘எல்லா மாடும் ஓடுதுன்னு வயித்து மாடும் கூட ஓடிச்சாம்’என்று சொல்வார்கள். ஜெயலலிதா அம்மையாரின் உண்ணாவிரத அறிக்கையைப் பார்த்தபோது அதுதான் நினைவில் வந்தது. ‘போர் என்றால் மக்கள் சாகத்தானே செய்வார்கள்’என்று திருவாய் மலர்ந்தருளியவர் இதே தேவியார்தான். ஒவ்வொரு காலத்திற்கென்று ஒவ்வொரு நாகரிகம் புதிது புதிதாகப் பிறக்கும். கால் விரிந்த பெல்பொட்டம், தோள்வரை தலைமயிர் வளர்த்தல் இப்படியாக. அந்தச் சாயலில் தேர்தல் காலத்திலும் சில காய்ச்சல்கள் பரவும். வரவிருக்கும் தேர்தலின்போது கட்சிகள் தூக்கிப்பிடிக்கும் கொடி ‘ஈழப்பிரச்சனை’யாயிருப்பது வருந்தத்தக்கதே. அங்கே நாளாந்தம் ஒருவேளைச் சாப்பாடு கூட இல்லாமல் குழந்தைகள் செத்துக்கொண்டிருக்கிறார்கள். பசியால் குடல் உள்ளிழுத்து முறுக்கி கண்கள் இருண்டு தண்ணீருக்காய் தவித்து விழுந்து இறந்துகொண்டிருக்கிறார்கள் வன்னியிலுள்ள தமிழர்கள். இறந்தவர்களை எடுத்துப் புதைக்கப் போகும்போது எறிகணை தாக்கி மண்ணில் சரிவது சாதாரண நிகழ்வாயிருக்கிறது. அத்தகைய பேரழிவின் மத்தியில், பட்டினியின் பிடியில், மனச்சிதைவின் விளிம்பில் மரணம் வரும் நொடியை எண்ணிக்கொண்டிருப்பவர்களது பிணங்கள் மீது அரசியல் நடத்தும் எவரும் மனிதர்கள் என்ற வரையறைக்குள் அடங்கமாட்டார்கள்.
தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் அம்பலத்தேறி ஆடுவதுபோல பா.ம.க.ஆடவில்லையே தவிர, வளைய வேண்டிய இடத்தில் வளைந்து குனிய வேண்டிய இடத்தில் குனிந்து சரியாகத்தான் நடந்துகொண்டிருக்கிறது சங்கதி. மருத்துவர் அய்யா மதிப்பிற்குரிய சோனியா அம்மையாரைச் சென்று சந்தித்து சமரசம் பேசியிருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. தானாடாவிட்டாலும் மத்தியிலுள்ள தன் வாரிசுக்காக காவடி ஆடவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு. ஈழத்தமிழர்களுக்காகத் தீக்குளித்து எரிந்த தியாகிகளுடைய ஈமச்சடங்கு நிகழ்வுகளில் கலந்துகொண்டு இனவெறியை எதிர்த்துக் குரல்கொடுக்கும் ராமதாஸ் ஐயா ஒரு முகம் என்றால், மத்தியில் மகனை அமர்த்தி, தமிழகத்தில் தன்னை நிலைநிறுத்தப் போராடும் இருப்பின் தவிப்புத் தெறிக்கும் மற்றுமோர் முகமும் மருத்துவருக்குண்டு.

ஆக, இங்கே தேர்தல் கோலாகலம் ஆரம்பமாகிவிட்டது. நாற்காலிக்கான குடுமிப்பிடிச் சண்டைகளுக்கு இனிக் குறைவிராது. ‘போக மாட்டேன்.. போக மாட்டேன்’என்று அடம்பிடிக்கிறார் கலைஞர். ‘போயேன்… நானும் கொஞ்சம் ஏமாற்றுகிறேனே…’என்று முறுக்குகிறார் ஜெயலலிதா. ‘சற்றே விலகியிருங்களேன் நந்திகளா’என்று கடுக்கின்றன ஏனைய கட்சிகள். அரசியல் தெளிந்தவர்கள் இம்முறையும் ஏமாற மாட்டார்கள். இங்கு நடக்கும் இழுபறிகளை அறியாத சனங்கள், அரசியல் அறிவற்றவர்களை நினைத்தால்தான் அடிவயிற்றைக் கலக்குகிறது. ஆனால், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போவது விழப்போகும் வாக்குகள் மட்டுமல்ல என்பதை நாமறிவோம். பணமும் அரிவாளும் சாராயமும் வேட்டி சேலைகளும் சண்டித்தனமும் கள்ள ஓட்டுக்களும் ஆட்டோக்களும் அச்சுறுத்தல்களும்கூட தேர்தலில் தோன்றாத்துணையாக இருக்குமென்பதை அனைவரும் அறிவோம்.

வாழ்க பணநாயகம்! வெல்க அராஜகம்!

3.09.2009

அனானியின் அடாவடித்தனம்

அன்பு நண்பர்களுக்கு,

‘நந்திதாவுக்கு ஒரு கடிதம்’ என்று நேற்று ஒரு பதிவை இட்டிருந்தேன். சில காரணங்களால் அதை எனது வலைப்பூவிலிருந்து நீக்கவேண்டியதாகிவிட்டது. யாரையும் புண்படுத்துவது எனது நோக்கமல்ல. அதனால்தான் அந்தப் பதிவு நீக்கம்.

ஆனால், வேண்டுமென்றே சீண்டுகிறவர்களுக்குப் பயந்து ஒதுங்கிச் செல்வதும் எனது இயல்பன்று. நான் விடுதலைப் புலிகளுக்குச் சார்பான ஒரு பதிவை, அல்லது ஈழத்தைப் பற்றி ஒரு பதிவை இட்டவுடன் ‘பிரம்ம புத்திரன்’என்றொரு அனானி எங்கிருந்தோ தோன்றுவார். தான் களத்திலிருந்தே போராடுவது போலவும் நாங்கள் எல்லாம் ஒளிந்துவந்து புலத்திலிருந்து மக்களின் துயரங்களைப் பற்றி எழுதிக்கொண்டிருப்பதுபோலவும் ஒரு ‘மனிதநேய’பாசாங்கு பண்ணி, என்னைக் கடிந்து ஒரு பின்னூட்டத்தை இட்டுக் கடுப்பேற்றுவார்.

‘நீங்கள் துயரங்களை விற்கிறீர்கள்’என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டாக இருக்கும். அவரவர் மனதில் தோன்றுவதை எழுதுவதற்காகத்தான் நாங்களெல்லாம் வலைப்பூ என்ற ஒன்றைப் பயன்படுத்துகிறோம். ‘நீ இதை எழுது… இதை எழுதாதே’என்று சொல்லும் பிரம்ம புத்திரனுக்கு சுந்தர ராமசாமி அவர்களின் கவிதையை நினைவூட்ட விரும்புகிறேன். ‘உன் கவிதையை நீ எழுது… என் பதிவை நீ நோண்டுவதை நான் அனுமதிக்கமுடியாது’. பிரம்ம புத்திரனின் கடுப்பெல்லாம் அவர்களுக்குப் பிடிக்காத விடுதலைப் புலிகளை என் போன்றவர்கள் தூக்கிப்பிடிக்கிறார்கள் என்பதே. அவருடைய நோக்கத்தை அறிந்த நானும் அவரது பின்னூட்டங்களைப் பெரும்பாலும் பிரசுரிப்பதில்லை. பின்னூட்டங்களை ஏற்றுக்கொள்வதற்கும் நிராகரிப்பதற்குமான வசதி இவர்களைப் போன்றவர்களை மனதில் வைத்தே ஏற்படுத்தப்பட்டிருக்கவேண்டும்.

நேற்று ‘நந்திதாவுக்கு ஒரு கடிதம்’ பதிவிலும் அனானியாக வந்து ஒரு பின்னூட்டமிட்டார். அது கவிதை வடிவில் இருந்தது. வழக்கமான ‘அறம்பாடல்’தான் அதுவும். அதில் பிரம்ம புத்திரன் என்ற பெயர்கூட இல்லை. ஆக, தனது பெயரைச் சொல்லும் துணிவில்லை. தனக்குத் தான் சூட்டிய பெயரைச் சொல்லும் துணிவுகூட அவருக்கு இல்லை. அனானியாய் இருப்பதில் அத்தனை பிரியம். ஏனென்றால், பதில் சொல்வதிலிருந்து தப்பித்துவிடலாம் பாருங்கள். அதை வேறு யாரோ எழுதியதாக நினைத்து நான் பின்னூட்டமிட்டதும், பதறியடித்துக்கொண்டு வந்து அதை எழுதியது தான்தான் என்று பிரகடனப்படுத்துகிறார். அதை ஏன் முன்னரே செய்யவில்லை திருவாளர் பிரம்ம புத்திரரே! அத்தனை பயமா உங்களுக்கு?

‘எனது பின்னூட்டத்தை ஏன் பிரசுரிக்கவில்லை’ என்று மீண்டும் வந்து கேட்கிறார். ‘உங்கள் முகங்களைத் தோலுரிக்கும் வரிகளை அனுமதியுங்கள்’ என்று புலம்புகிறார். முன்னர் சித்திரவதை முகாம்களில் தோலுரித்துப் பழக்கமுண்டு போலும். என் முகத்தில் நான் எந்தத் தோலையும் ஒட்டிக்கொண்டிருக்கவில்லை. எனது பெயரை இட்டு கூகுலில் தேடினால் முகம் வந்துவிட்டுப் போகிறது.

‘அனானியாக வந்து ஏன் அடையாளம் இல்லாமல் எழுதுகிறீர்கள்?’என்று எப்போதோ நான் கேட்டதை நினைவில் வைத்துக்கொண்டு ‘பிரம்ம புத்திரன்’என்ற பெயரில் வலைப்பூவொன்றை ஆரம்பித்திருக்கிறார். அதன் முக்கிய நோக்கம், ‘எங்களைப் போன்றவர்களை எழுதிக் கிழிப்பதாம்’. மிக நல்லது. எழுதிக் கிழியுங்கள். தனிப்பட்ட முறையில் என் பெயரை விளித்து எழுதினால் என்ன நடவடிக்கை எடுப்பதென்று எனக்கும் தெரியும். விடுதலைப் புலிகளைத் தூக்கிப் பிடிக்கும் யாவரும் இவரைப் போன்றவர்களுக்கு எதிரிகள். ஆகாதவர்கள்.
இப்போதும் பிரம்ம புத்திரன் என்ற பெயரில் மட்டுமே வெளிப்பட்டிருக்கிறார் இந்தத் தைரியசாலி. ‘நான் பிரான்சில் இருக்கிறேன், இலண்டனில் இருக்கிறேன்’ என்று தன் இருப்பிடத்தையே வெளிப்படுத்த எதனாலோ தயங்குகிறார்.

பிரம்ம புத்திரன்,

என் இயற்பெயர் கலைவாணி. இப்போது நான் தமிழகத்தில்தான் இருக்கிறேன். முறையான விசா இருக்கிறது. தமிழ்நதி என்ற பெயரில் எழுதுகிறேன். நீங்கள் என்னை எழுதிக் கிழிப்பதற்கு என்ன இருக்கிறதென்று நானும் பார்த்துவிடுகிறேன். நான் கொலை செய்துவிட்டு இங்கு வந்து தலைமறைவாக ஒளிந்திருக்கவில்லை. என்மீது எந்த நாட்டிலும் வழக்குகள் இல்லை. நான் திருடவில்லை. விபச்சார வழக்கில் கைது செய்யப்படவும் இல்லை. உங்களைப் போன்றவர்கள் என்னை ஒன்றும் ‘பிடுங்க’ முடியாது என்பதை இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன்.

3.05.2009

சுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுகள்



சுதந்திரம் என்பது காற்று
இசையைப் போல் உயிர் வளர்க்கும்.
சுதந்திரம் என்பது ஒரு கலை
கவிதைகளை உருவாக்கும்.
சுதந்திரம் என்பது ஒரு கற்பனை
நம்மை நமக்கே பகையாக்குகிறது.
சுதந்திரம் என்பது அபாயம்
அது நம்மைச் சோதிக்கிறது.
அது நாகத்தைப் போன்றது.
கூரான கத்தியைப் போன்றது.
ஒரு விளையாட்டைப் போன்றது.
எல்லோருக்கும் சுதந்திரம் தேவை.
எவருக்கு எவரிடமிருந்து எப்படி?
சுதந்திரம் நதியைப் போன்றது.
சுதந்திரம் மரத்தைப் போன்றது.
சுதந்திரம் நிலவைப் போன்றது.
சுதந்திரம் பெண்ணைப் போன்றது.
சுதந்திரம் தாயைப் போன்றது.
சுத்தமான மனசுக்குள்
சங்கல்பமாகும் சுதந்திரம்.
நம்மை அது
நம்மிடமிருந்து விடுவிக்கும்.

-சுகந்தி சுப்ரமணியன் - 'மீண்டெழுதலின் ரகசியம்' தொகுப்பிலிருந்து...

இணையச் செய்திகள் மனச்சிதைவெனும் பாதாளத்தில் சரிக்க முயல்கின்றன. கவலைகளை மறக்க சிலர் மதுவருந்துகிறார்கள். வேறு சிலர் வீட்டிலிருந்து தப்பியோடி தனியறைகளில் தன்னிரக்க நெருப்பில் கருகிப்போகிறார்கள். சிலர் எழுத்தினைப் பற்றிப்பிடித்து இறங்கி ஓடிவிட முடியுமா என்று எத்தனிக்கிறார்கள். அதீத ‘புரட்சிக்காரர்’கள் சிலர் எழுத்தையும் மதுவையும் ஒன்றாகக் கலக்கிக் குடிக்கிறார்கள்.

அண்மையில் (28-02-2009) சுகந்தி சுப்பிரமணியன், கிருத்திகா ஆகியோரின் நினைவுகூரல் மாலதி மைத்ரியின் அணங்கு பெண்ணிய வெளி சார்பில் நடைபெற்றது. பெசன்ட் நகர் கடற்கரையோரமாக இப்படியொரு இடத்தைத் தேர்ந்து, அதில் மரமும் காற்றும் இழையும் சூழலில் நடனம் சொல்லிக்கொடுக்க வேண்டுமென்று நினைத்த நடனமணி சந்திரலேகாவின் கவிதை மனசை நினைத்து நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கவிஞர் சுகுமாரன் ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’கட்டுரைத் தொகுப்பில் குறிப்பிட்டிருப்பது இந்த இடமாகத்தான் இருக்கவேண்டும். அதைக் குறித்து எத்தனை சர்ச்சைகள் இருந்தாலும், மீன் நாற்றத்திற்குப் பதிலீடாக சலங்கைகளின் ஓசை அவ்விடத்தை நிறைப்பதானது நமது மத்தியதர மனோபாவத்தைத் திருப்தி செய்வதாகவே இருக்கிறது.

கவிஞர் மாலதி மைத்ரி, கிருத்திகாவைப் பற்றியும் சுகந்தி சுப்ரமணியனைப் பற்றியும் பேசி அந்த நிகழ்ச்சியை ஆரம்பித்துவைத்தார். கலந்துகொண்டு நான்கு நாட்களாகியும் சுகந்தியின் நினைவு அகல மறுத்து உள்ளுக்குள்ளேயே அலைந்துகொண்டிருந்தது. இத்தனைக்கும் நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. கவிதை எழுதக்கூடிய பெண்ணிலிருந்து பிறழ்நிலைவரை சென்ற மனப்பாதை எப்படி இருந்திருக்கும் என்பதைப் பற்றியே சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. கூட்டத்தில் கலந்துகொண்டு சுகந்தி பற்றிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டவரான எழுத்தாளர் அசோகமித்திரன் உட்பட பலரும் ‘சுப்ரபாரதிமணியன் மீது தவறொன்றுமில்லை… அவர் நல்லதொரு கணவனாகவே தென்பட்டார்’ என்றே சொன்னார்கள். சுப்ரபாரதிமணியனின் நண்பரான ஜெயமோகனும் தனது அஞ்சலிப் பதிவில் அவ்வாறே சொல்லியிருக்கிறார். மனம் பிறழ்ந்த ஒருவரை வைத்துக் காப்பாற்றிக்கொண்டு, குடும்பத்தின் முழுப்பொறுப்பையும் தோளில் தூக்கி நிர்வகிக்கவேண்டியதன் சிரமங்களை தோழியொருத்தி சொன்னாள்.

நினைவுப் பகிர்தல்களை மட்டும் கேட்டுவிட்டு வந்திருந்தால் ஒருவேளை மறந்திருக்கக்கூடும். ஆறே மணி நேரத்தில் தயாரானதாகச் சொல்லப்பட்ட அந்த நிகழ்த்து கலைதான் மனதைக் குடைந்து குடைந்து ஒருமாதிரிப் பித்துநிலைக்குத் தள்ளியிருக்கவேண்டும். இலக்கிய வட்டாரத்தால் நன்கறியப்பட்ட நடிகை ரோகிணி, தொலைக்காட்சியில் அடிக்கடி காணக்கிடைக்கும் மற்றோர் பெண், முகவசீகரமுடைய இன்னுமொரு பெண் (பெயரில் என்ன இருக்கிறது? :) என மூவர் அதில் பங்கேற்றார்கள்.

நீள்சதுரமான அந்த மண்டபத்தில் சச்சதுரமான துண்டொன்றின் கரை வழியாக மூவரும் நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள்…. நடக்கிறார்கள். கூடவே தேவாரம் பிழிகிறது. பிறகு சுகந்தியின் கவிதைகளால் பேசுகிறார்கள். வீட்டினுள் சிறைப்பட்டு வெளியை விழையும் அந்தக் கண்களில் கோடானுகோடி பெண்களைக் காணமுடிந்தது. சடார் சடாரென கோபத்திற்கும் கண்ணீருக்கும் பெருமிதத்துக்கும் மனச்சோர்வுக்கும் தாவும்போது நாங்கள் அவர்களானோம். ஏதேதோ பழைய நினைவுகளில் கண்ணீர் துளிர்த்தது. பெண்கள் எப்போதும் எந்நிலத்திலும் பாவப்பட்டவர்களாகவே இருக்கிறார்களே என்ற ஆற்றாமை பொங்கியது.

கவிஞர் இளம்பிறை பேசும்போது, தான் ஒருதடவை சுகந்தியைச் சந்தித்தாகவும் பேச முற்பட்டபோது அவர் ஆர்வம் காட்டாதிருந்ததாகவும் குறிப்பிட்டார். அப்படி அன்று சுகந்தி இருந்தமைக்கான காரணம் இன்று தனக்குப் புரிவதாகச் சொன்னார். அ.மங்கை, பன்னீர்செல்வம், மாலதி மைத்ரி எல்லோரும் ‘வாசுவேஸ்வரம்’பற்றிச் சொன்னதில் வாசிக்கவேண்டிய அடுத்த நாவல் அதுதான் என்று மனதிலிருத்திக்கொண்டேன். (இப்படிப் படிக்கவேண்டிய பட்டியல் நீளமாகக் காத்திருப்பதை நான் மட்டுமே அறிவேன் என்ற துணிவில் எழுதுகிறேன்) அ.மங்கை கிருத்திகாவைப் பற்றிச் சொன்னதில், தள்ளாமையிலும் தளராத கிருத்திகாவின் கம்பீரம் மனதில் தங்கியது.

நிறைய இலக்கிய ஆளுமைகள், நாடகக்காரர்கள், சினிமாவைச் சேர்ந்தவர்கள், கவிஞர்கள் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்தார்கள். லிவிங் ஸ்மைல் வித்யா, அஜயன் பாலா, உமா ஷக்தி, ச.விஜயலஷ்மி, இளம்பிறை, இன்பா சுப்பிரமணியம், நரன், பாஸ்கர் சக்தி, அ.மங்கை, அசோகமித்திரன், நடிகைகள் ரேவதி-ரோகிணி, இசை, கடற்கரய், நந்தமிழ்நங்கை இன்னும் பலர் கலந்துகொண்டிருந்தார்கள். ரேவதியின் விழிகளுக்கு இன்னமும் வயதாகவில்லை. அப்படியொரு சுடர் அதில். எனது அபிமான தாரகை அருகில் இருந்தும் ஒரு வார்த்தைகூடப் போய்ப் பேசமுடியாமல் கூச்சம் பின்னிழுத்துவிட்டது. ‘நீங்கள் இந்த நிகழ்வில் நன்றாக நடித்தீர்கள்’என்று ரோகிணியிடமும் சொல்ல நினைத்தேன். இங்கும் அதே கதை. மாலதி மைத்ரி நிகழ்ச்சியை ஒழுங்கமைத்து நடத்தினார்.

சுகந்தியை ஒரு பதிவின் மூலம் மனதிலிருந்து இறக்கிவிட முடியுமென்று தோன்றவில்லை. ‘மீண்டெழுதலின் ரகசியம்’தொகுப்பைப் படித்தேன். தனிமை தரக்கூடிய மனவிசித்திரங்கள் அவரைப் பீடிக்காமலிருந்திருந்தால், அல்லது மற்றவர்கள் சொல்வதுபோல அவ்விதம் அவர் கற்பிதம் செய்யாமலிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

வாழும்போது அருகில் இருப்பவர்களை மறந்துவிடுகிறோம். மரணத்தின் பின்னரே ‘நினைவுகூருகிறோம்’என்பது எத்தனை அமனிதத்தனமானது. ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்… நான் பழகியவர்களிடையே எனது சித்திரம் மரணத்தின் பின் எங்ஙனம் தோன்றுமென. எவ்விதம் நான் இவ்வுலகில் எஞ்சுவேன்… புத்தக வடிவிலா? நட்பார்ந்த புன்னகையாகவா? எனது நிலத்தைப் பற்றி நான் கிறுக்கி வைத்திருக்கும் பதிவுகளாகவா?

ஏன் எஞ்சவேண்டும்? இல்லாமல் போனபின்னும் இருக்க விளையுமளவு இந்த வாழ்க்கை என்ன இனிமையாகவா இருந்தது? மார்ச் 8இல் பெண்கள் தினம் வருகிறது. வானொலிகளிலும் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் நிறையப் பொய்களைக் கேட்கவும் பார்க்கவும் வேண்டியதாயிருக்கும் என்று நினைக்கிறேன்.