3.26.2009

எனக்குப் புதிர்களைப் பிடிக்கும்; நகுலனையும்.....


சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு மனஇருட்டும் புழுக்கமும் வந்து கவிந்துகொள்வதை அவதானித்திருக்கிறேன். ஆனால், புகைப்படங்கள் (அண்மைய ஈழப்படுகொலைகள் தவிர்த்து) அழுகைக்குள் விழுத்தும் துயரத்தைத் தந்ததாக நினைவில்லை. நகுலனின் புகைப்படங்கள் அடங்கிய ‘கண்ணாடியாகும் கண்கள்’ மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அந்தப் புகைப்படங்களை காஞ்சனை சீனிவாசன் எடுத்திருந்தார். நகுலனின் கவிதைகளை உள்ளடக்கி காவ்யா பதிப்பக வெளியீடாக அது வந்திருந்தது. எப்போது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும் அதிலிருந்து தனிமை சொட்டுவதாகத் தோன்றும். நாற்காலியின் அமர்ந்து கண்களை மூடி நெற்றிப்பொட்டில் விரல் பதித்திருக்கும் நகுலனைப் பார்த்துப் பார்த்து மனம் கசிந்த நாட்கள் அநேகம். புகைப்படக்காரரின் இருப்பை மறந்து தன்னுள் ஆழ்ந்துபோன கணம் அது.

நகுலனைப் பிரதி செய்து பத்து வயது குறைத்து உலவவிட்டாற்போலிருப்பார் எனது அப்பா. அதுதான் நகுலன் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமா என்று சிலசமயங்களில் எண்ணத்தோன்றும். ஆனால், எந்த உறவையும் கண்ணீர் ததும்பக் கட்டிக்கொண்டு கொண்டாடுகிற ஆள் நானில்லை என்பதால் தோற்றப்பொருத்தம் மட்டுமே நகுலன் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கமுடியாது. ‘கண்ணாடியாகும் கண்களை’ப் பார்த்த பிற்பாடு, அவர் விரைவில் செத்துப்போக வேண்டுமென்று நான் உள்ளுர விரும்பினேன். மனதார வேண்டினேன். தன்னைப் பார்க்க வந்திருப்பவர்கள் யாரென அடையாளம் காணமுடியாத மறதிக்குள் தள்ளப்பட்ட முதிய உருவமொன்று அதற்காக வருந்தியபடி, வந்தவர்களை வழியனுப்பும் காட்சி மனதில் ஒரு சோகச்சித்திரமாய் எழுதப்பட்டிருந்தது.

“நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை”

என்ற வரிகள் தனிமையைத் தொட்டு எழுதினாற்போல தோன்றும். 17-05-2007அன்ற நகுலன் இறந்துபோனதாக அறிந்தபோது, ‘நினைவுப்பாதை’யை மட்டுமே நான் படித்திருந்தேன். என்னுடைய இலகு வாசிப்புத் தன்மையினால் அவருடைய எழுத்தின் தத்துவார்த்தச் சரட்டை, உள்ளார்ந்த சாரத்தைப் பின்தொடர்ந்து செல்ல இயலவில்லை. ஆனாலும், அந்தப் பெயரில் கடந்துசெல்ல இயலாத ஒரு மாயவசீகரம் இருந்தது. அதற்கு நகுலனின் எழுத்துக்கள் மட்டும் காரணமாக இருக்கமுடியாது. கவிஞர் சுகுமாரன் சொல்வதுபோல, நகுலன் தேர்ந்தெடுத்த ‘அராஜக வாழ்க்கை முறை’யின்பாலான ஈர்ப்பும், அதை வரித்துக்கொள்ள முடியாதபடி சமூகப்பிராணிகளாயிருக்கவே பழக்கப்பட்ட நமது சார்ந்திருக்கும் தன்மையும் காரணமாக இருக்கலாம்.

திருவனந்தபுரத்தில், அதிக சந்தடியற்ற தெருவொன்றில், மஞ்சள் பூக்களும் வாழையும் புதர்களும் செழித்தடர்ந்த வழி கொண்டுசேர்க்கும்-நாட்டு ஓடுகளால் வேயப்பட்டதொரு பழைய வீட்டில், காலத்தின் தூசிபடிய இறைந்திருக்கும் புத்தகங்கள் நடுவிலோ சூரல் நாற்காலியில் அமர்ந்தபடியோ ‘இன்று நண்பர்கள் யாரேனும் வருவரோ’என்று தனித்துக் காத்திருப்பது எத்தனை கொடுமையானது! அந்த மஞ்சள் பூனையும் ஒத்தாசைக்கு இருந்த அந்தப் பெண்ணும்தான் அவரது ஆகக்கூடிய துணைகள். ‘நினைவு ஊர்ந்து செல்வதை’த் தனது இடுங்கிய கண்களுக்குள் பார்த்தபடிக் கழித்த கடைசி ஆண்டுகளில் அவர் வாழ்ந்திருக்கவேண்டாம்.

அது என்னமோ தமிழிலக்கியத்தைத் தூக்கி நிறுத்தியவர்கள் என்று போற்றப்படுகிறவர்களில் அநேகருக்கு சபிக்கப்பட்ட வாழ்வே வாய்த்திருக்கிறது. பித்துநிலைக்கும் படைப்பு மனோநிலைக்கும் இடையில் ஒரு சின்ன நூலிழைதான் வித்தியாசமோ என்ற எண்ணம் மேலிடுகிறது. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன், ஜி.நாகராஜன்… எனத் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள், வாழும்போது சிக்கும் சிடுக்குமாக வாழ்ந்தவர்கள்தான்.

நகுலனின் படைப்புகளை வாசிப்பதற்கு ஒருமுனையில் குவிந்த கவனம் தேவை. அங்கிங்கு நகர்ந்தாலும் அவர் விரித்துச் செல்லும் அகவுலகம் மறைந்துபோகும் அபாயமுண்டு. வாசித்துக்கொண்டு இருக்கும்போதே ‘இதிலென்ன இருக்கிறது… நம்மை பைத்தியத்தில் தள்ளிவிடும் போலிருக்கிறதே’என்று தோன்றவாரம்பித்துவிடும். ஆனாலும், அதில் ஒன்றுமில்லை என்று சொல்வதற்குமில்லை என்பது நமக்கே தெரிந்துதானிருக்கும். ‘இதோ…இதோ’என்று குழலூதிச் செல்பவனைத் தொடர்வது போல நாமும் போய்க்கொண்டே இருப்போம். ஈற்றில் வாசித்து முடித்ததும் ஒரு வெறுமை தரைதட்டும். வந்தடைந்தது வெறுமைபோல் தோன்றினும் நிறைவின் நிழலாடும் உள்ளுக்குள். அறிந்த அனுபவங்களின் வெளிச்சத்தைக் கையில் ஏந்தி, அறியாத பாதைகளைக் கண்டுபிடிப்பதற்கான முனைப்பே அவர் எழுத்து. சில சமயங்களில் புரிகிறது. சில சமயங்களில் பிடிபடாமல் போக்குக் காட்டுகிறது. புரிந்து எதைத்தான் கண்டடைந்தோம்? புரியாமல் போனதால் எதை இழந்தோம்? நமது மகாமூளையின் நுட்பத்தின் மீது நமக்கேயிருக்கும் நம்பிக்கையில் யாராவது ஒருவர் சேற்றை வாரியிறைக்க வேண்டாமா?

‘எல்லாம் எமக்குத் தெரியும்’என்று திருவிளையாடல் பாணியில் பேசுபவர்கள் மத்தியில் நகுலனின் சுயஎள்ளல் பிடித்திருக்கிறது. தன்னையும் மற்றவர்களையும் கேள்வி கேட்டு பதில் தேடி ஆழ்ந்துபோகும் மௌனம் பிடித்திருக்கிறது. ‘எனக்கொன்றும் தெரியாதப்பா’என்ற குழந்தைத்தனமான அந்தச் சிரிப்பு பிடித்திருக்கிறது. சிலசமயங்களில் அவர் ஞானி போலிருக்கிறார். சில இடங்களில் குழந்தை போல் தோன்றுகிறார். அவர் எழுதியது போக, அவரைக் குறித்து எழுதப்பட்டவையும் நிறைய உண்டு. நகுலனை ‘எழுத்தாளர்களின் எழுத்தாளன்’என்று சொல்கிறார்கள். கவிஞர் சுகுமாரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, அசோகமித்திரன் எல்லோரும் நகுலனைப் பற்றி எழுதியிருப்பதற்கு அவர்மீதான தீரா வியப்புத்தான் காரணமாக இருக்கவேண்டும். அவரது நுண்மையான கேள்விகளை எப்படிப் புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. அது நகைச்சுவை என்ற கயிறா… தத்துவம் என்ற பாம்பா என்று பிரித்தறிய முடியவில்லை.

‘நினைவுப்பாதை’என்ற கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
----

“நீங்கதான் ராமகிருஷ்ணனா?”
“ஆமாம்”என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே “நீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல் நானும் சிரித்தேன்.
“எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?”

---
இந்த இடத்தில் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். ஆனால், அது உண்மையில் சிரிக்கக்கூடிய கேள்வி அல்லவே! பிறகு ராமகிருஷ்ணன் கேட்கிறார்:
----

“பூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?”

“பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?” - இது நகுலன்!

------

ஆம். பூனையைப் பூனை என்றுதானே கூப்பிடவேண்டும். அது தனக்குப் பெயர் சூட்டச் சொல்லி என்றைக்குக் கேட்டிருக்கிறது? ‘ம்யாவ்’என்பதற்கு நாம்தானே பலப்பல பொருள் கொள்கிறோம்… நகுலனின் எழுத்துக்களைப்போல.

எழுத்தும் வாழ்வும் புதிரான நகுலனின் ஆகர்ஷிப்பு முன்செல்கிறது. எழுத்தின் மயக்கத்தில் திளைக்க விரும்பும், இவ்வுலகின் சாதாரணங்களிலிருந்து தப்பிக்க விரும்பும் எவரும் நகுலனை பின்தொடரவும் நேசிக்கவும் விழைவர்.

எழுதுவது எத்தனை சிக்கலாயிருக்கிறது. நினைப்பை ஒருபோதும் காகிதத்தில் அன்றேல் கணினியில் முற்றிலுமாகக் கொட்டிவிட முடிவதில்லை. எழுத்து என்பது காற்றைப்போல கண்ணுக்குத் தென்படாமல், கையகப்படாமல் உயிர்வழங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியில் இந்தக் கட்டுரை நகுலன் சொன்னதே போல் ஆயிற்று:

“நிறைய நிறைய எழுதி, எழுதி எழுத வேண்டுவதை எழுதாமல் விட்டுவிட வேண்டும்.”

கொசுறாய் ஒரு கவிதை:

அப்பா வரைந்த ஓவியம்


சாய்வு நாற்காலியில்
மோவாயில் கைதாங்கி
அசப்பில் நகுலனாய் தோன்றிய அப்பாவுக்கு
தூரிகையும் வர்ணங்களும்
வாங்கிக் கொடுத்தேன்.
கன்னம் செழித்த பாரதி…
நதிக்கரை வாத்து..
நுண்ணிய இலைகள் அடர்ந்த மரம்
எல்லாம் வரைந்த பிறகு
என் புகைப்படம் கேட்டார்.
அவர் எழுதிய ஓவியத்தில்
அழகும் இளமையும்
மேலுமோர் வர்ணமாய் சுடர
அவர் மகளாய் மட்டுமிருந்தேன்.
அவர் மனதில்
உறைந்த காலத்தை உருக்க எண்ணி
‘நானில்லை’ என உன்னினேன்
பின்
இடுங்கிய கண்களில் கரைந்து
அச்சொட்டாய் இருப்பதாய்
அகமறிந்து பொய்யுரைத்தேன்.
விமானமேற்றி ஊருக்கு அனுப்புகையில்
பொக்கை வாயால்
அப்பா அப்பாவைப் போலவே சிரித்தார்
நகுலனைக் காணவில்லை.

-நன்றி: உயிரோசை





7 comments:

யாத்ரா said...

எனக்கும் நகுலனை மிகவும் பிடிக்கும்
உயிரோசையில் படிக்கும் போதே பரவசத்தோடு தான் படித்தேன்.

அவருடைய நினைவுப்பாதை, நவீனன் டைரி,நகுலன் மொத்த கவிதைகள் தொகுப்பு வாசித்த அனுபவங்கள்,,,,

அவர் இறந்த போது இப்படி எழுதி வைத்துக் கொண்டேன்

சூரல் நாற்காலியையும்
கால் சுற்றும் பூனையயும்
கோட் ஸ்டாண்டையும் விட்டு
இல்லாத சுசிலாவைத்தேடி
இல்லாமல் போனீரே

இன்னும் இவருடைய நாய்கள், இவர்கள், வாக்குமூலம் நாவல்கள் என் அலமாரியில் வாசிப்பதற்கு காத்திருக்கின்றன.

தாங்கள் என் வலைப்பூவிற்கு வந்து கவிதைகளை பாராட்டியபோது மகிழ்ச்சியாயிருந்தது உற்சாகமளிப்பதாகவும் இருந்தது, மிக்க நன்றி,உயிரோசைக்கு அனுப்பி வைக்க இவ்வாரம் வெளிவந்திருக்கிறது.

Anonymous said...

good post and wonderful "down memory lane"

Anonymous said...

தொல்காப்பியத்திற்கும் உலையின் ஓசைக்கும் விளக்கவுரை எழுதுகிறேன் பேர்வழி என்று கண்டகண்ட ஊரில் ரூம் போட்டு எழுதுவதாக பம்மாத்து விடும் கருநாகத்தை விட இவர் நல்வரா தெரியரார்...

soorya said...

ம்..,
நகுலனை 3 முறை சந்தித்தேன். விக்ரமாதித்யனுடன் க.நா.சு வீட்டிலும் பின்னர் சில ஆண்டுகள் கழித்து அவர் சென்னை வந்திருந்த சமயம் விக்கிரமாதித்தியனுடன் தனியேயும், மேலும் பல ஆண்டுகள் கழித்து திருவனந்தபுரத்தில் கலாப்ரியாவுடனும் சந்தித்தேன். இறுதிச் சந்திப்பில் அவர் என்னை முற்றாகவே மறந்திருந்திருந்தார்(எல்லாரையுந்தான்).
பலருக்கு அவர் எழுத்துக் குரு. எனக்குந்தான். என் 17வது வயசில் அவர் தொகுத்த குருசேத்திரம் தொகுதி என்னை எழுத்துலகிற்கு இட்டுவந்தது. எஸ்.ரங்கராஜன் எனும் சுஜாதாவை அங்குதான் கண்டேன். பலரைக் கண்டேன் அத் தொகுதியில்.
அவர் என்றும் வாழ்வார்.
..
தங்கள் பதிவு என்னை எங்கெங்கெல்லாமோ இட்டுச் சென்றது.
எனது அப்பாவையும் அது நினைவுறுத்தியது.
நகுலனைப் போலவே ஒரு மிகப்பெரிய தமிழாசானான என் அப்பா ஒரு மோன நிலையில் உள்ளே உறைந்து போனதாக அம்மா அடிக்கடி சொல்வா.
..
மீண்டும் நெஞ்சில் ஆழ்ந்த பதிவுகளை பதியப் பண்ணும் தங்கள் பதிவுகள் எனக்குப் பெருமூச்சை ஏற்படுத்தினாலும்..ஒத்தடங்கள் போல இருக்கின்றன.
நன்றி.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நகுலன் எழுத்துகளல்ல; அவர் மீதான மிஸ்டிக்தன்மையே என்னை முதலில் அவர்பால் ஈர்த்தது.

நான் திரும்பத் திரும்பத் திரும்ப வாசிக்கும் / வாசிக்க விரும்பும் எழுத்தாளர் நகுலன்.

நீங்கள் வெகு அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

தமிழன்-கறுப்பி... said...

இதனை அங்கேயே வாசித்து விட்டேன், அதுவும் பிரதிசெய்து வாசித்திருந்தேன்.
நகுலனை இன்னும் வாசிக்க வேண்டும்...

KARTHIK said...

// அநேகருக்கு சபிக்கப்பட்ட வாழ்வே வாய்த்திருக்கிறது. பித்துநிலைக்கும் படைப்பு மனோநிலைக்கும் இடையில் ஒரு சின்ன நூலிழைதான் வித்தியாசமோ என்ற எண்ணம் மேலிடுகிறது. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன், ஜி.நாகராஜன்… எனத் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள்,//

சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்.

//‘நினைவுப்பாதை’என்ற கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.//

கதாவிலாசத்தில் வரும் இக்கட்டுரையும் அதை தொடரும் அவரது ஒரு (சிமி பற்றிய) சிறுகதையும் அர்ப்புதமானது.