Showing posts with label இலக்கியவாதிகள். Show all posts
Showing posts with label இலக்கியவாதிகள். Show all posts

7.01.2009

தோழர் காமராஜுக்கு ஒரு கடிதம்

அன்புத் தோழர் காமராஜூக்கு,

முதலில் உங்கள் அக்கறைக்கு நன்றி. இந்தப் பதிலை எழுதுவதற்கு முன்பு உங்களிடம் நான் ஒன்று சொல்லிவிடுகிறேன். "ஈழத்தமிழருக்காக நீங்கள் ஏன் பேசவில்லை, எழுதவில்லை?" என்று இனி இந்தத் தமிழகத்தில் பறக்கும் ஒரு குருவியிடம் கூட கேட்கமாட்டேன். ஏதோவொரு ஆதங்கம், பதைப்பு, நப்பாசை. கண்ணீர் விட்டுக் கதறிக் கேட்டும் கண்திறக்காமல் இருந்தன மத்திய, மாநில அரசாங்கங்கள். மக்களாவது எங்களோடு இருக்கிறார்கள் என்று நம்பியிருந்தோம். தேர்தல் முடிவு வெளியான அன்று அதுவும் பொய்த்தது. (அதிமுக வந்தால் ஒரு தேறுதல் என்று எதிர்பார்த்தோமேயன்றி பெரிய மாறுதல்களையல்ல என்பதை இங்கே சொல்லவிரும்புகிறேன்.) ஈழத்தமிழர்களுக்காக தமிழகத்தில் உழைத்த உண்மையான உணர்வாளர்களை நான் இங்கு மறந்துவிட்டுப் பேசவில்லை. அவர்கள் எங்களுக்காகத் துடித்ததை நாங்கள் அறிவோம். சீமான், நெடுமாறன் ஐயா இன்னபிறர் மற்றும் குறிப்பிட்டளவான மக்களின் இதயம் எங்களுக்காகத் துடித்தது. அந்த நன்றி உணர்ச்சி எங்களிடம் இருக்கிறது. தொடர்ந்தும் இருக்கும்.

நான் அரசியல்வாதி அல்ல. எனக்குத் தெரிந்ததெல்லாம் புத்தகங்களும் எழுத்தாளர்களுந்தான். அவர்களை எனது நண்பர்களாகவும் வழிகாட்டிகளாகவும் முன்னோடிகளாகவும் ஆதர்சங்களாகவும் நம்பியிருந்தேன். இந்த அந்நிய நிலத்தில் அவர்களை எனது உறவினர்களாகக்கூட உள்ளுக்குள் கருதினேன் என்பதுதான் உண்மை. எழுத்து சார்ந்த நெகிழ்வு அது. அதைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. சாதாரணர்களிலும் ஒருபடி மேலானவர்களாக அவர்கள் இருக்கவேண்டும் என்று நான் பேராசைப்பட்டேன்.

அன்று கடவு கூட்டத்தில் அந்தக் கேள்வியை முன்வைத்தது ஒரு ஆதங்கத்தினால். அங்கே எல்லாம் எரிந்து கரிந்து முடிந்தது. எங்கள் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடிமைகளாய், விலங்குகளாய் அடைபட்டுவிட்டார்கள். வாழ்விடங்கள் சிதிலமாகி விட்டன. இனி எழுதி ஒன்றும் செய்வதற்கில்லை என்பது எனக்கும் தெரிந்தே இருந்தது. இருந்தும், 'எம்மவர்கள் நீங்கள் ஏன் மௌனிகளாய் வாய்மூடி இருந்தீர்கள்?'என்று எனக்குக் கேட்கத் தோன்றியது. ஏனென்றால், அப்படிக் கேட்பதற்கான சந்தர்ப்பம் அன்றைக்கு எனக்குக் கிடைத்தது. தமிழக எழுத்தாளர்கள் எழுதி ஈழப்பிரச்சனை தீராது என்பது எனக்குத் தெரியாதா என்ன? ஆனால், உலகில் நடந்த பல தேசிய விடுதலைப் போராட்டங்களில் எழுத்தாளர்களின் பங்கு அளப்பரியதாக இருந்தது. மக்களை அவர்கள் தங்கள் வார்த்தைகளால் வழிநடத்தினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை. மக்களுக்குள் இருக்கும் சுதந்திர வேட்கையை எழுத்துக்கள் தூண்டவல்லன என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வலையிலும் வெளியிலும் ஈழப்பிரச்சனை பற்றிய பல பதிவுகள் வந்துகொண்டிருப்பதாகக் கூறினீர்கள். ஒப்பீட்டளவில் நான் சில என்றே சொல்வேன். நமது மக்களின் மனமானது 'செலிபிரிட்டீஸ்' என்று சொல்லப்படுகிற பிரபலங்களால் உதிர்க்கப்படும் கருத்துக்களைக் கையேந்திப் பெற்று நெஞ்சுக்குள் இறக்கிவிடக்கூடியது. காமராஜ் ஆகிய நீங்கள் சொல்வதற்கும் ரஜனிகாந்த் ஒரு கருத்தைச் சொல்வதற்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் உணர்கிறீர்கள் அல்லவா? அதேபோல இணையத்தில் அறியப்படாத ஒருவர் எழுதுவதற்கும் அதையே எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பிரபலம் எழுதுவதற்கும் நிச்சயமாக வித்தியாசம் இருக்கும். "எஸ்.ரா. இப்படிச் சொன்னாராம்..." என்று பரவலாகப் பேசவே செய்வர். அதனால்தான், "அந்த வரலாற்றுத் தவற்றை நீங்கள் ஏன் செய்தீர்கள்?" என்று அந்தக் கூட்டத்தில் கூடியிருந்த பிரபல எழுத்தாளர்களைப் பார்த்துக் கேட்டேன்.

அதற்கு ஆதவன் தீட்சண்யா ஆற்றிய எதிர்வினை நியாயமானதாக இருக்கவில்லை. மதிப்பிற்குரிய ஆளுமை என்று நான் கருதிக்கொண்டிருந்தவரிடமிருந்து அப்படியொரு பதில் வந்ததில் நான் ஆடிப்போய்விட்டேன். அந்த அதிர்ச்சியில் எழுதிய பதிவே அது. எனக்கும் ஆதவன் தீட்சண்யாவிற்குமிடையில் தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஏன்... எனக்கும் ஷோபா சக்திக்குமிடையில் கூட தனிப்பட்ட பிரச்சனைகள் எதுவுமில்லை. ஆனாலும், அவர் தனிப்பட்ட முறையில் என்னை விமர்சித்து எழுதியிருந்தார். கருத்தினால் அடிக்க முடியாதவன் காலால் அடித்தது மாதிரி இருந்தது. நான் இலக்கியக் கூட்டத்திற்குப் போய் அருவியை ரசிப்பது இவருக்கு என்ன முறையில் வலிக்கிறது என்று தெரியவில்லை. கருத்துக்களால் மோதுவதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும். அதுதான் நாகரிகமும்கூட.

தோழர், நான் தலித்தியத்தைக் கேலி செய்வதான பின்னூட்டங்களை ஆதரிக்கவில்லை. அப்படிச் செய்யவும் மாட்டேன். தனிப்பட்ட முறையில் ஆதவன் மீதும் ஷோபா சக்தி மீதும் தாக்குதல் தொடுத்து வந்த பின்னூட்டங்களை நான் பிரசுரிக்கவில்லை. எனக்கென்று சில அடிப்படை நேர்மைகள் உண்டு. யார் நம்பினாலும் நம்பாவிட்டாலும் எனக்குள் அந்த நேர்மையை வைத்திருக்கிறேன். அது எனக்கு மட்டுமே தெரியும். ஏனென்றால், நானும் பாதிக்கப்பட்டவள். ஈழத்தமிழர்கள், தலித்துகள், அரவாணிகள் எல்லோரும் சிறுபான்மையினர்தான்.

உண்மையில் இவ்வாறான சர்ச்சைகளில் ஈடுபட எனக்கு நேரமில்லை. தெருச்சண்டைகளில் ஈடுபடுவதில் எனக்கு நாட்டமுமில்லை. இயல்பில் அமைதியான ஆள்தான் நான். என் நண்பர்களிடத்தில் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். வீட்டிலும் வெளியிலும் நாட்டிலும் கூட எனக்கு நிறையப் பணிகள் இருக்கின்றன. இந்தக் கடிதத்தின் ஆரம்பத்தில் கூறியதுபோல 'எங்களுக்காக நீங்கள் ஏன் பேசவில்லை?' என்று இனி மறந்தும்கூட யாரிடமும் கேட்கமாட்டேன்.

அது எங்கள் கனவு. எங்கள் துயரம். எங்கள் அழிவு. எங்கள் அநாதரவு. எங்கள் பசி. எங்கள் பயம். எங்கள் இனம். எங்கள் கண்ணீர். எங்கள் இழப்பு. எங்கள் இருள். எங்கள் மண். அதற்கு ஏதாவது செய்யமுடிகிறதா என்று இனி நான் முயற்சி செய்கிறேன். என் எழுத்தால் துளியளவு வலி துடைக்க முடியுமெனில் அதற்காக எழுதுவேன்.

தயவுசெய்து எனக்குப் பதில் எழுதாதீர்கள் தோழர். நான் நொந்துபோயிருக்கிறேன். வாழ்க்கை இவ்வளவு குரூரமாக இருந்திருக்கக்கூடாது.


வருத்தங்களுடன்

தமிழ்நதி

3.26.2009

எனக்குப் புதிர்களைப் பிடிக்கும்; நகுலனையும்.....


சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு மனஇருட்டும் புழுக்கமும் வந்து கவிந்துகொள்வதை அவதானித்திருக்கிறேன். ஆனால், புகைப்படங்கள் (அண்மைய ஈழப்படுகொலைகள் தவிர்த்து) அழுகைக்குள் விழுத்தும் துயரத்தைத் தந்ததாக நினைவில்லை. நகுலனின் புகைப்படங்கள் அடங்கிய ‘கண்ணாடியாகும் கண்கள்’ மட்டுமே அதற்கு விதிவிலக்கு. அந்தப் புகைப்படங்களை காஞ்சனை சீனிவாசன் எடுத்திருந்தார். நகுலனின் கவிதைகளை உள்ளடக்கி காவ்யா பதிப்பக வெளியீடாக அது வந்திருந்தது. எப்போது அந்தப் புத்தகத்தை எடுத்துப் பார்த்தாலும் அதிலிருந்து தனிமை சொட்டுவதாகத் தோன்றும். நாற்காலியின் அமர்ந்து கண்களை மூடி நெற்றிப்பொட்டில் விரல் பதித்திருக்கும் நகுலனைப் பார்த்துப் பார்த்து மனம் கசிந்த நாட்கள் அநேகம். புகைப்படக்காரரின் இருப்பை மறந்து தன்னுள் ஆழ்ந்துபோன கணம் அது.

நகுலனைப் பிரதி செய்து பத்து வயது குறைத்து உலவவிட்டாற்போலிருப்பார் எனது அப்பா. அதுதான் நகுலன் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமா என்று சிலசமயங்களில் எண்ணத்தோன்றும். ஆனால், எந்த உறவையும் கண்ணீர் ததும்பக் கட்டிக்கொண்டு கொண்டாடுகிற ஆள் நானில்லை என்பதால் தோற்றப்பொருத்தம் மட்டுமே நகுலன் மீதான ஈடுபாட்டுக்குக் காரணமாக இருக்கமுடியாது. ‘கண்ணாடியாகும் கண்களை’ப் பார்த்த பிற்பாடு, அவர் விரைவில் செத்துப்போக வேண்டுமென்று நான் உள்ளுர விரும்பினேன். மனதார வேண்டினேன். தன்னைப் பார்க்க வந்திருப்பவர்கள் யாரென அடையாளம் காணமுடியாத மறதிக்குள் தள்ளப்பட்ட முதிய உருவமொன்று அதற்காக வருந்தியபடி, வந்தவர்களை வழியனுப்பும் காட்சி மனதில் ஒரு சோகச்சித்திரமாய் எழுதப்பட்டிருந்தது.

“நான் என்னைப்
பார்த்துக் கொண்டிருந்து
வாழ விரும்பவில்லை”

என்ற வரிகள் தனிமையைத் தொட்டு எழுதினாற்போல தோன்றும். 17-05-2007அன்ற நகுலன் இறந்துபோனதாக அறிந்தபோது, ‘நினைவுப்பாதை’யை மட்டுமே நான் படித்திருந்தேன். என்னுடைய இலகு வாசிப்புத் தன்மையினால் அவருடைய எழுத்தின் தத்துவார்த்தச் சரட்டை, உள்ளார்ந்த சாரத்தைப் பின்தொடர்ந்து செல்ல இயலவில்லை. ஆனாலும், அந்தப் பெயரில் கடந்துசெல்ல இயலாத ஒரு மாயவசீகரம் இருந்தது. அதற்கு நகுலனின் எழுத்துக்கள் மட்டும் காரணமாக இருக்கமுடியாது. கவிஞர் சுகுமாரன் சொல்வதுபோல, நகுலன் தேர்ந்தெடுத்த ‘அராஜக வாழ்க்கை முறை’யின்பாலான ஈர்ப்பும், அதை வரித்துக்கொள்ள முடியாதபடி சமூகப்பிராணிகளாயிருக்கவே பழக்கப்பட்ட நமது சார்ந்திருக்கும் தன்மையும் காரணமாக இருக்கலாம்.

திருவனந்தபுரத்தில், அதிக சந்தடியற்ற தெருவொன்றில், மஞ்சள் பூக்களும் வாழையும் புதர்களும் செழித்தடர்ந்த வழி கொண்டுசேர்க்கும்-நாட்டு ஓடுகளால் வேயப்பட்டதொரு பழைய வீட்டில், காலத்தின் தூசிபடிய இறைந்திருக்கும் புத்தகங்கள் நடுவிலோ சூரல் நாற்காலியில் அமர்ந்தபடியோ ‘இன்று நண்பர்கள் யாரேனும் வருவரோ’என்று தனித்துக் காத்திருப்பது எத்தனை கொடுமையானது! அந்த மஞ்சள் பூனையும் ஒத்தாசைக்கு இருந்த அந்தப் பெண்ணும்தான் அவரது ஆகக்கூடிய துணைகள். ‘நினைவு ஊர்ந்து செல்வதை’த் தனது இடுங்கிய கண்களுக்குள் பார்த்தபடிக் கழித்த கடைசி ஆண்டுகளில் அவர் வாழ்ந்திருக்கவேண்டாம்.

அது என்னமோ தமிழிலக்கியத்தைத் தூக்கி நிறுத்தியவர்கள் என்று போற்றப்படுகிறவர்களில் அநேகருக்கு சபிக்கப்பட்ட வாழ்வே வாய்த்திருக்கிறது. பித்துநிலைக்கும் படைப்பு மனோநிலைக்கும் இடையில் ஒரு சின்ன நூலிழைதான் வித்தியாசமோ என்ற எண்ணம் மேலிடுகிறது. பாரதி, புதுமைப்பித்தன், பிரமிள், நகுலன், ஜி.நாகராஜன்… எனத் தொடரும் பட்டியலில் உள்ளவர்கள், வாழும்போது சிக்கும் சிடுக்குமாக வாழ்ந்தவர்கள்தான்.

நகுலனின் படைப்புகளை வாசிப்பதற்கு ஒருமுனையில் குவிந்த கவனம் தேவை. அங்கிங்கு நகர்ந்தாலும் அவர் விரித்துச் செல்லும் அகவுலகம் மறைந்துபோகும் அபாயமுண்டு. வாசித்துக்கொண்டு இருக்கும்போதே ‘இதிலென்ன இருக்கிறது… நம்மை பைத்தியத்தில் தள்ளிவிடும் போலிருக்கிறதே’என்று தோன்றவாரம்பித்துவிடும். ஆனாலும், அதில் ஒன்றுமில்லை என்று சொல்வதற்குமில்லை என்பது நமக்கே தெரிந்துதானிருக்கும். ‘இதோ…இதோ’என்று குழலூதிச் செல்பவனைத் தொடர்வது போல நாமும் போய்க்கொண்டே இருப்போம். ஈற்றில் வாசித்து முடித்ததும் ஒரு வெறுமை தரைதட்டும். வந்தடைந்தது வெறுமைபோல் தோன்றினும் நிறைவின் நிழலாடும் உள்ளுக்குள். அறிந்த அனுபவங்களின் வெளிச்சத்தைக் கையில் ஏந்தி, அறியாத பாதைகளைக் கண்டுபிடிப்பதற்கான முனைப்பே அவர் எழுத்து. சில சமயங்களில் புரிகிறது. சில சமயங்களில் பிடிபடாமல் போக்குக் காட்டுகிறது. புரிந்து எதைத்தான் கண்டடைந்தோம்? புரியாமல் போனதால் எதை இழந்தோம்? நமது மகாமூளையின் நுட்பத்தின் மீது நமக்கேயிருக்கும் நம்பிக்கையில் யாராவது ஒருவர் சேற்றை வாரியிறைக்க வேண்டாமா?

‘எல்லாம் எமக்குத் தெரியும்’என்று திருவிளையாடல் பாணியில் பேசுபவர்கள் மத்தியில் நகுலனின் சுயஎள்ளல் பிடித்திருக்கிறது. தன்னையும் மற்றவர்களையும் கேள்வி கேட்டு பதில் தேடி ஆழ்ந்துபோகும் மௌனம் பிடித்திருக்கிறது. ‘எனக்கொன்றும் தெரியாதப்பா’என்ற குழந்தைத்தனமான அந்தச் சிரிப்பு பிடித்திருக்கிறது. சிலசமயங்களில் அவர் ஞானி போலிருக்கிறார். சில இடங்களில் குழந்தை போல் தோன்றுகிறார். அவர் எழுதியது போக, அவரைக் குறித்து எழுதப்பட்டவையும் நிறைய உண்டு. நகுலனை ‘எழுத்தாளர்களின் எழுத்தாளன்’என்று சொல்கிறார்கள். கவிஞர் சுகுமாரன், நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், கோணங்கி, அசோகமித்திரன் எல்லோரும் நகுலனைப் பற்றி எழுதியிருப்பதற்கு அவர்மீதான தீரா வியப்புத்தான் காரணமாக இருக்கவேண்டும். அவரது நுண்மையான கேள்விகளை எப்படிப் புரிந்துகொள்வதென்று தெரியவில்லை. அது நகைச்சுவை என்ற கயிறா… தத்துவம் என்ற பாம்பா என்று பிரித்தறிய முடியவில்லை.

‘நினைவுப்பாதை’என்ற கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
----

“நீங்கதான் ராமகிருஷ்ணனா?”
“ஆமாம்”என்று தலையாட்டினேன்.
அவர் சிரித்துக்கொண்டே “நீங்கதான் ராமகிருஷ்ணன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” இந்தக் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று தெரியாமல் நானும் சிரித்தேன்.
“எவ்வளவு வருஷமா ராமகிருஷ்ணனா இருக்கீங்க?”

---
இந்த இடத்தில் நான் வாய்விட்டுச் சிரித்துவிட்டேன். ஆனால், அது உண்மையில் சிரிக்கக்கூடிய கேள்வி அல்லவே! பிறகு ராமகிருஷ்ணன் கேட்கிறார்:
----

“பூனையை எப்படிக் கூப்பிடுவீர்கள்?”

“பூனையைப் பூனை என்றுதான் கூப்பிடுவேன். அதுதானே சரியான முறை?” - இது நகுலன்!

------

ஆம். பூனையைப் பூனை என்றுதானே கூப்பிடவேண்டும். அது தனக்குப் பெயர் சூட்டச் சொல்லி என்றைக்குக் கேட்டிருக்கிறது? ‘ம்யாவ்’என்பதற்கு நாம்தானே பலப்பல பொருள் கொள்கிறோம்… நகுலனின் எழுத்துக்களைப்போல.

எழுத்தும் வாழ்வும் புதிரான நகுலனின் ஆகர்ஷிப்பு முன்செல்கிறது. எழுத்தின் மயக்கத்தில் திளைக்க விரும்பும், இவ்வுலகின் சாதாரணங்களிலிருந்து தப்பிக்க விரும்பும் எவரும் நகுலனை பின்தொடரவும் நேசிக்கவும் விழைவர்.

எழுதுவது எத்தனை சிக்கலாயிருக்கிறது. நினைப்பை ஒருபோதும் காகிதத்தில் அன்றேல் கணினியில் முற்றிலுமாகக் கொட்டிவிட முடிவதில்லை. எழுத்து என்பது காற்றைப்போல கண்ணுக்குத் தென்படாமல், கையகப்படாமல் உயிர்வழங்கிக்கொண்டிருக்கிறது. கடைசியில் இந்தக் கட்டுரை நகுலன் சொன்னதே போல் ஆயிற்று:

“நிறைய நிறைய எழுதி, எழுதி எழுத வேண்டுவதை எழுதாமல் விட்டுவிட வேண்டும்.”

கொசுறாய் ஒரு கவிதை:

அப்பா வரைந்த ஓவியம்


சாய்வு நாற்காலியில்
மோவாயில் கைதாங்கி
அசப்பில் நகுலனாய் தோன்றிய அப்பாவுக்கு
தூரிகையும் வர்ணங்களும்
வாங்கிக் கொடுத்தேன்.
கன்னம் செழித்த பாரதி…
நதிக்கரை வாத்து..
நுண்ணிய இலைகள் அடர்ந்த மரம்
எல்லாம் வரைந்த பிறகு
என் புகைப்படம் கேட்டார்.
அவர் எழுதிய ஓவியத்தில்
அழகும் இளமையும்
மேலுமோர் வர்ணமாய் சுடர
அவர் மகளாய் மட்டுமிருந்தேன்.
அவர் மனதில்
உறைந்த காலத்தை உருக்க எண்ணி
‘நானில்லை’ என உன்னினேன்
பின்
இடுங்கிய கண்களில் கரைந்து
அச்சொட்டாய் இருப்பதாய்
அகமறிந்து பொய்யுரைத்தேன்.
விமானமேற்றி ஊருக்கு அனுப்புகையில்
பொக்கை வாயால்
அப்பா அப்பாவைப் போலவே சிரித்தார்
நகுலனைக் காணவில்லை.

-நன்றி: உயிரோசை