காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை
நீ போகும்போது உனது கண்களை இங்கு விட்டுச் சென்றாயா…. கருவிழிகளின் முழுவட்டமும் புலனாகும் உன் பார்வை என் மீது காலை இளவெயிலைப் போல படர்ந்துகொண்டேயிருக்கின்றது. அந்தக் கண்களில் எனக்கான செய்தி ஏதாவது இருந்ததா என்று தவித்தலைந்த என்னை ஒரு சலனமுமின்றி விலக்கிப் போனாய். ஏற்புடையதல்ல எனதிந்த தவிப்பு. பித்தத்தின் உச்சந்தான். இந்தக் கோடை மழைநாளில் பருவம் தப்பி எனக்குள் அடித்துப் பொழியும் மழையில் அகங்காரம் கரைந்தோடுகிறது. என்னிலை பிறழ்கிறேனே எனும் வருத்தம் மேலிடுகிறது. நீ வரும்வரை தனிமையால் நிறைந்திருந்தது இவ்வறை. வந்தபின் சுற்றவர இருந்த சகலமும் பெயர்ந்து போய்விட்டன. அல்லது யாவற்றையும் உன்னால் நிறைத்தாய். மறுபடி மறுபடி நான் எனது கண்களின் பிடிவாதமான பின்தொடர்தலைக் கண்டித்தும் பயனில்லை. இதுநாள்வரையிலான எனது தேடலின் அந்தம் நீதான் என்று, எல்லோருக்கும் பரிச்சயமான, சொல்லித் தேய்ந்த வார்த்தைகளால்தான் எனதிந்த உணர்வையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.
நமக்கிடையில் நிகழ்ந்ததற்கு உரையாடல் என்று பெயரிடல் தவறு. மனச்சாட்சியற்ற ஒரு பத்திரிகையாளனது கேள்விகளை ஒத்த சில அபத்தங்களுக்கு நீ பதிலிறுத்துக்கொண்டிருந்தாய். உனது மௌனத்தைக் கலைப்பதற்கான வேறெந்த உத்திகளும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பேச்சு நின்றுவிடும் நிமிடம் நாம் பிரிந்துவிடுவோம் என்றெனக்குத் தோன்றியதால், சில அசட்டுத்தனமான உத்திகளைப் பிரயோகித்து உனது இருப்பை என்னறையில் நீடித்தேன். கேள்விகளை நினைவிற் கொண்டுவரும் எத்தனத்தின்போதான இடைவெளியை நிரப்புவதற்கு, உனது கண்களின் சாயலையொத்த ஒருவரை எங்கோ பார்த்திருப்பதாக நான் அடிக்கடி சொல்ல வேண்டியிருந்தது. நீ விடைபெற்றுப் போனபிறகு ஒரு ஞானியும் முட்டாளும் எதிரெதிர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததான ஒரு பிம்பம் எனக்குள் தோன்றியது. உன் உருவும் தெளிவும் ஆழமும் நம்பமுடியாத கனவொன்றைத் தன்னுணர்வுடன் கண்டுகொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. கொடுவெயிலில் நடக்கும் பாதங்களைப் போல தரிக்கவோ நடக்கவோ கூடுதில்லை.
ஒருபோதிலும் உன்னிடத்தில் அள்ளிக் கொட்டிவிடவியலாத இந்த நேசத்தை,நெருக்கத்தை,மன அவத்தையைச் சுமந்துகொண்டு எத்தனை காலம் நடக்கவேண்டியிருக்கும் என்றெனக்குத் தெரியவில்லை. முன்னொருபோதும் இவ்விதம் ஆனதில்லை, இனியொருபோதும் இவ்விதம் நிகழ்வதற்கில்லை என்ற வார்த்தைகள், காலையில் எழுந்தவுடன் முதலிற் கேட்ட பாடலைப் போல இன்று முழுவதும் உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. என்ன செய்தேனும் உன்னைப் பிரியாதிருக்க முடியாதா என்ற சிறுபிள்ளைத்தனத்தை, ஏக்கத்தை பெரிய குழியாகத் தோண்டி உள்ளே புதைத்துவிடுவதைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறொன்றும் செய்வதற்கில்லை. பிடித்ததை அடைதல் சாத்தியப்படுவதெனில், நான் சில ஆண்டுகளைப் பின்னோக்கிக் கடந்து சென்று மீளப் பிறத்தல் வேண்டும். மேலும், இந்தக் காய்ச்சல் உனக்குள்ளும் அனலெறியாதுபோனால் மீளப்பிறந்தென்ன… இந்தக் கற்பனைக் குதிரையேறிக் காலத்தைக் கடந்தென்ன…?அடைதல் என்றால் என்ன அன்பே! தொடுதலா…? எனக்கது வேண்டாம். வேட்கையின் வெறி உருவேற ‘நீயே… நீதான்… நீயன்றி வேறல்ல’என்று கிடந்துழன்று நெருங்கியபின் ‘இல்லைப் போ’என்று புறங்கையால் தள்ளுதலே உன்னளவிலும் நிகழுமோ நானறியேன். ஆனால்… இன்று உள்நுழையும் வழிகள் சாத்தப்பட்ட உயர்மதிலின் முன்னால் நின்று பிதற்றி நிலையழிய வைத்தாய்.
பேச்சைவிட மௌனம் அழகியது என்று அந்தத் திரைப்படத்தைப் பார்த்த நாளிலிருந்து தோன்றிக்கொண்டேயிருந்தது. உன்னைக் கண்டபிறகு அதை மீள்பரிசீலனை செய்வதாக இல்லை.
வெளியே மழை. இடி குமுறிக்கொண்டேயிருக்கிறது. மின்னல் வானத்தில் ஒளிக்கோடு போட்டு வரைந்து பழகுகிறது. நீச்சல் குளத்தில் மழை துள்ளுகிறது. நாட்டப்பட்ட நிழற் குடையை கனத்த துளிகள் அலைக்கழிக்கின்றன. யன்னல் வழியே தெரியும் வேம்பு, நீர் விழும் வேகம் தாளமாட்டாமல் தலைதாழ்த்தி நிற்கிறது. நீ எங்கோ யார் வீட்டிலோ அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய். இந்த மழை நாளில் இன்மையும் இருப்புமாய் எனதறையில் நீ என்று உன்னிடம் சொன்னால், விழியோரம் சுருங்க நகைத்தல் கூடும்.(உனக்குத் தெரியுமா நீ அப்படிச் சிரிப்பது…)
பூட்டப்பட்ட கதவினூடாகக் கசியும் பாடலைப்போல, காவலை மீறி நுழைந்துவிடும் புரட்சியாளரின் இரகசியச் செய்தியைப் போல, இறுக்கம் கொண்டுவிட்ட உன்னுள் எனது ஞாபகத்தின் கீற்றேனும் நுழைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
உன் மீதான இந்தப் பிரியத்தைக் குறித்து உன் விரல்களைப் பற்றியபடி ஒரு சொல்லேனும் சொல்ல விரும்பினேன். செருப்பினுள் கால்களை நுழைத்தபோது தற்செயலாகத் தொடுவதுபோல உன் தோள்களைத் தொட்டு உனது மீள்வருகை பற்றிக் கேட்க எண்ணினேன். விடைபெறும்போதான உன் பார்வை எனக்கே எனக்கானது என்று என்னை நானே ஏமாற்றவும் முற்பட்டேன். நம்ப முடியாததை, கூடாததை பிடிவாதமாக நம்ப விளைகிறது மனம். நாம் வழக்கம்போல பொய் பூசிய சம்பிரதாய வார்த்தைகளுடன் மிகக் கௌரவமாக விடைபெற்றோம்.
இந்த உலகம்… ஆ… இந்தப் பாழும் உலகம்! அது எழுதிவைத்திருக்கும் மரபுகள்! விதிகள்! வயது,பால்,மொழி,நாகரிகம்,இது இப்படித்தான் எனும் எல்லாம் நாசமாய்ப் போகட்டும்! ‘இவளின் இத்தகு விசித்திரங்கள்’என்று சுத்தப்பூனைகளாலான இவ்வுலகம், திருடித்தின்ற மீன் பொரியல் வாசம் மாறும்முன்பே மோவாயில் கைவைத்து வியக்கட்டும். இன்றைய எனதுலகம் உன்னால் நிரம்பி வழிகிறது.
உன் ஞாபகத்தை எழுத்தின் தோள்களில் இறக்குகிறேன். ஊரோடு ஒத்தோடுதலே உயர்வு என்றெண்ணியபடி என்னைப் பிணைத்திருக்கும் மரபின் கயிறுகளைச் சரிபார்க்கிறேன். தளர்ந்த முடிச்சுகளை இறுக்குகிறேன். வழக்கத்திற்கு மாற்றான, முரணான கலகக்குரல்களின் மேல், இருப்பதிலேயே பெரிய பாறாங்கல்லைத் தேர்ந்தெடுத்து போட்டு நசுக்கக் காத்திருக்கும் சமூகத்தின் கொடுங்கரங்களுக்கு அஞ்சுகிறேன். ஆம்! நான் நல்லவள், கௌரவமானவள், பிள்ளைகளுக்கு நானொரு வழிகாட்டி மேலும் எழுதுகிறவளுமாம். உன் மீதான இந்தப் பிரியத்தையும் எவ்வளவு ஆழத்தில் முடியுமோ அவ்வளவு ஆழத்தில் போட்டுத் தீ வைத்து விடுகிறேன். அது எரிந்து சாம்பலாகட்டும். அந்தச் சாம்பலில் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு பித்துப்பிடித்து சில நாள் அலைவேன். பிறகென்ன… மறந்துபோவேன்.