11.09.2013

எழுத்தெனும் குற்றமும் கருத்துக் கொலையாளிகளும் - 02



மேலும், கவிஞர்-ஊடகவியலாளர்-ஊடகச் செயற்பாட்டாளர் மஞ்சுள வெடிவர்த்தனவின் எழுத்துக்களுக்கு, தமிழ் மக்கள் எவ்விதம் இனரீதியாக ஒடுக்கப்பட்டுவருகிறார்கள் என்பதை பெரும்பான்மைச் சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துச் சென்றதில் பிரதான இடமுண்டு.அவரது கவிதைகள் சிங்கள சமூகத்தில் மனச்சாட்சியுள்ளவர்களின் குரலாக ஒலிக்கின்றன. 

…………………………………………………………………………
…………………………………………………………………………….
எரியும் உடல்களிலிருந்து
சிகரெட் மூட்டிய தலைமுறை அல்லவா நாம்?
சிகரெட் புகைத்தபடியே
தெருவில் துவண்டு சரிந்து நடந்து செல்லும்
இறந்த மனிதன் ஒருவன்
உனது புத்தாண்டுக் கனவுகளில் வருகிறானா?
அவனுக்கு வீடு  இருந்தது
ஆனால் படுக்கக் கட்டில் இல்லை
ஊர் இருந்தது
ஆனால் நடந்து திரியத் தெருக்கள் இல்லை
நாடு இருந்தது
ஆனால் புன்னகைக்கும் உரிமை இல்லை

இன்று
எங்கள் புத்தாண்டுக்கு நிலவு இல்லை.
பாற்சோற்றை உன் வாய்க்குள்
நிறைக்கிறபோது
உனக்குக் குருதி மணக்கவில்லையா?
என்னே சுவை அது!

என்றெழுதிய மஞ்சுள வெடிவர்த்தனவும் அரசின் அச்சுறுத்தல்களையடுத்து, நாட்டை விட்டு வெளியேறி பிரான்சில் அரசியற் புகலிடம் பெற்று வாழ்ந்துவருகிறார்.

சிங்கள பௌத்த தேசியவாதத்தின் புனிதத்தன்மையைக் குலைத்துவரும் மேற்குறித்தோரை இலங்கை அரசும் அதன் ஆதரவாளர்களும்தேசத்துரோகிகள்என்றே விளித்துவருகின்றனர்.  லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டதையடுத்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிராக சண்டே லீடர் தொடுத்திருந்த வழக்கின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளையும்துரோகிகள்என்றே பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் குற்றஞ்சாட்டியுள்ளது.  பாலஸ்தீனப் போராட்டத்தின் நியாயத்தன்மை சார்ந்து குரலெழுப்பியமைக்காக பேராசிரியர் எட்வர்ட் செய்த்திற்கு வழங்கப்பட்டபயங்கரவாதிகளின் வழக்கறிஞர்என்ற பட்டமானது லசந்த விக்கிரமதுங்கவிற்கு இனவாதிகளால் வழங்கப்பட்டிருந்தது இங்கு நினைவுகூரற்பாலது. சன்டே லீடரின் முன்னைநாள் ஆசிரியரான பிரெட்ரிக்கா ஜான்ஸ், முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க ஆகியோரும்கூட அரசினாலும் அதன் விசுவாசிகளாலும் தேசத்துரோகி பட்டமளித்துக் கௌரவிக்கப்பட்டவர்களே!
அதேசமயம், தாங்கள் தேசத்திற்கு விசுவாசமானவர்கள் என்று பொலிப் பெருமிதம் கொள்வோர், சட்டத்தைத் தமது கைகளில் எடுத்துக்கொள்வோர் குறித்தும் கவனத்திற் கொள்ளவேண்டியிருக்கிறது. இலங்கை எத்தகைய சகிப்புத்தன்மையற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்பதைச் சுட்டுவதற்கான மிகச் சிறந்த ஆதாரமாக, பொதுமக்கள் தொடர்பு அமைச்சரான மேர்வின் டி சில்வாவின் நடவடிக்கைகளை எடுத்துக் காட்டலாம்.
ஜெனீவாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்ட நான்கு பேரும் இலங்கைக்கு எதிராக பொய்யான தகவல்களைப் பரப்பியுள்ளனர்.  வெளிநாடுகளுக்குச் சென்று இலங்கைக்கு எதிராகச் செயற்பட்ட மேற்கண்டவர்களின்  கை, கால்களைப்  பகிரங்கமாக உடைப்பேன். நான் கொடுத்த அடியினால்தான்  ஊடகவியலாளர் போத்தல ஜெயந்த  2009-ம் ஆண்டில் இலங்கையைவிட்டு ஓடிப்போனார்.”
உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும் ஜனநாயகத்திற்கான  ஊடகவியலாளர் அமைப்பின் செயற்பாட்டாளருமான போத்தல ஜயந்த நுகெகொடையில் வைத்து வெள்ளை வானில் வந்த ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட பின்னர் தெருவோரம் வீசியெறியப்பட்டது போல, ஜெனிவா மனிதவுரிமை மாநாட்டில் கலந்துகொண்டவர்களையும் தன்னால் செய்யவியலும் என்பதே, மேற்குறித்த பேச்சின் சாராம்சமாகும். 
மேலும், “சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க அதிகமாகத் துள்ளினார். அவருக்கு வேலையைக் கொடுத்தேன்.”என்று மேர்வின் டி சில்வா வெளிப்படையாகத் தெரிவித்தும்கூட அரசானது அவருக்கெதிராக எந்தவொரு சட்ட நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்வரவில்லை. அத்துடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சே ஆட்சியிலிருக்கும்வரையில் நான் யாருக்கும் அஞ்சப் போவதில்லைஎன்று அவர் சொல்லியிருப்பதிலிருந்தே அவரது இறுமாப்பின் ஊற்று எங்கிருந்து புறப்படுகிறது என்பதை அறியமுடியும்.
அமைச்சரவையில் அங்கம் வகிக்குமொருவர்நான் ஒரு கொலையைச் செய்தேன்என்று பகிரங்கமாக அறிவித்தும் வாளாதிருக்குமளவிற்கு அங்கு நியாயமானது வங்குரோத்தில் இருக்கிறது. ஆக, இலங்கையில் குற்றவாளிகள் அல்லர்; குற்றவாளிகளால் பாதிக்கப்படுவோரே அஞ்சி வாழவேண்டி அல்லது தாய்நாட்டை விட்டுத் தப்பியோட வேண்டிய நிலை உள்ளது மேலும் தெளிவாகிறது.
இலங்கையின் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் கடும் விமர்சனத்தைக் கொண்டிருக்கும் .நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர்  நவநீதம் பிள்ளை அவர்கள்,  அமைச்சர் மேர்வின் டி சில்வாவின் அச்சுறுத்தலைச் செவியுற்றதும்,  இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு எதிராகப் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாதுஎன்று வெளிப்படையாக எச்சரித்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஊடகவியலாளர்கள் படுகொலைகள்:
உண்மையைக் கொல்வதற்கு எளிய வழி ஊடகவியலாளர்களைக் கொல்வதே என்பது, அராஜகத்தை ஆட்சிமுறையாகக் கொண்ட அரசுகளால் கைக்கொள்ளப்பட்டு வரும் நடைமுறையாகும்.  சுதந்திரமான பத்திரிகை என்பது கண்ணாடியாக இயங்கி ஒப்பனை இல்லாத உண்மையான சமூகத்தின் முகத்தை மக்களுக்கு காட்டும்.”என்று, லசந்த விக்கிரமதுங்க தனது இறுதிக் கடிதத்தில் எழுதினார். அங்ஙனம் ஒப்பனையற்ற உண்மையை எழுதுவதற்கு, இலங்கை போன்றதொரு நாட்டில் வழங்கப்படும் சன்மானம் எதுவென்பதை என்பதைக் கீழ்க்காணும் படுகொலைகள் அறிவுறுத்தி நிற்கின்றன.
1990ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி- சுயாதீன செய்திச் சேவை நிறுவனமாகியஇன்ரர் பிறஸ் சேர்விஸ்இன் கொழும்புக்கான செய்தியாளன், ஒலிபரப்பாளன், வானொலி மற்றும் மேடை நாடகக் கலைஞன், எழுத்தாளன் ஊடகவியலாளன் ஆகிய பன்முக ஆளுமை படைத்த றிச்சர்ட் டீ சொய்சா அரச ஆதரவுக் குழுக்களால் அவரது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டார். மறுநாள் காலை கடற்கரையோரமொன்றில் அவரது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. தலையிலும் தொண்டையிலும் துப்பாக்கிக்குண்டுகள் பாய்ந்திருந்தன. அவரது தாடை எலும்புகள் முறிக்கப்பட்டிருந்தன.
அக்டோபர் 19, 2000 அன்று- தமிழ் பிபிசி சேவை, வீரகேசரி, ராவய (சிங்கள மொழியிலான பத்திரிகை) ஆகியவற்றில் சுயாதீன செய்தியாளராகப் பணியாற்றிய மயில்வாகனம் நிமலராஜன் இரவு நேரத்தில் தனது வீட்டில் அமர்ந்து எழுதிக்கொண்டிருந்தவேளையில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் கொல்லப்பட்டார். ‘இனந்தெரியாதஎன்று சொல்வது பழக்கத்தின்பொருட்டும் ஒரு வசதிக்காகவுமே. நிமலராஜனைக் கொன்றவர்கள் அரச ஆதரவுத் தமிழ்க்குழுவான ஈபிடிபியைச் சேர்ந்தவர்கள் என்பது விசாரணைகளின்போது தெரியவந்தது. தேர்தல் நடக்கவிருந்த சமயத்தில் ஈபிடிபியினரது காடைத்தனம் மற்றும் தேர்தல் ஊழல்கள் குறித்து எழுதியமைக்காகவே அவர் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது. இருந்தபோதிலும் இலங்கையின் வழக்கமான நெறிமுறைகளுக்கிணங்க, அவர்களுக்கு தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை. நிமலராஜனின் தாயும் மருமகனும் கைக்குண்டு வீச்சிலும் தந்தை கத்தியால் வெட்டியும் காயப்படுத்தப்பட்டார்கள். அந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்ட அன்று ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்தது.  நிமலராஜனின் வீடு மூன்று இராணுவ பாதுகாப்பு நிலைகளுக்கு அருகாமையில் இருந்தது. எனினும், கொலையாளிகள் தமக்குரியசிறப்புப் பாதுகாப்புஇனைப் பயன்படுத்தி தப்பித்துச் சென்றுவிட்டார்கள்.
இலங்கையின் பிரதான தமிழ் செய்தித்தாளாகியவீரகேசரி, இலண்டனை மையமாகக் கொண்டியங்கிய .பி.சி. வானொலி, சக்தி தொலைக்காட்சி ஆகியவற்றின் செய்தியாளரும் மூத்த பத்திரிகையாளருமாகிய ஐயாத்துரை நடேசன் மே 31 2004அன்று பணிக்குச் சென்றுகொண்டிருந்தவேளையில் மட்டக்களப்பில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்டார். அரசோடு இணைந்தியங்கும் கருணாவின் பராமிலிட்டரிக் குழுவினரே இக்கொலையைச் செய்ததாக இன்றுவரை நம்பப்படுகிறது.
இனபேதங்களைத் தாண்டி நேசிக்கப்பட்டவரும் பிரபல விமர்சகரும் அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளனுமாகிய தராக்கி என்றழைக்கப்பட்ட சிவராம், ஏப்ரல் மாதம் 28ஆம் திகதி 2005ஆம் ஆண்டு, வெள்ளை வானில் வந்த அரச ஆதரவுக் கொலைக்குழுவினால் கடத்தப்பட்டார். சித்திரவதைகளின் தடயங்களோடு தலையில் குண்டுகள் பாய்ந்த நிலையில் அவரது உயிரற்ற உடல் இலங்கை பாராளுமன்றத்திற்கருகில் மறுநாள் கண்டெடுக்கப்பட்டது. கொலை மிரட்டல்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில் நாட்டை விட்டு வெளியேறும்படியாக நண்பர்கள் சிவராமை எச்சரித்தபோது, ‘இங்கேயல்லாது நான் வேறு எங்கு சென்று இறப்பேன்?’என வினவியிருந்தார். அவரது குருதி அவரால் நேசிக்கப்பட்ட மண்ணிலேயே சிந்தியது.
உதயனின் சகோதரப் பத்திரிகையான சுடரொளியில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜன் 2006ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதியன்று திருகோணமலையில் பேருந்துக்காகக் காத்திருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த கொலையாளிகளால் பலிகொள்ளப்பட்டார். ஆகஸ்ட் 20 2006இல் நமது ஈழநாடு நிறுவனரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சின்னத்தம்பி சிவமகாராஜாவின் உயிர் பறித்தெடுக்கப்பட்டது.
மேற்குறிப்பிடப்பட்ட கொலைகளெல்லாம் இலங்கையில் நிலவும் ஊடக சுதந்திரத்திற்கு எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே. உண்மையில் அங்கு எழுத்தின் நிமித்தம் கொல்லப்பட்டவர்களின் பட்டியல் நீளமானது.
கந்தசாமி ஐயர் பாலநடராஜ் (எழுத்தாளர், ஆகஸ்ட் 16,2004), லங்கா ஜெயசுந்தர (ஊடக புகைப்படப்பிடிப்பாளர், டிசம்பர் 11,2004), கண்ணமுத்து அரசகுமார் (ஊடகப் பணியாளர், ஜூன் 29, 2005) ரேலங்கி செல்வராஜா (ஒலிபரப்பாளர், இவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறதுஆகஸ்ட் 12,2005), டி.செல்வரட்ணம் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 29,2005), யோககுமார் கிருஷ்ணப்பிள்ளை (ஊடகப் பணியாளர், செப்ரெம்பர் 30,2005), நற்பிட்டிமுனை பலீல் (எழுத்தாளர், டிசம்பர் 02,2005), கே.நவரட்ணம் (ஊடகப் பணியாளர், டிசம்பர் 22,2005) எஸ்.ரி.கணநாதன்(நிறுவனர், தமிழ் செய்தி நடுவம்- பெப்ரவரி 01, 2006), பஸ்ரியன் ஜோர்ஜ் சகாயதாஸ் (ஊடகப் பணியாளர், மே 03, 2006), ராஜரட்ணம் ரஞ்சித்குமார் (ஊடகப் பணியாளர், மே 03, 2006), சம்பத் லக்மல் டீ சில்வா (ஊடகவியலாளர், ஜூலை 02, 2006), மரியதாசன் மனோஜன்ராஜ் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 01, 2006), பத்மநாதன் விஸ்மானந்தன் (இசைக்கலைஞர்-பாடகர், ஆகஸ்ட் 02, 2006), சதாசிவம் பாஸ்கரன் (ஊடகப் பணியாளர், ஆகஸ்ட் 15, 2006), எஸ்.ரவீந்திரன் (ஊடகப் பணியாளர், பெப்ரவரி 12, 2007), சுப்பிரமணியம் ராமச்சந்திரன் (ஊடகப் பணியாளர், பெப்ரவரி 15, 2007), சந்திரபோஸ் சுதாகர் (எஸ்போஸ்- கவிஞர், ஊடகவியலாளர், ஏப்ரல் 16, 2007), செல்வராசா றஜீவர்மன் (ஊடகவியலாளர், ஏப்ரல் 29, 2007), சகாதேவன் நிலக்ஷன் (ஊடகவியலாளர் ஆகஸ்ட் 01, 2007) அந்தோனிப்பிள்ளை ஷெரின் சித்தரஞ்சன் (ஊடகப் பணியாளர், நவம்பர் 05, 2007), வடிவேல் நிமலராஜா (ஊடகப் பணியாளர், நவம்பர் 17, 2007), இசைவிழி செம்பியன் அல்லது சுபாஜினி, சுரேஷ் லிம்பியோ, ரி.தர்மலிங்கம் ஆகிய ஊடகப் பணியாளர்கள் (நவம்பர் 27, 2007), பரநிருபசிங்கம் ரூபகுமார் (ஊடகவியலாளர், மே 28, 2008), றஷ்மி மொஹம்மட் (ஊடகவியலாளர், அக்டோபர் 06, 2008), புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி (ஊடகவியலாளர், பெப்ரவரி 12, 2009), சசி மதன் (ஊடகப் பணியாளர், மார்ச் 06, 2009), மகேஸ்வரன் அந்தனிகுமார், ரூபன் சசிநாதன், டென்சே, அன்ரன் (வன்னியில் ஈழநாதம் பத்திரிகையில் பணியாற்றி இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட பணியாளர்கள்) ஆகியோர் 2004 இலிருந்து 2009 ஆகஸ்ட் வரையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகத்துறைசார் பணியாளர்களாவர்.


நடப்பு
ஆட்சியின்கீழ் மட்டும் 34 ஊடகவியலாளர்கள் மற்றும் அத்துறை சார்ந்த ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு கூறுகிறது. அவர்களுள் முப்பது பேர் தமிழர்கள், மூவர் சிங்களவர்கள், ஒருவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர். இப்படுகொலைகள் தொடர்பில் இதுவரையில் முறையான விசாரணைகள் நடத்தப்படவோ குற்றவாளிகள் தண்டிக்கப்படவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்சொல்லப்பட்ட ‘கருத்துக் கொலை’களை நியாயப்படுத்த பயங்கரவாத தடைச் சட்டத்தையும் அவசரகாலச் சட்டத்தையும் (தற்போது நீக்கப்பட்டுள்ளது) அரசாங்கம் பயன்படுத்திவந்தது. வருகிறது.
நீ சொல்வது அனைத்தையும் நான் மறுக்கிறேன். ஆனால், அவ்விதம் சொல்வதற்கு உனக்கு உள்ள உரிமையை என்னுயிரைக் கொடுத்தேனும் காப்பாற்றுவேன்என்ற வோல்ட்டயரின் வார்த்தைகள் இலங்கையைப் பொறுத்தளவில் தலைகீழாயிருக்கிறது. ஊடகவியலாளர்களின் உயிரைக் குடிப்பதன் வழியாக அதிகாரம் உயிர்த்திருக்கிறது.

ஊடகவியலாளர் கைது, தாக்குதல் மற்றும் காணாமலடிக்கப்படுதல்:
உலகத்தின் கண்கள் தமது நடவடிக்கைகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றன என்று தோன்றும் சமயங்களில், சட்டபூர்மாக ஊடகவியலாளர்களைக் கையாளுகிறோம் என்ற கோதாவில் அரசு இறங்குகிறது. ‘சட்டபூர்வம்’என்ற சொல்லானது அதன் முழுமையான அர்த்தத்தில் ஒருபோதும் இயங்குவதில்லை என்பது நாமறிந்ததே. நோர்த் ஈஸ்ரேன் என்ற மாத இதழின் ஆசிரியராகிய ஜெயப்பிரகாஷ் திஸநாயகத்திற்கு 2009 ஆகஸ்ட் 31ஆம் திகதியன்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்கீழ், இலங்கையின் உச்ச நீதிமன்றத்தால், 20 ஆண்டுகால கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. திஸநாயகத்தின் இரண்டு கட்டுரைகள் இனங்களுக்கிடையில் பதட்டத்தைத் தூண்டுவனவாக அமைந்திருந்தன என்பதே அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டாகும். இரண்டு கட்டுரைகளுக்காக இருபதாண்டு சிறைத்தண்டனை விதித்த ஒரே நாடாகவும் இலங்கை பெருமைபெற்றது. இந்த அட்டூழியத்திற்கு உடனடி எதிர்வினை ஆற்ற உள்ளுர் ஊடகவியலாளர்கள் அஞ்சும்படியான ஒரு சு+ழல் நிலவியது. ஆனால், சர்வதேசம் இலங்கையின் ஆளுகைக்குட்பட்டதாக இருக்கவில்லை. பீற்றர் மெக்கலர் விருதும் அமெரிக்காவினை மையமாகக் கொண்டியங்கும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கான குழு வழங்கிய 2009இன் ஊடக சுதந்திரத்திற்கான விருதும்  வழங்கப்பட்டு திஸநாயகம் கௌரவிக்கப்பட்டார். அமெரிக்க சனாதிபதி ஒபாமா, ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை உள்ளடங்கலாக இந்த அநீதியைக் கண்டித்தனர். உள்ளுர் மற்றும் அனைத்துலக ஊடக அமைப்புகள், மனிதவுரிமை அமைப்புகளின் தொடர் போராட்டங்கள், அழுத்தங்களைத் தொடர்ந்து சர்வதேச ஊடகவியலாளர் தினத்தை முன்னிட்டு மே 03, 2010 அன்று திஸநாயகத்திற்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.
திஸநாயகம் கைதுசெய்யப்பட்ட அதே ஆண்டில், சுயாதீன ஊடகவியலாளர் பிரகாஷ் சக்தி வேலுப்பிள்ளை (ஜனவரி 22, 2009), கொழும்பு பூபாலசிங்கம் புத்தகசாலையின் உரிமையாளர் சிறீதர்சிங் (மார்ச் 15, 2009), தேசிய கிறிஸ்தவப் பேரவையின் நிறைவேற்றுச் செயலாளர் சாந்த பெர்னாண்டோ (மார்ச் 27, 2009), லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் செய்தி ஆசிரியர் பேர்னாட் ரூபசிங்க மற்றும் அதன் பிரதான ஆசிரியர் சந்தருவன் சேனதீர (ஜூன் 1ஆம் திகதி, 2ஆம் திகதி, 2009), அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் உதுல் பிரேமரத்ன மற்றும் கிஹான் செனவிரத்ன (ஆகஸ்ட் 09, 2009), லங்கா பத்திரிகையைச் சேர்ந்த சாலிகா விமலசேன, தயா நெத்தசிங்க, ரவீந்திர புஸ்பகுமார (செப்டெம்பர் 2009), லங்கா இரித பத்திரிகையின் ஆசிரியர் சிறிமல்வத்த (அக்டோபர் 17, 2009) ஆகியோர் இலங்கையின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டவர்களாவர்.
தம்மை எதிர்க்கும் எவரெனினும் அவர்களைத் தாக்குவதற்கும்  அதிகாரம் பின்னிற்பதில்லை. உதாரணமாக ரூபவாஹினி ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் அரசின் கட்டுப்பாட்டின் கீழேயே உள்ளது. ஆயினும், டிசம்பர் 27, 2007ஆம் ஆண்டு அடாவடித்தனமாக ரூபவாஹினி அலுவலகத்தினுள் நுழைந்த அமைச்சர் மேர்வின் டி சில்வாவைத் தடுத்த ஊழியர்கள், தயாரிப்பாளர் மீது அமைச்சரின் அடியாட்களால் தனித்தனியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. சிரச ஊடக வலையமைப்பு பிரதான அலுவலகம் மீதான தாக்குதல்(ஜனவரி 02 மற்றும் 06, 2009) சுவர்ணவாஹினி அலுவலக ஊழியர் சஞ்சீவ் ரத்னாயக்க மீதான தாக்குதல் (நவம்பர் 11,2009), ஐ.ரி.என். தொலைக்காட்சி ஊடகவியலாளர்கள் ஐந்து பேர் மீதான தாக்குதல் (வென்னப்புவவில் ஐ.தே.க. கூட்டத்தில்) ஆகியவற்றை காட்சி ஊடகங்கள் மீதான தாக்குதல்களாகக் குறிப்பிடலாம்.
கைது செய்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அறிந்திருத்தலானது காணாமற் போவதைக் காட்டிலும் ஒப்பீட்டளவில் நிம்மதி எனலாம். தினக்குரல் மற்றும் வலம்புரி பத்திரிகைகளின் செய்தியாளர் சுப்பிரமணியம் ராமச்சந்திரன் பெப்ரவரி 15, 2007ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலுள்ள சோதனைச் சாவடியொன்றில் வழிமறிக்கப்பட்டு, விசாரணைக்கென இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு என்ன நடந்ததென்ற விபரம் தெரியாத நிலையில் காணாமற் போனவர்கள் பட்டியலில் அவரது பெயரும் இருந்துவருகிறது. தனது மகனது மீள்திரும்புகைக்காக அவரது தாயார் ஆறாண்டு காலமாகக் காத்திருக்கிறார்.
அதேபோன்று, சிறுபான்மைத் தமிழரின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்த ஊடகவியலாளரும் அரசியல் கார்ட்டூனிஸ்டும் மனிதவுரிமை மற்றும் அரசியல் செயற்பாட்டாளருமாகிய பிரகீத் எக்னெலிகொட ஜனவரி 24, 2010இல், தேர்தலுக்கு மூன்று நாட்கள் முன்னதாகக் காணாமற் போனார். அல்லது கடத்தப்பட்டார். மூன்றரை ஆண்டு காலமாகியும் அவருக்கு என்ன நடந்ததென்று அரசு பொறுப்புக்கூற மறுக்கிறது. பிரகீத்தின் மனைவி சந்தியாவின் ஒவ்வொரு நாட்களும் தன் கணவரின் இருப்பைக் கண்டறியும் பணியிலேயே கழிந்துசெல்கின்றன. துணிச்சல் மிகுந்த அந்தப் பெண்மணியின் விடாப்பிடியான தொடர் முயற்சிகள் அவருக்குதேசத் துரோகிஎன்ற பட்டத்தை ஈட்டித் தந்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அருத்திக பெர்னாண்டோ அண்மையில் சர்ச்சைக்குரிய விடயமொன்றை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். அதாவது, காணாமற் போனதாகச் சொல்லப்படும் பிரகீத் எக்னெலிகொட தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாகவும், அவரை பிரான்ஸில் வைத்து கவிஞர் மஞ்சுள வெடிவர்த்தன தனக்கு அறிமுகம் செய்துவைத்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் பொய் கூறுகின்றார் என்று, மஞ்சுள வெடிவர்த்தன அதை மறுத்துரைத்துள்ளார். அருத்திக பெர்னாண்டோவை 2007 ஆம் ஆண்டு கொழும்பில் சந்தித்ததன் பின்னர் தான் எங்கேயும் சந்திக்கவில்லை என்றும் மஞ்சுள வெடிவர்த்தன பிபிசிக்கு செய்திச் சேவைக்குப் பதிலளித்தபோது தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கே இந்த நிலை எனும்போது, சிறுபான்மையினத்திலிருந்து  காணாமற் போன செய்தியாளர்களைக் குறித்து சொல்வதற்கு ஏதுமில்லை. சந்தியா சொல்கிறார்:
நான் ஒரு சிங்களப் பெண்ணாக இருந்தும்கூட இவ்விதம் நடத்தப்படுகிறேனெனில், தமிழ் மட்டுமே பேசக்கூடிய அப்பாவிகள் எப்படி நடத்தப்படுவார்கள் என்பதை என்னால் கற்பனை செய்துபார்க்க முடிகிறது.”


(தொடரும்)

நன்றி: தீராநதி அக்டோபர் மாத இதழ்