8.31.2007

நினைவில் உதிக்கும் நிலவு


வானம் இருண்டு கடல் மூட
இரைச்சலுடன் ஆர்த்துவரும் மழை பார்த்து
கூடிருக்கும் மரத்தை பதைப்புடன் சுற்றியலைவுறும்
தாய்ப்பறவையை இப்போது நினைவூட்டுகிறாய்
கோபமும் பிடிவாதமும் அழிந்த உன்னுருவம்
என்னையொருகணம் தாயென அருள்கிறது
இனி நெருங்குதல் வாய்க்கப்பெறாத
நீள விழிகளை முத்தமிடும் உதடுகளில்
ஈர நிலத்தை உணர்கிறேன்
ஓரங்கமும் விடாது பிணைதல் பாம்புகளுக்கே வாய்த்துளது
‘எதையாவது மறந்துவிட்டிருக்கிறேனா’
குளியலறைக் கண்ணாடிமீது தெறித்த
உப்புச்சுவை கலந்த தண்ணீர் எழுதுகிறது
பிரிவின் கவிதையை
நம்மை உயிர்ப்பித்த இவ்வறை
அமானுஷ்யக் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கலாம்
உன் நீண்ட விரல்களால் மிருதுவாகத் தடவப்படும்
படுக்கை விரிப்பின் பூக்கள் மலர்கின்றன
பலவீனமான புன்னகையோடு
என் கை பற்றி அழுத்தி விடை சொல்கிறாய்
அறிமுகமற்றவர்களெனும் பாவனைபொருத்தி
நீள வராந்தாவின்
எதிரெதிர் திசைகளில் தளர்ந்து தொலைகிறோம்
எங்கேனுமொரு கூட்டத்தில்
யாரோபோல் நீ சிரிக்கும்போதில்
தாழுமென் விழிகளில் மீள உதித்தல்கூடும்
கூந்தல் முகம் மூட
நீலியாய் உருக்கொண்டு
உன்மீதில் கவிழ்ந்தபொழுதில்
அசைந்த திரைச்சீலைகளினூடே
தோன்றி மறைந்த நிலாத்துண்டு.


‘சூரியன் தனித்தலையும் பகல்’ கவிதைத் தொகுப்பிலிருந்து….