9.30.2007

லசந்தரா மலர்சொரியும் வீடு


அந்நிய நிலத்திலிருந்து வந்தவர்களை
கண்ணியமாய் மறுதலித்த கனவானே நன்றி!
என்னிடம் துப்பாக்கி இல்லை என்பதை…
தடைசெய்யப்பட்ட பிரசுரங்களை
நான் கொண்டலைவதில்லை என்பதை…
விபரித்தல் வியர்த்தம்
இக்கொடுமதியம் சுடும் படிகளில்
நீண்டநேரம் நிற்கவியலாது இறங்கிச்செல்கிறேன்

வாழமுடியாமற் போன வீட்டை
சுமந்தலைதல் விதிக்கப்பட்டோம்

நெருஞ்சிமுட் காடு
கற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததை
மரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதை
பூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள்
அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை…

ஒரேயொரு சன்னத்தில்
குயில்களின் குரல்கள் அடங்கிடல் அஞ்சினேன்

இலைகளைத் தோற்கடித்து
செடியை ஆக்கிரமித்திருந்தன லசந்தரா மலர்கள்.
மோகங்கொண்டு வேம்பு அனுப்பிய காற்றில்
கிளர்ந்து கிழிபட்டிருந்தன வாழையிலைகள்
ஊற்றுவிழி திறந்தபடி
ஆழக்கனவொன்றில் கிடந்த கிணறும்
செவ்விளநீர் மரங்களும்
எழுதப்பட வேண்டிய கவிதைகளை
தம்முள் வைத்திருந்திருக்கலாம்
என் பட்டுக்குஞ்சே!
நீலவிழியுருட்டிப் படுத்திருந்த உன்னை
எடுத்தணைத்துக் கொஞ்சிப்பிரிந்தபோதில்
பால் மணத்தது.
தளம் இழைக்கையில்
இழந்த நகைகளின் நிறத்தில்
வெயில் அணைத்துக்கொண்டிருந்தது வீட்டை.

சில கடல்மைல்களுக்கப்பாலிருந்தபடி
போரோய்ந்து வீடு திரும்பக் காத்திருப்பது
நண்பர்களே! (எதிரிகளுக்கும்)
உங்களில் எவருக்கும் நேராதிருக்கட்டும்!

9.29.2007

நோய்க்கூற்றின் கண்கள்


இதுவொரு சோதனை மீள்பதிவு

“இறப்பதற்குத் தனியாக காரணங்கள் தேவையா
இருப்பதற்குக் காரணங்கள் இல்லையென்பதை விட?”

கனவுகள் சலித்துப்போன ஓரிரவில் இதனை எழுதத் தொடங்குகிறேன். அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது. சித்தம் சிதைவதற்கு மிக முந்தைய கணத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தையைப் போன்ற, ஒத்த சாயலையுடைய இந்த நாட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதே காலையில் அதே சாலையில் அதே ஆறு மணிக்கு துணைக்கு சடைநாய்க்குட்டி சகிதம் அதே கிழவர் நடந்துபோகிறார். முன்பொருநாளில் “எத்தனை அழகியது இந்த வாழ்க்கை”என்று பல தடவை வியந்திருக்கிறேன். விநோதரசம் நிரம்பிய அண்மைய நாட்களின் நடப்புகள், அந்த வார்த்தைகளைப் பார்த்து ஓசையெழச் சிரிக்கின்றன. ‘வாழ்வொரு அபத்தம்’ என்ற கசப்புப் படிந்த வரி மண்டைக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.‘வேடிக்கை மனிதரைப்போல’அல்லாது வாழமுயன்று களைத்துப்போனவர்களின் உதடுகள் சலித்துத் துப்பிப்போட்ட வார்த்தைகளில் ஒன்றிரண்டைப் பொறுக்கிக்கொள்வதைத் தவிர புதிதாக ஒன்றுமில்லை.

‘நமக்குள் இருப்பதுதான் புத்தகத்தில் இருக்கிறது
அதைவிட ஒன்றுமில்லை’ என்று நகுலனும்,‘இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறது’என்று கல்யாண்ஜியும் (?) சொன்னது ஞாபகத்தில் வருகிறது. அடுக்கி வைத்த சீட்டுக்கட்டை அவரவர்க்குப் பிடித்தபடி அடுக்கியும் கலைத்தும் விளையாடுகிறோம் என்பதுதானே உண்மை. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும், பேசுவதன் மீதான் விருப்பு வற்றிப்போய்விடவில்லை. தனது இருப்புக் குறித்த பிரக்ஞை மற்றவர்களிடம் இல்லாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற பதைப்பே எழுதத்தூண்டுகிறதோ என்னவோ…!வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? இதுவரை வாழ்வை அழகிய பூவனமாகத் தோற்றப்படுத்திக்கொண்டிருந்த மாயக்கண்ணாடியைக் கழற்றி வைத்ததனால் வந்த மாற்றமா…? “ஆகா! அழகியது!”என்று கொண்டாடிய காலங்கள், இப்போது எல்லோரும் எழுதிவரும் கிறுக்குத்தனமானவைதான் என்று கண்டுகொண்டபின் யாவற்றையும் யாவரையும் பார்த்து நகைக்கவே தோன்றுகிறது. இருப்பிற்காக, உயிர் தரித்திருத்தலுக்காக கொடுக்கும் விலை மிக அதிகமோ என்ற எண்ணம் வருகிறது. எழுத்து,உறவு,வாசிப்பு எல்லாமே அணைந்துபோய்க்கொண்டிருக்கிற வாழ்வின் மீதான விருப்பின் திரியைத் தூண்டிவிடுவதற்காக நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவையாகவே இருக்கின்றன. விளையாடும் குழந்தையைச் சுற்றி கார்,பிளாஸ்டிக்காலான கட்டிடப் பொருத்துகைகள், பொம்மைகள் இறைந்து கிடப்பதைப் போல, ‘நான் இன்ன இன்ன காரணங்களுக்காக வாழ்கிறேன்’ என்று எமக்கும் எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே எம்மைச் சுற்றி பலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறோம். உறவுகள் என்ற கசப்பு மருந்தின் மேல் அன்பு என்ற தேனைப் பூசி விழுங்க வேண்டியிருப்பதை அறியாத ‘அப்பாவி’கள் நாங்கள்.அன்பு உலகை ஆள்வதென்பது, டைனசோர் போல அருகி அழிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அன்புதான் உலகை ஆள்கிறதெனும் எனது அண்மைய தோழா! மாபெரிய அபத்தத்தைப் பேசுகிறாய். நீ சொல்வது சரியெனில், அன்னை தெரேசாவையும் மகாத்மா காந்தியையும்(விமர்சனங்களோடும்) ஒன்று…. இரண்டு… மூன்று என்று விரல்விட்டு எண்ணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏன்? எங்களில் எத்தனை பேர் மற்றவரின் துயரங்களுக்கு சகிப்புத்தன்மையோடு செவிமடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களில் எத்தனை பேர் எங்களால் இயலக்கூடிய உதவிகளைச் செய்வதற்கு சோம்பற்பட்டு விலகிக்கொண்டிருக்கிறோம். எமக்குப் பிடித்த திசை நோக்கி நகராத உரையாடல்களிலிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளும்போது தனிமைப்படும் இதயங்களைப் பற்றி எம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?

அதிகாரங்கள்தான் உலகை ஆள்கின்றனவேயன்றி அன்பு அல்ல. அதிகாரத்தைக் கையிலேந்திய பிதாமகர்கள் எம் மீது மேலாதிக்கம் செலுத்தும் பிறப்புரிமை பெற்றவர்களாக, எம்மை அலைக்கழிக்கத்தக்கவர்களாக இருக்கும் உலகத்தில் ஒரு பூச்சிகளாக வாழ விதிக்கப்பட்டிருப்பது கொடுமையிற் கொடுமை! தீயவர்களுக்கும் அவர்கள் சுமந்தலையும் துப்பாக்கிகளுக்கும் இன்னபிற ஆயுதங்களுக்கும் பயந்துகொண்டு இந்த உயிரை எத்தனைக்கென்று கக்கத்தில் இடுக்கிக்கொண்டலைவது? முன்னொருபோதும் அறியாதவர்களால் இரவோடிரவாக விரட்டப்படுகிறோம். கைது செய்யப்படுகிறோம். எவனோ வெட்டிய பள்ளத்தில் தெருநாயைப் போல இழுத்தெறியப்பட்டுப் புதைந்து கிடக்கிறோம். இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டில் நீ இருக்கமுடியாதென யாரோ ஒருவன் கட்டளையிடும் குரலுக்குப் பணிகிறோம். கனவுகளையும் கற்பனைகளையும் யாரோவுடைய துப்பாக்கியின் பெருவாய் தின்றுதீர்க்கிறது. எங்களது ஒட்சிசன் குழாயை எந்த நிமிடத்திலும் எவரும் பிடுங்கிவிடத்தகு நோய்ப்படுக்கையில் கையறு நிலையில்தான் இருக்கிறோம். முதலில் இந்த ஜனநாயகம்… சமத்துவம்… மனிதம்… தனிமனித உரிமை… மண்ணாங்கட்டி… இந்த வார்த்தைகளை அகராதியிலிருந்து அழித்துவிடவேண்டும். நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?

பதின்மூன்று ஆண்டுகளின் முன் நீ தற்கொலை செய்துகொண்டபோது ‘அவளொரு கோழை’என்றார்கள். நீ வாழ்ந்திருக்கக்கூடிய காரணங்கள் எல்லோராலும் அடுக்கப்பட்டன. இல்லையடி!வாழ்வை எதிர்த்துக் கலகம் செய்து உயிர் எனக்கொரு மயிர் என்று பிடுங்கி அவன் முகத்தில் விட்டெறிந்து போன நீயொரு தீரி! உன் கவிதைகளை எரித்து உன்னையும் மாய்த்துப் போன சிவரமணி!நீயும் நின் கவிதையும் எங்களைவிட உயிர்ப்புடன் இருக்கின்றன. இரண்டு மாதங்களின் முன் ஒற்றைக் கயிற்றிலே தொங்கி உன்னை இறுக்கியிருந்த அத்தனை தளைகளையும் அறுத்தெறிந்துபோன சின்னப் பெண்ணே!நீ வணங்கத்தக்க துணிச்சல்காரி!

தற்கொலை என்பது, வாழ்வின் முகத்தில்-தெரிந்தே காயப்படுத்திய சகமனிதர்களின் முகத்தில் காறியுமிழும் எச்சில்தான். விநோதம் என்னவென்றால், மெல்லிய சங்கடத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு பறவையின் எச்சத்தைப் போல அதை வழித்தெறிந்துவிட்டுப்போய்க்கொண்டே இருக்கிறோம். தற்கொலை செய்பவர்கள் வாழ்வை வென்றாலும், தம் வலியை கன்னத்தில் அறைந்து உணர்த்துவதில் தோற்றுத்தான் விடுகிறார்கள்.நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும். நீங்கள் தமிழ்மணத்தில் எழுதுகிறவராக இருந்தால், அஞ்சலிக்கவிதைகள் நான்கைந்தும் சில நினைவுக்குறிப்புகளும் பதிவிடப்பட்டு- வாசிக்கும் ஏனையோரை கண்கலங்கவோ ‘இதெல்லாம் கவிதையாக்கும்’என பல்கடிக்கவோ வைக்கலாம். வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!

9.19.2007

மஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்


நூலாசிரியர்: யூமா வாசுகி

காதல் என்பது வலியும் சுகமும் இணைந்ததொரு அற்புத உணர்வென்றே இதுவரை வாசித்த நூல்களும் சந்தித்த மனிதர்களும் பேசக் கேட்டிருக்கிறோம். அது ஒருதலையாக அமையுமிடத்தில் குரூரமானதும், ஒரு மனிதனை மிகக்கொடுமையான பிறழ்நிலைக்கு இட்டுச்செல்லத் தக்க சக்தி வாய்ந்ததும்கூட என்ற அயர்வு ‘மஞ்சள் வெயிலை’ வாசித்துமுடித்து மூடிவைத்தபோது ஏற்பட்டது. மூடிவைத்தபிறகும் வலியின் வாசல்கள் பக்கங்களாக விரிகின்றன.

இந்நாவலைப்பற்றி அறிந்திராத சில வாசகர்களால் இப்பதிவின் உட்செல்லமுடியாதிருக்கும் என்பதனால் கதையைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

தினச்செய்தி என்ற பத்திரிகையில் ஓவியங்கள் வரைபவனாகப் பணியாற்றும் கதிரவன் என்பவனுக்கு அதே அலுவலகத்தின் மற்றோர் பிரிவில் வேலை பார்க்கும் ஜீவிதா என்ற அழகிய பெண் மீது காதல் மேலிடுகிறது. காதலென்றால்… அவள் காலடி மண்ணைக் கண்ணில் ஒற்றிச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்ளத்தக்கதான, அவனால் மகோன்னதம் எனக் போற்றப்படும் காதல். அவளும் அவனைக் காதலிப்பது போன்றே ஆரம்பத்தில் தோன்றுகிறது. சின்னச் சின்ன உரையாடல்கள், கண்களுக்குள் பார்த்துக்கொள்வது இவ்வளவிற்குமேல் போகவில்லை. அவளுடைய ஒரு பார்வைக்கு ஓராயிரம் பொருள்பொதிந்து பேதலித்துப்போய்த் திரிகிறான் கதிரவன். காதலின் சன்னதத்தைத் தாளமுடியாத கதிரவன் ஒருநாள் தொலைபேசியில் அவளை அழைத்து அனைத்தையும் கொட்டிவிடுகிறான். அவளோ தான் அவனைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள். உலகத்தின் துயரங்கள் அனைத்தும் தன்மீது கொட்டப்பட்டதாக உணர்கிறான் அவன். வாழ்க்கை முழுவதும் அவளது ஞாபகத்தைக் கொண்டலைவேன் என முடிகிறது கதை. அல்லது கதைபோல புனையப்பட்ட யாரோ ஒருவருடைய வாழ்க்கை.

‘மஞ்சள் வெயிலை’ இவ்வளவு எளிதாக சில வரிகளுக்குள் அடக்கும் எவருக்கும் குற்றவுணர்வே மிகும். ஏனெனில் கதிரவன் என்ற அவனுடைய துயரம், ஆற்றாமை, அச்சம், பதட்டம், ஆதங்கம், காதல், கழிவிரக்கம், சுயபச்சாத்தாபம், குமுறல், கொந்தளிப்பு, தாபம், தனிமை, ஆராதனை, அயர்ச்சி, நிராதரவான தன்மை… என மாறி மாறித் தோன்றும் முகமானது புத்தகத்தை வாசிக்கும் எவரையும் அலைக்கழிக்கும் தன்மையது.

ஜீவிதாவை விளித்து கதிரவன் எழுதும் நெடுங்கடிதமாக விரிகிறது மஞ்சள் வெயில். இந்நாவல் தன்னிலையில் எழுதப்பட்டிருப்பதானது வாசிக்கும் மனங்களுக்கு கூடுதல் நெருக்கத்தை அளிக்கிறது. தவிர, கடிதவடிவில் எழுதப்படும் நாவல்கள் அடுத்தவரின் அந்தரங்கங்களுள் இயல்பாக நழுவிச்செல்வது போன்றதொரு இரகசியக் குறுகுறுப்பை அளிக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 133 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இதைக் குறுநாவல் என்றும் சொல்லலாம். நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கவித்துவச் சரடொன்று ஓடிக்கொண்டேயிருக்கக் காணலாம்.

“நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ரோஜாவின் இதழ் முகட்டில் வந்திருக்கிற பனித்துளி அசைவில் சரிந்து உதிர்ந்து விடாதபடி மெதுநடையில் உங்களிடம் சேர்க்கிற ஆழ்ந்த கவனத்துடன் - மூளையில் அதிநுட்ப அறுவைச் சிகிச்சை நடத்துகிற மருத்துவனின் சிரத்தையுடன் - தொலைவான ஓரிடத்திலிருந்து கலைந்து கலைந்து வரும் அழைப்புச் சமிக்ஞையைத் தவிப்புடன் கிரகிக்கிற குருடனின் தீவிரபாவத்துடனும் இதைச் சொல்கிறேன். சொல்லுகையில், இந்த வார்த்தைகள் ஆணிகளாக என் இதயத்தில் இறங்குகிற வேதனையோடு… ‘உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது’”

மஞ்சள் வெயிலின் ஆசிரியர் யூமா வாசுகி ஒரு கவிஞராகவும் இருப்பதனாலோ என்னவோ நாவலின் சில இடங்கள் கவிதைகளைக் காட்டிலும் அழகியலோடு அமைந்திருக்கின்றன.‘நீள விழிகள்’-‘கனிந்து சிவந்த உதடுகள்’ என்ற வர்ணனைகளையே வாசித்துச் சலிப்படைந்திருக்கும் வாசகர்களுக்கு கீழ்க்காணும் வார்த்தைகள் வியப்பளிக்கலாம்.
பச்சைக்கிளிகளை அடைத்த கூண்டுகளான உங்கள் முலைகளிலிருந்து வரும் இடைவிடாத கொஞ்சல் பேச்சரவம் கிரகித்தேன் நான் மட்டும். குடம் ததும்புவதைப்போல உங்களைச் சுற்றிக் குளிர்தெறிக்கிறது. எப்போதும் கூட்டின் இடுக்குகளிலிருந்து பறவைக் குஞ்சுகள் அலகு நீட்டிப் பார்க்கும் சுபாவத்தோடு மணிக்கட்டிலிருந்து பிரிந்த விரல்கள் உங்கள் தொடைமீது கிடந்தன………..”

மஞ்சள் வெயிலை வாசித்த பிற்பாடு ‘காதலின் இருண்ட பக்கங்கள் என்னை அச்சுறுத்துகின்றன’என்றொரு நண்பர் சொன்னார். அது உண்மையிலும் உண்மை. சில நாட்களாக ஜீவிதா அலுவலகத்திற்கு வரவில்லை; காரணமும் தெரியவில்லை. புறக்கணிப்பின் வேதனையோடு ஜீவிதாவிற்காகக் காத்திருக்கும் கதிரவன், காதலின் பாடுகள் தாளாமல் தன்னைச் சுயவதை செய்துகொள்ளுமிடத்தை வாசித்தபோது நண்பர் சொன்னது சரியெனவே உணர்ந்தேன்.

“சிகரெட்டின் தீக்கங்கை எனது இடதுகையில் குத்தி அணைத்தேன். திடுக்கிடும் கடலைக் கண்டு உரக்க நகைக்கிறேன். அழுத்தும் தீக்கங்கில் தசை கரிகிறது. போதையைத் தகர்க்கும் எரிச்சல். நெருப்பு தசைக்குள் ஊடுருவுகிறது. கைவிரித்து அழைக்கிறது பேரலை. மீண்டும் பற்றவைக்கப்பட்டது சிகரெட். நாலைந்து இழுப்புகளுக்குப் பிறகு இடக்கையில் மற்றுமொரு சூடு. கடல் பதறுகிறது. அவசர அவசரமாக வேகத்தை அதிகப்படுத்தி என் கால்களைச் சமீபிக்கிறது. பொறுப்பதற்கியலாத வலி, ஜீவிதா அருவருப்படையாதீர்கள், முகம் சுளிக்காதீர்கள். அடுத்தடுத்துப் புகைத்த பத்து சிகரெட்டுகளையும் எனது இடக்கரத்தில் குத்தி அணைத்தேன். தலைக்குள் பிசைந்தது மயக்கம்”

தன்னை வதை செய்யும் இந்தக் காதல் உண்மையில் அச்சமூட்டுகிறது. ‘கடவுளே… இது என்ன?’என்று பதறவைக்கிறது. பரிதாபத்திற்குப் பதிலாக கோபமற்ற கோபத்தையும் கிளறுகிறது. கடற்கரையில் வைத்து சிகரெட்டுகளால் தன்னைச் சுட்டெரித்தது போதாதென்று, அறைக்குள் மீண்டும் ஆரம்பமாகிறது காதலின் களரி. தாண்டவம்.

“கண்ணாடிக்கு முன் நின்று பென்சில் சீவும் கத்தியால் என் முகத்தில் கோடு கிழிக்கிறேன். நெற்றிக்கோட்டில் ரத்தம் நுண்புள்ளிகளாக முகிழ்ந்து துளிகளாகக் கனக்கிறது. இரு கன்னங்களில் - தாடையில் - நெற்றியில் ஆழ உழுகிறது கத்தி. புதுமணமுடைய ரத்தம் என் விரல்களில் பட்டுப் பிசுபிசுக்கிறது. ஜீவிதா! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்….? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்….?”

உண்மையில் வாசிப்பவனின் மேல் இரத்தத்தை விசிறியடிக்கும் எழுத்துத்தான் அது. சுயவதையைக் காணச் சகியாமல் தப்பித்து ஓடிவிடும் அச்சமும், அடுத்து நிகழவிருப்பதன் மீதான ஆர்வமும் இணைந்தே வாசிப்பை நடத்திச்செல்கின்றன.

ஒரே வாசிப்பில் முடித்துவிடக்கூடிய நாவல் என்பதற்கு அதன் குறைந்தளவிலான பக்கங்கள் மட்டும் காரணமில்லை. நிராகரிக்கப்படுவேனோ என்ற அச்சமும் இயல்பாகவே கூச்சமும் நிறையப்பெற்ற கதிரவன், ஏறக்குறைய நாவலின் கடைசிப் பகுதியிலேதான் தனது காதலை வெளிப்படையாகச் சொல்கிறான். காதலை வெளிப்படுத்தும் தருணத்தை நோக்கி பரபரப்புடன், நெஞ்சு பதைக்க வாசகர்களை நகர்த்திச் செல்லும் உத்தியை ஆசிரியர் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

“அப்படியா நான் அப்படிப்பட்ட நினைப்பில் எல்லாம் உங்களைப் பார்க்கவில்லையே…”என ஜீவிதா கதிரவனின் காதலை நிராகரிக்கிறாள். அதீதமான துக்கம் மூடுகிறபோது எங்கிருந்தோ வந்து படிந்துவிடுகிற பொய்யான நிதானத்தையும் அமைதியையும் வாழ்வின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாமும் உணர்ந்திருப்போம். சலனமற்ற கடல்போலாகிவிடுகிறது மனம். ஆனால், உள்ளே அசைவொன்றுமில்லையா என்ன?

“மறைந்துவிட்டன போலிருந்தன புலன்கள். பிரிக்கப்படாத ஒரு கடித உறையாக என் முன்னே நான் கிடந்தேன். வேற்றுலகிலிருந்து வந்து வீழ்ந்த பொருளைப் பார்வையிடுவதாக, புரியாமல் தெரியாமல் உற்றுக் கவனிக்க முற்பட்டேன் என்னை. என் மோனத்தின் மறைவில் அபாயகரமான விபரீதமான அம்சம் நிலவியதாகப்பட்டது. மனம் துக்கித்துப் புலம்பவில்லை. அரற்றவில்லை. ஒரு துளிக்கண்ணீரில்லை.”

இந்த இடத்தில் வாசிப்பு மனமோ சோர்ந்துபோய் நின்றுவிடுகிறது. ‘சரி அவ்வளவுதான். எல்லாம் ஆயிற்று’என்று நாம் நினைக்கும்போதும் கதிரவன் தளர்வதாயில்லை. கடைசி நம்பிக்கையாக அவளை நினைத்துத் தான் எழுதிய கவிதைகளை இரவிரவாகப் படியெடுத்துக் கொண்டுபோய் அலுவலக வாசலில் காத்திருக்கிறான்.

“அனாதி காலந்தொட்டுக் காத்திருக்கிறேன். மாயம் போல மந்திரம் போல உங்கள் பெயர் கிடந்து பேதலிக்கிறது என்னுள்ளே. எனக்கு நீங்கள் பங்கிட்டுக் கொடுத்தது பெரிய பாகம். சுமக்க இயலவில்லை. மோகாவேசம் மூண்டெரிகிறது. நீங்கள் என் நடனப்பண். உங்கள் குரலின் மென்தூவிகள் திசைகளெங்கிலும் மிதக்கின்றன. அனந்த காதலின் கிளர்ச்சி நீங்கள். அழகு திகழும் மினுமினுப்பான என் மரணம்”

அவள் வரவில்லை! அவனை வரச்சொல்லிவிட்டுக் காத்திருக்க வைத்த அன்றைக்குத்தான் நல்ல வேலையொன்றில் சேர்வதற்காக அவள் அமெரிக்காவுக்குக் கிளம்பிப்போயிருக்கிறாள். ஒரு பூத்தூவலென அவன்மீது புன்னகையைச் சிந்தி நகர்ந்த ஜீவிதாவிற்கும் ஆரம்பத்தில் கதிரவன் மீது காதல் இருந்ததென்றும் வசதியான வாழ்வினைக் கருதி அவள் அவனைவிட்டு நீங்கிவிட்டதாகவும் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கதிரவனின் வார்த்தைகளில் கோபமில்லை. வாசிக்கிறவர்கள்தான் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

கவிதைகளுட் சில உரைநடையாயிருக்கின்றன. இந்நாவலின் உரைநடையோ கவிதையாயிருக்கிறது. யூமா வாசுகியின் விரல்கள் வழியாக துயரமே எழுதிச்செல்வது போலிருக்கிறது. தான் உணர்ந்த துயரை மற்றவருள் கடத்துதல் இவர் போல எல்லோருக்கும் சாத்தியமல்ல.

இப்போதெல்லாம் வாசிப்பிற்கு இணையாக தனது முன்தீர்மானங்களையொட்டிய துணைவாசிப்பொன்றை மனம் நிகழ்த்திக்கொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், மஞ்சள் வெயிலின் கவித்துவ வரிகளில் அந்தக் குரல் தீனமாகி வலுவிழந்து எங்கோ ஆழத்தில் சென்றொளிந்துகொண்டது.

பல இடங்களில் இது நாவல் என்பது மறந்துபோகிறது. பாடகன் கான் முகம்மது, இரவுக் காவலர் பாலகிருஷ்ணன், அவரது நாய்க்குட்டி மணி, சப் எடிட்டர் சந்திரன் இவர்களெல்லோரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என நம்பமறுக்கிறது மனம். அதிலும் ‘இந்நாவலை எனது நண்பர் இரவுக்காவலராக இருந்த திரு.வி.கே. பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பிக்கிறேன்’என்பதை வாசித்தபோது… ‘அந்த நெற்றிக் கீறல்கள் இன்னமும் இருக்குமோ-அந்தப் பெண் இந்த நாவலை வாசித்திருப்பாளா…?’என்ற ரீதியில் சிந்திக்கவாரம்பித்துவிட்டது வம்பிற்கு அலையும் மனம். நனவு, கனவு,புனைவு மூன்றும் கலந்ததே எழுத்து. எனினும் இது உண்மையெனில், திரண்ட கண்ணீர் உண்மையிலும் உண்மை.

காதலிக்கப்பட்டவள் நிராகரித்துவிட்டபோதிலும் காதல் தன்னை நிராகரிக்கவில்லை என கதிரவன் நம்புவதாக முடிந்திருக்கிறது மஞ்சள் வெயில். ஈற்றில், ஜீவிதா என்ற அந்தப் பெண்ணைச் சந்தித்ததொன்றே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை உயிர்ப்போடு வைத்திருக்கப் போதுமெனச் சொல்கிறான் கதிரவன்.

“நான் உங்களைப் பார்த்தேன். இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகாமந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன்சிந்தும் கொலுசுகளுடன் நடந்துபோகும் உங்களைப் பார்த்தேன். கற்பனையில்லை. கனவுகண்டு உளறவில்லை. சர்வசத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப் பார்த்தேன். எப்போதும் எல்லா சந்தோசங்களையும் மறைத்துவைத்து என்னைக் கண்டுகொள்ளாமல் போகும் வாழ்க்கையைப் பிடித்து நிறுத்தி உங்களின் காட்சியை புலன் விழிப்போடு பெற்றுக்கொண்டேன்”

விரும்பிய துணை கிடைக்காமற் போகிறபோது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடாக இந்த வரிகளைப் பார்க்கத் தோன்றவில்லை. காதல்… 'காதலன்றி ஏதுமற்றவனாக' தளர்ந்து நடக்கும் அவன் ஒருபோதும் பொய்யாக இருக்கமுடியாது.

மனிதர்கள் முரண்களாலானவர்கள் என்பதை மீளவும் மீளவும் ஞாபகம் கொள்கிறேன். காதல் என்பது மிகப்பெரிய அபத்தமென்று சொன்ன மனந்தான் காதலைக் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் ‘காடு’நாவலுக்குப் பிறகு, மன அதிர்வையும் அந்தரத்தையும் தந்த நாவல் என்றால் அது மஞ்சள் வெயில்தான். வாசித்து நெடுநாட்களாகிவிட்டபோதிலும் தனித்திருக்கும் நேரங்களிலெல்லாம் படர்ந்துகொண்டேயிருக்கிறது ‘மஞ்சள் வெயிலின்’ஒளி.

9.17.2007

பரவாயில்லை


பசியில் சுருண்ட ஒரு மனிதனின்
கடைசி உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக மலைமுகடுகளில் காத்திருக்கின்றன
வல்லூறுகள்

வன்புணரப்பட்ட சிறுமியின்
கால் வழி பெருக்கெடுக்கும் குருதியை
இரகசியமாகத் துடைத்துக்கொண்டிருக்கிறாள்
எங்கோ ஓர் தாய்

காதலனின் மார்பு மயிரளைந்தபடி
கணவனின் நெஞ்சுவலி குறித்து விசனித்துக்கொண்டிருக்கிறாள்
தொலைபேசியில் ஒருத்தி

வீடு திரும்பச்சொல்லி இறைஞ்சும்
முதியதாயின் நெஞ்சில் கால்பதித்து
சாக்கடையில் தள்ளுகிறான்
ஒரு குடிகாரன்

பனங்கூடல்களுக்கிடையிலிருந்து
ஒலி்த்துக்கொண்டிருக்கிறது
இன்னமும் கண்திறக்காத பூனைக்குட்டிகள்
கத்தியலையும் சத்தம்

பாரவண்டிச் சாரதியிடம் திருட்டுக்கொடுத்த
அம்பது ரூபாவை நினைத்து விசும்பியபடி
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுநிசி மல்லிகைப் பூக்காரியொருத்தி

இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை!

16 செப்டெம்பர் 2007