இதுவொரு சோதனை மீள்பதிவு
“இறப்பதற்குத் தனியாக காரணங்கள் தேவையா
இருப்பதற்குக் காரணங்கள் இல்லையென்பதை விட?”
கனவுகள் சலித்துப்போன ஓரிரவில் இதனை எழுதத் தொடங்குகிறேன். அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது. சித்தம் சிதைவதற்கு மிக முந்தைய கணத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தையைப் போன்ற, ஒத்த சாயலையுடைய இந்த நாட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதே காலையில் அதே சாலையில் அதே ஆறு மணிக்கு துணைக்கு சடைநாய்க்குட்டி சகிதம் அதே கிழவர் நடந்துபோகிறார். முன்பொருநாளில் “எத்தனை அழகியது இந்த வாழ்க்கை”என்று பல தடவை வியந்திருக்கிறேன். விநோதரசம் நிரம்பிய அண்மைய நாட்களின் நடப்புகள், அந்த வார்த்தைகளைப் பார்த்து ஓசையெழச் சிரிக்கின்றன. ‘வாழ்வொரு அபத்தம்’ என்ற கசப்புப் படிந்த வரி மண்டைக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.‘வேடிக்கை மனிதரைப்போல’அல்லாது வாழமுயன்று களைத்துப்போனவர்களின் உதடுகள் சலித்துத் துப்பிப்போட்ட வார்த்தைகளில் ஒன்றிரண்டைப் பொறுக்கிக்கொள்வதைத் தவிர புதிதாக ஒன்றுமில்லை.
‘நமக்குள் இருப்பதுதான் புத்தகத்தில் இருக்கிறது
அதைவிட ஒன்றுமில்லை’ என்று நகுலனும்,‘இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறது’என்று கல்யாண்ஜியும் (?) சொன்னது ஞாபகத்தில் வருகிறது. அடுக்கி வைத்த சீட்டுக்கட்டை அவரவர்க்குப் பிடித்தபடி அடுக்கியும் கலைத்தும் விளையாடுகிறோம் என்பதுதானே உண்மை. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும், பேசுவதன் மீதான் விருப்பு வற்றிப்போய்விடவில்லை. தனது இருப்புக் குறித்த பிரக்ஞை மற்றவர்களிடம் இல்லாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற பதைப்பே எழுதத்தூண்டுகிறதோ என்னவோ…!வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? இதுவரை வாழ்வை அழகிய பூவனமாகத் தோற்றப்படுத்திக்கொண்டிருந்த மாயக்கண்ணாடியைக் கழற்றி வைத்ததனால் வந்த மாற்றமா…? “ஆகா! அழகியது!”என்று கொண்டாடிய காலங்கள், இப்போது எல்லோரும் எழுதிவரும் கிறுக்குத்தனமானவைதான் என்று கண்டுகொண்டபின் யாவற்றையும் யாவரையும் பார்த்து நகைக்கவே தோன்றுகிறது. இருப்பிற்காக, உயிர் தரித்திருத்தலுக்காக கொடுக்கும் விலை மிக அதிகமோ என்ற எண்ணம் வருகிறது. எழுத்து,உறவு,வாசிப்பு எல்லாமே அணைந்துபோய்க்கொண்டிருக்கிற வாழ்வின் மீதான விருப்பின் திரியைத் தூண்டிவிடுவதற்காக நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவையாகவே இருக்கின்றன. விளையாடும் குழந்தையைச் சுற்றி கார்,பிளாஸ்டிக்காலான கட்டிடப் பொருத்துகைகள், பொம்மைகள் இறைந்து கிடப்பதைப் போல, ‘நான் இன்ன இன்ன காரணங்களுக்காக வாழ்கிறேன்’ என்று எமக்கும் எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே எம்மைச் சுற்றி பலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறோம். உறவுகள் என்ற கசப்பு மருந்தின் மேல் அன்பு என்ற தேனைப் பூசி விழுங்க வேண்டியிருப்பதை அறியாத ‘அப்பாவி’கள் நாங்கள்.அன்பு உலகை ஆள்வதென்பது, டைனசோர் போல அருகி அழிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அன்புதான் உலகை ஆள்கிறதெனும் எனது அண்மைய தோழா! மாபெரிய அபத்தத்தைப் பேசுகிறாய். நீ சொல்வது சரியெனில், அன்னை தெரேசாவையும் மகாத்மா காந்தியையும்(விமர்சனங்களோடும்) ஒன்று…. இரண்டு… மூன்று என்று விரல்விட்டு எண்ணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏன்? எங்களில் எத்தனை பேர் மற்றவரின் துயரங்களுக்கு சகிப்புத்தன்மையோடு செவிமடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களில் எத்தனை பேர் எங்களால் இயலக்கூடிய உதவிகளைச் செய்வதற்கு சோம்பற்பட்டு விலகிக்கொண்டிருக்கிறோம். எமக்குப் பிடித்த திசை நோக்கி நகராத உரையாடல்களிலிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளும்போது தனிமைப்படும் இதயங்களைப் பற்றி எம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?
அதிகாரங்கள்தான் உலகை ஆள்கின்றனவேயன்றி அன்பு அல்ல. அதிகாரத்தைக் கையிலேந்திய பிதாமகர்கள் எம் மீது மேலாதிக்கம் செலுத்தும் பிறப்புரிமை பெற்றவர்களாக, எம்மை அலைக்கழிக்கத்தக்கவர்களாக இருக்கும் உலகத்தில் ஒரு பூச்சிகளாக வாழ விதிக்கப்பட்டிருப்பது கொடுமையிற் கொடுமை! தீயவர்களுக்கும் அவர்கள் சுமந்தலையும் துப்பாக்கிகளுக்கும் இன்னபிற ஆயுதங்களுக்கும் பயந்துகொண்டு இந்த உயிரை எத்தனைக்கென்று கக்கத்தில் இடுக்கிக்கொண்டலைவது? முன்னொருபோதும் அறியாதவர்களால் இரவோடிரவாக விரட்டப்படுகிறோம். கைது செய்யப்படுகிறோம். எவனோ வெட்டிய பள்ளத்தில் தெருநாயைப் போல இழுத்தெறியப்பட்டுப் புதைந்து கிடக்கிறோம். இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டில் நீ இருக்கமுடியாதென யாரோ ஒருவன் கட்டளையிடும் குரலுக்குப் பணிகிறோம். கனவுகளையும் கற்பனைகளையும் யாரோவுடைய துப்பாக்கியின் பெருவாய் தின்றுதீர்க்கிறது. எங்களது ஒட்சிசன் குழாயை எந்த நிமிடத்திலும் எவரும் பிடுங்கிவிடத்தகு நோய்ப்படுக்கையில் கையறு நிலையில்தான் இருக்கிறோம். முதலில் இந்த ஜனநாயகம்… சமத்துவம்… மனிதம்… தனிமனித உரிமை… மண்ணாங்கட்டி… இந்த வார்த்தைகளை அகராதியிலிருந்து அழித்துவிடவேண்டும். நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?
பதின்மூன்று ஆண்டுகளின் முன் நீ தற்கொலை செய்துகொண்டபோது ‘அவளொரு கோழை’என்றார்கள். நீ வாழ்ந்திருக்கக்கூடிய காரணங்கள் எல்லோராலும் அடுக்கப்பட்டன. இல்லையடி!வாழ்வை எதிர்த்துக் கலகம் செய்து உயிர் எனக்கொரு மயிர் என்று பிடுங்கி அவன் முகத்தில் விட்டெறிந்து போன நீயொரு தீரி! உன் கவிதைகளை எரித்து உன்னையும் மாய்த்துப் போன சிவரமணி!நீயும் நின் கவிதையும் எங்களைவிட உயிர்ப்புடன் இருக்கின்றன. இரண்டு மாதங்களின் முன் ஒற்றைக் கயிற்றிலே தொங்கி உன்னை இறுக்கியிருந்த அத்தனை தளைகளையும் அறுத்தெறிந்துபோன சின்னப் பெண்ணே!நீ வணங்கத்தக்க துணிச்சல்காரி!
தற்கொலை என்பது, வாழ்வின் முகத்தில்-தெரிந்தே காயப்படுத்திய சகமனிதர்களின் முகத்தில் காறியுமிழும் எச்சில்தான். விநோதம் என்னவென்றால், மெல்லிய சங்கடத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு பறவையின் எச்சத்தைப் போல அதை வழித்தெறிந்துவிட்டுப்போய்க்கொண்டே இருக்கிறோம். தற்கொலை செய்பவர்கள் வாழ்வை வென்றாலும், தம் வலியை கன்னத்தில் அறைந்து உணர்த்துவதில் தோற்றுத்தான் விடுகிறார்கள்.நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும். நீங்கள் தமிழ்மணத்தில் எழுதுகிறவராக இருந்தால், அஞ்சலிக்கவிதைகள் நான்கைந்தும் சில நினைவுக்குறிப்புகளும் பதிவிடப்பட்டு- வாசிக்கும் ஏனையோரை கண்கலங்கவோ ‘இதெல்லாம் கவிதையாக்கும்’என பல்கடிக்கவோ வைக்கலாம். வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!
2 comments:
ஆழமான வலியின் பதிவும் 'அனுபவம்' என்றதை வகைபடுத்தலும் கண்டு மனம் பதைபதைக்கிறது. சில வார்தைகளின் அர்த்தத்தை அனுபவம் தான் தீர்மாணிக்கிறது. உங்கள் வார்த்தைகள் நினைவுப்படுத்தும் என் அனுபவங்களுக்காக சில துளிகளை விட்டு செல்கிறேன்.
//“இறப்பதற்குத் தனியாக காரணங்கள் தேவையாஇருப்பதற்குக் காரணங்கள் இல்லையென்பதை விட?”//
//இதுவரை வாழ்வை அழகிய பூவனமாகத் தோற்றப்படுத்திக்கொண்டிருந்த மாயக்கண்ணாடியைக் கழற்றி வைத்ததனால் வந்த மாற்றமா…?//
//நான் இன்ன இன்ன காரணங்களுக்காக வாழ்கிறேன்’ என்று எமக்கும் எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே எம்மைச் சுற்றி பலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறோம்.//
//நீங்கள் தமிழ்மணத்தில் எழுதுகிறவராக இருந்தால், அஞ்சலிக்கவிதைகள் நான்கைந்தும் சில நினைவுக்குறிப்புகளும் பதிவிடப்பட்டு- வாசிக்கும் ஏனையோரை கண்கலங்கவோ ‘இதெல்லாம் கவிதையாக்கும்’என பல்கடிக்கவோ வைக்கலாம்.//
வாழ்க்கை எதை தான் நிகழ்த்தவில்லை...
Post a Comment