வல்லுறவுக்கிடையில்
தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின்
நெஞ்சு கிழிபடும் ஓலத்தைப்போல
எனது குரலையும் விழுங்க முனைகிறது தொலைவு
முதலில் துயரத்தின் நிலத்திலிருந்து
கொஞ்சம் வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள்
தசைத்துணுக்குகளும் கண்ணீரும் வடிகட்டப்பட்டபின்
அழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்
பாத்திரம் வாங்கினால் குவளை இலவசம் என்பதாய்
சில வாக்குறுதிகளைச் சேர்த்துக் குலுக்கியபின்
பெட்டிகளில் அடைத்து அனுப்பிவிடுகிறார்கள்
சலிக்காமல் பரப்பப்படும் தேவதைக்கதைகள்
நம் பாட்டிமார் சொன்னதை விஞ்சுகின்றன.
எறிகணைகள் கூவிக்கொண்டிருக்கும் இவ்விரவின் முடிவில்
இந்தக் காகிதத்தில்
குருதி எழுதிக்கொண்டிருக்கலாம்
காற்றோடு சர்ச்சையிடும் யுனிசெப்பின் கூடாரத்தை
கார்காலக் குளிரும் கனல்சொரியும் வெயிலும்
மாறி மாறிச் சொடுக்கியதில்
இறந்துபோன குழந்தையை
அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன்
இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது
என் மழலையின் பசிக்குரலில்
எஞ்சிய குழந்தைகளை முன்னிட்டு
மூதாட்டியொருத்தியைச் சாகவிட்டேன்
அவளை மூட்டிய சிதைநெருப்பு
தீராத நோயைப்போல்
வயிற்றினில் வளர்ந்துகொண்டேயிருக்கிறது
அவளை எரித்து வந்த அன்றிரா
இருவருக்குப் போதுமான உணவை
நான்காகப் பிரித்துண்டு
வாழும் நாளொன்றை நீடித்தோம்.
நேற்று முன்தினம்
என் தோழி விடுமுறையில் வந்திருந்தாள்
அவள் மடியில்
சாதுவான குழந்தையைப் போலிருந்த துப்பாக்கியை
பிரியம் பொங்கத் தடவிக்கொண்டிருந்தாள்
இசையை
விழிகள் கிறங்க
ஒருவனொடு கூடிக்களித்துலவும் இனிமையை
குழந்தைகளின் பட்டுக்கன்னங்களை
வாழ்வின் நிறங்களையெல்லாம்
துப்பாக்கியினால் இட்டுநிரப்பியிருந்தாள்
தற்கொடையின் தாய்மை வழிந்த விழிகளை
முத்தமிட அவாவினேன்
கூச்சம் பொங்க அவள் விரல்பற்றி அழுத்தி
‘போய் வா’என்று சொல்லவே முடிந்தது
பாலை மரத்தினடியில் ஒருகணம் தயங்கினாள்
மண்மேட்டைத் தொட்டு வணங்கிக் கடந்தாள்
தானுமோர் எறிகணையாய்.
நகக்கண்களில் குருதி வடிய
மலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க
வயல்வெளியில்
என் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்
காதல் வழிந்த கண்கள்
குருதிநிறை குழிகளாகக் கிடந்தான்
எரியூட்டித் திரும்பிய அன்று
மூன்றாவது குழந்தை
இப்பிரபஞ்சம் காணும் பேராவலில்
தன் பிஞ்சுக்கால்களால்
உள்ளிருந்து உதைத்துக்கொண்டிருந்தாள்
குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி
இதை வாசிக்கிற கனவான்களே!
மன்னித்துக்கொள்ளுங்கள்
மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்
உங்கள் மெல்லுணர்வுகளின் மீது
அமிலம் எறிவதற்கு.
கண்ணீரால் எழுதப்படும் வரலாற்றை
கண் மூடி வாசிக்கும் வித்தையைக்
காணுந்தோறெல்லாம்
‘மனிதர்காள்… மனிதர்காள்…!’என்றிருக்கிறது.
'துன்பியல் நிகழ்வுகளை'
நெடுநாளாய் நினைவில் வைத்திருக்கும்
மகத்தான ஞாபகசக்தியுடையோரே!
எம்மை ஏன் கைவிட்டீர்?
எம்மை ஏன் கைவிட்டீர்?