8.29.2008

புதைந்து போனவள்


அந்த முழுநிலா நாளில்
வெள்ளித்தகடென விகசித்தது மொட்டைமாடி.
கண்ணாடிக் குவளையூடே
நரம்புகளில் புகுந்த செந்நிறத் திரவநதி
அள்ளிச்சென்றது கவலைக் கழிவுகளை.
கூடுதல் நட்சத்திரங்களாய்
விழிகள் மினுக்கிட
அவள் பேசிக்கொண்டிருந்தாள்.

பெண்ணெழுத்து சட்டாம்பிள்ளைகளின்
பிரம்போயும் முதுகெனவும்
அரங்கனின் புண்ணியத்தில்
ஆண்டாள் தப்பியதும்
சொல்லிச் சிரித்த அதிர்வில்
காலடியில் கிடந்த பூனை
விழித்து நெட்டுயிர்த்தது.
மேலும்
காமம் கனலும் கொங்கையெழுத
நஞ்சுண்ட கண்டனை காதலிக்க உத்தேசித்திருப்பதாய்
உற்சாகமாய் அறிவித்தாள்.

அந்நிலாவும்
அன்றவள் ஒளிர்ந்த பொன்னிராவும்
நெடுங்கோடையில் நீரோடைக் குளிர்ச்சி.

‘வேசிக்கும் விதவைக்கும்
எதிர்ப்பதம் தேடித் தோற்றால்
அகராதியை எரிப்பேன்’என்றவளை
சில நாளாய் காணேன்.

பிறிதொருநாள்
இருண்ட அடுக்களையில்
நிதானமாய் அமர்ந்து
வட்டம் பிசகாத தோசைகளை
வார்த்தபடியிருந்தவளைக் கண்டேன்.

அவளைப் புதைத்த இடத்தில்
குழந்தைகள்
மலங்கழித்துக்கொண்டிருந்தார்கள்.

8.07.2008

பெண்கள் சந்திப்பும் சில பேய்க்கதைகளும்

“கேட்ட கேள்விக்குப் பதில் இல்லையெனில் மௌனமாய் இருக்கப் பழகுவது நல்லது”என்ற கவிதை வரிகளை, பெண்கள் சந்திப்பில் கலந்துகொண்டபோது எவ்வாறு மறந்திருந்தேன் என்பதை இப்போது நினைத்துப் பார்க்கும்போது என்மீதே ஆயாசம் பொங்குகிறது. உரிமைகளைக் குறித்துப் பேசக் கூடிய கூட்டத்திலும் பேச்சுரிமை என்பது தனிநபர்களின் செல்வாக்கு, அவர்களுடைய பின்புலம், சமூகத்தினால்(அன்றேல் அவர்களாலேயே) கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் சார்ந்தது என்பதை அறியநேர்ந்ததில் வருத்தமே.
முற்கூட்டிய தீர்மானங்களுடன் இப்பதிவினை வாசிக்க முனைபவர்கள் தயவுசெய்து வேறு பக்கத்தைக் கிளிக்கிட வேண்டுகிறேன். பெண்கள் சந்திப்பில் நிகழ்ந்ததுபோல – அரசுசாரா நிறுவனங்களின் புள்ளிவிபரங்களினையொத்த விமர்சனக்கட்டுரையன்று இது. ஆதலால் நேரடியாகவே விடயத்திற்குள் இறங்குகிறேன்.

புலிகள் புனிதர்கள்: விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்ற கண்மூடித்தனமான நம்பிக்கையும் விசுவாசமும் எனக்கில்லை. ஆனால், ஈழம் குறித்த எந்தவொரு அரசியல் அறிவும் தெளிவும் அற்ற ஒருவர் பெண்கள் சந்திப்பிற்குச் சமூகமளித்திருப்பாரேயாகில் கீழ்க்காணும் முடிவுகளுடனேயே அவ்விடத்தை விட்டு நீங்கியிருப்பார்.
1.வன்னியில் இருக்கும் புலிகளுக்கு தங்கள் கருத்துக்களுடன் முரண்படுபவர்களைக் கொன்றுகுவிப்பதன்றி வேறெந்தப் பணிகளும் இல்லை.
2.இலங்கையில் நடந்துகொண்டிருப்பது சகோதரச் சண்டையன்றி இனப்பிரச்சனையல்ல.

3.புலிகளுடன் வாழ்வதைக் காட்டிலும் சிங்கள பௌத்த அரச அதிகாரத்தின் கீழ் வாழ்வது எளிது.

4.அரசியல், சமூக அறிவற்ற முட்டாள்களை போராட்டம் உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது.

‘பெண்கள் சந்திப்பு’என்று இவ்வொன்றுகூடலுக்குப் பெயரிட்டதன் பொருத்தப்பாட்டினை என்னவென்பது?

இலங்கையிலிருந்து நிவேதா, இந்தியாவிலிருந்து மாலதி மைத்ரி, சுவிசிலிருந்து ‘ஊடறு’றஞ்சி,இலண்டனிலிருந்து நிர்மலா ராஜசிங்கம், அமெரிக்காவிலிருந்து மோனிக்கா, பிரான்சிலிருந்து தேவதாஸ், குறமகள், ஜானகி பாலகிருஷ்ணன், ஜோதி பிரபாகரன், சுதா குமாரசாமி, பார்வதி கந்தசாமி, விஜி, யுவனிதா நாதன் ஆகியோர் கலந்துகொண்டு ஆக்கங்களை வழங்கிய இக்கூட்டத்தின் ‘கட்டுப்பாட்டாளராக’த் தொழிற்பட்டவர் நிர்மலா ராஜசிங்கமே.

அரசியல் ‘ஞானம்’ பொருந்திய அறிவுஜீவியும்- பெண்ணிய ஆய்வாளரும்- தனது கருத்துக்களை வெளிப்படுத்துமளவிற்கு தமிழ் தகைமையுடைத்ததன்று என்ற கருத்தினாலோ என்னவோ அடிக்கடி மேட்டுக்குடி மொழியென நம்பப்படும் ஆங்கிலத்திற்குத் தாவிவிடுகிறவருமான நிர்மலாவின் ‘உரத்த’ குரல் பலருடைய கேள்விகளை விழுங்கிச் செரித்தது. ‘பேச்சுரிமை’, ‘கருத்துரிமை’, ‘வாழ்வுரிமை’ இன்னபிற புண்ணாக்குகளைப் பற்றி இத்தகையோர் பேசிக்கொண்டிருப்பது வியப்பளிக்கிறது. நேர மட்டுறுத்தல் மிக இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படவேண்டுமென இக்கூட்டத்தை ஒழுங்கமைத்த சுமதி ரூபனால் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருந்தபோதிலும், நேரம் செல்லச் செல்ல அதை அவரே மறந்துவிட்டதாகத் தோன்றியது. குறிப்பாக நிர்மலா பேசியபோதெல்லாம் கடிகார முட்கள் அசையாது நின்றன. தனது சகோதரியின் கவிதைகளை ஆனந்தித்து வாசித்தபோதும், ஒரு நொடியில் பதில் சொல்லியிருக்கக்கூடிய ‘எத்தனையாம் ஆண்டு நீங்கள் இயக்கத்தில் இருந்தீர்கள்?’என்ற கௌசல்யாவின் கேள்விக்கு அவர் தன்வரலாறு உரைத்தபோதும் காலம் உறைந்துபோயிற்று. ‘தேசியவாதமும் பெண்ணியமும்’என்ற தலைப்பின் கீழ் பேசுகிறேன் பேர்வழி என்று கிளம்பி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது பெண்களை எவ்வாறு அஞ்ஞான இருளுள் கட்டிக்காத்து வருகிறது என்று பேசியபோது முரளி கீழ்க்கண்டவாறு கேட்டார். “நீங்கள் தமிழீழத் தேசியவாதமும் பெண்ணியமும் என்றல்லவா இவ்வுரைக்குத் தலைப்பிட்டிருக்கவேண்டும்?” - கூட்டத்தின் தலைப்பே பொருத்தமற்றிருக்கும்போது, உரையின் தலைப்பைக் குறித்தெல்லாம் யாரையா கவலைப்படப்போகிறார்கள்? நிர்மலாவை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘நீ அப்பனைப் பற்றிக் கேட்டால் நான் சுப்பனைப் பற்றித்தான் பேசுவேன்’என்ற பாணியிலேயே அவரது பதில்கள் அமைந்திருந்தன.

ஆகஸ்ட் 3ஆம் திகதிய அமர்வில் நிர்மலா தனது உரையை ஆரம்பித்த விதமே அலாதியானது. ‘இந்தச் சந்திப்பானது ஒருபக்கச்சார்பாகப் போய்க்கொண்டிருக்கிறது@ இங்கே புலிகளின் அராஜகம் பற்றித்தான் பேசப்படுகிறதேயன்றி, அரசபயங்கரவாதம் கவனமாக மறக்கப்பட்டிருக்கிறது’என்று முதல்நாள் கூறப்பட்டதை மனதிற்கொண்டு உரையின் முதல்வாசகம் அமைந்திருந்தது. “அரசாங்கத்தால் செய்யப்பட்டவை நமக்கெல்லோருக்கும் தெரியும்” என்று சாமர்த்தியமாக ஆரம்பித்தார். ஒரு வாக்கியத்தின் வாயிலாக இலட்சக்கணக்கான கொலைகளை,வன்புணர்வுகளை,ஆட்கடத்தல்களை, இடப்பெயர்வுகளை எளிதாகக் கடந்துசெல்வதற்கு அதீத புத்திசாலித்தனம் வேண்டும். “ஹிட்லர் அறுபது இலட்சம் யூதர்களைக் கொன்றான் என்பது நமக்கெல்லாம் தெரியும் என்பதால் நாங்கள் இப்போது ரஷ்யப்படைகள் செய்த அட்டுழியங்களைக் குறித்துப் பேசுவோமாக”என்பதை ஒத்திருந்தது அது.

மேலும், புலிகள் பெண்களை அரசியல் ஞானமற்ற அறிவிலிகளாக, ஆயுதங்களாகப் பாவிக்கிறார்கள் என்பதையிட்டுக் கலங்குகிறார். ‘ஆண்களுக்கு நிகரான ஆயுதப்பயிற்சி வழங்கப்பட்டபோதிலும்’என்று மெச்சியதன் வழி நடுநிலை நகர்வொன்றினை மேற்கொண்டுவிட்டு தன் நோக்கத்திற்குத் திரும்புகிறார். புலிகளிடமிருந்து தப்பி அன்றேல் விலகி வந்த பெண்கள் சொல்லும் கதைகள் நெஞ்சை அதிரவைக்கும் தன்மையன என மிகவருந்தும் அவர், இத்தனை ஆண்டுகால வெளிநாட்டு வாசத்தின்போது, அத்தகைய தமிழ் பெண்களுக்கான ஒரு அமைப்பைத் தோற்றுவித்து அவர்களுக்குத் தொண்டாற்றாமல் இருப்பது வியப்பினை அளிக்கிறது.

‘புலிகள் இயக்கத்தில் காதல், திருமணம் போன்றனவற்றிற்கெல்லாம் அனுமதியில்லை என்பதால் இயல்பான உணர்வுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன’ என்று அவர் ஆதங்கப்பட்டதைப் பார்த்தபோது, எண்பதுகளின் ஆரம்பப் பகுதியிலேயே அவரது ஞாபகம் நகராமல் உறைந்துகிடக்கிறதோ என்றெண்ணத் தோன்றியது. ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தபிறகு, குறிப்பிட்ட ஆண்டுகள் சேவையாற்றிய பிறகு ஆணோ பெண்ணோ திருமணம் செய்துகொள்ளலாம் என்ற நடைமுறை புலிகள் இயக்கத்தில் இருப்பதை அறிவுஜீவியும் பெண்ணியவாதியுமாகிய அவர் மட்டும் அறியாமற் போனது துரதிர்ஷ்டமே. இரண்டு தசாப்தங்களின் முன்னர் இருந்த இயக்கமில்லை அது என்பதை அவர் தெரிந்தே மறுக்கிறார். ‘உனக்காக நான் அழுகிறேன் பார்’என்ற போலிப் பெருந்தன்மையுடன் கூடிய மேட்டுக்குடி முதலைக் கண்ணீரில் வழுக்கிவிழுவது தொலைக்காட்சிகளில் ‘கோலங்கள்’போன்ற நெடுந்தொடர்களைத் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஆனால், பெண்களை முன்னிறுத்தி புலிகளைச் சாடுவதே அவரது நோக்கம் என்பது வெளிப்படை.

இயக்கத்திலிருந்து வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் இன்னமும் பொட்டையும் பூவையும் புடவையையும் விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு பழமை பேணுவதாகச் சொன்னதைக் கேட்டபோது ‘என்னே அறிவு’என்று மெச்சத் தோன்றியது. ஆடைகள் ஒருவரின் மனதையும் ஆளுமையையும் பிரதிபலிக்கின்றன என்பதே பொதுப்புத்திசார் புண்ணாக்குத்தனந்தான். அவ்வாறெனில் பொட்டைத் துறந்து ஜீன்ஸ் அணிந்தவர்கள் எல்லோரும் அறிவானவர்கள் என்றல்லவா ஆகிறது? ஜீன்ஸ் அணிந்த, பொட்டு வைக்காத ‘அறிவுக்குஞ்சு’கள் எத்தனை பேரை நாம் நமது நாளாந்த வாழ்வில் சந்தித்துக்கொண்டிருக்கிறோம்!

மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். புலிகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களல்ல. அவரவர் அரசியல் நிலைப்பாட்டிலிருந்து-பார்வையிலிருந்து புரிதல்கள் மாறுபடலாம். ஆனால், தவறான தகவல்கள் வெளியுலகிற்குச் சென்று சேரலாகாது. தவிர, கூட்டங்களுக்கியைபுற நோக்கங்கள் இருக்கலாமேயன்றி, நோக்கங்களுக்கேற்றபடி கூட்டங்களைத் திசைதிருப்பலாகாது. பெண்கள் சந்திப்பினைப் புலி எதிர்ப்புப் பிரச்சாரக் கூட்டமாக மாற்றியதே எனது விசனம். வழக்கமான, சொல்லிப் புளித்துப்போன உதாரணமாக இருந்தபோதிலும் மீண்டும் சொல்கிறேன்: மாட்டைப் பற்றி எழுதச் சொன்னால், மாட்டைக் கொண்டுவந்து தென்னைமரத்தில் கட்டிவிட்டு தென்னைமரத்தைப் பற்றி எழுதியதையே அக்கூட்டம் நினைவுறுத்தியது.

பிரான்சிலிருந்து வந்து கலந்துகொண்ட தேவதாஸ் ‘தேசியப் போராட்டமும் சாதியமும்’என்ற தலைப்பில் கட்டுரையொன்றை வழங்கினார். அதன் சாராம்சமானது ‘தேசியப் போராட்டம் தலித்துகளை மேலும் பின்னடையச் செய்துவிட்டது’என்பதாக இருந்தது. அவர் தனது உரையை முடித்தபின் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. “ஈழத்தில் நடக்கும் போராட்டம் தலித்துகளைப் மேலும் பின்னடையவே செய்கிறது என்பதை, வன்னியோடு தொடர்புடைய-அங்கு போய் வந்துகொண்டிருக்கிற- தமிழகத்து தலித் தலைவர்கள் அறிந்திருக்கவில்லையா?” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் சொன்னார் “ஒன்றில் அவர்கள் ஈழத்தின் உண்மை நிலையை அறியாதிருக்க வேண்டும். இல்லையெனில் அவர்கள் விடுதலைப் புலிகளிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு பேசுகிறார்கள்.” இந்தப் பதிலுக்காக அவர் தனது முதுகில் ஒரு தடவை தானே தட்டிக்கொள்ள வேண்டும்.

வேறொருவர் தேவதாசைப் பார்த்து “நீங்கள் அங்கே இப்போது இருக்கும் நிலையைப் போய்ப் பார்த்தீர்களா? இப்போது நிலைமை மாறியிருக்கிறது. நான் அண்மையில் அங்கிருந்தவன்”என்று சொன்னார். அதற்கு அசரீரியாக ஒரு குரல் “அவர் போனால் திரும்பி வரமாட்டார்” என்றது. கைதட்டலில் அரங்கம் அதிர்ந்தது. சிறுபிள்ளைகளின் கூட்டத்தில் இருப்பதான ஒரு உணர்வு தோன்றியது. அப்படியானால், ‘போடப்பட்டவர்கள்’ எல்லோரும் வன்னிக்குப் போன இடத்தில் வைத்துத்தான் போடப்பட்டிருக்கிறார்கள் என்ற நகைச்சுவைத் துணுக்கிற்கு ஜோராக மீண்டும் ஒரு தடவை கைதட்டிக்கொள்ளலாம்.

23ஆண்டுகளுக்கு முன்பு இருந்தவர்களைவிட, அண்மைய காலங்களில் அங்கிருந்தவள் என்றவகையில் எனக்கு நிலைமைகள் தெரியும். கக்கூசுக்குப் போகும் பாதையையும் புலிகளின் துப்பாக்கிக்குழல் அடைத்துக்கொண்டிருக்கிறது என்பது போன்ற பேய்க்கதைகளுக்கு எப்படி எதிர்வினையாற்றுவதெனத் தெரியவில்லை.

இந்தச் சந்திப்பை ஒழுங்குபடுத்திய சுமதி ரூபன் தெரிந்து அல்லது தேர்ந்து அழைத்திருந்த பேச்சாளர்கள் மாற்றுக் குரல்களை முடக்க வல்லவர்கள். வலுவான குரல்கள் ஒலிக்கும் ஏனையவை தொண்டைக்குள் இறுக்கப்படும் என்பதை கையுயர்த்தியவர்களை கையமர்த்தியவர்கள் அறிவர். ‘பேசினால் கொல்கிறார்கள்’ என்று கூக்குரலிடுபவர்களுக்கு மற்றவர்களின் குரல்களையும் செவிமடுக்க வேண்டும் என்று தோன்றாமற் போனது ஏன்? ஆக, பேச்சுரிமை என்பது அவ்வவ்விடங்களின் அதிகாரமும் அபிமானமும் சார்ந்ததாகிறது.

பெண்கள் சந்திப்பின் முடிவில் அவர்கள் என்னென்ன பிரேரணைகள் எடுத்தார்கள் என்பதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் கற்றுக்கொண்டவை:

1.பொருந்தாத இடங்களில் பிரசன்னமாகாதிருத்தல்

2.பேசும் நேர மட்டுறுத்தல் என்பது ஆட்களையும் அவர்தம் அதிகார மற்றும் அவர்மீதான அபிமானத்தைப் பொறுத்தது

3.உரிமைகளைப் பேசுமிடங்களிலும் அசமத்துவம் நிலவும்.

4. ‘பெண்’என்ற தலைப்பின்கீழ் நீங்கள் ‘புலி’யைப் பற்றியோ ‘நரி’யைப் பற்றியோ பேசலாம்.

நண்பர்களுக்கு: உங்களில் எவர் வாழ்வில் தவறொன்றும் செய்யாதவரோ அவர் ‘இவளுக்கு வேண்டும்’என்ற முதற் கல்லை என்மீது எறியட்டும்.

8.05.2008

சத்தியமாய் கவிதையில்லை

காதல்:
நரம்புமேடையில்
ஹோர்மோன்கள்
நடத்தும் நாடகம்

அரசியல்:
அவரவர் புண்களிலிருந்து
வழியும் சீழ்

எழுத்து:
முன்னால் நிற்பவனின்
கண்ணறிந்து கடைவிரிக்கும்
புனித வியாபாரம்

தாம்பத்யம்:
இரண்டுபேர் ஆடுகிற
கண்ணாமூச்சியாட்டம்

எல்லா மயிரும் தெரிந்தபிறகும்
மூடுபல்லக்கில் அசைந்தசைந்து
எத்தனை நளினமாய்
முகமினுக்கிப் போகிறது வாழ்க்கை.