5.27.2009

ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவுக்கும், ஜெயமோகனுக்கும்…


‘சுயமோகி’ என்று ஜெயமோகனை வர்ணித்த சாருவும், சாருவிடம் தொடர்ச்சியான ஒவ்வாமை கொண்டிருந்த ஜெயமோகனும் இணையும் புள்ளியாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் தோல்வி அமைந்துவிட்டிருப்பதில் ஈழத்துக்காரியும் மேற்குறிப்பிடப்பட்டிருக்கிறவர்களின் வாசகியுமாகிய நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
முதலில் சாருவுக்கு,

“சதாம் ஒரு நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர். அந்தத் தேசத்தின் வலிமையான இராணுவமே அவர் கையில் இருந்தது. மக்கள் அவர் பக்கம். விதம் விதமான ஆயுதங்கள். இவ்வளவு இருந்தும் அமெரிக்காவை எதிர்க்க முடியவில்லை. ஒரு மண்குழிக்குள் பதுங்கி வாழ்ந்து, அமெரிக்கச் சிப்பாய்களிடம் சிக்கி, மரணதண்டனை விதிக்கப்பட்டுச் செத்தார். சதாம் உசேனுக்கு அந்த நிலை என்றால், ஒரு மிகச் சிறிய கெரில்லா இயக்கம் எப்படி சிறிலங்கா, இந்தியா, சீனா முதலிய பல நாடுகளின் இராணுவத்தைச் சமாளிக்க முடியும்? இப்படிப்பட்ட சூழலில் ஆயுதத்தைக் கையில் எடுப்பது தற்கொலைக்குச் சமம் அல்லவா?” என்று எழுதியிருக்கிறீர்கள்.

‘மிகச் சிறிய கெரில்லா இயக்கம்’என்று நீங்கள் சொல்வதை நான் மறுக்கிறேன். எண்ணிக்கையில் எதுவும் இல்லை என்பதை இவ்வளவு அறியப்பட்ட எழுத்தாளராகிய நீங்களும் அறிந்தே இருப்பீர்கள். மிகச் சிறிய கெரில்லா இயக்கத்தின் நெருக்குதல்கள் தாங்கமுடியாமல்தான் இந்திய இராணுவம் தோல்வியோடு திரும்பிவந்தது என்பதை நீங்கள் கணக்கிலெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வஞ்சத்தை, வன்மத்தை பதினெட்டு ஆண்டுகள் கழித்து அவர்கள் தீர்த்துக்கொண்டது வேறு விடயம்.
இத்தனை ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், இழப்புகளுக்குப் பிறகும் சிங்கள இனவாதிகளால் தமிழர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை நீங்கள் செய்திகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள். அறிந்ததையே மீண்டும் மீண்டும் எழுதிக்கொண்டிருக்க இயலாது.

உரிமைகளை இழந்து, இருப்பொன்றே பொருட்டு என்று வாழ்ந்திருப்பதே சரி என ஒரு எழுத்தாளர் சொல்வது எனக்கு நகைப்பளிக்கிறது. சமரசங்கள் செய்துகொள்வதும் சகிப்புத்தன்மையோடிருப்பதும் விட்டுக்கொடுப்பதும் இலக்கிய அரசியலுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். அடிப்படை மனித உரிமைகள் மறுக்கப்படும் ஒரு மண்ணிற்கு அது எவ்விதத்தில் பொருந்தும்? அமெரிக்காவின் வலிமை தெரிந்தே அதை வியட்நாம் எதிர்த்துப்போராடியது. தென்னாபிரிக்கா எதிரியின் வலிமையை அறியாமல் போராடியது என்று உங்களால் சொல்லமுடியுமா?
“யாழ்ப்பாணம் ஆப்கானிஸ்தானைப் போல காட்சியளிக்கிறது. அங்கே தமிழர்கள் மீண்டும் 30 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல அமைதியாக வாழ ராஜபக்சே வழிவகுத்துக் கொடுக்கவேண்டும். இதற்கும் அவரை உலகநாடுகள் நிர்ப்பந்திக்கவேண்டும்”

நான்காம் அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு நடைபெற்று முடிந்த நாள் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் திகதியாகும். அந்த நிறைவையொட்டிய கொண்டாட்டங்களின்போது இனவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தின்போது கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை ஒன்பது. அது நீங்கள் குறிப்பிடும் அதே யாழ்ப்பாணத்தில், அதே முப்பதாண்டுகளின் முன் நடந்த படுகொலைதான். நாடளாவிய ரீதியில் தமிழர்களுக்கெதிராக கலவரங்கள் வெடித்த ஆண்டுகளான 1956, 1958, 1971 இவைகூட முப்பதாண்டுகளுக்கு முற்பட்டவைதாம். 1981ஆம் ஆண்டு எங்களது உயிரினும் மேலாகப் போற்றப்பட்ட நூலகம் இனவாதிகளால் எரியூட்டப்பட்டு சாம்பரானது, நீங்கள் குறிப்பிடும் முப்பதாண்டுகளுக்கு ஈராண்டுகளே குறைவான காலகட்டத்தில்தான். ஆக, எங்களுக்கெதிரான இன அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் பொறுத்துக்கொண்டு வாழ நாங்கள் பழகிக்கொள்ளவேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள். பேரினவாத ஆண்டைகளின் கீழ் அடிமைகளாக வாழ மறுப்பதை நீங்கள் தவறென்கிறீர்கள்.

நீங்கள் விரும்புவதே போல போராளிகள் இப்போது ஆயுதங்களை மௌனிக்கச் செய்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் சமாதானப் பேச்சாளர்கள் போர்க்களத்திலே ஆயுதங்களைக் கைவிட்டு வெள்ளைக்கொடியோடு சரணடையச் சென்றபோதுதான் இலங்கை இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள். சரணடையச் சென்ற சமாதானப் பேச்சாளர்களையே எவ்வித அறங்களுமின்றிச் சுட்டுக்கொன்ற அரசு இனியாகிலும் நீதியோடு நடந்துகொள்ளும் என்று நீங்கள் எவ்விதம் எதிர்பார்க்கிறீர்கள்? அப்படித் தமிழர்களோடு அவர்கள் அதிகாரத்தைப் பகிர மறுக்கிறபோது, ‘ஆயுதங்களைக் கைவிட்டு அமைதி வழியில் போராட வேண்டும்’என்ற உங்கள் வார்த்தைகளை எங்கு கொண்டுபோய் வைத்துக்கொள்வீர்கள்?

“எங்களைப் பொறுத்தளவில் விடுதலைப் புலிகள் என்ற ஒரு அமைப்பே இனி இல்லை”என்று வெற்றியின் மமதையில் கூறிவரும் கோத்தபாய ராஜபக்சே, யாரைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக முன்னிறுத்தி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்போகிறார்? பேரினவாதத்திடம் விலைபோன கருணா, பிள்ளையான், டக்ளஸையா?
விடுதலைப் புலிகள் தோற்றபின், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டும் நீங்களும் ஜெயமோகனும் இதுநாள்வரை இலங்கையில் நடந்துகொண்டிருக்கும் பேரழிவுகளைக் குறித்துப் பேசாதிருந்தது என்ன காரணத்தினால்? அதிகாரங்களுக்கு அஞ்சுகிறவர்கள், அதற்கு மறைமுகமாகத் துணைபோகிறவர்களுமாகிறார்கள். எனக்கும் இந்த விமர்சனம் பொருந்தும்.
‘காந்திய வழியைத் தேர்வதே நல்லது’என்று நீங்கள், ஜெயமோகன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். தமது சகோதரர்கள் ஈழத்தில் படுகொலை செய்யப்படுகிறார்களே என்று இங்கே காந்திய வழியில் நடத்தப்பட்ட ஊர்வலங்களுக்கும், உண்ணாவிரதங்களுக்கும் ஏதாவது பலன் இருந்ததா? காந்தியத்திற்குப் பதிலாக, பரிசாகக் கிடைத்தது காவலர்களின் தடியடிகள்தானே? இந்தியாவில் காந்தியம் விடுதலையைப் பெற்றுத் தந்தது என்றால், எல்லா நாடுகளுக்கும் அது பொருந்தும் என்று எந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? காந்தியத்தினால்தான் விடுதலை கிடைத்தது என்பதும் சர்ச்சைக்குரியதே.

“நம் இனம் ஈழத்தில் அழியும்போது உலகம் என்ன செய்தது என நாம் குமுறுகிறோம். உலகில் நாலில் ஒரு பங்கு இதுபோன்ற உள்நாட்டுப் போர்களில் அழிந்துகொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்வதில்லை. அந்த உள்நாட்டுப்போர்களைக் கண்டு நாம் என்ன செய்தோம் என்று பேசுவதில்லை”
என்று எழுதியிருக்கிறீர்கள் ஜெயமோகன்.

ஈழத்தில் தமிழினம் அழியும்போது உங்கள் ஒரே வெளிப்பாடாகிய எழுத்தின் வழி நீங்கள் குமுறவில்லை என்பதை நாங்கள் பார்த்துக்கொண்டுதானிருந்தோம். சக மனிதன் மீதும் சமூகத்தின் மீதும் நீங்கள் கொண்டிருந்த அக்கறையைக் கண்டு வியந்துகொண்டுதானிருந்தோம். மேற்கண்ட வாசகங்களால் நீங்கள் உங்களைப் பற்றி எந்தவிதமான பிம்பத்தைக் கட்டமைக்க முயல்கிறீர்கள்? ‘நாடு, மொழி, இனம், எல்லைகளைத் தாண்டிய மானுடநேயன் நான்’ என்று உங்களை நிறுவ நீங்கள் முயற்சி செய்கிறீர்களா? அப்படிப் பேசுவதென்பதில் இருக்கும் ஒரு சிறிய பம்மாத்தை எங்களைப்போன்ற அறிவிலிகளும் புரிந்துதானிருக்கிறோம். சொந்தக் குழந்தை இறப்பின்போதும் பக்கத்து வீட்டுக்காரனின் குழந்தையின் இறப்பின்போது சிந்தப்படும் கண்ணீரின் அளவை நாங்களும் அறிந்துதானிருக்கிறோம். குறைந்தபட்சம் உங்கள் நண்பர்களாயும் வாசகர்களாயும் இருக்கக்கூடிய ஈழத்தமிழர்கள் அடிபடும்போதும் அழிவுறும்போதும் வாய்திறவாத நீங்களா உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருப்பவனுக்காகப் பேசப்போகிறீர்கள்? நடைமுறையைக் கணக்கிலெடுக்காத இந்தச் சித்தாந்தப் பூச்சாண்டிகளை, புத்தகம் படித்துக் கக்கும் விடயங்களில் இருக்கக்கூடிய பொய்மைகளை நாங்கள் வெறுக்கிறோம். இதே விடயங்களை சமூக அக்கறையுடைய எவராது சொல்லியிருந்தால் எனது வெளிப்பாடு வேறாகவே இருந்திருக்கும்.

ஒரு விடுதலைப் போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என்பதற்காக அதன் நோக்கமும் மூலமும் தவறு என்று எப்படிச் சொல்லமுடியும்? உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாவலை எழுதுகிறீர்கள்… உங்கள் மனதில் உள்ள ஒரு கருவைக் கதையாக விரிக்கிறீர்கள். அது ஒருவகையில் வாசகர்களை முன்னிறுத்தித்தான், அவர்களைச் சென்றடையும் என்ற எதிர்பார்ப்புடன்தான் (நீங்கள் மறுத்தாலும் சிறிய அளவில் எனினும் அதுவே உண்மை) எழுதப்படுகிறது. அது உங்களால் எதிர்பார்த்த அளவுக்கு வாசகர்களைச் சென்றடையவில்லை என்றால், அதை அந்தப் படைப்பின் தோல்வியாகக் கொள்வீர்களா? கலாபூர்வமான படைப்புகள் (நல்ல சினிமா, ஓவியம்) போன்றவை தோல்வியைத் தழுவுவது படைப்பின் தோல்வியா? பார்ப்பவரின் தோல்வியா?

தமிழினம் அழிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது தீவிர மௌனத்தில் ஆழ்ந்திருந்த நீங்களெல்லாம் திடீரென்று இப்போது பேச முற்படுவதன் நோக்கம்தான் என்ன? வன்முறை தவறு என்று சொல்லும் நீங்களெல்லாம் இலங்கை அரசின் வன்முறையைப் பற்றி ஏன் பேசவில்லை? இப்போது வந்து 'ராஜபக்சே ஹிட்லர் என்பதை ஒப்புக்கொள்கிறோம்'என்றால் முடிந்துவிட்டதா? வன்முறையை எதிர்ப்பதென்பது அதைப் பிரயோகிப்பவர்களின் அதிகாரத்தைப் பொறுத்து வேறுபடுகிறதா? இந்த விடயத்தில் நீங்களும் எங்கள் நாட்டைச் சேர்ந்த சிலரும் ஒன்றாகத்தான் இருக்கிறீர்கள்.

விடுதலைப் புலிகள் மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளில் பலவற்றை நானும் ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக முஸ்லிம்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து காலக்கெடு விதித்து விரட்டியது, அரசியல் தொலைநோக்கோடு செயற்படாதது, தங்களை விமர்சித்த அறிவுஜீவிகளைக் கொலைசெய்தது உட்பட. ஆனால், அவர்களது விடுதலைப் போராட்டமே ஒரு தவறு என்பதைச் சொல்வதற்கு, உங்களைப் போன்றவர்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை நான் சொல்லியாக வேண்டும். சொற்களை வைத்து சித்துவிளையாட்டுக் காட்டுவது மட்டும் எழுத்தாளனின் கடமையன்று. சமூகத்தின்பால் அக்கறையுடையவனாக இருப்பதும், செயற்படுவதும் அவர்களது கடமையாகிறது. சமூகத்தால் மதிக்கப்படும் எழுத்தாளன் என்பவனும் ஊடகங்களைப் போலவே மக்களின் கருத்துகளைச் செதுக்குவதில் (அல்லது சிதைப்பதில்) முக்கிய பங்காற்றுகிறான் - ஆற்றுகிறாள் என்ற வகையில், நீங்கள் நச்சுவிதைகளைத் தூவாதீர்கள்.

நான் எல்லாக் காலங்களிலும் பார்வையாளராகவே இருந்திருந்தால், ஈழத்தவள் என்றபோதிலும், உங்களைப் போலவே இதைப் பற்றி எழுதும் தகுதி எனக்கும் இருந்திருக்காது. ஆனால், சில வகைகளிலேனும் அதில் பங்கெடுத்துக்கொண்டவள், பாதிக்கப்பட்டவள் என்றவகையில் எனக்கு அந்த உரிமை இருப்பதாக நான் கருதுகிறேன்.

உங்கள் இருவரையும் குற்றஞ்சாட்டுவதற்காகவோ பரபரப்பைக் கிளர்த்துவதற்காகவோ எழுதவில்லை. (அதுதானே இங்கே நடக்கிறது) இழப்பை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சம்பந்தப்பட்டவர்களின் துக்கம் புரியாது. இழிவுபடுத்தல்கள் தெரியாது. மனித இனம் மட்டுமல்லாது மிருகங்களும்கூட அதனதன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்படாமல் வாழ்வதென்பது பிறப்புரிமை. ஏனைய நாடுகளோடு குறிப்பாக தென்னமெரிக்காவோடு ஒப்பிட்டு ‘அவர்கள் மட்டுமே அப்படிப் போராடுவதற்கான நிர்ப்பந்தத்தைக் கொண்டிருந்தார்கள்’என்பது நகைப்பிற்குரியது. எனது தெருவில் நான் சுதந்திரமாகத் திரிவதற்கும், எனது மார்புகளை மாற்றான் ஒருவன் என் மறுப்பையும் மீறித் தொடும் இழிநிலைக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டிருப்பதென்பதும் சகித்துக்கொள்ளத்தக்கதுதானா? எனது அயலவரின் குழந்தையைக் கதறக் கதறத் தூக்கிச் சுவரில் மோதித் தலையைச் சிதறடிப்பதை நான் எப்படிச் சகித்துக்கொள்வேன்? தமிழினத்தில் பிறந்துவிட்டேன் என்பதற்காக நான் யார் என்பதை ஒவ்வொரு விசாரணைச் சாவடியிலும் நிரூபித்துக்கொண்டிருக்க வேண்டிய அவசியந்தான் என்ன? நீங்கள் காற்றைப்போல திரிபவர்கள். எந்த மூச்சுத்திணறலுக்கும் பழக்கப்படாதவர்கள். உங்களுக்கு போராடப் புறப்பட்டதன் நியாயப்பாட்டைப் பற்றியெல்லாம் நான் விளக்கிக்கொண்டிருப்பது வியர்த்தம்.

பல்லாயிரம் உயிர்களை, வளங்களை இழந்தோம். மனச்சிதைவிற்கு ஆளானோம், தடுப்புமுகாம்களுக்குள் விலங்குகளிலும் கேவலமாக வாழ விதிக்கப்பட்டோம். உலகெங்கிலும் அகதிகளாக அலைவுறும் கேவலத்திற்கும் ஆளானோம் என்றவகையில் தோற்றுவிட்டோம்தான். ஆனால், இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து பெரும்பான்மையினரால் இழிவுசெய்யப்பட்டோம், இரண்டாந்தரக் குடிமக்களாக பாரபட்சம் காட்டப்பட்டோம். எங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கொடி இல்லை. ஆட்சி மொழி இல்லை. உயர்கல்வியிலும் பாரபட்சம் காட்டப்பட்டது. அப்போது எங்களிடம் ஆயுதங்கள் இருக்கவில்லையே… ‘எங்களைக் கண்ணெடுத்துப் பாருங்கள்’என்று கதறிய கதறல் உலகத்திற்குக் கேட்காமல் போன காரணத்தினாலேயே தற்காப்புக்காக ஆயுதங்களைக் கையிலெடுக்கத் தள்ளப்பட்டோம். இந்த முப்பதாண்டு காலப்போராட்டத்தின் பின்பு, இவ்வளவு இழப்பின் பின்புதான் உலகம் எங்களைக் கண்ணெடுத்துப் பார்க்கிறது. (பார்த்துக்கொண்டேயிருப்பார்களா செயலாற்றுவார்களா என்பது அடுத்த கேள்வி) சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இப்போதிருக்கும் நிலையை நாங்கள் வந்தடைவதற்கு (உங்கள் வார்த்தைகளில் சொன்னால் அரசியல் நிலைப்பாட்டிற்கு) என்ன காரணம்? ஆயுதப் போராட்டம்தானே? இது வெற்றியல்லவா? இதை எப்படித் தோல்வியென்று சொல்லலாம்?


ஜெயமோகன்,

உங்கள் வலைத்தளத்தை நானும் படித்துவருகிறேன். எங்கள் ஜனங்கள் கொல்லப்படும்போது நீங்கள் ஆன்மீகம் பேசிக்கொண்டிருந்தீர்கள். எங்கள் குழந்தைகளின் தலைகள் சிதைக்கப்பட்டபோது நீங்கள் சகிப்புத்தன்மையைப் போதித்துக்கொண்டிருந்தீர்கள். பசியால் விழுந்து இறந்தபோது, பௌத்தம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தீர்கள். இந்தியா இலங்கை அரசுக்கு ஆயுதமும் ஆட்படையும் கொடுத்து தமிழர்களைக் கொன்றுகுவிக்கப் பணித்தபோது, அதைக் கேள்வி கேட்காமல் இந்திய இறையாண்மையை உயர்த்திப் பிடிக்கும் இழிவேலையைச் செய்துகொண்டிருந்தீர்கள். தமிழர்களிடம் இலக்கியம் வளர்த்துவரும் நீங்கள், தமிழையே மூலதனமாகக் கொண்டு வளர்ந்துவரும் நீங்கள், தமிழர்களுக்கெதிராகவே இயங்கிக்கொண்டிருந்தீர்கள். உங்கள் சொற்களின் சித்துவிளையாட்டில் நானும் மயங்கித்தானிருந்தேன். உங்கள் எழுத்தை வியந்து போற்றி மின்னஞ்சல் கூட அனுப்பியிருக்கிறேன். உரத்த குரலில் பொய் சொல்வதனால் உண்மையைக் கொன்றுவிட முடியாது என்பதை, சாதாரணளாகிய நானும் அறிவேன். உண்மையின் வேர்கள் மண்ணுக்குள்தான் இருக்கின்றன. இந்த வரட்சி நீங்கும் ஒரு காலத்தில் இலையும் தளிருமாய் அது மண்ணைத் துளைத்து வெளிவரும் என்பதை நீங்களும் மறுக்கமாட்டீர்கள். காத்திருங்கள் ஜெயமோகன். பலரும் பாராட்டும் ஒரு விடயம் அடிப்படையில் சரியாக இருக்கவேண்டுமென்று என்ன கட்டாயம் இருக்கிறது?

இங்கே ‘ஆயுதப் போராட்டம்தான் அமைதி திரும்ப ஒரே வழி’என்று நான் சொல்லவரவில்லை. அதற்குரிய அசாத்தியங்களை, கசப்பான முன்னனுபவங்களை சொல்லவந்தேன். மேலும், அப்படிச் சொல்லக்கூடிய அருகதை, சமூகப் பொறுப்புணர்வு உங்கள் இருவரிடத்திலும் இல்லை என்பது, உங்களை அவதானித்ததிலிருந்து பிறந்த, தனிப்பட்ட என்னொருத்தியின் கருத்தாக இருக்கிறது. அதுவே இந்தப் பதிவெழுதக் காரணமும் ஆகியது.

இனிவரும் காலங்களில் நான் உங்கள் இருவராலும் கடுமையாக விமர்சிக்கப்படுவேன் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமுமில்லை. இலக்கிய அரசியலின் அடிப்படைத் தன்மைகளான பழிவாங்கல்கள், தூக்கிப்பிடித்தல்கள், தூற்றுதல்கள், துதிபாடல்கள் எல்லாவற்றையும் உணர்ந்தவளாகவே இருக்கிறேன். என்னைக் காட்டிலும், எழுத்தில் நான் வளர்வதைக் காட்டிலும், எங்கள் போராட்டத்தின் நியாயமும், தியாகமும் உங்களைப் போன்றவர்களால் தூர்க்கப்படுவதை, திசைதிருப்பப்படுவதை எதிர்ப்பது எனக்கு முக்கியமாகப்படுகிறது.

தேவதைகள் மௌனமாகிவிட்டால், பேய்கள் உச்சஸ்தாயியில் பாட ஆரம்பித்துவிடுகின்றன. இது பேய்களின் காலமும் களமுமாயிருக்கிறது. என்ன செய்வது?

5.25.2009

விழித்தெழ முடியாத ஒரு கொடுங்கனவு


நம்பிக்கை, பற்றுக்கோடு, வாழ்வின் மீதான பிடிப்பு எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு நிர்க்கதியாகத் தெருவில் விரட்டப்பட்ட அவமானத்தோடும் கோபத்தோடும், விம்மிப் பொருமும் மனதை அடக்கிக்கொண்டு இதனை எழுதுகிறேன். இது அழுது தீரும் துயரமல்ல; எதிர்ப்படும் பொருட்களை, எதிரியை அடித்து நொருக்கும் கோபம். இந்தக் கோபத்தை நான் எழுத்தில் இறக்கிவைத்துவிட வேண்டும். இல்லையெனில் மனநோயாளியாக இறந்துவிடுவேனோ என்று அஞ்சுகிறேன். எழுத்து ஒன்றே எனது வடிகால். அதன் வழியாக எனது துயரத்தைக் கடத்திவிட்டு, சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பிவிடும் சுயநலம் இதன் பின்னணியில் நிச்சயமாக இல்லை. இந்த உணர்ச்சிக் கடலுக்குள் மூழ்கிவிட்டேனென்றால், நாளை எனது சமூகத்திற்கென்று ஒரு துரும்பையும் கிள்ளிப்போட முடியாது போய்விடும் என்ற சின்ன அறிவினால் செலுத்தப்பட்டு கணனியின் முன்னமர்ந்திருக்கிறேன்.

19.05.09 என்ற கொடிய நாளைப் பதிந்துவிட்டுத் தொடர்கிறேன். சிங்கள அரசின் இறுமாப்புடன் கூடிய அறிவிப்பு 18ஆம் திகதியிலிருந்தே வர ஆரம்பித்திருந்தது. நாங்கள் மறுத்தோம். ‘இல்லை… எங்கள் தலைவரை யாராலும் தோற்கடிக்க முடியாது’என்றோம். ‘அதிமானுடர்களுக்கு மரணமில்லை’என்று மறுபடியும் மறுபடியும் தளர்ந்த குரலில் சொல்லிக்கொண்டிருந்தோம். 19ஆம் திகதி மதியம் ஒன்றரை மணியளவில் கவிஞர் இளம்பிறையிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் அழுத அழுகையில் முதலில் அவர் என்ன சொல்கிறார் என்பதே எனக்குத் தெளிவாகவில்லை. “தொலைக்காட்சியைப் பாருங்கள் தமிழ்நதி… நம் தலைவரின் உடலைக் காட்டுகிறார்கள்”என்றார். எல்லாம் இருண்டது போலிருந்தது. கைகள் நடுங்கின. அந்தக் கணம் ஒரு கனவென முடிந்துவிடும்@ நான் விழித்து எழுந்துவிடுவேன் என்று நினைத்தேன். “நம் குலதெய்வத்தைக் கொன்றுவிட்டார்கள்”என்று அவர் தொடர்ந்து அழுதுகொண்டேயிருந்தார். “ஐயோ… ஐயோ…!”என்று அரற்றினார். தொலைக்காட்சியில் நெஞ்சத்தைப் பதறவைக்கும் அந்தக் காட்சியைப் பார்த்தேன். தலைவரின் முகந்தான். சந்தேகமேயில்லை!

நான் வேறொரு ஆளாக சமையலறைக்குள் நடந்துபோவதை நான் பார்த்தேன். அச்சம் கட்டுப்படுத்தவியலாத கிருமியைப் போல பெருகவாரம்பித்தது. ஒரு துணியை எடுத்து எல்லாவற்றையும் துடைக்க ஆரம்பித்தேன். அரிசிக்கு அளவாகத் தண்ணியைக் கலந்து வைத்தேன். பொருட்களை அதனதன் இடத்தில் கொண்டுபோய் வைத்தேன். பெருமழையின் முன்பான காற்றின் மௌனம்! என்னை நான் பயத்தோடு பார்த்துக்கொண்டிருந்தேன். மீண்டும் துணியை எடுத்து ஏற்கெனவே சுத்தமாக இருந்த இடத்தைத் துடைக்கவாரம்பித்தேன். மூளைக்குள் எதுவோ வெடித்துச் சிதறுவது போலிருந்தது. நான் எங்கே நின்றுகொண்டிருக்கிறேன் என்ற பிரக்ஞை நினைவிலிருந்து ஒருகணம் சறுக்கி மறைந்தது. தெளிவிற்கும் பைத்தியத்திற்குமிடையிலான விளிம்பில் அந்நேரம் நின்றுகொண்டிருந்ததை இப்போது பயத்தோடு நினைவுகூர்கிறேன். வேம்பில் அப்போதும் குயில் பாடிக்கொண்டிருந்தது. தொலைவில் சினிமாப் பாட்டுக் கேட்டது. தெருவில் பழைய பேப்பர்க்காரன் கூவிக்கொண்டு போகிறான். நான் சிறுகச் சிறுக சிதைந்துகொண்டிருந்தேன். கைகளை இறுக்கிப்பிடித்து கதவில் ஓங்கியறைந்தேன். சமையலறையிலிருந்து படுக்கையறை அன்றைக்கு வெகு தூரத்திலிருந்தது.

“நாங்கள் அநாதைகளாகிவிட்டோம்”

“நாங்கள் கைவிடப்பட்டுவிட்டோம்”

“எங்களை வஞ்சகத்தினால் ஏமாற்றிவிட்டார்கள்”

“எங்கள் கடவுளைக் கொன்றுவிட்டார்கள்”

“நாங்கள் இனி அடிமை நாய்கள்”

நான் பெருங்குரலெடுத்து அழுதேன். எதிர்ப்பட்ட பொருட்களையெல்லாம் கைகளால் குத்திக் குத்தி அழுதேன். எனக்கு என் மனிதர்களைப் பார்க்கவேண்டும் போலிருந்தது. அவர்களின் பக்கத்தில் போய்விட அன்றைக்கு மிகவிரும்பினேன். விமானத்தில் பறந்தாலும் அவர்களைச் சென்றடைய 24 மணிநேரம் எடுக்கும் என்பதை நினைத்தேன். இலங்கையில் இதனைக் குறித்து அழுவதற்கும் அனுமதியில்லை என்ற பயங்கரம் முகத்தில் அறைந்தது. உலகெங்கிலும் இருக்கும் எங்கள் உறவுகளை நினைக்குந்தோறும் கண்ணீர் கடலாய் பெருகிக்கொண்டேயிருந்தது. ஒட்டுமொத்த சனங்களையும் கட்டிக்கொண்டு கத்தியழவேண்டும் போலிருந்தது. கோபம் பெருந்தீயாய் சுழன்று மூசியது. இடைவிடாமல் தொலைபேசி அழைப்புகள் வந்துகொண்டிருந்தன. குறுஞ்செய்திகள் நிறைந்துகொண்டிருந்தன. ‘எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கள் கடவுளை அவர்கள் கொன்றுவிட்டார்கள்’என்பதைத் தவிர என்னால் வேறெதுவும் சொல்லமுடியவில்லை. ஆற்ற மாட்டாமல் பூங்குழலி நெடுமாறனைத் தொலைபேசியில் அழைத்து அழுதேன். ‘தைரியமாயிருங்கள். அப்படி எதுவும் நடந்திராது’என்றார் அவர். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது… பித்துப் பிடித்தாற்போல ஒரே வார்த்தைகளைத்தான் நான் அவரிடம் பேசியிருக்கிறேன்..
“எனக்குப் பயமாயிருக்கிறது… எனக்குப் பயமாயிருக்கிறது”

வெளிநாட்டுக்கு அழைத்த தொலைபேசி அழைப்புகளெல்லாம் வியர்த்தமாயின. கனடாவில் சாமம். ஐரோப்பா இன்னமும் எழுந்திருக்கவில்லை. அக்காவின், அண்ணாவின் பிள்ளைகள் கண்கள் எங்கோ வெறித்திருக்க செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்கள். குற்றவுணர்வில் ஒருவன் நாற்காலிக்குள் தன்னைச் சுருட்டிக்கொண்டு படுத்திருந்தான். உணவு என்பது மறந்துபோயிருந்தது. ஆங்கிலத் தொலைக்காட்சியொன்று சந்தடிசாக்கில் விடுதலைப் புலிகளை உலகிலேயே கொடூரமான பயங்கரவாதிகளெனச் சித்தரிக்க முயன்றுகொண்டிருந்தது. அந்த வர்ணனையாளியின் குரலிலிருந்த வன்மம் வெறியேற்றியது. அவள் நஞ்சை இடைவிடாமல் உமிழ்ந்துகொண்டிருந்தாள். நான் அவள் குரலை வெறுத்தேன். ‘உனக்கு எங்கள் தலைவரைப் பற்றி என்ன தெரியுமென்று ஆலாபனை பண்ணுகிறாய்?’ என்று அவளிடம் கத்தவேண்டும் போலிருந்தது. அவள் இலங்கை மற்றும் இந்திய அதிகாரங்களின் குரலில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். ஒரு தேசியத் தலைவனைத் தன்னால் முடிந்தவரை கேவலப்படுத்தினாள். வரலாறு வியந்து பார்த்திருந்த விடுதலைப் போராட்டத்தை சிறு குழுவொன்றின் சண்டையெனச் சித்தரித்தாள்.

தொலைக்காட்சியைப் பார்க்குந்தோறும் நெஞ்சு கொதித்தது. எத்தனையோ பேரின் உயிராயிருந்தவன், ஒரு அநாதையைப்போல நந்திக்கடலோரத்தில் எவனோ தன்னுடலைப் புரட்டிப் பார்க்கக் கொடுத்துவிட்டுச் செத்துப்போவதென்பது நம்பமுடியாததாக இருந்தது.

நான்கு மணியளவில் டென்மார்க்கிலிருந்து என் கணவருடைய தம்பியின் மனைவி பேசினாள். விடுதலைப் போராட்டத்தில் தீராத காதலுடைய அற்புதமான பெண் அவள்.

“அக்கா! கூர்ந்து கவனியுங்கள். அது பிளாஸ்டிக் சேர்ஜரி முகம் போல உங்களுக்குத் தோன்றவில்லையா..? இறந்துபோனவர்களின் கழுத்தை அப்படிச் சுலபமாகத் திருப்ப முடியுமென்றா நினைக்கிறீர்கள்?”

என் கண்களை நம்பி நான் ஏமாந்து போனேனா?

“அவரைப் போலவே இருக்கிறதே…”

“இப்போது அவ்வளவு இளமையாகவா இருக்கிறார் நம் தலைவர்?”

உண்மை! மனதின் இருள் எல்லாம் வடிந்துபோய் வெளிச்சம் பரவத் தொடங்கியது. இதுவரை பிதற்றிய மனம் இப்போது மறுவளமாகப் பேசத் தொடங்கியது.

“அவர் கொல்லப்படக் கூடியவரல்லவே… தனது உடலைக் கூட எதிரிகள் கைப்பற்றக் கூடாது என்று, இந்திய இராணுவ காலத்தில் தனக்குப் பக்கத்தில் எப்போதும் பெற்றோல் கலன்களுடன் போராளிகளை வைத்திருந்தவரல்லவா அவர்…?”

“அவரை யாராலும் வெல்லவோ கொல்லவோ முடியாது. அவர் அதிமானுடர்!”

மகிழ்ச்சியில் கண்ணீர் கொட்டவாரம்பித்தது. உறைந்திருந்த வீடு மறுபடி இயங்கத் தொடங்கியது.

பிறகு தொடர்ந்த நாட்களில் குழப்பகரமான செய்திகள் வரத் தொடங்கின. தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றும் இல்லை என்றும் ஊடகங்கள் போட்டிபோட்டுக்கொண்டு செய்திகளை வெளியிட்டன. ‘இசட் தமிழ்’தொலைக்காட்சியில் தலைவரின் நேர்காணல் இடம்பெறவிருப்பதாக ஒரு குறுஞ்செய்தி பரபரப்பாக அலைந்தது. பிறகு அதை மறுத்து குறுஞ்செய்தியொன்று அன்று மாலையே வந்துசேர்ந்தது.

‘தலைவர் வீரமரணம்’என்றொரு மின்னஞ்சலை எனது நம்பிக்கைக்குரிய தோழன் ஒருவன் அனுப்பியிருந்தான்.

“இல்லை. நான் நம்பமாட்டேன். அவர் எங்களை அப்படி நிர்க்கதியாக விட்டுவிட்டுப் போகமாட்டார்”என்று நான் அடித்துக் கூறினேன். எனது குரல் தளுதளுத்தது. எனது வார்த்தைகளை நானே நம்பவில்லையா?

“இதற்குள் ஏதோ இருக்கிறது…”என்று மனம் உறுத்திக்கொண்டேயிருந்தது.

‘தலைவர் இல்லை என்று அறிவிக்கப்போகிறார்கள்’என்ற குறுஞ்செய்தி வந்த அன்றே ‘தலைவர் இருக்கிறார்’என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கையோடு நிமிர்ந்தபோது ‘தலைவர் இல்லை’என்று உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

என்னதான் நடக்கிறது?
உளவியல் போரில், எஞ்சியிருப்பவர்களையும் கொன்றுவிடத் தீர்மானித்துவிட்டார்களா?

19ஆம் திகதியன்று ஏறக்குறைய நாங்கள் செத்துப்போய்விட்டோம். செத்துக்கொண்டிருக்கிறவர்களை குத்திக் குத்தி இன்னமும் உயிர் இருக்கிறதா என்று சித்திரவதை செய்கிறார்களா?

எங்களைப் போன்றவர்களின் வீடுகளில் ‘பிரபாகரன்’என்ற சொல் ஒலித்து நாங்கள் கேட்டதில்லை. எங்களால் ‘தலைவர்’ என்றே அவர் விளிக்கப்பட்டார். கடவுளர் படங்களுக்குப் பக்கத்தில் வைத்து வணங்கத்தக்கவரே அவர். ஆனாலும் இறந்தவர்களின் படங்களை மட்டுமே கடவுளுக்குப் பக்கத்தில் வைப்பார்கள் என்ற ஐதீகத்தினால் அதை நாங்கள் செய்ததில்லை. அவரது பெயர் எங்கு உச்சரிக்கப்பட்டாலும் தொண்டை அடைத்துக்கொண்டு கண்ணீர் பெருகி வழியுமளவுக்கு பெரும்பாலான தமிழ்மக்கள் அவரை நேசித்தார்கள். ஆராதித்தார்கள். மதித்தார்கள். நெஞ்சுருகினார்கள். பல்லாயிரம் போராளிகளும் மக்களும் அவரது ஒரு சொல்லுக்காகக் காத்துக்கிடந்தார்கள். அந்தப் பெயர்தான் எங்களையெல்லாம் உருக்கும் மந்திரம். மாயச் சொல்! தீராத வசீகரம்! உயிர்நிலை! பூமியைச் சுழல வைக்கும் மைய அச்சு!

உலகெங்கிலும் வாழும் அன்னையரின் மூத்த பிள்ளை அவர். அவரவர் வயது நிலைக்கேற்ப அண்ணனாக, தம்பியாக, பிள்ளையாக பெரும்பாலான குடும்பங்களில் வாழ்ந்தவர் அவர். (நான் ஏன் இறந்தகாலத்தில் இதை எழுதுகிறேன்?) இளம்பிறையின் வார்த்தைகளில் சொல்வதானால் எங்கள் ‘குலதெய்வம்’ அவர்தான். எங்களைப் போன்றவர்களின் வாழ்வில் பெருங்கனவாக ஒன்று இருக்குமென்றால், அது எங்கள் ‘தலைவரை’ப் பார்ப்பது மட்டுமே. போர் ஓய்ந்திருந்த காலகட்டத்தில் (2002 பெப்ரவரியின் பிறகான சில ஆண்டுகள்) புலம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் ஊருக்குப் போய் வந்தார்கள். திரும்பி வந்தவர்களிடம் கேட்பதற்கு எங்களிடம் ஒரேயொரு கேள்விதான் இருந்தது: “தலைவரைப் பார்த்தீர்களா?”
நான் வேலை செய்த பத்திரிகை அலுவலகத்திலிருந்து பலரும் போய் திரும்பி வந்து கண்கள் மினுக்கிட கதைகதையாகச் சொன்னார்கள். ஏக்கம் வழியும் விழிகளோடு நாங்கள் அதைக் கேட்டிருந்தோம். ராஜீவ்-ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தினையடுத்து (சதி) சுதுமலைக் கூட்டத்தில் தலைவர் பேசியபோது ஒரேயொரு தடவை அவரைக் கண்ணால் காணும் பேறுபெற்றேன்.
“நீங்கள் தலைவரைப் போய்ச் சந்திக்கவில்லையா?” கேட்டவர்களுக்கெல்லாம் என்னிடம் ஒரேயொரு பதில்தான் இருந்தது “சாதனையாளர்களைச் சந்திக்கும்போது, அதில் நூற்றில் ஒரு பகுதியாவது நாமும் சாதித்திருக்க வேண்டும்… இல்லையெனில் அவர்களைச் சந்திக்கும் அருகதையற்றவர்கள் நாங்கள். அவர்களைச் சந்திக்கும் உரிமை எங்களுக்கு இல்லை”

ஊடகங்கள் நிறையச் சொல்லிவிட்டன. என்றாலும் வரலாறு காணாத அந்த வீரனைப் பற்றி எழுதி மாளாது. எந்தத் தமிழுக்காக அவர் போராடினாரோ அந்தத் தமிழே தோற்று நிற்குமிடம் ஒன்று உண்டென்றால், அது பிரபாகரன் என்ற அதிமானுடனைக் குறித்துப் பேச முனையுமிடந்தான். நான் உணர்ச்சி மிகைப்பட்டு இதைச் சொல்லவில்லை.

இன்று, (24.05.09) ‘ஒப்பற்ற எங்கள் தலைவர் களத்தில் வீரமரணமடைந்துவிட்டார்’என்று செல்வராஜா பத்மநாதன் அறிவித்திருக்கிறார்.

எதை அஞ்சினோமோ அது உண்மையில் நடந்துவிட்டதா? எது நடக்கக்கூடாதென்று நாங்கள் பிரார்த்தித்தோமோ அந்தப் பிரார்த்தனைகளை ‘மேலான சக்தி’கள் மண்ணில் தூக்கி எறிந்துவிட்டனவா?

கடைசியில், ‘மொக்குச் சிங்களவங்கள்’என்று எங்களால் நகையாடப்பட்டவர்கள், ராஜதந்திரப் போரிலும் எங்களை வீழ்த்திவிட்டார்களா?
உண்மையல்லாத ஒன்றை உண்மைபோலக் காட்டி, எங்களைக் குழப்பியதன் வழியாக, எங்கள் பெருந்தலைவனுக்கு நாங்கள் இறுதியாகச் செலுத்தியிருக்க வேண்டிய மரியாதையை செலுத்தவிடாமல் அடித்துவிட்டார்களா? உண்மையை உண்மைபோலச் சொன்னால், வெளிப்படுத்தினால் உலகம் கொதிக்கும் ஒரு கோபப்பந்தாகிவிடும், அந்த எழுச்சி விபரீத விளைவுகளை உண்டாக்கிவிடும் என்பதற்காக எங்களைத் திசைதிருப்பிவிட்டார்களா? எங்கள் தலைவனை அறியாதவர்களும் அவரது மரணத்தின் பின்னான எழுச்சியின்போது அவரை அறிந்துவிடுவார்களே என அஞ்சி நாடகமாடினார்களா? சீறி வெடித்திருக்க வேண்டிய ஒரு வெடிகுண்டைத் தண்ணீருக்குள் அமிழ்த்தி செயலிழக்கச் செய்துவிட்டார்களா?

அன்பானவர்களே! உங்கள் செய்திகளையே சோறும் தண்ணீரும் சுவாசமுமாக எண்ணிக் காத்துக்கொண்டிருக்கும் எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு இரகசியமாக ஒரு பொய்யையேனும் சொல்லுங்கள்.

“தலைவர் உயிருடன் இருக்கிறார்”

இந்த வார்த்தைகளின் வழி அணையாதிருக்கட்டும் எங்கள் மனங்களில் மூண்டெரியும் நெருப்பு. இளைய தலைமுறையிடம் தலைவர் கைமாற்றிக் கொடுத்துவிட்டுப் போயிருக்கிற கடமைகளை அவர்கள் செய்துமுடிப்பார்கள். (இங்கு சுயநலம் மறுபடி பேசுகிறது. இன்னொருவரின் தோளில் அதை மாற்றத் தந்திரம் செய்கிறது.) இல்லை; நாங்கள் செய்துமுடிப்போம். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக எங்களை வழிநடத்திய தனிப்பெருந்தலைவன் எங்களுக்காக இனி ஒன்றும் செய்யவேண்டியதில்லை. காலமெல்லாம் போருக்குள் வாழ்ந்தவன் எங்கோ வெகுதொலைவில், தன்னை யாரென அடையாளப்படுத்திக்கொள்ளாமலே எங்கள் உயிர்நிலையாக இருந்துகொண்டிருக்கிறான் என்ற அற்ப நிம்மதியில், நிறைவில் மிகுதி நாட்களை நாங்கள் வாழ்ந்துவிட்டுப் போகிறோம்.

தயவுசெய்து சொல்லுங்கள்.
“தலைவர் உயிருடன் இருக்கிறார்”என்று.

-நன்றி: உயிரோசை

5.19.2009

19.05.2009

இன்று
கண்கள் கண்ணீரில் மூழ்கி இறந்தன
காற்றை கண்முன்னால் யாரோ
திருடிக்கொண்டு போகிறார்கள்
நட்சத்திரங்கள் அறுந்து வீழ்ந்தன.

அழாதே என் தோழி!
அது அவனில்லை.
நாங்கள் பால்யத்தில் விளையாடித்திரிந்த
வீதிகளை இழந்தோம்
பூர்வீக வீடுகளிலிருந்து
தெருநாய்களைப் போல விரட்டப்பட்டோம்
நெல்மணிகளுக்குப் பதிலாக
கண்ணிவெடிகள் விதைக்கப்பட்ட
வயல்களைப் பிரிந்துவந்தோம்.
பிணங்களில் இடறிவிழுந்து
உடம்புக்குள் உயிர்
கூடுமறந்த குருவியெனப் பதகளிக்க
திசையெலாம் சிதறி விழுந்தோம்.
குடும்பப் புகைப்படம்…
கைப்பிடி மண்…
காதலனின் - காதலியின் கடிதம்…
யாதுமில்லை!

அவன் எங்களோடிருந்தான்
நாங்கள் உயிரோடிருந்தோம்
அவ்வளவே!

கண்களை நம்பாதே
நாசமாய்ப் போன கடவுளர் சாட்சியாய்
அது அவனில்லை.

ஏழுகோடித் தமிழர்களின் சொந்தக்காரன்
நந்திக்கடலோரம் நாதியற்றுக் கிடந்தானாம்
ஊடகக்காட்சிகளில் காறியுமிழ்ந்து சொல்
‘நாடகக்காரர்களை நம்பிலோம்’என்று.

மரணத்தை வென்றவன்
எங்கள் மானத்தின் காவலன்
தன்னுடலும் சரணடையச் சம்மதியாத
சரித்திர நாயகன்
சாய்ந்தானாம் என்றது
சாத்தான்களின் சதிவேலை!

கனவென்றுணர்ந்தும் கண்விழித்து
கதறியழுவதுபோல்
பொய்யென்று தெரிந்தும்
கண்ணில்பொங்குதே மாகடல்!

நீ அழாதே அம்மா!

கடல் வற்றிவிடுமென்று நீ நம்புகிறாயா?
இரவின் நீளம் ஓராண்டென்றால் ஒத்துக்கொள்வாயா?
பகலைச் சந்திரனும்
இரவைச் சூரியனும்
ஆளுமென்றால் ஆமாமென்றுரைப்பாயா?

தொழினுட்பம்
இழிநுட்பமானது இலங்கையில்தான்!

மகாவீரர்களுக்கு மரணமும் அஞ்சுகிறது
கோழைகளை அது வாழும் நாளெல்லாம்
வதைத்துக் கொல்கிறது.
சுடச் சுடப் பொன்னொளிரும்
எங்கள் மீட்பனும் அவ்விதமே.
காஸ்ட்ரோ சொன்னதே சரி!
'தோல்வியடைய நமக்கு அனுமதியில்லை'


கவிஞர் இளம்பிறைக்கு எழுதியது

5.18.2009

இது கவிதையல்ல; கோபம்!


எல்லாம் இனிதே நடக்கிறது.

இன்னும் சில மணிகளில்

முற்றிலும் மயானமாகிவிடும்

புகை மண்டலத்தினுள்ளிருந்து

சிங்கக் கொடி உயரும்

நிலத்தில் வீழ்ந்து

இறந்துகொண்டிருப்பவர்கள்

ஏலவே இறந்துபோனவர்களைப்

பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

ஒளி அவியும் விழிகளால்.


பாதுகாப்பு வலயங்கள்

கொலைக்களங்களாவதைப் பற்றி

சர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.

அறிக்கை விடுவதில்

உள்ளுர்க்காரர்களுக்கு சளைத்ததாயில்லை

ஐ.நா. சபை.


எப்போதோ தயாரான கப்பல்களின் நங்கூரங்கள்

சிக்கிக்கொண்டிருக்கின்றன

தயக்கத்தின் வேர்களில்.


சர்வதேசத்தின் செவிட்டுச் செவிகள்

காத்துக்கொண்டிருக்கின்றன

எப்போதும் வரமாட்டாத ஒரு செய்திக்காக.


ஒரு மரணம் = சமாதானம் என்ற சமன்பாட்டை

மூன்று முட்டாள்களுடன்

சில சுயமோகிகளும் நம்பிப் பரப்புகிறார்கள்.


புதிய சண்டியனோடு பொருதமுடியாமல்

வெள்ளை மாளிகை கனவானாகி

அறிக்கை விடுகிறது.


இந்துசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை

துள்ளிக்கொண்டிருக்கிறது மமதையில்

சாதாரண காலத்திலேயே கையில் பிடிக்கமுடியாது

சங்கார வெறியில்

அகங்காரம் உரத்து அறிவிக்கும் உளறல்களுக்கு

‘ஜெயவேவா’பின்னணி இசைக்கிறது.


தலைநகர வீதிகளில்

பொங்கி வழிகிறது

தமிழர்களின் குருதிகலந்த

‘கட்ட’ சம்பலும் பாற்சோறும்.

வெட்டப்படப்போகும் ஆடுகள் பாவம்

மஞ்சளில் குளிக்கின்றன.


இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!

தங்களை விற்றுக்கொண்டவர்களும்

விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டவர்களும்

உதடுகளை அகலவிரித்துக் களிக்கின்றனர்.

பிரியாணிகளும் பியர் போத்தல்களும் இணைந்து

சுட்டுவிரல் அழுத்த

கொட்டி அள்ளியது கூட்டுக்களவு.

தமுக்கடித்து ஆடுகின்றனர் துதிபாடிகள்

தொண்டரடிப் பொடிகளின் தோள்முனைகளில்

சிறகுகள் முளைத்ததாகவும் தகவல்.

பொய்மையாளரைப் பாட

கவிக்குயில்களும் பேரரசுகளும்

கனத்த தொண்டைகளை

மேலும் கனைத்துக்கொள்கின்றனர்.

இனி கைதட்டத் தோதான வரிகளைத்தேடவேண்டியதில்லை.

‘வீழ்க’என்றாலும் விசுக்கென்றெழுந்து

கையொலி எழுப்ப அனைவரும் தயார்!


சில தொலைக்காட்சிகளும் பத்திரிகைளும்

பரப்புரைகளில்

கோயபல்சின் ‘குளோனிங்’ஆக போட்டியிடுகின்றன.


புரட்சியின் நெருப்பு

மண்ணிற்குள் மறைந்து கனிகிறது

வைரமாய்.


‘எங்களைப் பொறுத்தளவில் இனி விடுதலைப்புலிகள் இல்லை’என்ற கோத்தபாயவுக்கு நன்றி!

இல்லாதவர்களால் குண்டுகளாக முடியாது

இல்லாதவர்களால்

உங்கள் வேட்டிகள் நனைவது சாத்தியமில்லை

இல்லாதவர்களால்

உங்கள் கனவுகளுள் புகுந்து இனிஅச்சுறுத்த முடியாது.

உங்கள் கண்ணெதிரில் கட்டிடங்கள்

யாருமற்றவர்களால் தகர்ந்துசரிவது எத்தனை அழகு!


மரணமற்றவனின் மரணத்தை

எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே!

எதிர்வு கூறுவோரே!

தேம்ஸ் நதிக்கரையோரத்தில் அவனே நடந்து செல்கிறான்

பாரிஸின் வீதிகளில் அவன்தான் பாடிக்கொண்டிருக்கிறான்

ரொறன்ரோவில்

அவனொரு தொழிற்சாலையில் இயங்கிக்கொண்டிருக்கிறான்

பேர்ளினில் நெருப்பொளிர்வது யாருடைய விழிகளில்?

சூரிச்சில்

டென்மார்க்கில்

நோர்வேயில்

ஈரோட்டில்

நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?


நினைவிருக்கட்டும்

இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்

வரலாற்றில்

எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்

பகத்சிங்காக

நேதாஜியாக

பிரபாகரனாக!

பிற்குறிப்பு: இதி்ல் கவித்துவத்தைத் தேடவேண்டாம். இது கவிதையன்று. என் கோபம்.

5.03.2009

“இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது”கவிஞர் தாமரையின் அனல் பேச்சு

30-04-09 அன்று சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் உண்ணாநிலைப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டு பேசிய உணர்வாளர்களது உரைகளின் மூன்றாம் பகுதி இது.

இந்தக் காலகட்டத்தில் மக்களின் உணர்வுகள் என்னவாக இருந்தன என்ற வரலாற்றுப் பதிவுகள் அவசியம் என்ற காரணத்தால் இதைப் பதிவுசெய்கிறேன்.

கவிஞர் கருப்பண்ணல் (பெயர் சரியாக காதில் விழவில்லை)
“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு”

கருணாநிதி செத்துபோனவர். அவரைப் பற்றி இங்கு எதற்குப் பேசுகிறீர்கள்? கலைஞர் மிக அழகான நாடகம் ஒன்றை ஆடியிருக்கிறார். அதுவும் எங்கே? அண்ணா சமாதியின் முன்னால்.

இதனிடையில் மின்சாரம் தடைப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கு எரிக்கும் வெயிலைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம். அவ்வழியாகப் போய்க்கொண்டிருந்த பாதசாரிகளில் சிலர், எங்கள் கைகளில் இருந்த படங்களில் இரத்தமும் சதையுமாக தமிழர்கள் சிதறிக்கிடந்த காட்சிகளைக் கண்டு, முகம்பதறி வேகநடையெடுத்து அவ்விடத்தைக் கடந்தனர்.

கவிஞர் கருப்பண்ணல் தொடர்ந்தார்:

மெரினா கடற்கரையோரத்தில் கண்ணகிக்குச் சிலைவைத்து கற்புக்கரசி என்று கொண்டாடினீர்கள். சரிதான். இலங்கையிலே காமவெறி பிடித்த, வக்கிரம் பிடித்த இராணுவத்தினன் எங்கள் சகோதரிகளை நிர்வாணப்படுத்திக் கேவலப்படுத்துவதைத் தடுக்க என்ன செய்தீர்கள்?
‘கொத்துக் கொத்தாக எமது மக்கள் செத்து மடிகிறார்கள்’ என்று சொல்வது தவறு. ‘குவியல் குவியலாக’என்று சொல்வதே பொருந்தும். அந்தளவிற்கு அங்கே அழித்தொழிப்பு நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
இராமாயணத்திலே இராவணன் என்ற தமிழனை அழிக்க இங்கிருந்து அனுமான் என்பவனை அனுப்பி இலங்கையைத் தீமூட்டினீர்கள். இன்றைக்கும் அங்கே இருக்கும் எங்கள் தமிழர்களை அழிக்க இங்கிருந்துதான் படைபோகிறது.
‘அன்னை அன்னை’என்று ஏன் சோனியாவைச் விளிக்கிறீர்கள்? பெற்றெடுத்த தாயையே ‘அம்மா’என்றழைக்கப் பலர் தயங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே, எங்கிருந்தோ வந்த சோனியாவை ‘அன்னையே’என்றழைக்கிறீர்கள். இது அடுக்குமா?

வரும் தேர்தலில் அதிகாரத்தின் தலையில் ஆட்காட்டி விரலால் ஒரே அழுத்தாக அழுத்துங்கள். தமிழீழ மண்ணிலே தமிழர்களுக்கென்றொரு தாயகம் அமைவதற்கு ஏதுவாக இருக்கக்கூடிய ஒரு வாய்ப்பு தற்போது உங்களுக்குக் கிட்டியிருக்கிறது. தமிழக தேர்தலில், நீங்கள் யார் என்பதை ஆளும் வர்க்கத்தினருக்கு நிரூபித்துக் காட்டுங்கள்.

உலகத் தமிழர்களின் தலைவன் பிரபாகரன் ஒருவனே!

ஒரு இனத்தின் மீது மற்றோர் இனம் படையெடுத்து வெற்றிபெற்றதாக வரலாறு இல்லை.

தமிழீழம் வெல்லும் - அதைத்
தடுக்கின்ற எவரையும்
தமிழகம் கொல்லும்!

அடுத்து தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த தியாகு உரையாற்றினார்.

தமிழர்கள் போராடும் இனமாக அறியப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளான பிரான்ஸ், கனடா, இலண்டன் இங்கெல்லாம் அவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்திவருகிறார்கள். அந்த நாடுகளுக்குக் கொடுத்த அழுத்தங்களைத் தொடர்ந்து, அந்நாடுகளின் பிரதிநிதிகள், போரை நிறுத்தும்படி கேட்பதற்காக இலங்கைக்குப் போயிருக்கிறார்கள். பிரான்ஸ், இங்கிலாந்து நாடுகளை கொழும்புக்கு வர அனுமதித்த இலங்கை அரசு, ஸ்வீடனின் பிரதிநிதிக்கு அனுமதி மறுத்திருக்கிறது.

உடனடியாகப் போரை நிறுத்தவேண்டும், போர் நடக்கும் இடத்திற்குள் சிக்கியிருக்கும் மக்களைச் சந்திக்க பன்னாட்டுப் பிரதிநிதிகளுக்கும் அனுமதி வழங்கப்படவேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகள் மேற்கண்ட நாடுகளின் சார்பில் விடுக்கப்பட்டன. ஆனால், அந்தக் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள கொழும்பின் ஆட்சியதிகாரம் மறுத்திருக்கிறது. வெள்ளைக்காரன்கூட ‘போரை நிறுத்து’என்று கேட்கிறான். இத்தனை அருகிலிருக்கும் இந்தியா கேட்கவில்லை. நிலைமை இவ்விதமிருக்க, ‘அங்கே போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது’என்று இங்கு சிலர் பொய்சொல்லித் திரிகிறார்கள்.

தமிழுக்கு அமுதென்று பேர்… தமிழனுக்கு அகதி என்று பேரா? புலிகள் என்ற பெயரைப் பலரும் சூட்டிக்கொள்கிறார்கள். காரணம், புலிகள் என்றால், அடக்குமுறைக்கு எதிரானவர்கள் என்று பொருள். தமிழ்மக்களின் உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவதற்கு முழுத்தகுதியும்பெற்ற அமைப்பு விடுதலைப் புலிகள் இயக்கம்.

இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கிற ஈழத்தமிழர்கள் மட்டும் அகதிகளல்ல; புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள்தாம் உண்மையான அகதிகள். தாயகமும் இல்லாமல் அதை மீட்கும் வழியும் தெரியாமல் உலகமெல்லாம் அலைந்துகொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடந்தேறியிருக்கின்றன. எமது சகோதரர்களின்மீதான போரை நிறுத்தச்சொல்லி பலவழிகளிலும் கேட்டும் ஒரு பயனும் இல்லாதுபோயிற்று. எமக்கென்றொரு (தமிழகத்துக்கு) அயலுறவு அமைச்சு இருந்திருந்தால், ‘பிரணாப்பை அனுப்பு’என்று நான் ஏன் கெஞ்சிக்கொண்டிருக்கப்போகிறோம்? மலேசியாவிலோ, சிங்கப்பூரிலோ தமிழகத்தார் வாழும் ஏனைய நாடுகளிலோ எம்முறவுகளுக்கு ஒரு இன்னல் விளைந்தால் தட்டிக்கேட்க எங்களுக்கென்றொரு அயலுறவு தொடர்பான அலுவலகம் இல்லை. ஆனால், விடுதலைப்புலிகளுக்கு என்றொரு சர்வதேச செயலகம் இருக்கிறது. நாங்கள் பத்துக்கோடி தமிழர்கள் உலகமெங்கும் வாழ்வதாகப் பெருமை பேசிக்கொண்டிருக்கிறோம். பத்துக்கோடி தமிழருக்கும் ஒற்றைக்கொடி கிடையாது.

எத்தனையோ இழப்புகளை நாம் எதிர்கொள்ளலாம். ஆனால், எந்த இழப்புகளாலும் விடுதலைப்போரை நிறுத்தமுடியாது. விடுதலைப் பாதை என்பது மலர்களாலானது அல்ல; பஞ்சுமெத்தையன்று. அது வழுக்குப்பாறை, சறுக்கும் பாதை. அது விடுதலைக்காக பல ஈகங்களைக் கோரிநிற்கிறது. எந்நிலையிலும் நாம் நம்மை இழத்தலாகாது. ‘காற்று இல்லாதபோதும் விடும் மூச்சில் வாழும் சாதி எங்கள் சாதி’என்று கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியதைப்போல நாங்கள் உயிர்ப்புடனிருப்போம்.

எல்லா நகரங்களையும் இழந்தோம். கிளிநொச்சி, பரந்தன், மாங்குளம்… என நிலம் சுருங்கிச்செல்கிறது. ஆனால், களம் நம்முன் விரிந்துசெல்கிறது. இப்போது இது உலகம் முழுவதும் தமிழர்களால் நடத்தப்படும் போராட்டமாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது. ஆறு கண்டங்களிலும் இப்போது ஈழத்திற்கான போர் நடந்துகொண்டிருக்கிறது. கரிய மேகங்கள் சூழலாம். ஆனால், கதிரவனை எப்போதைக்குமாக மறைத்துவிடமுடியாது.

இயக்குநர் புகழேந்தி (‘காற்றுக்கென்ன வேலி’ படம் மூலம் அறியப்பட்டவர்)

இரண்டு நாட்களுக்கு முன் உண்ணாவிரத நாடகக்காட்சி ஒன்று அரங்கேறியது. “இந்திய அரசே! கலைஞரின் உயிரைக் காப்பாற்று”என்று கூக்குரல்கள் வேறு.
இது ஒரு பாதுகாப்பான நாடு. நாங்கள் ஏழுகோடித் தமிழர்கள் இங்கே வாழ்கிறோம். ஆனால், இதுநாள்வரையில் தமிழன் என்றொரு இனத்தின் மகத்துவம் அறியப்படவில்லை. ஈழத்தமிழர்கள் முப்பத்தைந்து இலட்சம் பேரால்தான் ‘தமிழன்’என்ற சொல்லை இன்றைக்கு உலகம் உச்சரித்துக்கொண்டிருக்கிறது. இங்கே போராடும் உணர்வு இல்லை. வெளிநாட்டிலிருந்து வந்திருந்த எனது ஒரு நண்பர் சொன்னார். (அவருக்கு நாற்பத்தைந்து வயதுக்கு மேலிருக்கும்) ‘இந்த வயதிலேயே எங்களுக்கு களத்தில் இறங்கிப்போராட வேண்டும் போலிருக்கிறது.’என்று. இன்றைக்கு உலகம் முழுவதிலும் போராட்டங்களை முன்னெடுத்து நடத்திக்கொண்டிருப்பவர்கள், ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களின் பிள்ளைகளான பத்தொன்பது, இருபது வயதான இளைஞர்கள்.

முத்துக்குமார் என்றொரு அற்புதமான இளைஞன். அவன் தனக்குத்தானே தீமூட்டி தற்கொடை செய்துகொண்டு இறந்துபோவதற்கு முன்னால் அவனிடம் கேட்டார்கள்: “இந்தக் கடிதத்தில் இவ்வளவு தெளிவாக எல்லாவற்றையும் எழுதியிருக்கிறாயே… இவ்வளவு அறிவுபூர்வமான ஒருவன் ஏன் வாழ்ந்திருக்கக்கூடாது?”என்று. அதற்கு அவன் சொன்னான்: “அங்கே ஈழத்திலே என்னைவிடப் புத்திசாலிகளான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் மண்ணுக்காக ஒவ்வொருநாளும் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முன் நான் எம்மாத்திரம்?”என்று. அறிவும் உணர்வும் ஒரே இடத்தில் சேர்ந்திருப்பது அரிது. முத்துக்குமாரிடத்தில் அவை இரண்டும் இருந்தன. அதனால்தான் “‘போரை நிறுத்து’என்று கேட்டு, அதற்குரிய வழிவகைகளைச் செய்யாமல் கள்ளமௌனம் சாதிக்கிறீர்கள்”என்றான்.

மத்திய, மாநில அரசாங்கங்கள் எங்கள் உணர்வுகளை முடக்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.நாங்கள் அடிமைக்கூட்டமல்ல; ஆளப்பிறந்த கூட்டம் என்பது ஆதிக்க சக்திகளுக்குப் புரியவேண்டும். வரலாறு அடுத்த தலைமுறைக்கு எல்லாவற்றையும் எடுத்துச் செல்லும்; சொல்லும்.

இயக்குநர் வா.கௌதம்

இந்த இடம் நிறைந்திருக்கவேண்டும். நான் இன்னமும் அதிகளவிலான மக்களை எதிர்பார்த்தேன். பயமா? தயக்கமா? என்ன காரணமென்று தெரியவில்லை. நாம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். பேச்சில் நேரத்தை விரயம் செய்துகொண்டிருக்கிறோம். செயலாற்றவேண்டிய காலகட்டம் இது.
இப்போது நான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்திற்கான கதைவேலைகளில் ஈடுபட்டிருக்கும்போது பெரும் மனச்சிதைவை அடைந்தேன். அந்தளவுக்கு அது என்னைத் துன்புறுத்துவதாக இருந்தது.

(எனக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்களில் இரண்டுபேர் சளசளக்க ஆரம்பித்திருந்தார்கள். கௌதமின் பேச்சைச் சரியாகச் செவிமடுக்க இயலவில்லை)

வரலாற்றில் தமிழர்கள் பல இன்னல்களை அனுபவித்திருக்கிறார்கள். எல்லா இடங்களிலும் அடிபட்டும் இன்னமும் எங்களுக்குப் போராட்ட குணம் வரவில்லை. நான் எடுத்துக்கொண்டிருக்கும் படத்தின் வழியாக, படைப்பின் வழியாக எம்முறவுகள் அடைந்த இன்னல்களைக் காட்சியாகக் கொண்டுவந்திருக்கிறேன்.

ஈழத்திலே எமது சகோதரிகளை நிர்வாணப்படுத்தி கைகளை உயர்த்தியபடி நடந்துவரச் சொல்கிறான் இலங்கை இராணுவத்தான். அந்தப் பெண்கள் மனித வெடிகுண்டாக வரலாம் என்ற அச்சத்தினால் அப்படிச் செய்வதாகச் சொல்லப்படுகிறது. “நிர்வாணத்தைப் பாக்கணும்னா உன் அக்காவையோ அம்மாவையோ பாருங்களேண்டா சிங்கள வெறியர்களே!”என்று மனம் பதறுகிறது.

அங்கே அகதிகளாக்கப்பட்டிருக்கிற மக்களுக்கு உண்ண உணவில்லை. உடுக்க உடையில்லை. காயத்திற்குக் கட்டுப்போட்டு குருதியைக் கட்டப்படுத்தக்கூட துணியில்லை என்பது எவ்வளவு கொடுமை. நாம் எத்தனை காணொளிகளை இணையத்தில் காண்கிறோம். அதிலிருந்து ஒரு காட்சி… ஒரேயொரு துணியை வைத்துக்கொண்டு இரத்தம் வழிய இரண்டு சகோதரர்கள் இருக்கிறார்கள். ‘அண்ணா இந்தத் துணியை நீ கட்டிக்கொள்’என்கிறான் தம்பி. ‘இல்லை நீ கட்டிக்கொள்ளடா தம்பி’என்கிறான் அண்ணன். இதுதான் ஈழத்தின் இன்றைய நிலை.

சில மானங்கெட்டவர்கள் சோனியாவை ‘அன்னையே… அன்னையே’என்று அழைக்கிறார்கள். எங்கள் சகோதரர்களை நாளாந்தம் பலிகொள்கிற போரை முதலில் நிறுத்தச் சொல்லுங்கள். நாங்களும் அவரை அன்னை என்று அழைத்துவிட்டுப் போகிறோம்.

உலகம் முழுவதும் மனிதர்கள் பிள்ளைகளைப் பெற்றெடுக்கிறார்கள். எங்கள் தமிழர்கள்தான் புலிக்குட்டிகளை ஈன்றுகொண்டிருக்கிறார்கள்.

வைத்திலிங்கம் -பா.ஜ.க. கட்சியைச் சார்ந்தவர்

உலகமெங்கிலும் தமிழுணர்வாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியா ஒரு தேசம் என்கிறார்கள். இந்திய தேசத்தில் ஒரு பகுதியினராகிய தமிழர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், மராட்டியன், கன்னடன், கேரளாக்காரன் குரல் கொடுக்கும் நிலை வரவேண்டும். அப்படி அவர்கள் குரல்கொடுக்கமாட்டார்கள். பதிலாக பிரச்சனை கொடுப்பார்கள்.

புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கம் அல்ல. பிரபாகரன் பயங்கரவாதியும் அல்ல. தமிழீழம்தான் தீர்வு என்று சொன்னால் அது தவறா? இந்தப் போரை நடத்திக்கொண்டிருக்கும் சோனியா அரசாங்கத்தின் கருத்துப்படி புலிகள் பயங்கரவாதிகள். பிரான்சில், கனடாவில், இலண்டனில் தமிழ்மக்களால் நடத்தப்படும் போராட்டங்களில் பிரபாகரனின் உருவப்படத்தை ஏந்தியபடி மக்கள் செல்கிறார்கள். அந்த நாட்டு அரசாங்கம் அதற்குத் தடைசொல்கிறதா? இல்லை!

ஒரு பிரபாகரனை முடித்துவிட்டால் இந்தப் போர் முடிந்துபோய்விடும் என்று இங்கு சிலர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பிரபாகரனுக்குப் பதிலாக இலட்சோப இலட்சம் பிரபாகரன்கள் எழுவார்கள். அதற்கு இவர்கள் என்ன சொல்லப்போகிறார்கள்?

கவிஞர் தாமரை பேச எழுந்தபோது பலத்த கையொலி எழுந்தது. அண்மையில் திரைத்துறையினர் நடத்திய கூட்டத்தில், அதிகாரங்களை எதிர்த்து அவர் ஆற்றிய அனல்பறக்கும் உரை, உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கவிஞர் தாமரை:

இந்த உண்ணாவிரதம் வித்தியாசமானது. எத்தனையோ கூட்டங்களில் பேசினாலும் உங்கள் முன் பேசுவதுபோல ஆகாது. நாங்களெல்லாம் உங்களைவிட நன்றாக, மதிப்போடு வாழ்ந்துகொண்டிருப்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். நீங்கள் நினைப்பது போலில்லை. நாங்களும் அடிமைகள்தான்! அதிலும், உங்களைவிடத் தரந்தாழ்ந்த அடிமைகள் என்று சொல்லவேண்டும். ஏனென்றால், உங்களுக்கென்றொரு உண்மையான தலைவர் இருக்கிறார். அவர் தமிழீழத் தலைவர் மட்டுமல்ல@ தமிழினத்தின் தலைவர். எங்களுக்கு அப்படிச் சொல்லிக்கொள்ளும்படியான தலைவன் இல்லை. அதனால்தான் கடல்கடந்து தலைவர்களைத் தேடவேண்டியிருக்கிறது.

இந்தியனாக இருப்பதற்கும் தமிழனாக இருப்பதற்கும் இடையில் ஒரு வேறுபாடு இருக்கிறது. இந்தியனாக இருந்தால், ஆயுதம் கொடுத்து இலங்கையில் போரை நடத்துபவனாக இருப்பான். தமிழனாக இருந்தால், ‘போரை நிறுத்து’என்று துயரத்தோடு கதறுபவனாக இருப்பான். ஆக, தமிழனாக இருந்தால் நீங்கள் இந்தியனாக இருக்கமுடியாது. இந்தியனாக இருந்தால், தமிழனாக இருக்கமுடியாது.

கடைக்கோடித் தமிழனுக்கும் கலைஞர் ஆடிய நாடகம் புரிந்துபோய்விட்டது. கனரக ஆயுதங்களால் தாக்குவதை நிறுத்துவதற்குப் பெயர்தான் போர்நிறுத்தமா? ஆனால், இவர்கள் சொல்கிறபடி அங்கு அப்படி எந்த நிறுத்தமும் ஏற்படவில்லை. இப்போதும் எறிகணைகளுக்கும் விமானக்குண்டு வீச்சுக்களுக்கும் மக்கள் பலியாகிக்கொண்டுதானிருக்கிறார்கள்.
“நான் சொன்னதைக் கேட்கும் மத்திய அரசு அமையுமானால், இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தமிழீழம் பெற்றுத்தர வழிவகை செய்வேன்”என்று ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். எவ்வகையிலேனும் எங்கள் உறவுகள் இந்த இனவழிப்பினின்று காப்பாற்றப்பட்டால் சரி.


போராளிகள் எங்கள் சகோதரர்கள். அதை யார் சொன்னாலும் நாங்கள் மாற்றிச்சொல்வதாக இல்லை. கலைஞரின் நாடகங்கள் எல்லாம் தெரிந்துபோய்விட்டன. புனர்வாழ்வுக்காக 25 கோடி பணம் கொடுப்பார்களாம். அதை வாங்கி ராஜபக்சே ஆயுதம் வாங்குவான். வேறென்ன செய்வான் என்பது நமக்குத் தெரியாதா? போர்நடக்கும் பகுதிகளிலிருந்து கொண்டு வந்து இறக்கப்பட்ட மக்களைக் காரணமாகக் காட்டி உலகநாடுகளிடம் பணம் வசூலிக்கும் வேலையை ராஜபக்சே அரசாங்கம் செய்ய நினைத்தது. ‘சித்திரவதை முகாம்களுக்கு பணம் கொடுக்கவேண்டாம்’ என்று புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் அறிவுறுத்திவிட்டார்கள். எங்கள் மக்களை அடித்துவிரட்டிவிட்டு அவர்கள் வாழ்ந்த இடங்களில் சிங்களவர்களைக் குடியேற்றும் கைங்கரியத்தைத்தான் ராஜபக்சே செய்ய நினைத்திருக்கிறான். அதற்கு நாம் ஒருபோதும் இடங்கொடுக்கக்கூடாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் நான் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்றுதான். உங்கள் பிள்ளைகளைக் கல்வியினால் முன்னேற்றுங்கள். எமக்குமுன் மகத்தான கடமை ஒன்று காத்துக்கிடக்கிறது. ஹிட்லரால் விரட்டியடிக்கப்பட்ட யூதர்கள், இலட்சக்கணக்கில் தமது உறவுகளை ஒரு போர்வெறியனிடம் பறிகொடுத்த யூதர்கள் எப்படிச் சாதித்துக் காட்டினார்களோ, அதைப்போல நீங்கள் சாதனையாளர்களாக, வரலாற்றை மாற்றி எழுதுபவர்களாக ஆகவேண்டும் என்பதே எனது விருப்பம்.

கவிஞர் தாமரை பேசி அமர்ந்ததும் பத்திரிகையாளர்களும் தொலைக்காட்சிகளிலிருந்து வந்திருந்தவர்களும் பேட்டிக்காக அவரைச் சூழ்ந்துகொண்டார்கள். ‘ஆட்டோகிராப்’கேட்டு வந்துகொண்டேயிருந்தார்கள்.

திருச்சி வேலுச்சாமி: (இவர் யார் என்பதைச் சொல்லும்போது சாலைச் சத்தங்கள் அவ்விடத்தை மூழ்கடித்துவிட்டன.)

ஈழத்தமிழர்களால்தான் இன்றைக்கு நாங்கள் உலகத்தின் கண்களில் மதிப்பிற்குரியவர்காகப் பார்க்கப்படுகிறோம்.
முன்பெல்லாம் நான் காலை பதினொரு மணிக்குச் சாப்பிடுவேன். பிறகு இரவுணவு. இரண்டு வேளைதான் உண்பது வழக்கம். அண்மையிலே ஒன்றைத் தெரிந்துகொண்டேன். அதாவது, முப்பத்தேழு ஆண்டுகளாக நான் உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன். நான் சொல்வது புரிகிறதா? நான் அத்தனை ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்திருக்கிறேன் என்று தனது உண்ணாவிரதத்தின் மூலமாக எனக்கு உணர்த்திக்காட்டியவர் கலைஞர்.


ராஜீவ் காந்தியின் மரணத்தை இத்தனை நாட்களாகக் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் காந்தியின் வழக்கு விசாரணை இன்னமும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அதை நீதிமன்றமே ஒத்துக்கொண்டிருக்கிறது. முடியாத ஒரு வழக்கின் தீர்ப்பை நீங்கள் ஏன் திரும்பத் திரும்பச் சொல்லி அவர்களை (விடுதலைப்புலிகளை) குற்றவாளிகளா(க்)கப் பார்க்கிறீர்கள்?

இன்னுமொரு கேள்வி ராஜீவ் காந்தி கொலைசெய்யப்பட்ட வழக்கு விசாரணை 22ஆம் திகதி தொடங்கவிருக்க, 21ஆம் திகதியே ‘விடுதலைப் புலிகளே இதைச் செய்தார்கள்’என்று சுப்பிரமணியசுவாமி முண்டியடித்துக்கொண்டு பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுத்தது எப்படி? அந்த வழக்கினுள் மறைந்திருக்கும் பூடகந்தான் என்ன?

இலங்கையில் நடந்துகொண்டிருக்கிற பேரழிவை, அவலத்தை இன்னமும் கண்டுகொள்ளாமல், அதற்கு முண்டுகொடுத்துக்கொண்டு மத்திய, மாநில அரசாங்கங்கள் இருக்குமானால், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருப்பவர்கள் மனித உருவில் வாழ்ந்த பேய்கள் என்று வரலாறு எழுதும் காலம்வரும்.

அந்தக் கூட்டத்தை ஒழுங்கமைத்த நேரு என்பவர் நன்றியுரை வழங்கினார்.

நாங்கள் எங்கள் சொந்த மண்ணிலிருந்து அடித்து விரட்டப்பட்டவர்கள். எங்களுக்காக இன்று தமிழகமே போராடி வருகிறது என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்துவதற்கு பல போராட்டங்கள் நாங்கள் செய்யவேண்டியிருந்தது.

உதாரணமாக, கும்மிடிப்பூண்டி அகதி முகாமிலிருக்கும் அகதிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வதற்கு முதலில் வட்டாட்சியரால் அனுமதி வழங்கப்பட்டது. உண்ணாவிரதம் நடப்பதற்கு முதல்நாள் இரவு அந்த அனுமதி திருப்பிப்பெறப்பட்டது. நாங்கள் அண்ணன் ஒரு முகாமிலும், தங்கை ஒரு முகாமிலும் தங்கியிருக்கிறோம். இப்படியான இடங்களில்கூட நாங்கள் சந்திக்கமுடியாமல் போய்விட்டது. உரத்து அழக்கூட எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

அவரது குரல் தளதளத்துவிட்டது. கூட்டத்திலும் பலர் கலங்கிப்போயிருந்ததைக் காணமுடிந்தது.

நாங்கள் இந்தக் கூட்டத்தை எந்த அரசியல் கட்சி சார்பிலும் நடத்தவில்லை. ஒட்டுமொத்த மக்களின் தலைவனின் பெயரால் கூடியிருக்கிறோம். நான் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை. குறிப்பிட்டால் ஆபத்து.

இந்தப் போராட்டத்தின் மூலமாக சில கோரிக்கைகளை மத்திய, மாநில அரசாங்கங்களின் முன்வைக்கிறோம்.
-இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தம் ஏற்படுத்தப்படவேண்டும்.
-அடிப்படை வசதிகளைச் செய்ய சர்வதேச தொண்டு நிறுவனங்களை போர் நடக்கும் பிரதேசத்தினுள் இலங்கை அரசாங்கம் அனுமதிக்க வேண்டும்.
-பேச்சுவார்த்தை தொடங்க ஆவன செய்யப்பட வேண்டும்.


நாங்கள் சாவின் விளிம்பிலிருந்து வந்தவர்கள். எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் இந்த மண்ணிலே உயிர்விட நாங்கள் தயார்.

பழ.நெடுமாறன் ஐயாவின் நிறைவுரையுடன் கூட்டம் கலைந்தது.





5.02.2009

“ஏண்டா தந்தி அனுப்புறீங்க… அதை வாங்கி ………… த் துடைச்சிட்டுப் போட்டுறுவானுங்க”


30.04.09 அன்று சென்னை சேப்பாக்கத்தில், தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் நடத்தப்பட்ட உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு பல பிரபலங்களும் ஆற்றிய உரையின் இரண்டாம் பகுதி.

‘மண்மொழி’சஞ்சிகையின் ஆசிரியர் இராசேந்திர சோழன்:

நாங்கள் எட்டுக்கோடித் தமிழர்கள் இருந்தும், தங்கள் தாயகத்திற்காகப் போராடும் சகோதரர்களை கையறுநிலையில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். மாநில அரசாங்கம் டெல்லி ஆட்சியாளர்களுக்கு கொத்தடிமைகள்போல நடந்துகொள்வதனால் வந்த வினை. தமிழ்நாட்டுக்கென்று ஒரு இராணுவம் இருந்திருந்தால் நாங்கள் இப்படி மனம்நொந்துபோயிருக்க வேண்டியிராதல்லவா? தங்கள் உரிமைகளை வென்றெடுக்கப் போராடிய அங்கோலா, கொரியா, தென்னமெரிக்கா எல்லாவற்றுக்கும் பின்புலமாக, பலமாக சில நாடுகள் இருந்தன. இளைப்பாற, ஆதரவும் ஆயுதமும் கொடுக்க நாடுகள் இருந்தன. ஆனால், ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய தமிழகத் தமிழர்களின் பிரதிநிதியாகிய மாநில அரசாங்கம் நயவஞ்சக நாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது. இலங்கை அரசாங்கம் என்ற கொலைஞர்களுக்கு மத்திய அரசு நேரடியாகவே இராணுவ உதவி செய்துவருகிறது.

சீனம், பூட்டான், பங்களாதேஷ், பாகிஸ்தான் இன்னபிற நாடுகளுடன் இந்தியா எவ்விதமான வெளியுறவுக்கொள்கையைக் கடைப்பிடிக்கிறது? சீனாவைப் போட்டி நாடாக, அச்சுறுத்தும் நாடாகப் பார்க்கிறது. பாகிஸ்தானைப் பகைநாடாகப் பார்க்கிறது. நேபாளம், பூட்டான், மாலைதீவுகள் இவற்றையெல்லாம் தமக்குக் கட்டுப்பட்ட நாடுகளாகப் பார்க்கிறது இந்தியா. ஆனால், இலங்கை மட்டும் இந்தியாவுக்குக் கட்டுப்படாது. நேரடியாக எதிர்க்கவும் எதிர்க்காது. அதேசமயம், கட்டுப்படவும் செய்யாது. ஆகவே, இலங்கையை இந்தியா தனது செல்லப்பிள்ளையாகப் பார்க்கிறது.
சீனாவுக்கு, பாகிஸ்தானுக்கு தனது ஒரு அங்குல மண்ணைக்கூட விட்டுக்கொடுக்கமாட்டேன் என்று சொல்லும் இந்தியா, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு உரித்தான கச்சதீவை இலங்கைக்குத் தாரைவார்த்துக்கொடுத்திருக்கிறது. அங்கே இருக்கும் வழிபடுதலங்களுக்கு எம்மவர்கள் செல்லமுடியாது. மீனவர்கள் வலைகளை உலர்த்தவும் களைப்பாறவும் முடியாது.

பாகிஸ்தானைப் பலவீனப்படுத்த கிழக்குப் பாகிஸ்தானை விடுவித்துக்கொடுக்க முயன்றது இந்தியா. அந்நேரம், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்கா பேசியது. “இது எங்கள் அயல்நாட்டுப் பிரச்சனை”என்று அமெரிக்காவுக்குப் பதிலளித்து, அதற்காகப் போராடி, வங்காளதேசம் என்றொரு நாடு உருவாக முதற்காரணியாகியது இந்தியா.

அதே ஜனநாயக அடிப்படையில் தமிழ்மக்களுக்கு விடுதலை வாங்கிக்கொடு என்று நாங்கள் கேட்கவில்லை. “நீ ஏன் கொலைவெறி இராணுவத்துடன் இணைந்து எங்கள் சகோதரர்களைக் கொன்று குவிக்கிறாய்?”என்றுதான் கேட்கிறோம். இந்திய இராணுவத்தினரது சம்பளம், இராணுவச் செலவினம் எல்லாவற்றிலும் தமிழ்நாட்டு மக்களது வரிப்பணமும் இருக்கிறது. எங்கள் மக்களின் வரிப்பணத்தை எடுத்து எங்கள் மக்களையே கொல்வது எவ்வகையில் நியாயம்?

‘தமிழீழ விடுதலைப் புலிகள் மீது நீங்கள் ஏன் தடைவிதிக்கவில்லை?’என்று திருமதி. சந்திரிகா பண்டாரநாயக்காவிடம் ஒரு செவ்வியொன்றில் பத்தாண்டுகளுக்குமுன் கேள்வி எழுப்பப்பட்டது. “இலங்கையில் மூன்றில் ஒரு பகுதியைத் தமது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளைத் தடைசெய்துவிட்டு அவர்களுடன் பேச்சுவார்த்தைக்குப் போய் இப்பிரச்சனையைத் தீர்ப்பதெப்படி?”என்று அவர் பதில்கேள்வி எழுப்பினார்.
அப்படிப் பரந்து விரிந்திருந்த நிலப்பகுதி இன்றைக்குச் சுருங்கிவிட்டது. அதற்குத் துணைபோனது இந்திய அரசு. தமிழர்களுக்கு முதல் எதிரி சிங்கள இனவெறி அரசாங்கம் என்றால், இரண்டாம் எதிரி இந்திய அரசு. அதற்குப் பழிதீர்க்கும் நிகழ்வு ஒருநாள் நடந்தே தீரும்.

‘பிரிவினைக்குத் தூண்டுகிறார்கள்.. தூண்டுகிறார்கள்’என்று கூச்சலிடுகிறார்களே… அப்படித் தூண்டுவது சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும்தான். தமிழனுக்கு இப்படி இன்னல் விளைவித்தால் எங்கள் நெஞ்சம் குமுறாதா? பிரிவினை எண்ணம் வராதா? அழிவுக்குத் துணைபோகும் காங்கிரசுக்கு கலைஞர் காவடி தூக்குகிறார். அவர்களுக்கு முண்டுகொடுப்பதை நிறுத்த அவர் ஏன் தயாரில்லை?

ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றமென்றால், பங்களாதேசின் விடுதலைப் போராட்டத்துக்குத் துணைபோனது குற்றமில்லையா? இறையாண்மைக்கு விரோதம் இல்லையா? அன்று ஜெயலலிதா சொன்னதற்கு அந்தக் குதி குதித்தவர்கள், இன்று அவர் தமிழீழத்திற்கு ஆதரவாகப் பேசும்போது மௌனம் சாதிப்பது ஏன்? அதை வழிமொழிய உங்களால் ஏன் முடியவில்லை?

இங்கே தமிழகம் என்ற மாநிலத்திலே குடும்ப ஆட்சி தொடரவேண்டுமென்பதற்காகவே அநியாயங்களைத் தட்டிக் கேட்காமல் தட்டிக்கொடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். அதனால்தான் அங்கே அத்தனை படுகொலைகள் நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன. இங்கே இப்படியென்றால் இலங்கையிலும் குடும்ப ஆட்சிதான். கோத்தபாய ராஜபக்சே, பசில் ராஜபக்சே இப்படியாக. இவர்களின் சகோதரி ஒருவர் நிருபமா ராஜபக்சே என்பவர் தமிழகத்துக்கு வந்து தனது சகோதரர்களின் நலன்களுக்காக கோயில் கோயிலாகச் சுற்றுகிறார். தமிழனை அழிக்க தமிழக சாமிகளை வரம் கேட்டுப்போகிறார்.

‘இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன்முதலாக’நான்கு தொலைக்காட்சிகளும் ஒரே காட்சியை ஒளிபரப்பிக்கொண்டிருந்த வினோதத்தை நாம் பார்த்தோம். அந்த வரலாற்று நிகழ்ச்சி, கலைஞரின் உண்ணாவிரதக் காட்சி.

கிராமங்களில் ஒன்று சொல்வார்கள்: “ஏண்டா தந்தி அனுப்புறீங்க… அதை வாங்கி சூத்தைத் துடைச்சிட்டுப் போட்டுறுவானுங்க”என்று. அதுதான் மத்திய அரசாங்கத்துக்கு மாநில அரசாங்கத்தால் அனுப்பப்படும் தந்திகளுக்கு நடக்கின்றன போலும். பிரணாப் முகர்ஜி தமிழகத்துக்கு வந்திருந்தபோது, கலைஞரோடு கனிமொழி, மு.க.ஸ்டாலின் என்றொரு குடும்பக் கூட்டமே நடந்தேறியதைப் பார்த்தோம்.
பிரியங்கா நளினியை வந்து பார்த்தார்; அனுதாபப்பட்டார் என்றெல்லாம் சொன்னார்கள். அவர் வந்து பார்த்தது கருணையினால் அல்ல. நளினியின் வாயைக் கிளறி வேறு ஏதாவது செய்திகள் அகப்படுகின்றனவா என்று அறிந்துபோகவே வந்தார். அவர் வந்து போனபிறகுதான் தமிழர்கள் மீது தாக்குதல்கள் அதிகப்படுத்தப்பட்டன. சிவசங்கர மேனனும் எம்.கே.நாராயணனும் கொழும்புக்குப் போய் ‘சண்டையை நிறுத்து’என்று சொல்லிவிட்டு வந்தபிற்பாடுதான் அகோரமான எறிகணை வீச்சு வன்னிப்பகுதியில் ஆரம்பித்திருக்கிறது. பாதுகாப்பது போல காட்டிக்கொண்டு அழிப்பதற்குச் சூழ்ச்சி செய்கிறார்கள்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்காதீர். தமிழீழ விடுதலைக்கு ஆதரவளிப்பவர்களுக்கு வாக்களியுங்கள். எவ்வளவு ஒரு அரிய சந்தர்ப்பத்தை, இணைந்து போராட்டம் நடத்தவேண்டிய காலகட்டத்தை இந்த அரசியல் கட்சிகள் தமது சுயநலங்களின்பொருட்டு பாழ்படுத்திவிட்டன. இப்போதும் மக்களாகப் பார்த்து ஏதாவது செய்தாக வேண்டும். ஆறரைக்கோடி தமிழர்கள் என்று கூவிக்கொண்டிருக்கிறோம் நாம். ஒரு ஐந்து இலட்சம் தமிழர்கள் வீதிகளில் அமர்ந்து எமது சகோதர்களுக்காக ஒன்றாகப் போராடினால் அரசு என்ன செய்யும்? எல்லாம் இயக்கமற்றுப் போகும் ஒரு சூழலில் அவர்கள் நடவடிக்கை எடுத்துத்தானே ஆகவேண்டும்?

விடுதலைப் புலிகள் பின்னடைந்து விட்டார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நியாயமான விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு இல்லை.


கவிஞர் பா.ராமச்சந்திரன்

இன்று இரண்டு சிக்கல்களை எதிர்கொள்ளவேண்டியவர்களாக நாம் இருக்கிறோம். ஒன்று தேர்தல். மற்றையது ஈழச்சிக்கல். இரண்டும் இன்றைக்கு ஒன்றாகக் கலந்துவிட்டன. ஏறக்குறைய தமிழீழம் அடைந்துவிட்டோம் என்று சொல்லத்தக்க நிலையில் விடுதலைப் போராட்டம் நின்றுகொண்டிருந்தது. எப்படியோ கையாண்டிருக்கவேண்டிய விடயத்தை கலைஞர் சீர்குலைத்துவிட்டார்.

இதில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு அனுப்புகிற பிரதிநிதிகள் எவரையும் தமிழர்களாக அல்லாமல் வேற்று மொழிக்காரர்களாகப் பார்த்து மத்தியிலே இருக்கிற காங்கிரஸ் அரசு அனுப்பிக்கொண்டிருக்கிறது. இதைச் செய்துகொண்டிருப்பவர் சோனியா காந்தி. பஞ்சாபியர்களுக்கு ஏதாவது அனர்த்தம் நிகழ்ந்தால் மத்திய அரசு அதைத் தீர்க்க ஆவன செய்யும். குஜராத்தியர்களுக்கு நடந்தால் கொதித்தெழும். ஆனால், தமிழர்களுக்கு நடக்கும்போது பாராமுகமாக இருக்கும். இதுதான் நம்மை ஆளும் அரசாங்கத்தின் பாரபட்சமான முகம்.

இலங்கையிலே நடந்துகொண்டிருப்பது போரல்ல; இனப்படுகொலை. இந்நிலையில் கலைஞர் காலை ஐந்தரை மணிக்கு அண்ணா சமாதியருகில் போய் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்து மதியம் பன்னிரண்டு மணிக்கு அதை முடித்துவிட்டுத் திரும்புகிறார். கேட்டால் கையறு நிலையாம். ஒன்றரைக்கோடிப் பேர்களே இருக்கக்கூடிய சிங்களவர்களுக்குத் தலைமை தாங்குகிற ராஜபக்சே எம்மை எள்ளி நகையாடி கைகொட்டிச் சிரிக்கிறான். உலமெல்லாம் பரந்து பத்துக்கோடி தமிழர்கள் இருக்கிறோம். தமிழகத்தின் மக்கள் பிரதிநிதியாக இருக்கிற முதலமைச்சருக்கு கையறு நிலையாம். அவருக்குப் பதவியைப் பற்றிக் கவலை. எங்களிடம் தூக்கியெறிவதற்குப் பதவிகள் இல்லை.

இலங்கையில் தனிநாடு அமைந்தால், தமிழ்நாட்டிலும் அப்படிக் கேட்போம் என்று சொல்வது தவறு. வடநாட்டில் தமிழனுக்கு உரித்தான எத்தனையோ இருக்கின்றன. நாம் ஏன் பிரித்துவிடு என்று கேட்கப்போகிறோம்.
இலங்கை என்றைக்கு இந்தியாவுக்குச் சார்பாய் நடந்துகொண்டிருக்கிறது. அப்படி ஒரு வரலாறே இல்லை.

ஆயுதத்தைக் கையில் வைத்திருப்பதனால் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்துகிறீர்களே… அந்த ஆயுதம் எங்கிருந்து வந்தது? அது அவர்களுடைய கைகளில் திடீரென முளைக்கவில்லை. தரப்படுத்தல் போன்ற காரணங்களால் அவர்களது கைகளில் ஆயுதங்களைத் திணித்தவர்களே (அரசாங்கம்) நீங்கள்தானே…! மக்கள் யாரைப் பின்தொடர்கிறார்களோ, யாருடைய வார்த்தையை வழிமொழிகிறார்களோ, யாரை நம்பியிருக்கிறார்களோ.. அவர்கள்தான் உண்மையான தலைவர்கள். நீங்களெல்லாம் பெரிய பொய். பதவிக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுக்கிறவர்கள்.


ஒன்றுமே செய்யாமல் காங்கிரஸாரின் கால்களைப் பிடித்துக்கொண்டு, “ஈழம் அமைந்தால் மகிழ்வேன்”என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை! ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துகொண்டு “உணவு அனுப்பினேன்; உடைகள் அனுப்பினேன்; தந்தி அனுப்பினேன்”என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள் வெட்கம்! கலைஞரே! உங்கள் உண்ணாவிரதத்தை மக்கள் கேலிசெய்கிறார்கள். நீங்கள் உண்ணாவிரதம் இருக்காதீர்கள். ஒன்றும் செய்யமுடியாதவருக்கு எதற்குப் பதவி? ‘கையறு நிலை… கையறு நிலை’என்று ஏன் புலம்பிக்கொண்டிருக்கிறீர்கள்? சோனியாவின் ஏவலாளியாக இருப்பதற்கு வெட்கப்படுங்கள்.


ஓவியர் புகழேந்தி

தமிழீழப் போராட்டமும், தமிழீழ மக்களும் ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறார்கள். எங்களால் நிம்மதியாக உண்ணவோ உறங்கவோ முடியவில்லை. கொத்துக் குண்டுகளைப் போட்டுக் கொல்கிறார்கள். சதைப்பிண்டங்களாகவும், தலையற்ற முண்டங்களாகவும் இரத்தச் சகதியில் எமது சொந்தங்கள் கிடப்பதைப் பார்த்து கண்ணீர் வடிக்கின்றோம்.
உலகத்தின் கவனம் நமது போராட்டத்தின்மீது திரும்பியிருக்கிறது. புலம்பெயர்ந்து உலகெங்ஙணும் பல நாடுகளிலும் வாழும் ஈழத்தமிழர்கள் அந்தந்த நாடுகளில் ஆட்சியிலுள்ளவர்களின் கவனத்துக்கு இந்தப் போராட்டத்தின் நியாயப்பாட்டை எடுத்துச்சென்றிருக்கிறார்கள். கொட்டும் பனியிலும் கொதிக்கும் வெயிலிலும் போராடி, உலகத்தின் கவனத்தை இந்த மனிதப் பேரழிவின்பால் திருப்பியிருக்கிறார்கள்.

இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ மக்களுக்கும் இடையிலான போராட்டமாக இதைப் பார்க்கமுடியாது. இது அண்ணன் பிரபாகரனுக்கும் உலகத்திற்குமிடையிலான போராக விரிவடைந்திருக்கிறது. ஒபாமா உள்ளிட்ட உலகத் தலைவர்களது கவனம் நமது மக்கள் போராட்டத்தின்பால் திரும்பியிருக்கிறது. உண்மையில் நமது களம் விரிந்திருக்கிறது. போராட்டம் உன்னதமான வளர்ச்சியைப் பெற்றிருக்கிறது. இது வென்றே தீரும். உண்மையான, நியாயப்பாட்டோடுகூடிய விடுதலைப் போராட்டத்தை யாராலும் மழுங்கடித்துவிடமுடியாது. நாம் ஒருக்காலும் தோற்றுப்போய்விட மாட்டோம்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் என்று மட்டும் இதைப் பார்க்கக்கூடாது. ‘நமக்கென்றொரு நாடு’என்ற உணர்வு எல்லோருக்குள்ளும் வரவேண்டும். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் இதை மக்கள் போராட்டமாகப் பரிணமிக்கச் செய்திருக்கிறார்கள். இந்தப் போராட்டத்தின் திறவுகோல் தமிழ்நாட்டில்தான் இருக்கிறதென்று இதுகாறும் நாங்கள் நம்பினோம். ஆனால், புலம்பெயர்ந்த தமிழர்கள்தான் அதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆறரைக் கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில் ஏன் போதியளவு எழுச்சி ஏற்படவில்லை? உலகத்தைத் திரும்பிப் பார்க்கும்படியான போராட்டங்களை நாம் நடத்தியிருக்கவேண்டும்.

மாபெரும் தத்துவங்களாகச் சொல்லப்படும் மாவோயிசம், கொம்யூனிசம், சோஷலிசம் போல ‘பிரபாகரனிஸம்’என்று ஒன்று இன்றைக்கு உருவாகிக்கொண்டிருக்கிறது.

நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகளாகத் தொடர்ந்தும் இருக்கவேண்டுமென மத்திய அரசாங்கம் எதிர்பார்க்குமானால், இந்தத் இனவழிப்பைத் தடுத்துநிறுத்தவேண்டும். ஒருவகையில் பார்த்தால் தமிழ்நாட்டு மக்களை சரியான நிலையில், சரியான திசையில் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது ஈழவிடுதலைப் போராட்டம்.


கூட்டத்தை ஒழுங்கமைத்து நடத்திக்கொண்டிருந்தவர் சொன்னார்:

பலர் வியட்னாம் விடுதலைப் போராட்டத்தோடு ஈழவிடுதலைப் போராட்டத்தை ஒப்புநோக்கிப் பேசுகிறார்கள். ஆனால், அதன் பின்;னால் சீனா போன்ற பலம் பொருந்திய நாடுகள் பின்புலமாக, பக்கபலமா நின்றன. தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு உதவி செய்ய யாருமே இல்லை.


கவிஞர் கருப்பண்ணல் (பெயர் சரியாக காதில் விழவில்லை)

“பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தால் சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு”
கருணாநிதி செத்துபோனவர். அவரைப் பற்றி இங்கு எதற்குப் பேசுகிறீர்கள்? கலைஞர் மிக அழகான நாடகம் ஒன்றை ஆடியிருக்கிறார். அதுவும் எங்கே? அண்ணா சமாதியின் முன்னால்.


இதனிடையில் மின்சாரம் தடைப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கு எரிக்கும் வெயிலைப் பார்த்துக்கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தோம்.


(இன்னும் இருக்கிறது)
பதிவு நினைத்ததுபோலில்லை. நீண்டுகொண்டே போகிறது.

5.01.2009

எல்லாவற்றுக்கும் பணம்! அரசியலில் பிணம்!-இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதத்தில் கலைஞர் பற்றி ஆவேச உரை


உண்ணாவிரதம் என்றாலே நினைவுக்கு வருவது சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையே. புலம்பெயர்ந்து தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களால் நேற்று (30.04.2009) சேப்பாக்கத்தில் ஒரு உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்பட்டது. அதில் பல பிரபலங்களும் பிரமுகர்களும் கலந்துகொண்டு உரையாற்றினர். சென்னையின் வாகன நெரிசலை நீந்திக் கடந்து விருந்தினர் மாளிகையருகில் சென்று சேர்ந்தபோது, நடராஜன் (சசிகலாவின் கணவரே) பேசிக்கொண்டிருந்தார். வெளிநாடுவாழ் ஈழத்தமிழர்கள் இந்நிகழ்வு குறித்து அறிய ஆவலோடிருப்பார்கள் என்பதனால் அதனைப் பதிவாகத் தருகிறேன்.


பகுதி - 01
நடராஜன்:

முத்துக்குமார் தன்னை நெருப்புக்குத் தின்னக் கொடுத்தபோது, இவர் (கலைஞர்) எங்கே இருந்தார்? 13 இளைஞர்கள் ஈழப்பிரச்சனைக்காகத் தங்களை எரித்துக்கொண்டபோது வராத உணர்ச்சி இவருக்குத் திடீரென எங்கிருந்து பீறிட்டுக் கிளம்பியது? ஷேக்ஸ்பியரின் நாடகத்தைக் காட்டிலும் பெரிய நடிப்புடன் கூடிய இந்நாடகம் மிகக் கேவலமானது. அந்த நாடகத்தில் வரும் டயபாலிக் வில்லனைப் போல நடந்துகொண்டிருக்கிறார்.
ஒரு முதலமைச்சருக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தத்தவறி, கையாலாகாத்தனமாக, ஏதோ காற்றுவாங்கப் போவதுபோல அண்ணா சமாதிக்குப் போய் உண்ணாவிரதம் இருக்கிறார். இவர் உண்ணாவிரதம் இருந்து போர்நிறுத்தம் ஏற்பட்டதாம்! ‘போர்நிறுத்தம் செய்யப்படவில்லை’என்று ராஜபக்சே சி.என்.என்.க்குப் பேட்டி கொடுத்துவிட்டான். இப்போது முகத்தை எங்கே கொண்டுபோய் வைத்துக்கொள்வது. இப்போதும் நூற்றுக்கணக்கில் அங்கே மக்கள் செத்துக்கொண்டுதானிருக்கிறார்கள். இந்த இலட்சணத்தில் “எங்களைப் பொறுத்தவரை இது போர்நிறுத்தந்தான்”என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறார் ப.சிதம்பரம்.

‘13ஆம் திகதிவரை (தேர்தல் வரை) கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்’என்று ராஜபக்சேவுடன் இரகசிய ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ராஜபக்சே செய்வது சரியானால், அந்தப் பிரதேசத்தினுள் பத்திரிகையாளர்கள் செல்வதைத் தடுப்பது ஏன்? முதலமைச்சரே! 80 வயதுக்குப் பிறகு மூளை மங்கும் என்று சொல்லப்படுகிறது. உங்களுக்கு 85ஆகிறது. அரசியலிலிருந்து சற்றே விலகியிருங்கள்.

பதினொரு மணியளவில் பழ.நெடுமாறன் ஐயா அவ்விடத்திற்கு வந்தார். கூட்டம் மொத்தமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது. அது உண்மைக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு போல தோன்றியது.

நடராஜன் தொடர்கிறார்:

ஈழத்தமிழர் படும் இன்னல்களை விபரித்து ஒரு குறுந்தட்டு (சி.டி) வெளிவந்திருக்கிறதாம். அதைத் தேடி எங்கள் வீட்டிற்கு காவற்துறையினர் வந்திருந்தனர். ஒரு மாநில அரசாங்கத்திற்கு அதனால் என்ன தொந்தரவு? உண்மையைத்தானே அந்தக் குறுந்தட்டில் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்? ஆட்சியிலே இருக்கிறவர்களிடம்தான் கள்ளப்பணம், கறுப்புப்பணம் இருக்கிறது. எங்கள் வீடுகளில் வந்து என்ன தேடுகிறார்கள்?
‘வடக்கே காங்கிரஸ் இனி ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை’ என்று அவர்களே ஒத்துக்கொண்டுவிட்டார்கள். இங்கே இருக்கும் கபோதிகளுக்குத்தான் அது இன்னமும் புரியவில்லை. காவற்துறையினரே! வரலாற்றிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுங்கள். சீமான் மீது குற்றமில்லை என்று நீதிமன்றத்தில் சொல்லி அவரை விடுதலை செய்துவிட்டார்கள்.

மத்திய அரசுக்கு ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். இலங்கையில் நடைபெறும் இனவழிப்புக்குத் துணைபோன குற்றத்திற்காக நீங்கள் ஒருநாள் சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்படுவீர்கள்.

அடுத்து பழ.நெடுமாறன் ஐயா பேசினார்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் உங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் நீங்கள் உண்ணாவிரதம் இருக்க முன்வந்திருக்கிறீர்கள். நாங்கள் உங்களுக்காகப் போராட வேண்டுமே தவிர, இங்கே இருக்கிற நீங்கள் உங்களை வருத்திக்கொள்ளக் கூடாது. மத்திய அரசு உங்களைக் காப்பாற்றத் தவறிவிட்ட நிலையில் நீங்களாகக் களத்தில் இறங்கியிருக்கிறீர்கள். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் உங்களுக்காகத் தொடர்ந்து போராடும்.
அங்கே ஈழத்தில் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது போன்ற மாயையைத் தோற்றுவிக்க கருணாநிதியும், ப.சிதம்பரமும் முயற்சி செய்கிறார்கள். இந்தப் பிரச்சனையைத் திசைதிருப்புவதே அவர்களது நோக்கம்.
கலைஞர் அரசியல் நாடகங்களில் நடித்துப் பழக்கப்பட்டவர். இப்போது முதலமைச்சராக வந்தபின்னும், அரசியலிலும் நடிக்கிறார். நீங்கள் நினைத்திருந்தால் இந்தப் போரை எப்போதோ நிறுத்தியிருக்க முடியும்? அதற்கான அதிகாரம் கையிலிருந்தும் அதை நீங்கள் செய்யத் தவறிவிட்டீர்கள். ஆளுங்கட்சியில் இருக்கும் நீங்கள் மக்களை ஏமாற்றுவதற்காக உண்ணாவிரதம் என்றொரு நாடகத்தை ஆடுகிறீர்கள். உங்கள் நாடகங்களை இனங்கண்டுகொள்ளுமளவுக்கு மக்கள் தேறிவிட்டார்கள்.

ஜனநாயக ரீதியில் நான் பேசுவதனால் சட்டம், ஒழுங்கு கெடும் என்று பல இடங்களில் எனக்குத் தடைவிதிக்கிறீர்களே… நீங்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, உங்கள் தொண்டர்கள் கலவரம் செய்தார்களே… அப்போது சட்டம், ஒழுங்கு சீர்குலையவில்லையா? சட்டத்தை மீறும் செயலில்லையா? ஜனநாய விரோதப் போக்கில்லையா?

சிவாஜிலிங்கம் மீது பொய்வழக்குப் போடப்பட்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த சோனியா காந்திக்காக நீங்கள் பிரச்சாரம் செய்யலாமென்றால், எங்கள் சகோதரர் சிவாஜிலிங்கம் இலங்கையில் நடப்பதை அம்பலப்படுத்தினால் அது தவறா? அவர்மீது கைவைத்தால் ஒட்டுமொத்தத் தமிழகமும் கொதித்தெழும் என்பதை நான் உங்களுக்குச் சொல்லிவைக்கிறேன்.

மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வருமானால், அவர்கள் நேரடியாக இந்திய இராணுவத்தை இலங்கையில் இறக்குவார்கள். அதன்பிறகு நேரும் அனர்த்தம் பெரிதாக இருக்கும்.

இரண்டாயிரம் ஆண்டுகால வரலாற்றில் பிரபாகரனைப் போலொரு வீரன் தோன்றியதில்லை. அவருடைய வழிகாட்டலில், அவருடைய காலத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு மீட்சி கிடைக்கும். சிங்கள இராணுவம் தோற்கப்போவது உறுதி. விடுதலைப் புலிகள் வெல்லப்போவதும் உறுதி.

இதனிடையில் கூட்டத்தை ஒழுங்கமைத்துக்கொண்டிருந்தவர் (அவர் பெயர் தெரியவில்லை) ஒரு செய்தியைக் கூறினார். அதாவது, கும்மிடிப்பூண்டி முகாமிலிருக்கும் அகதிகளுக்கு (இப்படி எழுதுவது வருத்தமாக இருக்கிறது) இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு முதலில் வட்டாட்சியர் அனுமதி வழங்கியதாகவும், கூட்டம் நடப்பதற்கு முன்தினம் இரவு அந்த அனுமதியை மீளப்பெற்றுவிட்டதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

இதனிடையில் பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களைச் சேர்ந்தவர்கள், அங்கே வந்திருந்த மக்களில் சிலரை கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள். சிலர் பதில்சொல்ல மறுத்தார்கள். ‘கியூ பிரான்ச்’ பிரச்சனை பண்ணினால் பிறகென்ன செய்கிறது?’என்று கதைத்துக் கொண்டார்கள். வாயைத் திறக்க அஞ்சும் சூழலை அங்கு காணமுடிந்தது.


அடுத்து வின் தொலைக்காட்சி இயக்குநர்(அப்படித்தான் காதில் விழுந்தது)

இந்தியா உண்மையில் அடிமைப்பட்டுக்கிடக்கிறது. இந்தியாவை எங்கிருந்தோ வந்த சோனியா காந்தி ஆண்டுகொண்டிருக்கிறார். ஏன் இந்தியாவை ஆளத்தக்க தகைமையுடைய ஒரு இந்தியன் கூட இந்த நாட்டில் இல்லையா? பாகிஸ்தானிடம் துயர்ப்பட்டுக்கொண்டிருந்த பங்களாதேசுக்கு ‘இந்தியாவின் மகள்’இந்திரா காந்தி விடுதலை பெற்றுக்கொடுத்தார். ஆனால், சோனியா காந்தியிடம் அந்த இரக்கம் இல்லை.

சிவாஜிலிங்கத்தின் மீது சட்டம் பாய்ந்திருக்கிறது. அவரை நாடுகடத்தும் வேலைகள் நடக்கின்றன. சிவாஜிலிங்கம் எங்களுக்கு உறவு. இத்தாலி ராணி சோனியா உங்களுக்கு என்ன உறவு?
விடுதலைப் போராளிகள் இறந்துபடக்கூடும். ஆனால், விடுதலைப் போராட்டங்கள் தோற்றதாக வரலாறு கிடையாது. நிச்சயம் ஈழம் மலர்ந்தே தீரும்.


நாங்கள் இருந்த இடத்தில் இருக்கைகள் போதாமற் போய்விட்ட காரணத்தால், சாலையின் எதிர்ப்புறத்தில் நாற்காலிகள் போடப்பட்டு அங்கும் மக்கள் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.


அம்பேத்கர் புரட்சிப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கிருஷ்ணப் பறையனார் அடுத்து உரையாற்றினார்.


‘என்னுடைய உண்ணாவிரதத்தினால் போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது பார்’ என்று காட்டுவதற்காக கலைஞர் நாடகமாடினார். அது ஒரு திசைதிருப்பல் நாடகம். தனது ஆட்சியை, மாட்சியைத் தக்கவைத்துக்கொள்ள கலைஞர் ஆடிய நாடகம். நெடுமாறன் ஐயா வந்தபோது எல்லோரும் எழுந்து நின்றதைப் பார்த்தோம். அவர் உண்மையே பேசுகிறவர். அவருக்குண்டான மரியாதை எப்போதும் இருக்கிறது.

எங்களிடம் அதிகாரம் இல்லை. நாங்கள் உண்ணாவிரதம் இருக்கலாம். ஆனால், கருணாநிதி இருக்கலாமா? இப்படி பொய்மையின் உருவமாக இருக்கிறாரே… என்று நினைத்து எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. “அவரிடம் எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. ஆனால், அவர் நல்லவர் இல்லை”என்று எம்.ஜி.ஆர். அன்று சொன்னார். அது எவ்வளவு உண்மை! ஈழத்தமிழர் பிரச்சனையில் அவரது நடிப்பு தெரிந்துபோயிற்று.
ஈழத்தமிழர்கள் படுகின்ற இன்னல்களைக் குறித்து கருணாநிதி மகிழ்ச்சி அடைகிறார்போலும். மத்தியில் ஆள்பவர்களின் சொல்லைக் கேட்டால்தான் அவர் ஆட்சியில் நீடித்திருக்கமுடியும்.

எதைச்சொன்னாலும் பொய்! ஆள்பவன் பொய் சொல்லலாமா?
இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்களாம். தொலைக்காட்சிகளில், பத்திரிகைகளில் விளம்பரத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார் இவர். கேவலம் எல்லாவற்றுக்கும் பணம்! அரசியலுக்குப் பிணம்! அத்தனை கோடி பணமும் உங்கள் குடும்பத்தில்தானே கொட்டிக்கிடக்கிறது. அறிஞர் அண்ணாவுக்கு அருகில் நிற்கத் தகுதியற்றவர் கருணாநிதி. இனி உங்கள் பொய் வாழாது. இனி எம்மை ஆளாது.

திருமாவளவனை எங்கள் தலைவன் என்று தூக்கிவைத்துக் கொண்டாடினோம். ஒரு எம்.பி. சீட்டுக்காக ஒட்டிக்கொண்டிருக்கிறார்.

சோனியா என்பவர், தன்னுடைய கணவர் ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாக எத்தனை உயிர்களைப் பலியெடுக்கப்போகிறாரோ தெரியவில்லை.
இலவசம் இலவசம் என்று கொடுப்பதனால் மாநிலம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது. இலவசம் என்ற வார்த்தை சோம்பேறிகளை உருவாக்குகிறது. எல்லாம் இலவசமாகக் கிடைத்து பிறகொருநாள் கிடைக்காமல் போகிறபோது, குற்றச்செயல்கள் அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது. இலவசங்களுக்கப் பதிலாக வேலை வாய்ப்புகளை வழங்கு என்றுதான் நாம் கேட்கிறோம்.
அவருடைய கட்சிக்காரர்களே அவரைத் திட்டுகிறார்கள். காசு கொடுக்கவில்லையென்றால் ஒரு பயலும் நிற்கமாட்டான்.

இயக்குநர் மனோஜ்குமார் அடுத்து பேசினார்.

நான் புலிகளை நேசிக்கிறேன். நான் புலிகளை ஆதரிக்கிறேன். நான் அவர்களைப் பாதுகாப்பேன். ஏனென்றால், என் தேசத்தினுடைய மிருகம் புலிதானே….
இலங்கையில் போர்நிறுத்தம் என்பது வெறும் கண்துடைப்பு நாடகம். ‘போர்நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது’என்று, இலங்கையில் போடப்பட்ட குண்டைவிடப் பெரிதாகத் தூக்கி தமிழகத்தாரின் தலைகளில் போட்டார்கள். இந்த மாநிலத்தை ஆளும் ஒரு முதலமைச்சர் இப்படி ஒரு பொய்யைச் சொல்லலாமா?

அடுத்து, அவர் தன்னுடைய உறவுகள் இலங்கையில் இருந்து புலம்பியழுவதை அப்படியே அழுதுகாட்டினார்.
“சிங்களவன் குண்டுபோட்டுக் கொல்வது உங்க காதுல கேட்கிறதாய்யா? இலவச அரிசி குடுக்கிறீங்களாமேய்யா… அதுல கொஞ்சம் இங்க அனுப்பிவைச்சு எங்களுக்கு வாய்க்கரிசி போட்டுடுங்கய்யா” என்று ஆரம்பித்து சிறிது நேரத்திற்கு ஒரே அழுகைக் குரலில் நிறையப் பேசினார். கூட்டத்திலிருந்த பெண்களில் சிலர் விம்மியழுதார்கள்.

அறிவொளி இயக்க மாநிலச் செயலாளர் இன்சுவை பேசுகையில்,

இங்கிருந்து வேலைக்காகக் கொண்டுசெல்லப்பட்டவர்களே அங்கு வாழும், தற்போது இன்னல்படும் தமிழர்கள் என்ற தொனிப்படப் பேசினார். (என் புரிதல் தவறாக இருக்கலாம்) கலைஞர் ஆடியது ஒரு நாடகம். தமிழகம் எழுச்சியுறப் போராடுவோம்.


(இன்னமும் இருக்கிறது)
பதிவு நீளமாக இருப்பதால் இரண்டு பகுதிகளாகப் பிரித்துப் போடுகிறேன்.