பாதுகாப்பு வலயங்கள்
கொலைக்களங்களாவதைப் பற்றி
சர்வதேசம் யாதொன்றும் செய்வதற்கில்லை.
அறிக்கை விடுவதில்
உள்ளுர்க்காரர்களுக்கு சளைத்ததாயில்லை
ஐ.நா. சபை.
எப்போதோ தயாரான கப்பல்களின் நங்கூரங்கள்
சிக்கிக்கொண்டிருக்கின்றன
தயக்கத்தின் வேர்களில்.
சர்வதேசத்தின் செவிட்டுச் செவிகள்
காத்துக்கொண்டிருக்கின்றன
எப்போதும் வரமாட்டாத ஒரு செய்திக்காக.
ஒரு மரணம் = சமாதானம் என்ற சமன்பாட்டை
மூன்று முட்டாள்களுடன்
சில சுயமோகிகளும் நம்பிப் பரப்புகிறார்கள்.
புதிய சண்டியனோடு பொருதமுடியாமல்
வெள்ளை மாளிகை கனவானாகி
அறிக்கை விடுகிறது.
இந்துசமுத்திரத்தின் செல்லப்பிள்ளை
துள்ளிக்கொண்டிருக்கிறது மமதையில்
சாதாரண காலத்திலேயே கையில் பிடிக்கமுடியாது
சங்கார வெறியில்
அகங்காரம் உரத்து அறிவிக்கும் உளறல்களுக்கு
‘ஜெயவேவா’பின்னணி இசைக்கிறது.
தலைநகர வீதிகளில்
பொங்கி வழிகிறது
தமிழர்களின் குருதிகலந்த
‘கட்ட’ சம்பலும் பாற்சோறும்.
வெட்டப்படப்போகும் ஆடுகள் பாவம்
மஞ்சளில் குளிக்கின்றன.
இங்கும் (தமிழகத்தில்) யாவரும் நலம்!
தங்களை விற்றுக்கொண்டவர்களும்
விலைகொடுத்துப் பெற்றுக்கொண்டவர்களும்
உதடுகளை அகலவிரித்துக் களிக்கின்றனர்.
பிரியாணிகளும் பியர் போத்தல்களும் இணைந்து
சுட்டுவிரல் அழுத்த
கொட்டி அள்ளியது கூட்டுக்களவு.
தமுக்கடித்து ஆடுகின்றனர் துதிபாடிகள்
தொண்டரடிப் பொடிகளின் தோள்முனைகளில்
சிறகுகள் முளைத்ததாகவும் தகவல்.
பொய்மையாளரைப் பாட
கவிக்குயில்களும் பேரரசுகளும்
கனத்த தொண்டைகளை
மேலும் கனைத்துக்கொள்கின்றனர்.
இனி கைதட்டத் தோதான வரிகளைத்தேடவேண்டியதில்லை.
‘வீழ்க’என்றாலும் விசுக்கென்றெழுந்து
கையொலி எழுப்ப அனைவரும் தயார்!
சில தொலைக்காட்சிகளும் பத்திரிகைளும்
பரப்புரைகளில்
கோயபல்சின் ‘குளோனிங்’ஆக போட்டியிடுகின்றன.
புரட்சியின் நெருப்பு
மண்ணிற்குள் மறைந்து கனிகிறது
வைரமாய்.
‘எங்களைப் பொறுத்தளவில் இனி விடுதலைப்புலிகள் இல்லை’என்ற கோத்தபாயவுக்கு நன்றி!
இல்லாதவர்களால் குண்டுகளாக முடியாது
இல்லாதவர்களால்
உங்கள் வேட்டிகள் நனைவது சாத்தியமில்லை
இல்லாதவர்களால்
உங்கள் கனவுகளுள் புகுந்து இனிஅச்சுறுத்த முடியாது.
உங்கள் கண்ணெதிரில் கட்டிடங்கள்
யாருமற்றவர்களால் தகர்ந்துசரிவது எத்தனை அழகு!
மரணமற்றவனின் மரணத்தை
எதிர்பார்த்துக் காத்திருக்கிறவர்களே!
எதிர்வு கூறுவோரே!
தேம்ஸ் நதிக்கரையோரத்தில் அவனே நடந்து செல்கிறான்
பாரிஸின் வீதிகளில் அவன்தான் பாடிக்கொண்டிருக்கிறான்
ரொறன்ரோவில்
அவனொரு தொழிற்சாலையில் இயங்கிக்கொண்டிருக்கிறான்
பேர்ளினில் நெருப்பொளிர்வது யாருடைய விழிகளில்?
சூரிச்சில்
டென்மார்க்கில்
நோர்வேயில்
ஈரோட்டில்
நீங்கள் யாரென்று நினைக்கிறீர்கள்?
நினைவிருக்கட்டும்
இல்லாதவர்கள் என்று உங்களால் சொல்லப்படுபவர்கள்
வரலாற்றில்
எப்போதும் இருந்துகொண்டுதானிருக்கிறார்கள்