8.28.2010

ஒரு பயணம் ஒரு புத்தகம்
அன்புள்ள மாதங்கி,

கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனால் மட்டுமென்றில்லை; ஏன் என்பதைக் கடைசியில் சொல்கிறேன். எதிரில் இருக்கும் ஆளோடு கதைப்பதைக் காட்டிலும் கடிதத்தில் நெருக்கமாக உரையாட முடிகிறது. ஆனால், இப்போதெல்லாம் கைப்பட யார்தான் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்? கணினியில் தட்டச்சி அனுப்புவதை மின்னஞ்சல் என்று அழகாகச் சொல்லிக்கொண்டாலும் இயந்திரவரிகள் என்பதே அதற்குப் பொருந்தும். ஒரு எழுத்து எழுதுவதாயிருந்தாலும் சுழியும் வளைவும் விசிறியும் நினைத்துத் தவிர்த்துவிடுகிறேன்.

எந்த வடிவத்தில் எழுத நினைத்தாலும், அதற்குள் இழந்த நிலம் எங்ஙனமோ புகுந்துவிடுகிறது. கண்ணீரும் இரத்தமும் சொரியவாரம்பித்துவிடுகிறது. அலைவுறும் சனங்களின் முகங்கள் எழுத்தாக உருத்திரளத் தொடங்குகின்றன. ‘விடுதலைஎன்ற சொல் தண்ணீரில் எழுத்தாகிவிட்டது. இழிவுசெய்யப்பட்டதன் கழிவிரக்கம் எழுதித் தீராதது. எல்லோரையும் சாகக்கொடுத்துவிட்டு தொலைவில் மூசிச் சுழன்றெரியும் தீயின் பெருநாக்கைப் பார்த்தபடி மயான மண்டபத்தில் அமர்ந்திருப்பதான மனோநிலை என்றும் இப்போதிருப்பதைச் சொல்லலாம்.

எல்லாம் ஓய்ந்துபோனதாக உணர்கிற இந்த இருண்ட காலத்தில் இதே தொனியில் தொடர்ந்து எழுதும் எழுத்தில் சலிப்பின் நிழல் படர்வதை அவதானிக்க முடிகிறது. ‘ஒப்புக்கு மாரடிக்கிறகுற்றவுணர்வும் நாளாக நாளாக மிகுந்துவருகிறது. மேலும், ஈழச்சிக்கலில் கையாலாகாமல் எழுதிக் கிழித்ததைத் தவிர என்ன கண்டோம்; ‘புலிவால்என்று பெயர்பெற்றதன்றி. புலி அழிக்கப்பட்டதெனில், வால் மட்டும் காற்றில் தனியாக இழைந்துகொண்டிருக்கலாகுமோ?

அபூர்வமாக எப்போதாவதுதான் மனம் பூக்கிறது. அண்மையில் பூத்தது இரயில் பயணத்தின்போது. (இரயிலுக்கு புகையிரதம் ஈடாகாது இல்லையா?) முதல்நாளிரவு பெய்த மழையில் பச்சையொளி விசிறி அசைந்துகொண்டிருந்த வயல்வெளிகளையும் மழை மிஞ்சிய பெருமரங்களையும் மேகங்கள் ஒய்யாரமாகத் துஞ்சிக் கிடந்த மலைகளையும் கண்பருகி கண்சொருகும் பயணம் வாய்த்தது. தனதழகை உணராத குழந்தைபோல இயற்கை செழித்துக் கிடந்தது. அதன்முன் மனிதர் ஒன்றுமேயில்லை என்று தோன்றியது. அப்படியொரு பச்சை. அப்படியொரு சோபிதம். அப்படியொரு ஒயில். அப்படியொரு வாளிப்பு. புகாருள் வரைந்து வைத்திருந்தாற்போலிருந்த புகையிரத நிலையங்களில் மழை பொறுக்கிக்கொண்டிருந்த புறாக்களைப் பார்த்தபோது அனாரின் கவிதையொன்று நினைவுக்கு வந்தது. தண்டவாள இரும்பில் தங்கத்துளியாகத் தொங்கிக்கொண்டிருந்தது மீத மழை. மழை கழுவிவிட்டிருந்த கருநீள வீதியில் அத்தனை அதிகாலையில் சைக்கிளில் போய்க்கொண்டிருந்தவன், இரயிலின் கண்ணாடிச் சட்டகத்துள் கச்சிதமான சித்திரமாக அடங்கினான். இந்த பத்தியில் மட்டும் இதுவரையில் ஐந்து இடங்களில்மழைதூறியிருக்கிறது. எல்லோருக்கும் மழையைப் பிடிக்கிறது. ஆனால், சில மனிதர்களைப்போல தனக்கு எந்த ஊரைப் பிடிக்கிறதோ அங்குதான் மழையின் கால்களும் சென்று இறங்குகின்றன போலும். ‘வடக்கில் வசந்தம்கொஞ்சம் மாற்றுக் குறைந்தாற்போலவே இருக்கிறது. சிங்களவர்கள் அதிகமும் வாழும் தென்பகுதி ஆறுகளின் கருணையால் அப்படிப் பொலிகிறது.

நினைத்ததற்கும் எழுதுவதற்கும் இடையிலிருக்கும் கடக்கமுடியாத இடைவெளியைப் போலவே வாசிக்க நினைத்ததற்கும் வாசித்ததற்கும் இடையில்கூட இடைவெளி அதிகந்தான். ‘வண்ணதாசன் கடிதங்கள்உம், ‘கிருஷ்ணன் வைத்த வீடும் உள்ளடங்கலாக இம்முறை அறுபத்தொரு புத்தகங்களை எடுத்துவந்திருந்தேன். ஒவ்வொரு பயணத்தையும் ஒவ்வொரு புத்தகங்களுடனேயே நினைத்துப் பார்க்க முடிகிறது. புத்தகவாசனை இல்லாத பயணங்கள் நினைவில் நிற்பதுமில்லை. மேற்கண்ட இரயில் பயணத்தை என்றைக்கும் ஞாபகத்தில் இருத்தியதுவண்ணதாசன் கடிதங்கள்’. வண்ணதாசன்(கல்யாண்ஜி), நண்பர்களுக்கு (33 பேருக்கு) எழுதிய கடிதங்களின் தொகுப்பே அந்நூல். நாட்குறிப்புகளுக்கும் கடிதங்களுக்கும் எப்போதுமே தனித்த வசீகரம் உண்டு. அவை அந்தக் குறிப்பிட்ட மனிதரின் வாழ்வு வரைந்த சித்திரங்கள் என்பதை நீயறிவாய். ‘வண்ணதாசன் கடிதங்கள்இல் ஒரு மெல்லிய மனதின் நுண்ணிய உணர்வுகளைப் படிக்க முடிந்தது. தாமரபரணியின் ஈரம் ஒவ்வொரு சொல்லிலும் ஊறியிருந்தது. எழுத்துக்கும் எழுதுபவருக்கும் இடையிலான ஊடாட்டங்கள், மங்கலம், மரணம், இலக்கியக் கூட்டங்கள், யார் யாருக்கு சிநேகிதம் இன்னபிறமுன்சுவட்டுக் குறிப்புகளை இவ்வாறான எழுத்துக்கள் வழியாகவே அறிந்துகொள்ள முடிகிறது. மதுவும் இலக்கியமும்பெருக்கெடுக்கும்விடுதியறை இரவுகள் நம்மைப் போன்ற பெண்களுக்கு விலக்கப்பட்ட கனிகள். ஆகையினால், பழங்கதையெல்லாம் புத்தகங்களைப் படித்தே அறியவேண்டியதாயிருக்கிறது.

மாதங்கி, ஆன்மாவின் கூப்பிடலுக்கும் அடையாள விழைதலுக்கும் இடையில் நடக்கும் இழுபறியில் முறுகித் திரிபிரிந்துகொண்டிருக்கும் மனதுக்கு அந்த எழுத்து எவ்வளவு இதந்தந்ததென்கிறாய்! வாசிக்கத் தேர்ந்தெடுக்கும் புத்தகங்கள் நமது மனோநிலைக்கியைபுற நம்மை வந்தடையும் உடனிகழ்வு உனக்கு என்றேனும் நேர்ந்ததுண்டா?

குறுங்குழுவாதத்திற்கு இலக்கிய உலகமும் விதிவிலக்கன்று. அதன் எழுதா விதிகள் புதிதாக எழுத வருபவர்களைத் திகைப்பூட்டுகின்றன. ‘நான் நினைத்தால் உன்னைத் தூக்கி நிறுத்தமுடியும்என்று மார்தட்டுகிறவர்களுக்கும்நினைத்தால் என்னால்
உன்னைச் சாய்த்துவிட முடியும்என்று கண்ணுக்குள் சுட்டுவிரல் நீட்டி ஆட்டுபவர்களுக்கும் குறைச்சலில்லை. நதி என்று கால்கழுவ கழிவு காலில் தட்டுப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. யாரையும் சாராதிருந்து எழுதுவதனால் உண்டாகும் தனிமைக்கு நம்மைப் பழக்கப்படுத்திக்கொள்ளவில்லையானால், பிறகென்னதேக்கந்தான்! இந்நிலையில், வண்ணதாசனின் கடிதங்களில் வாசிக்க நேர்ந்த வரிகள் ஆறுதலளிப்பனவாக அமைந்திருந்தன. வல்லிக்கண்ணனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

மலைச்சுனை போலவும் வனச் சிற்றோடை போலவும் எங்கோ, யாருக்காகவோ என்ற நிச்சிந்தையில் அழுக்கற்றுக் காலம் கழிந்துவிடுமாகில் எனக்கும்கூட அது உவப்பானதுதான்

ரவி சுப்பிரமணியனுக்கு எழுதிய கடிதத்திலும் அத்தொனியே.

இந்த மழைக்கால இருட்டில் இந்தப் படிக்கட்டுகள் போல வாழ்வும், இந்த மண் விளக்குகள் போல நானும் இருந்துவிடலாம். யாராவது ஏற்றுவார்கள். யாருக்காவது வெளிச்சம் தெரியும்.

பிறகொரு கடிதத்தில் ரவிக்கு இப்படி எழுதியிருக்கிறார்.

மேடையில் உன்னதக் கலைஞர்கள் இசைத்துக்கொண்டு இருக்கையில், நான்ஆம்ப்ளிபயர்மேற்பார்க்கிற இரண்டு சிறுவர்களில் ஒருவனாக இருந்துவிடச் சம்மதம். மினுமினுக்கிற நட்சத்திரங்களின் கீற்று முனைகள் அழகுதான். நான் எருக்கலஞ்செடியோரம் வீசப்பட்டிருக்கிற பிளிஸ்டர் தகடாக, மாத்திரைக் காகிதமாகக் கிடந்தால் போதும்.”

என்னளவில் இது போதும்என எத்தனை பேரால் இருந்துவிட முடிகிறது? ஓட்டப்பந்தயத்தில் உன்னதங்கள் பின்தங்கிவிடக்கூடும். ஆயின், அது பின்னடைவா எனில் இல்லைத்தானே? பேய்க்கூச்சல்களைச் சிம்பொனியென்று கொண்டாடும் பொய்மையுலகத்திலிருந்து நாம் விலகியிருப்பதொன்றே உய்வதற்கு ஒரே வழி என்று நான் நினைத்துக்கொண்டேன்.

வர வர அரசியல்வாதிகள் பரவாயில்லை என்று தோன்றவாரம்பித்துவிட்டது.

என் ஒரே ஆறுதல், உண்மையும் பாசாங்கு அற்றதும் ஆன என் முகமும் என் வரிகளும் அங்கீகரிக்கப்படுவதுதான். இதே முகத்துடனும் இதே வரியுடனும்தான் எங்கும் இருக்கிறேன்.”

எனக்கு சொல்லத் தெரியவில்லை மாதங்கி. தரவரிசைகள், பட்டியல்கள் ஆக்கம் சார்ந்து இல்லாமல் ஆட்கள் சார்ந்ததாக வெளிவந்துகொண்டிருக்கும் சூழலில், வண்ணதாசனின் மேற்கண்ட வரிகளை நான் கடன்வாங்கிக்கொள்ளலாமென்றிருக்கிறேன்.

நிறைய வாசிக்கவும் நிறைவாய் எழுதவும் எப்போதும்போல ஆசை. நம்மால் விசிறியடிக்கப்படும் ஒரு குவளைத் தண்ணீரில் மூழ்கிப்போவோம் என்பதறியாமல் சின்னஞ்சிறிய தேங்காய்த் துண்டைப் பெரும்பிரயத்தனத்தோடு தூக்கிப் போய்க்கொண்டிருக்கும் எறும்புகளைப் போலத்தானே நாமும்? எங்கே எப்போது இந்த இருப்பும் சிதறும் என்பதறியா அநித்திய வாழ்வு. எனது சிக்கல்கள் தீரும் நாள் தொடுவானம் போல தள்ளித் தள்ளிப் போய்க்கொண்டிருக்கிறது. அதேசமயம், ‘துயரமே எழுத்தின் ஊற்றுக்கண்என்று யாரோ(தாஸ்தயேவ்ஸ்கி?) சொன்ன நினைவும் வருகிறது.

எப்படி இருக்கிறாய் மாதங்கி?’ என்று உன்னிடம் சம்பிரதாயத்திற்குக் கேட்டு வைக்கிறேன். மாதாமாதம் அம்ருதா பத்திக்காக நினைவுறுத்தும் தளவாய் சுந்தரத்திடம்இனி கடிதமே எழுதித் தருகிறேன்என்று சொல்லிவிடட்டுமா? கட்டுரை வடிவம் திடீரென்று பிடிக்காமற் போய்விட்டதற்கு கூடுதல் காரணம் என்னவென்கிறாய்…‘வண்ணதாசன் கடிதங்கள்வாசித்த பாதிப்பன்றி வேறென்ன?


பிரியங்களுடன்
தமிழ்நதி

நன்றி: அம்ருதா

அன்பு நண்பர்களுக்கு,

நீண்ட இடைவெளியின் பின் இணையத்திற்குத் திரும்பியிருக்கிறேன். இனித் தொடர்ந்து எழுதவேண்டுமென்று நினைத்திருக்கிறேன். நினைப்பதெல்லாம் நடக்கிறதா என்ன:)