6.21.2007

பேசப்படாதவள்



பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை

அவன் தேர் நகர்ந்த வீதியும்
நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!

சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்

“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”

கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!

சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.




6.15.2007

ஒரு நாளும் இரண்டு அறைகளும்


ஒரு கவிதையை
வாசலிலேயே வழிமறித்து அனுப்பிவிடும்
குழந்தைகளின் கூச்சலற்ற விடுதி அறையில்
மெல்ல அவிழ்க்கிறேன் என்னை.
இசை கலந்த தண்ணீர்
உடலையும் பாட அழைக்கிறது
மதுவின் நிறம் அறையெங்கும் படர
தொன்மத்தின் ஞாபகத்தில் ஏவாளுமாகிறேன்
ஒப்பனைகள் களைந்து
நானாய் நாகரிகமடையும்போதில்
உடல் பாழடைந்த நகரமெனப் புலம்புகிறது
அண்மைய தோழி சொன்னபடி
நெடுநாளாய் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த்துளிகளெனத் ததும்புகின்றன
நரம்புகள் இறுகிய கைகளை
காசுக்கு விட்டுக்கொடுத்தவளும்
காமமொரு பிறழ்நிலையென
ஊட்டப்பட்டவளுமான நான்
புனைவுலகை உடலுக்குப் பழக்குகிறேன்
(அ)திருப்தியுற்றுச் சாய்ந்து
கனவின் நூலேணி பற்றி
ஏறிக்கொண்டிருக்குமென்னை வீழ்த்துகிறது
தொலைபேசிவழி நுழையும்
நோயின் குரல்.

உப்பிய வயிறு ஏறியிறங்க
உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவினுள்
அளவெடுக்கப்பட்ட துளிகளாய்
இறங்கிக்கொண்டிருக்கிறது குருதி
மூத்திரவாடையடிக்கும்
401ஆம் இலக்கஅறையைத் தாண்டி
பிணவறை செல்கிறது சற்று முன்வரை
யாரோவாயிருந்த எதையோ சுமந்த கட்டில்.

யாராலும் எழுதமுடியாத கவிதையை
காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்.