3.23.2010

திருவண்ணாமலை இலக்கிய ஜோதியில் அய்யனார் கலந்த கதை!

வாழ்க்கை அபரிமிதமான அபத்தங்களோடிருக்கிறது। எப்போதும் இறந்தகாலமே இனிதென்று எண்ணும்படியாக, நிகழ்காலம் இடறிவிழுத்தும் மேடுபள்ளங்களைக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எழுத்தென்பது வாசனைத் திரவியம் போல மேலதிகப் பூச்சுத்தானோ, நம்மை நாமே மினுக்கிக்காட்டும் வஸ்துகளில் ஒன்றோ என்ற எண்ணம் வர ஆரம்பித்திருக்கிறது. எழுத்தின் மிக ஆரம்ப நிலையில் இருக்கும் எனக்கே இத்தகைய ஞானம் இத்தனை விரைவில் கண்திறக்க ஆரம்பித்திருக்கிறதெனில், ஆண்டாண்டு காலமாக எழுதிக் குவித்துவரும் பெருமக்களின் மனங்களில் எத்தனை எத்தனை உணர்ச்சிப்புயல்கள் வீசினவோ என்றெண்ணி வியக்கிறேன். ஆத்மார்த்தம், வாழ்வின் பொருள், உன்னதம், அனந்தானந்தம், தேடல் இன்னோரன்ன ஜிகினா வார்த்தைகள் யதார்த்தக் காற்றில் சருகுகளென கண்ணெதிரில் பறந்துசெல்வதைப் பார்க்க முடிகிறது.

இந்த இலக்கிய ஜோதியில் எழுத்தாவேசத்துடன் புதிதாக இறங்கியிருப்பவர் அய்யனார். ‘தனிமையின் இசை’என்ற வலைப்பூவை அமைத்து நீலி, பிடாரி, சுரோணிதம், கட்டமைத்தல், கட்டவிழ்த்தல்… இன்னபிற மாயவசீகரச் சொற்களைப் பின்னிப் பிசைந்து எழுதி, தனிமையில் பிறழ்மனதை, வெறுமையை, கொண்டாட்டங்களை வாசிப்பவர்களுக்குள் கடத்திப் புண்ணியம் கட்டிக்கொண்டவர். அவரது ‘கட்டற்ற’மொழியில் மயங்கி ‘தனிமையின் இசை’வாசகர்களானவர்கள் அநேகர். வலைப்பக்கத்திலுள்ள பதிவுகளை ‘தனிமையின் இசை’, ‘உரையாடிலினி’, ‘காதல் கவிதைகள்’ஆகிய மூன்று புத்தகங்களாக அச்சேற்றியதன் வழி எழுத்துலகுக்குள் உத்தியோகபூர்வமாகப் பிரவேசித்திருக்கிறார் அய்யனார்.

திருவண்ணாமலை என்றால் பலருக்கும் ஜோதியும் கிரிவலமும் சாமியார்களும் நினைவில் வரக்கூடும். எனக்கென்னவோ திருவண்ணாமலையின் சிறப்பு அடையாளமாக ‘வம்சி’புத்தகாலயமே ஞாபகத்துக்கு வருகிறது. ஒரு ஊரில் ஒரு புத்தகக் கடையும் பதிப்பமும் இருப்பதொன்றும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்பு இல்லைத்தான். ‘வம்சி’ பதிப்பாசிரியரான பவா செல்லத்துரையையும் அவரது மனைவி சைலஜாவையும் சைலஜாவின் சகோதரி ஜெயசிறீயையும் சந்தித்துப் பழகியவர்கள் ‘வம்சி’யை திருவண்ணாமலையின் சிறப்புகளில் ஒன்றென்று சொல்லத் தயங்கமாட்டார்கள். கடந்த 13ஆம் திகதி, அய்யனாரின் ‘தனிமையின் இசை’பற்றிப் பேசுவதற்காக சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்குப் போயிருந்தேன். “தெரிந்தவர்கள் ஆளாளுக்குச் சொறிந்துவிடுகிறார்கள் என்று சொல்வார்கள். வேண்டாம்”என்று எத்தனை சொல்லியும் கேட்காமல் “நீதான் பேசுகிறாய். ஒழுங்குமரியாதையாக வந்து பேசிவிட்டுப் போ”என்ற அய்யனாரின் மீசை முறுக்குத் தாளாமல் கலந்துகொள்ளவேண்டியதாயிற்று.

அவ்வளவு தூரத்திலிருந்து வந்திருக்கிறோம்… முகத்தையாவது அலம்பிவிட்டு கூட்டத்திற்குப் போகலாம் என்று நினைத்து, ‘என் கடன் நண்பர்களுக்குப் பணி செய்து கிடப்பதே’என்று, இப்பூவுலகில் அபூர்வ ஜீவனாக உலவிவரும் பாஸ்கர் சக்தியுடன் சைலஜாவின் வீட்டுக்குப் போனால், அவர்கள் ஏற்கெனவே கூட்டம் நடக்கும் இடத்திற்குப் போயிருந்தார்கள். ஒருவழியாகக் கிளம்பிப்போய் கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு சாப்பிடவென்று வீட்டுக்குத் திரும்பி வந்தபோது வியப்பைத் தூண்டும் பல காட்சிகளைக் கண்டேன். அந்த வீட்டுக்குள் நிறையப்பேர் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான சாப்பாடு சமையலறையில் தயாராகிக்கொண்டே இருக்கிறது. யார் யாரோ அமர்ந்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். யார் யாரோ கிளம்பிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். மேலும் யார் யாரோ வந்துகொண்டிருக்கிறார்கள். எனக்குத் தோன்றியதெல்லாம்… “இப்படிக்கூட இந்தக் காலத்தில் மனிதர்கள் இருக்கிறார்களா?”என்பதுதான். வீடு என்பதன் பொருள் ஆரம்பங்களில் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும். பொருளாதார சுயநலன்களால் அது குறுகிச் சிறுத்து இப்போது நாம் ‘இருந்து’கொண்டிருக்கும் (வாழ்ந்துகொண்டிருக்கும் அல்ல) கூடுகளாக மாறியிருக்க வேண்டும். ஒரு சின்ன முகச்சிணுக்கம், கசங்கல், பாராமுகம்… கொஞ்சம் உயர்வுநவிற்சியாக இருந்தாலும் இதைச் சொல்லவேண்டியிருக்கிறது. இரக்கமின்றி மரங்களை வெட்டிச் சாய்;த்தபிறகும் இன்னமும் மழை பொழியக் காரணங்கள் இருக்கின்றன. பவா-சைலஜா,ஜெயசிறீ போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள்.

கவிஞர் பரிணாமனின் பாடல் உயிரைத் தொட்டு உலுக்குவதாக இருந்தது. “வாழ்க்கை ஒரு தோற்றம்… தினந்தோறும் அதில் மாற்றம்”என்ற வரிகள் மனதுள் ரீங்கரித்துக்கொண்டேயிருந்தன.

கூட்டம்… ஆம்… அது நன்றாகவே நடந்தேறியது. இரவு நேரம் மரங்களின் கீழ் திறந்தவெளியில் நடந்ததனாலோ என்னவோ அதிகமான அயர்ச்சியை அளிக்கவில்லை. உதவி இயக்குநராகப் பணியாற்றிக்கொண்டிருக்கும் பின்னி மோசஸின் ‘நடுங்கும் கடவுளின் கரங்களிலிருந்து’கவிதைத் தொகுப்பு பற்றி பாஸ்கர் சக்தி பேசவாரம்பித்தார். சிறிது பேசியபிறகு ‘கவிதைகளில் எனக்கு அதிக பரிச்சயமில்லை’என்று சொல்லி அந்தப் பணியை க.சீ.சிவகுமாரிடம் கையளித்துவிட்டு அமர்ந்துவிட்டார். க.சீ.சிவகுமார் அருமையாகப் பேசினார்; புத்தகத்திலுள்ள கவிதைகளைத் தவிர்த்து. பார்வையாளர்கள் சிரித்துக்கொண்டேயிருந்தார்கள். இருந்தாற்போல ‘கன்பியூஸை’க் கண்டுபிடித்தவர் கன்பியூசியஸ் என்றார். “ஆதியிலே வார்த்தைகள் இருந்தன” – “ஆதியிலே மாமிசம் இருந்தது”என்றார். "ஆதியிலேயும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினார்களா?" என்று க.சீ.சிவகுமாரை மறுமுறை சந்திக்கும்போது அவசியம் கேட்கவேண்டும்.

கவிஞர் சமயவேல் கவிதைகள் பற்றி எளிமையான உரையொன்றினை வழங்கினார். அவரது கவிதைகள்போலவே ஆர்ப்பாட்டமில்லாத பேச்சாக அது அமைந்திருந்தது.

அடுத்து என்னைக் கவர்ந்த பேச்சு ‘கற்றது தமிழ்’ராமினுடையதாக இருந்தது. அவர் கே.வி.சைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்ட- மலையாள எழுத்தாளர் மீராவின் சிறுகதைத் தொகுப்புப் பற்றிப் பேசினார். அந்தக் கதைகள் பொருட்படுத்தி மொழிபெயர்க்கத் தகுந்தளவு தகுதி, தரம் வாய்ந்தனவல்ல என்றும் அவற்றை மொழிபெயர்த்ததன் வழியாக சைலஜா தனது நேரத்தை வியர்த்தமாக்கியிருக்கிறார் என்றும் பேசினார். சைலஜாவால் மொழிபெயர்க்கப்பட்ட அந்தத் தொகுப்பை வாசிக்காதவரையில் அதைப்பற்றி எந்தக் கருத்தும் சொல்வதற்கில்லை. ஒருவர் அற்பமானதெனக் கருதுவதை இன்னொருவர் அற்புதமானதெனக் கொண்டாடவும் செய்யலாம். ராமின் ஆழ்ந்த வாசிப்பை வெளிப்படுத்துவதாக அவருடைய பேச்சு அமைந்திருந்தது. ஆனால், அந்தக் கதைகள் குப்பை என்று புறந்தள்ளும்படியாக நிச்சயமாக இருக்காதென உள்ளுர ஒரு பட்சி சொல்லிக்கொண்டேயிருக்கிறது. மலையாள இலக்கியம், சினிமா ஆகியவற்றைத் தமிழ் இலக்கியம், சினிமாவோடு ஒப்புநோக்கியும் அது இதைப் பாதித்த விதம் பற்றியும் பேசினார். கேட்டபோது புரிந்தது… நீண்டநாள் கழித்து எழுதும்போது நினைவிலிருந்து தொலைந்துவிட்டிருக்கிறது. தகவல்பிழைச் சங்கடங்களுக்கு ஆளாகக்கூடாதென்பதால் தவிர்க்கிறேன்.

திருவண்ணாமலையின் மாவட்ட ஆட்சியர், எழுத்தாளர் திலகவதி, வம்சி பவா செல்லத்துரை-சைலஜா, இயக்குநர் சந்திரா, அ.முத்துக்கிருஷ்ணன் இன்னுஞ் சிலர் பேசினார்கள். அய்யனாரின் ‘உரையாடிலினி’ பற்றிப் பேசிய சந்திராவுக்கு என்னைப்போலவே மேடைப்பயம் நீங்காதிருக்கிறது. என்னைப் போலவே அவரும் எழுதிவைத்துப் பார்த்துப் பேசினார். இந்த மடைதிறந்த வெள்ளம்போல பேசுவது எப்படி என்று யாரிடமாவது கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும். சிலர் ஒலிவாங்கியைக் கையில் கொடுத்தால் மற்றவர்களிடம் திருப்பிக் கொடுக்கமாட்டேன் என்று அடம்பிடிப்பார்கள். எவ்வளவு கைதட்டினாலும் அடங்காமல் பொழிந்துதள்ளிக் கொண்டேயிருப்பார்கள். ‘மேடையில் பேசக் கற்றுக்கொள்கிறேன் பேர்வழி’என்று ஆரம்பித்து அப்படி ‘ஒலிவாங்கி’யில் தொங்குகிறவர்களில் ஒருவராக மாறாதிருக்கவேண்டுமே என்ற பயமும் உள்ளுர உண்டு.

அய்யனார்… அவனைப் பற்றிச் சொல்லாவிட்டால் இந்தப் பதிவின் தலைப்பிலே பெயரைக் குறிப்பிட்டதற்குப் பொருளில்லாமல் போய்விடும்। துபாய் போன்ற நாடுகளில் எண்ணெய் சுரக்கிற அளவுக்கு மனங்கள் சுரப்பதில்லை போலும்। இலக்கியம் குறித்த கனவுகளில் ஆழ்ந்திருக்கும் இளைஞனொருவனுக்கு அவனது புத்தக வெளியீட்டு விழாவுக்காக ஒரேயொருநாள் விடுப்புக் கொடுப்பதைக் காட்டிலும் கருணையற்ற செயல் என்ன இருக்கிறது? ஒரேயொரு நாள் விடுப்பில் ஊருக்கு வந்திருந்தான்.நாம் மட்டும் குறைந்தவர்களா என்ன? நமக்கு கவிதைப் புத்தகத்தின் சரசரப்பைக் காட்டிலும் காசின் சரசரப்பு குறைந்தபட்ச நேசத்திற்குரியதாக இருக்கிறதா என்ன?

இலக்கியகாரர்களுக்கேயுரித்தான ஜிப்பாவும் மிடுக்குமாய் அய்யனாரைப் பார்த்தபோது என்னை மீறி சிரிப்பு வந்துவிட்டது. “இலக்கியவாதி போலவே இருக்கிறாய்”என்றேன். வந்தவர்களைப் பார்த்து ஒரு தலையசைப்பு, புன்னகை, கைகுலுக்கல்… நீ அன்று எவ்வளவு பாந்தமான இலக்கியவாதியைப்போல நடந்துகொண்டாய் அய்யனார்!

அய்யனாரின் அண்ணா ரமேஷ் உட்பட (அருமையான வாசகர் அவர்) குடும்பமே அங்கு வந்து அமர்ந்திருந்த சூழலில் அய்யனாரின் எழுத்துக்களைப் பற்றிப் பேசுவது உண்மையில் சங்கடமளிக்கக்கூடியது. காதலும் காமமும் பொங்கிப் பிரவகிக்கும் எழுத்துக்களைக் குறித்து குடும்பத்தினர் நடுவில் சிலாகித்துப் பேசுவது உண்மையில் இயலாதது. ஒரு இனிய நண்பனின் மனதைக் காயப்படுத்தக்கூடாதென்ற நல்லெண்ணத்திற்கும் விமர்சனமென்பதை ஆள்பார்த்துச் செய்தலாகாது என்ற பொறுப்புணர்வுக்கும் இடையிலான இழுபறியில் திணறித்தான் போனேன். இனியொருபோதிலும் நண்பர்களின் புத்தகங்களைப் பற்றி பேசாதிருப்பதே நமக்கு நாம் செய்யக்கூடிய நீதியாகும். ஆனால், சில குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசியதன் வழியாக ஒரு நண்பனின் மெல்லிதயத்தை நோகடித்தேனா என்ற கேள்வி இன்றுவரை எனக்குள் தொடர்கிறது. ஏனெனில், அந்த வலியை நான் சொந்தமாக அனுபவித்திருக்கிறேன். தவிர, கவிதை என்பது ஒரு தனிமனிதனின் சின்னஞ்சிறிய இதயத்தின் துடிப்பு. இதர மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத உணர்ச்சிப்பரவல். அதை விமர்சனத்திற்குட்படுத்துவதென்பது இன்னொருவரின் அந்தரங்கத்தை உரசிப் பார்ப்பதுபோலத்தான். படுக்கையறைகளுக்குள்ளேயே ஊடகங்களின் கண்கள் நுழைந்துவிட்டிருக்கும் பாதுகாப்பற்ற சூழலில் கவிதையின் ஆன்மாவை அறுத்துப் பார்ப்பதொன்றும் பாவமல்ல என்று நீங்கள் சொல்லக்கூடும்.

ஏற்புரையை அய்யனார் வழக்கமான தன்னடக்க வார்த்தைகளுடன் வழங்கினான். எல்லாம் ஏற்கெனவே ஒத்திகை பார்க்கப்பட்டதாகத் தோன்றியபோதிலும், உணர்ச்சிவசப்படுவதிலிருந்து தவிர்க்கமுடியவில்லை. கொஞ்சம்போல கண்ணீர் துளிர்க்கப் பார்த்தது.

நம்முடன் சகவலைப்பதிவாளனாகப் பயணித்து, அச்சு ஊடகத்தின் வழியாக அறியப்படும் படைப்பாளியாக அய்யனார் உருவெடுத்திருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், அய்யனார்! இலக்கியம் என்ற, அழகிய ஊதாநிற (எனக்கென்னவோ அப்படித்தான் தோன்றுகிறது) மலரைச் சுற்றிப் படர்ந்திருக்கும் முட்களைப் பற்றி ஒருநாள் நீயாகவே அறிந்துகொள்வாய்.இனி, சொற்களை நீ எந்தளவு நேசித்தாயோ அந்தளவிற்கு அவற்றை உதிர்க்கும்முன், எழுதும்முன் அஞ்சவேண்டியதாகவும் நேரிடலாம்.

கட்டற்றது எழுத்தின் ஆன்மா என்பதெல்லாம் கட்டுக்கதை; அது கண்ணுக்குத் தெரியாத பல கண்ணிகளை தன்னுள் கொண்டியங்குகிறது என்பதே உண்மை.