10.30.2007

புதைகுழிப் பூக்கள்உயிரோடு ஒருநாளும் பார்த்ததில்லை-உங்கள்
பெயர்கூட ஒலிக்க நாம் கேட்டதில்லை
இருபத்தி ஒரு பேரும் விதையாகினீர்-எங்கள்
இதயத்தில் கண்ணீரின் துளியாகினீர்
(உயிரோடு ஒருநாளும்)

வானத்தைப் பகைசூழ்ந்து கறுப்பாக்கும்
வாழும் இடம் எல்லாம் நெருப்பாக்கும்
ஆலயம் பள்ளியும் தவறாது-அந்த
ஆணவம் தீர்த்த(உ)தும் வரலாறு
(உயிரோடு ஒருநாளும்)

நவாலியில் பலிகொள்ள நாமழுதோம்
செஞ்சோலைப் பிஞ்சுகள் சிதறக்கண்டோம்
அல்லைப்பிட்டியிலும் அள்ளிப்போட்டோம்-இன்று
அனுராதபுரத்திற்குக் கொள்ளிவைத்தீர்
(உயிரோடு ஒருநாளும்)

ஆடைகள் அகற்றிய நிர்வாணம்
ஆனாலும் எவர்க்கின்று அவமானம்
மூடிமறைத்தாலும் தெரியாதோ- ஊர்தி
மூண்ட கதை உலகறியாதோ
(உயிரோடு ஒருநாளும்)

தற்கொடையாளரே போய் வருக-எங்கள்
தளிர்களே! உயிர்களே! போய் வருக
பொற்காலம் எமதாக்கப் போனவரே!
எக்காலம் எமைக் காண மீள் வருவீர்?
(உயிரோடு ஒருநாளும்)

10.20.2007

கூட வராதவன்


தண்டவாளத்தை விழுங்கி விழுங்கி
ஏப்பமிட்டு விரைகிறது புகைவண்டி
எதிரெதிர் இருக்கையில்
இருக்குமெம் கண்களில்
நொடிக்கொருதடவை
மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்...
பச்சை விழுத்தும் மரக்காடுகள்…
குளக்கரையோரத்தில் குளிக்கும்
குறுக்குக்கட்டுத் தேவதைகள்…

குருட்டுப்பிச்சைக்காரன்
பிசிறிய குரலால்
தட்டியெழுப்புகிறான் அவரவர் பிரியங்களை

வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
நான் அவனோடும்
நீ அவளோடும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்

10.14.2007

காணாமற் போகும் அழகன்கள்


“விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் கைது”
“ஆந்திர அழகிகள் பொலிசாரிடம் சிக்கினர்”
“கைது செய்யப்பட்ட அழகிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்”

வ்வாறான தலைப்புகளைத் தாங்கிவராத பத்திரிகைகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. மனிதருள் இருக்கும் விலங்கினைத்(மனிதனும் விலங்குதான் என்ற விவாதத்தை சற்றைக்கு மறந்து)திருப்திசெய்வதே சில செய்தி ஊடகங்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது. யன்னல் வழியாக அடுத்த வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் சுவாரசியத்திற்குச் சற்றும் குறையாத ஆர்வத்துடன் வாசகர்களும் அந்தச் செய்திகளை வாசிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களது விழிகள் பரபரப்புடன் தரிப்பது, இச்சமூகத்தில் விலக்கப்பட்ட கனியாகிய பாலியல் செய்திகளிலேயே. மேற்கண்ட தலைப்புகளில் ‘இனங்காணப்பட்ட’ அழகிகளுடன் சுகித்திருந்த அழகன்கள் எங்கே என்பது இப்போது பரவலாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. அண்மையில் ஆழியூரானின் பதிவிலும் செல்வநாயகியின் பதிவிலும் இந்தப் பாரபட்சம் குறித்துப் பேசப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அழகன்களை விடுதியறைகளின் சுவர்கள் உள்ளிழுத்து மறைத்துவிட்டனவா? அல்லது ஆண்துணையற்று பாலியல் தொழில் நடத்தக்கூடிய அளவுக்கு இந்த ‘அழகிகள்’கைதேர்ந்த சாகசக்காரிகளாகிவிட்டார்களா?
விடை நமக்குத் தெரிந்ததே! விபச்சாரம் என்று ஊடகங்களால் சுட்டப்படும் செய்திகளின் கதாநாயகர்களான ஆண்கள் அவ்விடங்களிலிருந்து எங்ஙனமோ காணாமற்போய்விடுகிறார்கள். பணத்தையோ அதிகாரத்தையோ அன்றேல் ஆண் என்ற பிறப்பு வழி வந்த தகுதியையோ பயன்படுத்தி அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். ஆக, கூடா ஒழுக்கமாக இச்சமூகத்தினால் கற்பிக்கப்பட்டிருக்கிற ‘கூடும்’ பாவத்தின் தண்டனை முழுவதும் பெண்களையே சென்றடைகிறது. சமூகத்தின் எச்சிலையும், தவிர்க்க முடியாதபோது குழந்தையையும் அவர்களே சுமக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ளைய தலைமுறையினரில் பலருக்கு குடும்பம் என்ற அமைப்பின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவருவதற்கு அது கொண்டிருக்கும் பாரபட்சமான உரிமைப்பகிர்தலும் ஒரு காரணமாகும். குடும்பம்,அரசியல்,இலக்கியம் என எங்கெங்கிலும் பரந்திருக்கும் ஆணாதிக்கம், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பங்களிலும் தனது கோரமுகத்தைக் காட்டி ஆண்களைப் புனிதர்களாகப் பிரகடனப்படுத்த முயல்வது அருவருப்பூட்டுகிறது. உதாரணமாக, பெண்கவிஞர்களுள் சிலர் ‘முலை’என்றும் ‘யோனி’என்றும் கவிதைகளுள் வலிந்து இடம்பெறச் செய்வதற்கு கவனஈர்ப்பே முக்கிய காரணம் என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. அதே ‘முலை’யும் ‘யோனி’யும் ஆண் கவிஞர்களுடைய பேனா வழியாக எழுதப்படும்போது புனிதசொற்களாகிவிடுவது நகைப்பிற்குரியதே. பெண்ணிலிருந்து ஆணை வந்தடைவதற்கு இடையில் ஏதாவது குடமுழுக்கு,கும்பாபிசேகம் நடத்தி அந்தச் சொற்களைக் கழுவிவிட்டார்களா தெரியவில்லை.
நான் வசிக்கும் திருவான்மியூர் கடற்கரையோரத்திற்குப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், மதியமொன்றில் அந்த இடத்திலிருந்து பலத்த ஆரவாரம் கேட்டது. எட்டிப் பார்த்தபோது நிலத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு பெண்ணை சில ஆண்களும் பெண்களும் சேர்ந்து காட்டுத்தனமாக அடித்துக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தப் பெண் கையெடுத்துக் கும்பிட்டதை அவர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. எங்கள் வீட்டில் வம்பு அறிவதில் ஆர்வமும் சம்பவம் நடக்கும் இடங்களுக்குத் துணிந்து சென்று துப்பறிவதில் வல்லவருமான ஒரு 'வீரர்' இருக்கிறார். அவர் மிதிவண்டியில் விரைந்து போய் அறிந்து வந்து சொன்ன செய்தி இதுதான்.

"அது ஒரு கூடாத பொம்பிளையாம்"

அதை அவன் மிகச் சாதாரணமாக 'அவளுக்கு வேண்டியதே'என்ற தோரணையில் சொன்னான். அவனளவில் அது முடிந்துவிட்டது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பிள்ளையின் மனதில் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளே என்ற கருத்து எவ்விதம் ஆழமாகவும் உறுதியாகவும் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேதனை கலந்த வியப்பு எழுந்தது.

லையைக் குனிந்துகொண்டு, துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு பத்திரிகைகளில் காண்பிக்கப்படும் பெண்களின் புகைப்படங்களைப் பார்க்குந்தோறும் மனக்கொதிப்பே எஞ்சுகிறது. அவர்களைப் பார்த்தால் சுட்டெரிக்கும் காமத்தீயைத் தணிக்க விடுதிகளுக்கு வந்தவர்களாகத் தெரியவில்லை. உடலை மூலதனமாக்கும்படியான நிலைக்குத் தள்ளி வாழ்க்கை அவர்களைத் தண்டித்துவிட்டது. அவ்வளவே! மனிதனின் மிருகவேட்கையை கட்டுக்குள் வைத்திருக்கவே கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் திருமணத்தின் மூலமான கலவியில் வேண்டுமானால் பெண்ணுக்குச் சுகம் கிடைக்கலாம். (அதுவும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை) ஆனால், வாதையும் வக்கிரம் பொருந்தியதும் கொடுத்த பணத்திற்குக் கூடியளவு கறந்துவிட முனைவதனால் வலி தருவதுமான கொடுமையை அவர்கள் வயிற்றுக்காகச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாவற்றையும் தாங்கிக்கொண்டு தம்முடலை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதற்கான காரணத்தை ஆராயப்புகுந்தால், அவர்கள் கூறும் கதைகள் மனப்பிறழ்வில் கொண்டுவிடும். ‘வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துவந்து இங்கே தள்ளிவிட்டார்கள்…’எனத் தொடங்கி ஆயிரமாயிரம் கதைகள் அவர்களிடம் இருக்கும். எந்த உயிரும் தான் வாழும் சமூகம் தன்னை மதிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கும். புழுவென இகழும் பார்வைகளை எதிர்கொள்ளும் எந்தவொருத்தியும் ‘நான் ஒரு விபச்சாரியாக்கும்-இன்னிக்கு நாலு பேரோடு படுத்தேன்’என்று பீற்றிக்கொள்ள மாட்டாள்.

ண்டுபிடிக்கப்படாதவரை சுத்தப்பூனைகளாயிருக்கும் நமது ‘புனித’சமூகம் அத்தகையோரை எப்படி நடத்துகிறது? ‘வேசிமகன்’என்ற வசைச்சொல் நம்முள் பிரபலமானதும் விளிக்கப்படுபவரின் உக்கிரத்தைத் தூண்டக்கூடியதுமாக இருக்கிறது. (ஏற்கெனவே பேசப்பட்டதுதான்) தெருவோரம் ‘வாடிக்கை’பிடிக்க அலையும் பெண்களின் மீது கண்களால் காறியுமிழ்ந்துவிட்டுப் போகிறவர்கள்தான் நம்மில் அநேகர். திறந்த வெளிகளில் கௌரவம் பார்த்துக் காறியுமிழ்ந்து போகும் அதே ஆண்களுக்கு, பூட்டிய அறைகளுக்குள் நிகழ்த்தும் சுயமைதுனத்தின்போது அதே வேசிகளின் ஆடையகற்றப்பட்ட சித்திரங்கள் வேண்டியிருக்கிறது என்பது பேசத்தகாத தேவரகசியம்.
வேசிகள் என்றொரு சமூகக்குழு பிறப்பிலிருந்து உருவாவதில்லை. பாலியல் தொழிலாளர்களை சமூகம்தான் உருவாக்குகிறது. சமூகம் என்பது நானும் நீங்களும் நீங்கலான ஒன்றல்ல. தன்மீது ஒருவனைப் படரவிட்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவள் ஒரு குழந்தையின் தாயாக இருக்கலாம். அந்தக் குழந்தையின் வயிறு, தனது தாயின் வயிற்றுக்குக் கீழிருக்கும் உறுப்பினை ஒருவன் நிறைப்பதன் வழியாகத்தான் நிறையுமென்றால் அது எத்தகைய குரூரம்!

ரு உயிரின் இருண்ட பக்கங்கள் எங்ஙனம் உருவாகின என்பதைக் குறித்து நம்மில் யாருக்கும் கவலையில்லை. நம்மில் பெரும்பாலானோர் பொதுப்புத்தியின் வழி இயங்குபவர்களே! சுயமாகச் சிந்திக்க நேரமற்ற இவ்வியந்திர உலகில் நமது மூளையில் கருத்துருவாக்கம் செய்பவை ஊடகங்களே. விபச்சாரிகள் சாக்கடைப் புழுக்களிலிருந்து உருவானவர்கள் எனக் கற்பித்திருப்பதில் ஊடகங்களின் பங்கு முக்கியம். அழகிகளையும் அவர்களை ‘நெறிப்படுத்திய’தரகர்களையும் கனகாரியமாகப் புகைப்படமெடுத்துப் போடுபவர்களது கண்களில் பாவமெனப்படுவதில் பங்குகொண்ட ஆண்கள் தென்படுவதேயில்லையா…? திரைப்படங்களும் தம் பங்கிற்குத் தாலியறுக்கின்றன. கைதாகும் பாலியல் தொழிலாளிகள் கலகலவெனச் சிரித்தபடி காவல் வண்டிகளில் ஏறுபவர்களாகவும் தமக்கு அருகிலிருக்கும் பொலிசாரை வம்பிற்கு இழுப்பவர்களாகவும் கைதானது தமது வாழ்வின் உன்னத தருணங்களில் ஒன்றெனக் கொண்டாடுபவர்களாகவுமே திரைப்படங்களில் காட்டப்படுகிறார்கள்.

பான்பராக் விற்பவனிலிருந்து பங்குவணிகம் வரை சக உயிரைச் சுரண்டிப் பிழைக்கும் பொதுவிதியின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது இவ்வுலகம். இட ஒதுக்கீடு என்கிறார்கள்@ இல்லத்தில் வேலைப் பங்கீடு புழக்கத்தில் வந்துவிட்டது என்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் இல்லவே இல்லையென்றுகூடச் சாதிக்கிறார்கள் சிலர். இருளடர்ந்த தெருவொன்றில் இரவு ஒன்பது மணிக்குப் பிறகு நடந்துசெல்லும் ஒரு பெண், எந்தக் கணமும் ஓடத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள நியதி. இத்தகு நீதிமிகு சமூகத்தில் அழகிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அழகன்கள் காணாமற் போவதும் வியப்பளிக்கும் ஒன்றல்ல.

சில குறிப்புகள்:-

1.விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களும் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்ற மசோதா விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

2.ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் விருப்பப்பட்டு ஒன்றாகத் தங்கியிருப்பது விபச்சாரமாகாது என்றொரு தீர்ப்பு அண்மையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொலிசார் கலாசார காவலர்களாக செயற்படலாகாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாக அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

3. இந்தக் கட்டுரை ‘தங்கம்’ என்ற சஞ்சிகையில் வெளியானது. இணையத்தில் தங்கத்தை வாசிக்க விரும்புவோர் இங்கு செல்லவும்.


10.11.2007

அறியாமை எனும் அறிவுஅகாலத்தில் என்னை வந்தடையும் குறுஞ்செய்திகள்
இருளை மேலும் அடர்த்துகின்றன
தொலைபேசியின் கண்ணாடிச் சட்டத்துள்
துடிதுடித்து அழைக்கிறது உனது பெயர்
நாளொன்றுடன் வாதாடிக் களைத்து
வார்த்தைகள் தீர்ந்துபோன இவ்விரவில்
சுண்டியெறிகிறேன் உன் கண்ணீரையும்
அதுவொரு கடலென விரிந்து அலையெறிகிறது
என் கனவுகளில்.

நீ மரணத்தைப் பற்றிப் பேசினாய். இந்நேரம் தற்கொலை செய்துகொள்(ல்)வதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கவும் கூடும். உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல். உன்னளவில் அறிவு என்பதே சாபந்தான். அது வானத்தின் கீழுள்ள யாவற்றையும் இவ்விதம் என அளவளவான சட்டகங்களுள் அடைத்துவிடவும், இவர்கள் இவ்விதம் என மனிதர்களை முத்திரை குத்தவும் பணிக்கிறது. மேலும், நீ புத்தகங்களாலானவன். உன் மூளையுள் காகிதங்கள் படபடக்கின்றன. சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களுடன் எவரெவரோ உன் மண்டைக்குள் குந்தியிருக்கிறார்கள். அந்தக் கனம் உன்னைப் பூமியோடு சேர்த்து அழுத்திக்கொண்டிருக்கிறது. தமக்கு முந்தைய மூளைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாரத்தை மேலும் புளிக்கவைத்து காடியாக்கி அவர்கள் உனக்குள் ஊற்றினார்கள். ‘நான் அசாதாரணமானவன்’என்ற மிதப்பில் நீயொரு கண்ணாடிக் குவளையாகிவிட்டாய். உன்னைத் தாண்டிச் செல்லுமொருவருடைய ஆடையின் உரசலே போதும் உன்னைச் சிதறடிக்க. எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போன ஒரு கணத்தில் தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கும் உனது புத்தகங்களின் மீது எண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துவிட்டாலென்ன?

மெல்ல மெல்ல பிரசங்கத்துள் பிரவேசிக்கிறேன். உனது சகமனிதர்களின் கால்கள் பூமிக்கு இரண்டங்குல உயரத்தில் மிதந்துகொண்டிருக்கவில்லை என்பதை எப்போதாவது விழிகளை உயர்த்திப் பார்த்திருந்தால் தெரிந்துகொண்டிருப்பாய். நானும் நீயும்கூட நடப்பது தரையில்தான். எமது தோள்புறத்தில் சிறகுகள் முளைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இந்தக் கணம்வரை இல்லை. நேற்று ஒரு பழக்கடைக்காரன் ஓட்டை நோட்டொன்றை என்னிடம் செலுத்திவிடப் பார்த்தான். ஆட்டோக்காரன் மிகுதி பத்துரூபாவை ஒரு மெல்லிய சிரிப்பில் அமத்திக்கொண்டான். சில நிமிடங்கள் முன்னதாகவே நான் போட்ட இருபது ரூபாவை ஒளித்துவைத்துவிட்டு சில சில்லறைகளோடு அந்த வயதான பிச்சைக்காரன் மிகப் பரிதாபமாக உட்கார்ந்திருந்தான். உதவியை நோக்கி நகர்ந்த உரையாடலை அவசர வேலையிருப்பதாகச் சொல்லி நான் துண்டித்தேன். குறிப்பிட்ட பெண்ணுடலை எப்படியாவது போகித்துவிட ஒருவன் ஆயிரம் தகிடுதத்தங்கள் செய்துகொண்டிருக்கிறான். நீகூட நியாயமான காரணம் சொல்லி கடந்த வாரம் யாரிடமோ வாங்கிய பணத்தில் ஒரு ‘குவார்ட்டர்’அடித்திருந்தாய். அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவனுடைய முகத்திரை பரிதாபமாகக் கிழிந்து தொங்கியது.

பொன்னொளிரும் பூமியை யாரும் நமக்கு வாக்களித்திருக்கவில்லை. மத வியாபாரிகளால் விநியோகிக்கப்படும் பிரசுரங்களில் மட்டுமே நான் அதைக் கண்டிருக்கிறேன். ஏமாற்றப்படுவோம் என்ற மூன்றாவது கண்ணைத் திறந்திருப்பதொன்றே பிழைத்திருக்க வழி. அதற்கு உன்னிடம் போதிய சாமர்த்தியமில்லையெனில் அறியாமை பழகு. அறிவைப் பயிலும்படி எல்லோரும் சொல்லும்போது அறியாமை பழகச் சொல்வது உனக்கு வினோதமாக இருக்கும். நிஷ்களங்கமாக நான் இருப்பதாக அன்றொருநாள் சொன்னாய். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். எனக்கு எல்லா இருளும் எல்லா கசடும் தெரிந்துதானிருக்கிறது. பொறாமை,காழ்ப்புணர்ச்சி,தகாப்புணர்ச்சி (அப்படியொன்றிருக்கிறதா என்ன என்பாய்) சுயநலம், தந்திரம்,சூழ்ச்சி,சமயோசிதம்… எல்லாம் தெரியும். சில கண்களில் கறுப்பு வெள்ளை தவிர்த்து ஒன்றுமே இருக்காது. அவ்வளவு அப்பாவித்தனம் சொட்டிக்கொண்டிருக்கும். அப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி ஒரு தூய்மை. சொட்டு நீல வெண்மை. அவன் மனைவியின் கண்ணெதிரில் வேறொருத்தியைக் கூடியவனாயிருப்பான். ஒரு ஏழையின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ‘ஐயோ’என்று அழவிட்டவனாயிருப்பான். பூச்சிகொல்லியை மிதமாக அடித்து பூச்சி துடிப்பதை ஆற அமர அமர்ந்து ரசிப்பவனாயிருப்பான். கண்களைப் பார்த்து தீர்மானங்களுக்கு வந்துவிடாதே. வார்த்தைகளோ சகலவிதமான புனுகுகளும் பூசப்பட்டவை. ஒன்றும் தெரியாதவளைப் போல நடக்கப் பழகி அதுவே இயல்பாயிற்று. இப்போது எந்தக் கசடும் தெரிவதில்லை. மனிதர்கள் கெட்டவர்கள் இல்லை என்று சொல்லிச் சொல்லியே அதை நம்பவாரம்பித்துவிட்டேன். இதை எழுதும் இக்கணம், ஒன்றை மற்றொன்றாக உருவகித்து அந்த மற்றொன்றாகவே ஆகிவிட்டதை உணர்கிறேன். எரிச்சலும் பொறாமையும் தந்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போய்க்கொண்டிருக்கின்றன.

நான் சொல்வது உனக்குப் புரியும். உலகம் நல்லதென்று நீ நம்ப ஆரம்பிக்கும்போது வாழ்வின் மீது காதல் பெருகுகிறது. “இது கற்பிதம்!கனவு! நீ ஏன் உன்னை ஏமாற்றிக்கொள்கிறாய்…?”என்று நீ கேட்கலாம். “நான் வாழவிரும்புகிறேன்”என்பதன்றி வேறென்ன பதில் இருக்கமுடியும்! கழுத்தை ஒரு கயிற்றுவளையத்திற்குள் கொடுத்து ஏறிநிற்கும் முக்காலியை உதைத்துத்தள்ளும் நொடியை எதிர்கொள்ள என்னால் இயலாது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவதை நினைத்துப் பார்! மூழ்கிக்கொண்டிருக்கும் கடலளவு வாழும் ஆசை அப்போதுதான் பெருகுமாயிருக்கும். உடம்பு பன்றிமாதிரி உப்பிப்பெருத்துவிடும். வாழும்போது நீ பூசிக்கொண்ட அரிதாரங்களெல்லாம் கலைந்துவிட்டிருக்கும். வாழ்வு மேடையாயிருக்கிறது. மரணமோ ஒப்பனை கலைக்கும் அறையாயிருக்கிறது.

அன்றாடம் எத்தனை பொய்கள்! நட்பு கற்புக்குச் சமானம் என்கிறோம். கற்பே உண்மையல்லாதபோது நட்பை அதனோடு ஒப்பிடுவது வியர்த்தம். ஒரு பேச்சுக்கு கற்பு இருக்கிறதென்று வைத்துக்கொண்டாலும், கடன் கேட்டு மறுக்காதவரையில்தான் நட்பும் கற்போடிருக்கும். எழுத்தை அறம் என்கிறோம். புனிதம் புனிதம் என்று பூப்போடாததொன்றுதான் குறை. அதே எழுத்து நமக்குச் சோறு போடாதபோது அந்த அறத்தை மறுதலிக்கிறோம். நாம் காதலில் மிதக்கிறோம். அந்த அற்புத உணர்வில் தேனில் விழுந்த எறும்புகள் போல மயங்கிக் கிடக்கிறோம். காமமற்ற காதல் இருக்கிறதா என்ன? தெருவோரத்தில் அழுக்காய்,கறுப்பாய்,சிக்குத்தலையோடு இருக்கிற பெண்மீதில் - குச்சியால் குத்திக் காகிதம் பொறுக்கிப் போகிறவன் மீதில் ஏன் காதல் பொங்குவதில்லை என்பதை வசதியாக மறந்துபோகிறோம். ‘நான் இல்லாவிட்டால் இந்த வீடு என்னாகும்?’என்கிறோம். மண்ணாங்கட்டி! வீடும் அதன் மனிதரும் அதனதன் அவரவர் காலம் முடியும்வரை இருக்கவே இருக்கும்-இருப்பர். நீ கொண்டாடும் உணர்வுகளின் மீதெல்லாம் மலமள்ளிக்கொட்டுவதாக எண்ணுவாய்.

கற்பு,காதல்,எழுத்து துரோகம்,நேர்மை,புத்தகம் இவையெல்லாம் வாழ்வின் உப்புச்சுவையாக நாம் ஏற்றுக்கொண்டவை. இட்டுக்கட்டப்பட்ட கதைகளும்கூட. ‘நாங்க ஒண்ணும் சும்மா வாழ்ந்துகொண்டிருக்கவில்லையாக்கும்’ என்று பீற்றிக்கொள்ள நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள்தான். மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் என்ன இருக்கிறது? ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நம்புவதில் உனக்கென்ன சிரமம்? மனிதர்கள் நல்லவர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது நம்புவதாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப்போல் அறியாமை பழகு. பேய்ப்பிள்ளையாகு. நீயே உன்னை நல்லவனென்று நம்பத் தொடங்குவது இயல்பாகிப் போகுமொரு நாளில் யாரேனும் வந்து உன்னிடத்தில் நொய்மையான குரலில் மரணத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். என்னைப் போல அவனுக்காக நீ மினக்கெட்டு உட்கார்ந்து ஒரு கட்டுரை எழுதாதே. காசு சம்பாதிப்பது எப்படி அல்லது ஒரு வேலையைத் தேடிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பேசு. இரண்டும் அவனால் சாத்தியமில்லாத பட்சத்தில் நல்ல ஊதியம் வாங்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேசலாம். யதார்த்தத்திற்கும் குரூரத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக நான் நினைக்கவில்லை.