வாசிப்பு குறித்த பகிர்தல்ஜனநாயகம், சுதந்திரம், புரட்சி, மக்கள் சக்தி இன்னோரன்ன சொற்களை, அதன் முழு அர்த்தத்தினைக் குறித்து எந்தவித கேள்வியும் எழுப்பாமல் எம்மால் வெகு எளிதாக உச்சரிக்க முடிகிறது. தவிர,அச்சொற்களால் வசீகரிக்கப்பட்டு, அது வழங்கும் நிழல் பாதுகாப்பானதென முழுமையாக நம்ப வேறு செய்கிறோம். எமது நடைமுறை வாழ்வின் சுழற்சி பாதிக்கப்படாமலிருக்கும்வரை அவற்றின் அபத்தம் எம்மை உறுத்துவதில்லை. உண்மையில் கட்புலனாகாத பல்வேறுபட்ட அதிகார மையங்கள்தான் எம்மை இயக்கிக்கொண்டிருக்கின்றன. அவற்றுக்குக் கட்டுப்படாத குரல்களை தொண்டைக்குழிக்குள் முடக்கவும் செயலற்றதாக்கவும் தேவையேற்படின் இந்த உலகிலிருந்தே தூக்கியெறியவும் சர்வவல்லமை பொருந்திய அவர்களால் இயலும்.
ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறோம் என்று சொல்லத்தக்க நிலையிலிருப்பவர்களின் அல்லது அவ்விதம் நம்பிக்கொண்டிருப்பவர்களின் நிலையே இவ்வளவு பரிதாபத்திற்குரியதாக இருக்க, கல்வியறிவோ வெளிமனிதர்கள் மற்றும் உலகத்துடனான தொடர்பாடல்களோ, தொழினுட்பம் குறித்ததான அறிமுகமோ அற்ற பழங்குடி மக்களின் இருப்பு பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது?
சில மாதங்களின் முன்னர் ச.பாலமுருகன் எழுதிய ‘சோளகர் தொட்டி’என்ற நாவலை வாசிக்க நேர்ந்தது. அது கிளர்த்திய வலி வார்த்தைகளால் விபரிக்கவியலாதது. அந்த வலிக்கு சற்றும் குறைந்ததல்ல இந்த எளிய மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறும்.
‘ஜானு-ஸி.கே.ஜானுவின் வாழ்க்கை வரலாறு’என்ற பெயரில் பாஸ்கரன் என்பவரால் எழுதப்பட்ட நூல், எம்.எஸ்ஸால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. கேரளத்தில் பழங்குடி இனத்தில் பிறந்த, முறையான கல்வியறிவற்ற ஜானு என்ற பெண், நாகரீக மனிதர்கள் அல்லது பொதுச்சமூகம் என்று சொல்லப்படுபவர்களால் தனது இனத்திடமிருந்து சூறையாடப்பட்ட நிலங்களையும் இயற்கையோடியைந்த இயல்பான வாழ்வையும் மீட்பதற்காக நடத்திய போராட்டங்களைப் பற்றி அவருடைய மொழியிலேயே பேசுகிறது இந்நூல். கேரளத்தின் வயநாடு என்ற இடத்தில் ஜானுவுடனேயே நடந்து, பழங்குடி இன மக்களிடையே வாழ்ந்து, அவர்களின் வலிகளைக் கண்ணாரக் கண்டுணர்ந்து எழுதப்பட்டிருக்கிறது இந்நூல்.
ஒப்பீட்டளவில் குறைவெனினும் அறிவின் சாளரங்கள்(கதவுகள் அல்ல) திறக்கப்பட்டு, படித்து பட்டம் பெற்று, குடும்ப பொருளாதாரத்திலும் ஓரளவு பங்கெடுத்து நாகரிக சமூகம் என்று சொல்லப்படுகிற சமூகத்திலே வாழ்கிற பெண்களிடத்தில் இல்லாத கம்பீரம், அதிகார மையங்களின் மீது கேள்வி எழுப்புகிற துணிவு, அவற்றுக்கெதிரான போர்க்குரல், சொல்லளவில் மட்டுமல்லாது களத்தில் இறங்கிப் போராடும் சக்தி, அநியாயங்களுக்கெதிராகக் கிளர்ந்தெழுதலை தான்சார்ந்த மக்களிடம் தூண்டும் ஆற்றல், தலைமைப்பண்பு இவையனைத்தினதும் கலவைதான் ஜானு என்ற போராளி என இந்த நூலிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.
ஜானுவைப் பற்றித் தனது முன்னுரையில் நூலாசிரியர் பாஸ்கரன் குறிப்பிடுகையில் இவ்வாறு கூறுகிறார்.
“தாங்கள் பறிகொடுத்த நிலங்களை மீட்பதற்காக அந்நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்ய மக்களைத் தூண்டிவிட்டு அதற்குத் தலைமை தாங்கியதற்காக ஜானுவை போலிசார் ஒன்பது தடவைகள் தாக்கினார்கள். ஒவ்வொரு முறையும் சிறையில் அடைக்கப்பட்டார்.”
புகழ் என்பது ஒரு மயக்கம். அடையாளப்படுத்தப்படுதல் என்பது கிறக்கம் தரும் அங்கீகாரம். தெளிவற்றவர்களை சுயமோகத்தில் திளைக்கவைத்து, தேக்கத்துள் தள்ளி செயலற்றதாக்கிவிடுவன விருதுகள். 1994இல் கேரள அரசு, ‘சிறந்த பழங்குடி இன உழைப்பாளர்’என்ற விருதை ஜானுவுக்கு வழங்க முன்வந்தபோது, மலைவாழ் மக்களின் பதின்மூன்று கோரிக்கைகளை அரசு செயற்படுத்தவில்லை என்ற காரணத்திற்காக அந்த விருதைப் புறங்கையால் தள்ளியிருக்கிறார் ஜானு.
தனது மக்களின் உழைப்பு உறிஞ்சப்பட்டதைப் பற்றி ஜானு இப்படிச் சொல்கிறார்.
“எங்கள் ஆட்கள் வயலில் வேலை செய்யும்போது வரப்பில் நின்று ஓர் ஆள் கவனித்துக் கொண்டிருப்பான். கையில்லாத சட்டை போட்ட ஆள். பார்க்கப் பயமாயிருக்கும். எனக்கு அப்போது எதற்கும் பயம்தான். எங்கள் ஆட்களின் முதுகு இவ்வளவு வளைந்து இருப்பது தலைமுறை தலைமுறையாக இப்படிப் பயந்து பயந்து வாழ்ந்ததனால்தான் என்று தோன்றும். எங்கள் ஆட்கள் பேசும்போது முகத்தைப் பார்க்காமல் பேசுவதும் இந்தப் பயத்தினால்தான்.”
கட்சி,பண்ணையார்கள்,தோட்ட முதலாளிமார் எனப் பல்வகைப்பட்ட அதிகாரங்களும் இந்த எளிய மனிதர்களிடமிருந்து போட்டி போட்டுக்கொண்டு நிலங்களைப் பறித்துக்கொண்டன. பழங்குடியின மக்களின் நலன்களைக் கவனித்துக்கொள்வதற்கென நிறுவப்பட்ட கட்சியானது பணக்காரர்களின் முகவர்களாக,இடைத்தரகர்களாகத் தொழிற்பட்டதை ஜானு பல இடங்களில் வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார். இவர்கள் வாழ்வதற்கான நிலத்தை மட்டுமல்லாது இவர்களுக்குச் சொந்தமான இடுகாட்டையும்கூட, பணம் எனும் செல்வாக்கினால் சிலர் கையகப்படுத்திபோது அதனை எதிர்த்து அந்நிலத்தை மீளக் கைப்பற்ற வேண்டியேற்பட்டது. அந்நிலையில் காவற்துறை தலையிட்டு பழங்குடியினரைக் கைதுசெய்து நையப்புடைத்தது. ஒரு ஜனநாயக நாட்டில் அனைவரும் சட்டத்தின் முன் சமானமே என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால்,சட்டைப்பை கனத்தவனின் விரலசைவிற்கு ஆடும் பொம்மலாட்டம் என்றே அது புரியப்பட்டிருக்கிறது. ‘நிலமே வாழ்வுரிமை’என்பது பறிக்கப்பட்ட துயரை ஜானு இவ்வாறு வெளிப்படுத்துகிறார்.
“பண்ணையார்கள் எங்கள் நிலத்தை மட்டுமே எடுத்துக்கொண்டனர். குடியேற்றக்காரர்கள் எங்கள் ஆட்களையும் கைவசப்படுத்திக் கொண்டு வேலை செய்ய வைத்தனர். அதையும் இதையும் சொல்லி நல்ல விளைச்சல் உள்ள நிலத்தையெல்லாம் தங்கள் வசமாக்கிக் கொண்டனர். ஒரு குப்பி சாராயத்துக்கும் ஒரு கழி புகையிலைக்கும் ஒரு சேலைக்கும் நிலத்தை விட்டுக்கொடுத்தவர்கள் நிறையப்பேர்.”
ஒரு ஆணாதிக்க சமூகத்திலிருந்து கொண்டு பார்க்கும்போது கீழ்த்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தி தனது மக்களுக்காக இத்தனை தீரத்துடன் போராடியிருப்பது வியப்பைத் தந்தது. ஆனால், மேற்கொண்டு புத்தகத்தை வாசித்துக்கொண்டு போகும்போது ஒன்று புரிந்தது. அதாவது,பழங்குடி இனக் குழுமத்தைச் சார்ந்த ஆண்களிற் பெரும்பாலானோர் திண்ணையிற் சோம்பிக் குந்தியிருந்து வெறுமனே நேரத்தைக் கழிக்கிறவர்களாகவும், காடுகளிற் சுற்றித் திரிபவர்களாகவும், வெளி ஆட்களின் ஆசை வார்த்தைகளில் கட்டுண்டு,அவர்கள் வாங்கிக்கொடுக்கும் சாராயத்திற்காக நிலத்தை விட்டுக்கொடுப்பவர்களாகவும் இருந்த காரணத்தினால் பெண்களே அந்தச் சமூகத்தில் நிலம் முதற்கொண்டு யாவற்றிலும் உழைப்பவர்களாகவும் குழந்தைகளைப் பார்த்துக்கொள்பவர்களாவும் இருந்திருக்கிறார்கள். தங்கியிருப்பவர்கள் தம்மைத் தாங்கிப் பிடித்திருக்கிறவர்களுக்குக் கட்டுப்படுவரென்ற பொதுநியதியின் அடிப்படையிலேயே ஜானு என்ற பெண், மக்கள் போராளியாக உருவாகியிருக்க வேண்டும்.
நீர்நிலைகள் நிரப்பப்பட்டு வீடுகள் எழுந்துகொண்டிருக்கின்றன. மரங்கள் அழிக்கப்படுவதனால் வானம் கைவிரித்துக்கொண்டிருக்கிறது. காடுகள் குறைந்துவரும் காரணத்தால் பறவைகள் துயரோடு தூர தூரமாய்ப் பறந்துவிட்டன. இயற்கையோடான உறவு இல்லாதொழிந்து கட்டிடக்காடுகளுக்கிடையில் நாகரிக விலங்குகளாக வலம்வரும் துர்ப்பாக்கியத்தை நாம் தேர்ந்தெடுந்திருக்கிறோம். இந்தப் புத்தகத்தில் காடு பற்றிய விபரணையும் அதை இழந்த ஏக்கமும் விரவிக்கிடக்கிறது. அழகிய சொல்லாடலைக் கொண்டமைந்த அந்த வரிகளை வாசித்தபோது காட்டிற்குள் நின்றுகொண்டிருப்பதைப் போன்றிருந்தது.
“சில பறவைகளின் குரலைக்கொண்டே நேரத்தையும் காலத்தையும் தெரிந்துகொள்ள முடியும். மரங்கள் இலைகளை உதிர்க்கும்போது மாதங்களை அறிந்துகொள்ளலாம். வெயிலைப் பார்த்துப் பகல் முடிவதையும், மேகத்தைப் பார்த்து மழை வருவதையும் அறியலாம். மலைகளுக்கும் குன்றுகளுக்கும் உயரே இருள் வீழ்வதைப் பார்த்தால் எங்கே காற்று வீசுகிறது என்பது தெரியும்………………………….. காட்டில் விழும் மழையும் காட்டில் விழும் வெயிலும் காட்டில் விழும் பனியும் எங்களுக்கு ஒன்றுதான். காலனிகளில் குடிசைகளில் எங்களை அடைத்தபோது நாங்கள் பறிகொடுத்தது நிலத்தை மட்டுமல்ல, எங்கள் வாழ்க்கைச் சூழலையுந்தான்.”
தங்களால் இழக்கப்பட்ட நிலங்களுக்காக ஒரு பெண்ணின் குரல் ஓங்கி ஒலித்தபோதிலும், போராட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் அங்கும் பெண் என்பவள் அதிகாரம் மிக்கவர்களால் வேட்டையாடப்பட்டு போகப்பொருளாக்கப்பட்டிருக்கிறாள் என்ற செய்தியை ஜானுவின் வரலாற்றில் காணமுடிகிறது.
“அங்கிருந்த பெண் குழந்தைகளை படிப்பதற்கென்று சொல்லி ஹாஸ்டல் கட்டி அங்கே கொண்டு தங்கவைத்து அதிகாரத்துக்கும் பதவிக்கும் பணத்துக்குமாக பொறுப்பானவர்களே அவர்களைப் பயன்படுத்திக்கொண்டனர். அவர்களுடைய வேட்கையுள்ள அச்சமூட்டுகிற அதிகாரமுள்ள பலமான கைகளே எங்கள் பெண் குழந்தைகளை விலைபேசின.”
என்ற வரிகளை வாசித்தபோது ‘சோளகர் தொட்டி’மீளவும் நினைவில் எழுந்தது. தேடுதல் என்ற பெயரில் இதே போன்றதொரு விளிம்புநிலை(நன்றி மிதக்கும் வெளி) சார்ந்த பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வக்கிரங்கள், வன்முறைகள், குரூரம் வழிந்த காமக்களியாட்டங்கள் நியாயத்தின்பால் நம்பிக்கை கொண்ட எந்த மனிதரையும் (ஆண்-பெண் என்றில்லாமல்)ஆடிப்போகச்செய்துவிடும்.
“ஒரு சைக்கிள்கூட இல்லாத காலனிகளுக்காக ரோடுகள் அமைப்பது அதனால்தான்”
“திருமணம் ஆகாத தாய்மாரை உருவாக்கியதில் கட்சிக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் பெரிய பங்கு உண்டு. கட்சி ஆட்களின் குழந்தைகள் எங்கள் குடிசைகளில் வளர்வது கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமோ என்று தெரியவில்லை”
மேற்கண்ட எள்ளலின் பின்னாலிருக்கும் கசப்பு எத்தன்மையதாக இருக்க வேண்டும்! மனிதர்கள் மீதான நம்பிக்கை எவ்வளவு சிதைக்கப்பட்டிருந்தால் இப்படிப் பேசுதல் இயலும்!
காட்டின் மடியில் குழந்தைகளாக இருந்தவர்கள், காலனிவாசிகளாகவும் எஞ்சியோர் புரியாத நகரங்களின் அழுக்குகளில் அலைவுற எனவும் விதிக்கப்படுவதென்பது எத்தகைய துரோகம்.
பெரும்பாலும் ஒருவரைக் குறித்த வரலாற்று நூல்கள், அகப்படும் இண்டு இடுக்குகளில் எல்லாம் புகுந்து சுயதம்பட்டம் அடிப்பவையாகவும், குறிப்பிட்ட நபரின் பின்னால் ஒளிவட்டத்தைச் சுழலவிடுவனவாகவும், அதிமானுடச் சித்தரிப்பையுமே செய்கின்றன. அல்லது வறண்ட தத்துவார்த்தக் குவியலாக அமைந்து வாசிப்பவரை விடாப்பிடியாக வெளியேற்றிவிடும். எளிமையான மொழிநடையில் எழுதப்பட்ட, சிறிய புத்தகம் இது. காட்டுக்குள் ஒலிக்கும் பறவைகளின் குரலைப்போல ஒப்பனையற்ற உண்மையின் குரலாக அது இருந்தது.