12.28.2007

வார்த்தைகளுடன் வாழ்தல்

சிறுவயதிலிருந்து நாம் எத்தனை ஆயிரம் வார்த்தைகளோடு பரிச்சயம் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப்பார்க்கும்போது அதிசயமாக இருக்கிறது. அவையெல்லாம் நாளாந்த வாழ்வில் பிரயோகிக்கப்படாமல் மனதின் ஆழத்தில் வாழ்ந்துகொண்டுதானிருக்கும். வாசிப்பவர்களின் மனம் என்பது ஏறக்குறைய ஒரு அகராதி போல. அல்லது சொற்களின் கிடங்கு எனலாம். யவனிகா ஸ்ரீராமின் வார்த்தைகளில் சொல்வதானால் மனமொரு ‘சொற்கள் உறங்கும் நூலகம்’என்றுகூடத் தோன்றுகிறது. சொற்களின் உறக்கத்தைக் கலைத்துப் பேசவைக்கிற உத்தி கைவரப்பெற்றவர்களே எழுத்தாளர்களாகக் கவனிக்கப்படுகிறார்கள்.

அண்மையில், அ.முத்துலிங்கம் அவர்களின் ‘வியத்தலும் இலமே’என்ற நேர்காணல் தொகுப்பு வாசிக்கக் கிடைத்தது. உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நேர்காணல்கள் உள்ளடக்கப்பட்ட தொகுப்பு அது. அதில் இரண்டிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் தாம் விரும்பி ‘வாசிப்பது’அகராதியையே என்று குறிப்பிட்டிருந்தார்கள். புதிய வார்த்தைகளோடு அறிமுகம் செய்துகொள்கிறவனால் (இந்த ‘ன்’ விகுதியை விலக்குவதெப்படி…? வாசகர்களுக்கு அதுவே பழகிப்போனதால் அந்த லயத்தைத் திசைமாற்றி குறுக்கீடு செய்ய விரும்பாது ‘ன்’ இலேயே தொடர்ந்து இந்த ‘ள்’ ஆனவள் எழுதிக்கொண்டு போகிறேன்.) தேய்ந்த வழக்காறுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதியதோர் உலகத்தைத் தரிசிக்கவும், தான் கண்டுணர்ந்த பேரொளியை வாசகர்களின் மனங்களில் ஒரு சிறு சுடராகவேனும் ஏற்றவும் முடிகிறது.

‘எழுதிய மறுகணம் அந்தப் படைப்பு இறந்துவிடுகிறது’என்பது எத்தனை உண்மை. உள்ளுக்குள் ஊடாடிக்கொண்டிருக்கும்வரைதான் அதற்கு உயிர் இருக்கும். அதை இறக்கிவைத்தவுடன் எழுதியவனைப் பொறுத்தளவில் அந்த உன்னதம் அழிந்துபோகிறது. நேசத்திற்குரிய குழந்தையைப்போல எண்ணத்தைச் சுமந்துகொண்டிருக்கும்வரை அதனோடு எவ்வளவு பேசிக்கொண்டிருந்தோம். சரி, தவறு என விவாதித்துக்கொண்டிருந்தோம். படைப்பாக இறக்கிவைத்தவுடன் நேற்றின் துயர் போல அதுவும் கரைந்துபோய்விடுகிறது. அந்த வெற்றிடத்தை வேறொன்று இட்டு நிரப்புகிறது. தெளிந்த சிந்தனையுடைய எவராலும் தங்கள் எழுத்தை ‘நன்றாயிருக்கிறது’என்று கட்டித்தழுவிக்கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. எழுதியவனுக்கே பிடிக்காமற் போய்விடும் எழுத்தை மற்றவர்கள் கொண்டாடும்போது ‘ஏமாற்றுகிறோமே…’என்றொரு உறுத்தல் எழுதலே இயல்பு. ஒவ்வொரு எழுத்தாளனுமே ஒரு படைப்பை அதன் முழு உருவத்தோடும் வீச்சோடும் இறக்கிவைக்க முடியாமற் போகும் அயர்ச்சியோடும் ஆற்றாமையோடும்தான் இந்த வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொள்கிறான் என்று தோன்றுகிறது.

‘அது தன்னையே எழுதிக்கொண்டது. நான் அதற்கொரு கருவியாக இருந்தேன்’என்று சொல்வது மிகைப்படுத்தலல்ல. ஒப்பனை வார்த்தையுமல்ல. நாற்காலியை நோக்கித் தன்னை இழுத்துச் சென்று அதில் பொருத்திக்கொள்வதுதான்; எழுதுபவர்களுக்குக் கடினமானதெனத் தோன்றுகிறது. பேனாவால் எழுதுவதோ தட்டச்சுவதோ எதுவானாலும் உட்கார்ந்து கையை வைத்த சில நிமிடங்களுக்கு ‘விளையாடப் போகிறேன்’ என்று அடம்பிடிக்கும் குழந்தையைப் போல எழுத்து சிணுங்கிக்கொண்டிருக்கும். பிறகு நடப்பதுதான் விந்தை! பிறகு வேறொரு உலகம்… வேறு மனிதர்கள்… வேறு இசை…. அந்த மாயக்குழலோசையைத் தொடர்ந்து நாமறியாத வீதிகளில் நடந்துகொண்டிருப்போம். என்றோ நாம் சந்தித்த மனிதர்களுடன் பேசத் தொடங்குகிறோம். அவர்கள் பேசத் தவறியதைப் பேசத் தூண்டுகிறோம். அல்லது அவர்கள் வழியாக நாம் பேசுகிறோம். எம்முள் புதையுண்டிருக்கும் நகரங்கள் உயிர்க்கின்றன. உறைந்தவை யாவும் சலனமுறத் தொடங்குகின்றன. காட்டின் இருள், கடலின் ஆழம், இரவின் இரகசியம் போல அந்தக் குரல் நமக்கே புரிபடாத வசீகரத்துடன், புதியதொரு மொழியில் பேசுகிறது. அதை மொழிபெயர்த்து ஒரு சிலரால் எழுதிவிட முடிகிறது. ஒரு தியானத்தைப்போல அதை உணர்ந்துகொண்டிருக்கத்தான் சிலரால் முடிகிறது. என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்று சொல்லவும் முடிவதில்லை. காலம் குறித்த பிரக்ஞை அற்றுப்போகிறது. பூட்டிய கதவுக்கப்பால் ஓருலகம் இயங்கிக்கொண்டிருப்பது மறந்துபோகிறது. இயற்கையை மனிதரால் எப்படி முழுமையாகப் புரிந்துகொள்ள முடிவதில்லையோ எழுத்தும் அத்தன்மையதே.

நதியை வகிர்ந்தொரு படகு போகிறது. போன மறு கணம் சுவடும் இல்லாமல் நீர் கூடிவிடுகிறது. எழுத்துக் கூடிவரும் லயமும் அப்படித்தான். அந்தக் கணத்திலிருந்து நாம் ஒன்றைப் பொறுக்கிக்கொள்கிறோம். கொடுத்துவிட்டு ஒரு துளியும் குறையாத முழுமையுடன் அழகுடன் பொலிவுடன் அது இருந்துகொண்டுதானிருக்கிறது. ‘இந்தக் கருவில் இதை எழுதிக்கொடுங்கள்’என்று யாராவது கேட்கும்போது, சாத்தியமற்றதெனத் தெரிந்தும் மறுக்கமுடிவதில்லை. ஒரு சட்டையைத் தைப்பதுபோலவோ ஒரு அலமாரியைச் செய்வதுபோலவோ அல்ல எழுதுவது. அது தன்னியல்பானது. ஒரு பழத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் விதையைப் குப்பையில் வீசிவிடுகிறோம். மண்ணுக்குள் அது தன்னைத் தயார்ப்படுத்துகிறது. மழைக்காகக் காத்திருக்கிறது. வீரியமுள்ளது வேளை வரும்போது மண்ணை முட்டி மோதிக்கொண்டு முளைவிடுகிறது. நாமாக முனைந்து எழுதுவதும், கால நிபந்தனைகள் வழங்கி எவரும் எழுதக் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதுவதும் ‘பிளாஸ்டிக்’காலான செயற்கைத் தாவரம் மாதிரித்தான். அழகிருக்கும். வாசனை இருக்காது. பிறகு உயிரை எங்கேயென்று தேடுவது…? சொற்களைத் தேர்ந்து ஒப்பனை செய்து பார்வைக்கு விட்டுவிடலாம்.(அல்லது விற்றுவிடலாம்) அதற்கு வணிகனுக்குரிய தந்திரமும் சாதுரியமும் போதுமானது. உண்மை தேவையில்லை.

எழுத்தின் இதயம் எந்த மனிதரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. சகமனிதர்கள் கைவிடும்போது எழுத்துத்தான் தாங்கிக்கொள்கிறது. ‘என்னை அடி, அணைத்துக்கொள், வதைசெய், வசம்செய், புறக்கணி, கொண்டாடு எதுசெய்தும் உன்னைத் துக்கத்திலிருந்து விடுவித்துக்கொள்’ என்று முழுவதுமாகத் தன்னைத் தருகிறது. அதன் தோள்களில் சாய்ந்துகொள்கிறோம். அதன் மடியில் படுத்துக்கொள்கிறோம். ‘என்னைக் கைவிட்டுவிடாதே’என்று கெஞ்சுகிறோம். மெல்லிதயம் கொண்ட அது புன்னகையோடு நம்மைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. எல்லாம் எல்லோரும் கைவிட்டுவிட்டபோது கடைசிப் பற்றுக்கோடாக எழுத்தைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களை உலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று தூற்றுகிறது.

புறவுலகோடு சமரசம் செய்துகொள்ள முடியாதவர்களின் கடைசிப் புகலிடம் புத்தகங்கள் அல்லது மரணம் என்றே தோன்றுகிறது. புத்தகங்களை நேசிப்பவர்களை புத்தகங்களால் மட்டுமே புரிந்துகொள்ளமுடிகிறது. மனிதர்களை நேசிப்பவர்களை மரணம் மட்டுமே புரிந்துகொள்கிறது. ‘எழுத்து சோறு போடாது’என்று பலரும் சொல்கிறார்கள். அது பெரும்பாலும் உண்மையாகத்தானிருக்கிறது. சோறும் எழுத்தெனும் சொர்க்கமும் அருகருகில் இருப்பது சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்கள் பாக்கியவான்கள். வேலை என்ற பெயரில் ஒரு நாற்காலியிடமோ அல்லது ஒரு இயந்திரத்திடமோ கையில் சாட்டையோடு உலவும் எசமானர்களிடமோ குறைந்தபட்சம் கடிகாரத்திடமோ நம்மை விட்டுக்கொடுத்துவிட்ட பாவிகளாகத்தான் பெரும்பாலும் உலவவேண்டியிருக்கிறது. ஒருவனின் படைப்புத்திறனை வேலை விழுங்கிவிடுகிறது. அவனுள் ஓடிக்கொண்டிருக்கும் நதி வற்றிப்போகிறது. அவன் காலத்தால் பின்தள்ளப்பட்டு கவனிக்கப்படாது போகிறான்.

“எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் பிளேட்டோ சொன்னதுதான் சரி. நமக்குள் இருப்பதுதான் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறது. அதை மீறி ஒன்றுமில்லை.”

என்று ‘கண்ணாடியாகும் கண்கள்’இல் நகுலன் சொல்லியிருப்பதுபோல கதைகளைத் தேவதைகள் (எனக்கு இந்தத் தேவதை என்ற சொல் பிடிக்கும்)கொண்டுவந்து நம்மிடையே எறிந்துவிட்டுப்போவதில்லை. அவை எமக்குள் இருக்கின்றன. அவற்றைக் கண்டுபிடித்துப் பேச முடிந்தவர்கள் இருக்கிறார்கள். கண்டுபிடிக்கும் முயற்சியில் காணாமற் போனவர்களும் இருக்கிறார்கள். நாம் கண்டுபிடிப்பவர்களா தொலைந்துபோகிறவர்களா என்பதைக் காலம் தீர்மானிக்கும் என்று சொல்லிவிட்டுச் செல்லவே விருப்பம். ஆனால், சந்தர்ப்பங்களும் செல்வாக்கும் காழ்ப்புணர்வும் பக்கச்சார்பும் எழுத்துலகத்தையும் ஆக்கிரமித்திருக்கும் போது அவ்விதம் சொல்லிச் செல்வதில் தயக்கம் இருக்கவே செய்கிறது.

11.18.2007

ஆரத்தி



பாரதி நெடுநேரமாக மேடையில் வலப்புறத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.

அந்த மண்டபத்தின் மேடை கலகலத்துக்கொண்டிருந்தது. நாதஸ்வரக்காரர் தன்னால் முடிந்தவரை உயரத்திற்குப் போவதும் பிறகு சடாரென்று கீழிறங்கி தானே தன்னைச் சிலாகித்துக்கொள்வதுபோன்ற பாவனையில் தலையாட்டுவதுமாக காற்றோடு வாதாடிக்கொண்டிருந்தார். மேளக்காரரும் விடுவதாயில்லை. விட்டேனா பார் என்று கொட்டி முழக்கிக்கொண்டிருந்தார்.
நடுநாயகமாக அண்ணனின் மகள் தாட்சாயணி மஞ்சள் முகமும் பட்டுப்புடவையும் நகைகளுமாக மின்னிக்கொண்டிருந்தாள். இன்னமும் குழந்தைமை மாறாத பசிய முகம். அவர்களின் உறவுக்குள் இத்தனை அமர்க்களமாக யாரும் சாமத்தியச் சடங்கு செய்ததில்லை. சபையில் அமர்ந்திருந்தவர்களும் மினுமினுப்பாய்த்தானிருந்தார்கள். நாற்காலியில் இருந்தபடி நகரத்தை ஆட்டிவைக்கும் பெரிய மனிதர்கள், மகா மகா பணக்காரர்கள், தமிழைத் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு எப்பவோ மூட்டை கட்டிக்கொண்டுபோன வெள்ளைக்காரனின் மொழியை விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறவர்கள்... என்று மரியாதைப்பட்ட சபைதான் அது.
“ஆரத்தி எடுக்க வேணும் வா”என்று பாரதியை பெரியம்மாதான் அழைத்துவந்தாள். இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சடங்குகளுக்குள் காணாமற்போயிருந்தாள். கிராமங்களில் போலன்றி, தெளிவான திட்டமிடலை அந்த வைபவத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் அவதானிக்க முடிந்தது. அண்ணியின் தோழிகளில் ஒருத்தி கையிலிருந்த பேப்பரில் எழுதியிருந்த பெயர்களில் ஒவ்வொருவராக அழைக்க, அவர்கள் மேடையின் பக்கவாட்டில் இருந்த படிகள் வழியாக மேடையேறி ஆரத்தி எடுத்துவிட்டு வந்தார்கள்.

பாரதி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபோது ஏறத்தாழ பதினைந்து பெண்கள் அவ்விடத்தில் குழுமி நின்றிருந்தார்கள். இப்போது ஆறு பேர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். ஆரம்பத்தில் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த அவர்களும் நேரம் ஆக ஆக மேடை வாயிலை நோக்கி சலிப்பார்ந்த விழிகளை எறியவாரம்பித்திருந்தார்கள்.
தன்னை இன்னும் அழைக்காதது பெரிய குறையாக பாரதிக்குத் தோன்றவில்லை. வீட்டிற்குள்ளேயே சுவாதீனமாக சுற்றி வந்த உறவுக்காரி.... நிதானமாக அழைக்கலாம் என்றிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள்.
பாரதியின் அப்பாவும் தேவேந்திர அண்ணனின் அப்பாவும் கூடப்பிறந்த சகோதரர்கள். பழகிய வீட்டையே சுற்றிக்கொண்டிருக்கும் பூனைக்குட்டியைப்போல பாரதி பெரியப்பா வீடே கதியென்று கிடப்பாள். தேவேந்திர அண்ணனின் தங்கச்சி ரேவதியும் பாரதியும் ஒட்டென்ற ஒட்டு. நகரத்திற்குப் போவதென்றால் ஒன்றாகவே போவார்கள். தோழிகள் வீட்டிற்கும் அப்படித்தான். இரவிரவாக கிசுகிசுவென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு விடிகாலையில்தான் தூங்குவார்கள்.
"விடிய விடிய அப்படி என்னதான் பேசுறீங்களோ..."பெரியம்மாவின் கேள்விக்கு விடை சொல்லாமல் ஆளையாள் பார்த்துச் சிரிப்பார்கள்.

அந்தப் பெண் பேப்பருடன் அருகில் நெருங்கியதும் பாரதி பரபரத்து எழுந்திருந்தாள்.

“தேவமனோகரி”

பெயரைக் கேட்டதும் ஒரு பெண் முகம்மலர்ந்து எழுந்துபோனாள். பாரதியின் மனசுக்குள் சின்ன பதைப்பு பரவ ஆரம்பித்தது.

“என்னை ஏன் இன்னும் கூப்பிடவில்லை…? ஒருவேளை… ச்சே!”எழுந்த சந்தேகத்தை அடித்து விரட்டினாள்.
அண்ணன் அப்படியெல்லாம் பேதம் காட்டுகிறவரில்லை. ஊரில் சாதாரணமாக இருந்தபோதும், பிறகு பதவி பணம் என்று வாழ்வான வாழ்வு வந்தபோதும் 'வா'என்றழைக்கும் அந்த வாஞ்சை மட்டும் மாறியதேயில்லை. ஊரில் சில பேர் வாயகட்டி பல்லைக் காட்டி மூடுகிறபோது மாடு அசைபோடு்ம் ஞாபகம்தான் வரும். அண்ணன் அப்படியில்லை. சிரிப்பென்றால் மல்லிகை அப்படியே பூத்துச் சொரிகிற மாதிரி வெள்ளந்தியான சிரிப்பு. அண்ணன் பரீட்சை எழுதி உதவி கலெக்டராக ஊருக்குள் வந்தபோது பெரியப்பாவின் தோரணையே மாறிப்போயிற்று. சாதாரணமாகவே வக்கணைப் பேச்சை மொத்தக் குத்தகைக்கு எடுத்தாற்போலிருப்பார். சொல்கிற சொல்லில் கேட்கிற நெஞ்சு கருகிப்போகும். 'போறேண்டா சாமீ'என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஓடிப்போக வைக்கிற வாய் அது. அண்ணனுக்கு வேலை கிடைத்ததும் உப்பரிகை மகாராஜாவாகிவிட்டார். கூடப்பிறந்த சகோதரனையே 'ஏண்டா நாயே...'என்பதுபோல பார்த்தார். பாரதியின் அப்பா தன்னுடைய அண்ணாவைக் கண்டுகொள்ளமாட்டார். 'அண்ணீ...!'என்று கூப்பிட்டுக்கொண்டு விறுவிறுவென்று நேரே சமையலறைக்குப் போய்விடுவார்.
பெரியப்பாவின் ஆர்ப்பாட்டம் பொறுக்காமல் சிலநாட்கள் அங்கே போகாமல் இருப்பாள். ஆனால், மாலையானதும் ரேவதியின் ஞாபகம் வந்துவிடும். கவலை, காதல், கஷ்டம் எதுவானாலும் அவளோடுதான் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
பெரியப்பாவின் பணத்திற்காக அவரை உப்பரிகையிலேற்றியவர்கள் இருந்தார்கள். அவர்களைப் போகவிட்டு 'பிச்சைக்காரப்பயல்கள்'என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறாள். கண்ணெல்லாம் குரோதமாக அவரைப் பார்க்கிறபோது நெருஞ்சிச்செடிதான் நினைவில் வரும். வழியோடு போகிறவர்களைப் பிடித்திழுத்து அதுதான் வம்புபண்ணும். கொழுவிக்கொண்டால் பிடுங்கி எடுத்தபிறகும் வலிக்கும்.

பெரியம்மா ஒரு அற்புதமான மனுசி. சமையல் நேரம் போக மிகுதி நேரம் புத்தகம் படித்துக்கொண்டிருப்பாள். அயலிலிருந்து வம்பு பேச வருகிற பெண்கள் வருத்தத்தோடு திரும்பிப்போக வேண்டியிருக்கும். எவரையும் குத்திப் பேசத் தெரியாது. பாரதிக்கு பெரியம்மாதான் ஆதர்சம். பெரியம்மாவும் அவளில் பிரியமான பிரியமில்லை. கோழிக்குழம்பிலிருந்து எல்லாமே ஒரு கிண்ணத்தில் பாரதிக்கென தனியே எடுத்துவைத்திருப்பாள். பெரியப்பாவின் வார்த்தை அம்புகள் தைத்த இடங்களில் பெரியம்மாவின் அன்பு மருந்தாய் வழியும். அன்பை அலட்டிக்கொள்ளாமல் வார்த்தை வார்த்தையாய் கோர்த்துச் சொல்லாமல் கண்களால் வெளிப்படுத்தும் அண்ணனின் குணம் பெரியம்மாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

“மனோன்மணி”

‘இப்போதாவது கூப்பிட்டார்களே’என்று எஞ்சியிருந்தவர்களின் மீது ஒரு புன்னகையை வீசிவிட்டு அந்தப் பெண் போனாள். இப்போது பாரதியோடு சேர்த்து நான்குபேர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். மற்ற மூன்று பெண்களும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் போல… பெயர் கூப்பிடும்போதில் கலைந்த கதையின் நுனியைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தார்கள்.

பாரதிக்குள் பயம் அலைபுரளத் தொடங்கியது. ‘அண்ணன் அப்படிச் செய்கிறவரில்லை’என்று சமாதானப்பட்டுக்கொண்டாள். அண்ணனுக்கு கடவுள் பக்தி அதிகம். நீதி நியாயம் பார்ப்பவர். என்னதான் வேலையென்றாலும் எங்கே இருந்தாலும் ஊர்த்திருவிழாவுக்கு வந்து சேர்ந்துவிடுவார். வேலை கிடைத்து மூன்று ஆண்டுகள் வரை அவருக்குக் கல்யாணமாகவில்லை. இளமஞ்சள் பட்டு மேலங்கி அணிந்து பட்டுவேட்டி புரளப் புரள அவர் கோயிலுக்குள் நடந்த பாதையெல்லாம் கல்யாணத்திற்குக் காத்திருக்கிற உறவுக்காரப் பெண்களின் கண்கள் விழுந்துகிடந்தன. தேவேந்திர அண்ணனுக்கு கறுப்பில் வார்த்த களையான முகம். பெரிய வேலையில் சேர்ந்தபிறகு அந்தக் கறுப்பில் ஒரு மினுமினுப்பு படர்ந்துவிட்டது. எங்கெங்கோவிருந்தெல்லாம் சம்பந்தம் பேசிவந்தார்கள். பெரியப்பா ஓடும் மீன்களை ஓடவிட்டு உறுமீனுக்காகக் காத்திருந்தார்.

அவருடைய எதிர்பார்ப்பு முதன்முதலாகப் பொய்த்துப்போனது அண்ணனின் கல்யாணத்தில்தான். தன்னோடு வேலை பார்த்த பெண்ணை அண்ணன் காதலித்தார். அவளையே கட்டிக்கொள்வேன் என்று பெரியப்பாவின் கொக்கைப்போல ஒற்றைக்காலில் நின்றார். பெரியப்பாவோ இரண்டுகாலிலும் நின்று மன்றாடிப் பார்த்தார். கடைசியில் அண்ணனின் பிடிவாதம்தான் வென்றது. உயரமாய் களையாய் எல்லோரையும் அரவணைத்துப்போகிற பண்பாய் மதுமிதா அண்ணி வீட்டிற்குள் வந்தாள்.
பெரியப்பாவான பெரியப்பாவையே எதிர்த்து காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்துகொண்ட அண்ணனை பாரதி மனசுக்குள் கொண்டாடினாள். அதன் பிறகு ஒரு படி மதிப்பு உயர்ந்துதான் போயிற்று. கூடப் பிறக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கம் தோன்றியது அப்போதுதான்.

“எங்கண்ணன் பெரிய உத்தியோகம் தெரியுமா?”
"உங்கண்ணனா... அவரு எதோ மெக்கானிக் இல்ல...?"
"இது எங்க பெரீப்பா மகன்"
"ஓ....!"
சுருதி இறங்கிய குரல்களிடம் அண்ணனின் பெருமைகளைச் சொல்லியபடியிருப்பாள். 'அவ்ளோ நல்லவரா அவர்?'கேட்கும் வரை விடமாட்டாள்.

அண்ணனுக்கு ஒரே மகள். ஏராளமான சொத்துப் பத்தை ஆள ஒரு ஆண் வாரிசு இல்லையே என்று அவர்களுக்குக் கவலைதான். மகளுக்கு காலையிலிருந்து மாலைவரை படிப்பு… படிப்புத்தான். பிறக்கும்போதே வரம்பெற்று வந்த பிள்ளை அது. குணத்தில் அப்பனையே கொண்டிருந்தது.

அவளுக்குத்தான் இப்போது சாமத்தியச் சடங்கு நடக்கிறது. பெரியப்பா குடும்பம் ஊர்பெயர்ந்து போய் நகரத்தில் பெரியவீடாக வாங்கித் தங்கிவிட்டார்கள். பாரதியின் கல்யாணத்திற்கு ஊருக்கு வந்துபோனபிறகு திருவிழா தவிர்த்து அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை. கல்யாணத்தின்போது பாரதியின் கையில் அண்ணன் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அவள் அதை நீண்டநாட்களுக்கு செலவழிக்காமல் பொத்திப்பொத்தி வைத்திருந்தாள். ஏதேனும் வேலையாக நகரத்திற்கு வந்தால் தன் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று அண்ணன் சொன்னார். மது அண்ணி ஒரு சுற்றுப் பெருத்திருந்தாள். ஒவ்வொரு கையிலும் குறைந்தது பத்து தங்கக் காப்புகளாவது இருக்கும். ஊரில் அண்ணனுக்கும் மனைவிக்கும் மரியாதையான மரியாதை. ‘வீட்டுக்கு வந்திட்டுப் போங்க’என்று கண்ணில் பட்ட எல்லோரும் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிரித்துச் சிரித்து ஆளுக்கொரு சமாதானம் சொல்லிவிட்டு காரேறிப் போனார்கள்.

“ஆனந்தி”
அந்தப் பெண் கர்மசிரத்தையாக பெயரை வாசித்து நால்வரில் ஒருத்தியை அழைத்துப்போனாள்.

பாரதியின் வயிற்றுக்குள் அமிலப்பந்து உருளவாரம்பித்தது. வந்ததற்கு தண்ணி வென்னிகூட குடிக்கவில்லை. காலையிலேயே ஆரத்தி எடுக்கவென பெரியம்மா அழைத்துவந்து விட்டுவிட்டாள். பசித்தது. வெளியே போய் பலகாரம் ஏதாவது சாப்பிட்டுவரலாமென்றால் அதற்குள் ‘பெயரைக் கூப்பிட்டுவிட்டால் என்ன செய்வது?’என்று யோசனையாக இருந்தது.
மற்ற இரு பெண்களும்கூட களைத்துப்போயிருந்தார்கள். முகத்தில் சலிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. பேச்சு ஓய்ந்துபோய் மேடை வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதேச்சையாகத் திரும்ப மண்டபத்தின் பின்புற வாயிலில் பெரியப்பா நின்று இங்கேயே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் மின்னிய கண்களிலிருந்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

சாமத்தியச் சடங்குக்கு வரும்படி அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். ஆளனுப்பிச் சொல்லவில்லையே என்று அம்மாவுக்கு உள்ளுக்குள் வருத்தந்தான். என்றாலும் தேவேந்திர அண்ணனின் குணத்திற்காக எல்லோரும் பெரிய கூட்டமாகக் கிளம்பிவந்திருந்தார்கள். அப்பா,அம்மா,அக்கா,அக்காவின் புருசன், அக்காவின் பிள்ளைகள் மூவர், அண்ணா, அண்ணி, அண்ணாவின் பிள்ளைகள் நால்வர், பாரதி, பாரதியின் புருசன், சித்தி, சித்தி மகள்கள் இருவர்… பன்னிரண்டு பேர் கொள்ளத்தக்க வண்டியில் பதினெட்டுப் பேர் இடித்து நெருக்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். வரும்போது ஒரே பாட்டும் கூத்துமாக அமர்க்களப்பட்டது. அண்ணன் நகரத்திற்குள் அவர்களுக்கெனவே ஒரு வீடு ஒழுங்கு செய்திருந்தார். அண்ணன் எது செய்தாலும் அதிலொரு நேர்த்தி இருக்கும் என்று பாரதி தன் புருசனிடம் மெச்சிக்கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் வாங்க”

பாரதியைத் தவிர்த்து மற்ற இரு பெண்களும் ‘அப்பாடா’என்று கிளம்பிப் போனார்கள். அவர்களிலொருத்தி பாரதியை பரிதாபமாக திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனாள். 'தனியா நிக்கிறியே'என்ற தயை தெரிந்தது.

கல்யாணமாகி நான்கு வருடங்களாகியும் பாரதியின் வயிற்றில் குழந்தை தங்கவில்லை. பாரதிக்கும் புருசனுக்கும் அது குறையாகவே தோன்றியதில்லை. அதையிட்டு ஒருநாளும் மனத்தாங்கல் கொண்டதுமில்லை. பாரதியின் அம்மாதான் புலம்பிக்கொண்டேயிருந்தாள். நேர்த்தி வைத்து விரதமிருந்தாள். ஏதாவது விசேடங்களுக்குச் சென்றுவந்தால் அம்மாவின் முகம் இருண்டுவிடும்.

“கல்யாணம் கட்டி ஒரு வருசம் ஆகேல்ல… தனபாக்கியம் மகளுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்திருக்கு”

பாரதி இப்போது தனியாக நின்றுகொண்டிருந்தாள். உள்ளுக்குள் திகைப்பாக இருந்தது. ‘பாரதி எங்கே?’என்று அண்ணன் தேடிக்கொண்டு வருவார் என்று உள்ளுக்குள் ஒரு குரல் சொல்லிக்கொண்டிருந்தது. அண்ணன் தவறு செய்கிறவரல்ல. புறக்கணிப்பதென்றால் என்னவென்றே தெரியாதவர் தேவேந்திர அண்ணன்.

நம்பிக்கையின் ஈரம் மிச்சமிருக்கும் கண்களால் மேடையைப் பார்த்தாள். ஆரத்தி எடுத்து முடிந்திருந்தது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் பரிசுப்பொருட்களோடு வந்து நின்று போட்டோவுக்குச் சிரித்துக் கைகுலுக்கிப் போனார்கள். நீண்ட வரிசை காத்திருந்தது.

“அண்ணனா... அண்ணனா…”மனசு நம்பமாட்டாமல் மறுகிக்கொண்டிருந்தது.

“மலடி… மலடி”என்று தாளம் பிசகாமல் யாரோ பாடுவது மாதிரியிருந்தது. ஒவ்வொரு மலடிக்கும் மேளம் டும்டும்மென்றது. நெஞ்சடைத்து தலைசுற்றியது. இயல்பாகவே மண்டபத்தின் பின்பக்கம் கண்திரும்பிற்று. பெரியப்பா அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கண்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பதை நெருங்கிப்பார்க்க வேண்டியிருக்கவில்லை. இரையுண்ட பாம்பின் திருப்தி!

தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். அவமானம் பிடுங்கித் தின்ன வெளிவாசலை நோக்கி நகர்ந்தாள். அண்ணன் வாசலில் யாருடையவோ கைகளைப் பிடித்துக்கொண்டு உரத்த ஒலியெழ சிரித்துக்கொண்டிருந்தார். பாரதியைக் கண்டதும் கண்ணில் துளி அசங்கியது. அண்ணனுக்குத் திடீரென்று வயசானது மாதிரியிருந்தது.
“சாப்பிடேல்லையா…?”என்றார்.

உள்ளே நாதஸ்வரம் உச்சஸ்தாயியில் ‘பீ… பீ…’என்றது. மேளம் போட்டியாக டும் டும்மென கொட்டி முழக்கியது.

பாரதி அண்ணனின் கண்களைப் பார்த்தாள். அவருடைய விலையுயர்ந்த பட்டுவேட்டியைப் பார்த்தாள். கழுத்தில் புரண்ட சங்கிலியைப் பார்த்தாள். ஏதேதோ வார்த்தைகள் அடிவயிற்றிலிருந்து கிளம்பி ஊர்ந்து தொண்டைக் குழிவரை வந்துவிட்டன. வயிறு புரட்டிக்கொண்டு வந்தது.

“வயிறு நிறைஞ்சு கிடக்கு”என்றாள்.

போகும் வழியெல்லாம் அம்மா சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். சித்தியின் சமாதானக் குரல் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. பிள்ளைகளோ சூழலின் கனம் தாளாமல் வெளியே பார்த்துக்கொண்டு வந்தார்கள். வரும்போதிருந்த மகிழ்ச்சி செத்துப்போயிருந்தது.
"கூப்பிட்டு செருப்பாலடிச்சுட்டாங்களே..."அப்பா பொருமிக்கொண்டிருந்தார்.

பாரதிக்கோ அண்ணனின் கண்களைப் பார்த்து ஓங்கிச் சிரித்துவிட்டு வரமுடியவில்லையே என்ற கவலை பயண நெடுகிலும்அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

குறிப்பு: பெயர்கள் மட்டுமே கற்பனை

11.10.2007

போலச்செய்தல்


ஒருபொழுதில் உக்கிரக்காளி
புயல்வழி மரமென்றாடுகிறாய்
தீ பொதிந்து நீயனுப்பும் வார்த்தைகளால்
தீய்ந்து கருகு மென் இதயம்
வெப்பம் காற்றை இடையறாது
வன்கலவும் இவ்வூரின்
ஆளரவமற்ற பின்னிராச் சாலைகளில்
நினைவு பிடரியுந்தி விரட்ட
என்னைக் கரைத்தலைவேன்.
சிகரெட்டின் நுனி தசை தீண்டுகையில்
உன் உதடு கவ்வும் உச்சமடி தோழி!
தேசாந்தரியாகி
உண்டக்கட்டிக்கு கோயில் வாசலிலே
காத்திருந்ததற்கு கைமேல் பலன்!

எனதிந்தக் காயங்களின் மீது
கண்ணீரை ஊற்றுகிறாய்
ஒரு கணத்தில் உயிர்பெற்றிணைந்தன
தீய்ந்த திசுக்கள்
காதல் மதுவருந்திக் கண்கிறங்கி
‘இந்தக் கணமும் இறப்பேன்’என்றேன்.
ஒரு குழந்தையென
மடிசுருளும் என்மீதில்
மென்முலை பொதியப் பொதிய
இறுக்குகிறாய்
இற்று மறைகிறது புறவுலகு

தாயே!நின் வயிற்றில்
ஒரு துளியாகிச்
சூல்கொள்ளும் வரமன்றி
இனி யாதும் வேண்டேன்!

என்னவிதுவென புருவம் நெரிக்கவேண்டாம். ஒருவர்போல் எழுதிப் பார்த்தேன். வேறொன்றுமில்லை.

11.09.2007

தீபாவளி(லி)


தொடவியலாத உயரங்களை நோக்கி
எய்யமுடிந்த மகிழ்ச்சி
வானத்திலும் விழிகளிலும்
ஒளித்துளிகளாகச் சிதறுகின்றன.
நெருப்பும் கந்தகமும்
கூடும் உச்ச கணத்தில்
உள்ளுறங்கிக் கிடந்த மூர்க்கம்
வெடித்து ஒருவழியாய் வடிகிறது.
திடீர் விபரீதங் கண்டு
பதறிக்கிடக்கும் வீதிகளில்
அந்தரித்து அலைக்கழிகின்றன நாய்கள்.
நாளைவரை பிழைத்திருக்க
கையேந்துகின்றன செவிகள்.
வெறுங்கையுடன் கிராமம் திரும்பவியலாத
வேலையற்ற பிள்ளைகளின் கண்ணீர்
ஊர்ந்துகொண்டிருக்கின்றது நடைபாதைகளில்.
பண்டிகை நுனியில் தட்டுப்பட்டு
பொருக்குடைந்த காயங்களுடன்
மகிஷாசுரமர்த்தனீ!
இந்த நாள் உறங்கும்வரை
விழித்திருக்கிறோமடி!

11.03.2007

சேவிக்க மாட்டேன் சிறீரங்கப் பெருமானே!



முகட்டு வளைக் காப்பாய்
மூலைக்குள் சரசரப்பாய்
வாளியின் பின்புறத்தில்
வழுவழுத்துக் கிடப்பாய்

மரணத்தின் நதி வடிவாய்
நெளிந்துலவும் விதியுருவாய்
படைத்தவனைப் பழித்தபடி
படுத்திருப்பாய் தீங்கில்லை

தன்னினத்தைத் தூற்றி
புண்ணிலே எரி மூட்டும்
பொய்மையாளர் மை
போலில்லை விடம் நீயும்

சிறீரங்கப் பெருமானே!-உனை
சேவித்த கையிறக்கி
வசைபாட வைத்தானோர் பாவி!
வாழட்டும் அவனுடைய நீதி!

பிற்குறிப்பு: 'உள்குத்து' இல்லை... உள் 'கொத்து'தான்.

10.30.2007

புதைகுழிப் பூக்கள்



உயிரோடு ஒருநாளும் பார்த்ததில்லை-உங்கள்
பெயர்கூட ஒலிக்க நாம் கேட்டதில்லை
இருபத்தி ஒரு பேரும் விதையாகினீர்-எங்கள்
இதயத்தில் கண்ணீரின் துளியாகினீர்
(உயிரோடு ஒருநாளும்)

வானத்தைப் பகைசூழ்ந்து கறுப்பாக்கும்
வாழும் இடம் எல்லாம் நெருப்பாக்கும்
ஆலயம் பள்ளியும் தவறாது-அந்த
ஆணவம் தீர்த்த(உ)தும் வரலாறு
(உயிரோடு ஒருநாளும்)

நவாலியில் பலிகொள்ள நாமழுதோம்
செஞ்சோலைப் பிஞ்சுகள் சிதறக்கண்டோம்
அல்லைப்பிட்டியிலும் அள்ளிப்போட்டோம்-இன்று
அனுராதபுரத்திற்குக் கொள்ளிவைத்தீர்
(உயிரோடு ஒருநாளும்)

ஆடைகள் அகற்றிய நிர்வாணம்
ஆனாலும் எவர்க்கின்று அவமானம்
மூடிமறைத்தாலும் தெரியாதோ- ஊர்தி
மூண்ட கதை உலகறியாதோ
(உயிரோடு ஒருநாளும்)

தற்கொடையாளரே போய் வருக-எங்கள்
தளிர்களே! உயிர்களே! போய் வருக
பொற்காலம் எமதாக்கப் போனவரே!
எக்காலம் எமைக் காண மீள் வருவீர்?
(உயிரோடு ஒருநாளும்)

10.20.2007

கூட வராதவன்


தண்டவாளத்தை விழுங்கி விழுங்கி
ஏப்பமிட்டு விரைகிறது புகைவண்டி
எதிரெதிர் இருக்கையில்
இருக்குமெம் கண்களில்
நொடிக்கொருதடவை
மினுக்கிட்டுப் பின்தங்கும் மின்கம்பங்கள்...
பச்சை விழுத்தும் மரக்காடுகள்…
குளக்கரையோரத்தில் குளிக்கும்
குறுக்குக்கட்டுத் தேவதைகள்…

குருட்டுப்பிச்சைக்காரன்
பிசிறிய குரலால்
தட்டியெழுப்புகிறான் அவரவர் பிரியங்களை

வெறிக்கூச்சலிட்டு விரைகிற ரயிலில்
நான் அவனோடும்
நீ அவளோடும்
பயணித்துக்கொண்டிருக்கிறோம்

10.14.2007

காணாமற் போகும் அழகன்கள்


“விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நான்கு பெண்கள் கைது”
“ஆந்திர அழகிகள் பொலிசாரிடம் சிக்கினர்”
“கைது செய்யப்பட்ட அழகிகள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்”

வ்வாறான தலைப்புகளைத் தாங்கிவராத பத்திரிகைகளைப் பார்ப்பது அரிதாகி வருகிறது. மனிதருள் இருக்கும் விலங்கினைத்(மனிதனும் விலங்குதான் என்ற விவாதத்தை சற்றைக்கு மறந்து)திருப்திசெய்வதே சில செய்தி ஊடகங்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது. யன்னல் வழியாக அடுத்த வீட்டிற்குள் எட்டிப்பார்க்கும் சுவாரசியத்திற்குச் சற்றும் குறையாத ஆர்வத்துடன் வாசகர்களும் அந்தச் செய்திகளை வாசிக்கின்றனர். பெரும்பாலும் அவர்களது விழிகள் பரபரப்புடன் தரிப்பது, இச்சமூகத்தில் விலக்கப்பட்ட கனியாகிய பாலியல் செய்திகளிலேயே. மேற்கண்ட தலைப்புகளில் ‘இனங்காணப்பட்ட’ அழகிகளுடன் சுகித்திருந்த அழகன்கள் எங்கே என்பது இப்போது பரவலாகக் கேட்கப்பட்டு வரும் கேள்வி. அண்மையில் ஆழியூரானின் பதிவிலும் செல்வநாயகியின் பதிவிலும் இந்தப் பாரபட்சம் குறித்துப் பேசப்பட்டிருந்தது. சம்பந்தப்பட்ட அழகன்களை விடுதியறைகளின் சுவர்கள் உள்ளிழுத்து மறைத்துவிட்டனவா? அல்லது ஆண்துணையற்று பாலியல் தொழில் நடத்தக்கூடிய அளவுக்கு இந்த ‘அழகிகள்’கைதேர்ந்த சாகசக்காரிகளாகிவிட்டார்களா?
விடை நமக்குத் தெரிந்ததே! விபச்சாரம் என்று ஊடகங்களால் சுட்டப்படும் செய்திகளின் கதாநாயகர்களான ஆண்கள் அவ்விடங்களிலிருந்து எங்ஙனமோ காணாமற்போய்விடுகிறார்கள். பணத்தையோ அதிகாரத்தையோ அன்றேல் ஆண் என்ற பிறப்பு வழி வந்த தகுதியையோ பயன்படுத்தி அவர்கள் தப்பித்துவிடுகிறார்கள். ஆக, கூடா ஒழுக்கமாக இச்சமூகத்தினால் கற்பிக்கப்பட்டிருக்கிற ‘கூடும்’ பாவத்தின் தண்டனை முழுவதும் பெண்களையே சென்றடைகிறது. சமூகத்தின் எச்சிலையும், தவிர்க்க முடியாதபோது குழந்தையையும் அவர்களே சுமக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

ளைய தலைமுறையினரில் பலருக்கு குடும்பம் என்ற அமைப்பின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவருவதற்கு அது கொண்டிருக்கும் பாரபட்சமான உரிமைப்பகிர்தலும் ஒரு காரணமாகும். குடும்பம்,அரசியல்,இலக்கியம் என எங்கெங்கிலும் பரந்திருக்கும் ஆணாதிக்கம், பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யும் சந்தர்ப்பங்களிலும் தனது கோரமுகத்தைக் காட்டி ஆண்களைப் புனிதர்களாகப் பிரகடனப்படுத்த முயல்வது அருவருப்பூட்டுகிறது. உதாரணமாக, பெண்கவிஞர்களுள் சிலர் ‘முலை’என்றும் ‘யோனி’என்றும் கவிதைகளுள் வலிந்து இடம்பெறச் செய்வதற்கு கவனஈர்ப்பே முக்கிய காரணம் என்றும் சிலரால் சொல்லப்படுகிறது. அதே ‘முலை’யும் ‘யோனி’யும் ஆண் கவிஞர்களுடைய பேனா வழியாக எழுதப்படும்போது புனிதசொற்களாகிவிடுவது நகைப்பிற்குரியதே. பெண்ணிலிருந்து ஆணை வந்தடைவதற்கு இடையில் ஏதாவது குடமுழுக்கு,கும்பாபிசேகம் நடத்தி அந்தச் சொற்களைக் கழுவிவிட்டார்களா தெரியவில்லை.
நான் வசிக்கும் திருவான்மியூர் கடற்கரையோரத்திற்குப் பக்கத்தில் ஒரு சுடுகாடு இருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர், மதியமொன்றில் அந்த இடத்திலிருந்து பலத்த ஆரவாரம் கேட்டது. எட்டிப் பார்த்தபோது நிலத்தில் வீழ்ந்து கிடந்த ஒரு பெண்ணை சில ஆண்களும் பெண்களும் சேர்ந்து காட்டுத்தனமாக அடித்துக்கொண்டிருந்ததைக் காணமுடிந்தது. அந்தப் பெண் கையெடுத்துக் கும்பிட்டதை அவர்கள் பொருட்படுத்துவதாக இல்லை. எங்கள் வீட்டில் வம்பு அறிவதில் ஆர்வமும் சம்பவம் நடக்கும் இடங்களுக்குத் துணிந்து சென்று துப்பறிவதில் வல்லவருமான ஒரு 'வீரர்' இருக்கிறார். அவர் மிதிவண்டியில் விரைந்து போய் அறிந்து வந்து சொன்ன செய்தி இதுதான்.

"அது ஒரு கூடாத பொம்பிளையாம்"

அதை அவன் மிகச் சாதாரணமாக 'அவளுக்கு வேண்டியதே'என்ற தோரணையில் சொன்னான். அவனளவில் அது முடிந்துவிட்டது. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பிள்ளையின் மனதில் அவள் தண்டிக்கப்பட வேண்டியவளே என்ற கருத்து எவ்விதம் ஆழமாகவும் உறுதியாகவும் விதைக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைத்துப் பார்க்க வேதனை கலந்த வியப்பு எழுந்தது.

லையைக் குனிந்துகொண்டு, துப்பட்டாவால் முகத்தை மூடிக்கொண்டு பத்திரிகைகளில் காண்பிக்கப்படும் பெண்களின் புகைப்படங்களைப் பார்க்குந்தோறும் மனக்கொதிப்பே எஞ்சுகிறது. அவர்களைப் பார்த்தால் சுட்டெரிக்கும் காமத்தீயைத் தணிக்க விடுதிகளுக்கு வந்தவர்களாகத் தெரியவில்லை. உடலை மூலதனமாக்கும்படியான நிலைக்குத் தள்ளி வாழ்க்கை அவர்களைத் தண்டித்துவிட்டது. அவ்வளவே! மனிதனின் மிருகவேட்கையை கட்டுக்குள் வைத்திருக்கவே கட்டமைக்கப்பட்டதாகக் கூறப்படும் திருமணத்தின் மூலமான கலவியில் வேண்டுமானால் பெண்ணுக்குச் சுகம் கிடைக்கலாம். (அதுவும் நிச்சயமாகச் சொல்வதற்கில்லை) ஆனால், வாதையும் வக்கிரம் பொருந்தியதும் கொடுத்த பணத்திற்குக் கூடியளவு கறந்துவிட முனைவதனால் வலி தருவதுமான கொடுமையை அவர்கள் வயிற்றுக்காகச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. யாவற்றையும் தாங்கிக்கொண்டு தம்முடலை ஒப்புக்கொடுத்துக் கொண்டிருப்பதற்கான காரணத்தை ஆராயப்புகுந்தால், அவர்கள் கூறும் கதைகள் மனப்பிறழ்வில் கொண்டுவிடும். ‘வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி ஏமாற்றி அழைத்துவந்து இங்கே தள்ளிவிட்டார்கள்…’எனத் தொடங்கி ஆயிரமாயிரம் கதைகள் அவர்களிடம் இருக்கும். எந்த உயிரும் தான் வாழும் சமூகம் தன்னை மதிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கும். புழுவென இகழும் பார்வைகளை எதிர்கொள்ளும் எந்தவொருத்தியும் ‘நான் ஒரு விபச்சாரியாக்கும்-இன்னிக்கு நாலு பேரோடு படுத்தேன்’என்று பீற்றிக்கொள்ள மாட்டாள்.

ண்டுபிடிக்கப்படாதவரை சுத்தப்பூனைகளாயிருக்கும் நமது ‘புனித’சமூகம் அத்தகையோரை எப்படி நடத்துகிறது? ‘வேசிமகன்’என்ற வசைச்சொல் நம்முள் பிரபலமானதும் விளிக்கப்படுபவரின் உக்கிரத்தைத் தூண்டக்கூடியதுமாக இருக்கிறது. (ஏற்கெனவே பேசப்பட்டதுதான்) தெருவோரம் ‘வாடிக்கை’பிடிக்க அலையும் பெண்களின் மீது கண்களால் காறியுமிழ்ந்துவிட்டுப் போகிறவர்கள்தான் நம்மில் அநேகர். திறந்த வெளிகளில் கௌரவம் பார்த்துக் காறியுமிழ்ந்து போகும் அதே ஆண்களுக்கு, பூட்டிய அறைகளுக்குள் நிகழ்த்தும் சுயமைதுனத்தின்போது அதே வேசிகளின் ஆடையகற்றப்பட்ட சித்திரங்கள் வேண்டியிருக்கிறது என்பது பேசத்தகாத தேவரகசியம்.
வேசிகள் என்றொரு சமூகக்குழு பிறப்பிலிருந்து உருவாவதில்லை. பாலியல் தொழிலாளர்களை சமூகம்தான் உருவாக்குகிறது. சமூகம் என்பது நானும் நீங்களும் நீங்கலான ஒன்றல்ல. தன்மீது ஒருவனைப் படரவிட்டு வானத்தைப் பார்த்துக்கொண்டிருப்பவள் ஒரு குழந்தையின் தாயாக இருக்கலாம். அந்தக் குழந்தையின் வயிறு, தனது தாயின் வயிற்றுக்குக் கீழிருக்கும் உறுப்பினை ஒருவன் நிறைப்பதன் வழியாகத்தான் நிறையுமென்றால் அது எத்தகைய குரூரம்!

ரு உயிரின் இருண்ட பக்கங்கள் எங்ஙனம் உருவாகின என்பதைக் குறித்து நம்மில் யாருக்கும் கவலையில்லை. நம்மில் பெரும்பாலானோர் பொதுப்புத்தியின் வழி இயங்குபவர்களே! சுயமாகச் சிந்திக்க நேரமற்ற இவ்வியந்திர உலகில் நமது மூளையில் கருத்துருவாக்கம் செய்பவை ஊடகங்களே. விபச்சாரிகள் சாக்கடைப் புழுக்களிலிருந்து உருவானவர்கள் எனக் கற்பித்திருப்பதில் ஊடகங்களின் பங்கு முக்கியம். அழகிகளையும் அவர்களை ‘நெறிப்படுத்திய’தரகர்களையும் கனகாரியமாகப் புகைப்படமெடுத்துப் போடுபவர்களது கண்களில் பாவமெனப்படுவதில் பங்குகொண்ட ஆண்கள் தென்படுவதேயில்லையா…? திரைப்படங்களும் தம் பங்கிற்குத் தாலியறுக்கின்றன. கைதாகும் பாலியல் தொழிலாளிகள் கலகலவெனச் சிரித்தபடி காவல் வண்டிகளில் ஏறுபவர்களாகவும் தமக்கு அருகிலிருக்கும் பொலிசாரை வம்பிற்கு இழுப்பவர்களாகவும் கைதானது தமது வாழ்வின் உன்னத தருணங்களில் ஒன்றெனக் கொண்டாடுபவர்களாகவுமே திரைப்படங்களில் காட்டப்படுகிறார்கள்.

பான்பராக் விற்பவனிலிருந்து பங்குவணிகம் வரை சக உயிரைச் சுரண்டிப் பிழைக்கும் பொதுவிதியின்படி இயங்கிக்கொண்டிருக்கிறது இவ்வுலகம். இட ஒதுக்கீடு என்கிறார்கள்@ இல்லத்தில் வேலைப் பங்கீடு புழக்கத்தில் வந்துவிட்டது என்கிறார்கள். பெண்ணடிமைத்தனம் இல்லவே இல்லையென்றுகூடச் சாதிக்கிறார்கள் சிலர். இருளடர்ந்த தெருவொன்றில் இரவு ஒன்பது மணிக்குப் பிறகு நடந்துசெல்லும் ஒரு பெண், எந்தக் கணமும் ஓடத் தயாராக இருக்க வேண்டும் என்பதுதான் இங்குள்ள நியதி. இத்தகு நீதிமிகு சமூகத்தில் அழகிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அழகன்கள் காணாமற் போவதும் வியப்பளிக்கும் ஒன்றல்ல.

சில குறிப்புகள்:-

1.விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களும் கைதுசெய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென்ற மசோதா விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது.

2.ஒரு ஆணும் பெண்ணும் ஒருவர் மீது ஒருவர் விருப்பப்பட்டு ஒன்றாகத் தங்கியிருப்பது விபச்சாரமாகாது என்றொரு தீர்ப்பு அண்மையில் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொலிசார் கலாசார காவலர்களாக செயற்படலாகாது என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாக அந்த பத்திரிகைச் செய்தி கூறுகிறது.

3. இந்தக் கட்டுரை ‘தங்கம்’ என்ற சஞ்சிகையில் வெளியானது. இணையத்தில் தங்கத்தை வாசிக்க விரும்புவோர் இங்கு செல்லவும்.










10.11.2007

அறியாமை எனும் அறிவு



அகாலத்தில் என்னை வந்தடையும் குறுஞ்செய்திகள்
இருளை மேலும் அடர்த்துகின்றன
தொலைபேசியின் கண்ணாடிச் சட்டத்துள்
துடிதுடித்து அழைக்கிறது உனது பெயர்
நாளொன்றுடன் வாதாடிக் களைத்து
வார்த்தைகள் தீர்ந்துபோன இவ்விரவில்
சுண்டியெறிகிறேன் உன் கண்ணீரையும்
அதுவொரு கடலென விரிந்து அலையெறிகிறது
என் கனவுகளில்.

நீ மரணத்தைப் பற்றிப் பேசினாய். இந்நேரம் தற்கொலை செய்துகொள்(ல்)வதற்கான வழிகளை ஆராய்ந்துகொண்டிருக்கவும் கூடும். உளைச்சல் மிகுந்த இரவுகளை ஒவ்வொருநாளும் போதையில் மூழ்கிக் கடந்துசெல்வதென்பது முட்டாள்தனம்; தற்காலிக தப்பித்தல். உன்னளவில் அறிவு என்பதே சாபந்தான். அது வானத்தின் கீழுள்ள யாவற்றையும் இவ்விதம் என அளவளவான சட்டகங்களுள் அடைத்துவிடவும், இவர்கள் இவ்விதம் என மனிதர்களை முத்திரை குத்தவும் பணிக்கிறது. மேலும், நீ புத்தகங்களாலானவன். உன் மூளையுள் காகிதங்கள் படபடக்கின்றன. சாமான்யர்களுக்குப் புரியாத வாசகங்களுடன் எவரெவரோ உன் மண்டைக்குள் குந்தியிருக்கிறார்கள். அந்தக் கனம் உன்னைப் பூமியோடு சேர்த்து அழுத்திக்கொண்டிருக்கிறது. தமக்கு முந்தைய மூளைகளிலிருந்து வடித்தெடுக்கப்பட்ட சாரத்தை மேலும் புளிக்கவைத்து காடியாக்கி அவர்கள் உனக்குள் ஊற்றினார்கள். ‘நான் அசாதாரணமானவன்’என்ற மிதப்பில் நீயொரு கண்ணாடிக் குவளையாகிவிட்டாய். உன்னைத் தாண்டிச் செல்லுமொருவருடைய ஆடையின் உரசலே போதும் உன்னைச் சிதறடிக்க. எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போன ஒரு கணத்தில் தற்கொலையைப் பற்றிச் சிந்திக்கும் உனது புத்தகங்களின் மீது எண்ணெயை ஊற்றிப் பற்றவைத்துவிட்டாலென்ன?

மெல்ல மெல்ல பிரசங்கத்துள் பிரவேசிக்கிறேன். உனது சகமனிதர்களின் கால்கள் பூமிக்கு இரண்டங்குல உயரத்தில் மிதந்துகொண்டிருக்கவில்லை என்பதை எப்போதாவது விழிகளை உயர்த்திப் பார்த்திருந்தால் தெரிந்துகொண்டிருப்பாய். நானும் நீயும்கூட நடப்பது தரையில்தான். எமது தோள்புறத்தில் சிறகுகள் முளைப்பதற்கான எந்தவொரு அறிகுறியும் இந்தக் கணம்வரை இல்லை. நேற்று ஒரு பழக்கடைக்காரன் ஓட்டை நோட்டொன்றை என்னிடம் செலுத்திவிடப் பார்த்தான். ஆட்டோக்காரன் மிகுதி பத்துரூபாவை ஒரு மெல்லிய சிரிப்பில் அமத்திக்கொண்டான். சில நிமிடங்கள் முன்னதாகவே நான் போட்ட இருபது ரூபாவை ஒளித்துவைத்துவிட்டு சில சில்லறைகளோடு அந்த வயதான பிச்சைக்காரன் மிகப் பரிதாபமாக உட்கார்ந்திருந்தான். உதவியை நோக்கி நகர்ந்த உரையாடலை அவசர வேலையிருப்பதாகச் சொல்லி நான் துண்டித்தேன். குறிப்பிட்ட பெண்ணுடலை எப்படியாவது போகித்துவிட ஒருவன் ஆயிரம் தகிடுதத்தங்கள் செய்துகொண்டிருக்கிறான். நீகூட நியாயமான காரணம் சொல்லி கடந்த வாரம் யாரிடமோ வாங்கிய பணத்தில் ஒரு ‘குவார்ட்டர்’அடித்திருந்தாய். அண்மையில் எனக்குத் தெரிந்த ஒருவனுடைய முகத்திரை பரிதாபமாகக் கிழிந்து தொங்கியது.

பொன்னொளிரும் பூமியை யாரும் நமக்கு வாக்களித்திருக்கவில்லை. மத வியாபாரிகளால் விநியோகிக்கப்படும் பிரசுரங்களில் மட்டுமே நான் அதைக் கண்டிருக்கிறேன். ஏமாற்றப்படுவோம் என்ற மூன்றாவது கண்ணைத் திறந்திருப்பதொன்றே பிழைத்திருக்க வழி. அதற்கு உன்னிடம் போதிய சாமர்த்தியமில்லையெனில் அறியாமை பழகு. அறிவைப் பயிலும்படி எல்லோரும் சொல்லும்போது அறியாமை பழகச் சொல்வது உனக்கு வினோதமாக இருக்கும். நிஷ்களங்கமாக நான் இருப்பதாக அன்றொருநாள் சொன்னாய். நான் உள்ளுக்குள் சிரித்துக்கொண்டேன். எனக்கு எல்லா இருளும் எல்லா கசடும் தெரிந்துதானிருக்கிறது. பொறாமை,காழ்ப்புணர்ச்சி,தகாப்புணர்ச்சி (அப்படியொன்றிருக்கிறதா என்ன என்பாய்) சுயநலம், தந்திரம்,சூழ்ச்சி,சமயோசிதம்… எல்லாம் தெரியும். சில கண்களில் கறுப்பு வெள்ளை தவிர்த்து ஒன்றுமே இருக்காது. அவ்வளவு அப்பாவித்தனம் சொட்டிக்கொண்டிருக்கும். அப்போதுதான் பிறந்த குழந்தை மாதிரி ஒரு தூய்மை. சொட்டு நீல வெண்மை. அவன் மனைவியின் கண்ணெதிரில் வேறொருத்தியைக் கூடியவனாயிருப்பான். ஒரு ஏழையின் பணத்தைச் சுருட்டிக்கொண்டு ‘ஐயோ’என்று அழவிட்டவனாயிருப்பான். பூச்சிகொல்லியை மிதமாக அடித்து பூச்சி துடிப்பதை ஆற அமர அமர்ந்து ரசிப்பவனாயிருப்பான். கண்களைப் பார்த்து தீர்மானங்களுக்கு வந்துவிடாதே. வார்த்தைகளோ சகலவிதமான புனுகுகளும் பூசப்பட்டவை. ஒன்றும் தெரியாதவளைப் போல நடக்கப் பழகி அதுவே இயல்பாயிற்று. இப்போது எந்தக் கசடும் தெரிவதில்லை. மனிதர்கள் கெட்டவர்கள் இல்லை என்று சொல்லிச் சொல்லியே அதை நம்பவாரம்பித்துவிட்டேன். இதை எழுதும் இக்கணம், ஒன்றை மற்றொன்றாக உருவகித்து அந்த மற்றொன்றாகவே ஆகிவிட்டதை உணர்கிறேன். எரிச்சலும் பொறாமையும் தந்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போய்க்கொண்டிருக்கின்றன.

நான் சொல்வது உனக்குப் புரியும். உலகம் நல்லதென்று நீ நம்ப ஆரம்பிக்கும்போது வாழ்வின் மீது காதல் பெருகுகிறது. “இது கற்பிதம்!கனவு! நீ ஏன் உன்னை ஏமாற்றிக்கொள்கிறாய்…?”என்று நீ கேட்கலாம். “நான் வாழவிரும்புகிறேன்”என்பதன்றி வேறென்ன பதில் இருக்கமுடியும்! கழுத்தை ஒரு கயிற்றுவளையத்திற்குள் கொடுத்து ஏறிநிற்கும் முக்காலியை உதைத்துத்தள்ளும் நொடியை எதிர்கொள்ள என்னால் இயலாது. தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறுவதை நினைத்துப் பார்! மூழ்கிக்கொண்டிருக்கும் கடலளவு வாழும் ஆசை அப்போதுதான் பெருகுமாயிருக்கும். உடம்பு பன்றிமாதிரி உப்பிப்பெருத்துவிடும். வாழும்போது நீ பூசிக்கொண்ட அரிதாரங்களெல்லாம் கலைந்துவிட்டிருக்கும். வாழ்வு மேடையாயிருக்கிறது. மரணமோ ஒப்பனை கலைக்கும் அறையாயிருக்கிறது.

அன்றாடம் எத்தனை பொய்கள்! நட்பு கற்புக்குச் சமானம் என்கிறோம். கற்பே உண்மையல்லாதபோது நட்பை அதனோடு ஒப்பிடுவது வியர்த்தம். ஒரு பேச்சுக்கு கற்பு இருக்கிறதென்று வைத்துக்கொண்டாலும், கடன் கேட்டு மறுக்காதவரையில்தான் நட்பும் கற்போடிருக்கும். எழுத்தை அறம் என்கிறோம். புனிதம் புனிதம் என்று பூப்போடாததொன்றுதான் குறை. அதே எழுத்து நமக்குச் சோறு போடாதபோது அந்த அறத்தை மறுதலிக்கிறோம். நாம் காதலில் மிதக்கிறோம். அந்த அற்புத உணர்வில் தேனில் விழுந்த எறும்புகள் போல மயங்கிக் கிடக்கிறோம். காமமற்ற காதல் இருக்கிறதா என்ன? தெருவோரத்தில் அழுக்காய்,கறுப்பாய்,சிக்குத்தலையோடு இருக்கிற பெண்மீதில் - குச்சியால் குத்திக் காகிதம் பொறுக்கிப் போகிறவன் மீதில் ஏன் காதல் பொங்குவதில்லை என்பதை வசதியாக மறந்துபோகிறோம். ‘நான் இல்லாவிட்டால் இந்த வீடு என்னாகும்?’என்கிறோம். மண்ணாங்கட்டி! வீடும் அதன் மனிதரும் அதனதன் அவரவர் காலம் முடியும்வரை இருக்கவே இருக்கும்-இருப்பர். நீ கொண்டாடும் உணர்வுகளின் மீதெல்லாம் மலமள்ளிக்கொட்டுவதாக எண்ணுவாய்.

கற்பு,காதல்,எழுத்து துரோகம்,நேர்மை,புத்தகம் இவையெல்லாம் வாழ்வின் உப்புச்சுவையாக நாம் ஏற்றுக்கொண்டவை. இட்டுக்கட்டப்பட்ட கதைகளும்கூட. ‘நாங்க ஒண்ணும் சும்மா வாழ்ந்துகொண்டிருக்கவில்லையாக்கும்’ என்று பீற்றிக்கொள்ள நாம் சொல்லிக்கொண்டிருக்கும் பொய்கள்தான். மாயவீதிகள்தானென்றாலும் பயணத்தை நாம் நிறுத்தப்போவதில்லை. இவையெல்லாம் ஒன்றுமில்லை என்றாகிவிடுகிறபோது உலகத்தில் என்ன இருக்கிறது? ஆதலால், வாழ்வதற்காக நம்பவேண்டியிருக்கிறது. எல்லாம் நன்றாகவே இருக்கிறது என்று நம்புவதில் உனக்கென்ன சிரமம்? மனிதர்கள் நல்லவர்கள் என்று நான் நம்பிக்கொண்டிருக்கிறேன். அல்லது நம்புவதாக நடித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப்போல் அறியாமை பழகு. பேய்ப்பிள்ளையாகு. நீயே உன்னை நல்லவனென்று நம்பத் தொடங்குவது இயல்பாகிப் போகுமொரு நாளில் யாரேனும் வந்து உன்னிடத்தில் நொய்மையான குரலில் மரணத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். என்னைப் போல அவனுக்காக நீ மினக்கெட்டு உட்கார்ந்து ஒரு கட்டுரை எழுதாதே. காசு சம்பாதிப்பது எப்படி அல்லது ஒரு வேலையைத் தேடிக்கொள்வது எப்படி என்பதைப் பற்றிப் பேசு. இரண்டும் அவனால் சாத்தியமில்லாத பட்சத்தில் நல்ல ஊதியம் வாங்கும் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேசலாம். யதார்த்தத்திற்கும் குரூரத்திற்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக நான் நினைக்கவில்லை.

9.30.2007

லசந்தரா மலர்சொரியும் வீடு


அந்நிய நிலத்திலிருந்து வந்தவர்களை
கண்ணியமாய் மறுதலித்த கனவானே நன்றி!
என்னிடம் துப்பாக்கி இல்லை என்பதை…
தடைசெய்யப்பட்ட பிரசுரங்களை
நான் கொண்டலைவதில்லை என்பதை…
விபரித்தல் வியர்த்தம்
இக்கொடுமதியம் சுடும் படிகளில்
நீண்டநேரம் நிற்கவியலாது இறங்கிச்செல்கிறேன்

வாழமுடியாமற் போன வீட்டை
சுமந்தலைதல் விதிக்கப்பட்டோம்

நெருஞ்சிமுட் காடு
கற்கள் அடுக்கிய கனவென நிமிர்ந்ததை
மரங்கள் சித்திரம் செதுக்கிய கதவானதை
பூக்குட்டி நான்காம் இலக்க செருப்பிற்குள்
அடங்கி உறங்குமளவு சிறிதாயிருந்ததை…

ஒரேயொரு சன்னத்தில்
குயில்களின் குரல்கள் அடங்கிடல் அஞ்சினேன்

இலைகளைத் தோற்கடித்து
செடியை ஆக்கிரமித்திருந்தன லசந்தரா மலர்கள்.
மோகங்கொண்டு வேம்பு அனுப்பிய காற்றில்
கிளர்ந்து கிழிபட்டிருந்தன வாழையிலைகள்
ஊற்றுவிழி திறந்தபடி
ஆழக்கனவொன்றில் கிடந்த கிணறும்
செவ்விளநீர் மரங்களும்
எழுதப்பட வேண்டிய கவிதைகளை
தம்முள் வைத்திருந்திருக்கலாம்
என் பட்டுக்குஞ்சே!
நீலவிழியுருட்டிப் படுத்திருந்த உன்னை
எடுத்தணைத்துக் கொஞ்சிப்பிரிந்தபோதில்
பால் மணத்தது.
தளம் இழைக்கையில்
இழந்த நகைகளின் நிறத்தில்
வெயில் அணைத்துக்கொண்டிருந்தது வீட்டை.

சில கடல்மைல்களுக்கப்பாலிருந்தபடி
போரோய்ந்து வீடு திரும்பக் காத்திருப்பது
நண்பர்களே! (எதிரிகளுக்கும்)
உங்களில் எவருக்கும் நேராதிருக்கட்டும்!

9.29.2007

நோய்க்கூற்றின் கண்கள்


இதுவொரு சோதனை மீள்பதிவு

“இறப்பதற்குத் தனியாக காரணங்கள் தேவையா
இருப்பதற்குக் காரணங்கள் இல்லையென்பதை விட?”

கனவுகள் சலித்துப்போன ஓரிரவில் இதனை எழுதத் தொடங்குகிறேன். அவரவர் கோப்பைகளில் அவரவருக்குப் பிடித்த மதுவை நிரப்பிக்கொண்டு ஏதாவதொரு போதையில் மூழ்கிக்கிடக்கிறோம். எதிலாவது கிறங்கிக் கிடப்பதுதான் பாதுகாப்பானது என்ற எண்ணத்தின் விதை ஒவ்வொரு மனசுக்குள்ளும் ஊன்றப்பட்டிருக்கிறது. சித்தம் சிதைவதற்கு மிக முந்தைய கணத்தில் ஒருவன் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தையைப் போன்ற, ஒத்த சாயலையுடைய இந்த நாட்களை என்ன செய்வதென்று தெரியவில்லை. அதே காலையில் அதே சாலையில் அதே ஆறு மணிக்கு துணைக்கு சடைநாய்க்குட்டி சகிதம் அதே கிழவர் நடந்துபோகிறார். முன்பொருநாளில் “எத்தனை அழகியது இந்த வாழ்க்கை”என்று பல தடவை வியந்திருக்கிறேன். விநோதரசம் நிரம்பிய அண்மைய நாட்களின் நடப்புகள், அந்த வார்த்தைகளைப் பார்த்து ஓசையெழச் சிரிக்கின்றன. ‘வாழ்வொரு அபத்தம்’ என்ற கசப்புப் படிந்த வரி மண்டைக்குள் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது.‘வேடிக்கை மனிதரைப்போல’அல்லாது வாழமுயன்று களைத்துப்போனவர்களின் உதடுகள் சலித்துத் துப்பிப்போட்ட வார்த்தைகளில் ஒன்றிரண்டைப் பொறுக்கிக்கொள்வதைத் தவிர புதிதாக ஒன்றுமில்லை.

‘நமக்குள் இருப்பதுதான் புத்தகத்தில் இருக்கிறது
அதைவிட ஒன்றுமில்லை’ என்று நகுலனும்,‘இந்த நதி எத்தனை பேரைப் பார்த்திருக்கிறது’என்று கல்யாண்ஜியும் (?) சொன்னது ஞாபகத்தில் வருகிறது. அடுக்கி வைத்த சீட்டுக்கட்டை அவரவர்க்குப் பிடித்தபடி அடுக்கியும் கலைத்தும் விளையாடுகிறோம் என்பதுதானே உண்மை. புதிதாகச் சொல்ல ஒன்றுமில்லை. இருப்பினும், பேசுவதன் மீதான் விருப்பு வற்றிப்போய்விடவில்லை. தனது இருப்புக் குறித்த பிரக்ஞை மற்றவர்களிடம் இல்லாமற்போய்விட்டால் என்ன செய்வது என்ற பதைப்பே எழுதத்தூண்டுகிறதோ என்னவோ…!வாழ்வோடு பிணைத்து வைத்திருந்த கயிறுகள் ஒவ்வொன்றாக அறுந்துகொண்டே வருகின்றன. வாழ்க்கை என்பது, இப்போது காண்பதுபோல வித்தைக்காரனின் கூடாரமாக, சர்க்கஸ் காட்டுபவன் நடக்கும் கயிறாக, மகாநடிகர்களின் மேடையாகத்தான் எப்போதும் இருந்ததா…? இதுவரை வாழ்வை அழகிய பூவனமாகத் தோற்றப்படுத்திக்கொண்டிருந்த மாயக்கண்ணாடியைக் கழற்றி வைத்ததனால் வந்த மாற்றமா…? “ஆகா! அழகியது!”என்று கொண்டாடிய காலங்கள், இப்போது எல்லோரும் எழுதிவரும் கிறுக்குத்தனமானவைதான் என்று கண்டுகொண்டபின் யாவற்றையும் யாவரையும் பார்த்து நகைக்கவே தோன்றுகிறது. இருப்பிற்காக, உயிர் தரித்திருத்தலுக்காக கொடுக்கும் விலை மிக அதிகமோ என்ற எண்ணம் வருகிறது. எழுத்து,உறவு,வாசிப்பு எல்லாமே அணைந்துபோய்க்கொண்டிருக்கிற வாழ்வின் மீதான விருப்பின் திரியைத் தூண்டிவிடுவதற்காக நாமாகவே இழுத்துப்போட்டுக்கொள்கிறவையாகவே இருக்கின்றன. விளையாடும் குழந்தையைச் சுற்றி கார்,பிளாஸ்டிக்காலான கட்டிடப் பொருத்துகைகள், பொம்மைகள் இறைந்து கிடப்பதைப் போல, ‘நான் இன்ன இன்ன காரணங்களுக்காக வாழ்கிறேன்’ என்று எமக்கும் எம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நிரூபிப்பதற்காகவே எம்மைச் சுற்றி பலவற்றையும் சிருஷ்டித்துக்கொண்டிருக்கிறோம். உறவுகள் என்ற கசப்பு மருந்தின் மேல் அன்பு என்ற தேனைப் பூசி விழுங்க வேண்டியிருப்பதை அறியாத ‘அப்பாவி’கள் நாங்கள்.அன்பு உலகை ஆள்வதென்பது, டைனசோர் போல அருகி அழிந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. அன்புதான் உலகை ஆள்கிறதெனும் எனது அண்மைய தோழா! மாபெரிய அபத்தத்தைப் பேசுகிறாய். நீ சொல்வது சரியெனில், அன்னை தெரேசாவையும் மகாத்மா காந்தியையும்(விமர்சனங்களோடும்) ஒன்று…. இரண்டு… மூன்று என்று விரல்விட்டு எண்ணவேண்டிய துர்ப்பாக்கியம் ஏன்? எங்களில் எத்தனை பேர் மற்றவரின் துயரங்களுக்கு சகிப்புத்தன்மையோடு செவிமடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களில் எத்தனை பேர் எங்களால் இயலக்கூடிய உதவிகளைச் செய்வதற்கு சோம்பற்பட்டு விலகிக்கொண்டிருக்கிறோம். எமக்குப் பிடித்த திசை நோக்கி நகராத உரையாடல்களிலிருந்து எம்மைத் துண்டித்துக்கொள்ளும்போது தனிமைப்படும் இதயங்களைப் பற்றி எம்மில் எத்தனை பேர் சிந்திக்கிறோம்?

அதிகாரங்கள்தான் உலகை ஆள்கின்றனவேயன்றி அன்பு அல்ல. அதிகாரத்தைக் கையிலேந்திய பிதாமகர்கள் எம் மீது மேலாதிக்கம் செலுத்தும் பிறப்புரிமை பெற்றவர்களாக, எம்மை அலைக்கழிக்கத்தக்கவர்களாக இருக்கும் உலகத்தில் ஒரு பூச்சிகளாக வாழ விதிக்கப்பட்டிருப்பது கொடுமையிற் கொடுமை! தீயவர்களுக்கும் அவர்கள் சுமந்தலையும் துப்பாக்கிகளுக்கும் இன்னபிற ஆயுதங்களுக்கும் பயந்துகொண்டு இந்த உயிரை எத்தனைக்கென்று கக்கத்தில் இடுக்கிக்கொண்டலைவது? முன்னொருபோதும் அறியாதவர்களால் இரவோடிரவாக விரட்டப்படுகிறோம். கைது செய்யப்படுகிறோம். எவனோ வெட்டிய பள்ளத்தில் தெருநாயைப் போல இழுத்தெறியப்பட்டுப் புதைந்து கிடக்கிறோம். இழைத்து இழைத்துக் கட்டிய வீட்டில் நீ இருக்கமுடியாதென யாரோ ஒருவன் கட்டளையிடும் குரலுக்குப் பணிகிறோம். கனவுகளையும் கற்பனைகளையும் யாரோவுடைய துப்பாக்கியின் பெருவாய் தின்றுதீர்க்கிறது. எங்களது ஒட்சிசன் குழாயை எந்த நிமிடத்திலும் எவரும் பிடுங்கிவிடத்தகு நோய்ப்படுக்கையில் கையறு நிலையில்தான் இருக்கிறோம். முதலில் இந்த ஜனநாயகம்… சமத்துவம்… மனிதம்… தனிமனித உரிமை… மண்ணாங்கட்டி… இந்த வார்த்தைகளை அகராதியிலிருந்து அழித்துவிடவேண்டும். நிலவுக்கஞ்சிப் பரதேசம் போன பாவிகளானோம். எங்கில்லை இந்த நிலவு? எங்கில்லை மரண பயம்? ஓடிக் களைத்து மூச்சுவாங்குகிறது. இருந்தும் கையுயர்த்தி மண்டியிட்டு “தயவுசெய்து என்னைக் கொல்லுங்கள்”என்று சொல்ல முடியவில்லை. “வாழப் பிடிக்கவில்லை. செத்துப்போகிறேன்”என்று கண்ணீரில்லாமல் சொல்லி விடைபெற்றுப் போகிற மனத்திண்மை ஏனின்னும் வாய்க்கப்பெறவில்லை…? வாழ்வின் மீது அத்தனை வெறித்தனமான காதலா? நான் இல்லாவிட்டால் ஏனையோர் என்ன ஆவர் என்பதெல்லாம் எமது மரணபயத்தின் மீதான சப்பைக்கட்டுகள் அல்லவா?

பதின்மூன்று ஆண்டுகளின் முன் நீ தற்கொலை செய்துகொண்டபோது ‘அவளொரு கோழை’என்றார்கள். நீ வாழ்ந்திருக்கக்கூடிய காரணங்கள் எல்லோராலும் அடுக்கப்பட்டன. இல்லையடி!வாழ்வை எதிர்த்துக் கலகம் செய்து உயிர் எனக்கொரு மயிர் என்று பிடுங்கி அவன் முகத்தில் விட்டெறிந்து போன நீயொரு தீரி! உன் கவிதைகளை எரித்து உன்னையும் மாய்த்துப் போன சிவரமணி!நீயும் நின் கவிதையும் எங்களைவிட உயிர்ப்புடன் இருக்கின்றன. இரண்டு மாதங்களின் முன் ஒற்றைக் கயிற்றிலே தொங்கி உன்னை இறுக்கியிருந்த அத்தனை தளைகளையும் அறுத்தெறிந்துபோன சின்னப் பெண்ணே!நீ வணங்கத்தக்க துணிச்சல்காரி!

தற்கொலை என்பது, வாழ்வின் முகத்தில்-தெரிந்தே காயப்படுத்திய சகமனிதர்களின் முகத்தில் காறியுமிழும் எச்சில்தான். விநோதம் என்னவென்றால், மெல்லிய சங்கடத்தோடு சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ஒரு பறவையின் எச்சத்தைப் போல அதை வழித்தெறிந்துவிட்டுப்போய்க்கொண்டே இருக்கிறோம். தற்கொலை செய்பவர்கள் வாழ்வை வென்றாலும், தம் வலியை கன்னத்தில் அறைந்து உணர்த்துவதில் தோற்றுத்தான் விடுகிறார்கள்.நாம் போனபின்னும் இவ்வுலகம் இருக்கும். நெருங்கியவர் அடித்துப் புரண்டழுவர் சிலநாட்கள். பிணந்தூக்கிப் போனபின்னால் வீடு கழுவிச் சமையல் நடக்கும். துக்கத்தில் இறுகிய மலம் இளகி வெளியேறி மறுநாள் வயிறு இலேசாகும். ஒரு பாடல், ஒரு வார்த்தை, ஒரு புகைப்படம், தெருவில் எதிர்ப்படுகிறவரில் ஒரு சாயல் எம்மை நினைவுறுத்தும். நீங்கள் தமிழ்மணத்தில் எழுதுகிறவராக இருந்தால், அஞ்சலிக்கவிதைகள் நான்கைந்தும் சில நினைவுக்குறிப்புகளும் பதிவிடப்பட்டு- வாசிக்கும் ஏனையோரை கண்கலங்கவோ ‘இதெல்லாம் கவிதையாக்கும்’என பல்கடிக்கவோ வைக்கலாம். வேறென்ன…பூவுதிரும் சாலை வழி மனிதர்கள் நடந்துபோக அன்றைக்கும் அதிகாலை அழகாக விடியும். அவ்வளவே!

9.19.2007

மஞ்சள் வெயில் - வாசிப்பு அனுபவம்


நூலாசிரியர்: யூமா வாசுகி

காதல் என்பது வலியும் சுகமும் இணைந்ததொரு அற்புத உணர்வென்றே இதுவரை வாசித்த நூல்களும் சந்தித்த மனிதர்களும் பேசக் கேட்டிருக்கிறோம். அது ஒருதலையாக அமையுமிடத்தில் குரூரமானதும், ஒரு மனிதனை மிகக்கொடுமையான பிறழ்நிலைக்கு இட்டுச்செல்லத் தக்க சக்தி வாய்ந்ததும்கூட என்ற அயர்வு ‘மஞ்சள் வெயிலை’ வாசித்துமுடித்து மூடிவைத்தபோது ஏற்பட்டது. மூடிவைத்தபிறகும் வலியின் வாசல்கள் பக்கங்களாக விரிகின்றன.

இந்நாவலைப்பற்றி அறிந்திராத சில வாசகர்களால் இப்பதிவின் உட்செல்லமுடியாதிருக்கும் என்பதனால் கதையைச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.

தினச்செய்தி என்ற பத்திரிகையில் ஓவியங்கள் வரைபவனாகப் பணியாற்றும் கதிரவன் என்பவனுக்கு அதே அலுவலகத்தின் மற்றோர் பிரிவில் வேலை பார்க்கும் ஜீவிதா என்ற அழகிய பெண் மீது காதல் மேலிடுகிறது. காதலென்றால்… அவள் காலடி மண்ணைக் கண்ணில் ஒற்றிச் சட்டைப்பைக்குள் போட்டுக்கொள்ளத்தக்கதான, அவனால் மகோன்னதம் எனக் போற்றப்படும் காதல். அவளும் அவனைக் காதலிப்பது போன்றே ஆரம்பத்தில் தோன்றுகிறது. சின்னச் சின்ன உரையாடல்கள், கண்களுக்குள் பார்த்துக்கொள்வது இவ்வளவிற்குமேல் போகவில்லை. அவளுடைய ஒரு பார்வைக்கு ஓராயிரம் பொருள்பொதிந்து பேதலித்துப்போய்த் திரிகிறான் கதிரவன். காதலின் சன்னதத்தைத் தாளமுடியாத கதிரவன் ஒருநாள் தொலைபேசியில் அவளை அழைத்து அனைத்தையும் கொட்டிவிடுகிறான். அவளோ தான் அவனைக் காதலிக்கவில்லை என்று சொல்லிவிடுகிறாள். உலகத்தின் துயரங்கள் அனைத்தும் தன்மீது கொட்டப்பட்டதாக உணர்கிறான் அவன். வாழ்க்கை முழுவதும் அவளது ஞாபகத்தைக் கொண்டலைவேன் என முடிகிறது கதை. அல்லது கதைபோல புனையப்பட்ட யாரோ ஒருவருடைய வாழ்க்கை.

‘மஞ்சள் வெயிலை’ இவ்வளவு எளிதாக சில வரிகளுக்குள் அடக்கும் எவருக்கும் குற்றவுணர்வே மிகும். ஏனெனில் கதிரவன் என்ற அவனுடைய துயரம், ஆற்றாமை, அச்சம், பதட்டம், ஆதங்கம், காதல், கழிவிரக்கம், சுயபச்சாத்தாபம், குமுறல், கொந்தளிப்பு, தாபம், தனிமை, ஆராதனை, அயர்ச்சி, நிராதரவான தன்மை… என மாறி மாறித் தோன்றும் முகமானது புத்தகத்தை வாசிக்கும் எவரையும் அலைக்கழிக்கும் தன்மையது.

ஜீவிதாவை விளித்து கதிரவன் எழுதும் நெடுங்கடிதமாக விரிகிறது மஞ்சள் வெயில். இந்நாவல் தன்னிலையில் எழுதப்பட்டிருப்பதானது வாசிக்கும் மனங்களுக்கு கூடுதல் நெருக்கத்தை அளிக்கிறது. தவிர, கடிதவடிவில் எழுதப்படும் நாவல்கள் அடுத்தவரின் அந்தரங்கங்களுள் இயல்பாக நழுவிச்செல்வது போன்றதொரு இரகசியக் குறுகுறுப்பை அளிக்கின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 133 பக்கங்களில் எழுதப்பட்டிருக்கும் இதைக் குறுநாவல் என்றும் சொல்லலாம். நாவலின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை கவித்துவச் சரடொன்று ஓடிக்கொண்டேயிருக்கக் காணலாம்.

“நான் உங்களை மிகவும் விரும்புகிறேன். ரோஜாவின் இதழ் முகட்டில் வந்திருக்கிற பனித்துளி அசைவில் சரிந்து உதிர்ந்து விடாதபடி மெதுநடையில் உங்களிடம் சேர்க்கிற ஆழ்ந்த கவனத்துடன் - மூளையில் அதிநுட்ப அறுவைச் சிகிச்சை நடத்துகிற மருத்துவனின் சிரத்தையுடன் - தொலைவான ஓரிடத்திலிருந்து கலைந்து கலைந்து வரும் அழைப்புச் சமிக்ஞையைத் தவிப்புடன் கிரகிக்கிற குருடனின் தீவிரபாவத்துடனும் இதைச் சொல்கிறேன். சொல்லுகையில், இந்த வார்த்தைகள் ஆணிகளாக என் இதயத்தில் இறங்குகிற வேதனையோடு… ‘உங்களை எனக்குப் பிடித்திருக்கிறது’”

மஞ்சள் வெயிலின் ஆசிரியர் யூமா வாசுகி ஒரு கவிஞராகவும் இருப்பதனாலோ என்னவோ நாவலின் சில இடங்கள் கவிதைகளைக் காட்டிலும் அழகியலோடு அமைந்திருக்கின்றன.‘நீள விழிகள்’-‘கனிந்து சிவந்த உதடுகள்’ என்ற வர்ணனைகளையே வாசித்துச் சலிப்படைந்திருக்கும் வாசகர்களுக்கு கீழ்க்காணும் வார்த்தைகள் வியப்பளிக்கலாம்.
பச்சைக்கிளிகளை அடைத்த கூண்டுகளான உங்கள் முலைகளிலிருந்து வரும் இடைவிடாத கொஞ்சல் பேச்சரவம் கிரகித்தேன் நான் மட்டும். குடம் ததும்புவதைப்போல உங்களைச் சுற்றிக் குளிர்தெறிக்கிறது. எப்போதும் கூட்டின் இடுக்குகளிலிருந்து பறவைக் குஞ்சுகள் அலகு நீட்டிப் பார்க்கும் சுபாவத்தோடு மணிக்கட்டிலிருந்து பிரிந்த விரல்கள் உங்கள் தொடைமீது கிடந்தன………..”

மஞ்சள் வெயிலை வாசித்த பிற்பாடு ‘காதலின் இருண்ட பக்கங்கள் என்னை அச்சுறுத்துகின்றன’என்றொரு நண்பர் சொன்னார். அது உண்மையிலும் உண்மை. சில நாட்களாக ஜீவிதா அலுவலகத்திற்கு வரவில்லை; காரணமும் தெரியவில்லை. புறக்கணிப்பின் வேதனையோடு ஜீவிதாவிற்காகக் காத்திருக்கும் கதிரவன், காதலின் பாடுகள் தாளாமல் தன்னைச் சுயவதை செய்துகொள்ளுமிடத்தை வாசித்தபோது நண்பர் சொன்னது சரியெனவே உணர்ந்தேன்.

“சிகரெட்டின் தீக்கங்கை எனது இடதுகையில் குத்தி அணைத்தேன். திடுக்கிடும் கடலைக் கண்டு உரக்க நகைக்கிறேன். அழுத்தும் தீக்கங்கில் தசை கரிகிறது. போதையைத் தகர்க்கும் எரிச்சல். நெருப்பு தசைக்குள் ஊடுருவுகிறது. கைவிரித்து அழைக்கிறது பேரலை. மீண்டும் பற்றவைக்கப்பட்டது சிகரெட். நாலைந்து இழுப்புகளுக்குப் பிறகு இடக்கையில் மற்றுமொரு சூடு. கடல் பதறுகிறது. அவசர அவசரமாக வேகத்தை அதிகப்படுத்தி என் கால்களைச் சமீபிக்கிறது. பொறுப்பதற்கியலாத வலி, ஜீவிதா அருவருப்படையாதீர்கள், முகம் சுளிக்காதீர்கள். அடுத்தடுத்துப் புகைத்த பத்து சிகரெட்டுகளையும் எனது இடக்கரத்தில் குத்தி அணைத்தேன். தலைக்குள் பிசைந்தது மயக்கம்”

தன்னை வதை செய்யும் இந்தக் காதல் உண்மையில் அச்சமூட்டுகிறது. ‘கடவுளே… இது என்ன?’என்று பதறவைக்கிறது. பரிதாபத்திற்குப் பதிலாக கோபமற்ற கோபத்தையும் கிளறுகிறது. கடற்கரையில் வைத்து சிகரெட்டுகளால் தன்னைச் சுட்டெரித்தது போதாதென்று, அறைக்குள் மீண்டும் ஆரம்பமாகிறது காதலின் களரி. தாண்டவம்.

“கண்ணாடிக்கு முன் நின்று பென்சில் சீவும் கத்தியால் என் முகத்தில் கோடு கிழிக்கிறேன். நெற்றிக்கோட்டில் ரத்தம் நுண்புள்ளிகளாக முகிழ்ந்து துளிகளாகக் கனக்கிறது. இரு கன்னங்களில் - தாடையில் - நெற்றியில் ஆழ உழுகிறது கத்தி. புதுமணமுடைய ரத்தம் என் விரல்களில் பட்டுப் பிசுபிசுக்கிறது. ஜீவிதா! நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்….? என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்….?”

உண்மையில் வாசிப்பவனின் மேல் இரத்தத்தை விசிறியடிக்கும் எழுத்துத்தான் அது. சுயவதையைக் காணச் சகியாமல் தப்பித்து ஓடிவிடும் அச்சமும், அடுத்து நிகழவிருப்பதன் மீதான ஆர்வமும் இணைந்தே வாசிப்பை நடத்திச்செல்கின்றன.

ஒரே வாசிப்பில் முடித்துவிடக்கூடிய நாவல் என்பதற்கு அதன் குறைந்தளவிலான பக்கங்கள் மட்டும் காரணமில்லை. நிராகரிக்கப்படுவேனோ என்ற அச்சமும் இயல்பாகவே கூச்சமும் நிறையப்பெற்ற கதிரவன், ஏறக்குறைய நாவலின் கடைசிப் பகுதியிலேதான் தனது காதலை வெளிப்படையாகச் சொல்கிறான். காதலை வெளிப்படுத்தும் தருணத்தை நோக்கி பரபரப்புடன், நெஞ்சு பதைக்க வாசகர்களை நகர்த்திச் செல்லும் உத்தியை ஆசிரியர் மிகச்சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்.

“அப்படியா நான் அப்படிப்பட்ட நினைப்பில் எல்லாம் உங்களைப் பார்க்கவில்லையே…”என ஜீவிதா கதிரவனின் காதலை நிராகரிக்கிறாள். அதீதமான துக்கம் மூடுகிறபோது எங்கிருந்தோ வந்து படிந்துவிடுகிற பொய்யான நிதானத்தையும் அமைதியையும் வாழ்வின் ஓட்டத்தில் என்றாவது ஒருநாள் நாமும் உணர்ந்திருப்போம். சலனமற்ற கடல்போலாகிவிடுகிறது மனம். ஆனால், உள்ளே அசைவொன்றுமில்லையா என்ன?

“மறைந்துவிட்டன போலிருந்தன புலன்கள். பிரிக்கப்படாத ஒரு கடித உறையாக என் முன்னே நான் கிடந்தேன். வேற்றுலகிலிருந்து வந்து வீழ்ந்த பொருளைப் பார்வையிடுவதாக, புரியாமல் தெரியாமல் உற்றுக் கவனிக்க முற்பட்டேன் என்னை. என் மோனத்தின் மறைவில் அபாயகரமான விபரீதமான அம்சம் நிலவியதாகப்பட்டது. மனம் துக்கித்துப் புலம்பவில்லை. அரற்றவில்லை. ஒரு துளிக்கண்ணீரில்லை.”

இந்த இடத்தில் வாசிப்பு மனமோ சோர்ந்துபோய் நின்றுவிடுகிறது. ‘சரி அவ்வளவுதான். எல்லாம் ஆயிற்று’என்று நாம் நினைக்கும்போதும் கதிரவன் தளர்வதாயில்லை. கடைசி நம்பிக்கையாக அவளை நினைத்துத் தான் எழுதிய கவிதைகளை இரவிரவாகப் படியெடுத்துக் கொண்டுபோய் அலுவலக வாசலில் காத்திருக்கிறான்.

“அனாதி காலந்தொட்டுக் காத்திருக்கிறேன். மாயம் போல மந்திரம் போல உங்கள் பெயர் கிடந்து பேதலிக்கிறது என்னுள்ளே. எனக்கு நீங்கள் பங்கிட்டுக் கொடுத்தது பெரிய பாகம். சுமக்க இயலவில்லை. மோகாவேசம் மூண்டெரிகிறது. நீங்கள் என் நடனப்பண். உங்கள் குரலின் மென்தூவிகள் திசைகளெங்கிலும் மிதக்கின்றன. அனந்த காதலின் கிளர்ச்சி நீங்கள். அழகு திகழும் மினுமினுப்பான என் மரணம்”

அவள் வரவில்லை! அவனை வரச்சொல்லிவிட்டுக் காத்திருக்க வைத்த அன்றைக்குத்தான் நல்ல வேலையொன்றில் சேர்வதற்காக அவள் அமெரிக்காவுக்குக் கிளம்பிப்போயிருக்கிறாள். ஒரு பூத்தூவலென அவன்மீது புன்னகையைச் சிந்தி நகர்ந்த ஜீவிதாவிற்கும் ஆரம்பத்தில் கதிரவன் மீது காதல் இருந்ததென்றும் வசதியான வாழ்வினைக் கருதி அவள் அவனைவிட்டு நீங்கிவிட்டதாகவும் அங்கங்கே சொல்லப்பட்டிருக்கிறது. கதிரவனின் வார்த்தைகளில் கோபமில்லை. வாசிக்கிறவர்கள்தான் அதைச் செய்யவேண்டியிருக்கிறது.

கவிதைகளுட் சில உரைநடையாயிருக்கின்றன. இந்நாவலின் உரைநடையோ கவிதையாயிருக்கிறது. யூமா வாசுகியின் விரல்கள் வழியாக துயரமே எழுதிச்செல்வது போலிருக்கிறது. தான் உணர்ந்த துயரை மற்றவருள் கடத்துதல் இவர் போல எல்லோருக்கும் சாத்தியமல்ல.

இப்போதெல்லாம் வாசிப்பிற்கு இணையாக தனது முன்தீர்மானங்களையொட்டிய துணைவாசிப்பொன்றை மனம் நிகழ்த்திக்கொண்டேயிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால், மஞ்சள் வெயிலின் கவித்துவ வரிகளில் அந்தக் குரல் தீனமாகி வலுவிழந்து எங்கோ ஆழத்தில் சென்றொளிந்துகொண்டது.

பல இடங்களில் இது நாவல் என்பது மறந்துபோகிறது. பாடகன் கான் முகம்மது, இரவுக் காவலர் பாலகிருஷ்ணன், அவரது நாய்க்குட்டி மணி, சப் எடிட்டர் சந்திரன் இவர்களெல்லோரும் கற்பனைக் கதாபாத்திரங்கள் என நம்பமறுக்கிறது மனம். அதிலும் ‘இந்நாவலை எனது நண்பர் இரவுக்காவலராக இருந்த திரு.வி.கே. பாலகிருஷ்ணன் அவர்களின் நினைவுக்குச் சமர்ப்பிக்கிறேன்’என்பதை வாசித்தபோது… ‘அந்த நெற்றிக் கீறல்கள் இன்னமும் இருக்குமோ-அந்தப் பெண் இந்த நாவலை வாசித்திருப்பாளா…?’என்ற ரீதியில் சிந்திக்கவாரம்பித்துவிட்டது வம்பிற்கு அலையும் மனம். நனவு, கனவு,புனைவு மூன்றும் கலந்ததே எழுத்து. எனினும் இது உண்மையெனில், திரண்ட கண்ணீர் உண்மையிலும் உண்மை.

காதலிக்கப்பட்டவள் நிராகரித்துவிட்டபோதிலும் காதல் தன்னை நிராகரிக்கவில்லை என கதிரவன் நம்புவதாக முடிந்திருக்கிறது மஞ்சள் வெயில். ஈற்றில், ஜீவிதா என்ற அந்தப் பெண்ணைச் சந்தித்ததொன்றே தனது வாழ்வின் எஞ்சிய நாட்களை உயிர்ப்போடு வைத்திருக்கப் போதுமெனச் சொல்கிறான் கதிரவன்.

“நான் உங்களைப் பார்த்தேன். இந்த ஒரு வரிதான் என் ஜீவிதத்தின் மகாமந்திரம். மஞ்சள் ஒளி தோய்ந்த வராண்டாவில் நலன்சிந்தும் கொலுசுகளுடன் நடந்துபோகும் உங்களைப் பார்த்தேன். கற்பனையில்லை. கனவுகண்டு உளறவில்லை. சர்வசத்தியமாக அளப்பரிய உண்மையாக தத்ரூபமாக உங்களைப் பார்த்தேன். எப்போதும் எல்லா சந்தோசங்களையும் மறைத்துவைத்து என்னைக் கண்டுகொள்ளாமல் போகும் வாழ்க்கையைப் பிடித்து நிறுத்தி உங்களின் காட்சியை புலன் விழிப்போடு பெற்றுக்கொண்டேன்”

விரும்பிய துணை கிடைக்காமற் போகிறபோது ஏற்படும் இயலாமையின் வெளிப்பாடாக இந்த வரிகளைப் பார்க்கத் தோன்றவில்லை. காதல்… 'காதலன்றி ஏதுமற்றவனாக' தளர்ந்து நடக்கும் அவன் ஒருபோதும் பொய்யாக இருக்கமுடியாது.

மனிதர்கள் முரண்களாலானவர்கள் என்பதை மீளவும் மீளவும் ஞாபகம் கொள்கிறேன். காதல் என்பது மிகப்பெரிய அபத்தமென்று சொன்ன மனந்தான் காதலைக் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் ‘காடு’நாவலுக்குப் பிறகு, மன அதிர்வையும் அந்தரத்தையும் தந்த நாவல் என்றால் அது மஞ்சள் வெயில்தான். வாசித்து நெடுநாட்களாகிவிட்டபோதிலும் தனித்திருக்கும் நேரங்களிலெல்லாம் படர்ந்துகொண்டேயிருக்கிறது ‘மஞ்சள் வெயிலின்’ஒளி.

9.17.2007

பரவாயில்லை


பசியில் சுருண்ட ஒரு மனிதனின்
கடைசி உயிர்த்துளி சொட்டும் ஓசைக்காக மலைமுகடுகளில் காத்திருக்கின்றன
வல்லூறுகள்

வன்புணரப்பட்ட சிறுமியின்
கால் வழி பெருக்கெடுக்கும் குருதியை
இரகசியமாகத் துடைத்துக்கொண்டிருக்கிறாள்
எங்கோ ஓர் தாய்

காதலனின் மார்பு மயிரளைந்தபடி
கணவனின் நெஞ்சுவலி குறித்து விசனித்துக்கொண்டிருக்கிறாள்
தொலைபேசியில் ஒருத்தி

வீடு திரும்பச்சொல்லி இறைஞ்சும்
முதியதாயின் நெஞ்சில் கால்பதித்து
சாக்கடையில் தள்ளுகிறான்
ஒரு குடிகாரன்

பனங்கூடல்களுக்கிடையிலிருந்து
ஒலி்த்துக்கொண்டிருக்கிறது
இன்னமும் கண்திறக்காத பூனைக்குட்டிகள்
கத்தியலையும் சத்தம்

பாரவண்டிச் சாரதியிடம் திருட்டுக்கொடுத்த
அம்பது ரூபாவை நினைத்து விசும்பியபடி
வீடு திரும்பிக்கொண்டிருக்கிறாள்
நடுநிசி மல்லிகைப் பூக்காரியொருத்தி

இந்தக் குரூர உலகில்
நீயும் விடைசொல்லிப் பிரிகிறாய்
அதனாலென்ன…
பரவாயில்லை!

16 செப்டெம்பர் 2007


8.31.2007

நினைவில் உதிக்கும் நிலவு


வானம் இருண்டு கடல் மூட
இரைச்சலுடன் ஆர்த்துவரும் மழை பார்த்து
கூடிருக்கும் மரத்தை பதைப்புடன் சுற்றியலைவுறும்
தாய்ப்பறவையை இப்போது நினைவூட்டுகிறாய்
கோபமும் பிடிவாதமும் அழிந்த உன்னுருவம்
என்னையொருகணம் தாயென அருள்கிறது
இனி நெருங்குதல் வாய்க்கப்பெறாத
நீள விழிகளை முத்தமிடும் உதடுகளில்
ஈர நிலத்தை உணர்கிறேன்
ஓரங்கமும் விடாது பிணைதல் பாம்புகளுக்கே வாய்த்துளது
‘எதையாவது மறந்துவிட்டிருக்கிறேனா’
குளியலறைக் கண்ணாடிமீது தெறித்த
உப்புச்சுவை கலந்த தண்ணீர் எழுதுகிறது
பிரிவின் கவிதையை
நம்மை உயிர்ப்பித்த இவ்வறை
அமானுஷ்யக் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கலாம்
உன் நீண்ட விரல்களால் மிருதுவாகத் தடவப்படும்
படுக்கை விரிப்பின் பூக்கள் மலர்கின்றன
பலவீனமான புன்னகையோடு
என் கை பற்றி அழுத்தி விடை சொல்கிறாய்
அறிமுகமற்றவர்களெனும் பாவனைபொருத்தி
நீள வராந்தாவின்
எதிரெதிர் திசைகளில் தளர்ந்து தொலைகிறோம்
எங்கேனுமொரு கூட்டத்தில்
யாரோபோல் நீ சிரிக்கும்போதில்
தாழுமென் விழிகளில் மீள உதித்தல்கூடும்
கூந்தல் முகம் மூட
நீலியாய் உருக்கொண்டு
உன்மீதில் கவிழ்ந்தபொழுதில்
அசைந்த திரைச்சீலைகளினூடே
தோன்றி மறைந்த நிலாத்துண்டு.


‘சூரியன் தனித்தலையும் பகல்’ கவிதைத் தொகுப்பிலிருந்து….

7.18.2007

கலகக்காரன்


கையிலொரு மதுக்குவளையுடன்
தாவரங்களுடனும்
தத்தும் அணில்களுடனும் பேசுகிறவன்
புனித பீடங்களின் மீதெல்லாம்
சிறுநீர் கழிக்கிறவன்
புனையப்படும் தேவதைகளில்
பச்சை இறைச்சி வாடையடிக்குதென
உரத்த சிரிப்புடனே எள்ளுபவன்
துணுக்குறும்படியான கெட்டவார்த்தைகளை
வாசிப்பிற்கிடையில் இயல்பேயெனப் போட்டு
அடுத்த வரியில்
அன்றைய காலநிலை குறித்துப் பேசிச்செல்பவன்
இன்னபிற விதங்களில்
கலகக்காரச் சட்டகத்துள் அடைபட்டிருந்தவனை
பன்றிகள் சேறுழன்று திரியும் தெருவொன்றில்
தற்செயலாகச் சந்தித்தேன்
குனிந்து தலையிடிபடாமல்
குடிசையினுள் வரச்சொன்னான்
தூளி நனைத்த மூத்திரம்
எங்களை நெருங்குவதற்கிடையில்
துடைத்துவிடும்படி
மற்றொரு மூலையில் சுருண்டிருந்த மனைவியை
கெட்டவார்த்தை இணைப்புடன் ஏவியபின்
இலக்கியம் பேசினான்
விடைபெறும்போது
தொய்ந்திருந்த சட்டைப்பையைத் தட்டி
பசிக்குதென்று இருநூறு ரூபா கடன்கேட்டுத் தாழ்ந்த
விரல்களைப் பார்த்தேன்
எரவாணத்தில் இடித்துக்கொள்ளாமலே
கண்கள் கலங்கிவிட்டதெனக்கு.

பிற்குறிப்பு: இப்படியொரு கவிதையை எங்கோ வாசித்த நினைவு... உங்களில் யாருக்காவது வேறேதாவது கவிதை ஞாபகம் வருகிறதா?

7.15.2007

காதல் கவிதைப் போட்டி முடிவு


நானும் கவிதை எழுதுவதாக நம்பும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருவதாக (பிரமையாகவும் இருக்கலாம்) எனக்குத் தோன்றுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நண்பர் சிந்தாநதி அவர்கள் 'காதல் கவிதைப் போட்டி'யில் வடிகட்டியெடுக்கப்பட்ட சில கவிதைகளை அனுப்பி அதிலொன்றைத் தேர்வு செய்து தரும்படி கேட்டுக்கொண்டார். நமது சகபதிவர்கள் எல்லோருக்குள்ளும் காதல் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்ததை கவிதைகள் உணர்த்தின. காதல்வெள்ளம் எத்தனை காலமானாலும், வயதானாலும் வடிவதேயில்லை என்று நினைத்துக்கொண்டேன். நல்லவேளையாக எனக்கு அனுப்பப்பட்ட கவிதைகளை யார் எழுதியது என்ற விபரம் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அதனால், கவிதையின் முகத்தை மட்டுமே பார்த்து ஒரு கவிதையைத் தேர்ந்தெடுத்தேன். அந்தக் கவிதையை எழுதியவர் குறைகுடம் பிரசன்னா என்ற நண்பர். ஏனைய நண்பர்கள் என்மீது சாபங்களை எறியாதிருப்பார்களாக.

தினமும் கடக்கும்
வழக்கமான சாலையில்
பழகிய பள்ளங்களைப் போன்றது
உன்னைப் பற்றிய நினைவுகள்
தவிர்க்க நினைக்கும்
கவனமான பயணங்களிலும்
நிலைகுலைந்து விழ நேர்கிறது
ஓரிரு முறையேனும்

என்ற கவிதை தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. பிரசன்னாவுக்கு வாழ்த்துக்கள். 'இவளும் கவிதை எழுதுறாளாம்'என்றெண்ணி எனக்கு வாய்ப்பளித்த நண்பர் சிந்தாநதிக்கும் நன்றி.
இந்தப் பதிவின் நதிமூலம்:

7.14.2007

போலிப் பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு,

எனது கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணத்தால் முன்புபோல் தங்களது பக்கங்களுக்கு வந்து பின்னூட்டமிடுவதில்லை. தமிழ்மணம் பக்கமும் முன்போல வர நேரமிருப்பதில்லை. இந்தச் சந்தடி சாக்கில் யாரோ 'தமிழ்நதி'யாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, எனது பெயரில் பின்னூட்டங்கள் வருவதாக அறிகிறேன். சற்றுமுன் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அழைத்து 'என் மேல் ஏனிந்தக் கோபம்...?'என்று கேட்டபின்னரே விழித்துக்கொண்டேன். 'சீதாபாலம்'என்ற அவரது கவிதைக்கு எனது பெயரில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டம் என்னுடையதல்ல. அந்தப் பின்னூட்டத்தைத் தொடர்ந்து போனால் எனது பக்கத்தையே வந்தடைகிறது. இதனைச் செய்பவர் யாரென்று என்னால் ஊகிக்க முடிந்தாலும், நேரடியாகக் கடிந்துகொள்வதற்கில்லை. தன்னை 'எல்லாம் தெரிந்த' மேதாவியாகக் காட்டுவதற்காக ஏனையோரைப் பற்றிக் கதைகளைத் திரித்துப் பரப்பிவரும் அவரிடம் நாகரிகத்தை எப்படி எதிர்பார்க்க இயலும்? நரிகளிடம்கூட தந்திரத்தைப் பிரயோகிக்க முடியாத என் போன்றவர்கள் ஒதுங்கிக்கொள்வதே நன்று.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதன் முன் தயவுசெய்து என்னை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

தமிழ்நதி

7.12.2007

அதிகாரமும் தேவதைக்கதைகளும்



வல்லுறவுக்கிடையில்
தண்ணீர் மறுக்கப்பட்ட கிருஷாந்தியின்
நெஞ்சு கிழிபடும் ஓலத்தைப்போல
எனது குரலையும் விழுங்க முனைகிறது தொலைவு
முதலில் துயரத்தின் நிலத்திலிருந்து
கொஞ்சம் வார்த்தைகளை எடுத்துக்கொள்கிறார்கள்
தசைத்துணுக்குகளும் கண்ணீரும் வடிகட்டப்பட்டபின்
அழகிய பொலித்தீன் பைகளில் போடுகிறார்கள்
பாத்திரம் வாங்கினால் குவளை இலவசம் என்பதாய்
சில வாக்குறுதிகளைச் சேர்த்துக் குலுக்கியபின்
பெட்டிகளில் அடைத்து அனுப்பிவிடுகிறார்கள்
சலிக்காமல் பரப்பப்படும் தேவதைக்கதைகள்
நம் பாட்டிமார் சொன்னதை விஞ்சுகின்றன.

எறிகணைகள் கூவிக்கொண்டிருக்கும் இவ்விரவின் முடிவில்
இந்தக் காகிதத்தில்
குருதி எழுதிக்கொண்டிருக்கலாம்

காற்றோடு சர்ச்சையிடும் யுனிசெப்பின் கூடாரத்தை
கார்காலக் குளிரும் கனல்சொரியும் வெயிலும்
மாறி மாறிச் சொடுக்கியதில்
இறந்துபோன குழந்தையை
அந்தப் பாலைமரத்தடியில் விதைத்து வந்தேன்
இரவெல்லாம் பாலைமரம் தீனமாய் அழுகிறது
என் மழலையின் பசிக்குரலில்

எஞ்சிய குழந்தைகளை முன்னிட்டு
மூதாட்டியொருத்தியைச் சாகவிட்டேன்
அவளை மூட்டிய சிதைநெருப்பு
தீராத நோயைப்போல்
வயிற்றினில் வளர்ந்துகொண்டேயிருக்கிறது
அவளை எரித்து வந்த அன்றிரா
இருவருக்குப் போதுமான உணவை
நான்காகப் பிரித்துண்டு
வாழும் நாளொன்றை நீடித்தோம்.

நேற்று முன்தினம்
என் தோழி விடுமுறையில் வந்திருந்தாள்
அவள் மடியில்
சாதுவான குழந்தையைப் போலிருந்த துப்பாக்கியை
பிரியம் பொங்கத் தடவிக்கொண்டிருந்தாள்
இசையை
விழிகள் கிறங்க
ஒருவனொடு கூடிக்களித்துலவும் இனிமையை
குழந்தைகளின் பட்டுக்கன்னங்களை
வாழ்வின் நிறங்களையெல்லாம்
துப்பாக்கியினால் இட்டுநிரப்பியிருந்தாள்
தற்கொடையின் தாய்மை வழிந்த விழிகளை
முத்தமிட அவாவினேன்
கூச்சம் பொங்க அவள் விரல்பற்றி அழுத்தி
‘போய் வா’என்று சொல்லவே முடிந்தது
பாலை மரத்தினடியில் ஒருகணம் தயங்கினாள்
மண்மேட்டைத் தொட்டு வணங்கிக் கடந்தாள்
தானுமோர் எறிகணையாய்.

நகக்கண்களில் குருதி வடிய
மலவாசலைச் சுற்றி ஈக்கள் பறக்க
வயல்வெளியில்
என் கணவனை நிர்வாணமாகக் கண்டெடுத்தேன்
காதல் வழிந்த கண்கள்
குருதிநிறை குழிகளாகக் கிடந்தான்
எரியூட்டித் திரும்பிய அன்று
மூன்றாவது குழந்தை
இப்பிரபஞ்சம் காணும் பேராவலில்
தன் பிஞ்சுக்கால்களால்
உள்ளிருந்து உதைத்துக்கொண்டிருந்தாள்

குளிரூட்டப்பட்ட அறைகளுள் இருந்தபடி
இதை வாசிக்கிற கனவான்களே!
மன்னித்துக்கொள்ளுங்கள்
மழையைக் குறித்தும் மலர்கள் குறித்தும் எழுதாமல்
உங்கள் மெல்லுணர்வுகளின் மீது
அமிலம் எறிவதற்கு.

கண்ணீரால் எழுதப்படும் வரலாற்றை
கண் மூடி வாசிக்கும் வித்தையைக்
காணுந்தோறெல்லாம்
‘மனிதர்காள்… மனிதர்காள்…!’என்றிருக்கிறது.
'துன்பியல் நிகழ்வுகளை'
நெடுநாளாய் நினைவில் வைத்திருக்கும்
மகத்தான ஞாபகசக்தியுடையோரே!
எம்மை ஏன் கைவிட்டீர்?
எம்மை ஏன் கைவிட்டீர்?

7.05.2007

ஆண்மை


ஊரே மெல்லுறக்கம் கொள்ளும் பின்மதியநேரம்
தெருமுடக்கில் நீட்டிக்கொண்டிருந்தது
அன்று விசித்திரப் பிராணியாகி
சொல்லாமல் வகுப்பினின்று வெளிநடந்தேன்.
ஓடும் பேரூந்தில் திடுக்குற்று விழிதாழ்த்தி
அவமானம் உயிர் பிடுங்க
கால்நடுவில் துருத்திற்று
பிறிதோர்நாள் வீட்டிற்குள் புகுந்து
சோபாவிலமர்ந்தபடி காட்சிப்படுத்திற்று
இருள் படர்ந்த தெருவொன்றில் மார்பழுத்தி
இறைச்சிக்கடை மிருகமென வாலுரசிக்கடந்தது
ஆண்மையை நிரூபித்தல் நல்லதே!
ஆனால் தீபா
திகைப்பிருள் வீழ்ந்து
பதற்றத்தில் நெஞ்சு நடுக்குற்று
அவமதிக்கப்பட்டவளாய்
நீயும் அழுதிருப்பாய் என்றெண்ண
துப்பாக்கியால் ‘குறி’தவறாமல் சுடத்
தெரிந்திருக்க விரும்புகிறேன்.

6.21.2007

பேசப்படாதவள்



பூக்கள் இறைந்த கனவின் வழியில்
இதழ்பிரியச் சிரித்த முகம்விலக்கி
இருளுள் கரைகிறான் சித்தார்த்தன்
அரசமரத்தடியில் நெடிய இமையிறுக்கி
மறந்துபோகிறான் துணையை

அவன் தேர் நகர்ந்த வீதியும்
நெகிழ்ந்ததோ…! நனைந்ததோ…!

சாளரத்தின் ஊடே அனுப்பிய
யசோதரையின் விழிகள்
திரும்பவேயில்லை
பௌர்ணமி நாளொன்றில்
அவன் புத்தனாயினான்
அவள் பிச்சியாகினாள்

“அன்பே! என்னோடிரு... என்னோடிரு…!”

கண்ணீரில் நெய்த குரலை
அரண்மனைச்சுவர்கள் உறிஞ்ச
வரலாற்றிலிருந்தும் போனாள்
அவளும் போனாள்!!!

சுழலும் ஒளிவட்டங்களின்
பின்னால்தானிருக்கிறது
கவனிக்கப்படாத இருட்டும்.




6.15.2007

ஒரு நாளும் இரண்டு அறைகளும்


ஒரு கவிதையை
வாசலிலேயே வழிமறித்து அனுப்பிவிடும்
குழந்தைகளின் கூச்சலற்ற விடுதி அறையில்
மெல்ல அவிழ்க்கிறேன் என்னை.
இசை கலந்த தண்ணீர்
உடலையும் பாட அழைக்கிறது
மதுவின் நிறம் அறையெங்கும் படர
தொன்மத்தின் ஞாபகத்தில் ஏவாளுமாகிறேன்
ஒப்பனைகள் களைந்து
நானாய் நாகரிகமடையும்போதில்
உடல் பாழடைந்த நகரமெனப் புலம்புகிறது
அண்மைய தோழி சொன்னபடி
நெடுநாளாய் தீண்டப்படாத மார்புகள்
கண்ணீர்த்துளிகளெனத் ததும்புகின்றன
நரம்புகள் இறுகிய கைகளை
காசுக்கு விட்டுக்கொடுத்தவளும்
காமமொரு பிறழ்நிலையென
ஊட்டப்பட்டவளுமான நான்
புனைவுலகை உடலுக்குப் பழக்குகிறேன்
(அ)திருப்தியுற்றுச் சாய்ந்து
கனவின் நூலேணி பற்றி
ஏறிக்கொண்டிருக்குமென்னை வீழ்த்துகிறது
தொலைபேசிவழி நுழையும்
நோயின் குரல்.

உப்பிய வயிறு ஏறியிறங்க
உறங்கிக்கொண்டிருக்கும் அம்மாவினுள்
அளவெடுக்கப்பட்ட துளிகளாய்
இறங்கிக்கொண்டிருக்கிறது குருதி
மூத்திரவாடையடிக்கும்
401ஆம் இலக்கஅறையைத் தாண்டி
பிணவறை செல்கிறது சற்று முன்வரை
யாரோவாயிருந்த எதையோ சுமந்த கட்டில்.

யாராலும் எழுதமுடியாத கவிதையை
காற்றில் எழுதிக்கொண்டிருக்கிறது மரணம்.