1.30.2007

இன்றொருநாள் எனினும்…



கண்ணாடிக் குவளையிலிருக்கும் உவகை
செந்நிறத்தில் சொட்டுச் சொட்டாக
எனக்குள் பெருகி வழிய
இலையுதிர்த்த மரம்
புசுக்கெனத் துளிர்க்கிறது.
தரையே! என் மாயக்கம்பளமே!
இந்தப் பூமி போதும் எனக்கு.

கனிவு பொங்கும் கெட்டவார்த்தைகளின்
கதவு திறக்கிறது.
உலகம் முழுவதும்
நண்பர்களாலும் காதலர்களாலும் ஆன
இந்த உலகத்தைக் கொண்டாடுகிறேன் ஓஷோ!

மூர்க்கத்தின் தந்திகள்
உடலெங்கும் அதிர
ஒரே இசைப்பிரவாகம்…!
மிதக்கிறதா… மூழ்கிடுமா என்னறை?

அம்மா! மண்டியிட்டுக் கேட்கிறேன்
உணவருந்தும் இந்தப் பீங்கானை
இந்த ஒரு தடவை நான் உடைக்கிறேனே!
சிலீரென்றெழும் ஓசையில்
என் பால்யத்தை நினைவுகொள்ள.

1.27.2007

விடைபெற முடியாத அரங்கம்



அரங்கத்தின் திரைகள்
பக்கவாட்டில் இழுபட
ஒளி உமிழும் விளக்குகள் முன்
மனனித்த வார்த்தைகளை உதிர்க்கிறேன்.
நான் நாடிழந்தவள்…
உடைந்து சிதறுமொரு கண்ணீர்த்துளி…
யாரோ ஒருவனின் காதலி…
நாடோடியும் அகதியுமானவள்…
தனிமையின் விடுதி…
இசையின் மடியில் தூங்கும் தேவதை…
நான் நித்திலா…!
ஞாபக அட்டைகளைப் பார்வையாளரின் முன்
விசிறியடித்துப் பரத்துகிறேன்.
நீங்கள் ராஜாவாகிறீர்கள்…
ராணிகளாகவும் எண்களாகவும்
உருமாறிக்கொண்டிருக்குமொரு கணத்தில்
விளக்குகள் எரிகின்றன.
உங்களது கைதட்டல்களின் முன்…
‘போதாது’எனும் முணுமுணுப்புகளின்முன்…
மகிழ்ந்து துக்கித்து விடைபெறுகிறேன்.
உருமறைக்கும் முகக்களிம்பு…
ஜிகினாச்சட்டை…
அரையிருளில் அணைக்கும் சொற்கள்…
அனைத்திலிருந்தும்
தப்பித்துச் செல்ல முடிவெடுத்த நேரம்
இன்றிரவு 10:30.

என்னால் விடைபெற முடியாத அரங்கத்தின்
எந்த மூலையில் நீ இருந்தாய்…?
கூர்ந்த விழிகள் வந்து போன தடங்களைப்
பின்தொடர மாட்டாதவளா நான்…?
நாளை மாலை 6 மணிக்கு நான் டெஸ்டிமோனா.

(டெஸ்டிமோனா சேக்ஸ்பியர் எழுதிய நாடகமொன்றில் வந்த பாத்திரம்)

1.25.2007

அன்புள்ள அனானிக்கு…

நேற்றுனது வெறுப்பிழைத்த கடிதம்
என் இருப்பசைத்துப் பார்த்தது
அகதியென்றாய் உனக்கு அவதியென்றாய்
ஓடிப்போய் உன்நிலத்தில் வாடிக்கிட என்றாய்
‘காராக்கிரகத்தில் களிதின்ன ஆசையா
திரும்பிப் பாராமல் ஓடிப்போய் ஒழி’ என்றாய்.

முகம் காட்டாதொளிந்திருந்து
அகமெல்லாம் தீ வளர்த்தாய்
அழுதேன் ஒரு கணந்தான்
ஆராய்ந்தேன் சில பெயரை
தெளிந்தெழுந்தபோது வெறுப்பில்லை
என்னிடத்தில் சிரிப்புத்தான் பொங்கியது.

ஓடிக்களைத்து ஓரிடத்தில் ஒதுங்கி
வாழத்தான் இங்குற்றோம்.
வலிகளைத்தான் எழுதி வைத்தோம்
ஆழக்கடல்தாண்டி அலையொதுங்கிவந்த
ஈழத்தமிழர்கள் ஏதிலிகள்
நாங்கள் எல்லோரும் புலிகளல்ல!

உயிர்வெல்லம் உயிர்வெல்லம் என்றோடி
உயர்வெல்லாம் போயின காண்!
துயர்சொல்லித் துயர்சொல்லி
சொற்களே தேய்ந்தன காண்!
காரணங்கள் இன்றி கைதானோம் காற்றானோம்
கடல்மடியில் மடிந்து கனவானோம் கதையானோம்
வேரடிமண் துறந்து எங்கெங்கோ விழுந்தோம் நாம்-இன்று
நீயடித்தாய் நிறைவடைந்தாய் அதுவே போதும்!



பிற்குறிப்பு: முகமற்ற, முகவரியற்ற அனானிக்கு எழுதியது. இது கவிதையல்ல… கவிதை போல ஒன்று. சந்தநயம் கிடையாது: சொந்தநயம் மட்டுந்தான்.

1.24.2007

தேவதைகளால் கைவிடப்பட்ட காலத்தில்




அன்பு நித்திலா,

நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன்.

“இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகிழ்ச்சியில் உனது கண்கள் பனிக்கக்கூடும். தெரிந்தே சொல்லும் பொய்கள் உன்னதமான கணங்களை அளிக்கக்கூடுமெனில், நான் பொய்யுரைக்க விரும்புகிறேன்.

தோழி! இருப்பிற்காக அலைந்தது ஒரு காலம். அலைவதற்காகவே இருப்பென்று இப்போது தலைகீழாக்கிவிட்டேன். பால்வீதியில் மிதந்து செல்லும் கோள்களைப் போல நாடுகள். நான் இருக்குமிடமே இப்போதென் சூரியன் மையப்புள்ளி. இங்கு மோட்டார் சைக்கிள்களும் கார்களும் விசையிலிருந்து இழுத்துவிடப்பட்டவை போல விரைகின்றன. பரபரப்பு இந்நகரின் பிரதான தொனி. இங்கு இருக்கிறேன். ஆனால், இல்லை. ரொறன்ரோவில் வெள்ளைத்தோல் பளபளக்க நீண்ட குளிர்க்கோட்டுகள் அணிந்து பாதையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அவர்களோடு மண்ணிறத்தவளாகிய நானும் கடக்கிறேன். ஆனால் நான் அங்குமில்லை. இலண்டனில் புகையிரதத்தில் கரகரத்த குரலில் இருள் நிறத்திலொருவன் குரலுயர்த்திப் பாடுகிறான். இடையிடையே பிசிறடிக்கும் குரல் வழியே பிரிவின் துயர்பொதிந்த வரிகளை அவன் எனக்குள் விசிறுகிறான். நான் அங்குமில்லை. நேதன்ஸ் பிலிப்ஸ் ஸ்குயாரின் அருகிலுள்ள மரத்தடியில் இருக்கிறேன். நித்திலா! என்னை அவ்விதம் கற்பனை செய்யாதே! நான் அங்குமில்லை!

திருவையாற்றில் கனகாம்பிகைக் குளத்தினருகில் இருந்தேன். நீ சைக்கிளை மரத்தில் சாய்த்துவைத்துவிட்டு என்னை நோக்கி வருகிறாய். சீருடை உனக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறது. நிழலின் குளிர்ச்சியில், நீரின் தெளிவினில் கோவிலிலிருந்து மிதந்துவரும் ஊதுபத்தி வாசனையில் உன் வார்த்தைகளின் வசீகரிப்பில் அன்றைக்கு நானிருந்தேன். நாங்கள் ‘அறிவமுது’பொத்தகசாலைக்குப் (‘பொத்தகசாலையா…?’என்றதற்கு ‘அதுதான் சரி’ என்றாய்) போயிருந்தோம். என்னைவிடச் சிறியவள்… வாழ்வின் இனிய கணங்களில் இன்னமும் கால்பதிக்காதவள்…(அப்படி இல்லை என்பாய் வேறொரு அர்த்தத்தில்) நீ… குனிந்து புத்தகங்களைப் புரட்டியபோது பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் எதுவோ புரண்டது.

கிளிநொச்சியில் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய நீலநிறச் சீருடையணிந்த காவலன் என்னைப் பார்த்து எதேச்சையாக உதிர்த்த புன்னகையைப் பிரதி செய்தபோது அங்கு நானிருந்தேன். “பாண்டியன் சுவையூற்று”அந்தப் பெயரை உச்சரித்தபோதெழுந்த கிளர்ச்சியில் இருந்தேன். அந்தச் சாலையின் தூய்மையில், கடைகளுக்குச் சூட்டப்பட்டிருந்த கவித்துவப் பெயர்களில் எங்கெங்கும் ஒலித்த தமிழில் இருந்தேன் சில காலம். வானளாவ என்பதெல்லாம் பொய்…. அலைந்த இடங்களில் நெடிதுயர்ந்த நேர்த்தியான அந்தத்தை அண்ணாந்து பார்க்கவியலாத கட்டிடங்களை கண்டதுண்டு. வியப்பெழுந்த போதும் பெருமிதமோ நெகிழ்ச்சியோ கொண்டதில்லை. ஐந்தாறு தானென்றாலும் கிளிநொச்சி-யாழ் சாலையில் இருந்த கட்டிடங்களின் நேர்த்தியில் நெகிழ்ந்துபோன நினைவுகளில் நானிருந்தேன். மீண்டும் போரெழும் போதினில் இவையெல்லாம் என்னாகும் எனும் துக்கத்தில் நானிருந்தேன். இந்தக் கடிதத்தில் நீக்கமற எங்கும் நானிருக்கிறேன் என்று நீ சிரிப்பாய். வேறெப்படிச் சொல்வதென எனக்குச் சொல்லித்தா நித்திலா! உணர்ச்சி எழுத்தானால் அறிவு விலகிப்போய் வேடிக்கை பார்க்கிறது.

ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனபோது இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசவாகனம் ஒன்றைப் பார்த்தேன். அதில் போராளியொருவனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பூவைத் தொடுமொரு கவனத்துடன் விரல்களால் தடவிப் பார்த்தபோது அழுகை வந்தது. ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எப்படிக் கண்ணீர் பொங்குமோ… அதைப் போல துடைக்கத் துடைக்க வழிந்தது கன்னத்தில். துன்பியலையே நான் எழுதுவதாக நண்பன் ஒருவன் கூறினான். வலிந்து நான் முயலும் கொண்டாட்டங்களை எப்படியோ மேவிவிடுகிறது உள்ளிருக்கும் வலி.

ஆனையிறவு கைப்பற்றப்பட்ட செய்தியை அறிந்த அன்று அலுவலகத்தில் இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டோம். அன்று உவகை எங்களைக் காவித்திரிந்தது. ஒருவரையொருவர் நேசமுடன் பார்த்துக்கொண்டோம். நீண்ட நாள் முகம் திருப்பித்திரிந்த தோழியொருத்தி எனக்குத் தேநீர் தந்து ‘மன்னித்துக் கொள்’என்றாள்.

இப்போது நான் செய்திக்குருடாயிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் செய்திகளிலிருந்து செவிடாகி தப்பித்து ஓடிவிட விரும்புகிறேன். இருந்தும் குரல்கள்… குரல்கள்… வலியைச் செவிகளில் வலுக்கட்டாயமாகக் செலுத்துகின்றன. எனது நம்பிக்கைகளின் மீது சம்மட்டிகள் இறங்குகின்றன. ‘இராஜதந்திரப் பின்னகர்வு’ என்ற சொல்லை துரோகிக்கப்பட்ட துக்கத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். நித்திலா! ‘சுயநலத்தால் தம் நிலத்தைக் கைவிட்டு ஓடிப்போனவர்கள் குற்றவுணர்வு கொள்வதுதானே நியாயம்… நீயேன் கோபம்கொள்கிறாய்’என்று நீ வியந்துகொள்வாய். எனினும், கையிலிருந்து சொரியும் மணல்போல நம்பிக்கைகள் உதிர்ந்துபோய்விடுமோ என்றஞ்சுகிறேன். அன்றைக்கு எனது தோழிகளில் ஒருத்தி சொன்னாள் “அவர்கள் மௌனமாக்க விரும்பும் எதிர்க்குரலால் நான் பேச விரும்புகிறேன்”என்று. நேற்றொரு தோழன் சொன்னான் “அவர்களின் பாசிசத்தை நான் மறுதலிக்கிறேன்”என்று. நான் கேட்க விரும்பாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். “நாமெல்லோரும் தேசியத்தை விற்றுக்கொண்டிருக்கிறோம்”என்றொரு இளையவன் சொன்னான்.

எனக்கு தேசியம், பாசிசம், நாசிசம், மாக்ஸிசம், சர்ரியலிசம், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்… எந்த இசமும் துவமும் தெரியாது. நான் சாதாரணள்.

சக போராளியின் உயிரற்ற உடலைப் போர்த்தியிருந்த புலிக்கொடியை சரிசெய்யும் பாவனையில் கண்ணீரைப் புறங்கையால் துடைத்தவளைக் கண்டேன். மாவீரர் கல்லறையில் ஏந்திய மெழுகுவர்த்தியின்; சுடர் முகத்தில் சிவப்பொளியைப் படர்த்த இறுகிய முகத்தோடு நின்ற இளையவன் ஒருவனைப் பார்த்தேன். மரச்செறிவடர்ந்த காட்டிற்குள் மழை இறங்கியபொழுதொன்றில் வாகனம் பழுதுபட்டு நின்றது. துப்பாக்கியும் கையுமாக எங்கிருந்தோ வந்து தேநீர் தந்தவனின் முகத்தில் எனக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளையைப் பார்த்தேன். உயிரை உறைய வைக்கும் பனியில் கதவு கதவாகத் தட்டிக் காசு கேட்டு ஊருக்கு அனுப்புபவனின் பிய்ந்து போன சப்பாத்தும் அழுக்குத் திரண்டு நிறம்மாறிப் போன குளிர்க்கோட்டும் எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. பின்னிரவில் பத்திரிகைப் பணி முடித்து வீடு திரும்பும் என் சிநேகிதி ஒருநாள் சொன்னாள்… “வேலை முடித்து வெளியில் வரும்போது நடுச்சாமமாயிருக்கும். பனி வெள்ளையாய் படிந்து கிடக்கும் அந்தத் தரையில் கவனமாக நடந்து வந்து காரில் ஏறும்போது நான் நினைத்துக்கொள்வேன் ‘என்னால் என்னருந் தேசத்தில் துயருறுபவர்களின் ஒரு துளிக் கண்ணீரைத் துடைக்கமுடிந்தால்…’என்று. நான் நித்திரை விழிப்பதற்காக வருந்துவதில்லை”.

நான் சாதாரணர்களைப் பார்க்கிறேன். அவர்களின் நம்பிக்கையைப் பார்க்கிறேன். தோற்றனர் என்ற செய்தி வந்துற்றபோது துக்கம் பொங்கத் தாழும் விழிகளை நினைவில் கொள்கிறேன். வென்றனர் என்றபோதில் துள்ளிக்குதிக்கத் தூண்டும் பேருவகை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதை ஆராய விரும்பவில்லை. எப்போதும் தொலைவிலிருந்து தங்களது துக்கம் செறிந்த கண்களால் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு விமர்சிக்க என்ன இருக்கிறது. கவிஞர் ஒருவர் சொன்னதுபோல ஆம்! நாங்கள் ‘தொலைவிலிருந்து விசுவசிக்கிற பாக்கியவான்கள்’தான்.

தனது குழந்தைகளை அயலவரின் குற்றச்சாட்டுகளிலிருந்து எப்போதும் பொத்திவைக்கும் ஒரு தாயைப்போல எனது நம்பிக்கைகள் ஆட்டங்கண்டுவிடக்கூடாதே என்று பொத்திப் பொதிந்து வைக்கிறேன்.

ஊரின் மாயக்குரல் கார்வையோடு அழைத்துக்கொண்டேயிருக்கிறது. இழைந்து குழைந்து அழைக்கும் அந்தப் புல்லாங்குழலோசையில் கட்டுண்டு மயங்கிக்கிடக்கிறேன். எப்போதாவது என்னை மறந்தெழுந்து ஓடுகிறேன். உயிர் என்னைக் கடிந்துகொள்கிறது. தன்னைப் பத்திரப்படுத்திவைக்க என்னால் முடியவில்லை என்று சாடுகிறது.

‘நாங்கள் எல்லாத் தேவதைகளாலும் கைவிடப்பட்ட காலத்திலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்…?’என்ற கேள்வி எழுந்து எழுந்து பதிலற்று மடிகிறது.

நித்திலா! காத்திருக்கிறேன். காத்திருக்கிறோம். சொற்கள் அழிந்தவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, வலிகிளர் வார்த்தைகளைச் செவிமடுக்கிறவர்களாக தொலைவிலே காத்திருக்கிறோம்.

நட்புடன் நதி

1.19.2007

அஞ்ஞாதவாசம்

நேற்றொரு சனவெள்ளத்தில் மிதந்தேன்
ஒரு துளிப் புன்னகையுமற்று
கடந்துபோகிற மனிதர்கள் வாழும்
அந்நியத் தெருக்களில்
அடையாளமற்றவளாக சபிக்கப்பட்டுள்ளேன்.
என்னைக் குறித்து அவர்களும்
அவர்கள் குறித்து நானும்
அறியாதொரு மாநகரின் தனிமை.

உனது சிகரங்களிலிருந்தபடி
எனது பள்ளத்தாக்குகளின்
மலர்களையும் ஓடையையும் பாடாதே…!
பரிச்சயமற்றது பசுமையெனினும்
பாலைநிலமென நீண்ட மணல்பரத்திக் கிடக்கிறது.

தொப்பூள் கொடியுமில்லை
தொலைந்து நிமிர்ந்த நகருமில்லை
நான் முகமற்றவள்…
எந்த மலையிடுக்கிலோ
எந்த நதிக்கரையிலோ
விரித்த பக்கங்கள் படபடத்துக் கலங்க
இல்லாதொழியலாம் எனதிருப்பு.

என்னைப்போலவே அலையட்டும்
நிறைவுறாத என் பாடல்களும்.
தன்னிரக்கத்தில் கரைந்த சொற்களை
எனக்குப் பிறகு கொண்டாட
நீயும் வரவேண்டியதில்லை.

1.12.2007

சென்னை புத்தகக் கண்காட்சி: சென்றதும் கொணர்ந்ததும்….



சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஆளாளுக்கு எழுதுகிறார்கள். அதையெல்லாம் வாசித்ததும் எனக்கும் விரல்கள் குறுகுறுவென்றிருந்தது. நீண்ட நாட்களாகப் பதிவு போடாதது வேறு பெரிய கொலைக்குற்றம் போல உறுத்திக்கொண்டிருந்தது. சரி வருவது வரட்டும் என்று எழுத உட்கார்ந்துவிட்டேன்.

வாங்குகிற புத்தகங்களையெல்லாம் வாசிக்கிறேனோ இல்லையோ எங்காவது ‘புத்தகக் கண்காட்சி’என்று ஒரு அறிவிப்பைப் பார்த்தால் போதும். ஏதோ விருந்துச்சாப்பாட்டிற்கு ஏங்கும் பிச்சைக்காரனைப்போல (பாருங்கள் மகாஜனங்களே உவமையை) அந்த நாளை நினைத்துக்கொண்டேயிருப்பேன். கடந்த ஆண்டு எவ்வளவோ முயற்சி செய்தும் புத்தகக்கண்காட்சி முடிந்து பத்து நாட்கள் கழிந்தபின்பே சென்னையில் வந்திறங்க முடிந்தது.

முதல்நாள் போனால் ஆரவாரம் அதிகமாக இருக்குமென்று யாரோ சொன்னதால், மறுநாள் வியாழக்கிழமை காலை பதினொரு மணிக்கு எனது பரிவாரங்களோடு போனேன். காவலுக்கு நின்றிருந்த பொலிசார் விரைந்து வந்து மதியம் இரண்டு மணிக்குப் பின்னரே பொதுமக்களை அனுமதிக்க முடியும் என்று திருப்பியனுப்பிவிட்டார்கள். ‘உங்களோடு வந்த ராசி சரியில்லை’என்று என்னோடு வந்திருந்த ‘பகுத்தறிவாளர்’பொய்யாக அலுத்துக்கொண்டார். வீட்டிற்குத் திரும்பி உண்டு உறங்கி மீண்டும் ஐந்து மணிக்கெல்லாம் கண்காட்சியிலிருந்தோம்.

முன்புறமே கன கோலாகலம். புதிப்பகங்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்களை உள்ளடக்கிய பெரிய பெரிய ‘பானர்’கள் காற்றிலாடின. சுவரொட்டிகள் கண்பற்றி இழுத்தன. நாங்கள் மொத்தம் ஐந்துபேர்(அதில் இருவர் ‘கலர்’பார்க்க வந்தவர்கள்) கூட்டத்தில் கலந்து காணாமற்போனோம். இந்த இணையக்காலத்தில் இத்தனை பேர் அச்சில் வரும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறார்களா என்று வியப்புத் தாங்கவில்லை. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு விற்பனையறை என்ற வகையில் வலதும் இடதுமாய் இருபுறமும் கடைகள். கூடத்தின் முடிவில் சென்று திரும்ப மீண்டும் வலதும் இடதுமாக பதிப்பகங்களின் பெயர்களுடன் விற்பனையறைகள். நானூற்றுச் சொச்சம் என்று சொன்னார்கள். ஆரம்பத்திலேயே இருந்த ‘விகடன்’காட்சியறைக்குள் கால்மிதித்து இடிபடுமளவிற்குக் கூட்டம் நிறைந்திருந்தது. ஒருபுறமாய் உள்நுழைந்து மறுவழியால் வெளியேறும் வழியில் எடுத்த புத்தகங்களுக்கு காசு கொடுக்கவேண்டும்.(பின்னே சும்மாவா… அது கிடக்க, ஏன் இத்தனை வர்ணனை என்பவர்களுக்கு: என்னைப்போல புத்தகத்தில் பைத்தியம் கொண்டலையும் பலபேர் அமெரிக்கா, லண்டன் இங்கெல்லாம் இருக்கக்கூடும். ‘போக முடியவில்லையே…’என்று பதைத்துக்கொண்டிருப்பவர்களைப் பதிவு போட்டு ஆற்றுகிறேனாம்.)

பெரியவர்கள் (வயதில்) நாங்களே ஒருவரையொருவர் நின்று நின்று தேடிக்கொண்டிருக்க, வழியெல்லாம் காலிடறி கையிடறி ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் தொலையாமலிருப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு அறிவிப்பு ஒலித்தது. இன்ன பெயருடைய, இன்ன நிறத்தில் சட்டை போட்ட குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தார்கள். மணிமேகலைப் பிரசுரத்தில் கண்ணாடியோடு நின்றிருந்த ஒருவரை லேனா தமிழ்வாணன் என்று நண்பர் காட்டினார். அந்தக் காட்சியறையில் நடிகர் ராஜேஷ் இருந்து வாசகர்களுக்கு ஏதோ விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். “அங்கே போனால்…. ‘எப்படி… எப்படி…? என்ற தலைப்பில் நிறையப் புத்தகம் வாங்கலாம்”என்று நண்பர் கூறினார். எனக்கு ‘எப்படி’களில் ‘அப்படி’யொரு ஒவ்வாமை. விலக்கி நடக்க, என்னோடு வந்திருந்தவர்களில் ஒருவர் ‘ராஜேஷைப் பார்த்தேயாக வேண்டும்’என்று அடம்பிடித்தார். சற்று தயங்கி எட்டிப் பார்க்க ராஜேஷ் அவரைப் போலவே இருந்ததைக் கண்டேன்.

‘இவர்தான் ஞாநி’, ‘இதுதான் நல்ல புத்தகம்’என்று கூட வந்த நண்பர் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார். உயிர்மை பதிப்பக காட்சியறையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருந்தார். பிரபலமான ஒரு வில்லன் நடிகர் மற்றும் சாயம்போன குர்த்தா அணிந்து தோளில் ஜோல்னாப்பை தொங்க அலைந்த, எங்கேயோ பார்த்த ஞாபகத்தைக் கிளற வைத்த முகங்கள் எனப் பலரைக் காணமுடிந்தது. இதற்கிடையில் புத்தகக் கனம் ஏற, ஐந்நூறு ரூபாய்த்தாள்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததை இடையில் கவனிக்க நேர்ந்தது. தரமான எழுத்துக்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் என்று அறியப்பட்டிருந்தவற்றில் அல்லது அவ்வாறு ஊட்டப்பட்டிருந்தவற்றில் கூட்டம் இருந்தது. சில விற்பனையறைகள் வெறிச்சோடிப் போயிருந்தன. சிறுவர்களுக்கான நூல்கள், கணினி தொடர்பான நூல்கள், கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துக்கள், யுனிகோட்… இன்னபிற, இசைத்தட்டுக்கள் மேலும் இதுவரை விருதுபெற்றவர்களின் பட்டியல் போன்ற சகலமானவற்றுக்கும் தனித் தனிக் காட்சியறைகள் இருந்தன.

புத்தகப் பசியில் நடந்து திரிந்தபோது வயிறும் கூடுமானவரை தனது இருப்பை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. ஈற்றில் ஒரு அவசரகதியில் சுற்றியடித்து வெளியில் வந்து உணவகத்தில் அமர்ந்து மாப்பசை வடையும், எண்ணெயில் மிதந்த சமோசாவும் சாப்பிட்டோம். அங்கே சுவாரசியமான, வேக வேகமாகப் பேசுகிற, பிரபலமான ஈழத்து எழுத்தாளர் ஒருவரையும் சந்திக்கும் ‘பேறு’பெற்றோம். எங்களோடு வந்த நண்பர் அந்த எழுத்தாளரோடு ‘சம்பாஷணை’க்குப் போய்விட, எஞ்சிய நால்வரும் களைப்போடு வெளியில் வந்தோம். வெளியில் போடப்பட்டிருந்த மேடையில் ஒருவர் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தார். பின்வரிசையில் இருந்தவர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கழிப்பறை வசதிகள் இல்லாதிருந்தமை குறித்து வேறொரு பதிவர் எழுதியிருந்தார். புத்தகப் பிரியர்களுக்கு இயற்கை உபாதைகள் இருக்காதென்று ஒருங்கமைப்பாளர்கள் நினைத்தனரோ என்னவோ தெரியவில்லை. தவிர, புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் ஏறத்தாழ எண்பது சதவீதத்தினர் ஆண்கள்தான். சென்னையைப் பொறுத்தவரை வெளியிடங்களில் ஆண்களுக்கு கழிப்பறை தேவையில்லை என்பதை வழி தெருவெல்லாந்தான் தினந்தோறும் காண்கிறோமே…!

இன்னும் ஒருநாள் நிதானமாகப் போய் புத்தகங்களை மேயலாமென(கழுதை?)எண்ணி, வீட்டில் அதைச் சொன்னபோது 13ஆம் திகதி போகலாமென ஏகோபித்த குரலில் சொன்னார்கள். காரணம் கேட்டால் அன்றைக்கு நடிகர் சூரியா ஏதோ ஒரு பதிப்பகத்தின் காட்சியறைக்கு வருகை தருகிறாராம். கட்டாயம் போகவேண்டியதுதான்…! சூரியாவை நேரில் பார்க்காதுபோனால் இந்த ஜென்மம் பாழாய்ப் போய்விடுமல்லவா…?

வாங்கிய புத்தகங்கள்: எனது தரவுக்கோர்வைக்கென எழுதிய பட்டியலை உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி இணைத்துள்ளேன். படம் காட்ட அல்ல.

கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன்
ராஸ லீலா – சாரு நிவேதிதா
வெங்காயம் - (பெரியார் பற்றிய நூல்) சி. அண்ணாமலை
கலகம் காதல் இசை – சாரு நிவேதிதா
தொலைகடல் - உமா மகேஸ்வரி
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் - ரமேஷ்-பிரேம்
தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா
நடந்து செல்லும் நீரூற்று – எஸ். ராமகிருஷ்ணன்
இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
அக்கிரகாரத்தில் கழுதை – வெங்கட் சாமிநாதன்
நாக மண்டலம் - கிரீஷ் கர்னாட் (தமிழில் பாவண்ணன்)
மேடம் பவாரி – குஸ்தாவ் பிளாபர் (தமிழில் மாரிசாமி)
தகப்பன் கொடி – அழகிய பெரியவன்
கவர்மென்ட் பிராமணன் - அரவிந்த மாளகத்தி
ஹோ சி மின் ஜெயில் டைரி – தமிழில் சுரா
அன்னா அக்மதோவா கவிதைகள் - தமிழில் லதா ராமகிருஷணன்
சிலைகளின் காலம் - சுகுமாரன்
இன்றைய மலையாளக் கவிதைகள்
கிருஷ்ணப் பருந்து – ஆ. மாதவன்
கவிதைகளுடன் ஒரு சம்வாதம் - ஞானக்கூத்தன்
புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ – தமிழில் சா.தேவதாஸ்
யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன்
சுள்ளிக்காடும் செம்பொடையனும் - மஜீத்
நாலுகட்டு – எம்.டி. வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்
தாகூரின் கவிதைகள் - வி.ஆர்.எம்.செட்டியார்
மைக்கேல் ஆஞ்சலோ - இளஞ்சேரன்
உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி
ஏழாவது பூ (மலையாளச் சிறுகதைகள்) தமிழில் சுரா
பலி பீடம் - கிரீஷ் கார்னாட் (தமிழில் பாவண்ணன்)
களவுபோகும் புரவிகள் - சு.வேணுகோபால்
கண்ணாடியாகும் கண்கள் - நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்
நினைவோடை (ஜி. நாகராஜன் குறித்து) சுந்தர ராமசாமி
ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் - சுந்தர ராமசாமி
மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்) வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை
விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் - தொகுப்பு அ.மார்க்ஸ்,பொ.வேல்சாமி
பெரியார் - அ.மார்க்ஸ்
அம்பானி – ஒரு வெற்றிக் கதை – என்.சொக்கன்
மனுதர்ம சாஸ்திரம் - திருலோக சீதாராம்
சகோதரிகள் - அலெக்சாண்டிரா கொலோண்டை
மரப்பசு - தி.ஜானகிராமன்
மோகமுள் - தி.ஜானகிராமன்
அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
மகாமுனி – பிரேம்-ரமேஷ்
பலஸ்தீனக் கவிதைகள் - தொகுப்பு:எம்.ஏ.நுஃமான்
அந்நியன் - ஆல்பர் காம்யு
கறுப்புக் குரல்கள் - ஆபிரிக்கப் பழங்குடியினரின் கவிதைகள்
வலி – அறிவுமதி
கொலை மற்றும் தற்கொலை பற்றி – ரமேஷ்-பிரேம்
ஏறுவெயில் - பெருமாள் முருகன்
தீராநதி நேர்காணல்கள் - மணா
பரதேசி – ரமேஷ்-பிரேம்
தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்
பெண்குல வரலாறு – அ.பாக்கியம்
இன்று – அசோகமித்திரன்
சொல்லிலிருந்து மௌனத்துக்கு –(நேர்காணல்கள்) பவுத்த அய்யனார்
மண் - ஜெயமோகன்
இரவு மிருகம் - சுகிர்தராணி
தண்ணீர் - அசோகமித்திரன்
பிள்ளை கெடுத்தாள் விளை – சுந்தர ராமசாமி (கதை-எதிர்வினை)
பச்சைத் தேவதை – சல்மா
புதுமையும் பித்தமும் - க.நா.சுப்பிரமண்யம்
நினைவோடை (ஜீவா குறித்து) சுந்தர ராமசாமி
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி
பயணப்படாத பாதைகள் - அ.சீனிவாஸன்,எம்.சிவசுப்ரமணியன்

1.05.2007

மரணம் பற்றிய குறிப்பு




ஒரு கயிற்றில் கழுத்திறுகி முடிந்துவிட்டது உன் வாழ்வு. உடலை எடுத்துச்செல்வதன் போதான ஒத்திகைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் சிலர். உனது மரணத்திற்கான காரணங்களை தத்தமது சிந்தனை விரிவுக்கும் உளவியல்சார் அறிவுக்கும் ஏற்ப விரித்தபடியிருக்கிறார்கள் வேறும் பலர்.

காரணங்கள் வேண்டும் எல்லோருக்கும்… எல்லாவற்றுக்கும் (வயிற்றுநோவிலிருந்து கயிற்றில் தொங்குவது வரை) உன்னோடு சேர்த்துப் புதைப்பதற்கு காரணங்கள் இல்லாமற்போவதென்பது, எஞ்சியிருப்பவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கிவிடுமல்லவா…? மண்ணள்ளிப் போட்டு கையைத் தட்டிவிட்டு சுடுகாட்டிலிருந்து திரும்பிப் பாராமல் போய்விடவேண்டும். ‘இந்தப் பாவம் என்னையும் எனது சந்ததிகளையும் சேராதிருக்கட்டும்’என, கிறிஸ்துவைச் சிலுவையிலேற்றும் தீர்வை விதித்த பின் தனது கைகளைக் கழுவிக்கொண்ட நியாயாதிபதி சொன்னதைப்போல இருக்கின்றன எஞ்சியிருப்பவர்கள் சொல்கின்ற காரணங்கள். சதாம் கூசைனைத் தூக்கிலிட்டதைப் பகிரங்கமாகக் காட்டியதனால் தூண்டப்பட்டாய் என்றார் ஒருவர். ‘எனது சாவிற்கு எவரும் காரணமில்லை’என்ற வார்த்தைகளை தொலைக்காட்சி நாடகங்களிலிருந்தும் சினிமாக்களிலிருந்தும் நீ எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள் சிலர். பெண்ணே! உனது மரணம் இன்றைய நாளின் பேசுபொருளாயிருக்கிறது அவ்வளவே!

நேற்றிரவு தூக்கமாத்திரையையும் மீறி விழிப்பு வந்தது. நீ தனியே பிணவறையில் படுத்திருப்பாய் என்பது அமானுஷ்யமான பயத்தை ஊட்டியது. எழுந்தமர்ந்து எழுதத் தொடங்குகிறேன். எழுத்தைத் தவிர வேறெவர் என்னைத் தாங்கிக்கொள்ளக்கூடும்…? அதன் தோள்கள் ஒரு பறவையினுடையதைப்போல மிருதுவானவை. புகைப்படத்தில் உன்னை முற்றிலுமாக அடைத்து விடும்முன், நீ மரணத்தின் மூலம் என்னோடு பேசியிருப்பதைச் சேமிக்க விரும்புகிறேன்.

“தற்கொலை என்பது கோழைத்தனம் என்று சிலர் சொல்லக்கூடும். அது தைரியமற்றவர்களின் வார்த்தை. மரணம் என்பது மாவீரம்” என்று ஒருவர் எழுதியிருந்ததை நேற்று வாசித்தேன். அது எத்தகைய உண்மை. வாழ்வின் மீதுதான் எத்தனை வெறித்தனமான காதல். “உனக்குப் பதிலாக என்னை எடுத்துச் சென்றிருக்கக் கூடாதா…?”என்று பிரலாபிக்கிறவர்களின் முன் எமன் தோன்றி “எடுத்துக்கொள்ளட்டுமா…?”என்று கேட்டால், விக்கித்து விதிர்விதிர்த்துப் போய்விட மாட்டார்களா…?

தற்கொலையை நோக்கிச் செலுத்தும் தருணங்களைத் தன்னிரக்கம் வென்றுவிடுகிறது. நமக்கு மரணத்தின் மீதான பயத்தை, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீதான கரிசனையாக மாற்றிக்கொள்கிறோம். அவர்கள் நம்மை நினைத்து எப்படியெல்லாம் அழுவார்கள் என்ற கற்பனையிலேயே கரைந்துபோய்விடுகிறது தற்கொலைக்கான எண்ணம். “இப்படி வாழ்வதைவிட செத்துப்போய்விடலாம் போலிருக்கிறது”என்ற அபத்தத்தில் தோய்ந்த வார்த்தைகளை எத்தனை தடவைதான் பேசியிருப்போம். உணர்ந்து பேசும் வார்த்தைகளை விட செவியில் ஒலிக்கக் கேட்ட வார்த்தைகளைத்தானே பழக்கதோஷம் காரணமாகப் பேசுகிறோம்.

தற்கொலையைப் பற்றி யாரும் சிந்திக்கலாம். திட்டமிட முடியாதென்றே தோன்றுகிறது. திட்டமிடும் நேரம் நீள நீள அதன் மீதான விருப்பு குறுகிப்போகலாம். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும்போது பேசத்தொடங்குகிற சாத்தானின் குரலை செவிமடுக்கத் தொடங்கும் ஒரு கணம்தான் பெரும்பாலானோரைத் தற்கொலையை நோக்கி அழைத்துப்போகிறது. மரணம் என்ற பொறி சட்டெனப் பற்றிக்கொள்கிறது. வாழும் நாட்களில் கவனிக்கப்படாதவளை-கவனிக்கப்படாதவனைக் குறித்து உன்னிப்பாகக் குவிகிறது கவனம். புறக்கணிப்பின் மீதான பழிவாங்குதலாகத்தானே பெரும்பாலும் தற்கொலைகள் அமைந்துவிடுகின்றன.

பெரியவர்கள்தான் குழந்தைகளின் பிதாமகர்கள், ஆதர்சங்கள், தேவதைகள்… சின்னப் பெண்ணே! தேவதைகளை நம்பியிருக்கத்தேவையில்லை! அவர்கள் வாழ்வின் அவசரங்களில் சுயநலத்தால் சிலசமயம் வேண்டுமென்றே வாக்குறுதிகளை மறந்துபோகிறவர்கள். வெண்துகில் பறக்க வானத்திலேறி விரைந்துபோய்விடுவார்கள்.

அன்று விடைபெறும்போது நான் உன் கண்களைப் பார்த்திருக்கலாம். உனக்கே உனக்கென பிரத்தியேகமாக ஒரு சொல்லையாவது சொல்லியிருக்கலாம். நான் உனக்களித்த வாக்குறுதியை தனியறையில் உனது கையை அழுத்தி மீண்டும் அளித்திருக்கலாம். எல்லோருடைய சாவிற்குப் பின்னாலும் இப்படிப் பல ‘லாம்’கள் உதிர்க்கப்படலாம். முற்கூட்டியே எழுதப்பட்ட விதியால்தான் பொதுவான ஒரு புன்னகையும் கையசைப்பும் தந்து விடைபெற்றேன் என்று, எனது குற்றவுணர்வை எரித்தேன் தேவகி!(உயிர் காற்றில் கலந்துவிட்டபிறகு உன்னை ‘பிணம்’என்றார்கள். நானும் பெயரை மாற்றிவிட்டேன்.)

“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.

எனக்கு வெற்று ஆறுதல்களில், கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. கழிந்துபோகும் நாட்களால் மட்டுமே கண்ணீரைத் துடைக்கமுடியும். மனசுக்கு நெருக்கமானவர்களை மறக்கவியலாத அந்தக் குரல் அழைத்துக்கொண்டேயிருக்கும். சிலநாட்களில் அந்தக் குரலும் தேய்ந்து ஒலிமங்கி மறைந்துபோய்விடும். பிறகென்ன… பிறகு… மாலையுடனான ஒரு புகைப்படம் தொங்கும். விசேட நாட்களில் ஊதுபத்தி புகை வளையமிடும். இறந்துபோனவளை-இறந்துபோனவனைப் பற்றிய கதைகள் மிகுபுனைவுகளுடன் பேசப்படும்.

பல சமயங்களில் நாம் எல்லாமாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் ஒன்றுமேயில்லை என்பதை மற்றவர்களின் மரணம் உணர்த்துகிறது. நேற்று ‘தேவகி’ ‘பிணம்’எனப் பேசப்பட்டாள். கால்முளைத்த காற்றெனத் திரிந்த ‘அவள்’ ‘அது’வானாள்.

கண்முன்னால் நடந்து சிரித்து நேசித்து கேலிசெய்து சிலசமயம் அழவும் பார்த்த ஒரு உயிர், ஒரு புகைப்படத்திலும் எப்போதாவது கொள்ளப்படும் ஞாபகத்திலும் சில கண்ணீர்த்துளிகளிலும் முடிந்துவிடுவது என்பது, மனிதர்களால் பேசப்படுகிற அதியுன்னதங்களின் மீதெல்லாம் கேள்விகளை எழுப்புவதாக அமைந்துவிடுகிறது. அப்படிப் பார்க்கையில், வாழ்க்கையே ஒரு மாபெரிய அபத்தம் என்பதன்றி வேறென்ன…?

1.03.2007

ஒரு பாடல் (?)

கனடாவில் நடக்கவிருக்கும் ‘இசைக்கு ஏது எல்லை’ என்ற நிகழ்ச்சிக்காக ஒரு பாடல் கேட்டிருந்தார்கள். அது கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் ஒரு நிகழ்ச்சி. அங்கு பாடப்படும் முழுப் பாடல்களுமே தமிழில்தான் பாடப்படும். நடைமுறை விடயங்கள்தான் பாடுபொருளாக அமைவதுண்டு. இந்த ‘கண்ணனை அழைத்து வாடி’, ஆண்டாள் ஏங்கிக் காத்திருப்பது எல்லாம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறுவது. அந்நிகழ்ச்சிக்காக இம்முறை எழுதிய பாடல் இது:


மழை என்றழைக்காதே… அன்பே
காலம் தவறி பொழியும் என்னை
மழை என்றழைக்காதே…
இலைகள் எல்லாம் உதிரும் காலம்
பறவை உனக்கேன் என்மேல் மோகம்
மழை என்றழைக்காதே…

கடலில் நிலவு சுடரும் அழகில்
கவிதை நதியில் கரையும் பொழுதில்
இசையில் இழைந்து நெகிழும் தருணம்
இதயம் உடைந்து சிதறும் வலியில்
தொலைவில் இருந்து அணைத்தால் போதும்
தொடரும் நினைவாய் நிலைத்தால் போதும்
(மழை என்றழைக்காதே…)

தனிமைச் சிறையில் பலநாள் கிடந்தேன்
இனிமை உலகம் எழு நீ என்றாய்
வெறுமை நிரப்பும் வித்தை கற்றாய்
அருமை என்றேன் இணைவோம் என்றாய்
கரைக்கு அலைகள் சொந்தம் இல்லை
கனவின் விடுதி விழிகள் இல்லை
(மழை என்றழைக்காதே)

மேகம் போல என்னைக் கடந்தே
போகும் ஒருநாள் வரும் என் அன்பே…
தேகம் கூடும் காதல் தேயும்
மோகம் தீர்ந்தால் விலகி ஓடும்
வாழும் காலம் வரையும் காதல்
வாழ பிரிந்தே எரிவோம் வருவாய்…!
(மழை என்றழைக்காதே)