1.03.2007

ஒரு பாடல் (?)

கனடாவில் நடக்கவிருக்கும் ‘இசைக்கு ஏது எல்லை’ என்ற நிகழ்ச்சிக்காக ஒரு பாடல் கேட்டிருந்தார்கள். அது கர்நாடக சங்கீதத்தை எளிமைப்படுத்தி ஜனரஞ்சகமாக்கி மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்லும் ஒரு நிகழ்ச்சி. அங்கு பாடப்படும் முழுப் பாடல்களுமே தமிழில்தான் பாடப்படும். நடைமுறை விடயங்கள்தான் பாடுபொருளாக அமைவதுண்டு. இந்த ‘கண்ணனை அழைத்து வாடி’, ஆண்டாள் ஏங்கிக் காத்திருப்பது எல்லாம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் நடைபெறுவது. அந்நிகழ்ச்சிக்காக இம்முறை எழுதிய பாடல் இது:


மழை என்றழைக்காதே… அன்பே
காலம் தவறி பொழியும் என்னை
மழை என்றழைக்காதே…
இலைகள் எல்லாம் உதிரும் காலம்
பறவை உனக்கேன் என்மேல் மோகம்
மழை என்றழைக்காதே…

கடலில் நிலவு சுடரும் அழகில்
கவிதை நதியில் கரையும் பொழுதில்
இசையில் இழைந்து நெகிழும் தருணம்
இதயம் உடைந்து சிதறும் வலியில்
தொலைவில் இருந்து அணைத்தால் போதும்
தொடரும் நினைவாய் நிலைத்தால் போதும்
(மழை என்றழைக்காதே…)

தனிமைச் சிறையில் பலநாள் கிடந்தேன்
இனிமை உலகம் எழு நீ என்றாய்
வெறுமை நிரப்பும் வித்தை கற்றாய்
அருமை என்றேன் இணைவோம் என்றாய்
கரைக்கு அலைகள் சொந்தம் இல்லை
கனவின் விடுதி விழிகள் இல்லை
(மழை என்றழைக்காதே)

மேகம் போல என்னைக் கடந்தே
போகும் ஒருநாள் வரும் என் அன்பே…
தேகம் கூடும் காதல் தேயும்
மோகம் தீர்ந்தால் விலகி ஓடும்
வாழும் காலம் வரையும் காதல்
வாழ பிரிந்தே எரிவோம் வருவாய்…!
(மழை என்றழைக்காதே)

2 comments:

Anonymous said...

அன்பு நண்பி...
இந்தப் பாடலை,சஹானா அல்லது சாமா இராகத்தில் இசை அமைத்தால் நல்லாயிருக்கும். அல்லது நீலாம்பரி.
உதாரணமாக..என் வீட்டு யன்னல் கம்பி எல்லாமே கேட்டுப்பார் ...என்ற பாடல் நீலாம்பரி தான்.
நல்ல இதம் தரும் வரிகள் நண்பி.
வாழ்த்துகள்.

நளாயினி said...

கடலில் நிலவு சுடரும் அழகில்
கவிதை நதியில் கரையும் பொழுதில்
இசையில் இழைந்து நெகிழும் தருணம்
இதயம் உடைந்து சிதறும் வலியில்
தொலைவில் இருந்து அணைத்தால் போதும்
தொடரும் நினைவாய் நிலைத்தால் போதும்

தனிமைச் சிறையில் பலநாள் கிடந்தேன்
இனிமை உலகம் எழு நீ என்றாய்
வெறுமை நிரப்பும் வித்தை கற்றாய்

தேகம் கூடும் காதல் தேயும்
மோகம் தீர்ந்தால் விலகி ஓடும்
வாழும் காலம் வரையும் காதல்
வாழ பிரிந்தே எரிவோம் வருவாய்…!

அற்புத வரிகள்.