1.12.2007

சென்னை புத்தகக் கண்காட்சி: சென்றதும் கொணர்ந்ததும்….சென்னையில் நடந்துகொண்டிருக்கும் புத்தகக் கண்காட்சியைப் பற்றி ஆளாளுக்கு எழுதுகிறார்கள். அதையெல்லாம் வாசித்ததும் எனக்கும் விரல்கள் குறுகுறுவென்றிருந்தது. நீண்ட நாட்களாகப் பதிவு போடாதது வேறு பெரிய கொலைக்குற்றம் போல உறுத்திக்கொண்டிருந்தது. சரி வருவது வரட்டும் என்று எழுத உட்கார்ந்துவிட்டேன்.

வாங்குகிற புத்தகங்களையெல்லாம் வாசிக்கிறேனோ இல்லையோ எங்காவது ‘புத்தகக் கண்காட்சி’என்று ஒரு அறிவிப்பைப் பார்த்தால் போதும். ஏதோ விருந்துச்சாப்பாட்டிற்கு ஏங்கும் பிச்சைக்காரனைப்போல (பாருங்கள் மகாஜனங்களே உவமையை) அந்த நாளை நினைத்துக்கொண்டேயிருப்பேன். கடந்த ஆண்டு எவ்வளவோ முயற்சி செய்தும் புத்தகக்கண்காட்சி முடிந்து பத்து நாட்கள் கழிந்தபின்பே சென்னையில் வந்திறங்க முடிந்தது.

முதல்நாள் போனால் ஆரவாரம் அதிகமாக இருக்குமென்று யாரோ சொன்னதால், மறுநாள் வியாழக்கிழமை காலை பதினொரு மணிக்கு எனது பரிவாரங்களோடு போனேன். காவலுக்கு நின்றிருந்த பொலிசார் விரைந்து வந்து மதியம் இரண்டு மணிக்குப் பின்னரே பொதுமக்களை அனுமதிக்க முடியும் என்று திருப்பியனுப்பிவிட்டார்கள். ‘உங்களோடு வந்த ராசி சரியில்லை’என்று என்னோடு வந்திருந்த ‘பகுத்தறிவாளர்’பொய்யாக அலுத்துக்கொண்டார். வீட்டிற்குத் திரும்பி உண்டு உறங்கி மீண்டும் ஐந்து மணிக்கெல்லாம் கண்காட்சியிலிருந்தோம்.

முன்புறமே கன கோலாகலம். புதிப்பகங்கள் மற்றும் புத்தகங்களின் பெயர்களை உள்ளடக்கிய பெரிய பெரிய ‘பானர்’கள் காற்றிலாடின. சுவரொட்டிகள் கண்பற்றி இழுத்தன. நாங்கள் மொத்தம் ஐந்துபேர்(அதில் இருவர் ‘கலர்’பார்க்க வந்தவர்கள்) கூட்டத்தில் கலந்து காணாமற்போனோம். இந்த இணையக்காலத்தில் இத்தனை பேர் அச்சில் வரும் புத்தகங்களைப் படித்துக்கொண்டிருக்கிறார்களா என்று வியப்புத் தாங்கவில்லை. ஒவ்வொரு பதிப்பகத்திற்கும் ஒவ்வொரு விற்பனையறை என்ற வகையில் வலதும் இடதுமாய் இருபுறமும் கடைகள். கூடத்தின் முடிவில் சென்று திரும்ப மீண்டும் வலதும் இடதுமாக பதிப்பகங்களின் பெயர்களுடன் விற்பனையறைகள். நானூற்றுச் சொச்சம் என்று சொன்னார்கள். ஆரம்பத்திலேயே இருந்த ‘விகடன்’காட்சியறைக்குள் கால்மிதித்து இடிபடுமளவிற்குக் கூட்டம் நிறைந்திருந்தது. ஒருபுறமாய் உள்நுழைந்து மறுவழியால் வெளியேறும் வழியில் எடுத்த புத்தகங்களுக்கு காசு கொடுக்கவேண்டும்.(பின்னே சும்மாவா… அது கிடக்க, ஏன் இத்தனை வர்ணனை என்பவர்களுக்கு: என்னைப்போல புத்தகத்தில் பைத்தியம் கொண்டலையும் பலபேர் அமெரிக்கா, லண்டன் இங்கெல்லாம் இருக்கக்கூடும். ‘போக முடியவில்லையே…’என்று பதைத்துக்கொண்டிருப்பவர்களைப் பதிவு போட்டு ஆற்றுகிறேனாம்.)

பெரியவர்கள் (வயதில்) நாங்களே ஒருவரையொருவர் நின்று நின்று தேடிக்கொண்டிருக்க, வழியெல்லாம் காலிடறி கையிடறி ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் தொலையாமலிருப்பது எப்படி என்ற கேள்விக்குப் பதிலாக ஒரு அறிவிப்பு ஒலித்தது. இன்ன பெயருடைய, இன்ன நிறத்தில் சட்டை போட்ட குழந்தையைத் தேடிக்கொண்டிருந்தார்கள். மணிமேகலைப் பிரசுரத்தில் கண்ணாடியோடு நின்றிருந்த ஒருவரை லேனா தமிழ்வாணன் என்று நண்பர் காட்டினார். அந்தக் காட்சியறையில் நடிகர் ராஜேஷ் இருந்து வாசகர்களுக்கு ஏதோ விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். “அங்கே போனால்…. ‘எப்படி… எப்படி…? என்ற தலைப்பில் நிறையப் புத்தகம் வாங்கலாம்”என்று நண்பர் கூறினார். எனக்கு ‘எப்படி’களில் ‘அப்படி’யொரு ஒவ்வாமை. விலக்கி நடக்க, என்னோடு வந்திருந்தவர்களில் ஒருவர் ‘ராஜேஷைப் பார்த்தேயாக வேண்டும்’என்று அடம்பிடித்தார். சற்று தயங்கி எட்டிப் பார்க்க ராஜேஷ் அவரைப் போலவே இருந்ததைக் கண்டேன்.

‘இவர்தான் ஞாநி’, ‘இதுதான் நல்ல புத்தகம்’என்று கூட வந்த நண்பர் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார். உயிர்மை பதிப்பக காட்சியறையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் இருந்தார். பிரபலமான ஒரு வில்லன் நடிகர் மற்றும் சாயம்போன குர்த்தா அணிந்து தோளில் ஜோல்னாப்பை தொங்க அலைந்த, எங்கேயோ பார்த்த ஞாபகத்தைக் கிளற வைத்த முகங்கள் எனப் பலரைக் காணமுடிந்தது. இதற்கிடையில் புத்தகக் கனம் ஏற, ஐந்நூறு ரூபாய்த்தாள்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்ததை இடையில் கவனிக்க நேர்ந்தது. தரமான எழுத்துக்களைப் பதிப்பிக்கும் பதிப்பகங்கள் என்று அறியப்பட்டிருந்தவற்றில் அல்லது அவ்வாறு ஊட்டப்பட்டிருந்தவற்றில் கூட்டம் இருந்தது. சில விற்பனையறைகள் வெறிச்சோடிப் போயிருந்தன. சிறுவர்களுக்கான நூல்கள், கணினி தொடர்பான நூல்கள், கணினியில் பாவிக்கப்படும் தமிழ் எழுத்துக்கள், யுனிகோட்… இன்னபிற, இசைத்தட்டுக்கள் மேலும் இதுவரை விருதுபெற்றவர்களின் பட்டியல் போன்ற சகலமானவற்றுக்கும் தனித் தனிக் காட்சியறைகள் இருந்தன.

புத்தகப் பசியில் நடந்து திரிந்தபோது வயிறும் கூடுமானவரை தனது இருப்பை நினைவுபடுத்திக்கொண்டேயிருந்தது. ஈற்றில் ஒரு அவசரகதியில் சுற்றியடித்து வெளியில் வந்து உணவகத்தில் அமர்ந்து மாப்பசை வடையும், எண்ணெயில் மிதந்த சமோசாவும் சாப்பிட்டோம். அங்கே சுவாரசியமான, வேக வேகமாகப் பேசுகிற, பிரபலமான ஈழத்து எழுத்தாளர் ஒருவரையும் சந்திக்கும் ‘பேறு’பெற்றோம். எங்களோடு வந்த நண்பர் அந்த எழுத்தாளரோடு ‘சம்பாஷணை’க்குப் போய்விட, எஞ்சிய நால்வரும் களைப்போடு வெளியில் வந்தோம். வெளியில் போடப்பட்டிருந்த மேடையில் ஒருவர் கைகளை ஆட்டி ஆட்டிப் பேசிக்கொண்டிருந்தார். பின்வரிசையில் இருந்தவர்கள் தமக்குள் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கழிப்பறை வசதிகள் இல்லாதிருந்தமை குறித்து வேறொரு பதிவர் எழுதியிருந்தார். புத்தகப் பிரியர்களுக்கு இயற்கை உபாதைகள் இருக்காதென்று ஒருங்கமைப்பாளர்கள் நினைத்தனரோ என்னவோ தெரியவில்லை. தவிர, புத்தகக் கண்காட்சிக்கு வந்திருந்தவர்களில் ஏறத்தாழ எண்பது சதவீதத்தினர் ஆண்கள்தான். சென்னையைப் பொறுத்தவரை வெளியிடங்களில் ஆண்களுக்கு கழிப்பறை தேவையில்லை என்பதை வழி தெருவெல்லாந்தான் தினந்தோறும் காண்கிறோமே…!

இன்னும் ஒருநாள் நிதானமாகப் போய் புத்தகங்களை மேயலாமென(கழுதை?)எண்ணி, வீட்டில் அதைச் சொன்னபோது 13ஆம் திகதி போகலாமென ஏகோபித்த குரலில் சொன்னார்கள். காரணம் கேட்டால் அன்றைக்கு நடிகர் சூரியா ஏதோ ஒரு பதிப்பகத்தின் காட்சியறைக்கு வருகை தருகிறாராம். கட்டாயம் போகவேண்டியதுதான்…! சூரியாவை நேரில் பார்க்காதுபோனால் இந்த ஜென்மம் பாழாய்ப் போய்விடுமல்லவா…?

வாங்கிய புத்தகங்கள்: எனது தரவுக்கோர்வைக்கென எழுதிய பட்டியலை உங்களுக்கு உதவலாம் என்றெண்ணி இணைத்துள்ளேன். படம் காட்ட அல்ல.

கண்ணீரைப் பின்தொடர்தல் - ஜெயமோகன்
ராஸ லீலா – சாரு நிவேதிதா
வெங்காயம் - (பெரியார் பற்றிய நூல்) சி. அண்ணாமலை
கலகம் காதல் இசை – சாரு நிவேதிதா
தொலைகடல் - உமா மகேஸ்வரி
கனவில் பெய்த மழையைப் பற்றிய இசைக்குறிப்புகள் - ரமேஷ்-பிரேம்
தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா
நடந்து செல்லும் நீரூற்று – எஸ். ராமகிருஷ்ணன்
இன்னும் சில சிந்தனைகள் - சுஜாதா
அக்கிரகாரத்தில் கழுதை – வெங்கட் சாமிநாதன்
நாக மண்டலம் - கிரீஷ் கர்னாட் (தமிழில் பாவண்ணன்)
மேடம் பவாரி – குஸ்தாவ் பிளாபர் (தமிழில் மாரிசாமி)
தகப்பன் கொடி – அழகிய பெரியவன்
கவர்மென்ட் பிராமணன் - அரவிந்த மாளகத்தி
ஹோ சி மின் ஜெயில் டைரி – தமிழில் சுரா
அன்னா அக்மதோவா கவிதைகள் - தமிழில் லதா ராமகிருஷணன்
சிலைகளின் காலம் - சுகுமாரன்
இன்றைய மலையாளக் கவிதைகள்
கிருஷ்ணப் பருந்து – ஆ. மாதவன்
கவிதைகளுடன் ஒரு சம்வாதம் - ஞானக்கூத்தன்
புலப்படாத நகரங்கள் - இடாலோ கால்வினோ – தமிழில் சா.தேவதாஸ்
யாரோ ஒருத்தியின் நடனம் - மகுடேசுவரன்
சுள்ளிக்காடும் செம்பொடையனும் - மஜீத்
நாலுகட்டு – எம்.டி. வாசுதேவன் நாயர் - தமிழில் சி.ஏ.பாலன்
தாகூரின் கவிதைகள் - வி.ஆர்.எம்.செட்டியார்
மைக்கேல் ஆஞ்சலோ - இளஞ்சேரன்
உறக்கமற்ற மழைத்துளி – கல்யாண்ஜி
ஏழாவது பூ (மலையாளச் சிறுகதைகள்) தமிழில் சுரா
பலி பீடம் - கிரீஷ் கார்னாட் (தமிழில் பாவண்ணன்)
களவுபோகும் புரவிகள் - சு.வேணுகோபால்
கண்ணாடியாகும் கண்கள் - நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள்
பெண் ஏன் அடிமையானாள்? – தந்தை பெரியார்
நினைவோடை (ஜி. நாகராஜன் குறித்து) சுந்தர ராமசாமி
ஒரு தடா கைதிக்கு எழுதிய கடிதங்கள் - சுந்தர ராமசாமி
மண்ணும் சொல்லும் (மூன்றாம் உலகக் கவிதைகள்) வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை
விளிம்புநிலை ஆய்வுகளும் தமிழ்க்கதையாடல்களும் - தொகுப்பு அ.மார்க்ஸ்,பொ.வேல்சாமி
பெரியார் - அ.மார்க்ஸ்
அம்பானி – ஒரு வெற்றிக் கதை – என்.சொக்கன்
மனுதர்ம சாஸ்திரம் - திருலோக சீதாராம்
சகோதரிகள் - அலெக்சாண்டிரா கொலோண்டை
மரப்பசு - தி.ஜானகிராமன்
மோகமுள் - தி.ஜானகிராமன்
அம்மா வந்தாள் - தி.ஜானகிராமன்
மகாமுனி – பிரேம்-ரமேஷ்
பலஸ்தீனக் கவிதைகள் - தொகுப்பு:எம்.ஏ.நுஃமான்
அந்நியன் - ஆல்பர் காம்யு
கறுப்புக் குரல்கள் - ஆபிரிக்கப் பழங்குடியினரின் கவிதைகள்
வலி – அறிவுமதி
கொலை மற்றும் தற்கொலை பற்றி – ரமேஷ்-பிரேம்
ஏறுவெயில் - பெருமாள் முருகன்
தீராநதி நேர்காணல்கள் - மணா
பரதேசி – ரமேஷ்-பிரேம்
தேசாந்திரி – எஸ்.ராமகிருஷ்ணன்
பெண்குல வரலாறு – அ.பாக்கியம்
இன்று – அசோகமித்திரன்
சொல்லிலிருந்து மௌனத்துக்கு –(நேர்காணல்கள்) பவுத்த அய்யனார்
மண் - ஜெயமோகன்
இரவு மிருகம் - சுகிர்தராணி
தண்ணீர் - அசோகமித்திரன்
பிள்ளை கெடுத்தாள் விளை – சுந்தர ராமசாமி (கதை-எதிர்வினை)
பச்சைத் தேவதை – சல்மா
புதுமையும் பித்தமும் - க.நா.சுப்பிரமண்யம்
நினைவோடை (ஜீவா குறித்து) சுந்தர ராமசாமி
விசாரணைக் கமிஷன் - சா.கந்தசாமி
பயணப்படாத பாதைகள் - அ.சீனிவாஸன்,எம்.சிவசுப்ரமணியன்

32 comments:

Anonymous said...

பொறாமை...பொறாமைன்னு ஒன்னு சொல்லுவாங்கல்ல...இப்ப அதை கெளறி விட்ருக்கீக...

என்ன ஆனாலும் நாளைக்கு போய்ருவோம்ல....

ஆமா இவ்ளோவு பொஸ்தகத்ததயும் தூக்கத்தான் நாலுபேர கூட்டீட்டு போனீகளா....ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

Anonymous said...

நன்று. பதிவும், நீங்கள் வாங்கியுள்ள புத்தகங்களும்(பெரும்பாலானவை) நன்றாக இருக்கின்றன. படித்து, அதில் ரசித்ததை ஒவ்வொரு பதிவாக செய்யுங்களேன்.

எனது கதைகளை நீங்கள் படித்ததுண்டா?

மெலட்டூர்.இரா.நடராஜன்.

இளங்கோ-டிசே said...

ம்...எமக்கென்றொரு காலம் வராமலாப் போய்விடும் :-).

Anonymous said...

புத்தகங்களை எடுத்து வர உங்களுக்கு சிறப்பு வண்டி அனுப்பியிருப்பார்களே!

அப்பா, இவ்வளவு புத்தகங்கள் ஒரு சேர வாங்க வேண்டும் என்று கனவுகளில்தான் நினைத்திருக்கிறேன் :-) வாங்கி முடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள், ஒவ்வொன்றாகப் படித்து வாசிப்பனுபவத்தையும் பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்,

மா சிவகுமார்

Jayaprakash Sampath said...

கண்ணு படப்போகுதுங்க, திருஷ்டி சுத்திப் போடுங்க :-)

Anonymous said...

நதி,
நாளைக்குக் கண்காட்சிக்குப் போகாமல் உங்கள் வீட்டுக்கே வந்துவிடலாம் என்று இருக்கிறேன்.. போட்டிக் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்துவிடலாம் :))))

ஈழநாதன்(Eelanathan) said...

இவ்வளோவா:)
வாழ்க வளமுடன்

தமிழ்நதி said...

இன்றைக்கும் கண்காட்சிக்குப் போகலாம் என்று எண்ணியிருக்க, ஆளாளுக்கு 'இவ்வளோவா... இவ்வளோவா...'என்று கேட்டதில் 'ரொம்ப அதிகமாகத்தான் வாங்கிவிட்டோமோ'என்ற சந்தேகம் தோன்றிவிட்டது. என்றாலும் எனக்குள்ளிருக்கும் பிசாசு வாசிக்கிறதோ இல்லையோ 'வாங்கு வாங்கு'என்று என்னை செலவழிக்கத் தூண்டிவிடும்.
பொன்ஸ், இப்படி புத்தகங்கள் பெயரைப் போட்டாலாவது வீட்டிற்கு வரமாட்டீர்களா என்றொரு நப்பாசைதான். போட்டிக் கண்காட்சியா நடத்திடலாமே... அதுக்கென்ன...

புத்தகம் படித்து அதைப் பற்றி எழுதுவதா...? ம்... பாவமில்லையா நீங்க... அப்பிடியெல்லாம் செய்யமாட்டேன்.

Anonymous said...

normally i dont like to see tamil blogs .reason of making ugly fights in caste and religion lines.

the entire world is changing but this guys want to live in 100 yrs back.

actually i came across in ur postings.. a great and superb writing.

good keep it up

Gnaniyar @ நிலவு நண்பன் said...

ஒரு தனி நூலகமே வைத்திருப்பீங்க போல இருக்கு... தங்களின் இலக்கிய தேடலுக்குப் பாராட்டுக்கள்..

Anonymous said...

//அதில் இருவர் ‘கலர்’பார்க்க வந்தவர்கள்//

அட! நம்மாளுங்க ;)

Anonymous said...

//எனக்குள்ளிருக்கும் பிசாசு வாசிக்கிறதோ இல்லையோ 'வாங்கு வாங்கு'என்று என்னை செலவழிக்கத் தூண்டிவிடும்.//

ஆமென்.எனக்கும் இதே பஞ்சாயத்துதான்.ஆனால் இந்த வருடம் சென்னையை விட்டு விலகியிருப்பதால் என் பர்ஸ் தப்பித்தது.

Anonymous said...

இவ்வளவு புத்தகங்களா????????????????????????

மலைநாடான் said...

//என்னைப்போல புத்தகத்தில் பைத்தியம் கொண்டலையும் பலபேர் அமெரிக்கா, லண்டன் இங்கெல்லாம் இருக்கக்கூடும். ‘போக முடியவில்லையே…’என்று பதைத்துக்கொண்டிருப்பவர்களைப் பதிவு போட்டு ஆற்றுகிறேனாம்//

தங்கள் மேலான சேவை தொடரட்டும்.:)

தமிழ்நதி said...

அனானிமஸ் நண்பருக்கு,
உங்கள் பின்னூட்டத்தைத் தமிழ்ப்படுத்திப் போடும்படி கேட்டிருந்தீர்கள். போட்டிருப்பேன்... ஆனால்... உயர்வு நவிற்சி என்று தமிழில் சொல்வார்களே... அப்படி என்னை தன்னடக்கம் அது இதுவென்று சொன்ன வார்த்தைகளின் பின்னால் ஏதோ ஒரு நக்கல் ஒளிந்திருந்ததுபோல தோன்றியது. அதனால் போடவில்லை. உங்களை யாரென்று குறிப்பிட்டு பின்னூட்டம் இடுங்கள். நிச்சயமாகப் போடுகிறேன். சரியா...?

Anonymous said...

//அங்கே போனால்…. ‘எப்படி… எப்படி…? என்ற தலைப்பில் நிறையப் புத்தகம் வாங்கலாம்”என்று நண்பர் கூறினார். எனக்கு ‘எப்படி’களில் ‘அப்படி’யொரு ஒவ்வாமை. விலக்கி நடக்க//

சீனியர் கல்கண்டாரும்.100 வயதுவரை வாழ்வது எப்படி, இருதய நோய் வராமால் இருப்பது எப்படி... எப்படி எப்படி என்று எல்லாருக்கும் கலாய்த்து கொண்டிருந்த மனிசன் தீடிரென அரை வயசிலை மண்டையை போட்டுட்டுது

நாங்கள் ஏதோ தொலைச்சு போட்டு தொலைச்சது என்னவெண்டு தெரியாமால் இந்த குளிருக்கிலை புலத்திலை தேடி கொண்டிருக்கிறம்..

நீங்கள் என்னடா என்றால் ..உங்க போய் மண் வாசனை கமழ கொண்டாடுறியள்

Anonymous said...

நீங்கள் வாங்கின புத்தகங்கள் எல்லாம் அருமை.
1.நீல கண்டப் பறவையைத் தேடி.
என்ற புத்தககம் அகப்பட்டதா?? ப்ளீஸ் தேடிப் பாருங்கள்.
2.நித்திய கன்னி(எம்.வி வெங்கட்ராம்)
3.அண்டை வீட்டார்(வாசுதேவன் நாயர் என்று நினைவு)
4.சிவப்பாக..உயரமாக..மீசை வைச்சுக்காமல்..(என்ற சிறுகதை உள்ளடக்கிய ஆதவனின் தொகுப்பு)
5.குருதிப்புனல்(இந்ரா பார்த்தசாரதி)
6.தரையில் இறங்கும் விமானங்கள்(இந்துமதி)
எழுத்தின் வலிமைக்காக என்னைக் கவர்ந்த பொக்கிசங்கள் இவை.
கருத்துகளில் மாறுபட்டாலும் செப்பனிடப்பட்ட எழுத்துகள் இவை.
அதுசரி.....
நீங்கள் வாங்க விரும்பாத புத்தகங்கள் பற்றி ஒரு பட்டியல் தாருங்களேன்.
நன்றி நதி.
நல்ல பதிவு.

Anonymous said...

From aasath to
Anonymous ...

//Anonymous said...
normally i dont like to see tamil blogs .reason of making ugly fights in caste and religion lines.

the entire world is changing but this guys want to live in 100 yrs back.

actually i came across in ur postings.. a great and superb writing.

good keep it up
//

are you live in ideological world. Caste has not within individual factor. It depress the SC/ST/OBC communities through education/empployment/self-respect till date. IF you got it without struggle, it could derived by your Grandfaas' Rascalism.

Apart from this, here you can't accept this type of democratic arguments. Why you should be called as "Son of Neetzae/Hitler"?

Anonymous said...

வணக்கம்.
கூகுளில் தேடியபோது இந்தப்பக்கம் கண்ணில் பட்டது. சென்னைப் புத்தகக் கண்காட்சி பற்றி சிறப்பாக எழுதி எனது ஆர்வத்தை தூண்டிவிட்டீர்கள்.
இலங்கையில் இருக்கும் நான் நாளையே விமானம் ஏறி சென்னை வரவிருக்கிறேன்.(விமான சீட்டு கிடைத்தால்)
யாருக்காவது ஆர்வமிருந்தால் தயவுசெய்து என்னை தொடர்புகொள்ளவும். நல்ல கலை இலக்கிய நண்பர்களை தேடுகிறேன்.
- அனுராஜ்
- tamilambu@yahoo.com

நாமக்கல் சிபி said...

அதுசரி! கடைசியில் நீங்கள் கொடுத்திருக்கும் பட்டியல் புத்தகக் கண்காட்சியில் இருந்த புத்தகங்களின் பட்டியலா? அல்லது நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியலா?

நிறைய வாசிப்பீர்கள் போலும்!
:)

தமிழ்நதி said...

சிபியாரே!
அது முதல் நாள் வாங்கிய புத்தகங்கள், அதன்பிறகும் இரண்டு நாட்கள் புத்தகத் திருவிழாவிற்குப் போயிருந்தேன். மற்றவர்களின் வயிற்றெரிச்சலைக் கிண்டக்கூடாது மற்றும் 'ஓவர் பிலிம்'என்று தோன்றிவிடக்கூடுமென்பதால் அந்தப் பட்டியலைச் சேர்க்கவில்லை. அதுதான் சொன்னேனே... புத்தகங்கள் என்றால் ஒருவிதமான மயக்கம் என்று.

வசந்தன்(Vasanthan) said...

அதுசரி,
யாரந்த ஈழத்து எழுத்தாளரென்று சொல்லவேயில்லையே?

தமிழ்நதி said...

பிரான்சிலிருந்து வந்திருக்கும் ஷோபாசக்திதான் அந்த எழுத்தாளர்.

Ayyanar Viswanath said...

ரமேஷ்-ப்ரேம் வாசகி யா நீங்கள்?
கோணங்கியை வாசித்ததுண்டா?
அற்புதமான புத்தகங்கள் ..சந்தர்ப்பம் கிடைக்கும் போது உங்கள் புத்தக அலமாரியை திறந்து காட்டுங்கள் ..ஏதாவது விட்டிருக்கிறதா என்று பார்த்துக் கொள்கிறேன்.. இதற்க்கு விளம்பரம் என்றும் பெயர்..:))

தமிழ்நதி said...

எழுதும்போது விளம்பரமாகத் தோன்றவில்லை அய்யனார்! இப்போது மறுபடி வாசித்துப் பார்க்கும்போது 'படம்'காட்டியிருக்கிறேனோ என்று தோன்றுகிறது.

நளாயினி said...

பொறாமையா எரிச்சலா எதுவா இ.ருக்கும் இதை வாசித்ததும் வந்த உணர்வுக்கு என்னவென தெரியேலை. அல்லது பிரித்துணரதெரியேலை.சரி ஏதோ ஒண்டு .

ம்...எமக்கென்றொரு காலம் வராமலாப் போய்விடும் :-).

தைமாதமா வந்து இறங்கினா போச்சு. ஒரே புகை. புகையா போகுது மூக்கு வழி.:-).:-).:-).
:-).

தமிழ்நதி said...

அன்புள்ள நளாயினி, இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருந்திருக்குமோ... என்னுடைய வலைப்பக்கம் நிறைய நேரம் உலவிய தடங்கள்...

புத்தகக் கண்காட்சி வருகிறதென்றால் எனக்குள் ஒரு எதிர்பார்ப்பும் குதூகலமும் கிளம்பிவிடும். அவ்வளவையும் வாங்கிவந்து வாசிப்பதென்று சொல்லமுடியாது. மாதக்கணக்கில் அவை கிடந்தபிறகுதான் வாசிப்பேன். இப்போது கொஞ்சநாட்களாக மும்முரமான வாசிப்பு. ஏனென்றால் அடுத்த புத்தகக் கண்காட்சி வருகிறது. அதற்கிடையில் வாங்கியவற்றில் அரைவாசியையாவது வாசித்து முடித்துவிடவேண்டும். இல்லையென்றால் இனியும் புத்தகம் வாங்குவதற்கு என்னையே நான் கெஞ்சிக்கொண்டிருக்க வேண்டும். (நான் ரெண்டு பேர். ஒராள் கொஞ்சம் பொறுப்பான ஆள். மற்ற ஆள் ஊதாரி)

வெளிநாட்டு வாழ்க்கை பற்றி சலித்துக்கொண்டிருக்கிறீர்கள்... கனடாவில் பதினோரு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு இந்தியாவில் வந்து இருப்பது நடைமுறையில் சிரமமாகத்தான் இருக்கிறது. குறிப்பாக இந்த 'கஸ்ரமர் சேர்விஸ்'விசயம் மிக உறுத்தலான ஒன்று. நேற்று வைத்தியசாலைக்குப் போனேன். 'வைத்தியர் வந்து போய்விட்டாரே'என்றார்கள்.
'எனக்கு நேரம் தந்திருந்தார்களே'என்றேன். 'அப்படியா?'என்றார் வரவேற்பு நாற்காலியில் அமர்ந்திருந்த பெண் அசிரத்தையாக. நான் கொஞ்சம் கோபமாக நடந்துகொண்டு திரும்ப வேண்டியிருந்தது. அவருக்கு உறைத்த மாதிரி இல்லை. ஒன்றை இழந்தே ஒன்றைப் பெற வேண்டியிருக்கிறது. இது எல்லா இடங்களுக்கும் பொருந்தும். இங்கே வந்து நான் என்னவெல்லாம் இழந்திருக்கிறேன் என்று பட்டியல் போட்டால் அது சுயபுராணம். தொடர்ந்து வந்து வாசித்துக் கருத்துச் சொல்லும் உங்களுக்கென் நன்றி.

நளாயினி said...

1990 இல் இந்தியா பிடிக்காமல் இலங்கைக்கே திரும்ப பறந்தவள். இப்போ நிலமை படு மோசம் என எனது தங்கை சொன்னார். ஒன்றை இழந்த தான் இன்னொன்று.. அது உண்மை தான். ஆனாலும் முயற்சிக்கலாம். கடைசிக்காலம் இந்தியா தான். சகல கலைகளோடும் உங்கு தான் நிம்மதியாக வாழலாம். ம்.. 2 கிழமை விடுமுறை. அப்பாடா என இருக்கிறேன்.

தமிழ்நதி said...

"சகல கலைகளோடும் உங்கு தான் நிம்மதியாக வாழலாம்"

அப்படியா சொல்கிறீர்கள் நளாயினி... இங்கு சொந்த வீடு இல்லையெனில் நீங்கள் சொல்லும் 'நிம்மதி'கிடைப்பது ஐயந்தான்.

ஜமாலன் said...

ஏன் தமிழ்நதி இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க..

நான் போன கடைசி புத்தகக் கண்காட்சி.. 1990-ல். அதற்கப்புறம் அரேபியா வந்த பிறகு.. இதுவரை போவதற்கான வாய்ப்பே இல்லை. காரணம் வருடக்கடைசி அலுவலகப் பிரச்சனை.

முதலில் உங்கள் தேர்ந்தெடுப்பு பன்மைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது பாராட்டத்தக்கது. இதில கறிப்பிட்டள்ள எந்த புத்தகமும் பார்த்ததில்லை. அண்ணாமலை வெங்கயாம் மட்டும்தான் என்னிடம் உள்ளது. அய்யனார் கேட்டுள்ள அதே கேள்வி.. நீங்கள் ரமேஷ்-பிரேம் படிப்பீர்களா? இப்படி கேட்பது அபத்தமானதுதான், இருப்பினும் வாசகர்கள் அனுகுவதற்கு சற்றே சிரமமான அவர்களது எழுத்து நடையை பரிச்சயப்படுத்திகொள்வது சிரமம் என்பதால் இந்த கேள்வி.

நான் போனது 1990-ல் புத்தக கண்க்காட்சி பலவிடயங்களில் சுவராஸ்யமானது. காரணம் நண்பர் பொதி அதில் கடை போட்டிருந்தார். தினமும் அக்கடையில் கூடுவது வழக்கம்... அப்புறம் என்ன டீ,பீடி, சிகரெட்டு, இலக்கிய வம்புகள் இப்படியாக.

முதல் 2 நாட்கள் சாரு வீட்டிலிருந்து பயணம். நான் சாரு அவரது குடும்பம் பிரேம் ரமேஷ் ஆகியோருடன். எங்களுடன் அவ்வப்போது நாகார்ஜீனனும் சேர்ந்து கொள்வார். ஒவ்வொரு அணியாக போய் ஒவ்வொரு புத்தகம் வாங்குவோம். நான் மற்றும் நிழல் ஆசிரியர் அரசு பெரும்பாலும் வேடிக்கைதான் பார்ப்போம். படித்து முடித்து வேலை தேடிக்கொண்டிருந்த காலம். காலக்கறி ஆசிரியர் காண்தான் எங்களுக்காவும் வாங்குவான்.

இரவு ஓட்டல் சாப்பாடு இல்லாவிட்டால் கையேந்தி பவன் அவரவர் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை பொதுவில் போட்டு செலவழித்துக் கொள்வதுதான் அன்றைய நிலை. சாரு வீட்டில் விடிய விடிய விவாதம்... இரண்டுமுறை பிரதான சாலை இரவு டீக்கடைக்கு போய் தேநீர் அருந்துவது. பெரும்பாலும் நானும் பிரேம் மட்டமே விடிய விடிய விழித்திருப்போம். அது ஒரு அருமையான நாட்கள்தான் 10-நாட்கள் இப்படியாக கழியும் ஒரு திருவிழாவைப்போல. இன்று அப்படி ஒரு இணைவே சாத்தியமா? என்று தெரியவில்லை.

ஒருநாள் கோபிகிருஷ்ணன் எங்களுடன் வந்தார் இரவு நேர ஜமாவிற்கு. எனக்க படித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். அவரது கதைகளின் உளவியல் அம்சம். முதல் வாக்கியத்தை இரண்டாவது வாக்கியம் உளவில் ஆய்வுக்க உட்படுத்தி அதனை பவிழ்த்தவிடும் ஒரு எழுத்த நடை அவரது. அதிகம் பேசாத கதை மட்டும் கொடுக்கும் அவர்... இன்று இல்லை. அது ஒரு இழப்புதான்.

ஒவ்வொருவரும் ஒரு மூலையில். வாங்கிய புத்தகங்கள் மட்டும் அலமாரிகளில் வார்த்தைகளை தினமும் வெவ்வேறு அர்த்தங்களாக பெருக்கிக்கொண்டு.

மலரும் நினைவுகளை தூண்டியதற்கு நன்றி... இது படம் காட்டுவதற்காக என்று நீங்கள் எண்ணிக் கொண்டாலும் பரவாயில்லை. உங்கள் பதிவு அப்படியே 17-ஆண்டுகளுக்குக முன் இழுத்துச் சென்றவிட்டது. நன்றி.

தமிழ்நதி said...

"ஏன் தமிழ்நதி! இப்படி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறீங்க...?"

ஜமாலன்! நீங்க மட்டும் கொட்டிக்கலையா...?

"தினமும் அக்கடையில் கூடுவது வழக்கம்... அப்புறம் என்ன டீ,பீடி, சிகரெட்டு, இலக்கிய வம்புகள் இப்படியாக."

நாங்கள் - பெண்கள் மேற்கண்டவாறு கூடி பீடியடிக்கவெல்லாம் வழியில்லையே...:) நடுராத்திரியில் சாலைக்கடையில் தேநீர் குடிக்க எங்களுக்கு ஆசையில்லையா...? பெண்கள் நடுராத்திரியில் வீதியில் நடந்துபோனால் 'ரேட்'விசாரிப்பதுதான் நடக்கும்.:(
பெண்களாகப் பிறந்து எத்தனையை இழக்கிறோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

'ரமேஷ்-பிரேம்'படிப்பது அத்தனை வியப்பான விடயமா என்ன...? அவர்களில் எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று புதிய புதிய சொல்லாடல்கள். மற்றது அதன் மாய வசீகரம்.

சாரு என்பது சாரு நிவேதிதாவைத்தானே... அவருடைய 'கோணல் பக்கங்கள்-பகுதி 3'நேற்றுத்தான் முடித்தேன். அதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.

நீங்கள் தாராளமாகப் படம் காட்டலாம்... சொல்லப்போனால் எழுதுவது என்பதுகூட ஒருவகையில் 'படம் காட்டல்'(நன்றி டி.சே.)தான் என்ற எண்ணம் இப்போது வலுப்பட்டு வருகிறது. 17 வருடங்களுக்கு முன்னைய நாட்களுக்கு உங்களை இழுத்துச் சென்றமைக்காக, இந்த முறை நடக்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி என்று நினைக்கிறேன்)எனக்கொரு புத்தகம் வாங்கித்தாருங்கள்:)

ஜமாலன் said...

//நாங்கள் - பெண்கள் மேற்கண்டவாறு கூடி பீடியடிக்கவெல்லாம் வழியில்லையே...:)//

உங்களை பீடிக் குடிக்க வேண்டாம் என்று யார் சொன்னது? உழைக்கும் மக்கள் மத்தியில் பீடி சுருட்டு சில இடங்களில் சிகரெட் பழக்கங்கள் உண்டு. மத்தியதர வர்க்கத்தில் கிடையாது அதற்கு பண்பாடு ஒரு காரணம்.. நமது தயார்நிலையும்கூட.

//நடுராத்திரியில் சாலைக்கடையில் தேநீர் குடிக்க எங்களுக்கு ஆசையில்லையா...? பெண்கள் நடுராத்திரியில் வீதியில் நடந்துபோனால் 'ரேட்'விசாரிப்பதுதான் நடக்கும்.:(//

இது சங்கடமான விடயம்தான். பெண்கள் நடு இரவில் தனியாக மட்டுமல்ல கணவன் அல்லது ஆண் துணையுடன் போனாலே கூட.. பிரச்சனைகள்தான்.

//பெண்களாகப் பிறந்து எத்தனையை இழக்கிறோம் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.//

நியாயமான வார்த்தை. நியாயமான ஏக்கமும்கூட.

//'ரமேஷ்-பிரேம்'படிப்பது அத்தனை வியப்பான விடயமா என்ன...? அவர்களில் எனக்குப் பிடித்த விடயங்களில் ஒன்று புதிய புதிய சொல்லாடல்கள். மற்றது அதன் மாய வசீகரம்.//

வியப்பிற்காக கேட்கவில்லை. அது அபத்தம் என்று அங்கேயே சொல்லிவிட்டேன். பிரச்சனை.. அவர்களது தர்க்கமுறையானது தீவிர வாசிப்பிற்கு மட்டுமே பிடிபடக்கூடியது என்பதால்.

//சாரு என்பது சாரு நிவேதிதாவைத்தானே... அவருடைய 'கோணல் பக்கங்கள்-பகுதி 3'நேற்றுத்தான் முடித்தேன். அதைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.//

அவர்தான். அவருடைய எக்ஷிஸ்டென்சியலிஸமும் பேன்சி பனியனும் நாவலுக்கு ஒரு விமர்சனம் எழுதினேன். அதன்பிறகு அவரது எழுத்துக்கள் எதுவும் படிக்க வாயப்பில்லை. இணையத்தில் எப்பொழுதாவது படிப்பேன். எழுத்துநடை எனக்கு பிடிக்கும். உள்ளடக்கங்களில் நிறைய பிரச்சனைகள் உண்டு என்றபோதிலும்.

//17 வருடங்களுக்கு முன்னைய நாட்களுக்கு உங்களை இழுத்துச் சென்றமைக்காக, இந்த முறை நடக்கவிருக்கும் புத்தகக் கண்காட்சியில் (ஜனவரி என்று நினைக்கிறேன்)எனக்கொரு புத்தகம் வாங்கித்தாருங்கள்:)//

அதற்குதான் இந்த விளம்பரமா? பதிவுலகை புத்தகக கண்காட்சிக்கு தயார்படுத்தியாகிறதா? கண்டிப்பாக ஒரு புத்தகம் உண்டு. ஆணால் ஜனவரி புத்தக கண்காட்சிக்கு வரமாட்டேன் வழக்கம்போல. அதுதான் பிரச்சனை. எப்பொழுதாவது சந்திக்கும் வாய்ப்பிருந்தால் பதிவர் வட்டம் இப்படி... தருகிறென்.
இம்முறை போகும்போது எனக்கும் சேர்த்து கொஞ்சம் நீங்களும் வாங்கினால்தான், தருவேன்.