1.27.2007

விடைபெற முடியாத அரங்கம்அரங்கத்தின் திரைகள்
பக்கவாட்டில் இழுபட
ஒளி உமிழும் விளக்குகள் முன்
மனனித்த வார்த்தைகளை உதிர்க்கிறேன்.
நான் நாடிழந்தவள்…
உடைந்து சிதறுமொரு கண்ணீர்த்துளி…
யாரோ ஒருவனின் காதலி…
நாடோடியும் அகதியுமானவள்…
தனிமையின் விடுதி…
இசையின் மடியில் தூங்கும் தேவதை…
நான் நித்திலா…!
ஞாபக அட்டைகளைப் பார்வையாளரின் முன்
விசிறியடித்துப் பரத்துகிறேன்.
நீங்கள் ராஜாவாகிறீர்கள்…
ராணிகளாகவும் எண்களாகவும்
உருமாறிக்கொண்டிருக்குமொரு கணத்தில்
விளக்குகள் எரிகின்றன.
உங்களது கைதட்டல்களின் முன்…
‘போதாது’எனும் முணுமுணுப்புகளின்முன்…
மகிழ்ந்து துக்கித்து விடைபெறுகிறேன்.
உருமறைக்கும் முகக்களிம்பு…
ஜிகினாச்சட்டை…
அரையிருளில் அணைக்கும் சொற்கள்…
அனைத்திலிருந்தும்
தப்பித்துச் செல்ல முடிவெடுத்த நேரம்
இன்றிரவு 10:30.

என்னால் விடைபெற முடியாத அரங்கத்தின்
எந்த மூலையில் நீ இருந்தாய்…?
கூர்ந்த விழிகள் வந்து போன தடங்களைப்
பின்தொடர மாட்டாதவளா நான்…?
நாளை மாலை 6 மணிக்கு நான் டெஸ்டிமோனா.

(டெஸ்டிமோனா சேக்ஸ்பியர் எழுதிய நாடகமொன்றில் வந்த பாத்திரம்)

9 comments:

Anonymous said...

தமிழ்நதி...

அருணகிரிநாதருடைய பாடலொன்றுதான் நினைவுக்கு வந்தது.

"உருவா யருவா யுளதாயிலதாய்
மருவாய் மலராய் மணியா யொளியாய்க்
கருவா யுயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவா யருள்வாய் குகனே"

என் ரசனை எப்படியிருக்கிறது?

தமிழ்நதி said...

என்ன பங்காளி,
உங்கள் ரசனையும் நன்றாகத்தானிருக்கிறது. என்ன சொல்ல வருகிறீர்கள் சந்தமே கவிதைக்கு அழகு என்றா?

Anonymous said...

உங்களின் நாயகிக்கும்....அருணகிரி நாதருக்கும் உள்ள ஒற்றுமையை கவனியுங்கள்...தமிழ்நதி

தமிழ்நதி said...

பங்காளி,
தொடர்ந்து உற்சாகமளித்து வருவதற்கு நன்றி. கோடையில் வாடிக்கிடக்கும் ஒரு செடிக்கு நீர்வார்ப்பதைப் போலிருக்கின்றன உங்கள் வார்த்தைகள்.
இந்தக் கவிதை(?) பற்றி-
எழுத்தின் மூலம் பார்க்கப்பட்டுக்கொண்டு விமர்சிக்கப்பட்டுக்கொண்டு ஏனையோருக்கு ஞாபகங்களைக் கிளர்த்திக்கொண்டு இருக்கும் ஒருவள், தான் விரும்பும் ஒருவனால் கவனிக்கப்பட்டுக்கொண்டுமிருப்பதை தான் உணர்வதாகச் சொல்கிறாள்.
ம்... அருணகிரிநாதர் 'நீ எனக்கு எல்லாமாய் இருப்பாய் முருகா'என்கிறார். சரி முருகன்தான் அந்தக் குறிப்பிட்ட வாசகனா... அப்படியெனில் சரி!

Anonymous said...

என்னுடைய பார்வையை விளக்க கொஞ்சம் நீளமான பின்னூட்டம் தேவைபடும்...வரும் நாட்களில் அதை செய்கிறேன்.

இப்பதைக்கு ஒரு ரிக்வெஸ்ட்...

அதாவது படிக்கறவங்க குலுங்கி குலுங்கி சிரிக்கிற மாதிரி ஒரு நகைச்சுவையான பதிவொன்று போடுங்களேன்....உங்கள் நடையில் நகைச்சுவை எத்தகையதாயிருக்குமென பரிட்சித்துப் பாருங்களேன்....

தமிழ்நதி said...

பங்காளி,
நிச்சயமாகச் செய்கிறேன். ஆனால்,இந்த 'குலுங்கிக் குலுங்கி'ச் சிரிப்பதற்கெல்லாம் நான் உத்தரவாதம் தரமுடியாது. அது உங்கள் பாடு சரியா நண்பரே!

Anonymous said...

தன்யனானேன் தாயே!

அப்பால...கிச்சு கிச்சு காட்டினாலே விழுந்து பொரண்டு சிரிக்கிறவன் நான்....அதுனால கவலைபடாம பதிவ தட்டி விடுங்க...நான் ரெடி...ஹி..ஹி..ம்ம்ம்ம்ம்

மிதக்கும்வெளி said...

மொழியாளுமையில் பொறாமைப்படவைக்காதீர்கள் என்று வழமையான பின்னூட்டம் இடக்கூடாதென்றாலும் அதையே விழைகிறது மனசு. நீண்டநாட்களுக்குப் பின் தமிழில் வெளியாகும் பெண்மொழி மற்றும் நவீன கூறலுடன் கூடிய கவிதை. உங்களைத் தொடர்ந்து பாராட்டுவதில் எனக்குக் கூச்சமாகயிருக்கிறது. (அனானி தோழி/ழருக்கு காசு எதுவும் வாங்கவில்லை. தரக்கூடிய ஆளாகவும் தமிழ்நதி தெரியவில்லை)

கார்திக்வேலு said...

நிறைவான கவிதை.

[வரிகள் 5-10 தொடர் புள்ளிகளில்லாமல்
முற்றுப்புள்ளிகளாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.]