7.11.2010

வார்த்தைகளும் சிறைப்பட்ட காலத்தில் வாழ்வது…


இந்த வெயிலற்ற மதியம் மாலையைவிட அழகானதாயிருக்கிறது. வெம்மை மாதமொன்றால் வழங்கப்பட்ட எதிர்பாராத பரிசென்று இந்த நாளைக் கொண்டாடும்படியாக நேற்றுவரை கொடுஞ்சினத்தோடிருந்தது கோடை. இருந்திருந்து காற்று வீசும்போது வேம்புகள் சிலுசிலுவென்று பேசுகின்றன. பிறகு பச்சை மினுக்கிடும் இலைகளில் கவிந்துகிடக்கிறது மௌனம். எந்த ஊருக்குப் போனாலும் வேம்பின் நிழல் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. புளினிகள் ஓயாமல் கிக்கிடுகின்றன. எழுதிச் சலித்தாலும் கேட்கச் சலிக்காத குயிலின் குரல் எங்கிருந்தோ ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. கனத்த கதவுக்கு வெளியில் காத்திருக்கும் உறவுச்சிலுவைகளை புத்தகத்தின் பக்கங்களில் மறந்துவிட்டால், இது எழுதுவதற்கு உகந்த இடந்தான். ஆனால், நாம் எழுத நினைப்பதை உண்மையில் எழுதிவிட முடிகிறதா? இயல்பாய் எழுதுவது சாத்தியமில்லை என்பதற்காக எழுதாமல் இருந்துவிடத்தான் முடிகிறதா?

அகதிமுகாமில் இருப்பவர்களைச் சந்திக்கவென வந்திருப்பவர்களின் பெயர்களை ஓயாமல் அறிவித்துக்கொண்டிருக்கிறது ஒலிபெருக்கி. மேலும், அகதிகளென விதிக்கப்பட்டிருப்பவர்களை அதிகாரம் சந்திக்க விரும்பும்போதும் ஒலிபெருக்கிக்குரல் பெயர்சொல்லி அழைக்கிறது. தொலைவிலிருந்து பெயர்களைக் கிரகித்துக்கொள்ள முயல்வது பாதுகாப்பானது. துயருற்ற, அடைபட்ட, மனவுளைச்சல்படும் ஆன்மாவொன்றின் பெயர் என்பதன்றி, ஒரு அகதியின் பெயரைக் கிரகிப்பதன் வழியாக வேறெதை நான் புரிந்துகொள்ளப்போகிறேன்!
தோற்றவர்களிடம் துன்பத்தையும் வென்றவர்களிடம் சந்தேகத்தையும் போரனர்த்தம் விட்டுச் சென்றிருக்கிறது. “யாரிடமும் எதுவும் கதைக்க வேண்டாம்”என்று நான் அறிவுறுத்தப்பட்டிருக்கிறேன். இல்லை… இந்தவொரு விடயத்திலாவது புத்திசாலித்தனமாக இருக்கவே விழைகிறேன். நான் உயிரை நேசிக்கிறேன். மேலும், என்னுடைய புத்தகங்களை விட்டுவிட்டு அவ்வளவு விரைவில் என்னால் செத்துவிடமுடியாது. என்னால் யாருக்கும் சிக்கல் உண்டாவதையும் நான் விரும்பவில்லை. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்நேரம், என்னைக் குறித்து நான் எழுதுவது தவறு என்ற உறுத்தலை உணர்கிறேன். ஆனால், போர் நடந்த, நடக்கும் பிரதேசங்களின் தனிமனிதர்கள் தனிமனிதர்களல்லர் என்பதையும் அவர்தம் வாழ்வு அவர்களுடையது மட்டுமன்று என்பதையும் சொல்ல விரும்புகிறேன். அவ்வாறான பிரதேசங்களில் ஒவ்வொரு அசைவையும் அதிகாரங்களே தீர்மானிக்கின்றன. நமது நடத்தைகளும் வார்த்தைகளும் வரையறைக்குட்பட்டவை என்ற பிரக்ஞை நாம் உயிரோடிருப்பதற்கு உதவக்கூடும். என்ன செய்வது? யதார்த்தம் கசப்பானதும் சுயநலம் பொருந்தியதும்தான். அடிமைகளும் உளவாளிகளும் ஒழுக்கக்கேடுகளும் மலிந்துவிட்ட சமுதாயத்தில் மௌனம் பழகுவது உயிருக்கும் உடலுக்கும் நல்லதென உணர்ந்தவர்கள் வாழ்வாங்கு வாழக்கூடும்.

“என்னை விட வயதில் குறைந்தவர்கள்கூட இங்கே குடிக்கிறார்கள். குடிக்காதவர்களை உங்களால் எனக்குக் காட்ட முடியுமா?”என்று சவால் விடுபவனுக்கு வயது 23. “முன்னொருகாலத்தில் நீங்கள் வாழ்ந்த ஊர் இல்லை இது”என்று சிரிக்கிறான் மற்றவன். கோயிலுக்குப் பின்புறம் இருக்கும் தெருவிலுள்ள வீடொன்றில் விபச்சாரம் செய்யும் பெண்கள் சிலர் இருந்ததாகவும் அவர்களைச் சில இளைஞர்கள் அடித்து விரட்டிவிட்டதாகவும் சாவதானமாக என்னிடம் சொல்கிறார்கள். கஞ்சாவும் நீலப்படங்களும் மலிந்துவிட்டிருப்பதை அவர்களது பேச்சிலிருந்து நான் அறிந்துகொள்கிறேன். இழப்புகளை மறக்கடிக்க கேளிக்கை நிகழ்ச்சிகள் ஒழுங்கமைக்கப்படுகின்றன. அதை அரசாங்கமே ஒழுங்கமைத்து நடத்துகிறது. செவிகிழிக்கும் பைலாப் பாட்டுக்கு இயைபுற இடுப்பை நொடித்து இரண்டு கைகளையும் உயர்த்தியபடி இளைஞர்கள் ஆடுகிறார்கள். நடனங்கள் எப்போதும் நடனங்களாகவும் பாடல்கள் எப்போதும் பாடல்களாகவும் இருக்கவேண்டுமன்ற அவசியமில்லை. இழப்பின் வெற்றிடத்தை ஏதேனுமொன்றைக் கொண்டு அவர்கள் நிரவ விரும்புகிறார்கள். அவர்கள் எல்லாவற்றையும் மறந்துவிடுவது அதிகாரங்களின் அழுத்தமான இருப்புக்கு மிக உதவும். குருதியையும் கண்ணீரையும் மதுவைக் கொடுத்து மறக்கடிக்க வைக்கிறார்கள். குளிரூட்டப்பட்ட சொகுசுப்பேருந்துகள் இடையறாது யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் பயணிகளை மாற்றி மாற்றிக் கொண்டுசென்று குவித்துக்கொண்டிருக்கின்றன. கொழும்பு வெள்ளவத்தையில் இயங்கும் பல கடைகளில் கொழும்பு-யாழ்ப்பாணப் பயணம் தொடர்பான விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இசைக் குறிப்புகள் அடங்கிய நாடாவை உருவிக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஆடும் கோமாளிக்கூத்தாகிவிட்டது வாழ்க்கை. உன்னத இசை பேரோலத்துடன் அடங்கிவிட்டது. கைவிடப்பட்ட கிராமங்களில் பாம்புகளும் விஷஜந்துகளும் காட்டுமரங்களும் பல்கிப் பெருகுமாப்போல மெல்ல மெல்ல நச்சுக் காடாக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன தமிழர்களின் கலாச்சார நகரங்கள்.

மௌனம் அழகியது மட்டுமன்று; ஆபத்துக்காலத்தில் காப்பதும்கூட. அதிகாரங்களை எதிர்த்து ஒரு வார்த்தைதானும் எழுதிவிட எவருக்கும் துணிவில்லை. வன்னியில் விடுதலைப்புலிகள் இருந்த காலத்தில் அவர்களால் இயற்றப்பட்ட பாடலை கைத்தொலைபேசியில் வைத்திருந்த காரணத்திற்காக இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் தொடர்பான காட்சியிழைகளைத் தொலைபேசியில் சேமித்து வைத்திருந்தமைக்காக மேலும் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். புரட்சி என்ற சொல்லைக்கூட சகித்துக்கொள்ள முடிவதில்லை அரசுகளால். இது வரலாற்றில் காலகாலமாக நீளும் கருத்தொடுக்குமுறை. ரஷ்யாவில், 1825ஆம் ஆண்டு, முதலாம் நிக்கோலஸ் சக்கரவர்த்திக்கெதிராக நடத்தப்பட்ட டிசம்பர் புரட்சி தோல்வி கண்டதையடுத்து, அரசின் கொடுங்கோன்மை தனது கூரிய நகங்களுடன் மக்கள்மீது பாய்ந்த வரலாற்றை நாம் படித்திருக்கிறோம். அதன் நீட்சியாக 1849 டிசம்பரில் தஸ்தயேவ்ஸ்கியும் இன்னுஞ் சிலரும் ஜார் மன்னனின் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டதும் அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதும் வரலாறு. (மரணதண்டனை நிறைவேற்றப்படவிருந்த கடைசி நொடியில் அது எட்டாண்டுகள் கடூழியத் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.) தீவாந்தர சிட்சைக்காக சைபீரியாவுக்கு அனுப்பப்படவிருந்த தருணத்தில் தஸ்தயேவ்ஸ்கியை உலுக்கியதெல்லாம் அங்கே தனக்கு எழுத அனுமதி கிடைக்குமா என்ற கேள்விதான். மரணதண்டனை ரத்துச் செய்யப்பட்டவுடன் தஸ்தயேவ்ஸ்கி தனது சகோதரன் மிஹையிலுக்கு கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.

“வாழ்க்கை ஒரு கொடையாகும். வாழ்க்கை ஒரு வரமாகும். ஒவ்வொரு நிமிடமும் மனமகிழ்ச்சியின் ஒரு யுகமாக இருந்தது. புதியதொரு வடிவத்தில் நான் மறுஜென்மம் அடைந்தேன். சகோதரா, ஆசை ஒருபோதும் கைவிடாதென்றும் எனது இதயத்தையும் சிந்தனையையும் என்றும் களங்கப்படுத்தாமல் சுத்தமானதாக நான் காப்பேன் என்றும் நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்.”

இப்படிச் சத்தியம் செய்து தருகிற தூய்மையும் துணிச்சலும் நம்மிடம் இருக்கிறதா? ஒருவேளை அதெல்லாம் உட்டோபிய உலகக்காரர்களின் சிந்தனை போலும். எழுத்து எதைத்தான் புரட்டிப்போட்டுவிடப் போகிறது! மேலும், எழுதுபவர்களும் உயிர்வாழ வேண்டியிருக்கிறது. அவர்களுக்கும் வயிறும் மனைவியும் கணவனும் குழந்தைகளும் வீடு காணி நிலம் தென்னைமரக் கனவுகளும் இருக்கவே இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை மனச்சாட்சியால் மிக அதிகமாகத் தொந்தரவு செய்யப்படுபவர்கள் மௌனமாகிவிட்டார்கள். வேறும் சிலரை இனக்கபளீகர இறுதிப்போர் (?) இடம்மாற்றிவைத்துவிட்டது. (அவர்கள் கூறும் காரணமும் மனச்சாட்சியின் உறுத்தல்தான்) விடுதலைப் புலிகளின் வீழ்ச்சியின் பின் அரச சார்புநிலை எடுத்து எழுதிக்கொண்டிருப்பவர்களை ‘பிழைப்புவாதிகள்’ என்று மௌனித்திருப்பவர்கள் சாடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் எழுத்தைக்கூட துப்பாக்கிகள்தான் தீர்மானிக்கின்றன.


துரோகி-தியாகி கூச்சல்கள் ஓரளவு ஓய்ந்திருக்கும் நிலையில், இலங்கையிலிருந்தும் புலம்பெயர்ந்து வெளியிலிருந்தும் எழுதிக்கொண்டிருப்பவர்களின் நிலை ஓரளவிற்குச் சகித்துக்கொள்ளக்கூடியதும் புரிந்துகொள்ளக்கூடியதுமாக இருக்கிறது. ‘மீண்டும் போர் தொடங்குவோம்’என்று, இத்தனைக்குப் பிறகும் தாய்த்தமிழக சுவரொட்டிகளிலிருந்து அறைகூவுபவர்களை கொஞ்சம் கவலையும் எரிச்சலும் கலந்தே கவனிக்கவேண்டியிருக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு இப்போது வேண்டியிருப்பது போரன்று என்பதை அவர்கள் புரிந்துகொள்வது நல்லது. பிணம் கிடத்தப்பட்டிருக்கும் கூடத்தில் சப்பணம்கொட்டி அமர்ந்து கையையும் குரலையும் உயர்த்தி சொத்துத் தகராறு பண்ணுபவர்களைக் காட்டிலும், குழந்தையின் காதை அறுத்து கம்மலைத் திருடும் திருடனையும்விட மோசமானவர்கள் இத்தகைய அரசியல்வாதிகள். வடக்கின் அகதிமுகாம்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்கள் எனச் சொல்லப்படுபவற்றிலிருந்து தென்னிலங்கையிலிருக்கும் பூஸாவுக்கும் வெலிக்கடைக்கும் சித்திரவதைக்குப் பெயர்போன நாலாம்மாடிக்கும் இடம்மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பிள்ளைகளைத் தேடி ஓடும் பெற்றோரிடமும் உறவினரிடமும் ‘மீண்டும் போர் தொடங்குவோம்’என்ற அறைகூவலை என்ன முகத்தை வைத்துக்கொண்டு விடுக்கிறார்கள் என்பது புரியவில்லை.

உயிராசையின் பொருட்டு ஒத்தூதுபவர்களுக்கும் பேராசையின் பொருட்டு விதந்தோதுவதற்கும் வித்தியாசம் நிறையவே இருக்கிறது. தாரை தப்பட்டைகள் கிழிய, துந்துபி முழங்க, ஆலவட்டம் அமளிதுமளிப்பட, பட்டுப்பல்லாக்கில் அசைந்தசைந்து வந்துகொண்டிருக்கிறது செம்மொழி மாநாடு. இலக்கியவாதிகளின் குரலுக்குப் பதிலாக அரசியல்வாதிகளின் எக்காளம் அதிகமும் ஒலிப்பதிலிருந்தே தெரிகிறது எதன்பொருட்டு இத்தனை ஆரவாரம் என்பது. அதிகாரங்களின் துதிபாடிகள் பாவம்! அவர்களுக்கு முதுகுபிளக்கும் வேலைதான். தமிழை உய்விக்க வந்த உத்தமர்களை, இதுவரை பாடாத சொல்லெடுத்து பாடவேண்டிய பாரிய பணி அவர்களுடையது. தமிழுக்குள் தலைபுதைத்துத் தேடியெடுத்த சொற்களால் தலைமையைத் திணறடித்தால் விருது நிச்சயம். ஒரு இனம் அழிந்துபட்டு முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கையில், ‘எனது பிள்ளையை எங்காவது கண்டீர்களா? – ‘எனது அம்மாவை யாராவது கண்டீர்களா?’- ‘எனது சகோதரன் எங்கேயென்று தெரியவில்லை’என்று ஈழத்தமிழ்ச் சனம் கண்ணீர்மல்கத் தமது உறவுகளைத் தேடித்திரிந்துகொண்டிருக்கையில், சிறையிருளுள் இளைஞர்களும் பெண்களும் நாளாந்தம் வதைபடும் பேரோலம் செவிப்பறையைக் கிழித்துக்கொண்டிருக்கையில் - அதே இனத்தைச் சேர்ந்த, அதே மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஒரு தேசம் மொழிக்கு விழா எடுத்துக் களிகொள்ளவிருக்கிறது.

கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளக் கிளம்பிவந்துகொண்டிருக்கும் அறிவுஜீவிகள், ‘நானில்லை… நானில்லை…’என்றபடி தமது படைப்புகளை மாநாட்டுக்கு இரகசியமாகவும் பரகசியமாகவும் அனுப்பிக்கொண்டிருக்கிறவர்கள், கோயம்பேடு சந்தையில் ‘மனச்சாட்சி என்ன விலை?’ என்று விசாரித்துத் தெரிந்துகொள்வது நன்று. அவர்தம் வாழ்வு எதிர்காலத்தில் மேலும் வளம்பெற்றுப் பொலிய அவ்விசாரிப்பு உதவக்கூடும்.

நன்றி: அம்ருதா

குறிப்பு: செம்மொழி மாநாடு நடப்பதற்கு முன்னர் எழுதியது.