10.27.2006

போகமுடியாத பாதை

தனிமையின் காடு அடர்ந்தது
மழைமூடும் மாலைகளோவெனில்
பொட்டு வெளிச்சமுமற்ற
இருள் திண்மம்.

விழுதெனப் பற்றியதெல்லாம்
பாம்பெனச் சீறும் அடர்வனத்தில்
முள்கிழிக்க அலைகின்றேன்.
சூரியன் உட்புகா
விசும்பல்கள் வெளியேறா
இலைச்செறிவு விலக்கி
வானம் பார்த்தல்
சாத்தியமற்றிருந்தது நேற்றுவரை.

தனிமையின் பயம் தணிக்க
தனக்குத் தான் பேசியபடி
நடந்துகொண்டிருக்கிறது நதி.
அதனருகில்
ஊர்சேர்க்கும் ஒற்றையடிப்பாதையொன்று
மெலிந்து செல்லப் பார்த்தேன்

போயிருக்கலாம் அதனூடு.
விலங்குகள் காட்டினில் மட்டுமிருந்தால்.

10.26.2006

எழுதா விதிகள்

இருளடர்ந்த தெருவோரம்
காற்றலைக்கும் மரங்களை உணர்ந்தபடி
நடக்க விரும்புகிறேன்.

வேண்டியிருக்கிறது துணை.

பின்னிரவில் துயில்கலைய
வாசித்த வரிகள் அலைக்கழிக்கின்றன.
நான் வேண்டுவதெல்லாம்
சுத்தமான காற்றும்
அசைபோடலுக்கான வெளியுமே.

இரவுகளில் என்னுடையதல்லாதிருக்கிறது
வீட்டின் முன்புறம்.

சபைகளில் நானொரு மிதவாதி
அதிகபட்ச கவனிப்பையும்
புருவ உயர்த்துதலையும்
பார்வை பரிமாற்றங்களையும்
தவிர்த்தல் அவசியம்.

அதனால்
என்னுள் எழும் கேள்விகளுக்கோ
ஆயுள் தண்டனை.

இளவேனில் மாலை…
மழை வருவதன் முன்னான பொழுது…
புகாருள் அழகாகும் மனிதர்கள்…
இவையிணைந்த
சாலையோரத் தேநீர்க்கடையொன்றில்
எனக்கான தேநீர் ஆறிக்கொண்டிருக்கிறது

பருகியதேயில்லை.

இதை வாசித்தபின்
நீங்கள் என்னை
நிமிர்ந்து பார்க்க வேண்டியதில்லை.

நானொரு பெண்
அதிலும் மண்ணிறத்தவள்.

10.20.2006

இருப்பற்று அலையும் துயர்

நேற்றிரவையும் குண்டு தின்றது
சூரியன் தனித்தலையும் இன்றைய பகலில்
குழந்தைக்குப் பாலுணவு தீர்ந்தது.
பச்சைக் கவசவாகனங்களிலிருந்து நீளும்
முகமற்ற சுடுகலன்கள் வீதிகளை ஆள
வெறிச்சிடுகிறது ஊர்.

சொல்லாமல் படகேறிப் போயினர் முன்வீட்டார்
அவர்களின் கறுப்பு நாய்க்குட்டி
சோற்றுக்கு அழைத்தாலும்
விழியுயர்த்திப் பார்த்துவிட்டு
என்புதோல் போர்த்தி
இருக்கிறது பலநாளாய்.

நேற்று முன்தினம் பக்கத்துவீடும்
கையசைத்துப் போயிற்று.
மண்ணைத் தொட்டுக் கும்பிட்டுப்போன ஆச்சியின்
தளர்நடை இன்னும் ஒழுங்கையில்.

ஒவ்வொரு வீடாய் இருளப்
பார்த்திருக்க முடியவில்லை.

யாருமறியாமல் சுவர் சுவராய் தழுவி
கிணற்றடிக் கல்லில் கன்னம் உரசி
மல்லிகைக்கு வெறியோடு நீரிறைத்து….
பிரியமுடியாமல் எரிகிறது நெஞ்சு.

இருப்பைச் சிறுபெட்டிக்குள் அடக்குகிறேன்
கூடவே சிரிப்பையும்.
எந்தப் பெட்டிக்குள் எடுத்துப்போவது
விட்டுப்போகும் மனிதரை…
வீட்டை… வேம்பை…
அது அள்ளியெறியும் காற்றை…
காலைச் சுற்றும் என் பூனைக்குட்டிகளை.

Web CounterWeb Counter

10.15.2006

உதிரா நினைவு

கக்கத்தில் தகரக்குவளை இறுக்கி
பேரங்காடி முன் பிச்சையெடுக்கிறாள்
குஷ்டம் முற்றிய முதியவள்.
உதிர்ந்த விரல்கள்
விலக்க விலக்க
முளைக்கின்றன மீளவும் மீளவும்.

-----


கடலை மூசித் தழுவும்
நீரின் வடிவங்கள் நீயறிவாய்
கலந்தபின் பிரித்தறிய முடிந்ததா உன்னால்…
நம் இருவருக்கிடையில்
நின்றெரியும் பெருந்தீக்கும்
விதவிதமாய்ப் பெயர் சூட்டு…!
அணைந்தபின்
சரிந்த சாம்பலில் எழுதி விடைபெறு
அதன் பெயரை.

10.13.2006

ஊருக்குத் திரும்புதல்

சென்றவிடங்களிலெல்லாம்
திரும்புதல் குறித்தே பேச்சு

எதிர்பார்க்கைகளிலிருந்து இருப்புக்கு
தனிமையிலிருந்து கலகலப்புக்கு
அந்நியத்திலிருந்து உறவுக்கு
வேகத்திலிருந்து நிதானத்துக்கு
இயந்திரங்களிலிருந்து மனிதருக்கு
தாழ்வுணர்ச்சியிலிருந்து பெருமிதத்திற்கு

சில சுற்றுலாப் பயணிகளுக்கு
சென்றவிடங்களெல்லாம்
திரும்புதல் குறித்தே பேச்சு

சிதைந்த ஊர் முகத்தை
சதுப்புகளாகிவிட்ட வயல்களுள்
விழிக்கக் காத்திருக்கும் அமுக்கவெடிகளை…
துண்டிக்கப்பட்ட தன் கையை நாயிழுக்குமோ என்று
தானெடுத்துப் போய்ப் புதைத்த மனிதனை
தங்கள் வளவுகளுக்குள் புதைக்கப்பட்டிருக்கும்
பிணங்களின் எண்ணிக்கை பற்றி எவரும் அறிந்திலர்.

மதுவருந்தக் கூடுமிடங்களில்
ஊர்நினைவு தொட்டுக்கொள்ளும் ஊறுகாய்!

கொன்று தூக்கிலிடப்பட்ட குழந்தையை
கணவன் முன்னிலை பேய்களால்
தின்று தீர்க்கப்பட்ட பெண்ணை
தமிழகத்தின் கடலோரம்
மூட்டை முடிச்சோடு வந்திறங்கி வந்திறங்கி
இனி வாழ்வதற்கு என்ன வழி
என்று விழி ஏங்கியிருப்போர்க்கு
வார்த்தைப் பிச்சையிட்டுப் பேசுகின்றார் உரத்து.

செப்பனிடப்பட்ட வீதிகளால்
உயிர்பெற்றசையும் நகரத்தினூடே
ஊருக்குத் திரும்புதலைப்பற்றியும்
அவர்கள் பேசினர்.

பேச மட்டுமே செய்தனர்.

ஒரு பிதாமகனின் வருகை

வந்தமர்ந்த சில நொடிக்குள்
ஒளிவட்டம் சுழலத்தொடங்கிற்று
அதன் வண்ணக்கதிர்கள் சிதறிப்பரவின
என் சிறிய அறையெங்கும்.

வியந்து பார்த்திருந்தேன்.

நாற்காலி அந்தரத்தில் மிதந்துகொண்டிருக்க
மேகங்களைத் திரித்து பஞ்சாக்கி
காது குடைந்தான்
சட்டையில் ஒட்டியிருந்த நட்சத்திரங்களை
அலட்சியமாக உதற
அவை மின்னலில் போய்விழுந்தன.
தொண்டை வறண்டுபோக
கடலைக் குடிக்கக் கேட்டான்
எலுமிச்சைச்சாறு கொடுத்தும் பயனில்லை.

சற்றைக்கெல்லாம் ஊழிக்கூத்து தொடங்கிற்று
செஞ்சடை விரிந்து பறக்க
உயர்த்திய காலில் தட்டுண்டு
உருண்டது பூமிப்பந்து.

‘பாரதியைத் திருத்தி பதிப்பிக்க உத்தேசம்
முடிந்தால் புதுமைப்பித்தனையும்’ என்றவனின்
விஸ்வரூபத்தில் வீடு நாணிற்று.

திருவருகை நிகழ்ந்து ஒருமாதம்
இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறது
அவனிருந்த நாற்காலி
வெறுப்பின் சுழற்காற்றில்.

10.08.2006

நம்பிக்கை

ஓரிரவு கனவில் கண்ட
சாம்பல் காடாய் கண்முன் விரிகிறது ஊர்.
மிகுபசி உற்ற தீயெனப்
தினம் தினம் போர் தின்னும் என் தேசம்.

தொடக்கமும் முடிவும் அழிந்துபோன தெருக்களில்
மரணம் சாவதானமாக உலவ
கூரையும் கதவுமற்ற சுவர்களில்
இரத்தம் எழுதிய இறுதிக்கவிதைகள்…
நடுங்கும் விரல்களால் மெல்லப் பற்றுகிறேன்
பாதி எரிந்துபோன மிகச்சிறிய சட்டை
ஐயோ! சிறுமொட்டே…!
என்னிடம் வார்த்தையில்லை…!!!

மரத்தில்… நிலத்துள்…வீட்டில்
சாவு ஒளிந்துளது
சின்ன மணிக்கண் உருட்டி விழிக்கும் குருவீ…!
இங்கேன் வந்தாய்…?
முன்னொருபொழுதில் நீ வந்து கொத்திய
முகம் பார்க்கும் கண்ணாடிபோல்
சிதறிப்போனதெம் வாழ்வு…!
உன்னையும் சொல்வதற்கில்லை
மழையற்றபோதும் இருண்டிருக்கும் வானில்
உனக்கேது உலவ இடம்…?

சூழல் அறியாமல்
சூட யாருமற்றுச் சொரிகிறது மல்லிகைப்பூ.

வருவர் வருவரென காத்திருந்து
உயிர்விட்ட நாயின் எலும்புக்கூடு
ஒரு வீட்டின் வாசலென
அடையாளம் கொள்கிறேன்.

எனது அடையாளங்களைக் காவுகொள்ளும்
பனிதேசத்திலிருந்து மீண்டும் வரும்போது
சாம்பல்மேடு உயிர்த்திருக்கும்.
மல்லிகைக் கூந்தல் மணக்க
என்னை எதிர்கொள்ளும் சிறுமியிடம் கூறுவேன்
இறந்த நகரத்தில் ஒருபொழுதில் இருந்தேன் என.