4.14.2008

இது இப்படி முடிந்தது.....எல்லா நாட்களும் ஒன்றுபோலில்லை. கடந்த வாரம், மனசில் விழுந்த நெருப்புக்கங்காய் கனன்றுகொண்டேயிருந்தது. ஆதங்கம், பரபரப்பு, ஆற்றாமை, வஞ்சிக்கப்பட்ட துக்கம், பேசப்படுவதனாலாய சிறுபிள்ளைத்தனமான உள்ளார்ந்த கிளர்ச்சி, மின்னஞ்சல் ஆறுதல்கள், ஆலோசனைகள், அனானிகளின் மிரட்டல்கள் எல்லாம் ஏறக்குறைய இன்று ஓய்ந்துவிட்டன. அடிக்கடி உயிர்த்துயிர்த்து அழைத்துக்கொண்டிருந்த தொலைபேசி மறுபடி சடப்பொருளாகிக் கிடக்கிறது. என் பெயரில் அதிகப்பிரசங்கித்து சர்ச்சை வழி அடையாளப்படுத்திய நண்பருக்கும், எனது மறுப்பினை வெளியிட்டு ‘மீள் கருணை’ காட்டிய ஆனந்த விகடனுக்கும் (குறிப்பாக கண்ணனுக்கு) பெயர் குறிப்பிட முடியாத சில நண்பர்களுக்கும், வீழ்ந்துவிடுவேனோ என்று அஞ்சுகிற போதெல்லாம் தாங்கிப்பிடித்து தலைகோதி, தொடர்ந்து எழுதத் தூண்டும் என் சக பதிவர்களுக்கும் நன்றி.

பரபரப்பிற்காளாக்கியவர் தவிர்த்து வேறெவரையும் இழக்காமல் இக்கோடையைக் கடந்தேன் என்பதே எஞ்சியிருக்கக்கூடிய மிகப்பெரிய ஆறுதல். அந்த நேர்காணலை காலம் தாழ்த்தி வாசித்து, விளக்கத்தை அறியாத ஒரு சிலர் இன்னமும் மின்னஞ்சல் வழியாக ‘ஏன் நாயே இப்படிச் சொன்னாய்?’என்ற தொனிப்படக் கேட்கும்போது மட்டும் ரணம் வாய்பிளந்து மூடுகிறது.

பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லைத்தான். எனது பெயருக்கு அருகில் புதிதாக அடைமொழி சேர்ந்திருக்கக்கூடும். ஏதோவொரு மதுச்சாலையில் எல்லா அரசியலும் பேசி ஓய்ந்த கணமொன்றில் யாரோவொருவரால் எனது பெயர் குறிப்பிடப்பட்டு ஆரம்பிக்கப்படும் உரையாடலில் ‘ஆனந்த விகடன்’என்ற பத்திரிகை குறிப்பிடப்படுவதற்கான சாத்தியங்கள் அநேகம். நியாயம்-அநியாயம், அறம்-கயமை, சுதந்திரம்-வன்முறை என்பதன் பொருளெல்லாம் அவரவர் அளவுகோல்களின்படி மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஓங்கியிருக்கும் கையின் அளவினதாயிருக்கிறது அறம்.


16.04.08 திகதியிடப்பட்ட விகடனில் 177ஆம் பக்கத்தில் ‘நான் என்ன சொன்னேன்’என்ற தலைப்பின் கீழ் எனது விளக்கம் வெளியாகியிருக்கிறது. விகடன் அதைப்பற்றி என்ன நினைக்கிறது என்பதையும் தெரியப்படுத்தினால் நன்று என நினைத்தேன். ஆனால்,எனது மறுப்பைப் பிரசுரிப்பதே விகடனின் பெருந்தன்மையையும், வருத்தத்தையும் உணர்த்துவதற்குப் போதுமானதாயிருக்கும் என்று நண்பர்கள் கூறினார்கள். ‘போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’, ‘இந்தளவில் திருப்தி கொள்’, ‘மற்றவர்களுக்கு இதுகூடக் கிடைக்கவில்லை’என்றெல்லாம் சொல்லப்பட்டன. சரிதான்!ஓரளவு நீதி கிடைத்தது என்று ஒதுங்கவேண்டியதுதான். ‘அதுவுமில்லை’ என்று கைவிரித்தாலும் மேற்கொண்டு செய்வதற்கொன்றுமில்லை. பல சமயங்களில் வாளாதிருக்க விதிக்கப்பட்ட வாழ்வெமது.

நேர்காணல் வெளியாகியதும் இரண்டு நிலைப்பாட்டுடன் தொலைபேசி அழைப்புகள் வந்தன. “நன்று சொன்னீர்கள்”என்றவர்கள் ஒருபுறம். “எப்படி இப்படிச் சொல்லப்போயிற்று?”என்றவர்கள் மறுபுறம். “நான் சொல்லவில்லை”என்ற சுயபுராணம் கேட்டதும் “அதுதானே நீங்கள் அப்படிச் சொல்லக்கூடியவரில்லையே….”என்றார்கள்.
விகடன்.காம் இல் வந்து கருத்துத் தெரிவித்த சிலர் “நீங்கள் சென்னையிலேயே வாழ்ந்துகொண்டு எப்படிச் சென்னையைப் பற்றி குறைத்துச் சொல்லலாம்?”என்று கேட்டிருந்தார்கள். இன்று காலையில் வந்த மின்னஞ்சலில்கூட
I WOULD APPRECIATE IF YOU CAN ATLEAST CLARIFY YOUR POINT OF VIEW WITHOUT AFFECTING OR OFFENDING TAMIL WRITERS AND CHENNAI.
என்றும்
BEING IN CHENNAI AND TALKING ILL OF CHENNAI IS NOT GOOD COURTESY.
என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

தவிர,அனானியாக நிறைய மிரட்டல்கள் வந்தன. அதன் சாரமானது "அகதி நாயே! உன் ஊருக்கு ஓடிப்போ"என்பதாக அமைந்திருந்தது. அவற்றை நண்பர்கள் கேட்கும் பட்சத்தில் பிரசுரிக்கவியலும். இதற்கெல்லாம் நான் மிரண்டு போய்விடவில்லை. என்றாலும், சுகதுக்கம் கடந்த பரமாத்மாவில்லை இது. அதை வாசிக்கும் கணத்தில் காரணமற்றுப் பாதிக்கப்படும் வேதனை பொங்கியது. என்னை இவ்வாறான இக்கட்டில் சிக்கவைத்து ஏதோவொரு இலாபம் தேடவிளைந்த நபரின் கண்களைப் பார்த்து 'திருப்தியா?'என்று கேட்கத் தோன்றுகிறது.

"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?"என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் “நிம்மதியான உறக்கம், உணவு, அமைதியாக எழுதக்கூடிய சூழல். ஆனால், சென்னை என்பதும் ஒரு வேடந்தாங்கல்தான். எங்கோ தொலைவில் இருக்கும் வீட்டிற்குத் திரும்புவதற்கான காத்திருப்பு, ஏக்கம் மனதுள் எப்போதுமிருக்கிறது.”என்ற எனது பதிலை, இக்கோடை விழுங்கித் தொலைத்ததா நானறியேன். எனது வலைப்பூவில் இடப்பட்டிருந்த 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற கட்டுரையிலிருந்து உருவியெடுக்கப்பட்ட ஒரு சில வாக்கியங்களே விடையாக அமைந்திருக்கக் கண்டேன். "அவளது கணவன் இறந்துபோய்விட்டான். பிள்ளைகள் பசியில் கதறின. வேறு வழியின்றி அவள் திருட வேண்டியதாயிற்று. அவள் இப்படித்தான் திருடியானாள்"என்றொரு பந்தியின் முதற்பகுதியை நீக்கிவிட்டு கடைசி வார்த்தையை எடுத்துக்கொண்டால் "அவள் திருடி"என்றே வரும். இத்தகைய கைங்கரியத்தைத்தான் என்னை நேர்கண்டவர் செய்திருக்கிறார்.

"நான் பாதிக்கப்பட்டேன்", "மன உளைச்சலுக்குள்ளானேன்", "திரிக்கப்பட்ட வார்த்தைகளால் விரோதிகளைப் பெற்றுக்கொண்டேன்"என்றெல்லாம் புலம்புவது வெறுத்து, சலித்துப் போய்விட்டது. சொல்லக்கூடியதெல்லாம் ஒன்றுதான்.

எல்லாப் புனிதங்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றபோதிலும், எழுத்தின் மீது இன்னமும் மதிப்பும் நம்பிக்கையும் இருக்கிறது. அது கண்ணுக்குப் புலப்படாத அறத்தின் இழையால் இயக்கப்பட்டுக்கொண்டிருப்பதாகவே கருதுகிறேன். தொழில் என்று பார்த்தால்-கள்ளச்சாராயம் காய்ச்சுவதைக் காட்டிலும், கடத்தல் செய்வதைப் பார்க்கிலும் எழுதுவது ஏதோவொரு வகையில் பெருமிதந் தரத்தக்கதே. எழுத்தினை அடிப்படையாகக் கொண்டியங்கும் பத்திரிகையாளர்கள் தங்கள் வயிற்றையும் வசதிகளையும் மட்டும் கருத்திற்கெடாது, சக மனிதர்களின் இதயங்களையும்(மனசு இதயத்தில் இருக்கிறதெனில்)கவனத்திற் கொள்ள வேண்டுமென்பதே என் விருப்பம்;வேண்டுகோள். செவ்வி வழங்குபவர்களும் இனி கூடுதல் அவதானத்தோடு இருக்க வேண்டுமென்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

பிற்குறிப்பு: பதிவின் நீளம் கருதி, வாசிப்பவர்களை சலிப்பிற்காட்படுத்த மனமின்றி என்னால் தட்டச்சி அளிக்கப்பட்ட ‘உண்மையான’செவ்வியையும், விகடனில் வெளியாகியிருந்த எனது மறுப்பையும் இதில் போடவில்லை.4.03.2008

ஆனந்த விகடன் நேர்காணல்:தன்னிலை விளக்கம்“கருத்து வெளிப்பாட்டுக்கான சுதந்திரம் என்பது நாம் ஆதரிக்கும் கருத்துக்களுக்கான சுதந்திரம் மட்டுமல்ல. நம்மை அதிர்ச்சி அடையச் செய்யும் கருத்துக்களுக்கான சுதந்திரமும்கூட” –நோம் சோம்ஸ்கி

ஏப்ரல் 9,2008 எனத் திகதியிடப்பட்ட இவ்வார ஆனந்த விகடனில் எனது நேர்காணல் வெளிவந்திருக்கிறது. அதை வாசித்த எனது நண்பர்கள் அதிர்ச்சியடைந்திருக்கக்கூடும். அந்த அதிர்ச்சிக்கு நானும் விதிவிலக்கல்ல. அந்த நேர்காணலில் எனது பதில்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்த விதத்தைப் பார்த்து வியந்துபோனேன். 'ஊடக சுதந்திரம்' என்ற சொல்லாடல் பரவலாகப் பிரயோகிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் 'ஊடகங்களின் வன்முறை'யைப் பற்றிப் பேசவேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது.

'பிரச்சனை' என்று எழுதும்போதெல்லாம் 'சுய இரக்கம்','கழிவிரக்கம்'போன்ற வார்த்தைகள் நினைவில் வந்து தடுக்கின்றன. ‘எனக்குக் கொஞ்சம் இரக்கம் தா’என்று கைதாழ்த்தி கண்ணீரைக் கறப்பது போன்றதொரு சலிப்பே மேலிடுகிறது. ஈழத்தமிழர்கள் மீதான முன்தீர்மானங்கள், விமர்சனங்களால் அழவேண்டிய சமயத்தில் கூட ஒருமுறை யோசித்தபின்னரே அழுகையைத் தொடரவேண்டியிருக்கிறது. எனினும், மேற்குறித்த நேர்காணலில் சொல்லப்பட்டிருந்த விடயங்கள் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

‘தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் கோழைகள்’என்ற அதிரடியான தலைப்பொன்றுடன் அந்த நேர்காணல் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ‘உலகில் நடக்கும் ஒடுக்குமுறைகள் பற்றி பெண் கவிஞர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதுகிறார்கள். ஆனால், 25ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கும் படுகொலைகள் பற்றி அதிகமான பதிவுகள் இல்லையே… ஏன்?’என்று கேட்கப்பட்ட கேள்விக்கு ‘பெண் கவிஞர்கள் மட்டுமென்றில்லை. ஆண் படைப்பாளிகளில் கவிஞர் அறிவுமதி, இன்குலாப் போன்றோரைத் தவிர்த்து அநேகமானோர் எழுதுவதில்லை. காரணம் ஈழப்பிரச்சனையையும் பயங்கரவாதத்தையும் ஒன்றெனப் பார்க்கும் தமிழகத்து அரசியல் சூழ்நிலையால் இருப்புக் குறித்த அச்சம் (நான் உட்பட) யாவருக்கும் இருப்பதனால் அது பற்றி எழுதுவது குறைவு. ஆனால், சில கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன்.’என்றே பதிலளித்திருந்தேன்.

மேலும் அவரோடு உரையாடும்போது ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகப் பேசிய வைகோ,சுபவீ போன்றவர்களுக்கு நேர்ந்த கதி உங்களுக்குத் தெரியுமல்லவா…?இவ்விதமிருக்க எழுத்தாளர்கள் எப்படி எழுத முன்வருவார்கள்?’ என்று கேட்டிருந்தேன். ‘தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் அனைவரும் கோழைகள்’என்ற பிரயோகம் என்னால் மேற்கொள்ளப்படவில்லை. ஈழப்பிரச்சனையைப் பற்றி எழுதுமளவிற்கு அவர்கள் துணிச்சலற்றவர்களாக இருக்கலாம். ஆனால், அதை ஒரு வெகுஜன ஊடகத்தின் நேர்காணலில் சொல்வது எவ்வளவு அறிவுடைமை என்பது எனக்குத் தெரியும். ‘உண்மைகளை உரத்துப்பேச வேண்டியது எழுத்தாளர்களின் கடமை’ என்பது எந்தளவிற்கு நடைமுறைச் சாத்தியம் என்பதை அறிந்தவர் அறிவர். ‘உண்மை பேசுகிறேன் பேர்வழி’என்று என் தலையை நானே கொண்டுபோய் தண்டவாளத்தில் வைக்கிற தைரியமுள்ள ஆளாக இருந்திருந்தால் ஈழத்திலேயே இருந்திருப்பேன். இப்படி உயிரை முடிந்துகொண்டு ஊரூராக ஓடிக்கொண்டிருக்க மாட்டேன். வாசகர்களைக் கவரக்கூடிய தலைப்புகளை வைக்கவேண்டுமென்பதற்காக நேர்காணலை அளித்தவர்களையே அதிரவைப்பது எந்த அறத்தைச் சார்ந்ததென்று எனக்குப் புரியவில்லை.

மேலும், “ஈழத் தமிழ் இலக்கியத்தின் இன்றைய நிலை என்ன?”என்ற கேள்விக்கு நான் அளித்த பதில் முழுமையாக விழுங்கப்பட்டு, நேர்காணலைச் செய்தவர் என்ன சொல்ல விரும்பினாரோ, அதுவே பதிலாகப் பதியப்பட்டிருக்கிறது.அந்தப் பதிலில் பதிப்பகங்களுக்கும் எனக்கும் இடையில் சிண்டு முடிந்துவிட்டிருக்கிறார் என்னை நேர்கண்டவர்(?). புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் புத்தகம் போடவேண்டுமென்று தமிழகத்தின் பதிப்பகங்களை நாடும்போது, அவர்களிடம் ஒன்றுக்கு மூன்று மடங்காக காசைக் கறந்துகொண்டு புத்தகம் போடும் அநியாயம் இங்கு நடக்கிறது என்ற தகவலை(?) எனக்குச் சொன்னவரே அவர்தான். ‘எனது புத்தகங்களைப் போட்ட இரண்டு பதிப்பகங்களுமே அவ்வாறு என்னிடம் காசு பிடுங்கவில்லை. அதனால் எனக்கு அந்த அனுபவம் கிடையாது. நீங்கள் சொல்வது உண்மையெனில் எவ்வளவு வருந்தத்தக்கது. ஏனெனில், வெளிநாடு வாழ் ஈழத்தமிழர்கள் அத்தனைபேரும் ‘வைற் காலர்’வேலை பார்க்கிறவர்கள் இல்லை. அங்கு கழிப்பறை கழுவி, கோப்பைகள் கழுவி உழைக்கிறவர்கள்கூட இருக்கிறார்கள். அப்படியாக உழைக்கும் பணத்தை இவ்வாறு பதிப்பகங்களிடம் இழப்பது வருந்தத்தக்கது’என்று நான் கூறியது எப்படித் திரிபுபடுத்தப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். “புலம்பெயர்ந்த எழுத்தாளர்களின் வேட்டிகளை இங்குள்ள பதிப்பகங்கள் உருவிக்கொண்டுதான் அனுப்புகின்றன”என்று எழுதப்பட்டிருக்கிறது.
ஊடக ‘கவர்ச்சி’க்காக ஈழத்தமிழர்களின் வேட்டிகளை அவர் உருவியிருக்க வேண்டாம்.
குறிப்பிட்ட நேர்காணலை வாசிக்கும் எவருக்கும் ஈழத்தமிழர்கள் யாவரும் வெளிநாடுகளில் கழிப்பறையும் கோப்பையும் கழுவிக்கொண்டிருப்பதான ஒரு சித்திரம்தான் தோன்றும். எத்தொழிலும் இழிந்தது அல்ல. எனினும், பல்லாண்டுகளுக்கு முன்பே புலம்பெயர்ந்து நல்ல நிலைக்கு வந்துவிட்ட பல ஈழத்தமிழர்களின் மனதில் இந்தப் பதில் எத்தகைய உணர்வலைகளை எழுப்பும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
"சென்னை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?" என்ற கேள்விக்கு என்னால் அளிக்கப்பட்ட பதிலையும் அச்சியந்திரம் விழுங்கிவிட்டிருக்கிறது. பதிலாக, எனது வலைப்பூவில் பதியப்பட்டிருக்கும் 'சென்னை என்றொரு வேடந்தாங்கல்'என்ற பதிவிலிருந்து சில வரிகளை எடுத்து அதையே பதிலாக்கியிருக்கிறார்கள். அதுவொரு கட்டுரையின் பகுதி. தலையையும் காலையும் துண்டித்துவிட்டால் முண்டம் எவ்வளவு அசிங்கமாகக் காட்சியளிக்குமோ அவ்வளவு கேவலமாகப் பல்லிளிக்கிறது அந்தப் பதில். எனது வலைப்பூவைப் பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கேள்விகளுக்கான பதில் அதிலிருந்தும் எடுக்கப்படும் என்பது என்னிடம் தெரிவிக்கப்படவில்லை. நினைத்துப் பார்க்கும்போது, 'என்னே வஞ்சனை'என்றொரு கோபச்சிரிப்புத்தான் வருகிறது. பத்திரிகையாளர்களை இவ்வாறான சம்பவங்கள் தரமிறக்குகின்றன.

ஒப்பீட்டளவில் பார்க்கும்போது ஆனந்த விகடன் ஈழத்தமிழர்கள் பற்றி ஓரளவிற்கேனும் கரிசனையோடிருக்கிற பத்திரிகை. தமிழ்நாட்டு வாசகர்களிடையே ஈழத்தமிழ் படைப்பாளிகளை இனங்காட்டிக்கொண்டிருக்கிற பத்திரிகை என்று சொல்வதுகூட தவறாக இருக்கமுடியாது. இனப்பிரச்சனையைப் பயங்கரவாதப் பிரச்சனையாகப் பார்க்கிற காலகட்டத்தில் துணிந்து சில விசயங்களைச் சொல்லவும் செய்திருக்கிறது என்ற வகையில் எங்களுக்கு ஆனந்த விகடன் மீது மதிப்பிருக்கிறது. ஆனால்,வளர்ந்துவரும் ஒரு படைப்பாளியை சக படைப்பாளிகளுடனும் பதிப்பகங்களுடனும் சிண்டு முடியும் வகையில் அந்த நேர்காணலில் அளிக்கப்பட்ட சில பதில்கள் திரிபுபடுத்தப்பட்டிருந்தன என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் எவர் மனமும் புண்படுத்தப்பட்டிருப்பின் மன்னிக்க வேண்டுகிறேன். இதற்கான எதிர்வினையை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் அதை முழுமையாகப் பிரசுரிப்பார்கள் என்றே நம்புகிறேன்.
என்னை நேர்காணல் செய்தவர் ஓரளவிற்கு எனக்குப் பரிச்சயமானவர் என்பதால், அவரிடம் குறைந்தது பத்துத் தடவைகளாவது சொல்லியிருப்பேன். "தயவுசெய்து நான் சொல்லாததை எழுதி என்னைச் சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்."என்று. ஏனெனில், நான் ஒரு விடயத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில் அதில் சர்ச்சைக்குரிய பகுதியை மட்டும் சடாரென்று பிடித்துக்கொண்டு கண்கள் மினுக்கிட (அது அந்த வாக்கியத்தின் ஒரு பகுதியாகவே இருக்கும்) 'நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள் என்று எழுதட்டுமா?'என்பார். இவர் என்னைச் சிக்கலில் மாட்டிவிடப்போகிறார் என்ற உள்ளுணர்வு எனக்கு அப்போதே இருந்தபடியாற்தான் நான் அவ்வாறு பலதடவைகள் கேட்கவேண்டியிருந்தது. நான் இவ்வாறு கோபத்துடன் எதிர்வினையாற்றுவதற்கு, 'இத்தனை சொல்லியும் இந்த மனிதர் இப்படிச் செய்துவிட்டாரே'என்ற விசனமும் காரணம். 'என்ன நீங்கள் இப்படிச் சொல்லிவிட்டீர்களே...'என்று வரும் தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிக்கும்போதெல்லாம்,
'தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி
வாடித் துன்பமிகவுழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து.....
......................................................................
என்ற வரிகளே நினைவில் வருகின்றன. பாரதியாரின் வயிற்றெரிச்சலை எவரோ இதுபோன்றதொரு நாளில் கிளறிவிட்டிருக்கவேண்டும்.
“வன்முறை நமது சமூகத்தில் காட்டுச்செடி போல பரவிவிட்டது. வன்முறை என்பது வன்முறையாளர்களின் குற்றம் மட்டுமே என்று கூறிவிட முடியாது. தன்மீது அவிழ்த்துவிடப்படும் வன்முறையை அமைதியாக ஏற்றுக்கொள்ளும் எல்லோருக்கும் இந்தக் குற்றத்தில் பங்கு உண்டு”
என்ற கனிமொழியின் வார்த்தைகளோடு நான் முழுமையாக உடன்படுகிறேன். ஒருவரை அடிப்பதும் கொல்வதும் மட்டுமே வன்முறை ஆகாது. ஒருவரது உதடுகள் வாயிலாக தனது கருத்தைப் பேச முற்படும் ஊடகங்கள் செய்வதும் வன்முறைதான். அதைப் பார்த்துக்கொண்டு மறுப்புத் தெரிவிக்காது மௌனமாக இருப்பது வன்முறைக்குத் துணைபோவதாகிவிடும். பரபரப்புக்காக அடுத்தவரின் உணர்வுகளைப் பகடைக்காயாக்கும் மனச்சாட்சியற்ற ஊடக கலாச்சாரம் மாறும், மறையும் காலம் எப்போது? வணிக பத்திரிகைகளின் பெருந்தீனிக்கு தனிப்பட்ட மனிதர்களின் உணர்வுகள் இரையாக்கப்படுவது பற்றிய உரத்த உரையாடல் இனியேனும் ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

தமிழ்நதி