11.18.2007

ஆரத்தி



பாரதி நெடுநேரமாக மேடையில் வலப்புறத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.

அந்த மண்டபத்தின் மேடை கலகலத்துக்கொண்டிருந்தது. நாதஸ்வரக்காரர் தன்னால் முடிந்தவரை உயரத்திற்குப் போவதும் பிறகு சடாரென்று கீழிறங்கி தானே தன்னைச் சிலாகித்துக்கொள்வதுபோன்ற பாவனையில் தலையாட்டுவதுமாக காற்றோடு வாதாடிக்கொண்டிருந்தார். மேளக்காரரும் விடுவதாயில்லை. விட்டேனா பார் என்று கொட்டி முழக்கிக்கொண்டிருந்தார்.
நடுநாயகமாக அண்ணனின் மகள் தாட்சாயணி மஞ்சள் முகமும் பட்டுப்புடவையும் நகைகளுமாக மின்னிக்கொண்டிருந்தாள். இன்னமும் குழந்தைமை மாறாத பசிய முகம். அவர்களின் உறவுக்குள் இத்தனை அமர்க்களமாக யாரும் சாமத்தியச் சடங்கு செய்ததில்லை. சபையில் அமர்ந்திருந்தவர்களும் மினுமினுப்பாய்த்தானிருந்தார்கள். நாற்காலியில் இருந்தபடி நகரத்தை ஆட்டிவைக்கும் பெரிய மனிதர்கள், மகா மகா பணக்காரர்கள், தமிழைத் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு எப்பவோ மூட்டை கட்டிக்கொண்டுபோன வெள்ளைக்காரனின் மொழியை விடாப்பிடியாகப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்கிறவர்கள்... என்று மரியாதைப்பட்ட சபைதான் அது.
“ஆரத்தி எடுக்க வேணும் வா”என்று பாரதியை பெரியம்மாதான் அழைத்துவந்தாள். இந்த இடத்தில் நிறுத்திவிட்டு சடங்குகளுக்குள் காணாமற்போயிருந்தாள். கிராமங்களில் போலன்றி, தெளிவான திட்டமிடலை அந்த வைபவத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் அவதானிக்க முடிந்தது. அண்ணியின் தோழிகளில் ஒருத்தி கையிலிருந்த பேப்பரில் எழுதியிருந்த பெயர்களில் ஒவ்வொருவராக அழைக்க, அவர்கள் மேடையின் பக்கவாட்டில் இருந்த படிகள் வழியாக மேடையேறி ஆரத்தி எடுத்துவிட்டு வந்தார்கள்.

பாரதி அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபோது ஏறத்தாழ பதினைந்து பெண்கள் அவ்விடத்தில் குழுமி நின்றிருந்தார்கள். இப்போது ஆறு பேர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். ஆரம்பத்தில் தங்களுக்குள் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த அவர்களும் நேரம் ஆக ஆக மேடை வாயிலை நோக்கி சலிப்பார்ந்த விழிகளை எறியவாரம்பித்திருந்தார்கள்.
தன்னை இன்னும் அழைக்காதது பெரிய குறையாக பாரதிக்குத் தோன்றவில்லை. வீட்டிற்குள்ளேயே சுவாதீனமாக சுற்றி வந்த உறவுக்காரி.... நிதானமாக அழைக்கலாம் என்றிருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டாள்.
பாரதியின் அப்பாவும் தேவேந்திர அண்ணனின் அப்பாவும் கூடப்பிறந்த சகோதரர்கள். பழகிய வீட்டையே சுற்றிக்கொண்டிருக்கும் பூனைக்குட்டியைப்போல பாரதி பெரியப்பா வீடே கதியென்று கிடப்பாள். தேவேந்திர அண்ணனின் தங்கச்சி ரேவதியும் பாரதியும் ஒட்டென்ற ஒட்டு. நகரத்திற்குப் போவதென்றால் ஒன்றாகவே போவார்கள். தோழிகள் வீட்டிற்கும் அப்படித்தான். இரவிரவாக கிசுகிசுவென்று பேசிக்கொண்டிருந்துவிட்டு விடிகாலையில்தான் தூங்குவார்கள்.
"விடிய விடிய அப்படி என்னதான் பேசுறீங்களோ..."பெரியம்மாவின் கேள்விக்கு விடை சொல்லாமல் ஆளையாள் பார்த்துச் சிரிப்பார்கள்.

அந்தப் பெண் பேப்பருடன் அருகில் நெருங்கியதும் பாரதி பரபரத்து எழுந்திருந்தாள்.

“தேவமனோகரி”

பெயரைக் கேட்டதும் ஒரு பெண் முகம்மலர்ந்து எழுந்துபோனாள். பாரதியின் மனசுக்குள் சின்ன பதைப்பு பரவ ஆரம்பித்தது.

“என்னை ஏன் இன்னும் கூப்பிடவில்லை…? ஒருவேளை… ச்சே!”எழுந்த சந்தேகத்தை அடித்து விரட்டினாள்.
அண்ணன் அப்படியெல்லாம் பேதம் காட்டுகிறவரில்லை. ஊரில் சாதாரணமாக இருந்தபோதும், பிறகு பதவி பணம் என்று வாழ்வான வாழ்வு வந்தபோதும் 'வா'என்றழைக்கும் அந்த வாஞ்சை மட்டும் மாறியதேயில்லை. ஊரில் சில பேர் வாயகட்டி பல்லைக் காட்டி மூடுகிறபோது மாடு அசைபோடு்ம் ஞாபகம்தான் வரும். அண்ணன் அப்படியில்லை. சிரிப்பென்றால் மல்லிகை அப்படியே பூத்துச் சொரிகிற மாதிரி வெள்ளந்தியான சிரிப்பு. அண்ணன் பரீட்சை எழுதி உதவி கலெக்டராக ஊருக்குள் வந்தபோது பெரியப்பாவின் தோரணையே மாறிப்போயிற்று. சாதாரணமாகவே வக்கணைப் பேச்சை மொத்தக் குத்தகைக்கு எடுத்தாற்போலிருப்பார். சொல்கிற சொல்லில் கேட்கிற நெஞ்சு கருகிப்போகும். 'போறேண்டா சாமீ'என்று கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு ஓடிப்போக வைக்கிற வாய் அது. அண்ணனுக்கு வேலை கிடைத்ததும் உப்பரிகை மகாராஜாவாகிவிட்டார். கூடப்பிறந்த சகோதரனையே 'ஏண்டா நாயே...'என்பதுபோல பார்த்தார். பாரதியின் அப்பா தன்னுடைய அண்ணாவைக் கண்டுகொள்ளமாட்டார். 'அண்ணீ...!'என்று கூப்பிட்டுக்கொண்டு விறுவிறுவென்று நேரே சமையலறைக்குப் போய்விடுவார்.
பெரியப்பாவின் ஆர்ப்பாட்டம் பொறுக்காமல் சிலநாட்கள் அங்கே போகாமல் இருப்பாள். ஆனால், மாலையானதும் ரேவதியின் ஞாபகம் வந்துவிடும். கவலை, காதல், கஷ்டம் எதுவானாலும் அவளோடுதான் பகிர்ந்துகொள்ள முடிந்தது.
பெரியப்பாவின் பணத்திற்காக அவரை உப்பரிகையிலேற்றியவர்கள் இருந்தார்கள். அவர்களைப் போகவிட்டு 'பிச்சைக்காரப்பயல்கள்'என்று அவர் சொல்லக் கேட்டிருக்கிறாள். கண்ணெல்லாம் குரோதமாக அவரைப் பார்க்கிறபோது நெருஞ்சிச்செடிதான் நினைவில் வரும். வழியோடு போகிறவர்களைப் பிடித்திழுத்து அதுதான் வம்புபண்ணும். கொழுவிக்கொண்டால் பிடுங்கி எடுத்தபிறகும் வலிக்கும்.

பெரியம்மா ஒரு அற்புதமான மனுசி. சமையல் நேரம் போக மிகுதி நேரம் புத்தகம் படித்துக்கொண்டிருப்பாள். அயலிலிருந்து வம்பு பேச வருகிற பெண்கள் வருத்தத்தோடு திரும்பிப்போக வேண்டியிருக்கும். எவரையும் குத்திப் பேசத் தெரியாது. பாரதிக்கு பெரியம்மாதான் ஆதர்சம். பெரியம்மாவும் அவளில் பிரியமான பிரியமில்லை. கோழிக்குழம்பிலிருந்து எல்லாமே ஒரு கிண்ணத்தில் பாரதிக்கென தனியே எடுத்துவைத்திருப்பாள். பெரியப்பாவின் வார்த்தை அம்புகள் தைத்த இடங்களில் பெரியம்மாவின் அன்பு மருந்தாய் வழியும். அன்பை அலட்டிக்கொள்ளாமல் வார்த்தை வார்த்தையாய் கோர்த்துச் சொல்லாமல் கண்களால் வெளிப்படுத்தும் அண்ணனின் குணம் பெரியம்மாவிலிருந்துதான் வந்திருக்க வேண்டும்.

“மனோன்மணி”

‘இப்போதாவது கூப்பிட்டார்களே’என்று எஞ்சியிருந்தவர்களின் மீது ஒரு புன்னகையை வீசிவிட்டு அந்தப் பெண் போனாள். இப்போது பாரதியோடு சேர்த்து நான்குபேர் மட்டுமே எஞ்சியிருந்தார்கள். மற்ற மூன்று பெண்களும் ஏற்கெனவே அறிமுகமானவர்கள் போல… பெயர் கூப்பிடும்போதில் கலைந்த கதையின் நுனியைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தார்கள்.

பாரதிக்குள் பயம் அலைபுரளத் தொடங்கியது. ‘அண்ணன் அப்படிச் செய்கிறவரில்லை’என்று சமாதானப்பட்டுக்கொண்டாள். அண்ணனுக்கு கடவுள் பக்தி அதிகம். நீதி நியாயம் பார்ப்பவர். என்னதான் வேலையென்றாலும் எங்கே இருந்தாலும் ஊர்த்திருவிழாவுக்கு வந்து சேர்ந்துவிடுவார். வேலை கிடைத்து மூன்று ஆண்டுகள் வரை அவருக்குக் கல்யாணமாகவில்லை. இளமஞ்சள் பட்டு மேலங்கி அணிந்து பட்டுவேட்டி புரளப் புரள அவர் கோயிலுக்குள் நடந்த பாதையெல்லாம் கல்யாணத்திற்குக் காத்திருக்கிற உறவுக்காரப் பெண்களின் கண்கள் விழுந்துகிடந்தன. தேவேந்திர அண்ணனுக்கு கறுப்பில் வார்த்த களையான முகம். பெரிய வேலையில் சேர்ந்தபிறகு அந்தக் கறுப்பில் ஒரு மினுமினுப்பு படர்ந்துவிட்டது. எங்கெங்கோவிருந்தெல்லாம் சம்பந்தம் பேசிவந்தார்கள். பெரியப்பா ஓடும் மீன்களை ஓடவிட்டு உறுமீனுக்காகக் காத்திருந்தார்.

அவருடைய எதிர்பார்ப்பு முதன்முதலாகப் பொய்த்துப்போனது அண்ணனின் கல்யாணத்தில்தான். தன்னோடு வேலை பார்த்த பெண்ணை அண்ணன் காதலித்தார். அவளையே கட்டிக்கொள்வேன் என்று பெரியப்பாவின் கொக்கைப்போல ஒற்றைக்காலில் நின்றார். பெரியப்பாவோ இரண்டுகாலிலும் நின்று மன்றாடிப் பார்த்தார். கடைசியில் அண்ணனின் பிடிவாதம்தான் வென்றது. உயரமாய் களையாய் எல்லோரையும் அரவணைத்துப்போகிற பண்பாய் மதுமிதா அண்ணி வீட்டிற்குள் வந்தாள்.
பெரியப்பாவான பெரியப்பாவையே எதிர்த்து காதலித்த பெண்ணையே கல்யாணம் செய்துகொண்ட அண்ணனை பாரதி மனசுக்குள் கொண்டாடினாள். அதன் பிறகு ஒரு படி மதிப்பு உயர்ந்துதான் போயிற்று. கூடப் பிறக்க கொடுத்து வைக்கவில்லையே என்ற ஆதங்கம் தோன்றியது அப்போதுதான்.

“எங்கண்ணன் பெரிய உத்தியோகம் தெரியுமா?”
"உங்கண்ணனா... அவரு எதோ மெக்கானிக் இல்ல...?"
"இது எங்க பெரீப்பா மகன்"
"ஓ....!"
சுருதி இறங்கிய குரல்களிடம் அண்ணனின் பெருமைகளைச் சொல்லியபடியிருப்பாள். 'அவ்ளோ நல்லவரா அவர்?'கேட்கும் வரை விடமாட்டாள்.

அண்ணனுக்கு ஒரே மகள். ஏராளமான சொத்துப் பத்தை ஆள ஒரு ஆண் வாரிசு இல்லையே என்று அவர்களுக்குக் கவலைதான். மகளுக்கு காலையிலிருந்து மாலைவரை படிப்பு… படிப்புத்தான். பிறக்கும்போதே வரம்பெற்று வந்த பிள்ளை அது. குணத்தில் அப்பனையே கொண்டிருந்தது.

அவளுக்குத்தான் இப்போது சாமத்தியச் சடங்கு நடக்கிறது. பெரியப்பா குடும்பம் ஊர்பெயர்ந்து போய் நகரத்தில் பெரியவீடாக வாங்கித் தங்கிவிட்டார்கள். பாரதியின் கல்யாணத்திற்கு ஊருக்கு வந்துபோனபிறகு திருவிழா தவிர்த்து அந்தப் பக்கம் தலைகாட்டவில்லை. கல்யாணத்தின்போது பாரதியின் கையில் அண்ணன் ஆயிரம் ரூபாய் கொடுத்தார். அவள் அதை நீண்டநாட்களுக்கு செலவழிக்காமல் பொத்திப்பொத்தி வைத்திருந்தாள். ஏதேனும் வேலையாக நகரத்திற்கு வந்தால் தன் வீட்டில் தங்கிக்கொள்ளலாம் என்று அண்ணன் சொன்னார். மது அண்ணி ஒரு சுற்றுப் பெருத்திருந்தாள். ஒவ்வொரு கையிலும் குறைந்தது பத்து தங்கக் காப்புகளாவது இருக்கும். ஊரில் அண்ணனுக்கும் மனைவிக்கும் மரியாதையான மரியாதை. ‘வீட்டுக்கு வந்திட்டுப் போங்க’என்று கண்ணில் பட்ட எல்லோரும் அழைத்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிரித்துச் சிரித்து ஆளுக்கொரு சமாதானம் சொல்லிவிட்டு காரேறிப் போனார்கள்.

“ஆனந்தி”
அந்தப் பெண் கர்மசிரத்தையாக பெயரை வாசித்து நால்வரில் ஒருத்தியை அழைத்துப்போனாள்.

பாரதியின் வயிற்றுக்குள் அமிலப்பந்து உருளவாரம்பித்தது. வந்ததற்கு தண்ணி வென்னிகூட குடிக்கவில்லை. காலையிலேயே ஆரத்தி எடுக்கவென பெரியம்மா அழைத்துவந்து விட்டுவிட்டாள். பசித்தது. வெளியே போய் பலகாரம் ஏதாவது சாப்பிட்டுவரலாமென்றால் அதற்குள் ‘பெயரைக் கூப்பிட்டுவிட்டால் என்ன செய்வது?’என்று யோசனையாக இருந்தது.
மற்ற இரு பெண்களும்கூட களைத்துப்போயிருந்தார்கள். முகத்தில் சலிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. பேச்சு ஓய்ந்துபோய் மேடை வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். எதேச்சையாகத் திரும்ப மண்டபத்தின் பின்புற வாயிலில் பெரியப்பா நின்று இங்கேயே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. தொலைவில் மின்னிய கண்களிலிருந்து எதையும் அறிந்துகொள்ள முடியவில்லை.

சாமத்தியச் சடங்குக்கு வரும்படி அழைப்பிதழ் அனுப்பியிருந்தார்கள். ஆளனுப்பிச் சொல்லவில்லையே என்று அம்மாவுக்கு உள்ளுக்குள் வருத்தந்தான். என்றாலும் தேவேந்திர அண்ணனின் குணத்திற்காக எல்லோரும் பெரிய கூட்டமாகக் கிளம்பிவந்திருந்தார்கள். அப்பா,அம்மா,அக்கா,அக்காவின் புருசன், அக்காவின் பிள்ளைகள் மூவர், அண்ணா, அண்ணி, அண்ணாவின் பிள்ளைகள் நால்வர், பாரதி, பாரதியின் புருசன், சித்தி, சித்தி மகள்கள் இருவர்… பன்னிரண்டு பேர் கொள்ளத்தக்க வண்டியில் பதினெட்டுப் பேர் இடித்து நெருக்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்கள். வரும்போது ஒரே பாட்டும் கூத்துமாக அமர்க்களப்பட்டது. அண்ணன் நகரத்திற்குள் அவர்களுக்கெனவே ஒரு வீடு ஒழுங்கு செய்திருந்தார். அண்ணன் எது செய்தாலும் அதிலொரு நேர்த்தி இருக்கும் என்று பாரதி தன் புருசனிடம் மெச்சிக்கொண்டாள்.

“நீங்க ரெண்டு பேரும் வாங்க”

பாரதியைத் தவிர்த்து மற்ற இரு பெண்களும் ‘அப்பாடா’என்று கிளம்பிப் போனார்கள். அவர்களிலொருத்தி பாரதியை பரிதாபமாக திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே போனாள். 'தனியா நிக்கிறியே'என்ற தயை தெரிந்தது.

கல்யாணமாகி நான்கு வருடங்களாகியும் பாரதியின் வயிற்றில் குழந்தை தங்கவில்லை. பாரதிக்கும் புருசனுக்கும் அது குறையாகவே தோன்றியதில்லை. அதையிட்டு ஒருநாளும் மனத்தாங்கல் கொண்டதுமில்லை. பாரதியின் அம்மாதான் புலம்பிக்கொண்டேயிருந்தாள். நேர்த்தி வைத்து விரதமிருந்தாள். ஏதாவது விசேடங்களுக்குச் சென்றுவந்தால் அம்மாவின் முகம் இருண்டுவிடும்.

“கல்யாணம் கட்டி ஒரு வருசம் ஆகேல்ல… தனபாக்கியம் மகளுக்கு ஒரு ஆம்பிளைப் பிள்ளை பிறந்திருக்கு”

பாரதி இப்போது தனியாக நின்றுகொண்டிருந்தாள். உள்ளுக்குள் திகைப்பாக இருந்தது. ‘பாரதி எங்கே?’என்று அண்ணன் தேடிக்கொண்டு வருவார் என்று உள்ளுக்குள் ஒரு குரல் சொல்லிக்கொண்டிருந்தது. அண்ணன் தவறு செய்கிறவரல்ல. புறக்கணிப்பதென்றால் என்னவென்றே தெரியாதவர் தேவேந்திர அண்ணன்.

நம்பிக்கையின் ஈரம் மிச்சமிருக்கும் கண்களால் மேடையைப் பார்த்தாள். ஆரத்தி எடுத்து முடிந்திருந்தது. பெரிய பெரிய ஆட்களெல்லாம் பரிசுப்பொருட்களோடு வந்து நின்று போட்டோவுக்குச் சிரித்துக் கைகுலுக்கிப் போனார்கள். நீண்ட வரிசை காத்திருந்தது.

“அண்ணனா... அண்ணனா…”மனசு நம்பமாட்டாமல் மறுகிக்கொண்டிருந்தது.

“மலடி… மலடி”என்று தாளம் பிசகாமல் யாரோ பாடுவது மாதிரியிருந்தது. ஒவ்வொரு மலடிக்கும் மேளம் டும்டும்மென்றது. நெஞ்சடைத்து தலைசுற்றியது. இயல்பாகவே மண்டபத்தின் பின்பக்கம் கண்திரும்பிற்று. பெரியப்பா அங்கே நின்று பார்த்துக்கொண்டிருந்தார். அந்தக் கண்களில் என்ன எழுதப்பட்டிருக்கிறதென்பதை நெருங்கிப்பார்க்க வேண்டியிருக்கவில்லை. இரையுண்ட பாம்பின் திருப்தி!

தன்னை யாராவது கவனிக்கிறார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்தாள். அவமானம் பிடுங்கித் தின்ன வெளிவாசலை நோக்கி நகர்ந்தாள். அண்ணன் வாசலில் யாருடையவோ கைகளைப் பிடித்துக்கொண்டு உரத்த ஒலியெழ சிரித்துக்கொண்டிருந்தார். பாரதியைக் கண்டதும் கண்ணில் துளி அசங்கியது. அண்ணனுக்குத் திடீரென்று வயசானது மாதிரியிருந்தது.
“சாப்பிடேல்லையா…?”என்றார்.

உள்ளே நாதஸ்வரம் உச்சஸ்தாயியில் ‘பீ… பீ…’என்றது. மேளம் போட்டியாக டும் டும்மென கொட்டி முழக்கியது.

பாரதி அண்ணனின் கண்களைப் பார்த்தாள். அவருடைய விலையுயர்ந்த பட்டுவேட்டியைப் பார்த்தாள். கழுத்தில் புரண்ட சங்கிலியைப் பார்த்தாள். ஏதேதோ வார்த்தைகள் அடிவயிற்றிலிருந்து கிளம்பி ஊர்ந்து தொண்டைக் குழிவரை வந்துவிட்டன. வயிறு புரட்டிக்கொண்டு வந்தது.

“வயிறு நிறைஞ்சு கிடக்கு”என்றாள்.

போகும் வழியெல்லாம் அம்மா சொல்லிச் சொல்லி அழுதுகொண்டிருந்தாள். சித்தியின் சமாதானக் குரல் நெடுநேரம் கேட்டுக்கொண்டிருந்தது. பிள்ளைகளோ சூழலின் கனம் தாளாமல் வெளியே பார்த்துக்கொண்டு வந்தார்கள். வரும்போதிருந்த மகிழ்ச்சி செத்துப்போயிருந்தது.
"கூப்பிட்டு செருப்பாலடிச்சுட்டாங்களே..."அப்பா பொருமிக்கொண்டிருந்தார்.

பாரதிக்கோ அண்ணனின் கண்களைப் பார்த்து ஓங்கிச் சிரித்துவிட்டு வரமுடியவில்லையே என்ற கவலை பயண நெடுகிலும்அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

குறிப்பு: பெயர்கள் மட்டுமே கற்பனை

11.10.2007

போலச்செய்தல்


ஒருபொழுதில் உக்கிரக்காளி
புயல்வழி மரமென்றாடுகிறாய்
தீ பொதிந்து நீயனுப்பும் வார்த்தைகளால்
தீய்ந்து கருகு மென் இதயம்
வெப்பம் காற்றை இடையறாது
வன்கலவும் இவ்வூரின்
ஆளரவமற்ற பின்னிராச் சாலைகளில்
நினைவு பிடரியுந்தி விரட்ட
என்னைக் கரைத்தலைவேன்.
சிகரெட்டின் நுனி தசை தீண்டுகையில்
உன் உதடு கவ்வும் உச்சமடி தோழி!
தேசாந்தரியாகி
உண்டக்கட்டிக்கு கோயில் வாசலிலே
காத்திருந்ததற்கு கைமேல் பலன்!

எனதிந்தக் காயங்களின் மீது
கண்ணீரை ஊற்றுகிறாய்
ஒரு கணத்தில் உயிர்பெற்றிணைந்தன
தீய்ந்த திசுக்கள்
காதல் மதுவருந்திக் கண்கிறங்கி
‘இந்தக் கணமும் இறப்பேன்’என்றேன்.
ஒரு குழந்தையென
மடிசுருளும் என்மீதில்
மென்முலை பொதியப் பொதிய
இறுக்குகிறாய்
இற்று மறைகிறது புறவுலகு

தாயே!நின் வயிற்றில்
ஒரு துளியாகிச்
சூல்கொள்ளும் வரமன்றி
இனி யாதும் வேண்டேன்!

என்னவிதுவென புருவம் நெரிக்கவேண்டாம். ஒருவர்போல் எழுதிப் பார்த்தேன். வேறொன்றுமில்லை.

11.09.2007

தீபாவளி(லி)


தொடவியலாத உயரங்களை நோக்கி
எய்யமுடிந்த மகிழ்ச்சி
வானத்திலும் விழிகளிலும்
ஒளித்துளிகளாகச் சிதறுகின்றன.
நெருப்பும் கந்தகமும்
கூடும் உச்ச கணத்தில்
உள்ளுறங்கிக் கிடந்த மூர்க்கம்
வெடித்து ஒருவழியாய் வடிகிறது.
திடீர் விபரீதங் கண்டு
பதறிக்கிடக்கும் வீதிகளில்
அந்தரித்து அலைக்கழிகின்றன நாய்கள்.
நாளைவரை பிழைத்திருக்க
கையேந்துகின்றன செவிகள்.
வெறுங்கையுடன் கிராமம் திரும்பவியலாத
வேலையற்ற பிள்ளைகளின் கண்ணீர்
ஊர்ந்துகொண்டிருக்கின்றது நடைபாதைகளில்.
பண்டிகை நுனியில் தட்டுப்பட்டு
பொருக்குடைந்த காயங்களுடன்
மகிஷாசுரமர்த்தனீ!
இந்த நாள் உறங்கும்வரை
விழித்திருக்கிறோமடி!

11.03.2007

சேவிக்க மாட்டேன் சிறீரங்கப் பெருமானே!



முகட்டு வளைக் காப்பாய்
மூலைக்குள் சரசரப்பாய்
வாளியின் பின்புறத்தில்
வழுவழுத்துக் கிடப்பாய்

மரணத்தின் நதி வடிவாய்
நெளிந்துலவும் விதியுருவாய்
படைத்தவனைப் பழித்தபடி
படுத்திருப்பாய் தீங்கில்லை

தன்னினத்தைத் தூற்றி
புண்ணிலே எரி மூட்டும்
பொய்மையாளர் மை
போலில்லை விடம் நீயும்

சிறீரங்கப் பெருமானே!-உனை
சேவித்த கையிறக்கி
வசைபாட வைத்தானோர் பாவி!
வாழட்டும் அவனுடைய நீதி!

பிற்குறிப்பு: 'உள்குத்து' இல்லை... உள் 'கொத்து'தான்.