4.25.2010

எனக்கு ‘மதம்’பிடிக்காது!


தீபாவுடைய ‘சிதறல்கள்’வலைத்தளத்தில்,‘எலிஃபென்ட் சாமியும் தாடித் தாத்தாவும்என்ற பதிவை வாசித்தேன். மதம் தொடர்பான அந்தப் பதிவு எளிமையான அழகோடு இருந்தது. ‘வாங்க வந்து கொஞ்சம் பக்தி வாங்கிட்டுப் போங்க’என்று அழைக்காமல், ‘இதாங்க எஞ் சாமி’என்ற யதார்த்தப் பகிர்தல் பிடித்திருந்தது. அதில் தொடர்பதிவு போட என்னையும் அழைத்திருந்தார். தீபாவுக்கு என் நன்றி.


கொஞ்சநாட்களாக எனது வலைப்பூ ஒரே சோகமயமாக இருப்பதாக நண்பர்களில் ஒருவர் குறி(குறை)ப்பிட்டிருந்தார். சர்ச்சைகளையும் சோகத்தையும் சில நாட்கள் ஒத்திவைத்துவிட்டு, முகஇறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு ‘ஜாலி’யாக எழுத நினைத்திருக்கிறேன். ‘சோகத்தை ஒத்திவைக்கிறதாவது’என்று, வில்லங்கம் வளர்ப்பதே வேலையாக இருக்கும் அனானி வந்து பின்னூட்டம் போடாமலிருக்கவேண்டுமென்பதே, இருக்கிறாரா இல்லையா என உறுதியாகத் தெரியாத கடவுளிடம் வைக்கும் பிரார்த்தனை. அனானியும் பாவம்! ஏதாவது ‘அவல்’கிடைக்காதா என்று நாள்தோறும் வந்து அலைந்துவிட்டுப்போகிறது. அவலை (அவளை அல்ல) நினைத்து உரலை இடிக்கிறது.

எங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தின் முகப்பில் பெரியாருடைய வாசகமொன்று எழுதப்பட்டிருக்கிறது. ‘பக்தி வந்தால் புத்தி போய்விடும்; புத்தி வந்தால் பக்தி போய்விடும்’ என்பதுவே அது. அவ்வாசகத்தைக் கண்ணுறும்போதெல்லாம் ஒரு குறுஞ்சிரிப்பு முகம் முழுக்கப் பரவும். ‘பெரியாரே! நீங்கள் மகாகுசும்புக்காரர்’ என்று செல்லமாக மனதுள் சொல்லிக்கொள்வேன். பெரியாரோடு நெருக்கமாவதற்கு உந்துதலாக அமைந்த ‘வீடு தேடும் படலத்திற்கு’நன்றி.

சிறுவயதிலிருந்தே ஒரு கெட்டபழக்கம். அதாவது யாராவது எதையாவது ரொம்பவுந்தான் தூக்கிப் பிடித்தால், ‘அதை’நான் மறுதலித்துவிடுவேன். அப்படி மறுக்கப்பட்டவையும் வெறுக்கப்பட்டவையும் நிறைய உண்டு. ஒரே விதிவிலக்காக அப்பாவும் அண்ணாவும் புத்தகங்களுக்குள்ளேயே தலையைப் புதைத்துக்கொண்டிருந்தபோதிலும், அவற்றில் எனக்கு ஒவ்வாமை ஏற்படவில்லை. அம்மா ஒரு சைவப்பழம். நமக்கெல்லாம் புத்தகங்கள்போல அவருக்கு சாமி. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விரதம் மற்றும் கோயில் நிச்சயமாக உண்டு. அந்நாட்களில் வீடு கழுவப்பட்டு, சாம்பிராணிப் புகை சுழன்றுகொண்டிருக்கும். அம்மா நடுங்கிய குரலில் தேவாரம் கதைத்துக்கொண்டு வேலைகளைச் செய்வார். அம்மா எங்களை அதிகம் சோதிக்கவிடாமல், அப்பா சுசீலாவையோ சௌந்தரராஜனையோ பாடவிட்டுவிடுவார். பக்திப்பாடல்கள் வீடெல்லாம் கரைபுரண்டு ஓடுகையில் சாமி மீது கொஞ்சூண்டு பக்தி வந்து மெல்லிய பரவசமாக உணர்வோம். ‘புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே..’என்ற பாட்டு எனக்கு மிகவும் பிடித்தது. செவ்வாய் தவிர, வெள்ளிக்கிழமை விரதம் பிடிப்பதற்கு ஒத்திகையாக வியாழக்கிழமையும் மச்சம் (புலாலுணவு) தவிர்க்கப்படும்.

நாய், பூனைகள் உட்பட வீட்டிலுள்ள அனைவரும் அந்நாட்களில் அம்மாவுடன் சேர்ந்து விரதம் இருந்தாக வேண்டிய நிர்ப்பந்தம். அப்பா மகா நக்கல்காரர். அதிலும் அம்மாவை நக்கலடிப்பதென்றால், ஒரு முழுப்போத்தல் சாராயத்தை அவரிடம் அப்படியே தூக்கிக்கொடுத்து ‘உங்களுக்கேதான்’என்று சொல்வதற்கிணையான ஆனந்தம். ‘ஒரு குடிமகனின் சரித்திரம்’என்ற எனது பதிவில் இடம்பெற்ற மணியம் மாமாவில் அப்பாவின் சாயலும் இருக்கும். அப்பா சொல்வார்:

“இன்று பொன்னியும் விரதம். ஆனா அது கொம்மாவைப்போல நல்ல சீலையாப் பாத்து உடுத்துக்கொண்டு கோயிலுக்குப் போகேலாது”என்று.பொன்னி என்பது எங்களது நாயின் பெயர். அதற்கு ஏழு வயதாகிறது. “கொம்மா சொர்க்கத்துக்குப் போகேக்குள்ள பொன்னி உட்பட நாங்கள் எல்லாரும் அவவின்ரை வாலைப் பிடிச்சுக்கொண்டு சொர்க்கத்துக்குப் போயிடலாம்.”என்பார்.

தற்கொலை செய்து இறந்துபோன எனது சகோதரியின் நினைவுநாளன்று அம்மா மோட்சார்ச்சனை (மோட்சம் என்றால் சொர்க்கமென அறியாதவர் அறிக) என்றொரு அர்ச்சனை செய்வார். அதற்கு சில நூறுகள் செலவாகும். அந்த நூறுகளைத் தன்னிடம் தராமல் ஐயரிடம் அம்மா கொடுப்பதில் அப்பாவுக்கு வருத்தமான வருத்தம். அவர் சொல்வார்:

“எவ்வளவு காசுக்கு மோட்சார்ச்சனை செய்யிறமோ அந்தக் காசுக்கு அளவா சொர்க்கத்துக்குப் பக்கத்திலை போகலாமாம்.”

அம்மாவின் கனவில் சாமிகளாக வருவர்.

“நல்ல கடுஞ் சிவப்பு நிறத்திலை சீலை கட்டிக்கொண்டு நெத்தியிலை பெரிய குங்குமப்பொட்டும் வைச்சுக்கொண்டு தலையை விரிச்சுப்போட்டு அவ வாசலிலை வந்து நிக்கிறா… சிரிப்பெண்டால் அப்பிடியொரு சிரிப்பு… வாங்கோ எண்டு கூப்பிடுறன். வாசலிலையே நிக்கிறா…”என்று அம்மா மெய்சிலிர்க்கும் பரவசத்தோடு கனவை மீள்ஞாபகித்துக்கொள்வார்.

இளம்வயதில் தன்னை மோகினிப்பேய்கள் துரத்தியதாக அப்பா பதிலுக்குக் கதைவிடுவார்.

கடவுளரும் பேய்களும் விருத்தெரியாத சின்னவயதில் சுவாரசியம் தந்தார்கள். இப்போதில்லை.

அம்மாவின் அதிதீவிரமான பக்தியும் அதைக்குறித்த அப்பாவின் பார்வையும் மதம் குறித்த எனது சிந்தனைகளை வடிவமைத்தன. (இதைக் கட்டமைத்தன என்று சொல்லவேண்டுமோ…) சடங்குகள் பெரும்பாலும் பாசாங்குகளாக இருக்கக் கண்டோம். தீபா தனது பதிவில் குறிப்பிட்டிருந்ததைப் போல திருவிழா நாட்களில் கோயில்பக்கம் மறந்தும் போவதில்லை. பளபள சேலைகளும் நகைகளும் அர்ச்சகர்களின் பாரபட்ச பந்தாக்களும்… அர்ச்சனைச் சீட்டுக் கட்டணத்தொகைக்கேற்ப காட்டப்படும் தரிசனங்களும் கழுத்தில் விழும் மாலைகளும்… ஏழைகளின் கடவுள் இல்லை அவர்! இதை நான் திருச்செந்தூரில் கண்ணால் பார்த்து வெதும்பியிருக்கிறேன். எங்களுக்கு முன்னால் ஏழ்மைக்கோலத்தில் பரட்டைத் தலையோடு ஒரு பெண் திருநீறுக்காக கையை நீட்டிக்கொண்டே இருந்தார். நிமிடங்கள் கழிந்தும் அர்ச்சகரின் கண்களில் அந்தப் பெண் தட்டுப்படவேயில்லை. எங்கள் கையில் இருந்த திருநீறை நீட்டியபோது வாங்கி நெற்றியில் வைத்துக்கொண்டு கல்லில் உறைந்திருந்த சாமியை ஒரு ‘பார்வை’பார்த்துவிட்டுப் போனார். கலங்கியிருந்த அந்தக் கண்கள் இன்னமும் நினைவிலிருக்கின்றன. ‘கல்லே… உனக்கும் கண்ணில்லையா?’என்ற சீற்றத்தை அதில் பார்த்தேன்.

கனடாவில் நான் இருந்தபோது கதவுதட்டும் மதவியாபாரிகளை என் கணவர் வாசலிலேயே நிறுத்தி அனுப்பிவிடுவார்.

“மதத்தினால் எத்தனை நாடுகளில் எவ்வளவு மனிதர்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா…? எங்களுக்கு மதம் அவசியமில்லை”என்று, அவர்களிடம் அவர் சொல்லவும் தவறியதில்லை.

சாதியும் மதமும் இல்லாமல் இப்பூவுலகில் நிச்சயமாக வாழ்ந்துவிடமுடியும் என்றே நினைக்கிறேன். ‘விரதம் பிடி… விரதம் பிடி’என்று சொல்லிக் களைத்த அம்மா இப்போது ‘வெள்ளி, செவ்வாயிலும் மச்சம் சாப்பிடுறியாமே…’என்று ஆதங்கத்தோடு தொலைபேசியில் கேட்குமளவுக்கு இறங்கிவந்திருக்கிறார். விரதம் என்பது உடலின் சீரண உறுப்புகளுக்கு ஓய்வு என்பதாகத்தானே இருக்கமுடியும்? அது தன்னை வருத்துவதாக மாறுவதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? அம்மாவின் பேச்சைக் கேட்டு விரதம் பிடித்த நாட்களில் எல்லாம் சாப்பாட்டு நினைவாகவே இருக்கும். ‘எப்போதடா இலையின் முன் அமர்வோம்…’என்ற நினைவன்றி வேறேதும் இருந்ததில்லை.

“எலும்பைக் கழிச்சுப் பாத்தால் பதினைஞ்சு கிலோவும் வராது. வாயால் இயங்குற ஆள்… விரதமெல்லாம் ஏன்… மனசு சுத்தமாயிருந்தால் போதும்”என்ற வார்த்தைகளை ஆஸ்பத்திரியில் வைத்து அப்பா சொன்னார். ‘கந்தசஷ்டி பிடிக்கிறேன் பேர்வழி’ என்று ஆறு நாட்களும் விரதமிருந்து மயங்கிவிழுந்துகிடந்த அம்மாவைப் பார்த்தபடி சொன்ன வார்த்தைகள் அவை.

ஆனாலும், சாமியை அப்படியொன்றும் அம்போவென்று விட்டுவிட என்னாலும் முடிந்ததில்லை. சாமி என்னை அம்போவென்று விட்டுவிடுமோ என்ற உள்ளார்ந்த பயம் காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு நாட்களும் காலையில் எழுந்ததும் அம்மன் முகம் பார்த்து ஒரு நொடி வணக்கம் போடுவதுடன் எனது வழிபாடு முடிந்தது. சாப்பிடப் போவதன் முன் சாமிக்கு அவசியம் நன்றி சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஏனெனில், பசி என்பது அதிபயங்கரமானது என நான் அனுபவபூர்வமாக அறிந்திருக்கிறேன். என்னிடம் ஒரு அம்மன் படம், ஒரு அன்னைவேளாங்கன்னி சொரூபம் (மூன்றங்குல உயரம்)இருக்கின்றன. நான் மதுரை போனால் இரண்டுபேரும் என்னோடு வருவார்கள். சேலம் போனால் சேலத்திற்கு வருவார்கள். கனடா, ஈழம் இங்கெல்லாம் இந்த இரண்டு தோழியரும் பயணச்சீட்டு எடுக்காமல் என்னோடே பயணிப்பார்கள். தாங்கமுடியாத தனிமையும் துயரமும் பொங்கியெழும் நேரங்களில் மனிதர்களிடம் அதைப் பகிர்ந்துகொள்வதில்லை. ஓரிரு நிமிடங்கள் இந்த இரண்டு பேரிடமும் சொல்லியழுதால் மனசு இலேசாகி அடுத்த வேலை பார்க்கப் போய்விடுவேன். துக்கம் கண்ணீராக வெளித்தள்ளப்படும்போது மனம் இலேசாவது எல்லோருக்கும் இயல்பே. எனக்கென்னவோ ஆண் சாமிகளைப் பிடிப்பதில்லை. அதற்கு பெண்ணியம் ஆணியம் மண்ணீயம் என்ற உள்ளர்த்தங்கள் ஒன்றும் கிடையாது.

திருவிழா தவிர்ந்த ஏனைய நாட்களில் கோயில்கள் அத்தனை அழகாயிருக்கும்! விபூதியும் பூக்களும் கற்பூரமும் கலந்தொரு வாசனை வீசும் பிரகாரத்தின் படிகளில் அமர்ந்து அரசிலைகள் அசைவதைப் பார்த்துக்கொண்டேயிருக்கப் பிடிக்கும். மனதுள் பெருவெளியொன்று விரிந்து விரிந்து செல்லும். உலகத்தின் கசடுகள் எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றையும் எல்லோரையும் நேசிக்கவேண்டுமென்ற தாபம் பெருகிடும் நேரமது. அந்த அமைதிக்குப் பெயர் என்னவென்று அறிந்துகொள்ள முற்பட்டதில்லை. ஒருவேளை அந்த அமைதியின் பெயர்தான் கடவுளோ…?

மதத்தின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களை, படுகொலைகளை, சித்துவேலைகளை, மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி நடக்கும் கொள்ளைகளைப் பார்க்குந்தோறும் மதத்தைத் தூக்கியெறியத் தோன்றுகிறது. அதேசமயம், ஏதோவொரு சக்தி நமக்கு மேல் இருக்கிறது; அதுவே நம்மை இயக்குகிறது என்ற பயம் இல்லாமல்போவது ஆரோக்கியமானதல்ல; அப்படி ஒன்று இல்லையெனில் தறிகெட்டலைவோம் என்றும் தோன்றுகிறது. சரி-பிழை என்ற இருவேறுபட்ட மனோநிலைகளில் தத்தளிப்பது எல்லோருக்கும் நேரக்கூடியதே.

நாத்திகவாதி அன்றேல் ஆத்திகவாதி என்று நம்மை முத்திரை குத்திக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? ‘நான் இன்னார்தான்’என்று பிரகடனப்படுத்தவேண்டிய தேவை இல்லை. இந்த வாழ்க்கை விடுவிக்கமுடியாத புதிர்களைக் கொண்டது. அதனாலேயே அது சுவாரசியமானதாகவும் இருக்கிறது.

பெரியாரைப் படிக்கவாரம்பித்திருக்கிறேன். அந்த மிகப்பெரிய ஆளுமையிடமிருந்து நான் நிறையத் தெரிந்துகொள்வேன். யார் கண்டது? எதிர்காலத்தில் நானொரு மிகச்சிறந்த கடவுள்மறுப்பாளியாக மாறவும்கூடும். ‘நாத்திகன்…நாத்திகன்…’என்கிறார்கள். கடவுளை மறுக்கும் பெண்களை எப்படி அழைப்பது? இந்த மொழி…! இந்த மொழி…!! இந்த மொழி!!!

4.22.2010

அம்மா! வரவேண்டாம்


கடற்படை காலாட்படை
விமானப்படை வேவுப்படை
நாலாபுறம் எல்லைப்படை
எல்லாம் இருந்தென்ன?
தாய்க்கு எங்கள் தாய்க்கு
எழுபத்தொன்பது பிராயம்
இந்திய இறையாண்மைக்கு
அவரால் நேருமாம் அபாயம்!

மனிதம் மறந்தீரே
மருந்தை மறுத்தீரே
ஏனிப்படி இழிந்தீர்
அழியாப் பழி சுமந்தீர்

மானத் தமிழ் மகனை ஈன்ற
எம் தாய் வெடி குண்டா?
வன்மம் வளர் அரசே!-உன்
நோய்க்கோர் மருந்துண்டா?
காந்தி பிறந்தாராம்-இங்கு
புத்தர் மலர்ந்தாராம்
கருணை சிறிதில்லா மண்ணில்
கல்கி பிறப்பாராம்!!!

மனிதம் மறந்தீரே
மருந்தை மறுத்தீரே
ஏனிப்படி இழிந்தீர்
அழியாப் பழி சுமந்தீர்

'அறியோம் யாம் அறியோம்'என
சொரிவார் பல பொய்கள்
சரியோ இது முறையோ எனில்-கலைஞர்
அதற்கும் எழுதுவார் அஞ்சல்.

தமிழை ஈன்ற தமிழே-எங்கள்
தாயுன் மலர்ப்பாதம்
இம்மண்ணில் படவேண்டாம்-விழி
நீரில் எழும் தீயில் அநியாயம் வெந்துபோகும்!

4.12.2010

தமிழிசை! நான் உன்னைப் பார்க்க விரும்பவில்லை....அவளை நான் முதன்முதலில் பார்த்தபோது, நான்கு வயதைத் தொட அவளுக்கு இரண்டு மாதங்களிருந்தன.அடர்ந்த தலைமயிர் சுருள்சுருளாக முகம்மறைத்துத் தொங்கிக்கொண்டிருக்க, இருபது வயது மதிக்கத்தக்க இயக்கப் பெடியனொருவனின் கைகளில் பெண்டுலம் போல ஆடிக்கொண்டிருந்தாள். தன்னைக் கீழே இறக்கிவிடச்சொல்லி கைகால்களை ஒருகணமேனும் நிறுத்தாமல் ஆட்டிக்கொண்டிருந்தாள்.


"இந்தப் பிள்ளையைச் சமாளிக்கிறதெப்பிடி எண்டு எனக்குத் தெரியேல்லை அக்கா..."என்று சிரித்தபடி தன் தாய் புதியவளான என்னிடத்தில் முறையிடுவதை வெட்கம் பரவிய கண்களுடன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொள்ளவும் அவள் தவறவில்லை.ஆனாலும், தன்னை இறக்கிவிடச்சொல்லி அடம்பிடிப்பதை நிறுத்தினாளில்லை.

அவள் ஒரு பட்டுப்பந்து அல்லது பிறந்து சில நாட்களே ஆன ஆட்டுக்குட்டி என்று சொல்லலாம். அப்படியொரு துள்ளும் சொல்லால் அவளைக் குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். அந்த இளம் கால்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்கமுடியாமல் களைத்துப்போய் இடுப்பில் கைகளை வைத்தபடி பிரமித்தாற்போல நிலா நிற்பது இப்போதும் எனக்கு நினைவிலிருக்கிறது.

"நானும் எத்தினையோ பிள்ளையளுக்குப் பயிற்சி குடுத்திருக்கிறன். இவளொருத்தியை என்னாலை சமாளிக்க முடியாமல் இருக்குப் பாருங்கோ..."

அந்த இளம்தாயின் மஞ்சள் முகத்தில் அந்நாட்களில் பொலிந்த தாய்மையின் கனிவும் செல்லக்கண்டிப்பும் மறக்கக்கூடியனவல்ல. அதுவொரு மகிழ்ச்சியும் பெருமையும் சின்னதாய் கோபமும் கலந்த அழகான சலிப்பு.

வெயில் கொழுத்தும் இதேபோன்றதொரு பின்மதியநேரத்தில் எனக்குப் பக்கத்தில் படுத்திருந்து என்மீது ஒரு காலைத் தூக்கிப் போட்டபடி தமிழிசை எனக்கொரு கதை சொன்னாள்.

நரியைக் காகம் ஏமாற்றிய கதை!

"காகம்தானே ஏமாந்தது தமிழிசை... நரி ஏமாந்ததெண்டு நீங்கள் சொல்லுறீங்கள்... அதெப்பிடி?"கேட்டு வைத்தேன்.

"இது நான் எழுதின கதை அன்ரி"
அவள் நான் நம்பவில்லையோ என்ற யோசனையோடு என் கண்களைப் பார்த்தாள்.

"ஓ அப்பிடியா... அப்பிடியெண்டால் சரி"


குதூகலம் அவளது பட்டுக்கன்னங்களில் பரவுவதை நான் பார்த்தேன்.

பத்துக்கும் மேற்பட்ட கதைகளை அவள் தன்வசம் வைத்திருந்தாள். எல்லாம் முடிவு மாற்றப்பட்ட கதைகள். அவளுக்கு செம்மையாக, கோர்வையாகக் கதைசொல்லத் தெரிந்திருந்தது. கேட்டுக்கொண்டிருக்கிற ஆள் அடிக்கடி 'ம்'கொட்டவேண்டும்.

"பிள்ளைக்கு ஆர் இப்பிடிக் கதையெல்லாம் சொல்லித் தாறது?" கொஞ்சம் நெருங்கிவிட்டேனென்று தோன்றிய ஒருநாளில் இரகசியமாகக் கேட்டேன்.

அவளது முகத்தில் ஒரு குறுஞ்சிரிப்புப் படர்ந்தது. பெரிய வட்டக் கண்களில் குழந்தைகளால் மட்டுமே காணக்கூடிய உலகம் விரிந்தது. சின்னஞ்சிறிய உலகுக்கே உரித்தான இரகசியம்... அவள் பதில் சொல்லவில்லை.
நிலாவிடம் சொன்னபோது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.

"அவள் அப்பிடித்தானக்கா... எல்லாக் கதையளையும் மாற்றி மாற்றிச் சொல்லுறாள். ஒருவேளை அவள் உங்களைப் போல எழுதக்கூடிய ஆளா வரக்கூடும்"பெருமிதத்தில் மேலும் அழகாகத் தெரிந்தாள் நிலா.

--- --- ---
சண்டை முற்றி மாத்தளன் பகுதியில் சனங்கள் ஒதுங்கியபோது, நிலாவோடு தொலைபேசியில் பேசக் கிடைத்தது. என்னையறியாமல் முதல் எழுந்த கேள்வி தமிழிசை பற்றியதாக இருந்தது.

"தமிழிசை எங்கை நிலா?"

"போன மார்கழி மாசமே அவளை அம்மா, தங்கச்சியோட அனுப்பிப்போட்டம் அக்கா"குரலில் கண்ணீர் வழிந்தது.

"நீங்கள்...?"

"தமிழை அனுப்பினதே இவருக்குப் பிடிக்கேல்லை... நான் போகமாட்டன்।என்ன நடந்தாலும் எங்கடை சனங்களோடைதான் வாழ்வோ... சாவோ..."

துப்பாக்கி வேட்டுச் சத்தம் அவளை வழிமொழிந்தது. குண்டுகள் நிலமதிர விழுந்து வெடிக்கும் ஓசை கேட்டது.

"அக்கா! பிறகு எடுங்கோ... நான் போறன்"


கடைசிக் கதை அதுதான்.மே மாதம் - வாளேந்திய சிங்கமும் தூணேந்திய சிங்கமும் ட்ராகனும் திட்டமிட்டு வன்னியைத் துடைத்தழித்தன. பிறகொருநாள் யாரோ சொன்னார்கள் அவள் 'போய்விட்டதாக'. அவரும் போனார். ஆறேகால் அடி உயரமான ஆகிருதி சீருடையில் சிதைந்துகிடந்ததை நான் இணையத்தளங்களில் பார்த்தேன்.

மனம் செத்துப்போவதென்றால் என்னவென்று எங்களுக்கு இப்போது நிதர்சனமாகத் தெரிகிறது.

எளிமையும் புத்திசாலித்தனமும் கனிவும் தீரமும் நிறைந்த என் தோழி இனி இல்லை என்கிறார்கள். அவளது விருந்தோம்பலை நான் இனிமேல் அனுபவிக்கமாட்டேன் என்றும் அதை நான் நம்பித்தானாக வேண்டுமென்றும் சொல்கிறார்கள். நான் மனம் பிறழ்ந்துபோவேனோ என்று அஞ்சுகிறேன். அவளும் நானும் தனித்திருந்து எங்கள் விடுதலையைப் பற்றி நம்பிக்கையோடு கதைத்த நிலாக்கால இரவுகளை நான் என்றென்றைக்குமாக இழந்துபோனேனா? தமிழிசை சொன்ன கதைகள் போல யாவும் தலைகீழாகிப் போனதா?

"நிலா! இனி உங்களை நான் பார்க்கமாட்டேன் என்று இவர்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை. போர்க்களங்களில் அதிசயங்கள் நடக்கத்தான் நடக்கின்றன. நீங்கள் தப்பி எங்காவது உயிருடன் இருப்பீர்கள் என்பதை இப்போதும் நான் மனப்பூர்வமாக நம்புகிறேன். நான் உங்களைக கடைசியாகப் பார்த்த அன்று பச்சை நிறத்தில் 'பற்றிக்'சட்டை அணிந்து கண்களில் பிரிவுத்துயர் பெருக்கெடுக்க வாசற்கடப்படியில் நின்று கையசைத்தீர்கள். நீங்கள் எங்கோ உயிருடன் இருக்கிறீர்கள். வாஞ்சையால் மலர்ந்த முகத்துடன் 'என்ரை பிள்ளைகள்'என்று உங்கள் போராளிகளைப் பற்றி நீங்கள் என்னோடு கதைக்கும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்"

தமிழிசை! உன்னைப் பற்றிய நினைவுகளிலிருந்து நான் தப்பியோடிவிட நினைக்கிறேன். ஒரே ஆறுதல் நீ எங்கோ உயிரோடு இருக்கிறாய் என்ற உறுதியான தகவலே. ஆக்கிரமிப்பாளர்களால் குடல் கிழிக்கப்பட்ட குழந்தைகளின் உயிரற்ற உடல்கள் இரவுகளில் என்னை உறங்க விடுவதில்லை. ஞாபகங்களால் மீண்டும் மீண்டும் வெட்டுப்பட்டுத் துடிதுடிக்கிறது மனம்.

தமிழிசை! உன் தாயின் தாயிடமும் சித்தியிடமும் வளரும் உன்னை நான் அவளன்றித் தனியாகச் சந்திக்க விரும்பவில்லை. 'அம்மாவும் அப்பாவும் எங்கே?'என்ற உன் இடையறாத கேள்விகளால் அவர்கள் எந்நிலத்தில் துயருறுகிறார்களோ நானறியேன். கண்ணீர்தோய்ந்த பொய்களுடன் வளரும் பிள்ளையே! வெடித்தெழும் குமுறல்களை மறைவிடத்தில் கொட்டித்தீர்த்துவிட்டு உன்முன் நடிப்பதற்கு அவர்கள் ஒவ்வொருநாட்களும் தங்களைத் தயார்ப்படுத்தியாகவேண்டும். புதிது புதிதான பொய்களை அவர்கள் கண்டுபிடித்தாக வேண்டும்.

உனக்குள்ளிருந்த ஆட்டுக்குட்டி இப்போது வெளியேறிவிட்டிருக்கும்.நீயொரு இறப்பர் பந்தெனக் குதித்தோடுவதை நிறுத்திவிட்டிருப்பாய். சொல்லப்படாத உன் கதைகள் உனக்குள் இறுகியிருக்கவும் கூடும்.

குழந்தைகளால் போரைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தியாகமோ துரோகமோ தெரியாது. புலியெதிர்ப்பு - ஆதரவு, தனிநாடு, இறையாண்மை, ஐக்கியம், நல்லிணக்கம், இனவெறி எதையும் அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் தாயின் மார்புக் கதகதப்பு. தந்தையின் தோள்க் கணப்பு.

குழந்தைகளின் கேள்விகளிலிருந்து பரவும் சாபம் காரணர்களைச் சூழட்டும்! சூழட்டும்!


தமிழிசை! என்னருமைக் கதைசொல்லியே! இனியொருபோதும் நான் உன்னைச் சந்திக்க விரும்பவில்லை.

4.07.2010

நளினி, சனநாயகம் மற்றும் விடுதலை என்ற சொல்....

கீற்று.காம் இனால் ஒழுங்கமைக்கப்பட்ட ‘நளினி விடுதலை :அரசியல் சிக்கலும் சட்டச் சிக்கலும்’ என்ற கூட்டத்திற்கு அண்மையில் போக வாய்த்தது. கவிஞர் தாமரை, பத்திரிகையாளர் அருள்எழிலன், எழுத்தாளர் பூங்குழலி, விடுதலை ராசேந்திரன்(பொதுச்செயலாளர், பெரியார் திராவிடக் கழகம்) தியாகு (பொதுச்செயலாளர், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்) வழக்கறிஞர் சுந்தரராஜன் ஆகியோர் உரையாற்றினார்கள். அன்று அவர்கள் ஆற்றிய உரைகள் கீற்று.காம் இல் வாசிக்கக்கிடைக்கின்றன. அதனால் அதைப் பிரதி பண்ணவேண்டியதில்லை.

அந்தக் கூட்டத்தில் அமர்ந்திருந்தபோது, அவர்களெல்லோரும் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தபோது, ‘சுதந்திரம்’என்ற சொல் அர்த்தமிழந்து வெற்றுச்சொல்லாக உலவிக்கொண்டிருப்பதை நிதர்சனமாக உணரமுடிந்தது. முடியாட்சி கலைக்கப்பட்டு ஜனநாயகம் நடைமுறையிலிருப்பதாக நாமனைவரும் நெஞ்சறியப் பொய்யுரைத்துக்கொண்டிருக்கிறோம். ‘சுதந்திரம்’ என்ற சொல்லைக் கூச்சமின்றிப் பிரயோகித்துக்கொண்டிருக்கிறோம். அதிகாரம் என்ற கத்தி நமது தலைக்குமேலே நூலிழையில் தொங்கிக்கொண்டிருக்க, புரட்சி பற்றிய கதைகளை சன்னமான குரலில் அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கிறோம்.

நாம் அரசுகளுக்கு அஞ்சுகிறோம். சிறையிருளை அஞ்சுகிறோம். அதனுள் நிகழும் சித்திரவதைகளுக்கு அஞ்சுகிறோம். சிறைக்கூட சித்திரவதைப் படல முன்னுதாரணங்கள் நமது நாக்குகளுக்கு விலங்கிட்டிருக்கின்றன. துப்பாக்கிகளும் காக்கிச் சட்டைகளும் என்றுமே எமது நேசத்திற்குரியதாக இருந்ததில்லை. ‘பாதுகாவலர்கள்’என்று சொல்லப்படுபவர்களைப் பார்க்குந்தோறும் நாங்கள் பாதுகாப்பற்றவர்களாக உணர்வது எதனால்? அவர்களைக் குறித்த அசூசையின் நதிமூலம் யாது? அரசியந்திரத்தின் அதிகாரிகள் என்பவர்கள் பெரும்பாலும் அரச விசுவாசிகளாக இருக்கிறார்களேயன்றி, மக்கள் நலனைக் குறித்து அக்கறை கொண்டுள்ளவர்களாகத் தோன்றுவதில்லை.
உண்மையில் அரசுகள் நமது பாதுகாவலர்களாகத் தொழிற்படுவதான பாவனையைக் காட்டிக்கொண்டே நம்மை நசுக்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு பூவைக் கொடுத்துவிட்டு பூந்தோட்டத்தையே உரிமைகொள்வதைப்போன்ற கவித்துவத்தோடு அந்தக் கவர்தல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

வாக்குரிமை என்பது அதிகாரங்களால் சாம,பேத,தான,தண்டங்களைப் பயன்படுத்தி வாங்கப்படக்கூடிய உரிமையாகிவிட்டது. ஒரு தனிப்பட்ட நபரின் விருப்புவெறுப்புகள் ஒரு கட்சியின் விருப்புவெறுப்புகளாக மாற்றப்பட்டு அது மக்களுள் பலவந்தமாகவோ பணத்தின் வழியாகவோ தேசியப் பாசாங்குகளாலோ திணிக்கப்படுகிறது. ஒரு கோசம் நமது கண்ணீரைக் கறந்துவிடுகிறது. ஒரு பெயரை விசுவசிக்க நாங்கள் தூண்டப்படுகிறோம். உரத்த உணர்ச்சிவசப்பட்ட குரலில் முழங்கப்படும் உரைகள் நம்மைத் தரையில் வீழ்த்திவிடுகின்றன. நாங்கள் உண்மையில் அரசாங்கத்தின் மூளையால் சிந்திக்கத் தூண்டப்படுகிறோம். ஊடகங்கள் அரசுகளின் கைகளில் இருக்கும்போது அது வெகுசுலபமாக நிறைவேறிவிடுகிறது. அரசுகள் மக்கள் சுயமாகச் சிந்திப்பதை விரும்புவதில்லை. அரச மூளையால் சிந்திக்க மறுப்பவர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.

தனிமனிதனொருவன் கொலையொன்றினைச் செய்வானாயின் அரசியந்திரத்தின் பல்வேறு கூறுகளும் இணைந்து அவனுக்கு ஆயுட்தண்டனையோ தூக்குத்தண்டனையோ வழங்கி,சட்டம்-ஒழுங்கினைக் காப்பாற்றுகின்றன. அதே வன்முறையை வலுக்குன்றிய சிறுபான்மை இனங்கள்மீது வலுவார்ந்த அரசுகள் கட்டவிழ்த்துவிடும்போது அது பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற புனிதத்தன்மையடைந்துவிடுகிறது. அத்தகைய கூட்டுப்படுகொலைகளுக்கோ பாலியல் வன்கொடுமைகளுக்கோ தண்டனையளிப்பார் யாருமில்லை. கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களும் ஊக்குவித்தவர்களும்கூட ‘அரசதிகார அறங்களின்படி’ அதியுத்தமர்களாகவே அறிவிக்கப்படுகிறார்கள். சட்டம் - ஒழுங்கு என்ற வார்த்தைகள் ஆட்களுக்கேற்றபடி பச்சோந்தித்தனமாக நிறம்மாறுவது இப்படித்தான்.

ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’யில் அரச பயங்கரவாதத்தின் நிர்வாணம் கொடூரமாக வெளிப்பட்டிருக்கிறது. வன்னி முள்ளிவாய்க்காலிலிருந்து தப்பியோடி வந்த மக்களிடம் அதையொத்த ஆயிரமாயிரம் கதைகள் இருக்கும். விடுதலைப் புலிகளின் ‘வீழ்ச்சி’யின் பின்னால் சில எழுத்தாளர்கள் செய்துவருவதுபோல முதுகுசொறிவதற்காக மட்டும் எழுதுகோலைப் பயன்படுத்தாத உண்மையாளர்கள் சிலர் எஞ்சியிருந்து, அவர்களது உயிருக்கு உத்தரவாதம் எதிர்காலத்தில் வழங்கப்படுமாயின், அந்தக் கடைசி நாட்களில் அரசபயங்கரவாதப் பூதம் அந்த எளிய மக்களை எப்படிச் சாவை நோக்கி அழைத்துப்போனது என்ற விபரங்கள் வெளிவரக்கூடும்.

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நளினி கொடியதும் நெடியதுமான பத்தொன்பது ஆண்டுகளாகச் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய விடுதலைக்காக கவிஞர் தாமரை இரண்டாண்டுகளுக்கு முன் கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தி, அதைக் கலைஞர்வரை கொண்டு சென்றிருக்கிறார். ‘நளினியை விடுதலை செய்யவேண்டும்’என்று கையெழுத்திட்டவர்களில் கவிஞர்களான தமிழச்சி,சல்மா,கனிமொழி,வைரமுத்து,பா.விஜய் இவர்களும் உள்ளடக்கம். “கலைஞரை அணுகுவதைக்காட்டிலும் நீங்கள் இந்த விடயத்திற்காக மத்திய அரசை அணுகலாமே”என்று கனிமொழி அப்போது தாமரைக்குப் பரிந்துரைத்திருக்கிறார். விடுதலை இராசேந்திரன் அவர்களின் வார்த்தைகளில் கூறுவதானால், தந்தை குறித்த கவிஞர் கனிமொழியின் முன்னனுமானத்தை புறந்தள்ளி, நன்மையே விளையுமென்ற எதிர்பார்ப்போடு கவிஞர் தாமரை, கலைஞரை அணுகியிருக்கிறார். அப்போது மதிப்பிற்குரிய தமிழினத்தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அளித்த வாக்குறுதியை கீற்று.காம் நடத்திய கூட்டத்திலே தாமரை நினைவுகூர்ந்தார்.

“நளினியை விடுதலை செய்வதில் எனக்கு எந்தவொரு ஆட்சேபணையும் இல்லை. அவ்விடயம் சோனியா அவர்கள் (மத்திய அரசு) சம்பந்தப்பட்டது. அவர்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நளினியை விடுதலை செய்வதில் எனக்கும் ஆட்சேபணை இல்லை.”

தாமரையை அடுத்து கூட்டத்தில் பேசிய விடுதலை ராசேந்திரன் கலைஞரது வாசகங்களின் உள்ளர்த்தத்தைச் சரியாகப் புரிந்துகொண்டு இப்படிச் சொல்கிறார்.

“கலைஞருடைய அறிவுரைக்கழகம் டெல்லியில்தான் இருக்கிறது என்பதை, கனிமொழி மிகச்சரியாக அறிந்துவைத்திருக்கிறார். அதை, கவிஞர் தாமரைதான் அறிந்துகொள்ளவில்லை.”

நளினி விடுதலை விவகாரத்தில் சுப்பிரமணியசுவாமியுடைய வார்த்தையான ‘தேசத்திற்கு எதிரான குற்றம்’என்ற வார்த்தையை தமிழக அரசு தூக்கிப்பிடித்துக்கொண்டு ஆடுவதாக தாமரை குற்றஞ்சாட்டினார். நளினியை விடுதலை செய்யக்கூடாது என்பது தமிழக அரசின் முன்முடிவு என்கிறார்.

மத்திய அரசு நீதிபதியிடம் கேட்டால், “இது மாநில அரசால் கையாளப்படவேண்டியது”என்கிறாராம்.

ஆக, நளினியின் விடுதலை என்பது மாநில அரசின் அதிகார வரம்பிற்குட்பட்டதாக இருந்தும் அவரை விடுதலை செய்ய தமிழக அரசால் ‘நியமிக்கப்பட்ட’ சிறைத்துறை ஆலோசனைக் குழு எட்டுக் காரணங்கள் சொல்லி அவரது விடுதலையைப் ‘பரிந்துரைக்கவில்லை’என்றிருக்கிறது. அந்தக் காரணங்களை தமிழக அரசம் ஏற்றிருக்கிறதாம்! ‘நீ ஆமாம் போட்டால் நான் இல்லையென்றா சொல்வேன்?’ அன்று கூட்டத்தில் பேசிய அனைவரும் அந்த எட்டுக் காரணங்களையும் ‘காமெடிக் காரணங்கள்’என்றே குறிப்பிட்டார்கள். அந்தக் காரணங்கள் கீழ்வருமாறு:

1.நளினி மிகக் கடுமையான குற்றம் புரிந்துள்ளார். முக்கிய குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளார். இந்தக் கொலையில் முக்கிய குற்றவாளியாக நளினி உள்ளார். முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொலை செய்யும் திட்டம் ஏற்கெனவே நளினிக்குத் தெரிந்திருக்கிறது.

(இவ்வழக்கில் சிறையிலடைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டபின் விடுதலை செய்யப்பட்ட நளினியின் சகோதரன் பாக்கியநாதன் தனது வாக்குமூலத்தில் ‘சிறீபெரும்புதூர் கூட்டத்திற்குச் செல்லும்வரை தனது சகோதரி நளினி ராஜீவ் கொலைமுயற்சி பற்றி அறிந்திருக்கவில்லை’ என்று சொல்லியிருக்கிறார். )

2.நளினியின் மனப்பான்மை மாறவில்லை. அவர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை. மன்னிப்பும் கேட்கவில்லை.)

(தாமரை கேட்கிறார்: “இதை ஒரு காரணமாகக் கூறுகிறார்களே… அப்படியானால், குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்பும் கேட்டிருந்தால் விடுதலை செய்திருப்பார்களா?”)

3.நளினியின் தாய், சகோதரர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். நளினி வெளியில் வந்து தங்குவதற்கு அவருடைய பெற்றோர்கள் பொறுப்பேற்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே சிறையில் இருந்ததைக் கவனத்தில் கொண்டுள்ளோம்.

(சிறையில் இருந்தவர்கள் விடுதலையானபோதிலும் குற்றவாளிகளே என்று இதற்குப் பொருள்கொள்ளலாமா? அவர்கள் திருந்தி -குற்றம் இழைத்திருந்தால்- வாழ்வதற்கான வாய்ப்பு ஜனநாயக நாடு என்று சொல்லப்படுமொன்றில் வழங்கப்படலாகாதா?)

4.நளினியின் பெற்றோர் கங்கை அம்மன் தெருவில் தங்கியிருக்கிறார்கள். அது வி.ஐ.பி.க்கள் வசிக்கும் இடம். அமெரிக்கத் தூதரகம் போன்ற முக்கியமான அலுவலகங்கள் இருக்கக்கூடிய இடமாக அது இருக்கிறது. அங்கு தங்கினால், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடும்.

(இம்மாநகரத்தில், இம்மாநிலத்தில் கங்கை அம்மன் தெருவொன்றுதான் இருக்கிறதா? பத்தொன்பதாண்டுகள் சிறையில் இருந்து தனது வாழ்வைத் தனிமையிலும் வெறுமையிலும் கரைத்த ஒரு பெண்ணால், சிறையில் பிறந்த தனது ஒரே குழந்தைக்குத் தாயாக மட்டுமே இருக்கவிரும்புவதாக அரசிடம் இறைஞ்சும் ஒரு பெண்ணால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடுமாம். ஐயகோ! குற்றங்களேதுமற்ற புனித நகரமே!)

கூட்டத்தில் பேசிய அருள் எழிலன் கேட்கிறார்:

“நளினியை விடுதலை செய்தால் மவுண்ட் றோட் பற்றி எரிந்துவிடுமா என்ன?”

5.ஒரு குழந்தைக்குத் தாயாக இருப்பதையே நளினி விரும்புகிறார் என்ற கோரிக்கையை ஏற்கமுடியாது.

(தாயாக இருப்பதற்கு பரிந்துரை தேவையில்லை. பரிவு மட்டுமே போதுமானது.)

6. 18 ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என்பதற்காக முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டும் என்பதையும் ஏற்கமுடியாது.

(நளினியின் தண்டனைக்காலம் என்பது முடிவிலியாக நீண்டுகொண்டே இருக்கிறது. அது ஆட்சியாளர்களின் மனநிலைக்கேற்ப நீடிக்கும்.)

7.இதற்கு முன்னால் நளினியின் செயல்கள், நடவடிக்கைகள் ஆகியவைகளை ஆராய்ந்துள்ளதால், முன்கூட்டியே அவரை விடுதலை செய்ய முடியாது.

(??????)

8.அவரைப் பரிசோதித்த மனநல மருத்துவரும் விடுதலை செய்யலாம் என்று உறுதியாகக் கூறவில்லை.

(‘உறுதியாக’என்ற சொல்லை அவதானியுங்கள். மேலும், மனநல மருத்துவரும் இவ்வகையான வழக்குகளில் அரசின் விருப்புவெறுப்புகளுக்குக் கட்டுப்பட்டவரே.)

நாங்கள் வயிறுபுடைக்க நன்றாகச் சாப்பிடவேண்டும். கழிப்பறை உபாதைகளை நாங்கள் விரும்புவதில்லை. எங்கள் உறக்கத்திற்குப் பங்கம் நேர்வதையும் பொறுப்பதற்கில்லை. அரசாங்கம் வழங்கும் செய்திகளை, அரசாங்கம் வழங்கிய தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கு நாங்கள் அனுமதிக்கப்பட்டிருக்கிறோம். அரசின் உதடுகளால் பேசுகிற ஊடக நிறுவனங்களால் எடுக்கப்படும் - அதிமானுடர்களைக் கதாநாயகர்களாகக் கொண்ட திரைப்படங்களைப் பார்ப்பதனோடு நிறைவடைந்து படுக்கைக்குச் செல்கிறோம். எப்போதும் எவராவது ஆடிக்கொண்டிருக்கும் தொலைக்காட்சி ‘சானல்’கள் எங்கள் உயிர்நிலைகளோடு தொடர்புடையவை என்பதையும் மறப்பதற்கில்லை. அவற்றை எங்களிடமிருந்து பிடுங்கிவிட்டால் நாங்கள் பைத்தியங்களாக வீதிகளில் சுற்றியலையவும் சாத்தியங்களுண்டு.

நளினி என்பவர் பத்தொன்பது ஆண்டுகளாக சிறையிருப்பதைக் குறித்து நமக்கு யாதொன்றுமில்லை. அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது; சிறையில் பிறந்த அந்தக் குழந்தை இப்போது வெளிநாட்டில் வாழ்கிறது. அதற்குத் தன் தாயை வந்து பார்த்துச் செல்ல ‘விசா’அனுமதி மறுக்கப்பட்டிருந்தது என்ற செய்திகளெல்லாம் நமது அன்றாட வாழ்வை எவ்விதத்திலும் பாதிக்கப்போவதில்லை.

ஏனெனில், நாங்கள் மாநகரில் கதவடைத்து வாழும் தனிமனிதப்புழுக்கள்!

ஊடகங்களால் நஞ்சூட்டப்பட மறுக்கிறவர்களும் யாதொன்றும் செய்வதற்கில்லை. உயிர் அமிழ்து! அரசு பற்றிய தமது அதிருப்திகளை, கருத்துக்களை, விமர்சனங்களை வெளியில் கொட்டுவதற்கு வழியற்றவர்கள், அவற்றைத் தமது குடல்களில் அடக்கிவைத்து கழிப்பறைகளில் வெளியேற்றுவதே உயிர்த்திருக்கவும் வெளியுலாவவும் ஒரே வழி.

அதிகாரத்தின் ‘ஆக்டோபஸ்’கரங்கள் எமது அசிரத்தையான அன்றாட வாழ்வை நோக்கி நீளும்போது, எவ்வளவோ கவனமாக இருந்தும்கூட நம்மையறியாமல் சிந்திவிட்ட ஒரு கருத்துத் துளிக்காக நமது வீடு ஒருநாள் துப்பாக்கிகளால் சுற்றிவளைக்கப்படும்போது, சமூக அறிவும் அக்கறையுமற்ற மொண்ணையர்களாக நாம் ‘வாழும் வாழ்வை’ப் பார்த்து ஏனையோர் எள்ளிநகையாடும் நாள் வரும்போது, அதிகாரங்களை நோக்கி எறிந்திருக்கவேண்டிய கேள்விகளை நமதுடலுக்குள்ளேயே பதுக்கிவைத்த முடைநாற்றம் நமக்கே தாங்கமுடியாமல் போகும்போது… நாம் என்ன செய்யப் போகிறோம்?

அஃதொன்றும் அத்தனை சிரமமானதில்லை.

‘உலகத்தமிழ் செம்மொழி மாநாடு’ போன்ற அனஸ்தீஸியாக்கள் வழியாக மக்களை ‘நினைவிழக்க’ச் செய்வதெப்படி என்பதை அரசுகள் நன்றாகவே தெரிந்துவைத்திருக்கின்றன.