எங்கள் தெருவில் ஒரு நாய் சதாசர்வகாலமும் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. போகும்போதும் வரும்போதும் தன் ஈரம் நிறைந்த கறுப்புக் கண்களால் எங்களை அண்ணாந்து பார்க்கும். வெயிலோ மழையோ அதன் கழுத்திலிருக்கும் சங்கிலி மட்டும் அவிழ்க்கப்படுவதேயில்லை. யாரோ ஒரு மகானுபாவன் வீட்டைக் கட்டி, அதற்குக் காவலாக ஒரு நாயையும் கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தப் பிரமுகரின் ஓய்வில்லமாக அது இருக்கக்கூடும். அவரின் உத்தரவு அன்றேல் வேண்டுகோளின் பிரகாரம் அதே தெருவிலிருக்கும் ஒரு கூலித்தொழிலாளியின் குடும்பம் அதைப் ‘பார்த்து’க்கொள்கிறது. பார்த்துக்கொண்டுதானிருக்கிறது. உணவோ தண்ணீரோ வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் சொற்பம். எப்போதாவது ‘லக்கி’ தெரு முனைவரை கொண்டுவரப்படும்; பிறகு இயற்கை உபாதைக்கென தூக்கிய கால் தூக்கியபடியிருக்க இழுத்துப்பறித்துக் கொண்டுபோய்விடுவார்கள். லக்கி walking போகிறதாம். முதலில் புளு குறொஸிற்கு அறிவிக்கலாமென யோசித்தோம். ஆனால், அமைப்புகள் மீதான அவநம்பிக்கையும் அயர்ச்சியும் அவ்வாறு செய்யவிடவில்லை. நாளடைவில் ‘லக்கி’யைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். நாங்கள் ஊரை நீங்கிய பிற்பாடு அந்த நாய் என்னாகும்? அதனைக் கட்டிவைத்து வெயிலைக் குடித்து பைத்தியம் பிடிக்கவைக்கும் உரிமையை அந்த வீட்டுச்சொந்தக்காரரிடம் கையளித்தது யார்?
கடவுள் என ஒருவர் இருந்தால், பிராணிகளின் படைப்பு விடயத்தில் அவர் முழுமுட்டாளாக இருக்கவேண்டும். மனிதனிலும் ஓரறிவு குறைந்த(அதையும் மனிதர்கள்தான் சொல்கிறார்கள்)விலங்குகளுக்கான தேவை இவ்வுலகில் என்ன? காவலுக்கு நாய், எலி பிடிக்கப் பூனை, வண்டி இழுக்க மாடும் குதிரையும்…(சில சமயம் சகமனிதனும்) இயற்கையிலிருந்து விலங்குகள் வரை தன் தேவைக்கியைபுற வளைத்துக்கொள்ளும்படியாக மனிதனை கூடுதல் அறிவோடு படைத்தது அந்தாளின் குற்றமல்லவா?
தெருக்கள்தோறும் தோல் மட்டும் வயிறாய் அமையப்பெற்ற நாய்கள் அலைகின்றன. குப்பைக் கூடைகளுள் இறங்கி அரிதிலும் அரிதான உணவைத் தேடுகின்றன. அவற்றின் பசி தேங்கிய பார்வையிலிருந்து குற்றவுணர்வோடு தப்பித்தோடிக்கொண்டிருக்கிறோம். ஒரு உச்சுக்கொட்டலில் பின்னால் ஓடிவந்துவிடுமோ என அஞ்சி அதன் கண்களையே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டியிருக்கிறது. ‘என்னை யாராவது கூட்டிப்போக மாட்டீர்களா?’என்ற இறைஞ்சுதலோடு நூற்றுக்கணக்கான பிராணிகள் வீதிகளெங்ஙணும் திரிகின்றன. மனிதர்களே சகமனிதர்களில் தங்கியிருக்க நேரும்போது, ‘நாயே’எனப் பார்க்கும் இக்குரூர உலகில் நிஜ நாய்களின் கதி அதோகதிதான்! உங்களில் எவரேனும் ‘ஜாதி’நாய்களைத் தெருக்களில் கண்டிருக்கிறீர்களா? ஏன் ராஜபாளையமோ, பொமரேனியனோ, ஜேர்மன் செப்பேட்டோ, டால்மேஷனோ வீதியில் திரிவதில்லை? பூனைகளோவெனில் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகின்றன. பூனைகள் களவெடுக்கின்றனவாம்! ஆத்திசூடி, பஞ்சசீலம், திருக்குறள், இன்னா நாற்பது-இனியவை நாற்பது இன்னபிறவெல்லாம் படித்துமுடித்துவிட்டு பசிதீர்க்கவும் ஆடம்பரமாக வாழவும் மனிதன் களவெடுக்கும்போது, ஓரெழுத்தும் வாசிக்கத் தெரியாத பூனை களவெடுத்தாலென்னவாம்? விசுவாசமற்றவையாம்! ஐயோ… இந்த மனிதர்கள்-புனிதர்களாலாயது இவ்வுலகு!
‘அவன் பாம்பு மாதிரி… பழகுவது கவனம்’என்று இந்த மகாமனிதர்களிற் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். எந்தப் பாம்பாவது ‘சிவனே’என்று நின்றிருக்கும் உங்களை நோக்கி ஓடோடிவந்து கடித்ததுண்டா? உங்கள் படுக்கையின் கீழ் கிடக்க நேர்ந்து, நீங்கள் காதல் மற்றும் கடன் நினைவில் புரண்டு புரண்டு உங்கள் மாமிசத்தால் அதனை அழுத்தும் வலியில் கடிக்கிறது. இல்லையேல் அதனை மிதித்தால் கடிக்கிறது. தற்காப்பு வன்முறை, திருப்பித்தாக்குதல் என்பன எல்லா உயிர்களிடத்தும் உள்ளதே. முகட்டுவளையில் சுருண்டிருக்கும் பாம்பைக் கண்டால், விரட்டிவிரட்டிக் கொல்கிறோம். பயிர்பச்சைகளினடியில் தன்பாட்டில் சரசரத்துப்போகும் பாம்பை போவெனத் துரத்திவிடுவதில்லை. மாற்றான் படை கண்டாற்போல ஊரையே கூட்டி அடித்துக் கொழுத்தி துவம்சம் செய்யும்வரை அடங்குவதில்லை நம் கொல்வேட்கை. எத்தனை எத்தனை போராளிகள் காடுகளில் எல்லைக் காவலுக்கு இருக்கிறார்கள். பாசறை அமைத்து முறைவைத்து உறங்கவும் உறங்குகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் பாம்பு தீண்டி மரணித்தார்கள்? மறுபடியும் இந்தக் கடவுளைத்தான் வம்பிற்கு இழுக்கவேண்டியிருக்கிறது. அவர் ஒரு பாரபட்சன். வளவளவென்றொரு தோலும், நெளிநெளியென்று நெளியும் அரியண்ட நகர்தலும் அதற்கு மட்டுமேன்? பாம்பு கடித்தாலும் விஷம். நாய் கடித்தாலும் விஷம். பூனை கடித்தாலும் விஷம். இதில் நாய் நன்றியுள்ளது. பூனை விசுவாசமற்றது. பாம்பு படையையும் நடுங்கவைப்பது. எல்லாற்றுக்கும் ஒவ்வொரு குணங் கற்பிக்கும் மனிதன் எந்தவகைக்குள் அடங்குகிறான்?
‘பிராணிகளுக்காகப் பரிந்துரைப்பது சரி…எத்தனை நாடுகளில் எத்தனை மனிதர்கள் வறுமையாலும் போராலும் மடிந்துகொண்டிருக்கிறார்களே… அது கவனத்தில் உறுத்தவில்லையா…?’ என்று ‘மனிதாபிமானிகள்’எவரேனும் கேட்கக்கூடும். வறுமைக்குக் காரணம் வளங்களின் பாரபட்ச பகிர்தல். ஆதிக்க மனோபாவமும் பேராசையும் கூடிப்பெற்ற குழந்தைதான் போர். கடவுள் என்றொருவர் இருந்து இந்த உலகம் அவரால் படைக்கப்பட்டிருந்தால் அனைத்துயிரும் சமமே என்றெண்ணியல்லவோ படைத்திருப்பான்? (இங்கும் படைத்திருப்பாள் என்று சொல்ல முடியாது. என்னே மொழிப்பிரட்டு, சூழ்ச்சி) மனிதன் மட்டும் இதிலென்ன உசத்தி…?இயற்கைச் சமநிலையையும் குழப்பவல்ல சர்வவல்லமை படைத்ததாலா? அதிலும் அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், நடிகர்கள் இன்னபிற பிரமுகர்களின் உயிர் பொற்சரிகைப்பட்டில் பொதியப்பட்ட வைரக்கல் (அல்லது ‘பிளாட்டினம்’). சாதாரணர்களின் உயிர் உதிரும் ஒற்றை மயிருக்குச் சமானம். அதிகாரச் சேற்றிலூறிய நாட்டாமைக்காரர்கள் மனுச மனங்களில் ஊன்றியிருக்கும் விஷவித்துக்களை நினைத்தால், வலியற்ற மரணத்தைத் தேர்ந்து போய்விடலாம்போலிருக்கிறது. (போவது போவது என்று சும்மா போக்குக் காட்டுவதுதானன்றி வேறில்லை)
இந்தக் கோபத்தை என்னதான் செய்வது? அயர்ச்சியூட்டும் உறவுகளிடம் காட்டவியலாது. அலையவைக்கும் அதிகாரிகளிடம் காட்டவியலாது. நாகரிகம் கருதி நண்பர்களிடம் வெளிப்படுத்தமுடியாது. பொறுக்கிக்கொடுத்த மாம்பழங்களை ஒரு வித்தைக்காரனின் சாகசத்தோடு கண்ணெதிரிலேயே மாற்றும் நடைபாதைக் கடைக்காரனிடமோ, ஏறும்போதும் இறங்கும்போதும் வெவ்வேறு நாக்குகளால் பேசும் ஆட்டோக்காரனிடமோ, நாறிய மீனை விற்றுத்தள்ளிப்போன மீன்காரியிடமோ காட்டுதல் சாத்தியமன்று. கண்ணில் பொய்முள் பொருத்திய கபடர்களிடமோ, பூமி உருண்டையானது என்று நிறுவப்பட்டதையே தம் வாய்ச்சாதுரியத்தால் சதுரமாக்கிவிடக்கூடிய சில விதண்டாவாதிகளிடமோ பேசவியலாது. பரபரப்பிற்காக மற்றவர்களின் உணர்வுகளைப் பலியிடும் சில பத்திரிகையாளர்களிடமும் காட்டலாகாது. இப்போதைக்கு கோபத்தை பிராணிகளின் மீதான கருணையாக மடைமாற்றுவதொன்றே வழி. இன்று எழுத்து கோபத்தை தன் முதுகில் வாங்கிக்கொண்டது. பாவந்தான். அதுவும் ஒருவகையில் வாய்பேசா வளர்ப்புப்பிராணிதான். அதனாற்றான் அதன் மீதான வாஞ்சை நாளாக நாளாக பெருகிக்கொண்டேயிருக்கிறது.
பிற்குறிப்பு: இதனை எழுதத்தூண்டிய ‘லக்கி’(அ)க்கும் தெருநாய்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் என்று சொல்வதன் மூலம் இதனை முழுமொக்கையாக்கிப் போகிறேன்.