Showing posts with label சில குறிப்புகள். Show all posts
Showing posts with label சில குறிப்புகள். Show all posts

1.30.2010

பணம் பற்றிய சில குறிப்புகள்

பாண்டிபஜாரின் குறுகலும் நெரிசலுமான பாதையோரக் கடைகளிலே தொங்கிக்கொண்டிருந்த காதணிகளில் கண்களைக் கொழுவியபடி ஊர்ந்துசென்றுகொண்டிருந்தேன். பக்கத்தில் எட்வின் ‘பரமபிதாவே! இவள் தான் செய்வது இன்னதென்று அறிந்தே செய்கிறாள். இருந்தாலும் இவளை மன்னியும்’என்ற குறிப்புத் தொனிக்க நடந்துவந்துகொண்டிருந்தான். குழந்தையைத் தோளில் சாத்தியபடி எங்களருகில் வந்து கைநீட்டிய பெண், ‘குழந்தை இரண்டு நாட்களாகச் சாப்பிடாமலிருப்பதாக’ பழகிய பொய்யைச் சொல்லிக் கைநீட்டினாள். அன்று அது அவள் சொன்ன இருபத்தோராவது பொய்யாக இருந்திருக்கக்கூடும். இருந்தபோதிலும், பத்து ரூபாவை எடுத்துக் கொடுத்துவிட்டு மறுபடி காதணிகளில் தொங்கவாரம்பித்தேன்.

“பிச்சை போடுவதிலும் ஒரு பெருமை இருக்கத்தான் செய்கிறது”என்றான் எட்வின். கையில் விசிறிவைத்து எந்நேரமும் ஆட்டியபடியிருக்கும் - பாண் (பிரெட்-கருமம்) இல்லையென்றால் கேக்கைச் சாப்பிடச் சொன்ன சீமாட்டியாக என்னையும், வஞ்சிக்கப்பட்ட பாட்டாளி மக்களின் (ராமதாசினுடையது அல்ல) ஏகத்துவ பிரதிநிதியாகத் தன்னையும் அவன் நினைத்துக்கொண்டிருக்கிறானோ என்ற சந்தேகம் எனக்குண்டு। “அந்தப் பிச்சைக்காரியை எனக்குத் தெரியாது. தவிரவும், பத்து ரூபாயில் எனது குடி மூழ்கிப்போகாது”என்றேன். காதணிகளிலிருந்து எனது கவனம் சறுகிவிட்டது. நான் கூறிய வார்த்தைகளுக்கு வலுச்சேர்த்தேயாக வேண்டிய கட்டாயத்திற்கு ‘ஈகோ’நிர்ப்பந்தித்தது. “மதியம் இரண்டு மணியானால் எனது வீட்டை அண்ணாந்து பார்த்தபடி நிற்கும் ஐந்து தெருநாய்களும்கூட என்னை உயர்வாக நினைத்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் அவற்றுக்குச் சோறு வைக்கிறேன்”என்றேன் எட்வினிடம். எனக்குச் சுலபமாகக் கோபமூட்டிவிட்டதை நினைத்து, அவனது அகன்ற வட்டக் கண்களில் ஒரு சிரிப்பு மினுக்கிட்டு மறைந்ததைக் கவனித்தேன்.

ஆனலும், இந்த அன்பு, பாசம், காதல், கருணை, வாஞ்சை, பரிவு, ஒட்டுதல், பிரியம், நட்பு, நேசம், மனிதம், சகோதரத்துவம் எல்லாவற்றையும் அசைத்துப்பார்த்தால் ரூபா அல்லது டாலர் நோட்டுகளின் சரசரப்புச் சத்தம் கேட்குமோ என்று அண்மைக்காலங்களில் தோன்றவாரம்பித்திருக்கிறது। உங்களில் நல்லவர்கள், அன்பானவர்களாயிருக்கும் ஏமாளிகள் சொல்வது எனக்குக் கேட்கிறது… ஆம்…அப்படி நினைக்கக்கூடாதென்றே நானும் நினைக்கிறேன். அன்னை தெரேசா இப்பாழுலகில்தான் பிறந்து வாழ்ந்தார் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனாலும்…

சில்லறைகளைப் பதுக்கி நிமிர்பவளின்-னின் கைகளில் எப்போதாவது விழும் ரூபாய் நோட்டைப் பார்த்து அவள்-ன் கண்கள் சடக்கென்று மலர்ந்துவிடுகின்றனவே! நம்மைவிட வயதான பிச்சைக்காரிகளும்-பிச்சைக்காரர்களும் அவ்வேளைகளில் நன்றிசொல்லிக் கைகுவிக்கும்போது வலிக்கிறது। புன்னகையின் மில்லிமீட்டரை பணந்தான் நீட்டுகிறது. சுருக்குகிறது.

இந்த ஆட்டோக்காரர்கள்…. அவர்களை என்ன பெயர் சொல்லி அழைக்கலாம்? தகிடுதத்தர்கள், ஏமாற்றுப்பேர்வழிகள், காக்கிச் சட்டை போட்ட கயவாளிகள் என்றெல்லாம் உங்களிடம் நான் சொன்னால், ‘எல்லோரும் அப்படியல்ல; அபவாதம் சொல்லாதீர்கள்’என்று உதாரணங்களோடு பாய்ந்தடித்து வரக்கூடும்। என்ன சாப்பிடுகிறோமோ அதைத்தானே ‘கழிக்க’ முடியும்? ஒரே இடத்திற்குச் செல்ல நூற்றைம்பது ரூபாயிலிருந்து முந்நூறு ரூபாய்வரை கேட்க அவர்களால் மட்டுமே முடியும். நீங்கள் இறங்குமிடத்தை நெருங்கும்போது எப்படியான சுருதியில் அவர்கள் பேசவாரம்பிப்பார்கள் என்பதையும் சொல்லவேண்டியதில்லை. திடீரென்று விலைவாசி உயர்வு எங்களோடு ஆட்டோவில் பயணிக்கவாரம்பித்துவிடும். திடீரென்று நாங்கள் சென்று இறங்கவேண்டிய இடமானது பெயர்ந்து அதிக தொலைவிற்குச் சென்றுவிடும். ஆட்டோவில் ஏறும்போது ‘அம்பியாக’ இருந்த ஆட்டோரக்காரர், நாம் இறங்குகிற இடம் நெருங்குகிறபோது ‘றெமோ’வாக (அந்நியன்) மாறிவிடுவார். மேலதிக இருபது அல்லது முப்பது ரூபாவிற்காக இவ்வளவு கூவவேண்டியதில்லை என்று எரிச்சல்படத் தோன்றும். பணத்திற்காக அரசியல்வாதிகள் மேடை மேடையாகக் கூவுகிற கூவுக்கு, போடுகிற குட்டிக்கரணங்களுக்கு இவர்களொன்றும் பரவாயில்லை என்றும் சில சமயங்களில் தோன்றியிருக்கிறது.

பேரம் பேசாமல் அல்லது பேசத் தெரியாமல் சொல்கிற விலையைக் கொடுத்துப் பொருளை வாங்கிச் செல்கிற என்னைப் போன்ற சமூகப் பிறழ்நிலையாளர்களுக்கென்று சில கடைக்காரர்களிடம் பிரத்தியேகமான புன்னகை உண்டு। ஆம் அந்தப் புன்னகை நிச்சயமாக விலையுள்ளது. பேரங்காடிகளில் நாம் வாங்கும் பொருட்களைத் தூக்கிவந்து வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்லும் கடைப்பையனின் புன்னகையின் நீளத்தையும் நாமே நிர்ணயிக்கிறோம். முதல் திகதியே வாடகையைக் கொடுத்துவிடும் நம்மைப் போன்ற தீங்கற்ற பிராணிகளிடம் உதிர்ப்பதற்கென்று வீட்டுச் சொந்தக்காரரிடம் கருணை வடியும் சில சொற்கள் இருக்கின்றன. நம்மைப் பாதுகாப்பாக வீட்டில் இறக்கிச் செல்லும் வாடகை வண்டிச் சாரதிகளுக்கு கட்டணத்தை விட அதிகமாக அறுபது ரூபாய்களைக் கொடுக்கும்போது மகிழ்ந்துபோய் நன்றிசொல்கிறார்கள். எவ்வளவு அதிகமாகப் பணம் கொடுத்தாலும் சிரிக்காதவர்களாக வங்கியில் பணியாற்றுகிறவர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.

அவனுக்கு இன்னுஞ் சில புத்தகங்களை நான் வாங்கிக்கொடுத்திருந்தால் இன்னமும் அதிகமாக என்னை நேசித்திருப்பானா? அவளுக்கு நான் வாங்கிக் கொடுத்த காப்பைப் போட்டுக்கொண்டு என்னைப் பார்த்த கண்களில் மேலதிக பாசத்தைக் கண்டேனா? அவனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக்கொடுத்தபிறகு எந்தக் குற்றவுணர்வுமின்றி வேலைகளைச் சொல்ல முடிகிறதல்லவா? தகரத்தில் அடைக்கப்பட்ட பன்றி இறைச்சியை நான்தான் வாங்கிக்கொடுக்கிறேன் என்று, மிக்கி எப்படியோ தெரிந்துவைத்திருக்கிறது। என்னைக் கண்டதும் எனது மூக்குவரை தாவுகிறது. கொஞ்சி முடித்தபிறகும் சிறிதுநேரத்திற்கு எனது கால்களைத் தனது சொரசொரத்த நாக்கினால் நக்கிக்கொண்டேயிருக்கிறது. சிறுபிள்ளைகள் தூக்கப்போனால், வாலை உயர்த்தி உடலைச் சிலிர்த்துப் பயங்காட்டும் ‘புதினம்’ சாவதானமாக எனது கைகளில் தலைவைத்து உறங்குகிறது. அதனிடம் எனக்கென்று பிரத்தியேகமான மூன்றுகால் நடையுண்டு.

அம்மா! உங்களுக்குப் பிடித்த அடர்பச்சையில் விலையுயர்ந்த சேலையை இம்முறை நான் வாங்கிவந்தால், உங்கள் கண்களில் வழக்கத்தைக் காட்டிலும் அதிகப்படியான கண்ணீரைப் பார்ப்பேனோ என்னவோ…? உங்கள் மூக்குத்தி என் கன்னங்களில் குத்தும்படியாக இறுக்கி முத்தமிடுவீர்கள் என்று நினைக்கிறேன். பள்ளிக்கூடம் போவதை எப்போதோ நிறுத்திவிட்ட அப்பாவுக்கு இப்போதும் ‘ரீச்சர்’பிடிக்கும். அந்த மஞ்சள்நிறத் திரவத்தினுள் அமிழ்ந்தபிற்பாடு, எனது ‘பெருமைகளை’ச் சொல்லி அவர் அழவாரம்பிக்கலாம்.
அன்பே! இம்முறை தயவுசெய்து வழக்கத்தைவிட அதிகமாகப் பணம் அனுப்பு। நான் போகுமிடங்களுக்கு எல்லாம் உன் காதலை எடுத்துச்செல்வேன்.

உண்மை எவ்வளவு அருவருப்பானதாக இருக்கிறது. உண்மையில் ‘உண்மை’என்று ஒன்றுமேயில்லைப் போலும்.

9.14.2009

பதிவெழுத வந்த கதை

தொடர்பதிவெனப்படுவனவெல்லாம் பெரும்பாலும் நமது தனிப்பட்ட வாழ்வைப் பொதுவெளியில் பகிர்ந்துகொள்வனவாக அமைந்திருப்பதைக் காண்கிறோம். அதைச் ‘சுயபுராணம்’என்று சுருக்க மனம் வருவதில்லை. பார்க்கப்போனால் எல்லாப் புனைவுகளிலும் சுயம் கலந்திருக்கவே செய்கிறது. நாம் எழுதும் எல்லாக் கதைகளிலும், கவிதைகளிலும் ஏதோவொரு வடிவில் நாம் இருந்துகொண்டுதானிருக்கிறோம். ஆயாசம் மிக்கதென எப்போதும் குறைப்பட்டுக்கொள்ளும் இந்த வாழ்வில் இவ்வகையான பகிர்தலும் ஆசுவாசமும் வேண்டித்தானிருக்கின்றன. ‘பதிவெழுத வந்த கதை’யைப் பகிர்ந்துகொள்ளச் சொல்லி சிநேகிதி அழைத்திருந்தார். பிறகு அய்யனார்… இருவருக்கும் நன்றி.

பதினொரு ஆண்டுகாலம் வாழ்ந்தபிற்பாடும், புலம்பெயர்ந்த நாடான கனடாவோடு ஒட்டமுடியாமல்போக, 2003ஆம் ஆண்டு ஈழத்துக்குத் திரும்பிப்போனேன். அப்போது அங்கே போர்நிறுத்தம் அமுலில் இருந்தது. எனினும், நிழல்யுத்தம் ஆங்காங்கே நடந்துகொண்டிருந்தது. ஆனால், அது பொதுமக்களின் இயல்புவாழ்வைப் பெரிதாகப் பாதிக்கவில்லை. வெளிநாடுகளிலிருந்து நிறையப்பேர் திரும்பிவந்திருந்தார்கள். ஆம்… அவர்களால் (எங்களால்) நிலங்கள் விலையேறின. வீடுகள் உப்பரிகைகளோடு உயர்ந்தன. அதுவொரு கனாக்காலம். நாங்கள் மகிழ்ச்சியோடு அந்நாட்களில் அங்கு வாழ்ந்திருந்தோம் என்பதை ஞாபகங்கொள்கிறேன். அந்த அழகிய கிராமத்தில் எங்கள் வீடு அன்பின் கூடு. அந்த வீட்டில் நாங்கள் பதின்மூன்று பேர் ஒன்றாக வாழ்ந்திருந்தோம். யுத்தநிறுத்த முறிவினைத் தொடர்ந்து பல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இரவுகள் எங்களுடையதாக இருக்கவில்லை. சில பகல்களும் அவ்வண்ணமே. யமன்கள் மோட்டார்சைக்கிளில் வந்துபோயின. நாய்கள் குரைக்கும் ஓசையைக் கேட்டபடி மரணபயத்தோடு எங்கள் சுவாசம் எங்களுக்கே இடியென முழங்கப் படுத்திருந்த இரவுகளை மறக்கமுடியாது. அங்கு தொடர்ந்தும் வாழமுடியாத சூழலில், 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஊரையும் உறவுகளையும் விட்டுத் தமிழ்நாட்டுக்குப் பெயர்ந்து வந்தோம்.

உயிர்ப்பயத்திலிருந்து தப்பித்து அந்நியத்தினுள் விழுந்தோம்। சென்னையில் எங்களுக்கு யாரையும் தெரியாது. ஒரு நண்பர்தானும் இல்லை. உறவினர்களும் இல்லை. எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது… அந்தத் தொடர்மாடிக் கட்டிடத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கல்லிருக்கையில் அமர்ந்து போவோர் வருவோரையெல்லாம் ஏங்கிய கண்களால் பார்த்துக்கொண்டிருப்போம். ஒரு புன்னகைதானும் இல்லை. சென்னையில் நாங்கள் அநாதைகளாக, அடையாளமற்றவர்களாக வாழ்ந்தோம். நினைக்குந்தோறும் துயரம் பெருக்கும் நாட்கள் அவை. தன்னிரக்கத்தில் கரையவைக்கும் ஞாபகங்கள் அவை.

உறவினைத் தொடுக்கும் ஒரே சரடாக இணையமே இருந்தது. அப்போது நான் அறிந்திருந்த தளங்கள் நான்கைந்துதான். ஆறாம் திணை, திண்ணை, தமிழ்நாதம், தமிழ்நெற். ஹொட்மெயிலிலிருந்து ஜிமெயிலுக்கு மாறி இணைய அரட்டையைத் தொடங்கியதும் பிரமாண்டமான கதவுகள் திறந்துகொண்டதைப் போல இருந்தது. மயங்கி மூச்சடைக்கும்போதில் காற்றுவெளியில் தூக்கியெறியப்பட்டதைப் போன்றதொரு ஆசுவாசம். அதன் வழியாக புதிது புதிதாக நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். கனடாவிலிருக்கும் எனது தோழி பிரதீபா ஒருநாள் கேட்டார் “நீங்கள் ஏன் வலைப்பதிவொன்றை ஆரம்பித்து எழுதக்கூடாது?”- “எழுதலாமே… ஆனால், வலைப்பதிவு என்றால் என்ன? இணையத்தில் தமிழில் எழுதுவது நம்மைப்போன்ற சாதாரணர்களுக்குச் சாத்தியமா?”

‘இளவேனில்’என்ற சொல் எனக்கு எப்போதும் பிடிக்கும். அது மலர்களின் வாசனையை, இலைகளின் பசுமையை, தென்றலின் பாரபட்சமற்ற நேசத்தை நினைவூட்டுவது. மேலும், அந்தப் பெயரில் எனக்குள் நிறைவேறிய கனவொன்றும், உதிர்ந்துபோன கனவொன்றும் இருக்கின்றன. அதையே எனது வலைப்பூவிற்குப் பெயராகச் சூட்டினேன். பிரதீபா மட்டும் அன்றைக்கு வலைப்பூ பற்றிக் குறிப்பிடவில்லையெனில், இப்போதும் எங்காவது கடற்கரையில் அமர்ந்து, திரும்பிச் செல்லமுடியாத அக்கரையை வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பேனாயிருக்கும்! கவிதைகள், கதைகள், அனுபவப் பகிர்வுகள் எனத் தொடங்கி, அரசியல் கட்டுரைகள், விமர்சனங்கள் என்று கடந்தோடி இணையத்தில் எதிர்க்கருத்தாளர்களுடன் குடுமிப்பிடிச்சண்டை போடுமளவிற்கு நான் வளர்ந்திருக்கிறேன். (காம்ப்ளான்) இதை எழுதும்போது மெல்லிய புன்னகை ஓடுகிறது. அண்மையில் என்னோடு பேசிய ஒரு நண்பர் கேட்டார்: “ஏங்க தமிழ்நதி உங்க வலைத்தளத்தில ஒரே பிணங்களாக விழுந்துகிடக்குதே…”என்று. “ஏன்?”என்று வினவினேன். சில பெயர்களைக் குறிப்பிட்டுச் சொல்லிச் சிரித்தார். “என் நண்பர்களிடம் கேட்டால் தெரியும். நான் எவ்வளவு அப்பாவி என்பது…”என்று அவருக்கு விளையாட்டாகப் பதிலளித்தேன். அப்புறாணிகளை உசுப்பேற்றினால் அதுகளுந்தான் பாவம் என்ன செய்வது? ‘மௌனம் கலகநாஸ்தி’ என்பதெல்லாம் என் அகராதியில் இல்லை. ‘கலகமில்லையேல் நியாயமில்லை’ என்பதுதான் என் வேதம். தனிப்பட்ட விடயங்களுக்காக நான் சண்டையிட்டது… ம்… இல்லையெனலாம். பொதுவான விடயங்கள், அரசியல் என்று வந்தால் கொம்பு சீவிய காளை… (இதிலும் பாருங்கள்… பசு இல்லை. மொழியிலும் வஞ்சகம்) இல்லை… கொம்பு சீவிய பசுவேதான். சின்னக் கொம்பாயிருந்தா சீவக்கூடாதா என்ன?

வலைப்பதிவு எழுதவந்து சம்பாதித்தது, எதிரிகளை மட்டுமன்று; நூற்றுக்கணக்கான நண்பர்களையுந்தான். எனக்கு வரும் அனானி அஞ்சல்களிலிருந்து அகராதிகளில் இல்லாத கெட்ட வார்த்தைகளைக் கற்றுக்கொள்கிறேன். என்றைக்காவது தேவைப்படும். பெண் என்பதும் வேற்று நிலத்திலிருந்து வந்தவள் என்பதும் திட்டுவதற்கு மேலதிக சொற்பிரயோக வசதிசெய்துகொடுக்கின்றன. (இதை எழுதும்போது கழிவிரக்கம் என்ற சொல்லோடு சேர்த்து ஆதவன் தீட்சண்யா நினைவில் வந்துபோகிறார்) இப்போதெல்லாம் எங்காவது இலக்கியக் கூட்டங்களுக்குப் போனால், யாராவது அடையாளங்கண்டு வந்து பேசுகிறார்கள். வலைப்பூவில் நான் பண்ணுகிற அக்கப்போர்கள், அதகளங்கள், தர்க்கங்கள் வெளியில் நிறையப்பேருக்குத் தெரிந்திருந்திருக்கிறது. அந்நேரங்களில், யாருக்கும் தெரியாமல் எழுதிய இரகசியக் குறிப்புகளை சபையில் வாசிக்கக் கேட்பது போல கொஞ்சம் கூச்சமாகவும் இருக்கும்.

கனடாவில் இருந்தபோது நிறையப் பத்திரிகைகளில் (நிறைய விளம்பரங்களுக்கிடையில்) எழுதிக்கொண்டிருந்தேன். அது சிலகாலம் விட்டுப்போயிருந்தது. வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிய கைப்பழக்கத்தால் ஓரளவு எழுத்து வசப்பட இப்போது கதை, கவிதை என வகைக்கொன்றாய் இரண்டு தொகுப்புகள் வெளியாகியிருக்கின்றன. மேலுமொரு கவிதைத் தொகுப்பு அச்சுக்குப் போயிருக்கிறது. குறுநாவலொன்றும் விரைவில் வெளிவரவிருக்கிறது. என்னதான் சொன்னாலும், நமக்கென்றொரு ‘அடையாளம்’இருப்பது மகிழ்வளிப்பதாகவே இருக்கிறது. எனது வீட்டு முகவரிக்கு நிறையப் புத்தகங்கள் ‘கவிஞர்’என்ற அடைமொழியோடு வந்து பரவசப்படுத்துகின்றன. அங்கீகாரம் என்பது பெரிய கொடை. எழுத்தாளர்கள் பலர் நண்பர்களாக இருக்கிறார்கள். பெரிய பெரிய ஜாம்பவான்களுக்கு அருகில் நின்று பேசும் பெருமிதம் கூடியிருக்கிறது. (‘அவங்கல்லாம் யாரு?’என்ற பதிலளிக்கச் சங்கடமான கேள்விகளைக் கேட்கக்கூடாது) இதையெல்லாம் தந்தது இளவேனிலும் தமிழ்மணமும்தான் என்பதை நெகிழ்ந்து சொல்கிறேன். எனது தோழியும் கவிஞருமாகிய குட்டி ரேவதி சிலசமயம் வேடிக்கையாகச் சொல்வதுண்டு… “நீங்கள் தமிழ்நாட்டின் செல்லப்பிள்ளை… எவ்வளவு பேர் உங்களில் பிரியமாயிருக்கிறார்கள்”என்று. தமிழ்நாட்டு மக்கள் எங்களில் எப்போதும் பிரியமாய்த்தானிருக்கிறார்கள். தேர்தல்களின்போதும் தீர்மானங்களின்போதும் மட்டும் அந்தப் பிரியம் காவியுடுத்திக்கொண்டு தூரதேசம் போய்விடுகிறது. அல்லது கைமறைவாய் அளிக்கப்படும் காகித உறைகளுள் அடங்கிவிடுகிறது.

“நீ இந்தக் கட்டுரையிலும் அரசியல் கதைக்க வேண்டாம்”என்று அங்கே அதட்டுவது யார்? நானேதான்!

எழுத்து என்பது அற்புதம். மகோன்னதம். ஆன்மாவை வருடும் மயிலிறகு. என் தாய்மடி. நான் வணங்கும் ஒரே கடவுள். எழுத்து என் தோழி. அதுவே என் காதலனும். எழுத்தே இயற்கை. எழுத்தே வாழ்க்கை. வாழ்வதன் ஒரே பொருளாகிய அதற்கென் நன்றியில் தோய்த்தெடுத்த முத்தங்கள்.

இந்தத் தொடர்விளையாட்டில் கலந்துகொள்ள யாரை அழைப்பதென்று தெரியவில்லை। யாராவது யாரையாவது அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். இருந்தும் விதிகளை மீறமுடியாது. ‘வலைப்பதிவெழுத வந்த கதையெழுத’ நான் அழைக்கும் நண்பர்கள்:

மாதவராஜ்
காமராஜ்
தீபா
விஷ்ணுபுரம் சரவணன்
இசை (கோவை)

இவர்களெல்லாம் ஏற்கெனவே எழுதியிருக்கவும் கூடும்:)


8.15.2009

நந்திதா! நீ ஏன் இப்படி இருக்கிறாய்?


நேற்றுவரை அவளை எனக்குப் பிடித்திருந்தது. அவள் நிதானமாக நகரும் ஒரு நதியைப் போலிருந்தாள். இல்லை… இந்த உதாரணம் எனக்குப் பிடிக்கவில்லை. இதைப் பல தடவை நானே எழுதியிருக்கிறேன். செடியின் தலையில் நளினமாக அசையும் பூவினை ஒத்திருந்தாள். இதுவும் வேண்டாம். இறுக்கமாக மூடப்பட்ட சாளரங்கள் வழியே தெரியும் வேகநெடுஞ்சாலையின் மௌன விரைதலுக்கு அவளை ஒப்பிடலாம். பூவும் நதியும் சலிக்கிறது. அமைதியில் ஒளிர்ந்த அந்த முகத்தை நான் நேசித்தேன். அவள் அப்படியே நீடித்திருக்க நான் பிரார்த்தித்தேன்.


“நந்திதா! நீ ஏன் எப்போதும் இப்படியே இருக்கக்கூடாது?”

அவள் சிரித்தாள். அவள் சிரிக்கும்போது நீங்கள் பார்த்திருக்கமாட்டீர்கள். எப்போதாவது அருமையாக கண்களில் மின்னல் தெறிக்கச் சிரிப்பாள். பிடிக்காதவர்கள் முன் செத்த புன்னகைதான். நடந்தது இதுதான். நேற்று அவள் வெகு நாட்களுக்குப் பிறகு குடித்தாள். போதையின் கிறக்கத்தில் அந்தக் கண்கள் தனக்குள் ஆழ்ந்துபோவதை நான் பார்த்தேன். நினைவுகளின் இருட்டில் எதை அகழ்ந்து எடுத்தாளோ… இறந்தகாலத்தின் துயரக்கதவு படீரெனத் திறந்துகொண்டது. அதனுள்ளிருந்து வெளிவந்த தனிமை மிகவும் கோரமான முகத்தோடிருந்தது. பரண்களிலிருந்து துக்கங்களைச் சேகரித்த அவள் தன்னிரக்கத்தில் அழுதபோது நான் அவளைத் தடுக்கவிரும்பவில்லை. மது இறந்துபோனவர்களைத் தேடிப்பிடிக்கிறது; பிரிந்துபோனவர்களையும் கூட. மது கண்ணீரின் மடையைத் திறந்துவிடுகிறது. முல்லைப் பெரியாறு விடயத்தில் இது-மது உதவாது.

அத்தோடு அவள் நிறுத்திக்கொண்டிருக்கலாம். உங்கள்முன் அவள் தன்னை முழுவதுமாகத் திறந்துகொட்ட ஆரம்பித்தாள். உங்களுக்கோவெனில் கதை கேட்கும் உருசி. அல்லது குற்றவாளியின் முன் நீதிபதியாக அமர்ந்திருக்கும் ஆசை. நீண்டநேரம் உண்மை என்ற சாட்டையால் தன்னைத்தானே விளாசிக்கொண்டிருந்தாள். தவறி உங்கள்மீதும் ஓரிரு அடிகள் விழுந்துவிட்டன. மரபார்ந்த செவிகளுக்கு அவள் ஒரு பெரிய அதிர்ச்சிதான். என்ன செய்வது? வாழ்க்கை அவளைக் குரூரமாகச் சபித்துவிட்டது. (நியாயம் கற்பிக்கிறாளாம்) அவளது செடிகளில் மலர்கள் உதிர்ந்துபோக முட்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. தாமரைக்கிழங்குகள் மட்டும் எஞ்சிய குளமென்றும் சொல்லலாம். பறவைகள் கைவிட்டுப் பறந்த மரத்தைப் போலிருந்தாள் என்று எழுத விரும்புகிறேன். ஆனால், இந்த உதாரணத்தை நாம் பலதடவை பிரயோகித்திருக்கிறோமல்லவா? சரியாகச் சொன்னால், ‘உண்மை பேசுகிறேன் பேர்வழி’என்று அவளே எல்லோரையும் விரட்டிவிட்டாள். பூவின் ஆயுள்கூட இல்லை பொய்க்கு என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

தனிமை… அது நாம் உண்ணும் பதார்த்தங்களிலும் அதிருசியானது. அதை அவள் கடைசித்துணிக்கை வரைக்கும் சாப்பிட்டே ஆவேன் என்று அடம்பிடித்தாள். நீங்கள் தனிமையைச் சாப்பிட்டிருக்கிறீர்களா? தனியாக அருந்தும் தேநீருக்கொரு சுவை உண்டு. படுக்கையின் இந்த அந்தத்திலிருந்து அந்த அந்தம்வரை நாமே புரளமுடிகிற சுதந்திரத்திற்கொரு சுகம் உண்டு. இறுக்கும் உள்ளாடைகள் அணியவேண்டியிராத வீடு அற்புதம் அல்லவா? மரங்கள் அடர்ந்த சாலைகள் வழியே இசையைக் குடித்தபடி தனியே நடந்துபோகும்போது, சுத்தமான காற்று நம் சுவாசப்பைகளுக்குள் வந்து இறங்கும்போது எனக்குச் செத்துவிடத் தோன்றியிருக்கிறது. ஆனால், தனிமை திகட்டும் தேன். அதை மாந்தி மாந்தி மயங்கிவிழும் ஈக்களைப் போல அவளும் விழுந்தாள். இந்தச் சமூகத்திலிருந்து தொலைந்தாள்.

தயவுசெய்து சேர்ந்து குடிக்காதீர்கள். அது உங்களை மற்றவர்கள்முன் காலிசெய்கிறது. கோப்பை காலியாக காலியாக நீங்களும் அதுவிதமாகவே ஆகிவிடுகிறீர்கள். பிறகு வெறுங்கூடுதான். நந்திதா! நீ உண்மை பேசவேண்டுமென்று யார் அடித்துக்கொண்டார்கள்? உன் காதலை, உன் காமத்தை யார் கேட்டார்கள்? நீ பொய் சொல்லவேண்டுமென்று நான் விரும்புகிறேன் நந்திதா. என் அன்பே! தோலுக்கு மேல் இன்னொரு தோலைப் போர்த்திக்கொள். நாவுக்கு மேல் இன்னொரு நாவைத் தைத்துக்கொள். உதடுகளிலிருந்து சொற்கள் புறப்படும்முன் ஒன்றுக்கு நான்கு தடவை ஒத்திகைத்துக்கொள். இப்போது பேசு! ஆஹா! நீ இப்போது பெண்ணிலும் பெண்ணாகப் பேசுகிறாயடி!

நேற்று நீ பேசிக்கொண்டிருந்தபோது நான் யோசித்தேன் ‘நீ எவ்வளவு அழகாக சொதப்புகிறாயடி’என்று. நீ பேசிமுடித்ததும் உனக்கு முன் அமர்ந்திருந்தவர்களின் கண்களில் அதிர்வைப் பார்த்தேன். பிறகு நீ மௌனமாக எழுந்துபோனாய். உனக்குப் பிடித்த பாடலை கணனியில் கிளிக்கினாய். ‘நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா’என்ற பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கரைந்து அழுதாய். (‘பாரதி’படத்தில் அதை இளையராஜாவும்தான் பாடியிருந்தார்.) தண்ணீர்த் துல்லியமில்லை ஜெயஸ்ரீயின் குரல். ‘ஙீ…’என்ற இனிமை இல்லை. கொஞ்சம் கனத்து பிசிறடித்தாற்போலிருக்கும். ஆனால் அது மனசுக்குள் புகுந்து அலைகிற குரல். துயரங்களைத் துருவிப் பிடிக்கிற குரல். பிரியமுள்ள இரண்டுபேர் மழை நாளொன்றில் உதட்டில் உதடு அழுத்தி இடும் முத்தத்திற்கு இணையான இதம் அந்தக் குரல். அந்தப் பாட்டை இந்த உலகத்தின் பொய்மைகள் கைவிடும்போது, தனித்திருந்து தயவுசெய்து கேட்டுப்பாருங்கள். பாரதி! யார் என்ன சொன்னாலும் எனக்கு உன்னைப் பிடிக்கத்தான் பிடிக்கிறது.

அவள் உறங்கப்போனாள்; ஒரு மனதைக் கலைத்துவிட்டு. தண்டனைகள் நியாயமற்ற காலங்களில் வந்தடைவதற்கு யார் என்ன செய்ய இயலும்?

நந்திதா! நீ ஏன் இவ்வளவு தத்தியாக இருக்கிறாய்? நீ ஏன் எல்லாப் பெண்களையும் போல இருந்திருக்கக்கூடாது?

கண்ணாடியை எடுத்து உன் கண்களைப் பார்த்துச் சொல்கிறேன்:

“நந்திதா! யாரும் இல்லாமல் போனாலும் நீ எழுதிக்கொண்டிரு… அது போதாதா உனக்கு?”


5.20.2008

மிருகாபிமானம்


எங்கள் தெருவில் ஒரு நாய் சதாசர்வகாலமும் கட்டிவைக்கப்பட்டிருக்கிறது. போகும்போதும் வரும்போதும் தன் ஈரம் நிறைந்த கறுப்புக் கண்களால் எங்களை அண்ணாந்து பார்க்கும். வெயிலோ மழையோ அதன் கழுத்திலிருக்கும் சங்கிலி மட்டும் அவிழ்க்கப்படுவதேயில்லை. யாரோ ஒரு மகானுபாவன் வீட்டைக் கட்டி, அதற்குக் காவலாக ஒரு நாயையும் கட்டிவைத்துவிட்டுப் போயிருக்கிறார். அந்தப் பிரமுகரின் ஓய்வில்லமாக அது இருக்கக்கூடும். அவரின் உத்தரவு அன்றேல் வேண்டுகோளின் பிரகாரம் அதே தெருவிலிருக்கும் ஒரு கூலித்தொழிலாளியின் குடும்பம் அதைப் ‘பார்த்து’க்கொள்கிறது. பார்த்துக்கொண்டுதானிருக்கிறது. உணவோ தண்ணீரோ வைக்கப்படுவதற்கான அறிகுறிகள் சொற்பம். எப்போதாவது ‘லக்கி’ தெரு முனைவரை கொண்டுவரப்படும்; பிறகு இயற்கை உபாதைக்கென தூக்கிய கால் தூக்கியபடியிருக்க இழுத்துப்பறித்துக் கொண்டுபோய்விடுவார்கள். லக்கி walking போகிறதாம். முதலில் புளு குறொஸிற்கு அறிவிக்கலாமென யோசித்தோம். ஆனால், அமைப்புகள் மீதான அவநம்பிக்கையும் அயர்ச்சியும் அவ்வாறு செய்யவிடவில்லை. நாளடைவில் ‘லக்கி’யைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டோம். நாங்கள் ஊரை நீங்கிய பிற்பாடு அந்த நாய் என்னாகும்? அதனைக் கட்டிவைத்து வெயிலைக் குடித்து பைத்தியம் பிடிக்கவைக்கும் உரிமையை அந்த வீட்டுச்சொந்தக்காரரிடம் கையளித்தது யார்?

கடவுள் என ஒருவர் இருந்தால், பிராணிகளின் படைப்பு விடயத்தில் அவர் முழுமுட்டாளாக இருக்கவேண்டும். மனிதனிலும் ஓரறிவு குறைந்த(அதையும் மனிதர்கள்தான் சொல்கிறார்கள்)விலங்குகளுக்கான தேவை இவ்வுலகில் என்ன? காவலுக்கு நாய், எலி பிடிக்கப் பூனை, வண்டி இழுக்க மாடும் குதிரையும்…(சில சமயம் சகமனிதனும்) இயற்கையிலிருந்து விலங்குகள் வரை தன் தேவைக்கியைபுற வளைத்துக்கொள்ளும்படியாக மனிதனை கூடுதல் அறிவோடு படைத்தது அந்தாளின் குற்றமல்லவா?

தெருக்கள்தோறும் தோல் மட்டும் வயிறாய் அமையப்பெற்ற நாய்கள் அலைகின்றன. குப்பைக் கூடைகளுள் இறங்கி அரிதிலும் அரிதான உணவைத் தேடுகின்றன. அவற்றின் பசி தேங்கிய பார்வையிலிருந்து குற்றவுணர்வோடு தப்பித்தோடிக்கொண்டிருக்கிறோம். ஒரு உச்சுக்கொட்டலில் பின்னால் ஓடிவந்துவிடுமோ என அஞ்சி அதன் கண்களையே பார்ப்பதைத் தவிர்க்கவேண்டியிருக்கிறது. ‘என்னை யாராவது கூட்டிப்போக மாட்டீர்களா?’என்ற இறைஞ்சுதலோடு நூற்றுக்கணக்கான பிராணிகள் வீதிகளெங்ஙணும் திரிகின்றன. மனிதர்களே சகமனிதர்களில் தங்கியிருக்க நேரும்போது, ‘நாயே’எனப் பார்க்கும் இக்குரூர உலகில் நிஜ நாய்களின் கதி அதோகதிதான்! உங்களில் எவரேனும் ‘ஜாதி’நாய்களைத் தெருக்களில் கண்டிருக்கிறீர்களா? ஏன் ராஜபாளையமோ, பொமரேனியனோ, ஜேர்மன் செப்பேட்டோ, டால்மேஷனோ வீதியில் திரிவதில்லை? பூனைகளோவெனில் எல்லா இடங்களிலும் விரட்டப்படுகின்றன. பூனைகள் களவெடுக்கின்றனவாம்! ஆத்திசூடி, பஞ்சசீலம், திருக்குறள், இன்னா நாற்பது-இனியவை நாற்பது இன்னபிறவெல்லாம் படித்துமுடித்துவிட்டு பசிதீர்க்கவும் ஆடம்பரமாக வாழவும் மனிதன் களவெடுக்கும்போது, ஓரெழுத்தும் வாசிக்கத் தெரியாத பூனை களவெடுத்தாலென்னவாம்? விசுவாசமற்றவையாம்! ஐயோ… இந்த மனிதர்கள்-புனிதர்களாலாயது இவ்வுலகு!

‘அவன் பாம்பு மாதிரி… பழகுவது கவனம்’என்று இந்த மகாமனிதர்களிற் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கிறோம். எந்தப் பாம்பாவது ‘சிவனே’என்று நின்றிருக்கும் உங்களை நோக்கி ஓடோடிவந்து கடித்ததுண்டா? உங்கள் படுக்கையின் கீழ் கிடக்க நேர்ந்து, நீங்கள் காதல் மற்றும் கடன் நினைவில் புரண்டு புரண்டு உங்கள் மாமிசத்தால் அதனை அழுத்தும் வலியில் கடிக்கிறது. இல்லையேல் அதனை மிதித்தால் கடிக்கிறது. தற்காப்பு வன்முறை, திருப்பித்தாக்குதல் என்பன எல்லா உயிர்களிடத்தும் உள்ளதே. முகட்டுவளையில் சுருண்டிருக்கும் பாம்பைக் கண்டால், விரட்டிவிரட்டிக் கொல்கிறோம். பயிர்பச்சைகளினடியில் தன்பாட்டில் சரசரத்துப்போகும் பாம்பை போவெனத் துரத்திவிடுவதில்லை. மாற்றான் படை கண்டாற்போல ஊரையே கூட்டி அடித்துக் கொழுத்தி துவம்சம் செய்யும்வரை அடங்குவதில்லை நம் கொல்வேட்கை. எத்தனை எத்தனை போராளிகள் காடுகளில் எல்லைக் காவலுக்கு இருக்கிறார்கள். பாசறை அமைத்து முறைவைத்து உறங்கவும் உறங்குகிறார்கள். அவர்களில் எத்தனை பேர் பாம்பு தீண்டி மரணித்தார்கள்? மறுபடியும் இந்தக் கடவுளைத்தான் வம்பிற்கு இழுக்கவேண்டியிருக்கிறது. அவர் ஒரு பாரபட்சன். வளவளவென்றொரு தோலும், நெளிநெளியென்று நெளியும் அரியண்ட நகர்தலும் அதற்கு மட்டுமேன்? பாம்பு கடித்தாலும் விஷம். நாய் கடித்தாலும் விஷம். பூனை கடித்தாலும் விஷம். இதில் நாய் நன்றியுள்ளது. பூனை விசுவாசமற்றது. பாம்பு படையையும் நடுங்கவைப்பது. எல்லாற்றுக்கும் ஒவ்வொரு குணங் கற்பிக்கும் மனிதன் எந்தவகைக்குள் அடங்குகிறான்?

‘பிராணிகளுக்காகப் பரிந்துரைப்பது சரி…எத்தனை நாடுகளில் எத்தனை மனிதர்கள் வறுமையாலும் போராலும் மடிந்துகொண்டிருக்கிறார்களே… அது கவனத்தில் உறுத்தவில்லையா…?’ என்று ‘மனிதாபிமானிகள்’எவரேனும் கேட்கக்கூடும். வறுமைக்குக் காரணம் வளங்களின் பாரபட்ச பகிர்தல். ஆதிக்க மனோபாவமும் பேராசையும் கூடிப்பெற்ற குழந்தைதான் போர். கடவுள் என்றொருவர் இருந்து இந்த உலகம் அவரால் படைக்கப்பட்டிருந்தால் அனைத்துயிரும் சமமே என்றெண்ணியல்லவோ படைத்திருப்பான்? (இங்கும் படைத்திருப்பாள் என்று சொல்ல முடியாது. என்னே மொழிப்பிரட்டு, சூழ்ச்சி) மனிதன் மட்டும் இதிலென்ன உசத்தி…?இயற்கைச் சமநிலையையும் குழப்பவல்ல சர்வவல்லமை படைத்ததாலா? அதிலும் அரசியல் தலைவர்கள், செல்வந்தர்கள், நடிகர்கள் இன்னபிற பிரமுகர்களின் உயிர் பொற்சரிகைப்பட்டில் பொதியப்பட்ட வைரக்கல் (அல்லது ‘பிளாட்டினம்’). சாதாரணர்களின் உயிர் உதிரும் ஒற்றை மயிருக்குச் சமானம். அதிகாரச் சேற்றிலூறிய நாட்டாமைக்காரர்கள் மனுச மனங்களில் ஊன்றியிருக்கும் விஷவித்துக்களை நினைத்தால், வலியற்ற மரணத்தைத் தேர்ந்து போய்விடலாம்போலிருக்கிறது. (போவது போவது என்று சும்மா போக்குக் காட்டுவதுதானன்றி வேறில்லை)

இந்தக் கோபத்தை என்னதான் செய்வது? அயர்ச்சியூட்டும் உறவுகளிடம் காட்டவியலாது. அலையவைக்கும் அதிகாரிகளிடம் காட்டவியலாது. நாகரிகம் கருதி நண்பர்களிடம் வெளிப்படுத்தமுடியாது. பொறுக்கிக்கொடுத்த மாம்பழங்களை ஒரு வித்தைக்காரனின் சாகசத்தோடு கண்ணெதிரிலேயே மாற்றும் நடைபாதைக் கடைக்காரனிடமோ, ஏறும்போதும் இறங்கும்போதும் வெவ்வேறு நாக்குகளால் பேசும் ஆட்டோக்காரனிடமோ, நாறிய மீனை விற்றுத்தள்ளிப்போன மீன்காரியிடமோ காட்டுதல் சாத்தியமன்று. கண்ணில் பொய்முள் பொருத்திய கபடர்களிடமோ, பூமி உருண்டையானது என்று நிறுவப்பட்டதையே தம் வாய்ச்சாதுரியத்தால் சதுரமாக்கிவிடக்கூடிய சில விதண்டாவாதிகளிடமோ பேசவியலாது. பரபரப்பிற்காக மற்றவர்களின் உணர்வுகளைப் பலியிடும் சில பத்திரிகையாளர்களிடமும் காட்டலாகாது. இப்போதைக்கு கோபத்தை பிராணிகளின் மீதான கருணையாக மடைமாற்றுவதொன்றே வழி. இன்று எழுத்து கோபத்தை தன் முதுகில் வாங்கிக்கொண்டது. பாவந்தான். அதுவும் ஒருவகையில் வாய்பேசா வளர்ப்புப்பிராணிதான். அதனாற்றான் அதன் மீதான வாஞ்சை நாளாக நாளாக பெருகிக்கொண்டேயிருக்கிறது.

பிற்குறிப்பு: இதனை எழுதத்தூண்டிய ‘லக்கி’(அ)க்கும் தெருநாய்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் என்று சொல்வதன் மூலம் இதனை முழுமொக்கையாக்கிப் போகிறேன்.

7.14.2007

போலிப் பின்னூட்டங்கள்

அன்பு நண்பர்களுக்கு,

எனது கவிதைத் தொகுப்பு முயற்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணத்தால் முன்புபோல் தங்களது பக்கங்களுக்கு வந்து பின்னூட்டமிடுவதில்லை. தமிழ்மணம் பக்கமும் முன்போல வர நேரமிருப்பதில்லை. இந்தச் சந்தடி சாக்கில் யாரோ 'தமிழ்நதி'யாக முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. அதாவது, எனது பெயரில் பின்னூட்டங்கள் வருவதாக அறிகிறேன். சற்றுமுன் மிதக்கும் வெளி சுகுணா திவாகர் அழைத்து 'என் மேல் ஏனிந்தக் கோபம்...?'என்று கேட்டபின்னரே விழித்துக்கொண்டேன். 'சீதாபாலம்'என்ற அவரது கவிதைக்கு எனது பெயரில் இடப்பட்டிருக்கும் பின்னூட்டம் என்னுடையதல்ல. அந்தப் பின்னூட்டத்தைத் தொடர்ந்து போனால் எனது பக்கத்தையே வந்தடைகிறது. இதனைச் செய்பவர் யாரென்று என்னால் ஊகிக்க முடிந்தாலும், நேரடியாகக் கடிந்துகொள்வதற்கில்லை. தன்னை 'எல்லாம் தெரிந்த' மேதாவியாகக் காட்டுவதற்காக ஏனையோரைப் பற்றிக் கதைகளைத் திரித்துப் பரப்பிவரும் அவரிடம் நாகரிகத்தை எப்படி எதிர்பார்க்க இயலும்? நரிகளிடம்கூட தந்திரத்தைப் பிரயோகிக்க முடியாத என் போன்றவர்கள் ஒதுங்கிக்கொள்வதே நன்று.

எனது பெயரில் வரும் பின்னூட்டங்களைப் பிரசுரிப்பதன் முன் தயவுசெய்து என்னை ஒரு வார்த்தை கேட்டுக்கொள்ள வேண்டுகிறேன். நன்றி.

தமிழ்நதி

4.26.2007

இந்த மழை நாள் மற்றும் உன் வருகை



காலப்பெருவெளியில்
சருகாகி அலைந்தபின்
உன் விழி வழி கசியும் ஒளி குடித்து
மீளத் துளிர்க்கும் இத்தருணம்
காற்றை நிறைக்கிறது
முன்பொருநாள் மெல்லிருளில்
திடீரென அலமலர்த்தி முத்தமிட்ட
இதழின் எச்சில் வாசனை


நீ போகும்போது உனது கண்களை இங்கு விட்டுச் சென்றாயா…. கருவிழிகளின் முழுவட்டமும் புலனாகும் உன் பார்வை என் மீது காலை இளவெயிலைப் போல படர்ந்துகொண்டேயிருக்கின்றது. அந்தக் கண்களில் எனக்கான செய்தி ஏதாவது இருந்ததா என்று தவித்தலைந்த என்னை ஒரு சலனமுமின்றி விலக்கிப் போனாய். ஏற்புடையதல்ல எனதிந்த தவிப்பு. பித்தத்தின் உச்சந்தான். இந்தக் கோடை மழைநாளில் பருவம் தப்பி எனக்குள் அடித்துப் பொழியும் மழையில் அகங்காரம் கரைந்தோடுகிறது. என்னிலை பிறழ்கிறேனே எனும் வருத்தம் மேலிடுகிறது. நீ வரும்வரை தனிமையால் நிறைந்திருந்தது இவ்வறை. வந்தபின் சுற்றவர இருந்த சகலமும் பெயர்ந்து போய்விட்டன. அல்லது யாவற்றையும் உன்னால் நிறைத்தாய். மறுபடி மறுபடி நான் எனது கண்களின் பிடிவாதமான பின்தொடர்தலைக் கண்டித்தும் பயனில்லை. இதுநாள்வரையிலான எனது தேடலின் அந்தம் நீதான் என்று, எல்லோருக்கும் பரிச்சயமான, சொல்லித் தேய்ந்த வார்த்தைகளால்தான் எனதிந்த உணர்வையும் வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.

நமக்கிடையில் நிகழ்ந்ததற்கு உரையாடல் என்று பெயரிடல் தவறு. மனச்சாட்சியற்ற ஒரு பத்திரிகையாளனது கேள்விகளை ஒத்த சில அபத்தங்களுக்கு நீ பதிலிறுத்துக்கொண்டிருந்தாய். உனது மௌனத்தைக் கலைப்பதற்கான வேறெந்த உத்திகளும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பேச்சு நின்றுவிடும் நிமிடம் நாம் பிரிந்துவிடுவோம் என்றெனக்குத் தோன்றியதால், சில அசட்டுத்தனமான உத்திகளைப் பிரயோகித்து உனது இருப்பை என்னறையில் நீடித்தேன். கேள்விகளை நினைவிற் கொண்டுவரும் எத்தனத்தின்போதான இடைவெளியை நிரப்புவதற்கு, உனது கண்களின் சாயலையொத்த ஒருவரை எங்கோ பார்த்திருப்பதாக நான் அடிக்கடி சொல்ல வேண்டியிருந்தது. நீ விடைபெற்றுப் போனபிறகு ஒரு ஞானியும் முட்டாளும் எதிரெதிர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்ததான ஒரு பிம்பம் எனக்குள் தோன்றியது. உன் உருவும் தெளிவும் ஆழமும் நம்பமுடியாத கனவொன்றைத் தன்னுணர்வுடன் கண்டுகொண்டிருப்பதைப் போன்ற உணர்வைத் தருகின்றன. கொடுவெயிலில் நடக்கும் பாதங்களைப் போல தரிக்கவோ நடக்கவோ கூடுதில்லை.

ஒருபோதிலும் உன்னிடத்தில் அள்ளிக் கொட்டிவிடவியலாத இந்த நேசத்தை,நெருக்கத்தை,மன அவத்தையைச் சுமந்துகொண்டு எத்தனை காலம் நடக்கவேண்டியிருக்கும் என்றெனக்குத் தெரியவில்லை. முன்னொருபோதும் இவ்விதம் ஆனதில்லை, இனியொருபோதும் இவ்விதம் நிகழ்வதற்கில்லை என்ற வார்த்தைகள், காலையில் எழுந்தவுடன் முதலிற் கேட்ட பாடலைப் போல இன்று முழுவதும் உள்ளுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. என்ன செய்தேனும் உன்னைப் பிரியாதிருக்க முடியாதா என்ற சிறுபிள்ளைத்தனத்தை, ஏக்கத்தை பெரிய குழியாகத் தோண்டி உள்ளே புதைத்துவிடுவதைத் தவிர இந்த ஜென்மத்தில் வேறொன்றும் செய்வதற்கில்லை. பிடித்ததை அடைதல் சாத்தியப்படுவதெனில், நான் சில ஆண்டுகளைப் பின்னோக்கிக் கடந்து சென்று மீளப் பிறத்தல் வேண்டும். மேலும், இந்தக் காய்ச்சல் உனக்குள்ளும் அனலெறியாதுபோனால் மீளப்பிறந்தென்ன… இந்தக் கற்பனைக் குதிரையேறிக் காலத்தைக் கடந்தென்ன…?அடைதல் என்றால் என்ன அன்பே! தொடுதலா…? எனக்கது வேண்டாம். வேட்கையின் வெறி உருவேற ‘நீயே… நீதான்… நீயன்றி வேறல்ல’என்று கிடந்துழன்று நெருங்கியபின் ‘இல்லைப் போ’என்று புறங்கையால் தள்ளுதலே உன்னளவிலும் நிகழுமோ நானறியேன். ஆனால்… இன்று உள்நுழையும் வழிகள் சாத்தப்பட்ட உயர்மதிலின் முன்னால் நின்று பிதற்றி நிலையழிய வைத்தாய்.

பேச்சைவிட மௌனம் அழகியது என்று அந்தத் திரைப்படத்தைப் பார்த்த நாளிலிருந்து தோன்றிக்கொண்டேயிருந்தது. உன்னைக் கண்டபிறகு அதை மீள்பரிசீலனை செய்வதாக இல்லை.

வெளியே மழை. இடி குமுறிக்கொண்டேயிருக்கிறது. மின்னல் வானத்தில் ஒளிக்கோடு போட்டு வரைந்து பழகுகிறது. நீச்சல் குளத்தில் மழை துள்ளுகிறது. நாட்டப்பட்ட நிழற் குடையை கனத்த துளிகள் அலைக்கழிக்கின்றன. யன்னல் வழியே தெரியும் வேம்பு, நீர் விழும் வேகம் தாளமாட்டாமல் தலைதாழ்த்தி நிற்கிறது. நீ எங்கோ யார் வீட்டிலோ அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறாய். இந்த மழை நாளில் இன்மையும் இருப்புமாய் எனதறையில் நீ என்று உன்னிடம் சொன்னால், விழியோரம் சுருங்க நகைத்தல் கூடும்.(உனக்குத் தெரியுமா நீ அப்படிச் சிரிப்பது…)

பூட்டப்பட்ட கதவினூடாகக் கசியும் பாடலைப்போல, காவலை மீறி நுழைந்துவிடும் புரட்சியாளரின் இரகசியச் செய்தியைப் போல, இறுக்கம் கொண்டுவிட்ட உன்னுள் எனது ஞாபகத்தின் கீற்றேனும் நுழைந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

உன் மீதான இந்தப் பிரியத்தைக் குறித்து உன் விரல்களைப் பற்றியபடி ஒரு சொல்லேனும் சொல்ல விரும்பினேன். செருப்பினுள் கால்களை நுழைத்தபோது தற்செயலாகத் தொடுவதுபோல உன் தோள்களைத் தொட்டு உனது மீள்வருகை பற்றிக் கேட்க எண்ணினேன். விடைபெறும்போதான உன் பார்வை எனக்கே எனக்கானது என்று என்னை நானே ஏமாற்றவும் முற்பட்டேன். நம்ப முடியாததை, கூடாததை பிடிவாதமாக நம்ப விளைகிறது மனம். நாம் வழக்கம்போல பொய் பூசிய சம்பிரதாய வார்த்தைகளுடன் மிகக் கௌரவமாக விடைபெற்றோம்.

இந்த உலகம்… ஆ… இந்தப் பாழும் உலகம்! அது எழுதிவைத்திருக்கும் மரபுகள்! விதிகள்! வயது,பால்,மொழி,நாகரிகம்,இது இப்படித்தான் எனும் எல்லாம் நாசமாய்ப் போகட்டும்! ‘இவளின் இத்தகு விசித்திரங்கள்’என்று சுத்தப்பூனைகளாலான இவ்வுலகம், திருடித்தின்ற மீன் பொரியல் வாசம் மாறும்முன்பே மோவாயில் கைவைத்து வியக்கட்டும். இன்றைய எனதுலகம் உன்னால் நிரம்பி வழிகிறது.

உன் ஞாபகத்தை எழுத்தின் தோள்களில் இறக்குகிறேன். ஊரோடு ஒத்தோடுதலே உயர்வு என்றெண்ணியபடி என்னைப் பிணைத்திருக்கும் மரபின் கயிறுகளைச் சரிபார்க்கிறேன். தளர்ந்த முடிச்சுகளை இறுக்குகிறேன். வழக்கத்திற்கு மாற்றான, முரணான கலகக்குரல்களின் மேல், இருப்பதிலேயே பெரிய பாறாங்கல்லைத் தேர்ந்தெடுத்து போட்டு நசுக்கக் காத்திருக்கும் சமூகத்தின் கொடுங்கரங்களுக்கு அஞ்சுகிறேன். ஆம்! நான் நல்லவள், கௌரவமானவள், பிள்ளைகளுக்கு நானொரு வழிகாட்டி மேலும் எழுதுகிறவளுமாம். உன் மீதான இந்தப் பிரியத்தையும் எவ்வளவு ஆழத்தில் முடியுமோ அவ்வளவு ஆழத்தில் போட்டுத் தீ வைத்து விடுகிறேன். அது எரிந்து சாம்பலாகட்டும். அந்தச் சாம்பலில் ஒரு துளி எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு பித்துப்பிடித்து சில நாள் அலைவேன். பிறகென்ன… மறந்துபோவேன்.

4.11.2007

அழகின் அழகு!

இதன் பெயர் 'புதினம்'

அழகு உங்களை உறுத்தியதுண்டா…? அழகைப் பற்றி எழுதச்சொல்லி அய்யனார் கேட்ட நாளிலிருந்து உள்ளிருந்து உறுத்திக்கொண்டே இருந்தது. யாரோ விருப்பப்பட்டுக் கேட்ட பொருளைக் கொடுக்காமல் என்னுடன் வைத்துக்கொண்டிருப்பது போன்றதொரு உணர்வு தொடர்ந்துகொண்டே இருந்தது.

கடல்
சிறுவயதிலிருந்தே வியப்பின் விழிகளால் பார்த்த அழகுகளில் கடலும் ஒன்று. அலையும் நீலமும் பரந்த நீர்ப்பரப்புமன்றி கடலிடம் என்னதான் இருக்கிறதென்று ஓரிரு சமயங்களில் தோன்றியிருக்கிறது. ஞானிகளின் மௌனம் எப்படி மதிப்பை ஊட்டுகிறதோ அப்படித்தான் கடலின் விரிவும் ஆழமும் உள்ளார்ந்த அமைதியும் பார்க்கப் பார்க்கச் சலிக்காத அதிசயமான அழகு. கடலின் முன் அமர்ந்திருக்கும்போது கர்வம் அழிந்து நாமொரு துளியாகச் சுருங்கிவிடுகிறோம். தனித்தன்மை என்பது எம்மிடம் இருக்கிறதோ இல்லையோ, ஏனையோருள் எம்மை அடையாளப்படுத்த, ‘உன்னைப் போலில்லை நான்’என்று காட்ட எத்தனை பிரயத்தனங்களைச் செய்கிறோம். ஆனால் வானத்தின் நிறத்தையே தன்னிறமாக்கியபடி எத்தனை அடக்கமாக இருக்கிறது இந்தக் கடல். கடலினுள் எத்தனை இரகசியங்கள் கொட்டிக்கிடக்கும்! எத்தனை உயிரினங்கள் வாழ்க்கை நடத்தும்! அதன் காலடியில் அமர்ந்து எத்தனை கனவுகள் பேசப்பட்டிருக்கும்! எவ்வளவு காதலை,கண்ணீரை,பிரிவை,மரணத்தை கடல்மடியும் கரையும் கண்டிருக்கும். கடலின் மீதான வியப்பு, கரை மீதான கடலின் தீராத காதலைப்போல உள்ளுக்குள் எப்போதும் அலையடித்துக்கொண்டேயிருக்கிறது.


பூனைக்குட்டிகள்

மூன்றாண்டுகளின் முன் பூனைக்குட்டிகள், நாய்க்குட்டிகள் என்றால் வளர்ப்புப் பிராணிகள் என்பதன்றி வேறெதுவும் மனதில் எழுந்ததில்லை. வாழ்வெனும் பயணத்தில் சகபயணிகளை முன்னேறவிட்டு மனோரீதியாகப் பின்தங்கியபோது ஊற்றெடுத்ததுதான் பிராணிகள் மீதான நேசம். அதிலும் பூனைக்குட்டிகள் என்றால்…. அவற்றின் அழகைப் பற்றி நான் பேச ஆரம்பித்தால்… ஆயாசத்துடன் இந்தப் பதிவின் வலப் பக்க மேல் மூலையில் ஒரு அழுத்து அழுத்திப் போயே போய்விடுவீர்கள். ஊரில் எங்கள் வீட்டில் மூன்று பூனைக்குட்டிகள் வளர்கின்றன. அதிலொன்றுக்கு மனிதர்களைப் போல பேச மட்டுந்தான் தெரியாது. அது எதைப் பார்த்தாலும் ஆச்சரியத்தோடுதான் பார்க்கும். அதனால் அதற்கு ‘புதினம்’என்று பெயர் வைத்திருக்கிறோம்.(பைத்தியக்காரத்தனமான பெயர்தான்) அதன் கண்களைச் சுற்றி கண்மை தடவி இருகரையிலும் இழுத்துவிட்டாற்போலிருக்கும். உடலோ பனிவெண்மை. சோபாவில் வெகு சுவாதீனமாக கைகளையும் கால்களையும் :-) முன்னும் பின்னுமாக வீசியெறிந்து விட்டுப் படுத்திருக்கும். பஞ்சு போன்றிருக்கும் அதன் அடிவயிற்றில் கைவைத்துத் தடவி கதை சொன்னால் தன் மொழியில் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருக்கும். அந்த மூன்று பூனைகளும் சமையலறையில் பொரித்துவைக்கப்பட்டிருக்கும் மீன்துண்டுகள் தங்களை வளர்ப்பவர்களுக்கானவை என்பதை அடிக்கடி மறந்துபோய்விடும். விளைவு, ஒரு நீண்ட பிரசங்கத்திற்கு நான் செவிகளைத் தாரைவார்த்துவிட்டு அவற்றோடு விளையாடிக்கொண்டிருக்கத் தள்ளப்படுவேன். எனது அண்ணாவின் மகளும் நானும் அலுக்காமல் சலிக்காமல் பேசுபொருட்களாகக் கொள்பவை செல்லப்பிராணிகளின் அழகும் நடத்தையுமே.



அறிவு

சிறுவயதிலிருந்து அநேகமாக எல்லோருக்குமே ஒரு குணம் இருக்கும். அதாவது, அழகானவர்களால் ஈர்க்கப்படுவதும் அவர்தம் அருகாமையை விரும்புவதும். பெரும்பாலானோரின் அழகு குறித்த பொதுவிதியான மெலிந்த, உயரமான, நிறமானவர்களே எனது தேவ தேவதைகள். பள்ளிக்கூடத்தில் அழகான அக்காக்களின் தங்கைகளின் இனிய தோழியாக இருந்தேன். எல்லோரும் ‘பொறாமை… பொறாமை’என்று சொல்கிறார்களே… அது மட்டும் இந்த அழகு விஷயத்தில் எனக்கு வந்ததேயில்லை. ‘உங்கள் கண் அழகு’ – ‘விரல் அழகு’ – ‘சிரிப்பழகு’ இப்படி ஏதாவது அறிக்கை விட்டு அவர்களை அழகாகச் சிரிக்கவைப்பேன். வளர்ந்தபிற்பாடு, புத்தகங்களுள் நீர்க்காகம் போல தலையை அமிழ்த்திக்கொள்ளத் தொடங்கிய பிற்பாடு அறிவுதான் அழகு என்ற ‘அழகான’உண்மை புலனாகியது. ஆணோ பெண்ணோ தேடலை நோக்கிச் செலுத்திச் செல்வோர் எவரோ அவரே-அவளே பேரழகன் மற்றும் பேரழகி. தாங்கள் படித்ததையெல்லாம் மழைக்காலத்தில் மதகு திறந்தாற்போல ஒரேநாளில் கொட்டித் தீர்த்துவிட்டு, மேற்கொண்டு பழகும் சுவாரஸ்யத்தைக் கரைத்து ஒன்றுமில்லாமற் போகிறவர்களையோ, தங்கள் மேதாவித்தனத்தை முரசுதட்டுவதற்கென்றே சொல்லாடுபவர்களையோ, சுயபுராணத்தில் கரைந்துபோகிறவர்களையோ அவர்கள் எத்தனை அழகென்றாலும் அழகுக் கணக்கில் சேர்ப்பதில்லை.(அதனால் அவர்களுக்கென்னவாம் என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.)அறிவின் ஒளியே பேரழகு.



மரங்கள்

சென்னைக்கு வந்த புதிதில் வீடு தேடி அலைந்தபோது கூட அலைந்த நண்பர் கேட்டார் “எப்படியான வீடு வேண்டும் உங்களுக்கு…?”-“மரங்கள் அடர்ந்த சாலையில் மரங்களோடு கூடிய வீடு கிடைக்குமா?”என்றேன். “குரங்கா நீ…?”என்று உள்ளுக்குள் நினைத்திருப்பார் போல… வெளியில் ஒன்றும் சொல்லவில்லை. சிரித்தார் அவ்வளவே. அப்படியொரு வீடு சென்னை மாநகரத்தில் கிடைப்பதெனில் சொத்து (இருந்தால்)முழுவதையும் எழுதிவைக்கவேண்டும் என்பதே அந்தச் சிரிப்பின் பொருளென இங்கு நெடுநாட்கள் என் பங்கிற்குக் குப்பை கொட்டியபின்னரே அறிந்துகொண்டேன்.மரங்கள், மனதுள் குளிர்ச்சியை,மலர்ச்சியை,புத்துணர்ச்சியை,கவிதையை,காதலை அள்ளி எறிகின்றன. மரங்களின் பச்சை விழிகள் வழியாக மனதெல்லாம் படர்கிறது. கையில் தேநீர்க்கோப்பையுடன் இலைகளில் சூரிய ஒளி பட்டு மினுங்கும் அழகைப் பார்த்துக்கொண்டிருக்கும் காலை நேரம் வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். அதிலும் இந்த மழைக்காலத்து மரங்களை, அவற்றின் சிலுசிலுவென்ற அழகை கண்களால் உள்ளிழுத்து மனசுக்குள் பூட்டிவைக்க முடிந்தால் எவ்வளவு நல்லது!


அம்மன்கள் என்ற அழகிகள்

“லா.ச.ரா.வின் புத்தகங்களில் வரும் வேலைக்காரி கூட சக்தி அம்சம்தான், அழகுதான்”என்று யாரோ ஒருவர் எழுதியிருந்ததை அண்மையில் வாசித்தேன். அந்த எள்ளலைக் குறித்து எனக்கொரு கருத்துமில்லை. லா.ச.ரா.வின் கதைகளைப் படிக்கும்போது எனக்கொரு முகம் நினைவில் வரும். அது மிக நேர்த்தியாக, கலையின் உச்ச அனுபவத்தில் தோய்த்த தூரிகை கொண்டு வரையப்பட்ட அம்மன் முகம். வளைந்த புருவமும் அமைதியில் கனிந்த விழிகளும் கன்னத்தில் சுடர்விடும் மூக்குத்தியும் நெளிந்திறங்கும் கூந்தலும் கைக்கரும்பும் மெலிந்த இடையும் தொட்டு வணங்கத் தூண்டும் பாதவடிவுமாக என்னிடம் ஒரு அம்மன் படம் இருக்கிறது. நாட்பட்டும் கைபட்டும் நைந்து கிழிந்துகொண்டிருக்கும் அந்தப் படத்திலிருப்பவள் மீது தீராத அன்பு. காதலென்றும் சொல்லலாம். அதைப் போன்ற முக அழகுடைய படங்களை எங்காவது கோயில்களில் காணநேரும்போது ஐந்து நிமிடங்களாவது நின்று வணங்கிவிட்டு வருவது வழக்கம். தவிர, எங்கு பயணம் போனாலும் அந்தத் தோழியும் கூடவே வருவாள். கவலை வந்தால் அவ்வப்போது அவள் முன் அழுவதும் நடக்கும். இதை ‘சென்டிமென்ட்’என்பவர்கள், இதை வாசித்துவிட்டு ‘அட நீ இம்புட்டுத்தானா…’எனச் சிரிக்கும் நாத்திகர்கள் எவர் குறித்தும் எனக்கொரு கவலையுமில்லை. (முன்ஜாமீன் போல ஒரு முற்பாதுகாப்பு அறிவித்தலாக்கும்)

அய்யனார் ஆறு அழகுகள் பற்றிக் கேட்டிருந்தார். அறுபது அழகுகள் பற்றிக் கூட எழுதலாம். ஆனால், பதிவின் நீளம் கருதி கடைசி அழகைச் சில வரிகளுள் அடக்குகிறேன். மழை அழகு, மழையில் நடக்கும் பாதங்கள் அழகு, குழந்தைகளின் விழிகளில் தெரியும் அறியாமை அழகு, நடக்கும் நதி அழகு, இருளில் துடிக்கும் சுடர் அழகு, மாதுளம்பூ அழகு, மங்குஸ்தான் பழத்தின் பின்புறமிருக்கும் ஐந்து இதழ் கொண்ட படம் அழகு, முதுயோரின் சிரிப்பழகு, மலை அழகு, மலையில் மழை விழும் அழகே அழகு, இளங்காலை வெயில் அழகு, எவருக்கும் தீங்கிழைக்கவொண்ணா மனம் அழகு, கவிதை அழகு, கண்ணீரும் சிலசமயம் அழகு.

எம்மிடம் கையளிக்கப்பட்ட ஒரு வேலையை முடித்தபிறகு ஒரு அமைதி,நிறைவு,பரவசம் பரவும். அந்த ‘அழகான’ உணர்வு இப்போது என்னுள் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால், எனதினிய நண்பர்களே!இனிமேல் இப்படி யாராவது அழைத்தால் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். காரணம்,இந்தப் பொருளில் இந்தக் காலத்திற்குள் எழுது என அழைத்தால் கணனி எதிரியாகிவிடுகிறது. அய்யனார் அரிவாளோடு அழைத்ததால் ‘பயந்துபோய்’ சம்மதித்தேன்.:-)
என் பங்கிற்கு யாரையாவது எரிச்சலூட்ட வேண்டுமென்று எண்ணியபோது மனதில் வந்த பெயர்கள்:
'மிதக்கும் வெளி' -சுகுணா திவாகர்
'தத்தக்க பித்தக்க' -சிநேகிதி (பழி வாங்கிடாதையம்மா)
'வசந்தம்'-தென்றல்

3.11.2007

சின்னச் சின்னத் தூறல்கள்



வாசிப்பு
பூக்கள், மழைத்துளி கிளப்பும் மண் வாசனை, வாசனைத் திரவியங்கள் இவற்றிற்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல புத்தகங்களின் வாசனை. அம்புலிமாமாவிலிருந்து அசோகமித்திரன் வரை பிடித்த எழுத்துக்கள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால், கிளர்ச்சியூட்டும் புதிய உறவைப்போன்று புத்தகங்கள் மீதான காதல் மட்டும் மாறுவதேயில்லை. அந்தப் பைத்தியம் வளர்ந்துகொண்டேயிருக்கிறது. புத்தகக் கடைகளுக்குள் நுழைந்தால் புறவுலகம் மறந்து,மறைந்து போகிறது. முன்பெனில் ஒரு புத்தகத்தை வாசித்து ஆண்டுக்கணக்கானாலும் அந்தப் பாத்திரங்கள் மனதிலிருந்து இறங்குவதேயில்லை. அலையோசை சீதாவையும், மரப்பசு அம்மணியையும், சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவையும் இன்றுவரை மறக்க முடியவில்லை. அந்தளவிற்கு கதையோடு ஒன்றித்திருந்தது வாசிப்பு. இன்று வெயிலில் தரிக்கமுடியாத பாதங்களைப்போல வரிகளுக்கிடையில் அலைந்துகொண்டிருக்கிறது மனசு. ஓரிடத்தில் நில்லென்றால் நிற்க முடியவில்லை அதற்கு. வாசிப்புக்குச் சமாந்தரமாக மற்றொரு துணை வாசிப்பு உள்ளுக்குள் நடந்துகொண்டிருப்பதை எவ்வளவு முயன்றும் விலக்கமுடிவதில்லை. தர்க்கங்கள்,முரண்கள்,உடன்பாடுகள், மனக்குரங்கின் கிளை தாவல்கள் இவற்றினிடையே ஊடாடிக்கொண்டிருக்க வாசிப்பு எங்கோ பின்தங்கிவிடுகிறது. எமது தீர்மானங்களுடன் தொடர்ந்து பொருத முடியாமற் தோற்றுப்போய் அலமாரியில் மீண்டும் சென்றமர்ந்து காத்திருக்கும் புத்தகங்களை நினைக்க வருத்தமாய்த்தானிருக்கிறது.

-----


கோவில்

‘நான் கடவுள் மறுப்பாளன்…’-‘கோவிலுக்கெல்லாம் போவதில்லை’என்று சொல்வது பெரும்பாலானோரிடையே புதிய கலாச்சாரமாக,நாகரிகமாக உருவெடுத்து வருகிறது. பெரியோர்கள் கற்பித்த, பெரும்பான்மையினரால் கைக்கொள்ளப்படும் ஒரு வழக்கத்தின் மீது,மரபின் மீது கேள்வி கேட்டுத் தெளிந்து தன்னை அதிலிருந்து விலக்கிக்கொள்வது வேறு. ‘எல்லா மாடும் ஓடுகிறது என்று சின்னான் வீட்டு செத்தல் மாடும் ஓடிய கதை’யாக இருக்கிறது சிலரின் பேச்சு.கோவில் என்பது வழிபடும் இடம் மட்டுமில்லை. நாத்திகர்களும் கோவிலுக்குப் போவதற்கு வெட்கப்பட வேண்டியதில்லை. உலகமே அழிந்துகொண்டிருப்பதைப் போன்ற பேரிரைச்சல் நிறைந்த வீதிகள்,அங்காடிகள்,தொழிலகங்கள்,உறவுகளின் பிக்கல் பிடுங்கல்களால் நிறைந்த வீடுகள் எல்லாவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளக்கூடிய வெளிகளில் கோவிலும் ஒன்று. துக்கத்தை,ஆதங்கத்தை,பேராசையை,பிரிவின் வாதையை,இல்லாமையை,வேண்டுகோள்களை,கடவுளுடனான பேரங்களை எத்தனையை இறைத்தாலும் அந்த வெளியை அடைத்துவிட முடிவதில்லை.
பிரகாரத்தின் கருங்கற்களைத் தொடும்போது கடந்தகாலத்தைத் தொடுவதைப் போலிருக்கிறது. அங்கு செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களைப் பார்க்கும்போது கலையின் பேரனுபவம் விளைகிறது. விழுந்து விழுந்து கும்பிடுபவர்களைப் பார்க்கும்போது அகங்காரம் மறைந்துபோகிறது. வாசலில் கையேந்தும் பிச்சைக்காரர்கள் வாழ்வு நம்மை இன்னும் கைவிட்டு விடவில்லை என்பதை உணர்த்துகிறார்கள். பாவாடை காலிடற ஓடித் திரியும் குழந்தைகளில், நாதஸ்வர இசையில்,மரங்களினிடையே தெரியும் பிறைத்துண்டில்,வன்னிமரத்தின் ஆழ்ந்த மௌனத்தில்,யாரையும் புண்படுத்த முடியாத அந்தச் சூழலில் இறைத்தன்மை இருக்கிறது. இறைத்தன்மை என்பது கல்லில் மட்டும் இருப்பதாக எவர் சொன்னது?

-----


இசை

செவிப்புலனற்றவர்கள் ஒருவகையில் கொடுத்துவைத்தவர்கள். சகமனிதர்களின் பொய்யில் தோய்த்தெடுத்த வார்த்தைகளிலிருந்து அவர்களுக்கு நிரந்தர விடுதலை. ஆனால், இசை என்ற அற்புத அனுபவத்தை இழந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் பரிதாபத்திற்குரியவர்களே. மனித மொழியிலான இசை வார்த்தைகளாலும் வாத்தியங்களாலும் கோர்க்கப்படுகிறது. அது மனிதனை உன்னதங்களை நோக்கி அழைத்துச்செல்கிறது. அழுக்கைக் கரைக்கிறது. அழுகையைத் துடைக்கிறது. கோபத்தை அணைக்கிறது. தாபத்தை வளர்க்கிறது. தனிமையில் துணையாகிறது. கனவுகளுக்குத் தூபமிடுகிறது. இசையற்ற உலகம் என்பது துணையற்ற வாழ்வினைப்போல் வெறுமையானது. (வெறுமையை விளைவிக்கும் துணைகளும் உண்டுதான்)

குளத்தங்கரைகளில் தேன்பிலிற்றும் மருதமர இலைகள் பாடும் பாட்டு, கற்களை மேவி நடக்கும் நதியின் சலசலப்பு,பறவைகளின் பள்ளியெழுச்சி,மாடுகளின் நடைக்கேற்ப அசையும் கழுத்துமணிச்சத்தம்,ஒரே வார்த்தையைச் சலிக்காமல் பாடும் அலையின் ஓசை இவற்றிலிருந்து இசையைப் பிரித்தெடுத்து ரசிக்கத் தெரிந்தவர்கள் வாழத் தகுதிபெற்றோர்.

-----


உடல்

கதவு அடைக்கப்பட்டிருக்கிறது. எம்மோடு பேசுவதற்காக உறவுகள் காத்திருக்கின்றன. பூட்டிய கதவினுள்ளிருந்து உலகத்தின் ஏதோவொரு மூலையில் இருக்கும் முகமறியாத எவருடனோ உரையாடிக்கொண்டிருக்கிறோம். எம்மோடிருக்கும் உறவுகளின் குரல்களை மட்டுமல்ல, உடலின் கெஞ்சுதலையும் நாம் செவிமடுப்பதில்லை. எம்மவரில் பெரும்பாலானோருக்கு உடல் வேண்டாதவற்றைக் கொட்டும் குப்பைக்கூடை. நாக்கின் பேச்சைக் கேட்டு உடலின் ஏனைய பாகங்கள் அத்தனையையும் கைவிட்டுவிடும் அதிபுத்திசாலிகள் நாங்கள். புகைபிடித்தல், மதுப்பழக்கம், முறையற்ற உணவுப் பழக்கம் போன்ற எமது தாக்குதல்களிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ள உடல் முடிந்தவரை போராடுகிறது. அடங்கிப்போகும் ஒரு இனத்தை மேலும் மேலும் வதைக்கிற சர்வாதிகாரிகள்போல நாம் எமது உடலளவில் கருணையற்றவர்களாக நடந்துகொள்கிறோம்.
கருணையற்றவர்களில் ஒருத்தியாகிய நான், கைகால்களை அசைக்காமல் ஓரிடத்தில் அமர்ந்திருந்து இதைத் தட்டச்சிக்கொண்டிருக்கிறேன். உறக்கத்திற்கு அழைக்கும் விழிகளின் மீது சிறிதும் கருணையற்றவர்களாக நீங்கள் இதை வாசித்துக்கொண்டிருக்கிறீர்கள்.

-------


நட்பு

அப்போது எனக்குப் பத்து அல்லது பதினொரு வயது இருக்குமென்று நினைக்கிறேன். அப்பாவின் வேலை நிமித்தம் ஊர் மாறி பள்ளிக்கூடமும் மாறிய சிலநாட்களில் என்னை அந்தக் கடிதம் வந்தடைந்தது. அதுதான் எனது பெயருக்கு வந்த முதற் கடிதம். “எனது நண்பி ஒரு கறுப்புக் காரிலேறி எனது கண்களிலிருந்து மறைந்துவிட்டா. நான் அண்டைக்கு இரவு அம்மாவுக்குத் தெரியாமல் அழுதேன்”என்று விஜயமாலினி என்ற எனது பழைய வகுப்புத்தோழி எழுதியனுப்பியிருந்தாள். அதை வாசித்ததும் எனக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எனது தோழியைப் பின்பற்றி நானும் அம்மாவுக்குத் தெரியாமல் அழுதுவைத்தேன். அந்த உணர்வின் முழு அர்த்தத்தையும் அப்போது நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதன்பிறகு நான் நடந்த வழியெல்லாம் நட்பின் வாசனை வீசிக்கொண்டிருந்தது.
உண்மையான நட்புக்கு இணையான உறவு எதுவும் இல்லை என்று நிறையப்பேர் பேசி,எழுதி,படம் போட்டும் காட்டி விட்டார்கள். அதில் மாற்றுக்கருத்துடையவர்கள் நல்ல நட்பு வாய்க்கப்பெறாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
இனிக் கொஞ்சம் சுயபுராணம்: எனக்கு இருபது வயதாக இருக்கும்போது அந்த இனிய அனுபவம் எனக்கு ஏற்பட்டது. நான் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தபோது அவள் அப்போதுதான் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டிருந்தாள். என்னிலும் மூன்று வயது இளையவள். நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டிற்குப் பக்கத்து வீடு அவளுடையது. எல்லோரையும் போல பக்கத்து வீட்டோடு எங்கள் வீடு ஒட்டிக்கொண்டது. அதுவரை ஒழுங்காகவிருந்த வேலியில் சின்ன ‘பொட்டு’வைத்துப் போக்குவரத்தும் ஆரம்பித்தது. அது எப்படி நிகழ்ந்ததென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் பூர்வ ஜென்மம் போன்ற பூச்சுற்றல்களில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இருந்தபோதிலும் அவளைப் பார்த்ததும் அதிலெல்லாம் நம்பிக்கை வந்துவிடுமோ என்று பயம் வந்துவிட்டது. அந்தளவிற்கு அவளை நானும் என்னை அவளும் ஈர்த்தோம். படிக்கும் காலத்தில் அவள் மிக அழகாக இருப்பாள். பெரிய கண்களை இன்னும் அகல விரித்து அவள் பேசும் அழகே தனி. அந்த வயதில் அழகானவர்களைப் பிடிக்குமென்பதும் அவள் என்னை ஈர்த்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாமல்லவா…?

பேசிப் பேசி அன்று மாலைதான் பிரிந்திருப்போம். இரவே ஒரு கடிதம் எழுதி மறுநாள் காலையில் கொடுத்துவிடுமளவிற்கு பைத்தியம் பிடித்திருந்தது. அந்தக் கடிதங்கள் வரி பிரித்து எழுதப்படாத கவிதைகளாக இன்னமும் என்னிடம் இருக்கின்றன. கைலாசபதி கலையரங்கின் பின்புறப் படிக்கட்டுகள்,நிழல் சடை விரித்த மரங்கள்,நூல்நிலையத்தின் முன்னாலுள்ள மரத்தடி,வெறுமையாகக் கிடக்கும் வகுப்பறைகள் எங்கெங்கும் எங்கள் இருவரையும் காணலாம் எனுமளவிற்கு நெருக்கம் வளர்ந்தது. அவளிடம் அற்புதமான எழுத்தாற்றல் இருந்தது. மென்மையாக மனதைத் தொடும், அன்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளின் அகராதி அவள். நான் ஏதோ எழுதுகிறேன் என்று பேர்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவள் தன்னை முடக்கிக்கொண்டுவிட்டாளே என்ற வருத்தம் எனக்குள் இப்போதும் எழுவதுண்டு. நான் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறிவிட்டபின்னரும் கூட எனது சொந்த ஊரிலிருந்து நீண்ட தூரம் பயணம் செய்து அவளைச் சந்திப்பதற்காகப் போவேன். எங்கள் இருவர் வீட்டிலும் கேலி பேசுமளவிற்கு அன்பின் ஊற்று எங்கள் இருவரையும் நனைத்தது. பிறகொருகாலம் போர் சூழ்ந்தபோது அவளும் நானும் சந்திக்கும் நாட்களின் இடைவெளி அதிகரித்தது. கடிதத்தாலும் பேச முடியாது போயிற்று. அப்போது கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்து அவளோடு நான் கற்பனையில் பேசினேன். இப்போது நினைத்துப் பார்த்தால் எவ்வளவு பைத்தியம் பிடித்து அலைந்திருக்கிறோம் என்று சிரிப்பாகக்கூட இருக்கிறது. ஆனால், நான் அடிக்கடி சொல்வது போல ‘அந்தந்தக் கணங்கள் அற்புதமானவை’இப்போது அவை அர்த்தமற்றவையெனத் தோன்றலாம். அந்த அன்பும் நாட்களும் நெருக்கமும் பொய்யல்ல பழங்கதை அவ்வளவே.

இப்போது என் தோழி ஐரோப்பிய நாடுகளில் ஒன்றில், காதலித்து மணந்த தனது இனிய துணையுடன், துறுதுறுவென்றலையும் இரண்டு அழகான பூக்களுக்குத் தாயாக இருக்கிறாள். நானும்- காலமும்,காதலும் எனக்களித்த அதியற்புதமான மனிதரான என் துணைவரும் அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி போவோம். அந்தக் குழந்தைகளைப் பார்க்கும்போது, அவர்களை அணைத்துக்கொள்ளும்போது எனது சதையிலிருந்து பிரிந்து உருவானவர்களாக உணர்கிறேன். எங்கள் பிள்ளைகள் நாங்கள் சொல்வதைப் புரிந்துகொள்ளக்கூடியளவு வளர்ந்ததும் இருவருமாக அவர்களிடம் சொல்லுவோம் “நட்பைப் போல உன்னதமானது ஒன்றுமில்லை குழந்தைகளே… !”என்று.


----

வளர்ப்புப் பிராணிகள்

கடவுள், மேலான சக்தி அல்லது இந்த உலகத்தைப் படைத்தவன்-படைத்தவள் முட்டாளா என்ற எண்ணம் எனக்குள் அடிக்கடி எழுந்திருக்கிறது. இந்த நாய்,பூனை,பாம்பு இதையெல்லாம் எதைக் கருதிப் படைத்தார் என்ற சிந்தனை அவற்றின் நிராதரவான நிலையைப் பார்க்கும்போது எழுந்திருக்கிறது. குறிப்பாக இந்தப் ‘பெட்டை’நாய்,பூனைகள் குட்டி போட்டுப் பல்கிப் பெருகிவிடும் என்பதனால் யாரும் அண்டுவதில்லை. ஊரில் என்றால் பனைவடலிகளுக்குள் கொண்டுபோய் விட்டுவிடுவோம். அவை பசியோடு ‘மியாவ் மியாவ்’என்றபடி அலைவதான துக்கம் மனசுக்குள் இருந்துகொண்டேயிருக்கும். வீதிகளில்,குப்பைத்தொட்டிகளுள் காண நேர்கிற நீர் கோர்த்த பசியின் விழிகள் கடவுள் மீதான கோபத்தைக் கிளறிக்கொண்டேயிருக்கின்றன. நாய்,பூனைகள் பாடு பரவாயில்லை என்றாக்கிவிடுகின்றன பாம்புகள். நீண்டு பளபளவென்று நெளிந்தோடும் அவற்றின் தோற்றத்தின் மீதான அருவருப்புடன் பயமும் சேர்ந்துகொள்ள, பாம்புகள் மனிதர்களின் எதிரிகளாகிவிட்டன. பாம்பைக் குறித்த மனிதர்களின் பயத்திற்கும் மனிதர்களைப் பற்றிய பாம்பின் பயத்திற்கும் இடையிலான போராட்டத்தில் பெரும்பாலும் மனிதர்களே வெல்கிறார்கள். உயிரிழந்த அதன் கண்களைப் பார்க்கும்போது வாழ்வுரிமை என்பது மனிதர்க்கு மட்டுமானதா என்ற கேள்வி எழுகிறது. ஆறறிவு, வாசிப்பு, புத்தி இவையெல்லாம் படைத்தவர்கள் என்பதன் அடிப்படையில் அவர்கள் செய்வது சரியாகத்தானிருக்கும். தமது ஆயுளைத் தீர்மானிக்கவியலாத கோபத்தை விலங்குகள்,பிராணிகளின் மீது தீர்த்துக்கொள்கிறார்களோ என்றிருக்கிறது.


“இந்த நாய்,பூனைகள்…. இவை நாம்தான் தஞ்சம் என்று எங்களோடு ஒட்டிவாழும் வாய் பேசத் தெரியாத ஜீவன்கள். நாங்கள் அவைகளை வளர்த்திருக்கக்கூடாது. வளர்த்துவிட்டோம். நாளையைப் பற்றி அவற்றிற்கு எதுவும் தெரியாது. நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைப் பற்றி அவற்றிற்கு எதுவும் புரியாது. நாங்கள் எங்கள் உயிருக்குப் பயந்து ஓடிவிடலாம். ஆனால் எங்களோடு வளர்ந்த, நாங்கள் வளர்த்த இந்த உயிர்களும் உயிர்தானே…? மனிதர்களைவிட எங்களில் அன்பையும் நன்றியையும் வைத்திருக்கும் இந்த உயிர்களை விட்டுவிட்டு ஓடுவதில் எனக்கு விருப்பமில்லை.”


-கடந்த வாரம் ஊரிலிருந்து எனது தந்தையார் எழுதியனுப்பிய கடிதத்திலிருந்து மேற்குறித்த வரிகளை எடுத்துக்கொண்டேன்.

3.09.2007

சுடும் சுடர்… சுடாத நட்சத்திரம்



இந்தச் சுடர் சுற்றிச் சுற்றி வரும்போதே அது போகுமிடமெல்லாம் பயம் கலந்த கண்களால் தொடர்ந்துகொண்டிருந்தேன். ‘எங்கே என்னிடம் தந்துவிடுவார்களோ…’என்று உள்ளுக்குள் பதட்டமாகவே இருந்தது. கடைசியில் பயந்தபடி நிகழ்ந்துவிட்டது. ‘பாசத்திற்குரிய சகோதரி’என்று விளித்தபடி சுடரை பொன்ஸ் என்னிடம் நீட்டியபோது, இடமும் வலதுமாகத் தலையாட்டவே விரும்பினேன். பொன்ஸ் ‘சகோதரி’என்று சொல்லிய சொல்லின் ரீங்காரம் பின்னணியில் ஒலிக்க என்னையறியாமலே மேலும் கீழுமாகத் தலையை ஆட்டிவிட்டேன். என்னாலான வரை ஒப்பேற்றியிருக்கிறேன். வெறுப்பேற்றியிருக்கிறேனா என்று நீங்கள்தான் பார்த்துச் சொல்லவேண்டும்.

1. நீங்கள் வந்த புதிதில் சென்னையை எப்படி உணர்ந்தீர்கள் என்பதை உங்கள் பதிவுகளில் படித்திருக்கிறேன். இன்றைக்கு சென்னையில் முக்கியமான தேவையாக, அடுத்து செய்யவேண்டிய மேம்பாட்டுக்கான பணியாக நீங்கள் எதைக் கூறுவீர்கள்?

வேறொரு நாட்டிலிருந்து வந்தவள் என்பதன் அடிப்படையில் எனது பார்வை வித்தியாசமாக இருக்கும் என்பதனாலேயே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். (இல்லாவிட்டால் நானென்ன பொதுப்பணித் துறை அமைச்சரா?) பொன்ஸ்! சுடரைத் தந்த உங்கள் அனுமதியுடன் ‘அடுத்து செய்யவேண்டிய’என்ற வார்த்தையைக் கொஞ்சம் மறந்துவிட்டு இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கலாமென எண்ணுகிறேன். ‘அடுத்து’என்று வரும்போது ‘உடனடி’என்று பொருள்கொள்ளவேண்டியிருக்கிறது. உடனடி மாற்றம் என்பது வளர்முக நாடொன்றில் அமையப்பெற்ற நகரமொன்றில் சாத்தியப்படுமென்பது கண்விழித்தபடி காணும் கனவுதான். அதனால், ஒரு தொலைநோக்கில் சீரமைக்கப்பட வேண்டிய, விழிகளை உறுத்திய சில விஷயங்களைத் தொட்டுச் செ(சொ)ல்லலாமென்றிருக்கிறேன்.

-மக்களிடையிலான ஏற்றத்தாழ்வுகள்:இது எங்கேயும் உள்ளதுதான் என்றபோதிலும், சென்னையில் இந்தச் சமத்துவமின்மை என்பது மனம் கனக்க வைப்பதாக இருக்கிறது. இன்னும் விரித்துக் கூறினால், ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி மலைக்க வைப்பதாக இருக்கிறது. ஒரு நேர உணவுக்கே வழியில்லாமல் விழிகளில் பசி மிதக்க அலையும் நடைபாதைவாசிகளை,பிச்சைக்காரர்களை,குழந்தைகளைப் பார்க்கும்போது-நான் மிகைப்படுத்திக் கூறவில்லை-நியாயமற்ற இந்த உலகத்தைக் கையாலாகாமல் பார்த்துக்கொண்டிருப்பதை விட செத்துப் போய்விடலாம் போல தோன்றியிருக்கிறது. இது ஒரு உணர்ச்சியின்பாற்பட்ட மனோநிலை என்றெனக்குத் தெரிகிறது. ஆனால், ‘ச்சே!என்ன உலகமிது!’என்ற கசப்புணர்வு ஒவ்வொரு தடவையும் வீதியால் போய்வரும்போது ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. தனியொரு மனிதரால் இந்த சமத்துவமற்ற சமூகக் கட்டமைப்பை மாற்றியமைத்துவிட இயலாது. அடிப்படையில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களாலேயே அது சாத்தியப்படும். இப்போது சென்னைக்கு வேண்டியது, அமெரிக்காவுக்கு மென்பொருள் தயாரித்துக்கொடுப்பதல்ல - அடித்தட்டு மக்களுக்கு ஒரு நேர உணவுக்கு வழிசெய்வதுதான். இந்நாட்டின் குடிமக்களில் ஒரு பகுதியினர் ‘பசி… பசி’என்று வீதிகளில் ஆலாய்ப் பறந்துகொண்டிருக்கையில், ஒரு மேசையைச் சுற்றியமர்ந்து பேசி கோடியைப் பல்கோடிகளாகப் பெருக்க வழிசமைத்துவிட்ட திருப்தியுடன், ஐந்து நட்சத்திர வகையறா உணவுகளை மிகச் சிரமப்பட்டு உள்ளே தள்ளிவிட்டு, மேலதிகமாக நெய்யொழுகும் பண்டங்களை ஒரு கடி கடித்தபின் குப்பைத் தொட்டிகளில் எறிந்துகொண்டிருக்கிறது தொந்தி பெருத்தவர்களின் வர்க்கம் ஒன்று.

இதேபோல, முதியோர் இல்லங்களைக் கடக்கும்போது இருண்ட பின்னணியில் தெரியும், சுருக்கம் நிறைந்த, நம்பிக்கை இழந்த அந்த முகங்களைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. தம் குழந்தைகளை, இந்த நாட்டை வளர்த்தவர்கள் அவர்கள். மனிதம்,அன்பு,தாய்மை என்ற பதங்களெல்லாம் வெற்று வார்த்தைகள்தானா…? ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் கருணையுடையவனாக-கருணையுடையவளாக இருந்தால் வயோதிபர்களுக்கு ஏனிந்த நிலை?

தெருக்களில் துரத்தி வந்து கையேந்தும், பலநாட்கள் எண்ணெய் கண்டிராத தலையுடைய குழந்தைகள் இந்த நகரத்தில் குற்றவுணர்வைத் தூண்டிக்கொண்டேயிருக்கிறார்கள்.

ஒரு நகரத்தின் மாற்றமும் முன்னேற்றமும் அடித்தட்டு மக்களிலிருந்தே தொடங்கப்படல் வேண்டும். அதுதான் இப்போதைய மற்றும் எப்போதைய தேவையும்கூட.


கழிப்பறை வசதிகள்: ‘பல்கனி’யிலிருந்து வெளியில் பார்க்கும்போது கண்களை அடிக்கடி தாழ்த்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. அருகிலிருக்கும் வெறும் நிலத்தின்(எசமாடனில் வந்த நிலம்) சுற்றுமதிலை எப்படியாவது சாய்த்துவிடக் கங்கணங் கட்டிக் கொண்டவர்களைப் போல இடைவிடாமல் ‘பெய்து’கொண்டிருக்கிறார்கள். வீதியோரங்களில் இருக்கும் அநேக சுவர்களுக்கு இதே நிலைதான். ஆங்காங்கே பொதுக் கழிப்பறைகளைக் காணமுடிகிறது. அவையெல்லாம் ‘யானைப் பசிக்கு சோளப் பொரி’என்ற கதைதான். சுற்றுச்சூழலின் சுத்தம்,சுகாதாரம் போன்றன எத்தகு முக்கியத்துவம் வாய்ந்தவை என்ற விழிப்புணர்வு மக்களிடையே ஊட்டப்பட வேண்டும். வெளிநாடுகளில் இருப்பதைப் போல, வீடுகள் கட்டப்படும்போது அவை மக்கள் வாழத் தகுதியானவையா… எனப் பார்த்து அனுமதி வழங்கப்படுவதுபோல இங்கேயும் கொண்டுவரப்படல் வேண்டும்.(இங்கேயும் இருக்குமென்றுதான் நினைக்கிறேன்) ஒவ்வொரு வீட்டிலும் சமையலறை மட்டும் இருந்தால் போதாது… அந்தச் சமையலறையில் சமைத்துச் சாப்பிட்டதில் செரித்தது போக எஞ்சியவற்றை ‘வெளியனுப்பும்’கழிப்பறைகள் அவசியம்.

இத்தகைய சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தாமல், ‘மந்திரவாதிகளும் பிச்சைக்காரர்களும் அசுத்தமும் நிறைந்த நகரம்தான் சென்னை’ என்று இங்கு வந்து போகும் வெள்ளைக்காரச் சுற்றுலாப் பயணிகள் எழுதுகிறார்களே என்று சத்தமிடுவதில் அர்த்தமில்லை.

போக்குவரத்து நெரிசல்: சென்னை போன்றதொரு மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்கமுடியாததே. எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு, சனத்தொகைப் பெருக்கத்திற்கமைய பிரதான வீதிகளை விசாலிப்பதற்கமைய சென்னை வடிவமைக்கப்பட்டிருக்கிறதா என்றெனக்குத் தெரியவில்லை. மேலதிகமாக சில உப சாலைகளை இணைத்துக்கொள்வதன் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கலாம். பெரும்பாலும் வாகனப் பெருக்கத்திற்கேற்ப சாலைகளைப் பெருக்குவதென்பது சாத்தியமில்லை. ஏதோவொரு கட்டத்தில் அந்த நடவடிக்கையும் மேலே நகரமுடியாத தேக்கநிலைக்கே கொண்டுபோய்விடும். ஆனால்,மாநகரமொன்றை உயிர்பெற்றசைய வைக்க இரத்த நாளங்களான சாலை வசதிகள் கவனிக்கப்படுதல் முக்கியம் என்பதை நான் மட்டுமல்ல நீங்களும் உணர்ந்திருப்பீர்கள்.

பொழுதுபோக்கு வசதிகள்: ஒருநாள் காலையில் கண் விழித்து எழுந்து பார்க்கும்போது, திரையரங்குகளும், கடற்கரையும் மறைந்துவிட்டால் சென்னையின் நிலை என்னாகும் என்று நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது. இவ்விரண்டையும் தவிர்த்துப் பார்த்தால் மத்தியதர வர்க்க, அடித்தட்டு மக்களுக்கு வேறென்ன பொழுதுபோக்கு வசதிகள் இருக்கின்றன? டிஸ்கோதே,ஆடம்பரமான கோப்பிக் கடைகள் இவையெல்லாம் மேல்தட்டு வர்க்கத்தினருக்குரியவை. ஒரு சராசரி சென்னைவாசியின் தொய்ந்த சட்டைப்பை, இந்த இடங்களை காலடி எடுத்துவைக்கவே அஞ்சும் புனித இடங்களாக்கிவிட்டிருக்கிறது. குழந்தைகள் வி.ஜி.பி.யையும் எம்.ஜி.எம். ஐயும் வள்ளுவர் கோட்டத்தையும் எத்தனை தடவைதான் பார்ப்பார்கள்?

இயந்திரமயமாகிக்கொண்டிருக்கும் இந்த உலகம் மனிதனின் மெல்லுணர்வுகளை நசுக்குகிறது. அவனது ஈரத்தன்மையை உறிஞ்சிவிடுகிறது. மனிதன் மனிதனாக இயங்கவேண்டுமெனில், பொழுதுபோக்கு வசதிகள் அவசியம். சென்னையில் அவற்றின் போதாமைதான் அதிகரித்துவரும் குற்றங்களுக்கு மறைமுகமானதொரு காரணமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. ஆனால்,பொழுதுபோக்கு வசதிகள் நிறைந்த மேலைத்தேய நாடுகளிலும் குற்றச்செயல்கள் மலிந்து வருகின்றனவே அதற்கென்ன காரணம்… என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

2.தமிழக தொலைக்காட்சிகளில் நீங்கள் தொடர்ந்து பார்க்கும், உங்களுக்குப் பிடித்த நிகழ்ச்சி எது?

ஒரு நிகழ்ச்சியையும் தொடர்ந்து பார்ப்பதில்லை. இரவு உணவின் பின், வரவேற்பறையில் சிறிது நேரத்தைக் கழிக்க நேரிடுகையில் ‘கோலங்களில்’எப்போதும் அடைமழையாய் அழுதுகொண்டிருக்கும் தேவயானியையும், அழுது எரிச்சலூட்டாத ‘கம்பீரமான’ அரசி ராதிகாவையும் எப்போதாவது பார்ப்பதுண்டு.

‘யாரு மனசுல யாரு… அவங்களுக்கு என்ன பேரு…’என மலையாள வாடையுடன் தமிழ் பேசும் ப்ரதீப் நடத்தும் ‘கிரான்ட் மாஸ்ரர்’ஐப் பார்க்கப் பிடிக்கும். அதேபோல ‘க்ரோர்பதி’பொது அறிவு நிகழ்ச்சியும் பிடிக்கும். ‘தங்க வேட்டை’என்றொரு நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் நடத்திக்கொண்டிருந்தவரை, அவருடைய வியப்புக் கலந்த அழகான புன்னகைக்காகவும், என்னிடம் கேட்கப்படாத கேள்விகளுக்கு விழுந்தடித்துக்கொண்டு பதிலளிப்பதற்காகவும்(தவறான விடை சொல்லி சக பார்வையாளர் மத்தியில் மூக்குடைபடவும் நேர்ந்திருக்கிறது)பிடித்திருந்தது. இப்போது ரம்யா கிருஷ்ணன் நடத்துவதில்லை. நானும் பார்ப்பதில்லை.

‘கோப்பி வித் அனு’என்றொரு நிகழ்ச்சியை விரும்பிப் பார்ப்பேன். பிரபலங்களை நேர்காணல் செய்யும்போது அவர்களின் ஆழத்திலிருந்து பதில்களை வெளிக்கொணரத்தகு புத்திசாலித்தனமான கேள்விகளும், ஏதோ நெடுநாள் பழகியதுபோன்றதொரு நட்பில் கனிந்த முகமும், பார்வையாளருக்கும் நிகழ்ச்சிக்கும் இடையில் சரியான முறையில் தொடர்பைப் பேணி தன்னோடு பிணைத்துவைத்திருக்கும் தன்மையும் மிகப் பிடிக்கும். ஆகவே அனுதான் பிடிக்கும்.

3.பெண்களுக்கான விழிப்புணர்வூட்ட சிறந்த ஊடகம் எது என்று நினைக்கிறீர்கள்?

வீட்டில் எப்போதும் இயங்கிக்கொண்டே இருக்கும் பெண்களால் தொலைக்காட்சியை ஒரே இடத்தில் இருந்து பார்க்கவியலாது. அப்படி நேரம் ஒதுக்கிப் பார்த்தாலும் கண்ணீரும் கம்பலையுமான நாடகங்களைத் தாண்டிப் போக பெரும்பாலானவர்களால் முடிவதில்லை. பத்திரிகைகள் தமது தர்மத்தை மறந்து வணிகப்பாதையில் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றன. ‘காலையில் கன்னிப்பெண்ணைக் கட்டியணைத்து சரமாரியாக முத்தமிட்ட பால்காரன் கைது’ என்ற விதமான ‘திகில்’, ‘பணால்’, ‘திவால்’ செய்திகளைத் தாங்கியே அவை வெளிவருகின்றன. வானொலி என்றால் வேலை செய்தபடியே கேட்டுக்கொண்டிருக்கலாம். பெண்களால் இலகுவில் உள்வாங்கப்படக்கூடிய ஊடகம் வானொலிதான். ஆனால், ‘எனக்காக இந்தப் பாட்டைப் போடறேளா’என்ற ரீதியில்தான் அவையும் ‘தமில்’தொண்டாற்றிக்கொண்டிருக்கின்றன. புத்தகங்களை ஊடகக் கணக்கில் எடுத்துக் கொண்டால், தேர்ந்த நல்ல புத்தகங்களே பெண்களுக்கு விழிப்புணர்வூட்டக் கூடியன என்பது எனது கருத்தாகும்.

4.எங்களுக்காக ஒரு நகைச்சுவைத் துணுக்குச் சொல்லமுடியுமா?

இப்படியொரு கேள்வியை என்னிடம் கேட்டிருக்கிறார்கள் என்று எனது அண்ணாவின் மகனிடம் சொன்னபோது அவன் சொன்னான்: “இதுவே ஒரு நகைச்சுவைத் துணுக்குத்தானே…”என்று.

ஒரு ஆபிரிக்காக்காரனும் சீனாவைச் சேர்ந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்துகொண்டார்களாம் (கதை சொந்தச் சரக்கல்ல என்பதனால் இந்த ‘ளாம்’) முதற் குழந்தை அப்பாவைப் போல கறுப்பாக சுருட்டை முடியோடு இருந்ததாம். அந்த வீட்டில் அம்மாவின் ஆட்சிதானாம். தனது மொழியில் அடிக்கடி வரும் ‘ங்’இல் அவளுக்கு அதீத பிரியமாம். அதனால் தன் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கும்போது இரண்டு ‘ங்’குகளேனும் வரவேண்டுமென விரும்பி, தந்தையைப் போலிருந்த முதற் குழந்தைக்கு ‘சிங்காங் காங்’ என்று பெயர் வைத்தாளாம்.

இரண்டாவது குழந்தை அம்மா சாடையில் மஞ்சள் நிறத்தில் குச்சி குச்சியான தலைமயிருடன் பிறந்ததாம். சந்தோசப்பட்ட தாய் அக்குழந்தைக்கு ‘சாங் காங் கிங்’என்று பெயர் வைத்தாளாம்.

மூன்றாவது குழந்தையும் பிறந்தது. அதைப் பார்த்த அப்பன்காரனுக்கு ஒரே திகைப்பு. அம்மாவின் சாடையிலும் இல்லாமல் அப்பாவின் சாடையையும் கொண்டிராமல் அது வெள்ளைக்காரச் சாயலில் இருந்ததாம். உடனே அப்பன்காரன் சொன்னானாம்: இந்தக் குழந்தைக்குப் பொருத்தமான பெயரை நான்தான் பெயர் வைப்பேன் என்று. ‘அப்படி என்ன பொருத்தமான பெயர்?’என்று தாய்க்காரி ஆச்சரியத்தோடு கேட்டாளாம்.

“சம்திங் ராங்”என்று கணவன் சொன்னானாம்.

5.வலைப்பதிவுகள் அளிக்கும் நண்பர் வட்டத்தைத் தாண்டி, பதிவுகள் மூலமாக வேறென்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்?

சமூக சீர்திருத்தம்: சீரிய நோக்கம் கொண்ட பதிவுகள் மூலம் சமூகத்தில், அதன் பிற்போக்குத்தனமான கருத்தாக்கங்களில் ஓரளவேனும் மாறுதல்களை ஏற்படுத்த முடியும். சரியான கருத்துக்கள் ஒரு சரியான வாசகரிடம் போய்ச் சேரும்போது, ஒரு நூறு பேரிடமாவது அவர் அதனைக் காவிச் செல்கிறார். செவி வழியாக இடைவிடாமல் அது பயணம் செய்துகொண்டேயிருக்கிறது. ஒரு வீம்புக்காக உடனே மறுத்துரைக்கப்படும் நல்ல கருத்துக்கள் அப்படியே கைவிடப்படுவதில்லை. மனசின் ஆழத்தில் சென்று படிந்து சமயம் வரும்போதெல்லாம் பேசிக்கொண்டேயிருக்கும். உடனடியாக இல்லாவிட்டாலும் மிக மெதுவாகவேனும் பதிவுகள் வழியாக மனதளவில் மாற்றங்களை நிகழ்த்தலாம்.

சமூக அக்கறை: செந்தழல் ரவி வேலை வாய்ப்புக்களை அடையாளம் காட்டுகிறார். இந்தச் சுடரை என்னிடம் தந்த பொன்ஸ் வலைப்பூ தொடர்பான தொழில்நுட்பச் சிக்கல்களில் தன்னால் இயன்றவரை சகபதிவர்களுக்கு உதவுகிறார். ஒரு மாணவி தனது படிப்பை இடைநிறுத்தி வாழ்வே தேங்கிப் போய்விடும் நிலையில் இருந்தபோது, வலைப்பதிவர்கள் பலர் சேர்ந்து நிதி சேகரித்து அந்தப் பெண் தனது கல்வியைத் தொடர் வழி செய்தார்கள். இன்னுமின்னும் எத்தனையோ நற்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. பதிவுகள் மூலமாக நாம் வாழும் சமூகம் குறித்த அக்கறை தூண்டப்பட்டு உருப்படியாக நிறையச் செய்யலாம்.

தொழில்நுட்ப அறிவு: வலைபதிய வரும்வரை தட்டச்ச மட்டுமே எனக்குத் தெரிந்திருந்தது.(இப்ப மட்டும் என்னவாம்) என்னைப் போலவே பலரும் கணனியை விசித்திரப் பிராணியைப் பார்ப்பதுபோல, பயங்கலந்த வியப்புடன் சற்றே தள்ளிநின்று பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம். ஆனால்,வாழ்வாகட்டும் அறிவாகட்டும் தவறுகளிலிருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம் என்பது உண்மை. என்னைப் போல சோம்பற்படாமல் தேடல்,உற்சாகம்,ஆர்வம் உள்ளவர்கள் தமது பதிவுகளை இட முயலும்போது இத் தொழினுட்பம் தொடர்பாக நிறையவே கற்றுக்கொள்ள வலையிற் பதிதல் வகைசெய்கிறது.

திறமை இனங்காணப்படல்: இணையத்தளங்களில் குறிப்பாக தமிழ்மணத்தில் எமது பதிவுகளை இடுவதன் முன், எங்களிற் பலர் எம்முடன் நாமே பேசிக்கொண்டிருந்தோம். (இப்பவும் அப்படித்தான் என்கிறீர்களா…?) எமக்கென ஒரு களம் கிடைத்ததும், மதகு திறக்கப்பட்ட குளங்களாகிவிட்டோம். உள்ளுக்குள் முட்டிமோதிக்கொண்டிருந்த துக்கங்கள்,மகிழ்ச்சிகள்,அனுபவங்கள் படைப்புகளாக வெளிப்படுத்தப்படுவது பெரியதொரு ஆசுவாசம். மேலும், எழுத்தாற்றல் மிக்கவர்களுக்கு சந்தர்ப்பங்கள் சரியாக அமையுமிடத்தில் எழுத்தே வாழ்வாகக்கூடிய தளங்களுக்கு இந்தப் பதிவுகள் எடுத்துச் செல்லக்கூடும்.

ம்… இப்போது யாரிடம் இந்தச் சுடரைக் கையளிப்பது என்று யோசித்தபோது நினைவில் வந்தவர் பொடிச்சி. என்னை பதிவுலகம் என்ற பெருங்கடலில் தள்ளித் தத்தளிக்க விட்டவர் அல்லவா அவர்…! பழிவாங்கும் நடவடிக்கையாக இதோ சில கேள்விகள்:

1. வாசிக்கும் புத்தகங்கள் ஒரு மனிதரை (ஆண்-பெண்) அவர்தம் உணர்வுகளை, நடத்தையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

2.தமிழ்மணத்தில் இப்போது அதிகமான பெண் பதிவர்கள் இணைந்திருக்கிறார்கள். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்ன காரணமென நினைக்கிறீர்கள்?

3.ஒரு படைப்பை அதை எழுதுபவரின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்க்கும் மனோநிலையானது எழுதுபவரைக் களைத்துப் போகச் செய்கிறது அல்லது பின்னடையத் தூண்டுகிறது என்பதற்கு உங்கள் பதில் என்னவாக இருக்கும்?

4.இணையத்தளங்களில் அண்மைய நாட்களில் விவாதங்கள் சூடுபிடித்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். விவாதங்கள் வழியாகச் சரியான திசையில் பயணித்து முடிந்த முடிபொன்றை அடையமுடியும் என்று கருதுகிறீர்களா? அல்லது எதிரெதிரான கருத்துக்கள் விவாதங்கள் வழியாக ஒரு புள்ளியில் சந்திப்பது சாத்தியமா?

5.ஒரு படைப்பு பரவலான வாசகர்களைச் சென்றடையாது போவதென்பது அப்படைப்பின் தோல்வியா?

3.08.2007

தமிழக சகோதரர்களுக்கு…

“நாங்களும் மனுசங்கதான்! நாங்களும் மனுசங்கதான்!”

முற்குறிப்பு: நட்சத்திர வாரத்துக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பில்லை.

பொதுவில் சொந்தக் கதை… சோகக்கதை சொல்லி ‘ஜல்லியடிப்பதென்பதில்’எனக்கு உடன்பாடில்லை. அது ஒரு பயண அனுபவமாக இருப்பின், சமூக அக்கறை குறித்ததான பகிர்தலாக இருப்பின் எமது ‘வீட்டு’க் கதைகளைச் சொல்லலாம். மற்றபடி எழுத்தில் நாங்கள் வரலாமேயன்றி எழுத்தே நாங்களாயிருப்பது குறித்து எனக்குத் தயக்கங்கள் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை இன்று கொஞ்சம் மீறிப்பார்க்கலாமென்றிருக்கிறேன். எழுத்து ஒன்றுதான் என்னைப்போன்றவர்களுக்கு வடிகால். சாய்ந்து அழும் தாய்மடி என்ற வகையில் எனது கோபத்தை,வருத்தத்தை இங்கே வெளிப்படுத்தலாமென்றிருக்கிறேன். எனக்கான ஆறுதலை இதன்மூலம் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல இந்தப் பதிவின் நோக்கம். உயிருக்கு அஞ்சி ஓடோடி வந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சகமனிதர்களாகப் பார்க்கப்பட வேண்டுமென்பதற்காகவும் இதனைப் பதிகிறேன்.

‘அவனது கேள்வியும் அவளது ஆண்டுக்குறிப்பும்’ என்ற அனுபவப் பகிர்வுக்கு அனுதாபம்,ஆதங்கம்,கோபம்,துக்கம் எல்லாம் பொங்க பின்னூட்டமிட்டிருந்தீர்கள். அதைப் பார்த்தபோது இனத்தாலும் மொழியாலும் ஒன்றுபட்ட எமது சகோதரர்களுக்கு எங்கள் மீது இத்தனை அக்கறை இருக்கிறதே என்று பூரித்தது உண்மை. ஆனால், உள்ளுக்குள் ஒரு கவலை அலைந்துகொண்டிருந்தது. அதாவது வீடு தேடுவது பற்றிய கவலை. எனது நட்சத்திர வாரம் அந்தக் கவலையுடனேயே ஆரம்பித்தது. அதைக் காட்டிக்கொள்ளக்கூடாதென்றிருந்தேன். ஆனால், தொடர்ச்சியான நிராகரிப்பு தந்த கோபம் என்னை இந்தப் பதிவை எழுதத் தூண்டியது.

நாங்கள் இப்போது இருக்கும் வீட்டில் கடந்த ஓராண்டாகக் குடியிருக்கிறோம். இது சகல வசதிகளையும் கொண்ட தொடர்மாடிக் குடியிருப்பு. பாவனைக்கு வேண்டிய தளபாடங்கள் அத்தனையையும் உள்ளடக்கிய இதன் மாத வாடகை 22ஆயிரம் இந்திய ரூபாய்கள். இதைத் தவிர கட்டிட பராமரிப்புச் செலவுக்கென மாதாந்தம் 1075ரூபாய்கள் கொடுத்துக்கொண்டிருக்கிறோம். எங்களுக்கு வாடகைக்கு வீட்டை விட்டிருப்பவர் இந்த மாத ஆரம்பத்தில் வந்து ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். “நீங்கள் மிக நல்ல குடியிருப்பாளர். உங்களை நான் இழக்க விரும்பவில்லை. ஆனால், இப்போதிருக்கும் சூழ்நிலையில் ஈழத்தமிழர்களை வாடகைக்கு வைத்திருப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் வரும் மாதம் வீட்டை விட்டுவிடுங்கள்”என்றார்.

கனடிய அரசாங்கம் எங்களை அந்த நாட்டுப் பிரஜையாக அங்கீகரித்து கனடிய கடவுச்சீட்டை வழங்கியிருந்தாலும் மனதளவில் நான் முற்றுமுழுதாக ஈழத்தைச் சேர்ந்தவளே. எனது கடவுச்சீட்டின் மூலம் உலகத்தின் எந்த நாட்டிற்கும் போகலாம் வரலாம். ஆனால், இந்தியாவுக்கு விசா எடுத்தே வரல் வேண்டும். எனது தாயாருடையதும் கனேடிய கடவுச்சீட்டே. இருவரிடமும் இந்திய விசா இருக்கிறது.

அக்காவின் பிள்ளைகள் மூவரும்(அக்கா ஒரு ஆணாதிக்கவாதியின் வதைகளைத் தாங்கவொண்ணாமல் தற்கொலை செய்து பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் இறந்துபோனார்.) அண்ணாவின் பிள்ளைகள் இருவருமாக ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். ஐவரும் பதினேழு வயதிலிருந்து இருபத்திரண்டு வயதிற்குட்பட்டவர்கள். எங்களுக்கெல்லாம் செல்லமான அண்ணாவின் பெண் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படித்துக்கொண்டிருந்தவள். போர் அவளைப் படிப்பிலிருந்து துரத்தியது. ஏனைய நால்வரில் மூத்தவர் படிப்பை ஏற்கெனவே விட்டுவிட்டார். மற்றைய மூவரில் இரு பையன்களும் க.பொ.த. உயர்தர வகுப்பில் படித்துக்கொண்டிருந்தவர்கள். கடைசிப்பையன் திருகோணமலையில் பெயர்பெற்ற பாடசாலையான சென்ற்.ஜோசப் கல்லூரியில் பத்தாம் ஆண்டில் படித்துக்கொண்டிருந்தவன். உயிரோடு காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அவர்களையும் படிப்பிலிருந்து பிடுங்கியெடுத்துக்கொண்டு இங்கு வந்து சேர்ந்தேன். முறையான கடவுச்சீட்டில் வந்து விசா முடிந்ததும் மற்றெல்லா ஈழத்தமிழர்களையும் போல போலிசில் பதிந்துவிட்டு பிள்ளைகள் ஐவரும் இங்கு என்னோடு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே நான் இங்கு இருக்கவேண்டியுள்ளது. எல்லோரும் கணனி,ஆங்கிலம்,பாடசாலை என்று எங்கோ படித்துக்கொண்டுதானிருக்கிறார்கள்.

எங்களுக்கு வாடகைக்கு வீட்டைத் தந்திருப்பவர் சொல்லும் காரணம் என்னவென்றால் ‘விசா இல்லாமல் இருப்பவர்களுக்கு –பிள்ளைகளுக்கு- வீட்டை வாடகைக்குக் கொடுக்கமுடியாது’என்பதே. சரி அவரின் புரிதல் அவ்வளவுதான் என்ற வேதனையோடு வேறு வீடு பார்க்கத் தொடங்கினோம். எல்லாம் சரியென வந்து கைகூடும் தருணத்தில் ‘ஈழத்தமிழர்களா… அப்படியானால் வீடு இல்லை’என்று சொல்வதைப் பல தடவை கேட்டுவிட்டோம். ஒவ்வொரு நாளும் வீடு பார்க்கப் போவதும், அவர்கள் சரியென்பதும் பிறகு வீடு பார்க்கும் இடைத்தரகர் வாயிலாக நாங்கள் ஈழத்தமிழர்கள் என்று அறிந்ததும் ‘இல்லை’என மறுப்பதும் சில நாட்களாகவே நடந்துகொண்டிருக்கிறது.

நாங்கள் செய்த தவறுதான் என்ன? ஈழத்தமிழர்களாகப் பிறந்தது நான் வளர்க்கும் பிள்ளைகளின் குற்றமா? சொந்த மண்ணில் வாழ முடியவில்லை. வந்த இடத்திலும் வாழ இடமில்லை. நான் பன்னிரண்டு ஆண்டுகள் கனடாவில் வாழ்ந்தேன். அங்கு மிக மதிப்பிற்குரிய மனிதர்கள் என்று கருதப்படுபவர்களின் அறிமுகத்தையும் நட்பையும் கொண்டவள். எனது பிள்ளைகளும் என்னைப்போல மரியாதையான பழக்கவழக்கங்களைக் கொண்டவர்களே. அவ்விதமிருக்க, முகமறியாத ஒன்றினால் தொடர்ந்தும் நாங்கள் துரத்தப்பட்டுக்கொண்டிருப்பது ஏன்?

நண்பர்களே! நாங்கள் குண்டு வைத்திருக்கவில்லை. சமூகவிரோதிகள் அல்ல. நாங்கள் சாதாரண நடத்தைகளையும் வாழ்வு குறித்த கனவுகளையும் கொண்ட சாதாரண மனிதர்கள். இன்னும் சொல்லப்போனால் போர் எங்களைப் புண்படுத்தியிருந்தாலும் அந்தத் துயரங்களால் நாங்கள் மேலும் பண்படுத்தப்பட்டவர்களாகவுமிருக்கிறோம் என்பதே உண்மை.

எனது கவலை என்னவென்றால், வெளிநாட்டிலிருந்து வந்து வாடகை கட்டக்கூடிய வசதியோடு இருக்கும் எங்களுக்கே இந்த நிலைமை என்றால், தமிழகம் எங்கள் தாய் அகம் என்று நம்பி வரும் ஏனைய, எங்களை விட வசதியில் குறைந்த ஈழத்தமிழர்கள் எங்கெங்கு எப்படியெப்படியெல்லாம் கிழிபடுவார்கள், அவர்கள் எத்தகைய துயரங்களை,அவமானங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே.

கனடாவில் வாழ்ந்த காலங்களில் உண்மையாக உழைப்பார்கள் என்ற காரணத்தினால் எங்களவர்களை விரும்பி வேலைக்குச் சேர்ப்பதும், சுத்தமாக வைத்திருப்பார்கள் என நம்பி வாடகைக்கு வீடு தருவதும்தான் நான் கண்டது. சிங்களவர்கள் பெருவாரியாக வாழும் கொழும்பில் கூட ‘தமிழர்கள் ஒழுங்காக வாடகை தருவார்கள்’என்ற காரணத்தினால் எந்தத் தயக்கமும் எவரிடமிருந்தும் எழுவதில்லை. அதிலும் வெளிநாட்டுக் கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு கூடுதல் மரியாதை வழங்குவார்கள். காரணம் எங்களை பணம் காய்க்கும் மரங்களாக(நாங்கள் குளிரில் விறைப்பதையும் வாழ்வை வெறுப்பதையும் எவரறிவார்)ப் பார்ப்பதே.

நான் இதை யாரையும் புண்படுத்த வேண்டும் என்பதற்காக எழுதவில்லை. கொல்லப்படுவதும் வன்புணர்வுக்காளாக்கப்படுவதும் சிறைகளில் வதைக்கப்படுவதும்தான் மட்டும்தான் வன்முறை அல்ல. மனங்களைச் சாகடிப்பதும் வன்முறை சார்ந்தது என்பதை இதை வாசிக்கும் ஒருவராவது உணர்ந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே. எழுத்தினால் பூமிப்பந்து புரட்டப்பட்டுவிடும் என்ற பூச்சுற்றல்களையெல்லாம் நான் நம்பவில்லை.

‘ராஜீவ் காந்தியைக் கொல்வதன் முன் எல்லாம் ஒழுங்காகவே இருந்தது’என்று சிலர் சொல்கிறார்கள். நண்பர்களே!மகாத்மா காந்தியை கோட்சே கொன்றான். இந்திராகாந்தியை ஒரு சீக்கியன் கொலை செய்தான். சீக்கியரில் இன்னமும் வஞ்சம் பாராட்டிக்கொண்டிருக்கிறீர்களா? கோட்சேயின் தலைமுறை அந்தக் கொலையால் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறதா…? யாழ்ப்பாணத்தில் கொக்குவில் என்ற இடத்திலே பிரம்படி ஒழுங்கை என்ற வீதியில் வைத்து இந்தியப்படையினரால் கவசவாகனங்களை ஏற்றி உயிரோடு சிலர் நசித்துக்கொல்லப்பட்டபோது நான் அங்கிருந்தேன். அதற்காக நான் எவரையும் வெறுக்கவில்லை. வன்மம் பாராட்டவில்லை. போரின் விதிகள் நாமெல்லோரும் அறிந்தவை.

நீங்களே அறிவீர்கள்…உங்களில் எத்தனை பேர் எனக்கு ஆத்மார்த்தமான நண்பர்கள் என்பதை. கனடாவில் எனது கணவருக்குச் சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருப்பவர்களில் எழுபது வீதமானவர்கள் தமிழகத்தைச் சேர்ந்த சகோதரர்களே என்பதை ஒரு உபரித்தகவலாகச் சொல்ல விரும்புகிறேன். மேலும், தமிழகத்து சகோதரர்களின் ஆதரவில்லாமல் ஈழத்தமிழர் போராட்டம் வெற்றிபெற மாட்டாது என்றுதான் நாங்கள் இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

‘உலகத் தமிழர்களின் தலைவர்’என்று சொல்லப்பட்டுக்கொண்டிருக்கிற கலைஞர் கருணாநிதி அவர்கள் ஆட்சிக்கு வந்தபிற்பாடு எங்களைக் கருணையோடும் அனுதாபத்தோடும் நடத்துவார்கள் என்று நம்பினோம். ஆனால், முன்னர் இருந்ததைக் காட்டிலும் குற்றவாளிகளாகத்தான் பார்க்கப்படுகிறோம். உலகத் தமிழர்களுக்கெல்லாம் தலைவரானவர் எங்களை மனிதர்களாகப் பார்க்க மறுப்பது ஏனென்பது துயர்தரும் புதிராயிருக்கிறது. நியாயமான ஒரு போராட்டத்தில் பங்கெடுக்காமல் ஓடி வந்ததற்குத் தண்டனையாகத்தான் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்படுகிறோமோ என்ற குற்றவுணர்வு இப்போது கூடுதலாக உறுத்துகிறது. இப்படியெல்லாம் இருப்பதற்கு திரும்பிப் போய்விடலாம் என்றே தோன்றுகிறது. முன்பொரு கவிதையில் எழுதியதைப் போல ‘இறப்பதற்கல்ல நாங்கள் இழிவுசெய்யப்படுதலுக்கு அஞ்சியே’இங்குற்றோம்.

புரிந்துகொள்ளுங்கள் நண்பர்களே! உங்களைப் போல இரத்தமும் சதையும் உணர்வுகளும் கனவுகளும் குடும்பத்தின் மீது நேசமும் காதலும் இழைத்த சாதாரண மனிதர்கள்தான் நாங்கள்.

அயர்ச்சி பொங்க மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம்:

“நாங்களும் மனுசங்கதான்! ஐயா! நாங்களும் மனுசங்கதான்!”

பிற்குறிப்பு: எனது சொந்த நலனைக் கருதி இதனைப் பதிவு செய்யவில்லை. எந்தவொரு வேண்டுகோள்களும் இதன் பின்னால் இல்லை. நாங்கள் நீரிலும் நிலத்திலும் வாழும் பிராணிகள் போல. எங்கேயும் பிழைத்துக்கொண்டு விடுவோம். அதற்கான வசதியும் இருக்கிறது. ஆனால், எல்லா இடங்களிலும் அவமானத்தையும் நிராகரிப்பையும் எதிர்கொள்ளும் நாங்கள் உங்கள் சகோதரர்கள் என்பதை நினைவுபடுத்தவும் மனதளவிலேனும் ஒரு சிறு மாறுதலை வேண்டியுமே இந்தப் பதிவை இட்டேன். நானறியாமல் எவரையும் புண்படுத்தியிருப்பின் தயவுசெய்து என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.

1.24.2007

தேவதைகளால் கைவிடப்பட்ட காலத்தில்




அன்பு நித்திலா,

நலம். போர்சூழ்ந்த இந்நேரத்தில் நீயும் அவ்விதம் இருப்பாயென்றே இன்னமும் நம்புகிறேன்.

“இப்போது எங்கே இருக்கிறாய்…?”என்ற கேள்வியுடன் தொடங்கி எனது நாடோடித்தன்மையைக் குறித்துப் பரிகசித்திருந்தாய். ‘நான் உன்னுடன் தான் இருக்கிறேன்’ என்று நாடகத்தன்மையுடன் பதிலளிக்கவே விருப்பம். அக்கணத்தில் பொங்கும் நெகிழ்ச்சியில் உனது கண்கள் பனிக்கக்கூடும். தெரிந்தே சொல்லும் பொய்கள் உன்னதமான கணங்களை அளிக்கக்கூடுமெனில், நான் பொய்யுரைக்க விரும்புகிறேன்.

தோழி! இருப்பிற்காக அலைந்தது ஒரு காலம். அலைவதற்காகவே இருப்பென்று இப்போது தலைகீழாக்கிவிட்டேன். பால்வீதியில் மிதந்து செல்லும் கோள்களைப் போல நாடுகள். நான் இருக்குமிடமே இப்போதென் சூரியன் மையப்புள்ளி. இங்கு மோட்டார் சைக்கிள்களும் கார்களும் விசையிலிருந்து இழுத்துவிடப்பட்டவை போல விரைகின்றன. பரபரப்பு இந்நகரின் பிரதான தொனி. இங்கு இருக்கிறேன். ஆனால், இல்லை. ரொறன்ரோவில் வெள்ளைத்தோல் பளபளக்க நீண்ட குளிர்க்கோட்டுகள் அணிந்து பாதையைக் கடக்க காத்திருக்கிறார்கள். அவர்களோடு மண்ணிறத்தவளாகிய நானும் கடக்கிறேன். ஆனால் நான் அங்குமில்லை. இலண்டனில் புகையிரதத்தில் கரகரத்த குரலில் இருள் நிறத்திலொருவன் குரலுயர்த்திப் பாடுகிறான். இடையிடையே பிசிறடிக்கும் குரல் வழியே பிரிவின் துயர்பொதிந்த வரிகளை அவன் எனக்குள் விசிறுகிறான். நான் அங்குமில்லை. நேதன்ஸ் பிலிப்ஸ் ஸ்குயாரின் அருகிலுள்ள மரத்தடியில் இருக்கிறேன். நித்திலா! என்னை அவ்விதம் கற்பனை செய்யாதே! நான் அங்குமில்லை!

திருவையாற்றில் கனகாம்பிகைக் குளத்தினருகில் இருந்தேன். நீ சைக்கிளை மரத்தில் சாய்த்துவைத்துவிட்டு என்னை நோக்கி வருகிறாய். சீருடை உனக்கு அழகாகப் பொருந்தியிருக்கிறது. நிழலின் குளிர்ச்சியில், நீரின் தெளிவினில் கோவிலிலிருந்து மிதந்துவரும் ஊதுபத்தி வாசனையில் உன் வார்த்தைகளின் வசீகரிப்பில் அன்றைக்கு நானிருந்தேன். நாங்கள் ‘அறிவமுது’பொத்தகசாலைக்குப் (‘பொத்தகசாலையா…?’என்றதற்கு ‘அதுதான் சரி’ என்றாய்) போயிருந்தோம். என்னைவிடச் சிறியவள்… வாழ்வின் இனிய கணங்களில் இன்னமும் கால்பதிக்காதவள்…(அப்படி இல்லை என்பாய் வேறொரு அர்த்தத்தில்) நீ… குனிந்து புத்தகங்களைப் புரட்டியபோது பார்த்துக்கொண்டிருந்த எனக்குள் எதுவோ புரண்டது.

கிளிநொச்சியில் சாலைப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்திய நீலநிறச் சீருடையணிந்த காவலன் என்னைப் பார்த்து எதேச்சையாக உதிர்த்த புன்னகையைப் பிரதி செய்தபோது அங்கு நானிருந்தேன். “பாண்டியன் சுவையூற்று”அந்தப் பெயரை உச்சரித்தபோதெழுந்த கிளர்ச்சியில் இருந்தேன். அந்தச் சாலையின் தூய்மையில், கடைகளுக்குச் சூட்டப்பட்டிருந்த கவித்துவப் பெயர்களில் எங்கெங்கும் ஒலித்த தமிழில் இருந்தேன் சில காலம். வானளாவ என்பதெல்லாம் பொய்…. அலைந்த இடங்களில் நெடிதுயர்ந்த நேர்த்தியான அந்தத்தை அண்ணாந்து பார்க்கவியலாத கட்டிடங்களை கண்டதுண்டு. வியப்பெழுந்த போதும் பெருமிதமோ நெகிழ்ச்சியோ கொண்டதில்லை. ஐந்தாறு தானென்றாலும் கிளிநொச்சி-யாழ் சாலையில் இருந்த கட்டிடங்களின் நேர்த்தியில் நெகிழ்ந்துபோன நினைவுகளில் நானிருந்தேன். மீண்டும் போரெழும் போதினில் இவையெல்லாம் என்னாகும் எனும் துக்கத்தில் நானிருந்தேன். இந்தக் கடிதத்தில் நீக்கமற எங்கும் நானிருக்கிறேன் என்று நீ சிரிப்பாய். வேறெப்படிச் சொல்வதென எனக்குச் சொல்லித்தா நித்திலா! உணர்ச்சி எழுத்தானால் அறிவு விலகிப்போய் வேடிக்கை பார்க்கிறது.

ஆனையிறவைக் கடந்து யாழ்ப்பாணம் போனபோது இலங்கை இராணுவத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட கவசவாகனம் ஒன்றைப் பார்த்தேன். அதில் போராளியொருவனின் பெயர் எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெயரை பூவைத் தொடுமொரு கவனத்துடன் விரல்களால் தடவிப் பார்த்தபோது அழுகை வந்தது. ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய’என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போது கட்டுப்படுத்த முடியாமல் எப்படிக் கண்ணீர் பொங்குமோ… அதைப் போல துடைக்கத் துடைக்க வழிந்தது கன்னத்தில். துன்பியலையே நான் எழுதுவதாக நண்பன் ஒருவன் கூறினான். வலிந்து நான் முயலும் கொண்டாட்டங்களை எப்படியோ மேவிவிடுகிறது உள்ளிருக்கும் வலி.

ஆனையிறவு கைப்பற்றப்பட்ட செய்தியை அறிந்த அன்று அலுவலகத்தில் இருந்த நாங்கள் ஒருவரையொருவர் பெருமிதம் பொங்கப் பார்த்துக்கொண்டோம். அன்று உவகை எங்களைக் காவித்திரிந்தது. ஒருவரையொருவர் நேசமுடன் பார்த்துக்கொண்டோம். நீண்ட நாள் முகம் திருப்பித்திரிந்த தோழியொருத்தி எனக்குத் தேநீர் தந்து ‘மன்னித்துக் கொள்’என்றாள்.

இப்போது நான் செய்திக்குருடாயிருக்கிறேன். ஊரிலிருந்து வரும் செய்திகளிலிருந்து செவிடாகி தப்பித்து ஓடிவிட விரும்புகிறேன். இருந்தும் குரல்கள்… குரல்கள்… வலியைச் செவிகளில் வலுக்கட்டாயமாகக் செலுத்துகின்றன. எனது நம்பிக்கைகளின் மீது சம்மட்டிகள் இறங்குகின்றன. ‘இராஜதந்திரப் பின்னகர்வு’ என்ற சொல்லை துரோகிக்கப்பட்ட துக்கத்தோடு கேட்டுக்கொண்டிருக்கிறேன். நித்திலா! ‘சுயநலத்தால் தம் நிலத்தைக் கைவிட்டு ஓடிப்போனவர்கள் குற்றவுணர்வு கொள்வதுதானே நியாயம்… நீயேன் கோபம்கொள்கிறாய்’என்று நீ வியந்துகொள்வாய். எனினும், கையிலிருந்து சொரியும் மணல்போல நம்பிக்கைகள் உதிர்ந்துபோய்விடுமோ என்றஞ்சுகிறேன். அன்றைக்கு எனது தோழிகளில் ஒருத்தி சொன்னாள் “அவர்கள் மௌனமாக்க விரும்பும் எதிர்க்குரலால் நான் பேச விரும்புகிறேன்”என்று. நேற்றொரு தோழன் சொன்னான் “அவர்களின் பாசிசத்தை நான் மறுதலிக்கிறேன்”என்று. நான் கேட்க விரும்பாதவற்றைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். “நாமெல்லோரும் தேசியத்தை விற்றுக்கொண்டிருக்கிறோம்”என்றொரு இளையவன் சொன்னான்.

எனக்கு தேசியம், பாசிசம், நாசிசம், மாக்ஸிசம், சர்ரியலிசம், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம்… எந்த இசமும் துவமும் தெரியாது. நான் சாதாரணள்.

சக போராளியின் உயிரற்ற உடலைப் போர்த்தியிருந்த புலிக்கொடியை சரிசெய்யும் பாவனையில் கண்ணீரைப் புறங்கையால் துடைத்தவளைக் கண்டேன். மாவீரர் கல்லறையில் ஏந்திய மெழுகுவர்த்தியின்; சுடர் முகத்தில் சிவப்பொளியைப் படர்த்த இறுகிய முகத்தோடு நின்ற இளையவன் ஒருவனைப் பார்த்தேன். மரச்செறிவடர்ந்த காட்டிற்குள் மழை இறங்கியபொழுதொன்றில் வாகனம் பழுதுபட்டு நின்றது. துப்பாக்கியும் கையுமாக எங்கிருந்தோ வந்து தேநீர் தந்தவனின் முகத்தில் எனக்குப் பிறக்கவிருக்கும் பிள்ளையைப் பார்த்தேன். உயிரை உறைய வைக்கும் பனியில் கதவு கதவாகத் தட்டிக் காசு கேட்டு ஊருக்கு அனுப்புபவனின் பிய்ந்து போன சப்பாத்தும் அழுக்குத் திரண்டு நிறம்மாறிப் போன குளிர்க்கோட்டும் எனக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது. பின்னிரவில் பத்திரிகைப் பணி முடித்து வீடு திரும்பும் என் சிநேகிதி ஒருநாள் சொன்னாள்… “வேலை முடித்து வெளியில் வரும்போது நடுச்சாமமாயிருக்கும். பனி வெள்ளையாய் படிந்து கிடக்கும் அந்தத் தரையில் கவனமாக நடந்து வந்து காரில் ஏறும்போது நான் நினைத்துக்கொள்வேன் ‘என்னால் என்னருந் தேசத்தில் துயருறுபவர்களின் ஒரு துளிக் கண்ணீரைத் துடைக்கமுடிந்தால்…’என்று. நான் நித்திரை விழிப்பதற்காக வருந்துவதில்லை”.

நான் சாதாரணர்களைப் பார்க்கிறேன். அவர்களின் நம்பிக்கையைப் பார்க்கிறேன். தோற்றனர் என்ற செய்தி வந்துற்றபோது துக்கம் பொங்கத் தாழும் விழிகளை நினைவில் கொள்கிறேன். வென்றனர் என்றபோதில் துள்ளிக்குதிக்கத் தூண்டும் பேருவகை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது என்பதை ஆராய விரும்பவில்லை. எப்போதும் தொலைவிலிருந்து தங்களது துக்கம் செறிந்த கண்களால் வெறித்துப் பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு விமர்சிக்க என்ன இருக்கிறது. கவிஞர் ஒருவர் சொன்னதுபோல ஆம்! நாங்கள் ‘தொலைவிலிருந்து விசுவசிக்கிற பாக்கியவான்கள்’தான்.

தனது குழந்தைகளை அயலவரின் குற்றச்சாட்டுகளிலிருந்து எப்போதும் பொத்திவைக்கும் ஒரு தாயைப்போல எனது நம்பிக்கைகள் ஆட்டங்கண்டுவிடக்கூடாதே என்று பொத்திப் பொதிந்து வைக்கிறேன்.

ஊரின் மாயக்குரல் கார்வையோடு அழைத்துக்கொண்டேயிருக்கிறது. இழைந்து குழைந்து அழைக்கும் அந்தப் புல்லாங்குழலோசையில் கட்டுண்டு மயங்கிக்கிடக்கிறேன். எப்போதாவது என்னை மறந்தெழுந்து ஓடுகிறேன். உயிர் என்னைக் கடிந்துகொள்கிறது. தன்னைப் பத்திரப்படுத்திவைக்க என்னால் முடியவில்லை என்று சாடுகிறது.

‘நாங்கள் எல்லாத் தேவதைகளாலும் கைவிடப்பட்ட காலத்திலா வாழ்ந்துகொண்டிருக்கிறோம்…?’என்ற கேள்வி எழுந்து எழுந்து பதிலற்று மடிகிறது.

நித்திலா! காத்திருக்கிறேன். காத்திருக்கிறோம். சொற்கள் அழிந்தவர்களாக, கைவிடப்பட்டவர்களாக, வலிகிளர் வார்த்தைகளைச் செவிமடுக்கிறவர்களாக தொலைவிலே காத்திருக்கிறோம்.

நட்புடன் நதி

1.05.2007

மரணம் பற்றிய குறிப்பு




ஒரு கயிற்றில் கழுத்திறுகி முடிந்துவிட்டது உன் வாழ்வு. உடலை எடுத்துச்செல்வதன் போதான ஒத்திகைகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள் சிலர். உனது மரணத்திற்கான காரணங்களை தத்தமது சிந்தனை விரிவுக்கும் உளவியல்சார் அறிவுக்கும் ஏற்ப விரித்தபடியிருக்கிறார்கள் வேறும் பலர்.

காரணங்கள் வேண்டும் எல்லோருக்கும்… எல்லாவற்றுக்கும் (வயிற்றுநோவிலிருந்து கயிற்றில் தொங்குவது வரை) உன்னோடு சேர்த்துப் புதைப்பதற்கு காரணங்கள் இல்லாமற்போவதென்பது, எஞ்சியிருப்பவர்களைக் குற்றவுணர்வுக்கு ஆளாக்கிவிடுமல்லவா…? மண்ணள்ளிப் போட்டு கையைத் தட்டிவிட்டு சுடுகாட்டிலிருந்து திரும்பிப் பாராமல் போய்விடவேண்டும். ‘இந்தப் பாவம் என்னையும் எனது சந்ததிகளையும் சேராதிருக்கட்டும்’என, கிறிஸ்துவைச் சிலுவையிலேற்றும் தீர்வை விதித்த பின் தனது கைகளைக் கழுவிக்கொண்ட நியாயாதிபதி சொன்னதைப்போல இருக்கின்றன எஞ்சியிருப்பவர்கள் சொல்கின்ற காரணங்கள். சதாம் கூசைனைத் தூக்கிலிட்டதைப் பகிரங்கமாகக் காட்டியதனால் தூண்டப்பட்டாய் என்றார் ஒருவர். ‘எனது சாவிற்கு எவரும் காரணமில்லை’என்ற வார்த்தைகளை தொலைக்காட்சி நாடகங்களிலிருந்தும் சினிமாக்களிலிருந்தும் நீ எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார்கள் சிலர். பெண்ணே! உனது மரணம் இன்றைய நாளின் பேசுபொருளாயிருக்கிறது அவ்வளவே!

நேற்றிரவு தூக்கமாத்திரையையும் மீறி விழிப்பு வந்தது. நீ தனியே பிணவறையில் படுத்திருப்பாய் என்பது அமானுஷ்யமான பயத்தை ஊட்டியது. எழுந்தமர்ந்து எழுதத் தொடங்குகிறேன். எழுத்தைத் தவிர வேறெவர் என்னைத் தாங்கிக்கொள்ளக்கூடும்…? அதன் தோள்கள் ஒரு பறவையினுடையதைப்போல மிருதுவானவை. புகைப்படத்தில் உன்னை முற்றிலுமாக அடைத்து விடும்முன், நீ மரணத்தின் மூலம் என்னோடு பேசியிருப்பதைச் சேமிக்க விரும்புகிறேன்.

“தற்கொலை என்பது கோழைத்தனம் என்று சிலர் சொல்லக்கூடும். அது தைரியமற்றவர்களின் வார்த்தை. மரணம் என்பது மாவீரம்” என்று ஒருவர் எழுதியிருந்ததை நேற்று வாசித்தேன். அது எத்தகைய உண்மை. வாழ்வின் மீதுதான் எத்தனை வெறித்தனமான காதல். “உனக்குப் பதிலாக என்னை எடுத்துச் சென்றிருக்கக் கூடாதா…?”என்று பிரலாபிக்கிறவர்களின் முன் எமன் தோன்றி “எடுத்துக்கொள்ளட்டுமா…?”என்று கேட்டால், விக்கித்து விதிர்விதிர்த்துப் போய்விட மாட்டார்களா…?

தற்கொலையை நோக்கிச் செலுத்தும் தருணங்களைத் தன்னிரக்கம் வென்றுவிடுகிறது. நமக்கு மரணத்தின் மீதான பயத்தை, நம்மைச் சுற்றியிருப்பவர்களின் மீதான கரிசனையாக மாற்றிக்கொள்கிறோம். அவர்கள் நம்மை நினைத்து எப்படியெல்லாம் அழுவார்கள் என்ற கற்பனையிலேயே கரைந்துபோய்விடுகிறது தற்கொலைக்கான எண்ணம். “இப்படி வாழ்வதைவிட செத்துப்போய்விடலாம் போலிருக்கிறது”என்ற அபத்தத்தில் தோய்ந்த வார்த்தைகளை எத்தனை தடவைதான் பேசியிருப்போம். உணர்ந்து பேசும் வார்த்தைகளை விட செவியில் ஒலிக்கக் கேட்ட வார்த்தைகளைத்தானே பழக்கதோஷம் காரணமாகப் பேசுகிறோம்.

தற்கொலையைப் பற்றி யாரும் சிந்திக்கலாம். திட்டமிட முடியாதென்றே தோன்றுகிறது. திட்டமிடும் நேரம் நீள நீள அதன் மீதான விருப்பு குறுகிப்போகலாம். யாருமற்ற வீட்டில் தனித்திருக்கும்போது பேசத்தொடங்குகிற சாத்தானின் குரலை செவிமடுக்கத் தொடங்கும் ஒரு கணம்தான் பெரும்பாலானோரைத் தற்கொலையை நோக்கி அழைத்துப்போகிறது. மரணம் என்ற பொறி சட்டெனப் பற்றிக்கொள்கிறது. வாழும் நாட்களில் கவனிக்கப்படாதவளை-கவனிக்கப்படாதவனைக் குறித்து உன்னிப்பாகக் குவிகிறது கவனம். புறக்கணிப்பின் மீதான பழிவாங்குதலாகத்தானே பெரும்பாலும் தற்கொலைகள் அமைந்துவிடுகின்றன.

பெரியவர்கள்தான் குழந்தைகளின் பிதாமகர்கள், ஆதர்சங்கள், தேவதைகள்… சின்னப் பெண்ணே! தேவதைகளை நம்பியிருக்கத்தேவையில்லை! அவர்கள் வாழ்வின் அவசரங்களில் சுயநலத்தால் சிலசமயம் வேண்டுமென்றே வாக்குறுதிகளை மறந்துபோகிறவர்கள். வெண்துகில் பறக்க வானத்திலேறி விரைந்துபோய்விடுவார்கள்.

அன்று விடைபெறும்போது நான் உன் கண்களைப் பார்த்திருக்கலாம். உனக்கே உனக்கென பிரத்தியேகமாக ஒரு சொல்லையாவது சொல்லியிருக்கலாம். நான் உனக்களித்த வாக்குறுதியை தனியறையில் உனது கையை அழுத்தி மீண்டும் அளித்திருக்கலாம். எல்லோருடைய சாவிற்குப் பின்னாலும் இப்படிப் பல ‘லாம்’கள் உதிர்க்கப்படலாம். முற்கூட்டியே எழுதப்பட்ட விதியால்தான் பொதுவான ஒரு புன்னகையும் கையசைப்பும் தந்து விடைபெற்றேன் என்று, எனது குற்றவுணர்வை எரித்தேன் தேவகி!(உயிர் காற்றில் கலந்துவிட்டபிறகு உன்னை ‘பிணம்’என்றார்கள். நானும் பெயரை மாற்றிவிட்டேன்.)

“இந்த ஆறுதல் வார்த்தைகளை நான் பேசவேண்டுமா வேண்டாமா…?” என உங்களில் எவருக்கும் தோன்றினால், தயவுசெய்து பேசுங்கள். இல்லையெனில், பேசவேண்டிய சமயத்தில் பேசாமற் தங்கிவிட்ட வார்த்தைகள் முள்ளாக உள்ளிருந்து கிழிக்கும். மலமாக நாற்றமடிக்கும். யார் கண்டது…? ஒரு புன்னகையில், ஒரு சொல்லில், ஒரு கையின் வெப்பத்தில், ஒரு ஆழமான பார்வையில், ஒரு தலை தடவலில் ஒரு மரணம் தவிர்க்கப்படலாம்.

எனக்கு வெற்று ஆறுதல்களில், கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்த்தைகளில் நம்பிக்கை இல்லை. கழிந்துபோகும் நாட்களால் மட்டுமே கண்ணீரைத் துடைக்கமுடியும். மனசுக்கு நெருக்கமானவர்களை மறக்கவியலாத அந்தக் குரல் அழைத்துக்கொண்டேயிருக்கும். சிலநாட்களில் அந்தக் குரலும் தேய்ந்து ஒலிமங்கி மறைந்துபோய்விடும். பிறகென்ன… பிறகு… மாலையுடனான ஒரு புகைப்படம் தொங்கும். விசேட நாட்களில் ஊதுபத்தி புகை வளையமிடும். இறந்துபோனவளை-இறந்துபோனவனைப் பற்றிய கதைகள் மிகுபுனைவுகளுடன் பேசப்படும்.

பல சமயங்களில் நாம் எல்லாமாய் இருப்பதாய் நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில் நாம் ஒன்றுமேயில்லை என்பதை மற்றவர்களின் மரணம் உணர்த்துகிறது. நேற்று ‘தேவகி’ ‘பிணம்’எனப் பேசப்பட்டாள். கால்முளைத்த காற்றெனத் திரிந்த ‘அவள்’ ‘அது’வானாள்.

கண்முன்னால் நடந்து சிரித்து நேசித்து கேலிசெய்து சிலசமயம் அழவும் பார்த்த ஒரு உயிர், ஒரு புகைப்படத்திலும் எப்போதாவது கொள்ளப்படும் ஞாபகத்திலும் சில கண்ணீர்த்துளிகளிலும் முடிந்துவிடுவது என்பது, மனிதர்களால் பேசப்படுகிற அதியுன்னதங்களின் மீதெல்லாம் கேள்விகளை எழுப்புவதாக அமைந்துவிடுகிறது. அப்படிப் பார்க்கையில், வாழ்க்கையே ஒரு மாபெரிய அபத்தம் என்பதன்றி வேறென்ன…?

12.31.2006

நேற்றிருந்தேன் அந்த ஊரினிலே….



ஊராசைக்கும் உயிராசைக்கும் இடையில் தீராத போட்டி. வேகவெறியால் உந்தப்படும் ஓட்டக்காரர்களைப் போல- ஒன்றை மற்றொன்று பின்தள்ளுவதும், பின்தள்ளப்பட்டது முண்டியடித்துக்கொண்டு முன்னே வருவதுமாக மனம் சில நாட்களாக அலைக்கழிந்துகொண்டிருந்தது. ஈற்றில், விமானத்தின் குறுகிய சாளரத்தின் ஊடாக மேகத்தின் வெண்மையைக் கண்டு வியந்துகொண்டிருப்பதில் முடிந்தது.

விமானம் தலைதெறிக்க ஓடி நிற்கும்போது வழக்கமாக மனசுள் ஒரு மலர்ச்சி பரவும். மிகப் பிடித்த பாடலை எதிர்பாராத இடத்தில் கேட்டதுபோலிருக்கும். ஆனால், இம்முறை அதைக் காணவில்லை. விடுதிக்குப் போகும் வழியெல்லாம் போர் குறித்த பயம் அலைந்துகொண்டிருப்பது போலிருந்தது. பயத்தின் விழிகளால் பார்ப்பதாக என்னைச் சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால், கொழும்பை அடைந்ததும், என்னை நானே ஏமாற்றிக்கொண்டது புரிந்தது. எந்தக் கணத்திலும் வெடித்துவிடக்கூடிய குண்டின் நிலையிலிருக்கிறது கொழும்பு. இராணுவத்தின் துப்பாக்கி தயார்நிலையில் விழித்திருக்கிறது. பரிசோதனைச் சாவடிகளில் உயர்த்திய கையுடன் வேற்றுக் கரங்கள் உடல் தடவப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அடையாள அட்டை இல்லாதவர்கள் அடையாளம் தெரியாமல் ஆக்கப்படுவதற்கான சாத்தியங்களே அதிகம். ஆனால், அந்நிய மொழிக்கும், கடவுச்சீட்டுக்கும் இன்னும் மதிப்பு அழிந்துவிடவில்லை.

ஞாபகங்களாய் அழைக்கிறது ஊர். யாழ்ப்பாணத்தில் வீடு கட்டாமல் இடைநடுவில் வவுனியாவில் ஒரு கிராமத்தில் கட்டியது தற்செயலாக நிகழ்ந்த, இருந்திருந்து மகிழ்வு தரும் விடயம். “மாதங்களில் அவள் மார்கழி”என்று கவிஞர் அனுபவித்துத்தான் எழுதியிருக்க வேண்டும். ஊருக்குப் போகும் வழியெல்லாம் பச்சை விரிப்புத்தான். கண்களை மூடினாலும் உள்ளேயே படிந்துவிட்டாற்போன்ற மார்கழிப் பச்சை! வீதியை அண்டி வயல்கள் தொடங்கி உள்ளேகி சற்று தொலைவில் தென்னை மரங்களில் முடிகிறது. சில இடங்களில் தம் தொலைவால் நீலச் சாயத் தோற்றத்தில் மாயை காட்டும் மலைகள் பரவசப்படுத்துகின்றன. “ஐயோ…!இந்த அழகிய தீவில் வாழ முடியவில்லையே…”என்ற ஏக்கம் என்றைக்கும்போல அன்றைக்கும் எழுந்தது. உரிமைகள் அற்றது சொர்க்கமெனினும் வாழ உகந்தது அல்ல என்று சமாதானப்படுத்திக்கொள்வதன்றி வேறென்ன வழி…?

கிறிஸ்மஸ் இற்கு முந்தைய நாள் பரபரப்பில் வாழத் தேர்ந்தெடுத்த ஊர் இயங்கிக்கொண்டிருக்கிறது. வழக்கத்தை விட சனப்புழக்கம் குறைவுதான். விழிகளில் பதுங்கியிருக்கிறது பயம். ஒரு வெடிச்சத்தத்தில் உயிரிழந்து உள்ளொடுங்கிப்போவதற்குரிய சாத்தியங்களையே அதிகம் கொண்டிருக்கும் நிச்சயமின்மையில் வாழ்ந்துகொண்டிருப்பது எத்தனை துயர்மிக்கது.

வீடு என்பது ஆசுவாசம், தாய் மடி, ஞாபகங்களின் பெட்டகம். போர் சிரிப்பை உறிஞ்சியிருக்கலாம், உறவுகளையெல்லாம் தூரதேசங்களுக்கு அனுப்பிவிட்டிருக்கலாம், வீட்டைப் பார்த்தபோது அது தன் பிரமாண்டமான கரங்களால் இழுத்து தன்னுள் அமிழ்த்திக் கொண்டதை உணர்ந்தேன். விருப்பத்திற்குரிய தோழியின் மடியில் படுத்திருந்து கதை பேசும் சுகத்திற்கு ஈடானது வீட்டில் இருப்பது. இரவு… மொட்டை மாடி… மெல்லிய வெளிச்சம்… இதமான குளிர் எல்லாம் சொல்கின்றன வாழ்வின் அற்புதமான தருணங்களை இழந்துகொண்டிருக்கிறேனென.

மார்கழி மாதம் கிணற்றை நிரப்பியிருக்கிறது. செடிகொடிகளில் பச்சையை ஊற்றியிருக்கிறது. பூக்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அதிலும் இந்த வேம்புகள்… அவற்றைக் கட்டியணைத்துக்கொள்ள முடிவதில்லை. அதுவே தீராத வேட்கையாய் வளர்ந்துகொண்டிருக்கிறது. வேம்புகளை விட்டு வீட்டைப் பற்றிப் பேச முடிந்ததேயில்லை. நகரத்தின் மாசு படியாத கிராமமொன்றில், பனி பொழியும் விடியலில் உறக்கமும் விழிப்புமாகப் படுத்திருக்கும் நாட்களை நீடிக்க முடியவில்லை. பணிகள் அழைக்க பயம் துரத்த புறப்பட வேண்டியிருக்கிறது. எனது கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு எங்கிருந்தோ ஓடிவரும் பூனைக்குட்டி இனி ஏமாறப் போகிறதே என்ற துயர் சுடுகிறது. கட்டியணைத்து கன்னத்தில் முத்தமிட்டு விடையளித்த அம்மாவின் மூக்குத்தி குத்திய தடம் வழியெல்லாம் வலிக்கிறது. விரும்பிய இடத்தில் வாழமுடியாமற் போவதற்கு ஈடான துயரத்தை எழுத முடியவில்லை. மொழிக்கு வலிமையில்லை என்றால் அது தமிழைப் பழிப்பது போலாகும். எல்லோர் மனங்களிலும் சொற்களில் இறக்கவியலாத சுமைகள் இருக்கும்.

பிரிவின் துயரை மீறி எரிச்சல் மண்ட பரிசோதனைச் சாவடியில் காத்திருக்கிறேன். ஊருக்குள் நுழையும்போது இத்தனை கெடுபிடி இல்லை. திரும்பி கொழும்புக்குச் செல்லும்போது ‘தலைநகரின் பாதுகாப்பு’என்ற பெயரில் புரட்டியெடுத்துவிடுகிறார்கள். கடவுச்சீட்டு, வாகன இலக்கம், சாரதியின் விபரங்கள், செல்லும் நோக்கம் இன்னபிற பதிய வரிசையில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. விடியலின் குளிருக்கு மாற்றாக வெயில் அனல் பொழிகிறது. பதியும் ‘சடங்கு’முடிந்ததும் வாகனப் பரிசோதனை என்ற பெயரில் அங்குலம் அங்குலமாகச் சோதனையிடுகிறார்கள். பெட்டியிலிருந்து ஒவ்வொன்றாகத் தூக்கிக் காட்ட ‘ஷம்போ’, ‘கொண்டிஷனர்’ என்று படம் பார்த்துப் பாடம் சொல்லும் கிளிப்பிள்ளையாக கொஞ்ச நேரம் இருந்தேன். புத்தகங்களைப் புரட்டிப் பார்த்த அந்தப் பொலிஸ்காரர் ‘குறத்தி முடுக்கு’என்று வாசித்தபோது வியப்பாக இருந்தது. ‘சிங்களம் மட்டும்’ என்று முதுகில் குத்தியவருக்குத் தகுந்த பாடம்…! பெரும்பான்மையினரில் சிறுபான்மையினரையேனும் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியிருக்கிறது போர். ஆள் அடையாளம், வாகனம், பெட்டி எல்லாவற்றையும் சோதனையிட்டபோது சலிப்போடு பார்த்துக்கொண்டிருந்தவளை ‘என்னாங்கடா இது’என்று திகைக்க வைத்த சம்பவம் அடுத்து நிகழ்ந்தது. வாகனத்தின் சக்கரத்திலிருந்த காற்றைத் திறந்துவிட்டு அதற்குள் ஏதும் ஆயுதங்கள் கடத்திச்செல்லப்படுகின்றனவா என்று பரிசோதித்தார்கள். பரிதாபமாகப் படுத்துக் கிடக்கும் வாகனத்தை காற்றடித்து நிமிரவைத்து அனுப்புவதற்கென்று ஒருவரை நியமித்திருக்கிறார்கள். அவர் வெற்றிலை வாயோடு ‘ளாளா’என்று நிறையப் பேசிக்கொண்டே காற்றடித்தார்.

‘விட்டது சனி’ என்று புறப்பட்டால் மற்றுமொரு எரிச்சல்மிகு காத்திருப்பு. பதிந்த பத்திரங்களை பிரதான வீதியில் ஏறுவதன் முன் மற்றுமோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமாம். சாரதி ‘நாசமறுவார்’என்று திட்டிக்கொண்டே இறங்கிப்போக, முக்கால் மணி நேரம் அருகிலிருந்த முந்திரிகை மரங்களையும் தேக்கு மரங்களையும் வெறித்துக்கொண்டிருக்க வேண்டியதாயிற்று.

பிரதான வீதியில் ஏறி விரையும்போது ‘இன்றைய நாள் இப்படித்தான் என்று எழுதியிருந்தால் என்ன செய்வது’என்று வேதாந்தம் பேசி சமாதானப்பட்டுக்கொண்டதை, அடுத்து வந்த பரிசோதனைச் சாவடி சாவடித்தது. வாகனத்தைப் பிரிந்து வனாந்தரத்தை நினைவுறுத்தும் உடை மரத்தின் கீழ் மீண்டும் நீண்ட கடும் தவம். அரசுப் பேரூந்துகளில் வந்து காத்திருந்தவர்களுள் பசியிலோ தாகத்திலோ வெயிலின் வெம்மையினாலோ அழும் கைக்குழந்தைகளைக் காண கையாலாகாத கோபம் பொங்கியது. பாதிரியார்களும் பரிசோதனைக்கு விலக்கல்ல என்பதைக் கண்டபோது, தலைநகரிலுள்ள பயத்தின் ஆதிக்கம் புரிந்தது.

ஒருவழியாய் கொழும்பு மாநகர் வந்து விமானமேறி சென்னையில் வந்து இறங்கியபோது, கவலையும் நிம்மதியும் கலந்த ஓருணர்வு பரவியது. கவிதை என்கிறோம். காதல் என்கிறோம். மனிதாபிமானம், கற்பு, சாதி, பார்ப்பனர்-திராவிடர், அழகு, ஆண்டவன் என ஆயிரம் பேசுகிறோம். அண்மையில் ஒருவர் கூறினார்: காமம்தான் எல்லாவற்றிற்கும் அடிநாதம் என்று. எனக்கென்னவோ மேற்சொன்ன அனைத்தையும்விட உயிர்வாழ்தலும் அதற்கான விடாத போராட்டமும்தான் முக்கியமானதாகப்படுகிறது. நாங்களெல்லாம் இப்படிப் பொத்திப் பொத்திப் பாதுகாத்து உலகெல்லாம் கொண்டு திரியும் உயிரை, தெரிந்தே மற்றவர்களுக்காக விடத் துணிகிற மாவீரர்களின் கல்லறையில் போய் உரத்து அழவேண்டும் போலிருக்கிறது.