9.16.2006

யாழ்ப்பாணமே…! எங்கள் யாழ்ப்பாணமே…!

இரத்தத்தாலும் கண்ணீராலும் மெழுகப்பட்ட ஏ9 இல் விரைகிறோம். காட்டு மரங்களும் ‘கண்ணிவெடி கவனம்’ என அச்சுறுத்தும் அறிவுறுத்தல்களும் பாதையின் இருமருங்கும் கழிகின்றன. எழுத நினைப்பவரை வார்த்தைகள் கைவிடும்- வலியும் மகிழ்வும் நெகிழ்வும் பெருமிதமும் தரும் ஆனையிறவின் உப்பளக்காற்று ஓராயிரம் கதைபேசுகிறது. தலையறுந்த தென்னை, பனைகள் பரிதாபமாக நிற்கின்றன. சாவகச்சேரியில் சாவு ‘கச்சேரி’ நடத்திவிட்டுப் போயிருக்கிறது. வீடுகளின் எல்லாப் பக்கமும் குண்டுகள் வாசல் வைத்துவிட்டுப் போயிருக்கின்றன. நிலாப் பார்க்க முற்றம் வர வேண்டியதில்லை. வீட்டுள் படுத்து அண்ணாந்தால் ஆகாயம். வெறிச்சிட்டுப்போய்க் கிடக்கும் திண்ணைகளில் விளையாடிய குழந்தைகள் எங்கே போயினர்…? தூணில் சாய்ந்திருந்து ராஜா ராணிக் கதைகள் சொல்லிய வயோதிபர் எந்த இரவல் குடிலில் ஏங்கிச் செத்தனரோ…? இராணுவப் பச்சையாயிருக்கிறது ஊர். தலையும் உருமறைத்த இராணுவத்தினர் துள்ளிப் பயிற்சியெடுக்கும் காட்சி திடீரென கண்ணில் பட பழைய ஞாபகத்தில் திக்கிடுகிறது நெஞ்சு. சாதாரண சனங்களின் நினைவடுக்குகளில் உறைந்துவிட்ட பயத்தை அரசியல்வாதிகளின் ‘சமாதானப் புன்னகைகள்’ துடைத்துவிடப்போவதில்லை. இராணுவப் பச்சையைக் காணுந்தோறும் இருள் நிறத்தில் ஒன்று சுழன்று சுழன்று நெஞ்சை அடைப்பதைத் தவிர்ப்பதெப்படி…?
‘ரியூசன் சென்ரர்’களின் வாசல்களில் கூடிக் கூடி நிற்கும் மாணவர்கள் பால்ய நினைவுகளுக்கு இட்டுச்;செல்கின்றனர். மாறித்தானிருக்கிறது யாழ்ப்பாணம்;;… மாறவில்லை குச்சொழுங்கைகளும், பூவரசுகளாலும் கிழுவந்தடிகளாலும் பின்னப்பட்ட வேலிகளும். போரின் வடுக்களும் புதுமையின் மினுக்கமுமாக இரண்டு முகம் காட்டுகிறது யாழ்ப்பாணம். அங்கு வாழும்போது உணரப்படாத வீடுகளின் விசாலம் இப்போது பிரமிப்பூட்டுகிறது. அகலமும் நீளமுமாய் உள்விரிந்து செல்லும் பலகட்டு வீடுகள். குளிர் தேசங்களில் ஆயிரம் சதுர அடிக்குள் ‘வீடு பேறடைந்ததன்’ காரணமாக ஏற்பட்ட பிரமிப்பாயிருக்கலாம் இது.
போராலும் பின் கடல் நீராலும் அலைக்கழிக்கப்பட்ட உள்ளுர்வாசிகளுக்கும், புலம்பெயர்ந்து – போரோய்ந்த பின் ஊர் பார்க்க வந்தவர்களுக்கும் தோற்றத்தில்கூட வித்தியாசமிருக்கிறது. குளிரூட்டப்பட்ட ‘டொல்பின்’களுக்கும் ‘கார்’களுக்கும் பஞ்சமில்லை. தொளதொள காற்சட்டைகள், நெற்றியிலேற்றிய கண்ணாடிகளுடனான அப்பாக்கள்- ஆங்கிலம், பிரெஞ்சு, டொச் இன்னபிற மொழிகளில் கேள்வி கேட்கும் பிள்ளைகளுக்கு விளக்கமளிக்கிறார்கள். வேரை விழுதுகளுக்கு அறிமுகம் செய்துவைக்க வேண்டிய காலமாயிற்று! குளிர்தேசங்கள் குழந்தைகளின் கன்னங்களில் பூக்கவைத்த அப்பிள் நிறத்தை வெயில் வெம்மை சுட்டெரித்திருந்தது. ‘ஐஸ்கிரீம்’கடைகளில் ஈக்களோடு கூட இளைஞர்களுமிருக்கிறார்கள். அவர்களுக்கெதிரில் ‘வீட்டுக்காரர் கண்டிடுவினமோ’ பயமும்-காதல் பரவசமும் மாறி மாறி மிதக்கும் கண்களையுடைய இளம் பெண்களுமிருக்கிறார்கள். வழிதெருவெங்கும் புதிதாக முளைத்திருக்கின்றன புலம்பெயர்ந்தோரை ஊரோடு இணைக்கும் தொப்புள்கொடிகளான தொலைத்தொடர்பகங்கள். சொல்ல மறந்துபோயிற்று… இங்கும் அநேகரின் கைகளில் முளைத்திருக்கிறது ஆறாம் விரலாய் செல்லிடப்பேசி. அண்மைய சினிமாப் பாடல் மெட்டுகளில் அவரவர் சட்டைப்பைகளிலிருந்து விதவிதமாய் பாடி அழைக்கிறது.
சற்றே வசதியான விடுதிகள் அரசசார்பற்ற நிறுவனப் பணியாளர்களாலும் புலம்பெயர்ந்தோராலும் நிறைந்துள்ளன. ‘பரவாயில்லை’ எனும்படியானவற்றின் கட்டணங்களோ குடாநாடு ‘டாலர்’ மற்றும் ‘பவுண்ஸ்’ பற்றிய அறிவுடைத்து என எடுத்துரைக்கின்றன.
ஆனையிறவிற்கும் யாழ். நூலகத்திற்கும் அப்படியென்ன தொடர்பு…? சொல்லமுடியாத உணர்வுகளால் நெகிழ்ந்துபோகிறது மனம். இழப்பின் வலியை ஈடுசெய்யுமோ நெடிதுயர்ந்த கட்டிடம்…! ஆனால் புதுப்பொலிவோடு அழகாயிருக்கிறது. வெளிகளிலிருந்து வந்திறங்கும் காற்றுக்கேற்ப ‘உலகம் அழகியது அழகியது’ எனத் தலையசைக்கின்றன செடிகள். அத்தனை நூல்களையும் வாசிக்க இடந்தராத நடைமுறை வாழ்வின் மீதான ஆற்றாமை படியிறங்குகையில் பொங்குகிறது.
‘சுப்பர் மார்க்கெட்’ எனப்படும் பேரங்காடிகளில் அலைமோதுகிறது கூட்டம். மாநகராய் மீள உருக்கொள்ள விளைகிறது நகரம். பாவம் கிராமங்கள்தான் தனித்து தவித்துப்போயின. போருக்கஞ்சி வெளிநாடுகளுக்கும் கொழும்புக்கும் ஓடிப்போனவர்கள் கோயில் திருவிழாக்களுக்கே திரும்பிவருகிறார்கள். அந்த சில நாட்கள் முருகனுக்கும் அம்மனுக்கும் இன்னபிற தெய்வங்களுக்கும் குளிரக் குளிர அபிசேகம்… பின்னர் கேணியும் மரங்களும் மட்டுமே துணை. திரட்டிய நிதியில் ஒளிர்பவை தவிர்த்து ஏனைய கோவில்களில் இருளோடு வெளவால்கள் உறவாடுகின்றன. வெளிநாடுகளிலிருந்து பிள்ளைகள் போடாத கடிதங்களுக்காகக் காத்திருக்கும் வயோதிபப் பெற்றோர் போல, சில கடவுளரும் கிராமங்களில் காத்திருக்கின்றனர்.
ஏழு மணிக்கெல்லாம் கடைகள் பூட்டப்பட்டு சனமோய்ந்துபோன நகரம் இறந்தகாலத்தின் மீதான ஏக்கத்தைக் கிளறுகிறது. தாம் போகும் பாதை நெடுக இந்த வேலிக்கும் அந்த வேலிக்கும் ‘சமரசம்’ செய்து வைத்துக்கொண்டு போகும் குடிகாரர்களைக் காணவில்லை. படம் முடிந்து பின்னிரவில் எவரும் வீடு திரும்பும் சந்தடியில்லை.
போராலும் காலத்தாலும் சிதிலமாகிப்போன வீடுகளுக்குப் பக்கத்திலேயே முளைத்திருக்கின்றன புதிய வீடுகள். ஒன்றிரண்டு தூண்கள் மட்டும் தாங்க ஓவென வெறிச்சிட்ட ஆளற்ற வீடுகளின் பக்கலில் எழுந்திருக்கும் நவீன வீடுகளைப் பார்க்கையில் மரணமும் வாழ்வும் அருகருகு அமர்ந்திருப்பதைப் போலிருக்கிறது. திறந்தவெளி உணவுச்சாலைகளின் கட்டணங்கள் கைநனைக்குமளவிற்கு இல்லை. அந்தக் கதிரைகளில் உட்கார்ந்தால் ஓரிரு ‘மயில்’களாவது பறந்துவிடுகின்றன.
இனியென்ன… எங்கோ ஒரு குளிர்தேசத்தில், ‘அலாரம்’ அலறி எழுப்பாத ஞாயிற்றுக்கிழமை காலையில், கோப்பிக்கடையொன்றில் ஒலிக்கும் ‘சாக்சபோன்’ பின்னணியில் இனங்காணக்கூடும் எங்கள் ஊரின் பூவரச ‘பீப்பீ’ குழலோசையை!

-----
ஏறக்குறைய ஓராண்டிற்கு முன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தபோது எழுதியது. இப்போது யாழ்ப்பாணம் எப்படிச் சிதைந்திருக்குமென்பதைக் கூறவேண்டியதில்லை. அதன் முகத்தை போர் குதறிவிட்டிருக்கும் என்பது துயரம் செறிந்த உண்மை.

நாளை என்னோடு ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு ‘எங்கள் யாழ்ப்பாணமே…!’என்றெழுதியது குறித்து எள்ளுவார்.

9.15.2006

கடவுளும் நானும்

விரித்த சடைகளும்
அவை மறைத்த பூக்களும்
புடவையும் சுரிதாரும்
அகன்ற தோளும் மீசையும்
இடிபட விரும்பாத என் குணமும்
சாமி முகம் மறைக்கும்.

இருந்துமென்ன…
பிரகாரத் தூண் பொழிவில் இருக்கிறது
வகை வகையாய்
கருணையும் காவலும்.

திடீர்க்கணமொன்றில் விழிப்புற்று
ஊர்வம்பு நிறுத்தி
அடித்து விலக்கி வழிசெய்து
நெற்றி நிலமிடிக்கக் கும்பிடுவர்
பக்தி பெருக்கெடுக்கும்-அதில்
நனைவதில்லை ஒருபோதும்.

என்றாலும் கோவிலுக்குப்
போகாமல் இருப்பதில்லை.

புராதனத்துள் இழுத்தமிழ்த்தும் தூண்கள்
சடசடக்கும் வெளவால்கள்
அதிசயமாய் மூக்கு முழி பாதம்
நேர்த்தியாய் அமைந்த படம்
காலத்தைப் பின்னோக்கிச் செலுத்தும்
சந்தனம் ஊதுபத்தி வாசனைகள்
இவை தவிர…
பட்டுச் சரசரக்க
தூண்மறைவினின்று எட்டிச் சிரிக்கும்
குழந்தை கண்ணில் இருக்கிறது தெய்வம்!
~0~

சாயல்

‘பனிபொழியும் இராக்கால வீதியாய்
வெறிச்சிட்டதேன் உள்ளம்…?’
இதில் எந்தச் சொல்லுக்கும்
நீ உரிமை கொண்டாடலாம்.

‘பின்னிராக்காலம்’எழுதித் தேய்ந்த சொல்
இன்னும் இருக்கிறது அதற்கு
எழுத்தில் வாழ்வு.

ஓடும் நதியில் நகரும் ஒற்றைப்பூவை
நானும் நீயும் பார்த்தோம்.

உன்னையும் என்னையும் உறுத்துகிறான்
எழுந்து வந்து பிச்சை கேட்க இயலாதவன்.

கண்ணாடி சொல்கிறது
‘நீ அம்மாபோல் இருக்கிறாய்’என.
எனது பிள்ளையில் எவரும் காணலாம்
எனது சாயலை

கவிதை மட்டும் சாயலற்றதாய் இருக்க
கண்டுபிடிக்கவேண்டும் புதிய மொழியை.

மீண்டும் அகதி

நம்பினோம் இம்முறையும்
கையெழுத்துகளில் தலையெழுத்து மாறியதாய்.
மழைத்தாரை ஊடறுத்த பூர்வீக நிலம்
பள்ளத்தாக்கென படுத்திருந்தது
சூரைப்பற்றைகள் வலிந்து சண்டைக்கிழுக்க
பாம்புகள் கலவி புரியும் காடு.
இரவும் பகலும் மண்ணுடன் நிகழ்ந்த சமரின் முடிவில்
எழுந்தது எமக்கென்றோர் கூடு.

சின்னத்தங்கை சொன்னாள்
‘இந்தச் செவ்விளநீர் மரம் என்னுடையது
இதற்கு என் பெயர் வைப்போம்’என.

எல்லாம் ஆயிற்று…!

பறவைகள் திரும்பி
குரலெடுத்துப் பாடிய ஒரு காலையில்…
முடிந்தது இளவேனில்…!

மண் பிடித்து துளிர்விட்ட பாரிஜாதமே!
உன் முதற் பூவைக் காணாமற் போகிறோம்.
வாலுரசித் துள்ளியோடும் பூனைக்குட்டீ!
ஆட்களற்ற வீட்டில் அலையவிருக்கும்
உன் குஞ்சுக்குரல்
என் கனவுகளில் இப்போதே எதிரொலிக்கிறது.

வெடிக்கக் காத்திருக்கும்
துப்பாக்கிகளின் நிழலில் தூங்கவியலாது.
கருணையற்ற இரவுகளையும் நம்புவதற்கில்லை.
முகத்தில் பதியும் சப்பாத்துக்கால்களோவெனில்
மானிட விதிகளை அறியாதவை.

குற்றவாளிகளாய் கையுயர்த்தி வெளியேற
நாம் யாது செய்தோம்…?
வாழவிடாத வஞ்சினத்தில்
வழிகிறது கண்ணீர்…!

விரும்பியதோ அதிகமில்லை…
அலாரம் மண்டையில் அடித்தெழுப்பாக் காலை…
விடிகாலை வேம்பின் குயில்…
முற்றத்துக் குளிர்…
சூடான தேநீர்…
கொஞ்சம் கவிதை…
மழைபெய்யும் போதெழும் மண்வாசம்…!

ஜனநாயக நாடு! ப்ச்…!!
தயைகூர்ந்து சிரிக்கவேண்டாம்!!!

வெளியேறமுடியாத குழந்தைகளே!
மன்னித்துவிடுங்கள்
உறுத்திக்கொண்டேயிருக்கும் உயிரின் குரலை
மறுதலிக்க முடியவில்லை!

மேலும்…
இறப்பதைவிட
இழிவுபடுத்தப்படுதலுக்கு அஞ்சுகிறோம்.
~0~

நீங்கள் மகத்தானவர்

வெண்மணல் படர் வெளிகளைப் பார்க்கையில்
இன்னும் வாராத நதிகளையிட்டு
வருத்தம்கொள்கிறீர்கள்
காதுகுடையும் பஞ்சு, மஞ்சள் துணி, பூ
இன்ன பிறவிற்கும்
குழந்தைகளின் சின்னக்குரலும் கெஞ்சலும்
போகுமிடங்களெல்லாம்
நிழல்போல் நீள்கிறது
கைக்குழந்தைப் பிச்சைக்காரிக்கு இடநினைத்து
தயக்கத்தில் தங்கிவிட்ட ஐந்துரூபாய்த்தாள்
சட்டைப்பைக்குள் சுட்டுக்கிடக்கிறது.
கடந்தவாரம் ஏழாம் மாடியிலிருந்து
தன்னை வீசியெறிந்து
கணவனை வெற்றிகொண்டவளுக்காக
விழிக்கடையோரத்தில் அரைத்துளி நீரும்
சிலநொடி மௌனமும் படர
உணவுச்சாலையில்
மதுக்குவளையை உயர்த்துகிறீர்கள்.
வெற்றுக்காணிகளைக்
கழிப்பறையாக்குபவர்களின் சங்கடமே
உங்களதும் நண்பர்களதும் இன்றைய பேசுபொருள்.
‘கவிவெளியில் ஆணாதிக்கம்’
நாளை ஆற்றவேண்டிய சிறப்புரையை
மனதுள் நிகழ்த்தியபடி
நெடுஞ்சாலையில் விரையும்போது
நாசியில் மோதுகிறது
விற்காமல் இலைகளில் சுருண்ட
பூக்களின் வாசனை ‘பாவம் பூக்காரி’
கடை வாசல்களில்
கைகொண்டு மெய்பொத்தியுறங்கும் உருவங்கள்
பொதுவுடமை குறித்து வெறியேற்ற
நீங்கள்தான் எத்தகை மாமனிதராய்
வீட்டுக்குள் நுழைகிறீர்கள்.
தொலைவில் தெரிந்த
ஒவ்வொரு வெளிச்சப்பொட்டிலும் ஏமாந்தவள்
உறங்கிச் சில நொடிதான்.
கோடை இரவு நீண்ட நேரமாக உலர்த்திக்கொண்டிருக்கிறது
வாயில்மறை திரைத்துணியின் சமையலறைப் பிசுக்கை.
~0~

ஞாபக வாசனை






டர்நீலம் கடும்மஞ்சள் துணி கண்டால்
பால்யத்தில் என் பொம்மை அணிந்திருந்த
சட்டை வாசம்…!

பதின்பருவம்…
குளக்கரையோரம் தேன்பிலிற்றும் மருதமணம்
அவன் காதலைச்சொன்ன ஒரு காலைநேரம்…
எங்கு குளம் பார்த்தாலும்
அந்த வார்த்தைகளின் வாசனை…!

உறக்கம் தொலைந்த இரவுகளில்
கட்டிடக்காட்டினின்றும் விழிபெயர்த்தால்
காடுறைந்த அழகு
வன்னியில் பனிபெய்த விடியலொன்றின் பிரதி
உழுந்து வாசனை எடுத்துவருகிறது
பாம்புகளின் நினைவை.

எங்கேயோ எப்போதோ கேட்ட பாடல்
அரிதாய் ஒலிக்கிறது
நெஞ்சுக்குள்ளே நதியின் குளிர்மை
அறிவைக் கடந்தொரு கரைவு
ஆண்டாண்டுகளாய் சிலிர்த்துக் கொண்டிருக்கிறது
காற்றிலாடிய அந்த வயல்வாசம்.

மழை இறங்கும்போதெல்லாம்
பள்ளிக்கூடத்தின் அரைச்சுவர் தாண்டி
மூக்கில் இறங்கும் மண்வாசம்.
சிறுமியாகி அந்த மூலை நாற்காலியில்
அடிக்கடி அமரக்கிடைக்கிறது.

ஞாபகவாசனை நாளை கொணர்தல்கூடும்
இதனை எழுதிய இந்நாளையும்
இலைகள் அசையாது புழுங்கும் கோடையில்
யன்னல் வழி
கேசம் கலைக்கும் காற்றையும்.
0
photo